Skip to main content

இளையராஜாவை வரைதல் - 6ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பாடல்களை ரொம்பச் சரியாகக் காட்சிப்படுத்திய இயக்கு நர்களைச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன்.

திரையிசைப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்தவர். அவரது புத்தகமொன்று மதுரைப் புத்தகக் கண்காட்சியையொட்டி இன்றைக்கு வெளியிடப்படுகிறது.
‘கொஞ்சம் நேரம் கொடுக்கிறீர்களா? ஒரு முறை பாடல்களைப் பார்த்து விட்டு சொல்கிறேனே’ என்றார்.

கொஞ்ச நேரம் என்பது இரண்டு நாட்கள் ஆனது. அவரிடமிருந்து தொலைபேசி இல்லை. பின்னொரு மதியம் அழைத்தார். அழைத்தவர், தயங்கித் தயங்கி, ‘என்ன சார் இது? ராஜாவின் ஒரு பாடலைக்கூட யாரும் சரியாகக் காட்சிப் படுத்தவில்லையே. படம் பிடிக்கிறேன் என்று ஏதேதோ பண்ணி வைத்திருக்கிறார்கள்’ என்றார். அவரது குரலில் அவ்வளவு ஆற்றாமை.

‘பாலு, மணி என்று தேர்ந்து தேர்ந்து பார்த்து விட்டேன். எல்லா காட்சிகளும் மொக்கையாகவே தெரிகின்றன’ என்றார்.

‘ராஜா பாடல்கள், திரைக் காட்சிகளை விட்டு வெளியேறி வருடங்கள் ஆகின்றன சார்’ என்று நான் அவரைத் தேற்றினேன்.

ராஜா பாடல்களின் வெகுஜனத்தன்மை என்று நான் சொல்வதற்கு இது மிக முக்கியமான சான்று. இன்றைக்கு, எந்தவொரு ராஜா பாடலையும் அதன் திரைக்காட்சிகளோடு நாம் நினைவு வைத்துக் கொள்வது இல்லை. பாரதிராஜா, சின்ன சின்ன மேடை நாடக ஜிகினாக்களைக் கொண்டு ராஜா பாடல்களை எதிர்கொள்ள முயன்று தோற்றார். மணிரத்தினம் இதற்காக நடனங்களையும், கதை சொல்லலையும் கொண்டு வந்து ஏதேதோ செய்து பார்த்தார். கமலஹாசன் ராஜா பாடல்களை வெற்றி கொள்வதற்காக சில்மிஷங்களை செய்யத் தொடங்கினார். பாலுமகேந்திராவோ வாழ்த்து அட்டைகள் போன்ற புகைப்படங்களால் அதை மீற முடியுமா என்று முயற்சி செய்தார். ஆனால், எந்த வகையிலும் அவர்களால் ராஜா பாடல்களை நெருங்க முடிந்ததில்லை.

கொஞ்சமே கொஞ்சம் ராஜா பாடல்களை உள்வாங்கிக் கொண்ட பாவனைகளை செய்தவர் என்று நடிகை ஷோபாவை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது. அதிலும் குறிப்பாக, முள்ளும் மலரும் படத்தில் வருகிற இரண்டு பாடல்களிலும் ஷோபா காட்டிய பாவங்கள் மட்டுமே எனக்குத் தெரிந்த இரண்டு நியாயங்கள்.

திரைக்காட்சிகளிலிருந்து வெளியேறி இருந்த ராஜா பாடல்களுக்கான வெகுஜனக் காட்சிப்படுத்தல்கள் வேறு மாதிரியாக இருந்தன. அவற்றுள் ஒன்று, நான் ஏற்கனவே சொன்ன மெல்லிசைக் கச்சேரிகள். ராஜா பாடல்கள் எப்படி நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதை அவை பொது வெளியில் சொல்ல முனைந்தன. ஓ, இப்படித்தான் இந்தப் பாடல்கள் வாசிக்கப்பட்டனவா? என்ற ஆச்சரியத்தை அவை தொடர்ந்து நமக்கு வழங்கிக் கொண்டிருந்தன.

இதன் அடுத்த நிலை, அப்பாடல்கள் உருவான சூழல்களை ராஜாவே தனது வார்த்தைகளில் வர்ணிப்பது. ராஜாவின் இசை நிகழ்ச்சிகளில், பாடலைக் கேட்பதை விடவும் அது குறித்து இளையராஜா என்ன பேசுகிறார் என்பதே ரசிகர்களுக்கு உவப்பான விஷயமாக இருந்தது. இது ராஜா பாடல்கள் குறித்து வேறு விதமான காட்சிப்படிமங்களை வெகுஜன வெளியில் உருவாக்கத் தொடங்கியது.

ராஜா பாடல்களை மேடைகளில் இசைத்துக் காட்டுவது ஒரு வகைக் காட்சியை நமக்குள் உருவாக்குகிறது என்றால், அப்பாடல்கள் குறித்து ராஜா வெளிப்படுத்துகிற விபரங்கள் அக்காட்சியை மேலும் மேலும் செறிவூட்டிக் கொண்டிருக்கின்றன.

ஏன், இப்படி நடக்கிறது? ராஜா பாடல்களின் மேல் கவிந்துள்ள திரைக்காட்சிகளை விலக்கி விட்டு, பின் அவை நிகழ்ந்தப்பட்ட விதங்களின் காட்சிகளை விலக்கி விட்டு, பின்னும் அவை உருவான சூழல் காட்சிகளையும் விலக்கி விட்டு நாம் சதா தேடிக் கொண்டிருப்பது என்ன? ராஜா பாடல்களின் வெகுஜனம் எதைத் தேடி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது?

Comments

Popular posts from this blog

இளையராஜாவை வரைதல் - 1

ஒன்று
‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. 
‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான்.
‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது.
‘ஆமா, இல்ல!’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி -  இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
*
‘ராஜா பாடல்கள்’ என்பது ஒரு வெகுஜன கலை வடிவம். இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது ரசிகர்கள்! எனவே காப்புரிமை பிரச்சினைக்கெல்லாம் அப்பாற்பட்டது அது.
வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து,  அவரது ரசிகர்கள் ஏறக்குறைய ஒரு புதிய வகைக் கலைப்படைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதற்குத் தான் ‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்.   
இந்தத் தொகுப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது கேட்பதற்கோ, அவை எந்தத் திரைப்படங்களில், எந்த நடிகர்களுக்காக, எந்தப் பாடகர்களால் பாடப்பட்டன என்ற விபரமெல்லாம் உங்களுக்குத் தேவைப்படுவதில்லை.   கொஞ்சம்…

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன்இயக்கி, தனுஷ்நடித்துசமீபத்தில்வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம்சிலபுதியவிவாதங்களைஏற்படுத்தியிருக்கிறது.  
அசுரன்ஒருநவயுகப்படம்.  அண்மைக்காலமாக, சாதியால்ஒடுக்கப்பட்டவர்களைக்கதாநாயகர்களாகக்கொண்டுதிரைப்படங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன.  இதுவொருபாராட்டத்தக்கமுயற்சி.  பா.ரஞ்சித்தின்திரைப்படங்கள்இதற்கானத்தொடக்கப்புள்ளிஎன்றுசொல்லமுடியும்.  
திரைப்படவரலாற்றறிஞர்கள்இதைமறுக்கக்கூடும்.  ரொம்பகாலத்திற்குமுன்னாடியேஇது

96 - தமிழ்க் காதல் மொழி

ஜானுவைப் பார்த்ததும் ராம் துவண்டு போகிறான்.  மற்றவர்கள் முன்னிலையில் ஜானுவுடன் சகஜமாகப் பேசவோ பழகவோ அவனால் முடிவது இல்லை.  ஜானுவோ படு இயல்பாக இருக்கிறாள்.  
ராம் அடையும் சங்கோஜம் அவளுக்கும் நன்றாகவே தெரிகிறது.  எனவே, கூடுமானவரை  ரகசியமாக அவனோடு பேசத் தொடங்குகிறாள்.  ‘என்னாச்சு?’ என்று ஜாடையிலேயே கேட்பது.  ஒரக்கண்ணால் பார்ப்பது, திரும்பிப் பார்த்து  சிரிப்பது.  அவன் விரும்புகிற பாடலை மட்டும் பாடாமல் அலைய விடுவது. ‘வாய் திறந்து தான் கேளேன்…’ என்று சீண்டுவது.  அவன் பிறர் முன்னிலையில் எதையும் / எதுவும் கேட்க மாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.  அதை ரசிக்கவும் செய்கிறாள்.  ஆனாலும், தனது சீண்டல்களை அவள் எங்கும் நிறுத்துவது இல்லை.  
இந்தச் சீண்டல்களுக்கே நாம் ‘காதல் மொழி’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.
காதல், முரண்பட்ட இரண்டு குணாம்சங்களுக்குள் நிகழ்கிறது என்றொரு சொலவடை உண்டு.  96ல் இது ஆணின் சங்கோஜமாகவும், பெண்ணின் தைரியமாகவும் காட்டப்படுகிறது. 


இந்தக் கூச்சம் / தைரியம் என்றால் என்ன?  
ராமின் சங்கோஜத்திற்கானக் காரணங்கள் வெளிப்படையாய்ச் சொல்லப்படுவது இல்லை.  ஆனால், ராம் ஜானுவைப் பார்…