Skip to main content

நோயுற்ற நிலப்பரப்பு


கொரோனா தொற்று நோய்’ மனித உடலைத் தாக்கும் முன், தேசத்தையே பிரதானமாகத் தாக்குகிறது.  கொள்ளை நோய்களின் இயல்பு இது.  வழக்கமான நோய்கள் மனிதர்களை நோயாளிகளாக மாற்றுகின்றன. 

ஆனால், கொள்ளை நோய்கள் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் நோயாளியாக சித்தரிக்கின்றன.  இதிலிருந்தே அனைத்தும் தொடங்குகிறது.

இந்த ‘நோயுற்ற நிலப்பரப்பு’ என்ற யோசனை முழுக்க முழுக்க மனிதர்களின் கற்பனை.  அந்த நிலப்பரப்பில் மனிதர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிற வேறு எந்தவொரு உயிருக்கும் இந்தக் கொள்ளை நோய்களால் தொந்திரவு இல்லை என்பதைக் கவனித்தால், இது ‘மானுட நிலப்பரப்பு’ மட்டுமே, ‘பெளதீக நிலப்பரப்பு’ என்பது விளங்கும்.

நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவம், ஒவ்வொரு மனிதரையும் நோயாளிகளாக சித்தரித்து வந்திருப்பதை நாம் அறிவோம்.  அதாவது, உயிர் பிழைத்திருப்பதன் சூட்சுமம், ‘நோயாளி - மருந்துகள் - மருத்துவர்’ என்ற முப்பரிமாணத்திற்குள் ஒளிந்திருப்பதாய் அறிவியல் நம்மை நம்ப வைத்திருக்கிறது.  

இதே உயிர் பிழைத்திருக்கும் சூட்சுமத்தை சமயநம்பிக்கைகள் ‘பக்தன் - சடங்குகள் - கடவுள்’ என்று சொல்லி வந்திருப்பதும் நமக்குத் தெரியும்.  அறிவியல் மிகச் சாதுர்யமாக, நமது பக்தன் என்ற அடையாளத்தை நோயாளி என்று மாற்றியமைத்திருக்கிறது. 

பக்தனாக இருப்பதற்கும் நோயாளியாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் இல்லை என்று நீங்கள் கருதினால், அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மனிதனை நோயாளியாகச் சித்தரிப்பது நவீனத்துவத்தின் (அறிவியலின்) வேலை என்றால், நிலப்பரப்பை நோயுற்றதாகச் சித்தரிப்பது உலகமயமாதலில் சித்து வேலை.  அந்த வகையில், கொரோனா கிளப்பியிருக்கும் பீதி வெறும் ‘உயிர் வாழ்தல்’ குறித்த பீதி இல்லை என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும்.  அது நமது தனித்துவம் பறிபோவது குறித்த பதட்டம்.

கொரோனா குறித்து அங்கும் இங்கும் பலகீனமாய் ஒலிக்கும் வாதங்களை நினைத்துப் பாருங்கள்: 

இந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு கொரோனா பரவாது!  

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்!  

இது போன்ற அத்தனையும் உலகமய முதலீட்டியம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் ‘நோயுற்ற நிலப்பரப்பு’ என்ற வாதத்திற்கு எதிரான முனகல்கள்.

இந்தச் சூழலில் புத்திசாலித்தனமாய் நான் என்ன செய்ய முடியும் என்பதே எனது கேள்வி. 


Comments