Skip to main content

5 கலவரங்களும் கதையாடல்களும்

5  கலவரங்களும் கதையாடல்களும் 





. இராமபாண்டி 



விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர். இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. 


1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர். 


காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறுகின்றனர். மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று, ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான். ஆதலால், இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங்கள். இல்லையெனில் கலெக்டரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று கூறுகின்றார். பறையர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இல்லாமல் போய் விடுகின்றன. 


அதன்பின், பறையர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகின்றனர். கிறித்தவ மதத்திற்கு மாறியதால் இயேசு சபையினர் வ. புதுப்பட்டியில் ஆர்.சி. பள்ளி ஒன்றை உருவாக்குகின்றனர். பறையர்கள் கல்வி கற்று, வேலை வாய்ப்புப் பெற்று, பொருளாதார வளர்ச்சி அடைகின்றனர். பொருளாதார வளர்ச்சி அடைந்ததால், விழிப்புணர்ச்சி அடைந்து நாயக்கர்களுக்கு காலம் காலமாக செய்து வந்த 'உடையார் வைத்தல்' (உடையார் வைத்தல் என்பது தைப் பொங்கலின் போது, பறையர் இனத்தைச் சோந்தவர்கள் கரும்பு, வாழைப் பழம், சேவல் முதலான பொருட்களை கொடுக்க வேண்டும். நாயக்கர்கள் அதற்கு ஈடாக தங்கள் வீடுகளிலுள்ள உணவைக் கொடுப்பார்கள்; ஆரம்ப காலங்களில் அவ்வுணவைப் பெருமையோடு சுமந்து வந்திருக்கிறார்கள்) என்ற பழக்கத்தையும், மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டு விட்டு சாப்பிட்டு வந்ததையும், கூலி வேலைக்குச் செல்வதையும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் நிறுத்திக் கொண்டனர். காலம் காலமாக நமக்கு அடிமை போல வேலை பார்த்து வந்தவர்கள் இப்பொழுது நிறுத்திக் கொண்டு விட்டார்களே என்று நாயக்கர்கள் பறையர்கள் மீது பகை உணர்வு கொள்கின்றனர். 


பகை மூட்டுதல்: வ. புதுப்பட்டியை பொருத்தவரை பள்ளர்களும், பறையர்களும் ஒற்றுமையாக இருந்தால் இந்த இரண்டு பிரிவினர்களுள் யாரேனும் ஒருவர் தான் பஞ்சாயத்துத் தலைவராகவும் கூட்டுறவுத் தலைவராகவும் இருக்க முடியும். இவ்விரு பிரிவினரையும் ஒன்று சேரவிடாமல் நாடார்களும், நாயக்கர்களும், தேவர்களும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகின்றனர். நாயக்கர்களின் வயல்களையும், தோட்டங்களையும் பள்ளர்கள் குத்தகைக்கு எடுக்கின்றனர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பறையர்கள் தோட்டங்களில் திருடுகிறார்கள் என்று பள்ளர்களிடம் கூறுகின்றனர். பள்ளர்கள் நாயக்கர்களின் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்திருப்பதாலும் அவர்கள் வீடுகளுக்கு வேலைக்குச் செல்வதாலும் பறையர்கள் மீது பகை உணர்வு கொள்கின்றனர். சின்னஞ்சிறு தவறுகளிலும் கூட (கொய்யாக்காய் திருடுதல், நிலங்களில் ஆடு, மாடு மேய்த்தல்) பறையர்களைப் பிடித்துக் கொடுப்பது, ஏதோ பெரிய தவறு நடந்துவிட்டது போல கதைகட்டி பள்ளர்கள் கையால் தண்டனை வழங்க வைப்பது போன்ற உத்திகளை நாயுடுகளும், சாலியர்களும் (பண்ணாடிகளும்) பயன்படுத்தி உள்ளனர் என்று வத்ராயிருப்பு - புதுப்பட்டி 'சாதி மோதல்' ஒரு நேரிய பார்வை (வேர்கள் 5: 2 ப. 19) என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 


நாடார் சமூகத்தினர் கள் வியாபாரம் செய்கின்றார். அவர்கள் அவ்வூர் நாட்டாமைக்கு இலவசமாகக் கள் கொடுப்பது வழக்கமாக இருந்தது. பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த நாட்டாமைக்கு கொடுக்கும் கள்ளை அவரே குடித்துள்ளார். பறையர் சமூகத்தைச் சேர்ந்த நாட்டாமை, கள்ளை தான் குடிக்காமல் மரியதாஸ் என்பவருக்குக் கொடுக்கச் சொல்லியுள்ளார். ஒரு நாள் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம் உங்க நாட்டாமைக்குக் கொடுக்கும் கள்ளை அவரே குடித்து விடுகின்றனர். ஆனால், பறையர் சமூகத்தைச் சேர்ந்த நாட்டாமைக்குக் கொடுக்கும் கள்ளை மரியதாஸ் குடிக்கின்றார். பறையர் சமூகத்தைச் சேர்ந்த நாட்டாமைக்குக் கொடுக்கும் கள்ளை ‘அவரையே குடிக்கச்சொல், மரியதாஸை குடிக்க விடாதே என்று கூறுகின்றார். சின்னமணி, மரியதாஸிடம் உங்க நாட்டாமைக்குக் கொடுக்கும் கள்ளை ‘அவரையே குடிக்கச் சொல். - நீ குடிக்காதே என்று கூறுகின்றார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. 


மரியதாஸ் கள் குடித்த பட்டையால் சின்னமணியை அடித்து விடுகின்றார். மற்றொரு நாள் மரியதாஸ் கள் குடிக்க வரும்பொழுது சின்னமணி மரியதாஸை கத்தியால் குத்தப் போகின்றார். மரியதாஸ் கத்தியைப் பறித்து சின்னமணியைக் குத்திவிடுகின்றார். இது பறையர் தெருவிற்கு தெரிந்து பிரச்சினை நடந்த இடத்திற்கு வருகின்றனர். வந்தவர்களில் இன்ஜின் (பறையர்) என்பவர் சின்னமணியைக் கத்தியால் குத்தி விடுகின்றார். சின்னமணி இறந்து விடுகின்றார். இதுதான் வ. புதுப்பட்டியில் நடந்த முதல் கொலை என்று கூறுகின்றனர். சின்னமணி இறந்ததினால் பள்ளருக்கும், பறையருக்கும் பகை உணர்வு உண்டாகின்றது. நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் பள்ளர் பறையரிடையே பகை உணர்வு உண்டாக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும். 


1977 - ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு பள்ளர் தெருவிற்குள் கற்கள் விழுகின்றன. இக்கற்களை பறையர்கள் எறிகின்றனர் என நினைத்து பறையர் சமூகத் தலைவரிடம் பள்ளர்கள் கூறுகின்றனர், பறையர் சமூகத் தலைவர் பள்ளர்களிடம், ‘நாங்கள் யாரும் எறியவில்லை எனக் கூறிவிட்டார். மறுநாள் இரவும் அதே போல் கற்கள் விழுந்துள்ளன. கல் எறிவது யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்றாம் நாள் இரவிலும் கல் விழுந்துள்ளது. அன்று அந்த ஊரில் ஒரு பெண்ணின் பூப்புச்சடங்கிற்காக தெருக்களில் ஒளி விளக்குகள் போட்டுள்ளனர். அந்த விளக்கின் மூலம் பார்க்கையில் தேவர்கள் வாழும் தெருவிலிருந்து பள்ளர்கள் வாழும் தெருவிற்குள் கற்கள் வந்துள்ளன. உடனே பள்ளர்கள் பறையர்களிடம் விவரத்தைக் கூறிய பிறகு இரண்டு பிரிவினரும் சேர்ந்து அப்போழுதே தேவர்கள் வாழும் தெருவிற்குள் சென்று தேடிப் பார்க்கின்றனர். தேடிப்பார்க்கும்பொழுது சாவக்கார் தேவர் மகள் வீட்டில் இதே கல் இருந்துள்ளது. பள்ளர் பறையரிடையே பகை உணர்வு உண்டாக்க வேண்டியே தேவர்கள் இச்செயலைச் செய்துள்ளதை அறிய முடிகின்றது. 


1987 - ஆம் ஆண்டு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் சாராயம் குடித்துவிட்டு பள்ளர் தெருவில் தூங்கிக் கொண்டிருந்த பூமா என்ற பெண்ணின் மீது விழுந்து பாலியல் பலாத்காரத்திற்காக முயற்சிக்கின்றனர். இந்த நான்கு பேரையும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் கண்டு காவல் துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர். இதை அறிந்து நான்கு பேரும் ஊரை விட்டே ஓடி விடுகின்றனர். பல நாட்களுக்குப் பிறகு இந்த நான்கு பேரும் மார்க்கெட்டிற்குள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்து வைத்துக் கொண்டு காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கின்றனர். காவல் துறையினர் இங்கு வருவதற்குள் இத்தகவலை அறிந்த பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளர் தெருவிற்குள் கற்களை எறிகின்றனர். இதனால், இரண்டு சமூகத்தவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகின்றது. இந்தப் பிரச்சினையில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த புழுகாண்டி என்பவரை பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்கின்றனர். பறையர் சமூகத்தைச் சேர்ந்த குள்ளி என்பவரை பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்கின்றனர்.


இதேபோல் மற்றொரு நிகழ்வையும் காணலாம். அருள்ஜோதி என்ற பெண்ணிற்கும் வத்ராயிருப்புக்கு அருகிலுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்த பரஞ்சோதி (பள்ளர்) என்பவருக்கும் காதல் ஏற்படுகின்றது. இவர்கள் இருவரும் விரும்புவது பெற்றோர்களுக்கு தெரிந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், அதையும் மீறி அருள்ஜோதி தனது அக்காவின் உதவியுடன் மதுரையில் கிறித்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்கின்றார். திருமணம் முடிந்த பிறகு திருவில்லிப்புத்தூர் இந்திரா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து பாட்டக்குளம் என்ற ஊரில் அருள்ஜோதி ஆசிரியையாக வேலை பார்த்து வருகின்றார். பரஞ்ஜோதி வேலை இல்லாமல் இருக்கின்றார். இந்நிலையில் அருள்ஜோதி கருவுருகிறாள். 


இச்செய்தி பரஞ்ஜோதியின் அப்பா வீட்டிற்குத் தெரிந்து விடுகிறது. ஏற்கெனவே பரஞ்ஜோதிக்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் தனது சொத்து அடுத்தவர்களுக்குச் செல்லக்கூடாது என்றும் நினைக்கின்றவர் அருள்ஜோதி இரண்டு மாதமாக இருப்பதைக் கேள்வி பட்டவுடன் 'ஒரு பறைச்சி பள்ளனுக்கு குழந்தை பெற்று வைக்கவா?' என்ற காரணத்தினால் அருள்ஜோதியைக் கொன்றுவிட வேண்டும் என பரஞ்ஜோதியைத் தூண்டி விடுகின்றனர். அதன்படி 31.03.94 - ஆம் தேதி அன்று அருள்ஜோதியை கொல்வதற்காக கிறிஸ்டியான் பேட்டையிலிருந்து (வ.புதுப்பட்டி) இரண்டு பேரையும் நடுப்பட்டியிலிருந்து (வ.புதுப்பட்டி) இரண்டு பேரையும் அம்பாஸிடர் கார் எடுத்து வந்து கிருஷ்ணன் கோவில் (திருவில்லிப்புத்தூரிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது) விலக்கில் நிற்கச் சொல்லிவிட்டு, பரஞ்ஜோதி தனது மனைவியிடம் மதுரைக்குப் படம் பார்க்கச் செல்வோம் என்று மதுரை பஸ்ஸில் ஏறி கிருஷ்ணன் கோவில் விலக்கில் இறங்கியிருக்கிறார். ‘மதுரைக்கு படம் பார்க்கச் செல்வோம் என்று கூறுனீர்கள் இங்கு இறங்குகிறீர்கள் என்று அருள்ஜோதி கேட்கிறார். ‘படம் பார்க்க நேரம் ஆகிவிட்டது, அதனால் கூமாப்பட்டிக்கு செல்வோம் என்று கூறுகின்றார். 


நிற்கச் சொல்லிய நான்கு பேருடன் கூமாப்பட்டிக்கு அம்பாஸிடர் காரில் செல்கின்றனர். அம்பாஸிடர் கார் காட்டு வழியாகச் சென்றவுடன் அருள்ஜோதி, பரஞ்ஜோதியிடம், ‘கூமாப்பட்டிக்கு செல்வோம் என்று சொன்னீர்கள். கார் காட்டு வழியாகச் செல்கிறதே? என்று கேட்கின்றார். அதற்குப் பரஞ்ஜோதி, ‘காலையில் சென்றால்தான் உன்னை எங்கள் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பார்கள். அதனால் இன்றிரவு நமது தென்னந்தோப்பில் தங்கிவிட்டுச் செல்வோம் என்று கூறி தென்னந்தோப்பிற்குச் செல்கின்றனர். அங்கு சென்றவுடன் பம்புசெட் அறையில் வைத்து கொன்று விடுமாறு நான்கு பேரிடமும் கூறிவிட்டு பரஞ்சோதி வந்து விடுகின்றார். 


பரஞ்ஜோதியின் பெற்றோர்கள் அருள் ஜோதியை தென்னை மரத்தடியில் புதைத்துவிட்டு தண்ணீர் பாய்ச்சி விடச் செய்கின்றனர். அதன்படி அருள்ஜோதியை தென்னை மரத்தடியில் புதைத்துவிட்டு தண்ணீரைப் பாய்ச்சி விடுகின்றனர். அதன்பின், பரஞ்ஜோதி, அருள்ஜோதியின் பெற்றோர் வீட்டிற்கு (வ. புதுப்பட்டிக்கு) அருள்ஜோதியைத் தேடிச் செல்கின்றார். அங்கு அருள்ஜோதி இல்லையென்று கூறிவிடுகின்றார்கள். உடனே அருள்ஜோதியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். காவல் துறையினர் பிணத்தை ஒன்பதாம் நாள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிகழ்ச்சி பறையர்களின் மனதில் நீங்கா வடுவாக நின்று பள்ளர்கள் மீது வெறுப்படையச் செய்துள்ளது.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார...