Skip to main content

பெளத்தராகா நின்ற அயோத்திதாசர்!

'Becoming is certainly not imitating, or identifying with some- thing; neither is it regressing-progressing; neither is it correspond- ing, ... [nor] producing ... Becoming is a verb with a consistency all its own; it does not reduce to, or lead back to, "appearing," "being," "equalling" or "producing". (A Thousand Plateaus - Capitalism and Schizophrenia, Gilles Deleuze and Felix Guattari, P. 239).





ஆகுதலின் மீது அயோத்திதாசருக்கு மிகப் பெரிய மயக்கம் இருந்தது.  ஆளைச் சொக்க வைக்கும் மயக்கம்.  ‘பெளத்தர் ஆகுதலுக்காக’ அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒரு நூற்றாண்டு கழித்தும் நம்மைக் கவர்கின்றன.  ஒரு விஷயத்தில் இறங்கினால் அதிலேயே கிறங்கிப் போதல் என்பார்களே, அதை நீங்கள் அவரது ‘ஆகுதலில்’ பார்க்க முடியும்.


‘பறையர்’ என்று ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட நிலையிலிருந்து ‘பெளத்தர்’ என்ற நிலையை அடைதலே அவருக்கு முன்னிருந்த சவால்.  பறையரும் பெளத்தரும், இருவேறு எதிர்நிலைகள் என்பதை அவர் வரலாற்றிலிருந்து தருவித்துக் கொண்டார்.  பறையர் என்பதற்குப் பதில் வேறெந்தவொரு சாதி அடையாளத்தையும் இங்கே பொருத்திக் கொள்ளலாம்.  பள்ளர் / பெளத்தர், அருந்ததியர் / பெளத்தர், பிராமணர் / பெளத்தர், நாடார் / பெளத்தர், வன்னியர் / பெளத்தர்…இப்படி வரிசையாய் சொல்ல முடியும்.  எல்லா சாதி அடையாளங்களும் வைதீக அடையாளங்களே.  இதன் எதிர்நிலை, பெளத்தம்.  பெளத்தராகுதலே சாதியிலிருந்து வெளியேறுதல்.  யாராகவாயினும் பெளத்தராகுதலே கருமம்!  


நீண்ட உரையாடலுக்குப் பின் அம்பேத்கர் இதே முடிவிற்கு ஆய்வுபூர்வமாக வந்து சேர்கிறார்.  சாதிக்கு எதிர்நிலை பெளத்தமே என்பதை வரலாறு நெடுகிலும் பலர் இது போல நிரூபித்திருக்கிறார்கள்.  நமது சமீபத்திய உதாரணங்கள், அயோத்திதாசர், மகாத்மா பூலே, அம்பேத்கர்.  


இவர்களுள் அயோத்திதாசர் மட்டுமே பெளத்தராகுதலைக் கவனப்படுத்தியவர்.  அவருக்கு பாலி மொழியிலோ அல்லது வேறெந்தவொரு மொழியிலோ காணக்கிடைக்கும் பெளத்த பிரதிகளில் திருப்தியில்லை.  அதற்கான மூலகங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.  அதைத் தேடத்தொடங்குகிறார்.  அதைக் கண்டறியவும் செய்கிறார்.  பெளத்தத்தின் முன்னொட்டாக தமிழைக் கொண்டு வந்து சேர்த்ததே அவரது பெளத்தராகும் பயணத்தின் தொடக்கம்.  நாமெல்லாம் பெளத்த ஞாபகங்களைக் கொண்டவர்கள் என்பதை அவர் ஆழமாய் நம்ப விரும்பினார்.  ஆழமான நம்பிக்கையே உங்களை ஏதொன்றாகவும் ஆக அனுமதிக்கிறது.  இந்தத் தேடலின் உச்சமே, நமது சடங்குகளையும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் பெளத்த அனுபவங்களாக மடைமாற்றுதல்.  அவர் கொஞ்சம் கொஞ்சமாக பெளத்தராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறி இது.   


அயோத்திதாசருடைய வாழ்க்கையின் காவிய தருணம் என்று நான் இதையே சொல்வேன்.  அவர், பெளத்தராகிக் கொண்டேயிருந்தார்.  மீண்டும் மீண்டும் பெளத்தராகிக் கொண்டேயிருந்தார்.  திருக்குறள் உரையை எழுதும் போதும் ஆகிக் கொண்டிருந்தார்;  ஒளவை குறித்து எழுதும் போதும் ஆகிக் கொண்டிருந்தார்;  இலவச கல்வி கேட்டு எழுதும் பொழுதும் ஆகிக் கொண்டிருந்தார்;  தமிழன் இதழை நடத்தும் பொழுதும் ஆகிக் கொண்டிருந்தார்.  வாழ்நாளில், எந்தத் தருணத்திலும், தான் பெளத்தராகி விட்டதாக அவர் துளியும் நினைக்கவில்லை.  ஆகிக் கொண்டே இருந்தார்.  அம்பேத்கர் எதை விட்டாரோ (பெளத்தர் ஆகி விடுதல்) அதில் அயோத்திதாசர் இருந்து கொண்டிருந்தார்.   


என்னைப் பொறுத்தவரை, அயோத்திதாசருக்குப் பெளத்ததை அடைதல் இரண்டாம்பட்சமாக இருந்திருக்க வேண்டும்.  ஏறக்குறைய, அதை அடையாமலிக்கக் கூட அவர் முயற்சித்திருக்கலாம்.  வீடடைதல் அல்லது கூடடைதல் என்ற அனைத்தும் மரணத்தின் போலிகள் என்று அவர் அறிய மாட்டாரா என்ன?  மரணத்தை வெல்வது தான் உச்சபட்ச நோக்கம் என்றால், அடைதலை விடவும் ஆகுதலே உன்னதம் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.  ஆகுதல் என்றால்  ஒரு நிலைக்கும் மறு நிலைக்குமிடையே நழுவுதல்.  ஒரு கட்டத்தில் இரு வேறு நிலைகளும் மறைந்து, நழுவுதலே கருமமாகிறது; பின், கருமமே கண்ணாகிறது.  


இதையே நான் ‘ஆநின்று’ என்று சொல்ல விரும்புவேன்.  பெளத்தராகுதல் என்றால், பெளத்தராகா நின்றல் என்று சொல்லித் தருகிறது தமிழ்.  அந்த வகையில், பெளத்தராகா நின்றலே அயோத்திதாசரின் வேட்கை.   தமிழ் பெளத்தத்தின் காவிய தருணம் இது.    


இந்த ஆகா நின்றலே, அவர் பால் என்னை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.  அம்பேத்கர் இறுதியில் பெளத்தரானார்; பிறரையும் மாறச்சொன்னார்.  பெரியார் நாத்திகரானார்; எல்லோரையும் மாறச்சொன்னார்.  இதைப் போல அயோத்திதாசரும் பெளத்தர் ஆகியிருந்தால், என்னையும் ஆகச் சொல்லியிருந்தால் தெறித்து ஓடியிருப்பேனோ என்னவோ!  அவர் ‘பெளத்தராகாமல் நிற்பதே’ ஒரு நூற்றாண்டிற்குப் பின்னும் அவரைக் கொண்டாடச் சொல்கிறது.


ஆகா நிற்பது, ஆகப்பெரிய சிந்தனைச் சுழல்.  எப்படி இந்த உலகில் ஆணாக மாறுவதற்கு பெரிய மெனக்கிடல்கள் தேவையில்லையோ (இந்த சமூகமே அதற்கான உத்திகளைக் கொண்டிருக்கிறது), அதே போல இந்திய சமூகத்தில் வைதீகனாக மாறுவதற்கு பெரிய யத்தனங்கள் வேண்டியதில்லை.  நீங்கள், உங்களை அறியாமலேயே வைதீகனாக மாற்றப்பட்டு விடுகிறீர்கள்.  அதைத் துறந்து பெளத்த நிலையை நோக்கி நகர்வதே ஆகப்பெரிய அரசியல்.


அயோத்திதாசரின் தனித்துவம், ‘ஆகுதலின் அரசியல்’ என்று சொல்லலாம்.  அம்பேத்கரிடமோ பெரியாரிடமோ நாம் பார்க்க முடியாத அரசியல்.  அம்பேத்கர், இந்த தேசத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெளத்தத்தை விடுதலைக் கருவியாக அறிவிக்கிறார்; பெரியார், வைதீகத்தின் பிடியிலிருந்து வெளியேறும் விடுதலை வழியாக பகுத்தறிவையும் நாத்திகத்தையும் அறிவிக்கிறார்.  இவ்விருவரின் அரசியலும், அடைய வேண்டியதை அறிவுறுத்துவதும், அதைச் செயல்படுத்துவதுமாக இருக்கிறது.  அவர்கள் தாங்கள் கண்டடைந்ததை மலை மேலிருந்து பொழியத் தொடங்குகிறார்கள்.


அயோத்திதாசரிடம் இப்படியான எந்தப் பொழிவையும் நீங்கள் பார்க்க முடிவதில்லை.  அவரிடம் வெளிப்படுவது, அவதானம்.  ‘நாமெல்லாம் பூர்வத்தில் பெளத்தர்களாக இருந்தோம்’ என்ற அவதானம்.  இந்த அவதானத்தின் மேல் வலுவாகக் காலூன்றி பெளத்தராகா நிற்க ஆரம்பிக்கிறார்.  அதாவது, என்றென்றைக்கும் பெளத்தர் ஆகிக் கொண்டேயிருக்க ஆரம்பிக்கிறார்.  ஆகுதலின் மீது அயோத்திதாசருக்கு மிகப் பெரிய மயக்கம் இருந்தது.



Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு - சிறுகதை

 1985ல் எழுதப்பட்ட சிறுகதை இது.  அப்பொழுது எனக்கு பதினெட்டு வயது.  அந்த வருடம், நண்பர்களுடன் இணைந்து 'நிதர்சனா' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வந்தேன்.  அதற்காக எழுதப்பட்ட கதை இது.  இதற்கு வண்ணத்தில் அட்டைப்பட ஓவியம் கூட இருந்தது. பின்னாட்களில் 'கார்ட்டூனிஸ்ட் மதி' என்று அறியப்பட்ட மதி தான் வரைந்து தந்தார்.     அதன் பின் இந்தக் கதையை, எஸ். ஆல்பர்ட் கொடைக்கானலில் நடத்திய 'சிறுகதைப் பட்டறையில்' வாசித்தேன்.    அப்படியே அது சென்னைக்குப் போய், எஸ். வி. ராஜதுரை நடத்திய 'இனி' யில்  பிரசுரமானது.  இன்றைக்கும் இந்தக் கதையை ஞாபகம் வைத்து பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.  அப்படிப் பேசும்போதெல்லாம், கதையில் வருகிற தாத்தாவை முத்தமிட்ட பேரனைப் போல நான் சங்கோஜப்படுவது வழக்கம்.   'கர்ணன்' திரைப்படத்தில் பன்றி வளர்க்கும் ஏமராஜா, தன் மதினிக்கு முத்தம் தந்ததைப் பார்த்ததிலிருந்து இந்தக் கதை ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.  இன்றைக்கு எஸ். ஆல்பர்ட் இதை மீண்டும் ஞாபகப்படுத்தினார். அன்புள்ள தாத்தா பாட்டிக்கு சங்கரன்கோவில் பஸ்ஸ்டாண்டில் காத்...