இந்தக் கடிதத்தை நான் யாருக்கு எழுதுவது என்று தெரியவில்லை. யாருக்காவது எழுத வேண்டும் போல் இருக்கிறது. ஆனால், அப்படி ஆட்கள் யாரும் எனக்கு இல்லை. அதனால், அன்புள்ள நண்பருக்கு,
இதற்குள் உங்களுக்கு விளங்கியிருக்கும், நான் குழம்பிப்
போயிருக்கிறேன். இது கூட சரியில்லை. எனக்குள் அவநம்பிக்கை
பெருகிக்கொண்டிருக்கிறது.
அதை நான் முடிந்த மட்டும் அள்ளி அள்ளி வெளியே
கொட்டிக்கொண்டிருக்கிறேன். என் படகு மூழ்கிக்கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் கைகளாலும் கால்களாலும், உடலாலும் அத்தனை ஓட்டைகளையும்
அடைப்பதற்காகத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால், நான் அப்படி செய்திருக்கக் கூடாது. காலத்தை வீணடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் தான் படகில் அவநம்பிக்கையின்
அளவு அதிகரிக்கத் தொடங்கியது.
அதை அள்ளி வெளியே கொட்டுவதும் அவ்வளவு எளிதாக இல்லை. அவநம்பிக்கை நீல நிறத்திலும் இரத்தைத்தைப் போல
பிசுபிசுப்பாகவும் இருக்கிறது. கண்ணை மூடிக்
கொண்டால், என் படகில் உதிரம் தான் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இரத்தக் கடலில் இறங்கியிருக்கக் கூடாது என்று புத்தியுள்ள
யாருக்காவது இப்பொழுது தோன்றுமா? ஆனால், எனக்குத் தோன்றுகிறது.
இந்த உலகில் எனக்கு எதுவுமே முன்பே சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு
விஷயத்தையும் நான் முன் தயாரிப்பின்றியே எதிர் கொண்டிருக்கிறேன். இதனால், ஒவ்வொரு முதல் முறையும் நான் தோற்றுப்
போவது தான் வாடிக்கை. அதனால், எப்பொழுதுமே, நான் அடுத்த முறை வெற்றியாளன். இந்த உலகின் முதல் மனிதனுக்கும் எனக்கும் பெரிய
வித்தியாசம் எதுவுமில்லை. இரண்டு பேருக்குமே
வரலாறு கிடையாது.
இது 'அவநம்பிக்கைக் கடல்' என்று எனக்குச் சொல்வார் யாரும் இல்லை. சொல்லியிருந்தால் படகை எடுத்திருக்கவே
மாட்டேன். அது இரத்தம் போல் பிசுபிசுப்பானது
என்று கதையாகக் கூட யாரும் எழுதியிருக்கவில்லை.
தனித்திருக்கையில் தோன்றும் சாவு பயம் எனக்கு வந்திருக்கிறது. இதுவொரு முட்டாள் உலகம். அல்லது ஒருவருக்கொருவர் ஸ்நேகமற்ற உலகம். இரண்டுமே ஒன்று தான்.
அந்த சிசிடிவி காமிரா காட்சியை நான் பார்த்திருக்கக் கூடாது. அந்தப்
பையனும் அவனது மனைவியும் மறு நாளோ அல்லது அதற்கு மறு நாளோ அங்கிருந்து தப்பித்து
நகரத்திற்கு வந்து விடுவதாக இருந்தார்கள்.
கிராமத்திலிருந்து தப்பிப்பது தலித்துகளின் வாழ்க்கையில் வரம்
மாதிரி. அது எளிதான காரியம் இல்லை.
ஒன்று தெரியுமா, மூன்று தலைமுறைகளுக்கு முன் அப்படியொரு
கிராமத்திலிருந்து தப்பித்து வந்த என் குடும்பத்தில், 'திரும்ப கிராமத்திற்கு போக
நேர்வது' ஒரு கொடுங்கனவாகவே சொல்லப்பட்டு வந்தது.
சிறுவயதில் எங்களுக்குப் பூச்சாண்டி பயமெல்லாம் இருந்த்தில்லை. எங்கே மறுபடியும் கிராமத்திற்கே போக வேண்டி வருமோ
என்று தான் பயந்து கொண்டிருந்தோம். ஒழுக்கமாய் நடந்து கொண்டோம்; வீட்டுப்பாடங்களை
தவறாமல் செய்தோம்; பக்தியாய் சாமி கும்பிட்டோம்; கீழ்ப்படிதலுடன் வாழ்ந்தோம். எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் தான்.
தவறினால், கிராமத்திற்கே போக வேண்டியது தான்!
இந்த பயம் மூன்று தலைமுறைகளாய் எங்களைத் தொடர்ந்த்து. அதாவது, கிராமத்துடன் எங்கள் வேர்களை சுத்தமாய்
அறுத்துக் கொள்கிற வரைக்கும். இதனால்,
கிராமத்தை 'இழந்த சொர்க்கமாகக்' காட்டுகிற இலக்கியங்களையும், திரைப்படங்களையும் எதிர்கொள்ளும்
போது எனக்கு, மோசமான மொழிபெயர்ப்பையோ அல்லது சப்டைட்டில் படத்தையோ பார்ப்பது போலவே இருக்கும். நாட்டுப்புறவியலில் 'வேர்கள், விழுதுகள்' என்று
யார் கிளம்பினாலும் கொலைவெறி கொள்வது இதனால் தான்.
அந்தப் பையன் காதலுக்காகவே கிராமத்தை விட்டுக் கிளம்ப முடிவு
செய்திருக்கிறான். தலித்துகள் கிராமத்தை
விட்டு வெளியேறுகிறார்கள் என்றாலே யாருக்கும் பிடிக்காது; அதுவும் காதலோடு
வெளியேறுகிறார்கள் என்றால்... அவ்வளவு தான் காட்டுமிராண்டியாக மாறி விடுகிறது
கிராமம். யாராலும் கவனிக்கப்படாத முரட்டு ரோகி அது. இது வரையில் மனிதன் கண்டு
பிடித்ததிலேயே அற்புதமானது என்று சொல்லப்படும் காதலைப் பிடிக்காத சமூகங்களை வேறு என்ன
சொல்வது?
கொலை செய்யப்பட்ட தலித் காதலர்களைத் தான் உங்களுக்குத் தெரியும். இன்னொன்றும்
இருக்கிறது. உயிரோடிருக்கும் ஒவ்வொரு தலித்திடமும், தலித் அல்லாதவரைக் காதலித்து,
பின் வஞ்சிக்க நேர்ந்த கதையொன்று உண்டு.
வஞ்சித்து உயிர் வாழ்வது தான் எவ்வளவு கொடுமை!
காலங்காலமாக தலித்துகள் மட்டுமே செய்து வந்த 'கிராமத்தை விட்டு
வெளியேறும்' காரியத்தைச் செய்வதற்கு சமீபமாகத்தான் இன்னொரு கதாபாத்திரமும் முயற்சி
செய்யத் தொடங்கியிருக்கிறது. இந்தக்
கதாபாத்திரம், தலித்துகளைப் போலவே அடக்குமுறைகளை சந்தித்து வந்த சாதி வீட்டுப்
பெண்கள்!
அவர்களை அவ்வீடுகள் மரியாதையாய் நடத்தி நான் கேள்விப்பட்டது
இல்லை. தாய்மாமனுக்காக வளர்க்கப்படுகிற
பிராய்லர் கோழிகள் என்பதைத்தவிர அவர்களுக்கு பெரிய மரியாதை எதுவும் இருந்தது
இல்லை.
எல்லா தமிழ் நாட்டுப் பெண்களுக்கும் தங்களை நல்லதங்காளாக நினைத்துக்
கொண்டு அழுவதற்கு அவ்வளவு கதைகள் இருக்கின்றன.
இந்த மரபு இப்பொழுது தான் மீறப்படுகிறது.
இந்தப் பெண்கள் முதல் முறையாய் தங்களது காதலை இப்பொழுது தான் கண்டெடுத்திருக்கிறார்கள். ஆண் - பெண் உறவென்பது இருட்டான முரட்டுத்தனம்
இல்லை என்பது அவர்களுக்கு இப்பொழுது தான் விளங்கியிருக்கிறது. தன்னுடல் எது என்பதை உணரும் கண்ணாடிக் காலம்
இது.
இதனால் அவர்களும் இந்தக் கிராமத்தை விட்டு தப்பித்து வெளியேற
முடிவெடுக்கிறார்கள். இப்படித்தான் சக
தப்பிப்பாளராக அவர்களுக்கு தலித் காதலர்கள் கிடைக்கிறார்கள். சொல்லப்போனால், இது உண்மையில் தலித்துகளின்
காதல்கதை என்பதிலுள்ள வலுவைக் காட்டிலும், சாதி வீட்டுப் பெண்கள், சாதி ஆண்களுக்கு
எதிராகவும், அவர்களது பிடியிலிருந்து தப்பிக்கவும் எடுக்கிற முயற்சிகள் என்று
நம்புவதற்கு தான் அதிக சாத்தியம் இருக்கிறது.
கிராமத்து சாதி ஆண்கள் காதலைத் தான் தங்களது முதல் எதிரியாகப்
பார்க்கிறார்கள். அது தங்களது சாதிய ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாக அவர்களுக்குத்
தெரிகிறது. அந்த சாதிய ஆண்மையின் மீது
தான் அவர்களது பொருளாதார, அரசியல், சமூக அதிகாரங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பது முக்கியம். இதனால் தான் கிராமங்கள் உடனடியாக
சரிசெய்யப்படவேண்டிய 'சமூக அமைப்பு' அல்ல 'சமூகக் கோளாறு' என்று சொல்ல
வேண்டியிருக்கிறது. அதில் நிஜமாகவே
கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
'Fandry' என்ற
மராத்தி படத்தை எடுத்த நாகராஜ் மஞ்சுளேவின் இரண்டாவது படமான 'சாய்ரத்'தை
சமீபத்தில் பார்த்திருந்தேன். படம்
இன்னும் திரைக்கு வரவில்லை. பெர்லின்
திரைப்பட விழாவிற்கு படத்தைத் திரையிட நாகராஜ் வந்திருந்தார்.
நாகராஜ் மஞ்சுளே, தமிழ் பேசும் பழங்குடியினத்தவர் என்று உங்களுக்குத்
தெரியுமா? இதையும் பெர்லினில் வைத்து தான்
தெரிந்து கொண்டேன். ஓடாரி என்று
சொல்லக்கூடிய பழங்குடி; 'கைகரி' என்ற தமிழ் - கன்னடம் கலந்த திராவிட மொழியைப்
பேசுபவர்கள். பாரம்பரியத் தொழில் பன்றி
வளர்த்தல், கூடை முடைதல் போன்றவை (நம்மவூர் 'மலைக்குறவர்கள்' மாதிரி).
முதல் படத்தின் பெயரான 'Fandry' , தமிழ் சொல் தானாம்; அதாவது, பன்றி!
அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் பன்றி தான் அந்தப் படத்தின்
கதையே. sairat என்றால் 'காட்டுத்தனம்' என்று அர்த்தம் - காட்டுத்தனமான
அன்பு என்றும் சொல்லலாம் காட்டுத்தனமான கோபம் என்றும் சொல்லலாம்; அப்படியொரு
காட்டுத்தனம்.
சாய்ரத், ஒரு காதல் படம். தலித் ஆணுக்கும், சாதி வீட்டுப் பெண்ணுக்குமான
காதல் பற்றிய படம். காட்டுத்தனமான காதல்
அது. நமக்கு இன்னும் நெருக்கமானது. 'அலைகள் ஓய்வதில்லை' யின் தலித் வெர்சன் என்று
சொன்னால் அப்படியே நம்பலாம்.
'பன்றி' படத்தைப் போலவே, அதில்
பார்வையாளர்கள் முகத்தை தலித் சிறுவன் வீசும் கல் வந்து தாக்கும், Sairat படத்தின் இறுதிக் காட்சியும் பார்க்கிறவர்களை நிலைகுலைய
வைக்கும். படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது நாகராஜ் தனியாக இப்படிக்
கேட்டுக் கொண்டார்: படம் ஏப்ரல் 29ம் தேதி தான் வெளியாகிறது என்பதால், அந்த
இறுதிக் காட்சியை முன்பே எழுதி விட வேண்டாம்., நிஜமாகவே அப்படி நடந்து, அதை சிசிடிவி
காமிராவில் பதிவு செய்து, உலகமே பார்த்துருச்சுனு நாகராஜ்ட்ட எப்படிச் சொல்ல?
நான் மட்டுமல்லாது, எனக்குத் தெரிந்த பலரும், அவநம்பிக்கையில் தான் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். யாராவது ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். யாரும் பேச மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.
Comments
https://en.wikipedia.org/wiki/Nagraj_Manjule
https://en.wikipedia.org/wiki/Kaikadi_language
http://www.thehindu.com/todays-paper/tp-in-school/the-scourge-of-caste-lives-on/article5376942.ece
Then only we will create a new world with happiness......