Skip to main content

'அயோத்திதாசரை' வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை - முகம்மது யூசுப்

" அயோத்திதாசர் "
டி.தருமராஜ் அவர்களின் நூலின் வாயிலாகத்தான் முதன் முதலாக அயோத்திதாசரை என் வாசிப்பில் வழி அறிகிறேன் என்ற கூச்சத்துடன் தான் ஆரம்பம் செய்ய வேண்டியுள்ளது.


நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே வேக வேகமாகச் சென்று தமிழ் கூறும் நல் உலகின் அறம் பேசும் அறிவுஜீவிகளின் இலக்கிய பெட்டகமான " அழியாச் சுடர் " எனும் பக்கம் சென்று காநாசு லாசரா குபரா இன்னும் என்னென்னமோ பெயர்களுக்கு இடையில் அயோத்திதாசர் பெயரைத் தேடினேன். நான் நினைத்தது போலவே இல்லை. அப்போ, அந்த அழியாச்சுடர் பெரும்பான்மை வரிசையை நான் வெறுப்பதில் தப்பே இல்லை என நினைத்துக் கொண்டேன். 
காலம் முழுவதும் தமிழில் எழுதிக் கொண்டு இருந்தவரை, நீண்ட நாட்கள் சிற்றிதழ் நடத்தியவரை எந்த ஒரு அடையாளமும் இன்றி சுருட்டி கசக்கி தூர எறிந்து விட முடியுமா. 
முடியும்.. நீங்கள் உயர்ஜாதி அல்லது இடைஜாதிக்குள் இல்லாதபட்சத்தில். 
உண்மையில் சொல்லப்போனால் இந்த நூல் சார்ந்து ஒங்கொம்மா ங்கொத்தா என்று தான் திட்டி எழுத வேண்டும் . 
ஆனாலும் பாருங்கள் இன்டலெக்சுவல் சமுதாயம் ஆண்ட பரம்பரை வேறு, சரி என்ன செய்ய மனதை இறுக்கமாக்கிக் கொண்டு " நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் " என்று தான் வருத்தத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டியுள்ளது. 
" முதற் பதிப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை " என்ற தலைப்பில் இந்த நூலில் 19 பக்கத்தில் இருந்து 32 வரை உள்ளதை வாசித்து விட்டு நீண்ட நேரம் அமைதியாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். குப்பைத்தொட்டி அருகில் வீசப்பட்ட ஒரு அனாதைக் குழந்தையின் அழுகுரல் போல அந்த முன்னுரையின் வலி நெஞ்சை அழுத்துகிறது. 
                                        முகம்மது யூசுப்
அவர் முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கும் தலித் தலித் என்ற வார்த்தைகளை அகற்றி விட்டு அவற்றில் எல்லாம் இஸ்லாமியன் என்ற வார்த்தை இட்டு நிரப்பினாலும் எந்த சேதாரமும் இன்றி அதே அழுகைக்குரல் கேட்கும் வாய்ப்பு இருந்ததினால் என்னவோ வலியின் பாரம் இன்னும் கூடுதலாக உணர்த்தேன். 
எழுதுவதற்கான காரணங்கள் குறித்து ஏராளமாக பேசப்பட்டுள்ளன என ஆரம்பிக்கும் எழுத்தாளர் பொது வாசகப்பார்வையில் இருந்து தலித் பார்வை எவ்வாறு மாறுபடுகிறது. அதாவது அவதூறுகளுக்கு எதிரான எழுத்து முறையை ஏன் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அது திணிக்கப்படுதல் என்பதை மிக வலியோடு பதிவு செய்கிறார். 
தமிழ் எழுத்துலகில் இருவரைப் பற்றி உங்கள் மனம் போன போக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஒன்று கடவுள் மற்றொன்று தீண்டத்தகாதவன் என்று கூறி ஆசிரியர் ஒரு பட்டியல் இடுகிறார். இப்படி எல்லாம் நீங்கள் பூசி மொழுகி எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசலாம் என்று. ( அவர் வகைமைபடுத்தி இருப்பது அனைத்தும் நிஜத்தில் மற்ற அனைவரின் பயன்பாட்டில் உள்ளவை என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று)
1982 சென்னை மஹாஜன சபை கூட்டத்தில் இருந்து நீண்ட பயணம் தொடர்கிறது நூலில். 
வைதீக சமயங்கள் எல்லாம் மரபு பண்பாடு என்ற பெயரில் நிகழ்த்தியது அனைத்தும் ஜாதிய கட்டமைப்பே. தமிழ் மொழி மீதான பற்று என்ற பெயரில் அந்த ஜாதிய கட்டமைப்பை பக்தி இலக்கியம் மூலமாக நீர் ஊற்றி வளர்த்த கதையை பேசுகிறது. அதற்கு எதிராக உண்மையிலேயே அறம் காத்த அயோத்திதாசரின் செயல்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. 
பூர்வ பௌத்தம், தமிழ் பௌத்தம் அதற்கும் அப்பால் மானிடம் குறித்து சிந்தித்த அயோத்திதாசரைப் பற்றிய பெரும் கதையாடல் இந்த நூல். 
பெரியாரும் கூட அயோத்திதாசரை மறந்தார் என்பதில் உள்ளது மற்றுமொரு வலி. 
இப்படி வலிகளை தொடர் பட்டியல் இடலாம். 
20 ஆண்டு கால உணர்வின் வெளிப்பாடு இந்த நூல் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். 
" போலி பிராமணன் " என்ற எழுத்தாளர் உபயோகித்த சொல். நான் தேடி அலைந்த எந்த அடைப்புக்குள்ளும் சிக்காத ஒன்று. 
இந்த நூல் (அயோத்திதாசர்) வந்த அதே சமயத்தில், ஜாதி கட்டமைப்பை தோளில் தாங்கிப் பிடித்து, போலி பிராமணிய வழி நடத்தலோடு இனி இடை நிலை ஜாதி தான் உங்களை எல்லா வகையிலும் ஆட்டுவிக்கும் என்ற கருத்தியலோடு ஒரு நூலும் வெளி வந்துள்ளது அதை இந்த கூட்டம் தலையில் வைத்து கொண்டாடுகிறது, ஆக இந்த சமூகம் இன்னமும் மாறவில்லை என்பதை அதே தீரா வலியுடன் காண வேண்டியுள்ளது இந்த மண்ணின் மீதான சாபம்.
அயோத்திதாசரை வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை. 
அயோத்திதாசர்
ஆசிரியர் :- டி.தருமராஜ்
கிழக்கு பதிப்பகம்
விலை 300

Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...