Skip to main content

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1

அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது.


நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை.


உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.  



இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.  


பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள், ஜோக்குகள் இப்படி அவர்களிடம் புழங்கும் கலை வடிவங்களில் இந்த ‘ஆண்மை’ குறித்த கற்பனைகள் வெளிப்படுகின்றனவா என்று தேடத் தொடங்குவோம். 


ஏன் இப்படி ஆரம்பிக்கிறோம் என்பதற்கு வலுவான காரணங்கள் உண்டு.  கருத்தாக்கங்கள், அரூபமானவை.  எனவே அவற்றை நீங்கள் களத்தில் நேரடியாகச் சந்திக்க முடிவது இல்லை.  கூடவே, அவை வெளிப்படையாகச் சொல்லப்படுவதும் இல்லை.  அப்படி இருக்க, அம்மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிற கலை வடிவங்களின் மூலமாக அப்பண்பாட்டினுள் செயல்படும் கருத்தாக்கங்களைக் கண்டுகொள்ள முடியுமா என்று யோசிப்பதே நாட்டுப்புறவியலின் பாணி.  


அதைப் பொருத்தவரை, வழக்காறுகள் பண்பாட்டின் வாயில்கள் மட்டுமே.  அச்சமூகத்தின் சிந்தனையமைப்பைக் கண்டறிவதற்கான முதன்மைத் தரவுகள்.  இதனாலேயே அது வழக்காறுகளைச் சேகரிக்கிறது; அவற்றிலில் உறைந்திருக்கும் கருத்துருவ முரண்களைக் கண்டு பிடிக்க முயல்கிறது; அம்முரண்களை ஆதரிக்கும் வேறு கலை வடிவங்கள் கிடைக்குமா என்று தேடச் சொல்கிறது.  இப்படியே அதுவொரு தொடர் நிகழ்வாகவும் மாறி விடுகிறது.


கலை வடிவங்கள் வாயிலாக ஒரு சமூகத்திற்குள் நுழைய விரும்புவது எதனால் என்றும் கேட்டுப் பார்க்கலாம்.  கடந்த காலம் என்றால் பரவாயில்லை, சமகால வாழ்க்கையையும் நாம் ஏன் வழக்காறுகளைக் கொண்டே அணுக விரும்புகிறோம் என்று கேட்பது சரியாக இருக்கும்.

  

இந்தக் கேள்விக்கு நிறைய பதில்கள் உள்ளன.  அதில் ஒரு பதில் முக்கியமானது - பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு ஆய்வாளனும் அவனைப் போன்ற மனிதர்களையே ஆய்வு செய்கிறான்.  


அவனைப் போன்ற மனிதர்கள் என்றால், அவனைப் போன்று ரத்தமும் சதையுமான மனிதர்கள்.  ஆய்வாளர்களைப் போன்ற உணர்வுகளும், சுயமரியாதையும், பகுத்தறிவும் உடைய மனிதர்களை.  


தன்னையொத்த மனிதர்களை ஆய்வு செய்வதற்கு முதலில் அவன் கைகள் நடுங்க வேண்டும் என்பது தான் கள ஆய்வுமுறையியலின் அடிப்படை.  இந்த நடுக்கமே ஆய்வின் ஒழுக்கம், நீதி, அரசியல் எல்லாம். ஆய்வாளரும் அவர் ஆய்வு செய்யும் பண்பாட்டு மனிதர்களும் பரஸ்பரம் பேணிக்கொள்ள வேண்டிய சுதந்திரம், சுயமரியாதை குறித்த அத்தனை விதிமுறைகளும் இதிலிருந்தே கிளைக்கின்றன.  


நாட்டுப்புறவியல், இந்த ஒழுக்கத்தை தொடக்கத்திலிருந்தே பேணி வந்திருக்கிறது.  ஏனெனில், நாட்டுப்புறவியல் ஆய்வுகள் ஐரோப்பிய சமூகங்கள் தங்களைப் பற்றியே செய்து கொண்ட பண்பாட்டு ஆய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டது.  எனவே, ஒரு நாட்டுப்புறவியல் ஆய்வாளனின் புலன்கள் கூடுதலான நுண்ணுணர்வை இயல்பாகவே கொண்டிருக்கின்றன.


ஆனால், மரபான மானிடவியலோ இந்த விஷயத்தில் ஜடம்.  அறிவிலி.  எதிரிலிருக்கும் மனிதனை அது என்றைக்கும் சுயமரியாதை உடையவராக சிந்தித்தது இல்லை.  தனது வெள்ளைத்தோல் தரும் திமிரால், அந்த மூன்றாம் உலக மக்களின் படுக்கையறைக்குள்ளும் செல்லும் அதிகாரம் தனக்கிருப்பதாக நினைக்கும் மூடத்தனம் நிரம்பியது.  தனது நிறத்தையும், தோற்றத்தையும், பொருளாதார வசதியையும் காட்டி தகவல்களைச் சேகரிக்கும் சர்வாதிகாரத்தன்மை உடையது.


இதனாலேயே, மரபான மானிடவியல் ஆய்வுகள் பலவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன; மறுபரிசீலினை செய்யப்பட்டன; தவறுகள் ஒத்துக் கொள்ளப்பட்டு அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் யோசிக்கப்பட்டன.  


ஆனால், இந்தக் கட்டுரை, 2002ல் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு அல்லது அறியாமல் தனது பழைய திமிரோடு வெளிப்பட்டுள்ளது.  ஐரோப்பியத் திமிர் நிரம்பிய மானிடவியல் முறையியலை, சாதித் திமிர் கொண்ட தமிழர்கள் பயன்படுத்தும் பொழுது என்ன நடக்குமோ அது தான் அந்தக் கட்டுரையில் நடந்திருக்கிறது.  இந்தக் கூட்டணி தான் அந்தக் கட்டுரையின் ஆகக் கொடுமையான அருவருப்பு - ஐரோப்பிய இனவாதமும் இந்திய சாதியவாதமும் கலந்த கொடூரம்.


தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம் என்பது எவ்வளவு அந்தரங்கமான விஷயம், அந்த அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் உரிமையை இந்தக் கட்டுரைக்கு யார் வழங்கியது?


அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் நிஜமா பொய்யா என்ற விவாதத்திற்குள்ளெல்லாம் இறங்குவதற்கு முன், இந்தத் தலைப்பில் ஆய்வு செய்வதற்கு நேரடி வாக்குமூலங்களைப் பயன்படுத்தும் எதேச்சதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? 


மானிடவியல் ஆய்வு முறையியலில் ஐரோப்பிய மேட்டிமையே ஜொலிக்கிறது என்று வாதிட்ட போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி மிகப் பிரபலம். 


‘ஐரோப்பியர்கள் பழங்குடிகளின் பாலியல் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தது போல, ஒரு பழங்குடியின ஆய்வாளன் ஐரோப்பியர்களின் பாலியல் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்ய முடியுமா?’


இந்தக் கேள்வியை இந்தக் கட்டுரை எழுதிய நபர்களிடமும் நம்மால் கேட்க முடியும்.  


தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்க ஆய்வில் நீங்கள் பயன்படுத்திய அதே ஆய்வுமுறையியலை, பிராமண இளைஞர்களின் அல்லது வெள்ளாள இளைஞர்களின் அல்லது செட்டியார் இளைஞர்களின் ஆண்மையுருவாக்க ஆய்வுகளுக்குப் பயன்படுத்திவிட முடியுமா?  


பிராமண இளைஞர்கள் பிற சாதிப் பெண்கள் குறித்து என்னென்ன அபிப்பிராயங்களைத் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று உங்களால் ஆய்வு செய்து விட முடியுமா?


நிச்சயமாய் முடியாது.

தப்பித்தவறி யாராவது அப்படி முயற்சித்தால் கூட காயமின்றி தப்பிப்பது கடினம்.  ஏனெனில் எந்தவொரு சுயமரியாதையுள்ள மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்வது இல்லை.


ஆனால், ராஜன் குறை, ஜெயரஞ்சன், ஆனந்தி எழுதியுள்ள இந்தக் கட்டுரை இந்த அநியாயத்தை செய்ததோடல்லாமல், தங்களை அறிஞர்களாகவும் காட்டிக் கொண்டிருப்பது எப்படி சாத்தியாயிற்று?


தலித்துகளுக்கு அந்தரங்கம் என்பதே கிடையாதா? அவர்களுக்கு ரகசியங்கள் இருக்கக்கூடாதா?  அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளின் காட்சிப்பொருளாக மாற்றப்படுவது ஏன்?  அப்படியானால், அவர்களின் சுயமரியாதை என்பது என்ன தான்?  இந்தக் கட்டுரைக்காக தகவல் சேகரிக்கச் சென்ற போது என்னென்ன பொய்கள் சொல்லி ஏமாற்றி இத்தகவல்களைக் கறக்க முடிந்தது?  அதாவது, தலித்துகள் தங்களது ரகசியங்களையெல்லாம் இவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்றால், அந்த நம்பிக்கையை ஏற்படுத்த இவர்கள் என்னென்ன பொய் வாக்குறுதிகளை வழங்கினார்கள்?


2


ஆண்மையுருவாக்கம் குறித்து விவாதிப்பதற்கு, அந்தக் கட்டுரை எடுத்துக் கொண்ட தகவல்களை இரண்டு வகையாகச் சொல்ல முடியும்.  பழைய பாலியல் கதைகள், இன்றைக்கு நிகழும் பாலியல் பேச்சுகள். 

அக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பழைய பாலியல் கதையைக் கேட்ட உடனேயே தெரிகிறது - அது ஒரு அரதப்பழசான கிளுகிளுப்புக் கதை.  அரதப்பழசு என்றாலும், தொடர்ச்சியாக வெவ்வேறு வடிவங்களில் புதுப்பிக்கப்படுவது.  மதுரை விரன் கதை இதன் காவிய வடிவம்; ‘முதலாளியம்மா - வேலைக்காரன்’ என்ற அதன் கொச்சை வடிவத்தை மஞ்சள் பத்திரிகை வரைக்கும் நீங்கள் பார்க்க முடியும்.  இது உலகப்பொதுவான வடிவம்.  வேலைக்காரர்கள் மட்டுமல்ல, முதலாளியம்மாக்கள் கூட தங்களுக்குள் ரகசியமாய் இதன் ஏதாவதொரு வடிவத்தை சொல்லிக் குதூகலித்துக் கொண்டிருப்பார்கள்.  


இதன் தலைகீழ் வடிவங்களும் உண்டு, சிண்ட்ரெல்லா கதை அப்படியொரு தலைகீழ் காவிய வடிவம். ஆதிகால சிண்ட்ரெல்லா கதையிலிருந்த பாலியல் பேச்சுகளை வடிகட்டி, சுத்தப்படுத்திய வரலாறெல்லாம் கூட நாட்டுப்புறவியலில் உண்டு. 


உலகப்பொதுவான இந்தக் கதைகளை அணுகுவதற்கு ஆய்வுலகில் ஏராளமான கருவிகள் உள்ளன.  அதன் சமூகப் பங்களிப்பிலிருந்து உளவியல் பங்களிப்பு வரைக்கும் விரிவாகப் பேசிய ஆய்வு வரலாறு உண்டு.  ஆனால், எந்தவித ஆய்வு நோக்கமும் இல்லாத இந்தக் கட்டுரைக்கு அந்தக் கதை தலித்துகளின் வரலாற்று சம்பவமாகத் தெரிவது தான் கொடூரம்.  அந்தக் கதையில் சொல்லப்படுவது போல, தலித்துகளின் (வேலைக்காரக் கதாபாத்திரம் அவர்கள் தான்!) கடந்தகால ‘ஆண்மை’ ரகசியமாக, வெளியுலகிற்கு தெரியாமலேயே இருந்தது என்று சிறுபிள்ளைத்தனமாக முடிவு சொல்கிறார்கள்.  


சொல்லப்படும் எந்தவொரு பாலியல் கதையிலும் சாகசத்தொனியே இச்சை என்பதும், துய்ப்பு என்பதும் பாலபாடம்.  அதற்கு மேல் அதில் யதார்த்தம் இல்லை. அதுவொரு வகைமாதிரி எனும் போது, இயல்பாகவே தனது நம்பகத்தன்மையை இழந்து விடுகிறது என்பதும் அரிச்சுவடி.  ஆனால், இந்தக் கட்டுரை, அதை வாய்மொழி வரலாற்று ஆவணமாகப் பார்ப்பது தான் அருவருப்பைத் தருகிறது.


இது தான் இப்படி என்றால், இன்றைக்கு நிகழும் பாலியல் பேச்சுகளை அவர்கள் எதிர்கொண்ட விதம் இன்னும் கொச்சையானது.  இந்தப் பாலியல் பேச்சுகளை அவர்கள் உளவு பார்ப்பதன் மூலமும், ஒட்டுக் கேட்பதன் மூலமுமே சேகரிக்கிறார்கள்.  


அந்த உளவின் மூலம், ‘தலித் இளைஞர்கள் வேலைக்குச் செல்லும் உயர்சாதி பெண்களைப் பாலியல் ரீதியாய் தொந்தரவு செய்கிறார்கள், இதன் மூலம் உயர்சாதி ஆண்களின் சுயத்தைக் காயப்படுத்துகிறார்கள், அதன் விளைவாக உருவாகும் புதிய ஆண்மையில் குதூகலம் அடைகிறார்கள் என்ற சதித்திட்டத்தைக் கண்டுபிடிப்பதே அந்த ஆய்வின் புரட்சிகர பார்வை.  முத்தாய்ப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பண்பாடு போன்று இது தலித்துகளின் எதிர்ப்பண்பாடு என்றும் விளக்கமளிக்க முனைகிறார்கள்.


அந்தக் கட்டுரையை அருவருக்கத்தக்கது என நான் சொல்வது இதன் காரணமாகவும் தான்.  அக்கட்டுரையில் செயல்படும் மேட்டிமை, ஒரு ‘காவாலி, எதிர்ப்பண்பாட்டு, தாந்தோன்றியான தலித் இளைஞனை’ கற்பனையாய் உருவாக்க விரும்புகிறது.  இந்தக் கற்பனை பாத்திரம் ஆங்கிலம் பேசும் உலகில் மிகப் பரிச்சயமான ஹார்லெம் ஆப்பிரிக்க அமெரிக்கனின் குணங்களைக் கொண்டது.  


கொஞ்சம் உற்றுப்பார்த்தால், இந்த அடங்கா ஆப்பிரிக்க அமெரிக்க சித்திரம் கூட வெள்ளையின பயத்திலிருந்து உருவானது என்று விளங்கும்.  ஹாலிவுட் படங்களில், போதைப்பொருட்கள் புழங்கும் மாஃபியா பின்னணியில், திரும்பத்திரும்ப காட்டி பதிய வைக்கப்பட்ட ‘நீக்ரோ’ என்ற கற்பனை பாத்திரம் அது.  அக்கதாபாத்திரத்தின் நியாயமே வெள்ளையர்களின் கறுப்பின பயம் தான்.  இந்தக் கட்டுரை, அப்படியொரு புதிய தலித் லும்பன்கள் உருவாகிவருவதை முதன்முதலில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறது.  இந்த பம்மாத்து தான் நம்மை எரிச்சலுறவும் செய்கிறது.


உண்மையில், தலித் இளைஞர்களின் இயல்பாகச் சித்தரிக்கப்படும் பாலியல் சீண்டல்களை நீங்கள் தமிழகத்தின் எந்தவொரு சாதி இளைஞரிடமும் கண்டுபிடிக்க முடியும்.  இந்தச் சீண்டல்கள், மோதல்கள், முரண்களே காதலிக்கும் வழிமுறை என்று தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் நம்பி வருகின்றனர்.  யோசித்துப் பார்த்தால், இதே ஆண்மைச் செயல்பாட்டை ஆயுதங்களுடன் நிகழ்த்திக் காட்டும் மதுரை இளைஞர்கள் இன்னும் பிரபலம்.  


இத்தகைய ஆண் வன்முறைகள் தமிழர்களின் குணம்.  விளையாட்டாகச் சொல்லப்போனால், அக்கட்டுரை சொல்லும் பாணியில், முதல் முறையாக இப்பொழுது தான் தலித் இளைஞர்கள் தங்களை தமிழ் ஆண்களாக பாவிக்கிறார்கள் என்று எழுத வேண்டும்.  


ஆனால், இப்படி ஒரேயடியாய் ஆண் வன்மம் என்று கொந்தளிப்பதிலும் அர்த்தம் இல்லை.  இந்தச் சீண்டல்கள் ஒரு கட்டத்திற்குப் பின் தலைகீழாக மாறுவதற்கும் சான்றுகள் உண்டு.  காதலுக்கு முன் சிலும்பும் தமிழ் ஆண்மை, காதலுக்குப் பின் சிணுங்கிக் கொண்டிருப்பதும் நடப்பு.


என்னைப் பொறுத்தவரை, தமிழ்க் காதலின் இந்தச் சிக்கலை மிக எளிதான ‘ஆண்மை - பெண்மை’ எதிர்வாதங்களைக் கொண்டு விளக்க முடியும் என்பது அறியாமை.  ஆய்வுக் கட்டுரை என்ற அளவில் அது சோரம் போன இடம் இது.


இந்த சித்திரம் நமக்குப் புதியதும் அல்ல.  சமீபத்தில் இதன் நேர்மையான சித்தரிப்பை நாம் பார்த்திருக்கிறோம்.  தமிழ் இளைஞர்களின் இந்தச் சிக்கலை, அதாவது பெண்களைச் சீண்டுதல், கலாய்த்தல், பெரியவர்களை மதியாதிருத்தல், நாகரீக ஆடைகளை அணிந்து கொள்ளுதல் போன்ற அத்தனை ‘லும்பன்’ பழக்கவழக்கங்களையும் நேர்மையோடு, நுண்ணுணர்வோடு அணுகிய இந்தச் சித்திரம் பா. ரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’யில் நமக்குக் கிடைக்கும்.  அந்தப் படத்திலும் கதாநாயகன் ரெளடித்தனம் செய்வான், பெற்றோரை மதிக்காமல் பேசுவான், நிறைய பேரை காதலிப்பான், மிரட்டுவான் ஆனால், மறு நொடியே எல்லாவற்றிலிருந்தும் தலைகுப்புற விழுந்து அடிவாங்குவான்.  ராஜன் குறை, ஆனந்தி, ஜெயரஞ்சன் போன்ற அறிஞர்களிடம் இல்லாத கரிசனமும் அவதானமும் ஒரு கலைஞனிடமே வெளிப்படுகிறது என்பது தான் இங்கே முக்கியம். 


இந்த ‘அட்டக்கத்தி’ இளம் ஆண்களைத் தான் அந்தக் கட்டுரை உயர் சாதிப்பெண்களைத் திட்டமிட்டு ‘கலாய்க்கும்’ தலித் இளைஞர்கள் என்கிறது, தங்களது ஆண்மையின் மூலம் எதிர்ப்புணர்வைக் காட்டும் எதிர்ப்பண்பாட்டுக்காரர்கள் என்கிறது, உயர் சாதி ஆண்மைக்கெதிராகத் திரண்டு எழும் தலித் ஆண்மை என்கிறது.


அந்தக் கட்டுரையை ஆய்வுக்கட்டுரை என்று சொல்வதே வெட்கக்கேடு.  வேறு என்ன சொல்ல?

Comments

கந்தசாமி said…
ஐயா ஆண் வன்முறை தமிழர்களின் குணம் என்ற முடிவு எந்த ஆய்வின் படி வந்த முடிவு.
Anonymous said…
பாலியல் சீண்டல்கள், பெண்களைக் கவர நினைப்பது போன்றவைகள் தலித் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன ? அப்படிப்பார்த்தால் சாதிபேதமற்று அத்தனை சமூக இளைஞர்களிடமும் பொதுவாக ஒரு ஆய்வைச் செய்திருக்க வேண்டும். அவர்களின் 'ஆண்மைகள்', 'பாலியல் கிசு கிசுக்கள்' போன்றவைகளை ஆவணப்படுத்தியிருக்கலாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல இது ஒரு 'வெள்ளை-மேற்கத்திய-செமிட்டிக்' குணாதிசயம். தங்களைத் தவிர உலகிலுள்ள அனைவரும் நாகரீகமற்றவர்கள், பிற்பட்டவர்கள். எனவே அவர்களை ஆய்வு செய்து, திருத்தி நல்வழிப்படுத்தவேண்டிய கடமை தங்களுக்கிருப்பதாக ஆழமாக நம்புகிறார்கள்.

-விவேக்
இந்த ஆய்வாளர்கள் இதேபோன்ற 'நேர்மையான' ஆய்வை பிற சமூகத்து இளைஞர்களிடம் நடத்தி முடிவை வெளியிடுவார்களா ? பிற சமூகத்து (சாதி படிநிலையில் தனக்கு மேல் உள்ள சாதி குறித்தோ அல்லது கீழ் உள்ள சாதி குறித்தோ) பெண்களைக் குறித்த உரையாடல்களையும் ஆவணப்படுத்தட்டும். என்னுடைய பள்ளி நாட்களில் இடைநிலைச் சாதி இளைஞர்களிடமும், இஸ்லாமிய இளைஞர்களிடமும் புழங்கும் 'பிராமண மாமி ஜோக்குகள்' பிரபலம். யார்தான் இவைகளுக்கு விதிவிலக்கு ? நீங்கள் சொல்வது போல அது தமிழக இளைஞர்களின் பொதுவான அம்சம் தான்.
S. பிரபாகரன் said…
தலீத்துக்களை மானுடவியல்காரர்கள் தங்கள் பார்வையில் பார்ப்பது இன்னும் மேட்டிமைத் தனமான பார்வையாகவே இருக்கிறது என்ற கருத்து எனக்கு சரியாகப் படுகிறது. நுட்பமான இவ்விஷயத்தை எளிதாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.

உங்கள் கட்டுரையில் நீங்கள் விமர்சித்த அந்த ஆய்வுக்கட்டுரையின் இணைய இணைப்பையும் வழங்குங்கள் சார். ஒப்பீட்டுப் படிக்க உதவியாயிருக்கும்.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும...

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார...