Skip to main content

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.  சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.  ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி. 


மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.  அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.  இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.  பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.  அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.  பிணம் கண்மலரும் தருணம் இது.  உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள்.


உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அவன் தான் நமது எதிரி என்ற தோற்ற மயக்கத்தை அந்தக் காலாவதி நூல் வலிந்து ஏற்படுத்துகிறது. 


பனுவல்களின் தன்முனைப்பு இது.  அவை, ஒட்டுமொத்த எதிர்மறைகளும் தங்களுக்குள்ளேயே பொதிந்திருப்பதாக ஏமாற்றி வந்திருக்கின்றன.  பனுவலை ஆய்வுப் பொருளாகக் கொண்ட அமைப்பியல்வாதிகள் கூட வழுக்கி விழுந்த இடம் இது.  பனுவல் நிர்ணயவாதம் என்று சொல்லலாம்.  உலகில், ஒரேயொரு புத்தகம் மட்டுமே இருப்பதாகவே ஒவ்வொரு புத்தகமும் நம்பச் சொல்கிறது.  புத்தக வலைப்பின்னல் (Intertextuality) என்ற யோசனையை நாம் நெருங்கி விடாதபடிக்கு, பனுவலான தானே ‘ஒரு நேர்த்தியான வலைப்பின்னல்’ அது வேடிக்கைக் காட்டத் தொடங்குகிறது.  பனுவலின் அத்தகைய அகவலைப்பின்னலிலிருந்தே பிராமண வயோதிகம் எழுந்து வருகிறது.  தற்காதல் கொண்ட ஒவ்வொரு பனுவலும் நாம் யோசிக்க வேண்டிய முரணை நிர்ணயம் செய்யத் தொடங்குகிறது.அதன் பின் நடப்பவை அனைத்தும் மாபெரும் நாடகம்.  பனுவல் நிர்ணயித்த முரணிலிருந்து கட்டப்படும் நாடகம்.  மனுதர்ம சாஸ்திரம் என்ற பனுவலும் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.  திருமாவளவன் காலத்து நாடகத்தில், அவ்வயோதிகச் சடலத்திற்கு குஷ்புவின் குரல்.  அம்பேத்கர் / பெரியாரின் காலத்து நாடகத்தில் காந்தி குரல் கொடுத்திருந்தார்.  இந்தக் குரல்களே அச்சடலங்களுக்கு உயிரோட்டம் என்ற நம்பகத்தன்மையை ஏற்றுகின்றன.


குஷ்புவின் குரல் ஒரு வினோதத் தொகுப்பு;  முதலில், அதுவொரு பெண்; அதிலும், இஸ்லாமியப் பெண்; சரியாகச் சொன்னால், இந்துப் பண்பாட்டில் தன்னைக் கரைத்துக் கொண்ட இஸ்லாமியப் பெண்; போதாத குறைக்கு, சினிமாவில் வலம் வந்ததால் இந்துப் பண்பாட்டில் தன்னைக் கரைத்துக் கொண்ட கனவுகரமான இஸ்லாமியப் பெண்.  இந்தக் கற்பனாவாதக் குரல் ஒரு சனாதன உடலோடு பொருத்தப்படும் பொழுது எழும் கவர்ச்சி எல்லோரையும் ஈர்க்கிறது.  விக்கிரமாதித்தனின் முதுகில் சவாரி செய்யும் வேதாளம் குஷ்புவின் குரலில் பேசினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் - அதிலொரு புதுமை தொனிப்பதாய் தெரிகிறதா?  இப்படியானப் புதுமைகளை ‘நவீனம்’ என்று சொல்லிப் பழகியிருக்கிறோம்; காந்தியிடம் நவீனத்தைக் கண்டடைவதன் சூட்சுமம் இது.  அதில் புதுமை இருக்கிறதேயொழிய நவீனம் இல்லை என்று கண்டுபிடிப்பதே முதல் அரசியல் நகர்வு. 


அதி எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய தருணம் இது.  ஏனெனில், நாம் செல்லரித்த புத்தகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்வது ஒரு அரசியல் பாவனை மட்டுமே; உண்மையில் நாம் அதன்  கருத்தாக்க ஒழுங்கமைவுகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.  பாவனை என்றால் காட்சிப்படுத்தல் என்று பொருள்.  அதிலும் அரசியல் பாவனை என்றால் வெகுஜனக் காட்சிப்படுத்தல் என்று அர்த்தம்.  அது எல்லாக் காலத்திலும் எளிமையிலும் எளிமையாகவே தன்னை முன்னிறுத்துகிறது. அதீத எளிமை!  அந்த எளிமையே எல்லோரையும் அம்முரணை நோக்கி இழுத்து வருகிறது.  ஒரு வெற்றிடம் ஈர்ப்பதைப் போல.  


அந்த வகையில், மனுதர்ம சாஸ்திரம் மாதிரியான எந்தவொரு பனுவலும் வெற்றிடம் மட்டுமே; காலாவதியான புத்தகம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.  இன்னொரு வகையில், ‘ஒரு எளிய உதாரணம்’.  


உதாரணத்தின் வேலை எல்லோரையும் ஈர்ப்பது மட்டுமே.  ஈர்த்து முடிந்ததும், அந்த வெற்றிடத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறி விடவேண்டும்.  ‘உதாரணம் அல்ல விவாதப் பொருள்’ என்ற தெளிவு மிக முக்கியம். இதையே வெகுஜன அரசியலின் பகுத்தறிவு என்று சொல்ல வேண்டும்.  


வெளியேறுவது என்றால், அந்தப் புத்தகத்தை கருத்தாக்கத் தொகுதியாக மாற்றியமைத்தல் என்று பொருள்.  அதாவது, எந்தக் கருத்தாக்கத்தை விளக்குவதற்காக அந்த உதாரணம் சொல்லப்பட்டதோ, அந்தக் கருத்தாக்கத்திற்குத் திரும்புதல்.  இதையே, ஒரு புத்தகத்தின் அகவலைப்பின்னலிலிருந்து நழுவி, புறவலைப்பின்னலைக் கவனப்படுத்துதல் என்கிறோம்.  


உதாரணம் போன்ற அப்புத்தகத்தை நிஜமாகவே வெற்றிடம், காலாவதி, பயனற்றது என்று கருதியிருந்தால் அதன் அகப்பின்னலை அறுத்துக் கொண்டு புறப்பின்னலுக்கு வந்து விட வேண்டும்.  பனுவல் நிர்ணயவாதத்திற்கு எதிரானச் செயல்பாடு இது.


இது அத்தனை எளிதான காரியமும் இல்லை.  ஏனெனில், ’பனுவல் நிர்ணயவாதம்’ ஒரு சிந்தனை முறை.  அது ஒவ்வொரு பனுவலையும் ஒரு முழுமையான உயிரியாகப் பாவிக்கிறது.  அம்முழுமையினுள் ஆகப்பெரிய அர்த்தம் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகிறது.  ‘ஒளித்து’ என்ற வார்த்தை சிக்கலானது.  அது ஒளிந்திருப்பதை ‘ஒளி’ என்றும் சுட்டிக்கொண்டிருக்கிறது.  குடத்திலிட்ட விளக்கு போல, பனுவலில் இட்ட அர்த்தம். 


’ஒளிந்திருக்கும் அர்த்தம்’ (மறைபொருள்) பனுவல் நிர்ணயவாதத்தின் அடிச்சுவடி.  பிறப்பினடிப்படையில் எதையும் தீர்மானிக்கிற சாதியவாதத்தின் தோற்றுவாய் இது.  எந்தவொரு பொருளின் அர்த்தமும் அதன் அகப்பின்னலால் தீர்மானிக்கப்படுகிறது என்ற குளறுபடி.  இன்னும் கொஞ்சம் வளர்ந்து, பால் அடையாளத் தீர்மானமும் இப்படியே உருவாகி வருகிறது.  ஒவ்வொரு சாதி-உடலுக்கும் ஒரு தொழில், ஒரு குணம் போல, ஒவ்வொரு பால் அடையாளத்திற்கும் ஒரு தொழில், ஒரு குணம்.  சாதித்துவேசத்திற்கும், பால் வேற்றுமைக்கும் இந்தப் பனுவல் நிர்ணயவாதமே அடிப்படை.  எல்லாமே அகத்துள் மறைந்திருக்கிறது என்ற வியாக்கியானம்.  அகம் ஆகக்கொடூர வன்முறையாக மாறுவது இப்படித்தான்.


அகப்பின்னலைக் கொண்டாடுகிறவர்கள் தன்னையறியாமலேயே சாதியையும், பாலடையாளத்தையும் ஏற்றுக் கொண்டவர்களாகிறார்கள்.  பனுவல் நிர்ணயவாத தர்க்கம் அவர்க்ளை இங்கு கொண்டு வந்தே நிறுத்துகிறது.  வெகுஜன அரசியல் தனது ஈர்ப்பு சக்திக்காக வெற்றிடம் போலப் பயன்படுத்தும் ஒரு பனுவலை, இந்த அகப்பின்னல்காரர்கள் திரும்பத் திரும்ப விவாதிக்கத் தொடங்குகிறார்கள்.  அது தான் அவர்களது தர்க்க முறையும், விவாத உத்தியும்.  அதாவது, முரண்களைத் தீர்மானிக்கிற அதிகாரத்தை அவர்கள் அபகரிக்க விரும்புகிறார்கள்.  இதனால், காலாவதியான மனுதர்ம சாஸ்திரத்திற்கு மறைபொருள் கற்பிக்கத் தொடங்குகிறார்கள்.     


இந்தக் கணம் நீங்கள் உரையாடலின் திசையைத் தீர்மானிக்கிற சக்தியாக மாறவில்லையென்றால், அபவாதத்திற்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக நேரிடுகிறது.    


*


அயோத்திதாசரியம் என்ற விமர்சன படைப்பாக்கம்!


அயோத்திதாசரின் ஆய்வு முறையியலில் ஒரு முக்கியமான பகுதி, ‘தன்’னை வடிவமைத்தல்.  விளக்கமாகச் சொன்னால், அவரிடம் எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சனங்கள் உண்டோ அதே அளவுக்கு படைப்பாக்கங்களும் உண்டு.  


அவர், கட்டுடைக்கிற ஒவ்வொரு கணமும் கட்டமைத்துக் கொண்டும் இருக்கிறார்.  ‘இந்திய தேசம்’ என்பதைக் கட்டுடைக்கிற அடுத்த நொடி, ‘இந்திர தேசம்’ என்பதை அவரால் உருவாக்க முடிகிறது.  ‘பறையர்’ என்ற சொல்லைக் கட்டுடைக்கிற மறுகணம் ‘பூர்வ பெளத்தர்’.  


நான் ஏற்கனவே எழுதியிருப்பதைப் போல, இவற்றை ‘மாற்று விளக்கங்கள்’ என்றும் சொல்வதற்கு இல்லை; இவையே, மெய் விளக்கங்கள் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடியவர் அவர்.  ‘மனுதர்ம சாஸ்திரம் என்பது என்ன?’ என்ற கட்டுரையிலும் அதே விஷயத்தைத் தான் செய்கிறார்.  


மனுதர்ம சாஸ்திரத்தை தொடர்ச்சியாக, விமர்சிக்கிறவர் அத்தோடு நின்று விடாமல், அது பூர்வத்தில் என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்யத் தொடங்கி விடுகிறார்.  இந்த யோசனை அயோத்திதாசரியத்தின் தனித்தன்மை.  ஒரு தொன்மம் அயோக்கியத்தனமானது என்று சொல்லும் போது, யோக்கியமான தொன்மம் எது என்பதையும் யோசிக்க ஆரம்பிக்கிறார்.  நவீனத்துவம் சொல்வது போல தொன்மமே அயோக்கியத்தனம் என்ற முடிவிற்கு அவர் வந்து சேர்வதில்லை.  இதே அணுகுமுறையையே மனுதர்ம சாஸ்திரத்திற்கும் பயன்படுத்துகிறார்.  மனுதர்மம் என்பதை அவர் எக்காலத்திலும் மறுக்கத் துணியவில்லை.  மானுடத்தையும் தர்மத்தையும் சாஸ்திரத்தையும் மறுப்பதை அவர் கனவிலும் கண்டிருக்க மாட்டார்.  நியாயமாய் எழுதப்பட்ட மனுதர்மம் ஒன்று இருக்க வேண்டும் என்று அவர் ஆணித்தரமாய் நம்புகிறார்.  அந்த நூல் எல்லோருக்கும் தர்மத்தைப் போதித்த பெளத்த தன்ம நூல் என்று எழுத ஆரம்பிக்கிறார்.


*


நான் திரும்பத் திரும்ப சொல்லி வருவது போல, இதில் அறிவியல் சரித்தன்மைக்கு இடமே இல்லை.  இது உண்மையா, வரலாற்று பூர்வமானதா என்ற கேள்விகளெல்லாம் வெறும் மோஸ்தர் மட்டுமே! மாறாக, இந்த ‘யதார்த்த மனுதர்ம நூல்’ என்ற கற்பனை எவ்வளவு இன்றியமையாதது என்பதே இங்கு முக்கியம்.  இன்றைக்கு எல்லோரும் பேசும் மனுதர்ம நூல், ‘வேஷ / கறைபட்ட / மனுதன்மம்’ என்று சொல்வதன் மூலமும், ஆதியில் மேம்பட்ட ‘யதார்த்த மனுதன்ம சாஸ்திரம்’ இந்திர தேசத்தில் வழங்கி வந்தது என்று நம்புவதன் மூலமும் அவர் ‘எதிர்மறைப் பேச்சிலிருந்து’ தன்னை விடுவித்துக் கொண்டதைக் கவனியுங்கள்.  இது அயோத்திதாசரியத்தின் இன்னொரு குணம்.


‘எதிர்மறைப் பேச்சு’ என்பதை விமர்சனம் என்றே பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள்.  ஆனால், விமர்சனத்திற்கும் எதிர்மறைக்கும் பாரதூர வேறுபாடுகள் உள்ளன.  அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் உள்ளதைப் போல.  அயோத்திதாசருடையதை விமர்சனம் என்று கொண்டால், பெரியாரின் வாதங்களை எதிர்மறை என்று சொல்ல வேண்டும். 


விமர்சனம் ஒரு படைப்புச் செயல்.  அது ஏற்கனவே சொல்லப்பட்டதன் மீதான அதிருப்தியில் தொடங்கி, புதியவொன்றை தேடிச் செல்கிறது.  எந்தவொரு நல்ல விமர்சனமும் அதிருப்தியோடு மட்டுமே நின்று விடுவது இல்லை. அதன் பின், மாற்று / புதிய வடிவத்தைக் கண்டடைந்த பின்பே திருப்தியுறுகிறது.  அயோத்திதாசரியம் இப்படியொரு விமர்சன சிந்தனை முறை.


ஆனால், எதிர்மறையோ ஒரு கலகம்.  அது ஏற்கனவே சொல்லப்பட்டதை அநீதிகளை நிர்மூலமாக்க விரும்புகிறது.  பின், மீண்டும் நிர்மூலமாக்க விரும்புகிறது; பின், மீண்டும் மீண்டும் நிர்மூலமாக்க விரும்புகிறது.  இதுவே கலகத்தின் அகச்சிக்கல். அது தொடர்ச்சியாக அ நீதியை அழிக்க விரும்புகிறது.  அதனாலேயே அநீதி அழிக்க முடியாதது என்றும் உள்ளூர நம்புகிறது.  


கலகம் எத்தனை தூரம் கவர்ச்சிகரமானது என்றால், அது தொடர்ந்து நிர்மூலத்திலேயே லயிக்க விரும்புகிறது.  இதற்காக, கலகம் எதை நிர்மூலமாக்க விரும்பியதோ அதை அடியோடு அழிப்பதில்லை. வேரடி மண்ணோடு கிள்ளி எறிவதில்லை.  கலகம், களை எடுக்கிறது.  பின், அக்களைகள் வளரும் வரை காத்திருக்கிறது; பின் களை எடுக்கிறது.  இப்படியே, எதிர்மறை, கலகத்தின் மீது உன்மத்தம் பிடித்து அலைகிறது.  வரலாற்று உணர்வற்ற புரட்சியாளர்கள் கலகத்தின் / எதிர்மறையின் கவர்ச்சியில் மயங்கிப் போவதன் காரணமும் இது தான்.  


இது, பெரியாரின் பாணி.  அவர் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்தார்.  ஆனாலும், உள்ளுக்குள்ளேயே இருக்கவும் விரும்பினார்.  அப்பொழுது தான் அதை எதிர்ப்பதற்கான தார்மீகம் உருவாகும் என்று தப்பும் தவறுமாக யோசித்திருந்தார்.  உண்மையில், பெரியார் விரும்பியது, சமத்துவ சமூகம் அல்ல என்பதும் தான் தொடர்ந்து கலகம் செய்வதற்குத் தோதான அசமத்துவ சமூத்தையே அவர் உள்ளூர விரும்பினார் என்பதும் கசப்பான உண்மைகள்.  


பெரியாரின் பேச்சில் ஒரு உற்சாகம் தென்படுவதைக் கவனித்திருக்கலாம்.  அது, எதிர்மறைகளின் உற்சாகம்.  அதில் அவர் தோய்ந்திருந்தார்.  பெரியார் வெளிப்படுத்தும் அதே வாதங்களை அயோத்திதாசரிடமும் நீங்கள் வாசிக்க முடியும்.  அயோத்திதாசர், இந்த வாதங்களை முன்வைக்கிற அதே நேரம், அதற்கு இணையான, சில நேரங்களில் மேம்பட்ட, இன்னொரு மனுதன்மத்தை உருவாக்கிக் கொள்கிறார்.  பின், திரும்பத் திரும்ப அந்த ‘யதார்த்த மனுதன்ம நூலை’ப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.  இதையே அயோத்திதாசரிய விமர்சன படைப்பாக்கம் என்று சொல்ல விரும்புகிறேன்.  


திருமாவளவனின் மனுதர்ம சாஸ்திரம் குறித்த பேச்சில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை.  ஆனால், அதை வெளிப்படுத்தும் போது அவர் அடைகிற உற்சாகம் ‘உண்மையைக் கண்டடைந்த உற்சாகம்’ அல்ல; ‘தவறுகளைக் கண்டடைந்த உற்சாகம்’!  பெரியாரிடம் காணப்பட்ட அதே வகை லயிப்பு.  இது ஒரு வகை போதையும் கூட.  இந்த லயிப்பிற்கு பழகியவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாமல் போகிறது.  


வெகுஜன அரசியலின் ஆபத்தான கட்டம் இது.  மனுதர்ம சாஸ்திரம் என்ற நூலை விட்டு வெளியேற வேண்டிய தருணம் இது என்று நான் சொல்வதன் காரணமும் இது தான்.   103 . மனுதருமசாஸ்திரம் என்பது என்ன?  - அயோத்திதாசர்


மக்கள், நீதிநெறி வழுவாமல் ஒழுக்கத்தில் நின்று, மானுட சீவர்களை மானுட சீவர்களாக பாவித்து, சர்வ சீவர்கள் மீதும் கருணை வைத்து, வாழ்க்கைத் துணை நலம் பெற்று, பஞ்சசீலத்தில் நடக்கச் செய்வதே மநுதரும சாஸ்திரமாகும்.

 

அவ்வாறு மனுதரும சாஸ்திரம் என வழங்குவதற்குக் காரணம் யாது எனில், மனித சீவர்கள் தங்கள் குடும்பங்களில் விரோதம் இன்றியும், பொறாமெய் இன்றியும், பேராசை இன்றியும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, வாழ்க்கையை சீர்திருத்திக் கொள்ளுவார்கள் என்றால், அக்குடும்பமானது ஆறுதலுற்று ஆனந்தவாழ்க்கையைப் பெறும். அதுபோல், ஒரு கிராமத்தவர்களும் இருப்பார்கள் என்றால், அக்கிராமமும் ஆறுதல் அடையும். தேசமும் அதுபோல் இருக்கும் என்றால், சகல சுகமும் பெற்று மக்கள் ஆறுதலுற்று வாழ்வார்கள். இத்தகைய சுகம் நலம் கோரியே விவேக மிகுத்த சாஸ்திரிகள், மனுக்கள் சீர்பெற்று வாழ வேண்டும் என்னும் அன்பின் மிகுதியால் மனுதன்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தினார்கள். 

அதுவே, புத்த தன்மம் என்றும், சத்திய தன்மம் என்றும், மெய்யறம் என்றும் கூறப்படும். இவ்வகையாக, மனுக்களுக்கு வேண்டிய தருமசாஸ்திரம் இந்திய தேச முழுவதும் பரவியிருந்த காலத்தில் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் பெருகி வித்தியாவிருத்தியும், விவசாயவிருத்தியும், வியாபார விருத்தியும் ஓங்கி, சகல சீவர்களும் ஒற்றுமெய் கொண்டு சுகவாழ்க்கையில் ஆறுதல் உற்றிருந்தார்கள். 


அதன் விருத்திக்கேட்டிற்கு மூலகாரணமாக, அன்னிய தேசத்திலிருந்து இந்திய தேசத்திற்குக் குடியேறி பிச்சையிரந்து கொண்டு, சீவித்துவந்த ஓர் வகை மனுக்கூட்டத்தோர் தங்களுடைய மித்திர பேதத்தாலும், வஞ்சினத்தாலும் கருணை என்பதே கனவிலுமற்ற கரவிடத்தாலும் நூதன சாதிவேஷங்களையும் நூதன மதவேஷங்களையும் உண்டு செய்து தேசத்தையும் தேச மக்களையும் பாழ்படுத்தி தங்கள் சுய சீவனங்களை விருத்தி செய்துக்கொண்டதும் அன்றி இன்னும் அதை விருத்தி செய்வதற்கான மனு அதரும சாஸ்திரங்களை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு மனுதரும சாஸ்திரமென்னும் பெயரைக் கொடுத்து வழங்கி வருகின்றார்கள்.


அஃது சுயநலம் கருதி எழுதிய நூலே அன்றி, பொதுநலம் கருதி எழுதியது அன்று.  ஆதலின் பௌத்த சோதிரர்கள் பொதுநலம் கருதும் நூற்களை வாசிப்பீர்களேயன்றி சுயநலம் கருதும் நூற்களை கரங்களிலும் ஏந்தாதிருக்க வேண்டுகின்றோம்.

- 7:12 ; ஆகஸ்டு 27 , 1913.

Comments

Unknown said…
பயன்பாடற்ற புத்தகமா மனு? அதைத் தழுவிய செயல்பாடுகள் தானே சமூகத்தில் இன்றும் நடக்கிறது ?

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக