Skip to main content

இளையராஜா கன்னத்துத் திருஷ்டிப் பொட்டு, ரஹ்மான்!

(‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’ என்ற புத்தகத்தை ஒட்டி நிகழ்த்தப்பட்ட நீண்ட பேட்டியிலிருந்து. அலுவலகப் பணியாளர்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் நிமிடத்திற்கொரு முறை தொந்தரவு செய்து கொண்டிருந்த பேராசிரியர் டி. தருமராஜின் அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. என் பெயரும் அவர் பெயர் தான் என்பதால், எனது பெயரை டி. தருமராஜ் 2 என்றும் அவரை டி. தருமராஜ் 1 என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.)




டி. தருமராஜ் 2: ஏன், இளையராஜா?
டி. தருமராஜ் 1: பண்பாட்டு ஆய்வாளர்களுக்கு இளையராஜா ஒரு வரம். இப்படியொரு ஆய்வுப்பொருள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்று கிடைக்குமென்று தெரியவில்லை. இளையராஜா என்ற பெயர் திரையிசையோடு சுருங்கி விடக்கூடியது இல்லை. அது சென்ற நூற்றாண்டின், தென்னிந்திய அரசியல் வரலாறின், இந்திய சினிமா வரலாறின் அடையாளமாகத் திரளக்கூடியது. ரொம்பவும் நறுவிசான வரலாறு, இளையராஜாவைப் போன்ற ஒரு சிலரை மட்டுமே ஞாபகம் வைத்திருக்கப்போகிறது. வருங்காலம் அவரைப் பாடல்களால் அல்ல, ஒரு காலகட்டத்தின் உணர்வெழுச்சியாகவே உருவகிக்கப் போகிறது. அந்த வகையில், இந்தப் புத்தகம் இளையராஜாவை விட்டு வெகுதூரம் விலகி நின்று யோசிக்க முயற்சிக்கிறது.
டி. தருமராஜ் 2: இளையராஜா ஒரு வரலாற்று அடையாளம், ஒரு காலகட்டத்தின் உணர்வெழுச்சி… என்றும் சொல்லிக் கொண்டு, அவரை விட்டு விலகியும் நிற்பது எப்படி? பொதுவாகவே இளையராஜா குறித்த உங்கள் பார்வை இப்படித்தான் முரண்பாடாக இருக்கிறது. ’இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’ என்ற தலைப்பில் ஒரு கிண்டல் தெரிகிறது என்றாலும், அதில் மறைமுகமாக அவரைக் கொண்டாடும் தொனியும் இருக்கிறது. ஏன் இந்த இரட்டை மனநிலை. ஒரு பக்கம் அவரைக் கொண்டாடுவதும் இன்னொரு பக்கம் குதறுவதும்….?
டி. தருமராஜ் 1: எல்லா பிரம்மாண்டங்களையும் மனிதர்கள் இப்படித்தான் எதிர்கொள்கிறோம். அதீதங்களின் ஆகிருதி வியக்க வைக்கிற வேளையில் நம்மை திணறவும் வைக்கிறது. இளையராஜா ஒரு அதீதம். கட்டிடக் கலையில் தாஜ்மஹாலைப் போல், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போல்; இலக்கியத்தில் சங்கப்பாடல் தொகுதிகளைப் போல்; புனைவுகளில் மகாபாரதக் கதையைப் போல். எல்லா பிரம்மாண்டங்களையும் நாம் விரும்புவது போலவே வெறுக்கவும் செய்கிறோம். இளையராஜாவுக்கும் அது தான் நிகழ்கிறது. அவரை விரும்புகிறவர்களே வெறுக்கிறார்கள். இளையராஜா ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தனித்தனியே யாரும் இல்லை.
டி. தருமராஜ் 2: ஆனால், ‘இளையராஜா - ரஹ்மான்’ என்றொரு எதிர்வு சொல்லப்படுகிறதே! ரஹ்மான் ரசிகர்கள் இளையராஜா வெறுப்பாளர்கள் தானே!
டி. தருமராஜ் 1: ‘இளையராஜா - ரஹ்மான்’ முரண் வேறுமாதிரியானது. ரஹ்மான் மீதான அபிமானத்திற்கு பிரம்மாண்டங்களை நிர்மூலமாக்கும் வேட்கை தான் அடிப்படை. கலைத்துப் போடுவது. தலைகீழாக்குவது. இதை ஒரு நகைச்சுவையால் செய்ய முடியும்; குழந்தைமையால் செய்ய முடியும். கட்டி எழுப்பப்பட்ட சீட்டுக்கட்டை சரிய விடும் பொழுது அடையும் திருப்தி இருக்கிறதே, அது எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஏனெனில், அதீத ஒழுங்கு நம்மை சலிப்படையவே வைக்கிறது. அதிலிருந்து ஒரு கணமேனும் விடுபட நினைக்கிறோம். குழந்தைகளும் கோமாளிகளும் செய்யும் சேட்டைகளை நாம் விரும்புவது இப்படித்தான். அவர்கள் ஒழுங்கிற்கு எதிராகத் தோன்றுகிறார்கள். அந்த வகையில் ரஹ்மான் நாம் விரும்பும் குழந்தைத்தனம் அல்லது கோமாளித்தனம் - இளையராஜா என்ற பிரம்மாண்டத்திற்கு எதிரான நமது குழந்தைத்தனம் அல்லது கோமாளித்தனம். இளையராஜாவை விரும்புகிறவர்களே ரஹ்மானையும் விரும்புகிறார்கள். கவனித்துப் பார்த்தால், இளையராஜா எதிர்ப்பாளர்களைப் போல நீங்கள் ரஹ்மான் எதிர்ப்பாளர்கள் என்று யாரையும் காட்ட முடியாது. ஏனெனில், ரஹ்மானை யாரும் தனியாக விரும்புவது இல்லை; அதனால் எதிர்ப்பதும் இல்லை. இளையராஜா எதிர்ப்பு தான் ரஹ்மான் விருப்பமாக இருக்கிறது. ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’ என்ற புத்தகம் இந்த இளையராஜா வெறுப்பையே பேச விரும்புகிறது.
டி. தருமராஜ் 2: அப்படியானால், இது ரஹ்மானைப் பற்றிய புத்தகமா?
டி. தருமராஜ் 1: இளையராஜா வெறுப்பைப் பற்றி பேசுவதால் அப்படியும் சொல்லலாம். ஒரு ரகசியம் சொல்லவா? இந்தப் புத்தகத்தை முதலில் நான் ஏ. ஆர். ரஹ்மானுக்குத்தான் சமர்ப்பணம் செய்ய இருந்தேன். அதனால் நாட்டில் ஏற்படக்கூடி கொந்தளிப்புகளை பதிப்பாளர்கள் சுட்டிக்காட்டியதால் அது தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால், ‘இளையராஜா கன்னத்து திருஷ்டிப் பொட்டான ஏ. ஆர். ரஹ்மானுக்கு சமர்ப்பணம்’ என்று எழுதியிருப்பேன்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக