Skip to main content

கர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘கர்ணன் திரைப்படத்தின் பாடலொன்று நேற்று வெளியாகியுள்ளது.  கண்டா வரச்சொல்லுங்க…


அதற்குப் பயன்படுத்தப்பட்ட காட்சி வடிவங்கள் அற்புதமானவை.  பாடல் நெடுக, ஒரு மனிதன் எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தம் கொண்டு சுவரில் ஓவியம் வரைகிறான்.  நெருப்பால் ஓவியத்தைச் சுட்டால் என்ன ஆகும்?  காகிதமும் சீலையுமே ஓவிய ஊடகங்கள் என்ற கடந்த சில நூற்றாண்டு மயக்கத்தைக் கடந்து யோசிக்க முடிந்தால், தீ நாவே ஆரம்ப கால வண்ணம் என்பது நமக்கு புலப்படும்.  பந்தமே, ஆதித் தூரிகை.


அந்த வகையில், எரிந்து கொண்டிருக்கும் பந்தத்தின் சிறு நுனியில் எரிந்து முடிந்த சுடு கரி என்ற யோசனை மிகப் பிரம்மாதமான கற்பனை.  ‘சமகாலக் கலை (contemporary art) என்று ஏதாவது பேசப் புகுந்தால் இதுவொரு கச்சிதமான உருவமாக செயல்பட முடியும்.  


கலை வடிவங்கள் எப்பொழுதுமே எரிந்து அவிந்த கரித்துண்டுகளால் செய்யப்படுபவை என்றொரு மூடநம்பிக்கை நம்மிடம் உண்டு.  அதன் மறுபக்கம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பு எதையும் படைத்து விடாது என்பதும் நமது இன்னொரு மூடநம்பிக்கை.  


தீயும் கரியும், இரண்டு வெவ்வேறு மனநிலைகளையும், சந்தர்ப்பங்களையும் விவரிக்கக்கூடியவை என்றே நாம் யோசித்து வந்திருக்கிறோம்.  ‘கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற ‘ஜல்லி கூட இந்தப் பாகுபாட்டிலிருந்து தான் உருவானது. 


தீ அழிக்கக்கூடியது என்பதால் அதன் உக்கிரத்திலிருந்து படைப்பு தோன்றாது என்பது ஒரு வாதம்.  ஆனால், அதன் குளிர்ந்த வடிவமான கரி அப்படி அல்ல; அது படைப்பு சக்தி நிரம்பியதாகச் சொல்லப்படுகிறது.  உறைந்து நின்றாலும் கரியினுள் ‘அவிந்த நெருப்பு இருக்கிறது என்ற கற்பனையும் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.  


இந்த யோசனை, நெடுங்காலமாய் நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்ட தருணத்தை யோசிக்கிறவர்கள் வெளிப்படுத்தும் கற்பனையை நினைத்துப் பாருங்கள்.  ஆதியில் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்தது - எல்லாமே தீத் துண்டங்கள்.  அவை சுழன்று, எரிந்து, அவிந்து, உறைந்த பின் தோன்றிய தண்மையிலிருந்து உயிர் உருவானது.  அதாவது, குளிர்ச்சியிலிருந்து படைப்பு சக்தி வெளீப்பட்டது. 


எந்த ஒன்றையும் படைப்பதற்கு தெளிந்த நீரோடை போன்ற மனமும், அமைதியான சூழலும் தேவை என்று கற்பனை செய்யப்படுவதன் அபத்தம் இது.  இதனாலேயே கலை என்றைக்குமே இறந்த காலத்தைச் சித்தரிக்கிறது என்றும் சொல்லப்படுவது உண்டு.  ஆனால், உண்மையில் கலைக்கு ‘இறந்த - நிகழ் - வரும் போன்ற பாகுபாடுகள் இல்லை.  ஏனெனில், அது வெளிப்படும் தருணத்தை சார்ந்து அணுகப்படுவது இல்லை.  ஆனால், வெளிப்படும் தருணமே முக்கியம் என்றே பழமைவாதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.  


ஒரு உக்கிரமான பிரச்சினையின் மையத்திலிருந்து, அது தகித்துக் கொண்டிருக்கும் போதே, கலை உருவாக முடியாதா என்ற கேள்விக்கு தமிழ் மரபில் இது வரைக்கும் தெளிவான பதிலெழுதுவும் சொல்லப்பட்டதில்லை.  புராணீயம் இதனை இருவேறு வடிவங்களாகவே கற்பித்து வந்திருக்கிறது - எரியும் சிவனும், தணிந்த சக்தியும்.  இரண்டு வெவ்வேறு தன்மை கொண்ட பொருட்களின் பிணைப்பு என்று பொருள்.  ஒரு பக்கம் நெருப்பு, மறுபக்கம் கரி.  அர்த்தநாரி.  


ஆனால், உண்மையில், நெருப்பின் உள்ளே ஓவியம் வரைவதற்கான கரியும் இருக்கிறது என்ற சாத்தியத்தை மாரி செல்வராஜின் காட்சிப் படிமங்கள் வெளிப்படுத்துகின்றன.  இன்றைக்கு இது ஏன் முக்கியம் என்றால், தலித் படைப்புகளின் தலை போகிற பிரச்சினை இது தான். தலித் படைப்புகள் தங்களை ஆவணங்களாக அதாவது கரித்துண்டுகளாகப் பாவித்த காரணத்தால், ஒரு கட்டத்திற்குப் பின் நகர முடியாத சகதியில் சிக்கிக் கொண்டன.  


ஆனால், ‘சமகாலக் கலை என்ற யோசனை இந்தச் சிக்கலை சுலபமாகத் தீர்க்கக்கூடியது.  அதற்கு நெருப்பு வேறு, கரி வேறு அல்ல.  தீயினால் பொசுக்கிய ஓவியம் என்றால் மரபான கலையில் விபத்து என்று பொருள்.  ஆனால், சமகாலக் கலையில் அதன் அர்த்தமே வேறு.  ஓவியத்தை எரித்தல் என்றால், அழித்தல் அல்ல படைத்தல் என்று பொருள்.  வாள் எடுத்தல் உயிரை வாங்குவதற்கு அல்ல; உயிரைப் படைப்பதற்கு.  ஒரு மருத்துவரைப் போல.  ஒரு சவரக்காரரைப் போல.    


தென் தமிழகத்தின் வன்முறை வரலாற்றை கலை மூலம் பேசத் தொடங்கும் கலைஞன், தனது தளவாடங்களை புதிதாகச் செய்து கொள்வ்து போலவே மாரி செல்வராஜின் தீயால் சுட்ட ஓவியம் என்ற கற்பனை தோன்றுகிறது.  ஏகத்தும் எதிர்ப்பார்பை ஏற்றியிருக்கிறது கண்டா வரச்சொல்லுங்க… பாடல்.


https://youtu.be/xqxF-KM-CxI

Comments

Popular posts from this blog

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1 அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை. உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.   இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.   பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள்

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.   சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.   ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி.   மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.   அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.   இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.   பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.   அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.   பிணம் கண்மலரும் தருணம் இது.   உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள். உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.   அவன்

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக