Skip to main content

சாணக்கியனின் மீள்வருகை - திமுகவிற்கு வாக்களித்தல் 2,3,4

2

திமுகவின் வாரிசு அரசியல், தலைமை உருவாகாத வெறுமை, கார்ப்பரேட் தோற்றம், மதவுணர்விற்கு எதிரான நிலைப்பாடு...போன்ற பல்வேறு விஷயங்கள் இப்பொழுது மேலெழுந்து வருவதைக் கவனிக்கிறேன். ஒரு வகையில் திமுக தனது சாரத்தை (என்று நாம் நம்புவதை?) இழந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
இந்தச் சூழலில், ஜனநாயகத்தை என்ன செய்வது என்பதே நமது கேள்விக்குறி. இதற்கு இரண்டு சாத்தியங்கள் சொல்லப்படுகின்றன - ஒன்று, தேர்தலை புறக்கணிப்பது (நேட்டோவுக்கு வாக்களிப்பது). இது, மிகத் தெளிவான அந்நியமாதல். ஒரு வகைப் பிராமணியமும் கூட.
தேர்தல் வலியுறுத்தும் 'மக்கள்' என்ற உணர்விலிருந்து வெளியேறுதல் என்று பொருள். ஞாநி இதை வலியுறுத்தி வந்ததை ஞாபகம் வையுங்கள்.
இரண்டாவது, சாரமுள்ள மாற்றை உருவாக்குவது. போன முறை மக்கள் நலக் கூட்டணியினரின் முயற்சி இப்படியானது. அதாவது, அதில் அர்த்தமிருக்கும், ஆனால் மக்களிருக்க மாட்டார்கள்.
இப்பொழுது நிலைமை தெளிவாக விளங்கியிருக்கும். சாரம் அல்லது அர்த்தம் என்பது ஒரு பொருட்டு இல்லை. அப்படி சொல்லப்பட்ட மக்களாட்சி விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாமெல்லாம் 'பின்னை அர்த்த' சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதில், அர்த்தத்தை யோசித்து, குழம்பும் நபர்களுக்கான மூன்றாவது சாத்தியமாக நான் இதைச் சொல்கிறேன்.
முதலாவதான, நேட்டா, ஒரு பிராமணியம்;
இரண்டாவதான, மநகூ, ஒரு மாயை;
மூன்றாவதான, மாற்றம் மட்டுமே நம்மை நுண்ணுணர்வுள்ள மக்களாக உணர வைக்கும்.
அதனால், விசுவாசியாக இருக்காதீர்கள், மாறிக் கொண்டேயிருங்கள்!
ஆட்சியையும் மாற்றிக் கொண்டேயிருங்கள்.




3

இன்று (04-04-2021) காலை தினசரிகளைப் பார்த்ததுமே சந்தேகம் வந்து விட்டது.
இப்படி வெளிவர வாய்ப்பில்லை. அச்சு எழுத்துக்களிலும் வித்தியாசம் தெரிந்தது. முதல் பக்கங்களை விளம்பரங்களுக்கு ஒதுக்கும் பழக்கம் தெரியும் தானே! அதனால், அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். அதிலும் இதே மாதிரியான செய்திகள், அச்சு வடிவம். அந்த பக்கத்தையும் புரட்டுகிறேன். ஐந்தாவது பக்கத்தில் வழக்கமான தினசரி ஆரம்பிக்கிறது.
சத்தியமாய், நான் எந்த அதிர்ச்சியையும் அடையவில்லை. ஒரு சந்தேகம் வந்தது உண்மை. அது ஐந்தாவது பக்கத்தில் நிவர்த்தியாச்சு! அவ்வளவு தான். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத்தனம் கூட மனதிற்குள் வந்து போனது. தினசரிகள் நம்மோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன என்ற நினைப்பால் வந்த வேடிக்கை மனோபாவம், இது.
ஆனால், சமூக ஊடகங்களில் பலரும் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘இதழியல் அறம் வீழ்ந்தது!’ என்பது தான் அதன் சாராம்சம்.
தினசரிகள் மக்களை ஏமாற்றுகின்றன. இதை உண்மையென்று நம்பி பலரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்து விடுவார்கள். விளம்பரத்திற்காக இப்படி மக்களை திசை திருப்புவது தவறு என்று பலவாரியாகக் கண்டனங்கள். தமிழ் இந்துவிற்கும் இந்த உறுத்தல் இருந்திருக்க வேண்டும் போலும். பரிகாரம் அல்லது பிராயச்சித்தம் போல நடுப்பக்கத்தில் ஸ்டாலினுடன் நேர்காணல்.
இதழியல் அறமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு விளங்கவே விளங்காத ஒரு விஷயம் இது தான் - இந்த விளம்பரங்களையெல்லாம் உண்மை என்று நம்பி விடுகிற வெள்ளந்தி மக்கள் தமிழகத்தில் எங்கே இருக்கிறார்கள்?
அந்த மக்களில் ஒருவனான நான், இதைக் கொஞ்சம் கூட நம்பவில்லை. எனக்கு சந்தேகம் தான் வந்தது. அறச்சீற்றம் கொள்ளும் நண்பர்களும் நம்பவில்லை என்று தான் தெரிகிறது. அப்படியானால், இதை நம்பி விடுகிற முட்டாள்கள் எங்கிருக்கிறார்கள்?
இல்லை, அப்படியான முட்டாள்களை நமது அறச்சீற்ற நண்பர்களே கற்பனை செய்கிறார்களா? அப்படிச் செய்வதன் மூலம், தங்களது புத்திசாலித்தனத்தையும், அறவொழுக்கத்தையும் பறைசாற்றிக் கொள்கிறார்களா?
நான்காவது தூண், இதழியல் அறம், விளம்பர ஒழுக்கம், மக்களை திசைதிருப்புதல் அல்லது ஏமாற்றுதல், லட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் உண்மை எது பொய் எது என்று பகுத்தறிய தெரியாதவர்கள், நானாக இருக்கப்போய் இதைச் சரியாகக் கண்டுபிடித்தேன், பாமரர்கள் என்ன செய்வார்கள் பாவம்…. இப்படியான பாவனைகளுக்கெல்லாம் ஏதாவது அர்த்தமிருக்கிறதா, என்ன?

4

இன்று (06-04-2021) காலை இப்படியொரு கேள்வி. திமுகவிற்கு வாக்களித்தல் - 2 குறித்தது.
'இந்தக் கட்டுரை படித்ததும் குழப்பம்தான் மிஞ்சியது. மீடியாவின் இச்செயல் மிகத்தவறானது. USல் false advertisement is illegal இதற்கு Unequivocally கண்டனம் தெரிவிக்காமல் இதற்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் எதற்காக அதை தெரிவிக்கின்றனர் என்பதாக ஏன்கவனம் சிதற வேண்டும்?'
அதற்கு எழுதிய பதில்:
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம்: கடந்த பத்து வருடங்களாக தேர்தல் சூழல் இந்தியாவில் மாறிக் கொண்டிருக்கிறது. ‘அரசியல்தந்திரி’ என்றொரு புதிய கதாபாத்திரம் இதில் இடம்பெற்றிருப்பதை கவனியுங்கள்.
வழக்கமாய், மக்களின் நாடி நரம்புகளை அறிந்திருக்கும் கவர்ச்சிகரமான தலைமைகள் (கலைஞர் ராஜதந்திரி, எம்ஜியார் மக்கள் தலைவன்) செய்த வேலையை இன்றைக்கு ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். சாணக்கியனின் மீள்வருகை என்று சொல்லலாமா?
சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தின் குணத்தை அரசியலும் பெறத் தொடங்கியிருக்கிறது. எந்த சினிமா வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றொரு ‘பழஞ்சொல்’ உண்டு. அதன் பொருள், வெகுஜனம் எதை விரும்பும் எதை விரும்பாது என்று சொல்வது கடினம். இதனால், எது வெற்றிப்படம் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள்! இதன் இன்னொரு வெகுஜன வடிவம் - பெண் மனது ஆழம்!
மக்கள் கூட்டமாகக் கூடும் பொழுது எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறுதியிட முடியவில்லை என்பதே இதன் பொருள். ஆனால், கொஞ்ச காலம் முன்பு வரை நமது அரசியல் தலைவர்களுக்கு இது திட்டமாய்த் தெரிந்திருந்தது. அண்ணாவின், கலைஞரின், வைகோவின், எம்ஜியாரின், ஜெயலலிதாவின் மேடைப் பிரசன்னத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களால், மக்களின் உணர்வுகளோடு பேச முடிந்தது.
இன்றைக்கு அப்படியான கவர்ச்சிகர தலைமைகள் இல்லை. அப்படி உருவாகுவதற்கான சாத்தியங்கள் ரஜினிகாந்திடம் இருந்தன. அதனால் தான் அந்த மனிதன் அரசியலுக்கு வருவது ஆபத்து என்று நான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
இந்த ‘கவர்ச்சிகரம்’ மிக எளிய முட்டாள்தனத்திலிருந்து தொடங்குகிறது. அடுக்குமொழிப் பேச்சில் உண்மை இருப்பதாய் நம்பும் முட்டாள்தனம் அல்லது தொப்பியும் கண்ணாடியும் அங்கியும் அழகான உடையலங்காரம் என்று நம்பும் முட்டாள்தனம்.
இந்த முட்டாள்தனத்தை நான் ரஜினியிடம் பார்க்கிறேன். ‘நம் நாட்டின் கடைசி கவர்ச்சிகர முட்டாள்’ என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம். இப்படியானவர்களை இழக்கும் பொழுது வெகுஜனத்திடம் பேசும் முறையை நாம் இழக்கிறோம். இப்பொழுதே பிரசாந்த் கிஷோர் மாதிரியான அரசியல் தந்திரிகள் தேவைப்பட ஆரம்பிக்கிறார்கள்.
இப்பொழுது உங்களிடம் இருப்பது - பொம்மை தலைவர்களும், அரசியல் தந்திரிகளும். ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாண்மையாக மாறிக் கொண்டிருப்பது இப்படித்தான். அதிகாரம் முரடாகவும், அறிவு தந்திரமாகவும் மாறும் சூழல்.
அரசியல் தந்திரிகளின் மொழி, ஊடகம். நிறுவன, சமூக என்று எல்லா வகையான ஊடகங்களும். அபிப்பிராயங்களை உருவாக்குவது அவர்களின் வேலையாக இருக்கிறது. நாம் தகவல் குப்பைகளால் திணறிப்போவது இப்படித்தான்.
தகவல் தணிக்கையும், தகவல் வெள்ளமும் ஒரே விஷயத்தை தான் செய்கின்றன - நம்மை அறியாமையில் வைத்திருப்பது! ஏனெனில் அரசியலாளர்கள் பயப்படுகிற ஒரே விஷயம், நாம் தான். நாம் எவ்வாறு யோசிப்போம் என்பது அவர்களுக்குப் புரிபடவில்லை. ‘நாம்’ என்பது மக்கள்.
மக்களிடம் பேசும் மொழியை இழந்த தலைமைகளையே நான் கவர்ச்சியற்ற தலைமைகள் அல்லது பொம்மைத்தலைமைகள் என்று சொல்கிறேன். ஏன் அவர்களால் பேச முடியாமல் போகிறது? ஒன்று, அவர்களிடம் சொல்வதற்கு விஷயமில்லை; இரண்டு, தவறு செய்ய பயம்.
அவர்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை: எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது என்று நம்புகிறார்கள். அண்ணாவும் கலைஞரும் சொல்லி விட்டார்கள் / எம்ஜியாரும் ஜெயலலிதாவும் சொல்லி விட்டார்கள். கலைஞர், அண்ணாவின் பெயரை மறைத்தார்; ஜெயலலிதா, எம்ஜியாரின் பெயரை மறைத்தார் என்ற குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதன் பொருள் மறைத்தது அல்ல, முன்னோர்களைக் கடந்து, தாங்கள் சுயமாய் எதையோ சொல்ல முயற்சித்தார்கள் என்றே படும்.
ஸ்டாலினை அப்படி நம்மால் சொல்ல முடியுமா? அவர் கலைஞரின் பெயரை மறைக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஸ்டாலின், ‘எல்லாம் ஏற்கனவே அப்பாவால் சொல்லப்பட்டிருக்கிறது!’ என்று நம்புகிறார். அதனால் அவரிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தவறு செய்ய பயம்: இழப்பதற்கு அதிகமுள்ளவர்களின் பயம் இது. இதனாலும் அவர்கள் தங்கள் சுயத்தை இழக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு ஆ. ராசாவின் மன்னிப்பை நினைத்துப் பாருங்கள். இந்த மன்னிப்பின் தாத்பர்யம் என்ன? ஏன் ராசாவால் தன் நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை? அல்லது, அவரை உடனடியாய் பம்மச் செய்தது எது?
ஒரு வேளை, ஆ. ராசா தான் தப்பாக ஒன்றுமே பேசவில்லை என்று வெகுஜனத்திடம் வாதிட்டிருந்தார் என்றால், ஒரு கவர்ச்சிகர தலைமையாக உருவாகியிருக்க முடியும். அல்லது, ஸ்டாலினே ராசா பேசியதில் தவறு இல்லை என்று முழங்கியிருந்தால், ஆளுமையான தலைமையாக வந்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்வதற்கு பயம்.
கலைஞர் இந்த பயம் அற்றவர். அதனால் நிறைய முறை தோற்றார். ஆனால், எம்ஜியாரை விடவும் ஜெயலலிதாவை விடவும் கவர்ச்சிகரமான தலைமையாக இருந்தார். ஸ்டாலின், கலைஞர் செய்த தவறு இது என்று நினைக்கிறார். அதனால், தவறு செய்வதற்கு அஞ்சுகிறார்.
வரலாறு சுமையென நசுக்கும் பொழுது, சுயத்தையே இழக்க ஆரம்பிக்கிறோம். வரலாற்றை ஒரு அலங்காரப் பொருள் என்று நினைக்காதவர்களின் மீது பழமை படியத் தொடங்குகிறது. வரலாற்றில் வாழ முடியாது என்பது தான் நிஜம். நினைவிடங்களில் வாழ முடியாது தானே!
இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில் அந்த பத்திரிகை விளம்பரம் வருகிறது. இது வெகுஜன அதிர்வுகளை உருவாக்குவதற்கான போர். யார் யார் எவ்வளவு பெரிய கல்லை வீசுகிறார்கள் என்பது தான் போட்டி. இதில், அந்தப் பத்திரிகைகள் செய்தது மிகச் சரியான செயல் என்றே நான் நினைக்கிறேன். அவை மிகத் தைரியமாக ஒன்றைச் சொல்கின்றன - உண்மை உருவாக்கப்படுகிறது!
ஆனால், அறச்சீற்றம் கொள்ளும் அரதப்பழசான மூளையைக் கொண்ட நம் ஆட்கள் என்ன செய்கிறார்கள்? பத்திரிகைகள் தீக்குளித்து தன் பத்தினைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்கிறார்கள்.
இதுவெல்லாம் ஒரு பக்கம் கழுதை கிடக்கட்டும். இந்த மாதிரியான எந்தவொரு விவாதத்திற்கும் லாயக்கற்ற அதிமுக அழிந்து போவது தான் பரிணாம விதி! அதனால், திமுகவிற்கு வாக்களித்தல்!

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக