Skip to main content

10 வாடியான் வம்சாவளியினர்

10 வாடியான் வம்சாவளியினர் முனைவர் பொ.நா. கமலா விருதுநகரில் வாழும் நாடார் சமூகத்தவருள் ஒரு குழுவினரின் பெயரான 'வாடியான்' என்பது, 'தாதன் தத்தன் அல்லத்தான் பாக்கியக்காரன் பாவாலிவாடியான்' எனத் தொடங்கும் பாடலில் காணப்படுவதாக ஆ. தசரதன் (அருஞ்சுனை காத்த அய்யனார்,.104) குறிப்பிடுகிறார். முன்னர் விருதுபடி, விருதுவெற்றி, விருதுகெட்டி, விருது வெட்டி, சலுப்பபட்டி, விருதுப்பட்டி எனவும் இன்று விருதுநகர் எனவும் வழங்கும் ஊரில் வாழும் நாடார் சமூகத்தவருள் ஒரு கூட்டத்தார் 'வாடியான்' கூட்டத்தார். அவர்கள் 'வாடியான் வீடு' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர். கூட்டம் என்பதைக் குறிக்க 'வீடு' என்ற சொல்லே விருதுநகரில் வழங்கப்படுகிறது. 'வாடியான்' வழி வந்தவர்களின் ஏழாவது எட்டாவது தலைமுறையினர் விருதுநகரிலும், பிற ஊர்களிலும் தற்போது வாழ்ந்து வருகின்றனர். வாடியான் வம்சாவளியினர் பற்றிய செய்திகள் இக்கட்டுரையின் உள்ளடக்கமாக அமைகின்றன. 


இடப்பெயர்வு: தென்பாண்டி நாட்டில் திருச்செந்தூர் அருகில் குலசேகரப்பட்டினம் முதல் குரும்பூர் வரை மணல் தேரிகளாக நீண்டிருந்த பகுதி மானவீரவளநாடு எனப்பட்டது. அங்குக் குடியிருந்த நாடார் சமூகத்தவருள் சிலர் அம்மன்புரம் புதுக்குடியைச் சார்ந்த தாழையடி அருஞ்சுனை காத்த அய்யனாரைக் குலதெய்வமாக வழிபட்டு வருவோர் ஆவர். அவர்களுள் ஒரு குடும்பத்தார் கடும்பஞ்சம் காரணமாகவோ சமூகக்கலவரம் காரணமாக்வோ 19 ம் நூற்றாண்டில் இடம் பெயர நேரிட்டுள்ளது. அப்போது விருதுநகர், பாவாலி ஜமீன்தாரின் ஆட்சியின் கீழ் இருந்தது. குடியிருந்தவர்களுள் பெரும்பான்மையானவர் பாளையக்காரர்களான வளையக்காரச் செட்டியார்கள்; சிறுபான்மையோர் மண்பானை வனையும் 'சலுப்பர்' என்ற குயவர். பல இடங்களிலிருந்தும் குடிபெயர்ந்து விருதுநகருக்கு வந்த நாடார் சமூகத்தினர் பாளையக்காரர்களிடம் குடியேற அனுமதி கேட்டனர். பாளையக்காரர்கள், விளக்கு ஏற்றிய வீடுகள் தவிர பிற வீடுகளில் குடியேற அனுமதித்தனர் (விருதுநகர் வரலாறு பாகம் 1,.2). 


மானவீர வளநாட்டிலிருந்து இடம் பெயர்ந்த நாடார் குடும்பமும் அன்றைய விருதுப்பட்டிக்கு வந்து, ஊருக்குக் கிழக்கே ஒதுக்குப்புறமாக அமைந்த இடத்தில், வடக்கு நோக்கி இருந்த குடிசையில் வாழத் தொடங்கினர். அக்குடும்பத்தின் தலைவர் 'வாடியான்' என்ற பட்டப்பெயரால் அழைக்கப் பெற்றார். 


பெயர்க்காரணம்: 'வாடி' என்ற சொல்லுக்குக் கழக அகராதி, 'மதில்', 'தோட்டம்', 'பட்டி', 'சாவடி', 'மரம்விற்குமிடம்' எனப் பொருள் கூறுகிறது (ப. 830). குடிபெயர்ந்து வந்த குடும்பத்துத் தலைவர் கோட்டைக்கு வெளியே குடியிருந்த காரணத்தாலோ (அருகில் உள்ளது கோட்டைப்பட்டி), தோட்டமாக இருந்த இடத்தில் குடியிருந்த காரணத்தாலோ, வணிகத்துக்குப் பயன்படும் எருதுகள் இருக்கும் பட்டிக்குப் பக்கம் குடியிருந்த காரணத்தாலோ, சாவடி அல்லது மரம் விற்கும் மரவாடிக்கு அருகில் குடியிருந்த காரணத்தாலோ 'வாடியான்' எனப் பட்டப்பெயரால் அழைக்கப்படலாயினார். சல்லிக்கட்டு தொடங்கும் இடத்திற்கு 'வாடிவாசல்' என்பது பெயர். வாடியான் வீட்டிற்கு அருகில் வாடிவாசல் இருந்தமையால் வாடியான் என்ற பெயர் வந்ததா என்பது அறியப்படவில்லை.


விருதுநகரிலுள்ள இன்றைய வாடியான் தெருவில் கரிசல்காட்டில் செடி கொடிக்களுக்கிடையில் ஒற்றை வீடாக அமைந்திருந்த வாடியானின் குடிசை வீடு தென்னங்கீற்றால் வேயப்பட்டது; மண் சுவர், மண் தரையாலாகியது. வடக்கு நோக்கி அமைந்திருந்த அக்குடிசை வீடு மழைக்காலத்தில் மழையினாலும், குளிர்காலத்தில் வாடைக்காற்றாலும் பாதிக்கப்பட்டது. விளக்கேற்றும் உரிமையும், இரு வாசல்கள் அமைக்கும் உரிமையும் அன்று இல்லை. 


நாடார்கள் கம்பு, கேழ்வரகு ஆகிய புன்செய்ப்பயிர்களை முக்கிய உணவுப் பொருட்களாகக் கொண்டிருந்தனர் (வி..ப. 7). கம்மஞ்சோறும் கருவாட்டுக் குழம்பும் விரும்பி உண்ணும் உணவாக இருந்தது. வாரத்தில் ஒரு நாள் அல்லது விழாக்களின் போது அரிசிச்சோறு சமைப்பது வழக்கம். இதனை ஒட்டியே விருதுநகர் வாடியான்களின் உணவுப்பழக்கமும் அமைந்திருந்தது.  வாடியான்களின் குலத் தெய்வம் தாழையடி அருஞ்சுனை காத்த அய்யனார் வழிபடும் அம்மன் 'பூரணம்'. விருதுநகருக்குக் குடிபெயர்ந்த பின்னர் அய்யனார் கோயிலிருந்து பிடிமண் எடுத்துப் பீடம் அமைத்து, அதனருகில் தங்கள் குலத்து மூதாதையரான 'பொன்னாவடையம்மன்' என்ற அம்மனையும் அமைத்து சங்கிலிக் கருப்பசாமி கோவிலுக்கு அருகிலுள்ள குருநாதன் கோவில் தெருவில் வழிபட்டு வரலாயினர். அக்கோவிலில் வழிபட இடம் போதவில்லை. 


ஆறாவது தலைமுறையினர் காலத்தில் பல்வேறு வணிகங்களிலும் ஈடுபட்டு வசதி பெருகவே வாடியான்கள், விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் 'வாடியான் மாதா கோவிலை' அமைத்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று வாடியான்கள் அனைவரும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு விருந்துண்டு செல்லுகின்றனர். இக்கோவிலில் அய்யனார் சிலை இல்லை. கன்னித் தெய்வமான பொன்னாவடை அம்மனுக்குப் பீடம் மட்டுமே உள்ளது. அம்மனுக்கு நிறைகுடம் மட்டுமே வைத்து வழிபடுவது இங்கு மரபு. திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட வாடியான்கள் மரபில் காலப்போக்கில் மாற்றம் கண்டுள்ளனர். தமிழர் திருநாளைத் தேர்வு செய்து தீப, தூப ஆராதனை இன்றிப் 'பூரணம் அம்மனைப் பூரணகுடம் வைத்து ஆராதிக்கின்றனர். வாடியான்களின் திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. தம் குலத்தெய்வத்தை மறவாமல் திருமண அழைப்பிதழை அய்யனார் முன்னர் வைத்து வழிபடவும், பிறந்த குழந்தைக்குக் காதுகுத்தி முடிக் காணிக்கை செலுத்தவும், நேர்த்திக் கடனை நிறைவேற்றவும் தாழையடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு அவ்வப்போது செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


வாடியான்கள் தாத்தாவின் பெயரைப் பெயரனுக்கு இடுவது மரபாக உள்ளது. தனித்தமிழில் பற்றுக் கொண்டமையால் ஆறாவது தலைமுறையினர் தம் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களை வைத்துள்ளனர். சான்றாக, ஆடவர் பெயர்கள் மெய்யன், புகழவன், நிறைவு, அன்பு, இனியன், மகிழ்நன், எழில் அன்பன், இன்பம், தென்றல், இளம்பரிதி போல்வன; மகளிர் பெயர்கள் அருமை, இனிமை, பசுமை, இன்சுவை. இன்னிசை, இன்னகை, இளநகை, புன்னகை, மலர்மதி, கயல்விழி. கனிமொழி, கல்வி, முல்லை, பொற்கிளி, அன்புக்கரசி, அருங்கனி போல்வன. தற்காலத்தில் ஷ்யாம், விக்னேஷ், தீபக், சஞ்ஜெய் எனவும், பிரியா, புஷ்கலா, பிருந்தா, தீபா, ரீனா, சில்பா எனவும் பெயரிடும் முறை பெருகி வருகிறது. 


தொடக்க காலத்தில் வாடியான்கள் விருதுநகருக்குக் குடிவந்த போது பிறர் இக்குடும்பத்தில் பெண் கொடுக்கத் தயங்கி உள்ளனர். நான்காவது தலைமுறையைச் சேர்ந்த வாடியான் ச. அய்யாச்சாமி நாடாரின் மனைவி பொன்னம்மாள் பகளக்காரர் வீட்டைச் சேர்ந்தவர். பகளர் வீட்டார் 18 ம் நூற்றாண்டில் வேம்பாரிலிருந்து விருதுநகருக்குக் குடி வந்தவர்கள். வசதி படைத்த வீட்டிலிருந்து வந்த அந்த அம்மையாருக்குத் தாய் வீட்டாரின் அரவணைப்பு இருந்துள்ளது. அது முதல் பகளம் வீட்டாருக்கும் வாடியான் வீட்டாருக்கும் மணஉறவு நிலவி வந்துள்ளது. வணிகத்தில் வாடியான் வீட்டார் முன்னேறத் தொடங்கிய பின்னர், வே.. வன்னியப் பெருமாள் நாடார், வே.வ. இராமசாமி நாடார், வே.வ. சண்முக நாடார். வே.வ. தனுஷ்கோடி நாடார் போன்ற கொத்தன் வீட்டாரோடு பெண் கொள்வினையும் கொடுப்புவினையும் மிகுதியாக வைத்துக் கொண்டுள்ளனர். 


பெண்ணுக்குத் திருமணம் செய்யும் போது மணமகன் வீட்டார் தாலி, காப்பு, பட்டுச்சீலை அளித்து மணப்பதே மரபாக உள்ளது. வரதட்சிணை அளிக்கும் வழக்கம் வாடியான் குடும்பங்களில் இல்லை. திருமணத்தில் மொய் எழுதும் பழக்கம் விருதுநகர் நாடார்களிடமும் இல்லை.

 

19 ம் நூற்றாண்டில் விருதுநகரிலிருந்து மதுரைக்குச் செல்ல சாலை வசதி இல்லை. அருப்புக்கோட்டை வழியாக மதுரை செல்ல வேண்டும். 1875ம் ஆண்டு முதன்முதலாக விருதுநகருக்கு இரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு விருதுநகர் வழியாக இரயில் 01.01.1876ல் விடப்பட்டது. அது முதற்கொண்டு வணிகத்தலமாக விளங்கிய அருப்புக்கோட்டையின் சிறப்பிடத்தை விருதுநகர் பெறலாயிற்று. வாடியான்களும் வணிகத்தில் சிறப்பிடம் பெற்றனர். 


வாடியான்கள் தொடக்க காலத்தில் செய்த தொழில் பற்றித் தெரியவில்லை. நான்காவது, ஐந்தாவது தலைமுறையினர் வாழையிலை, வாழைப்பழ வணிகம் செய்து வந்தனர். விருதுநகரிலிருந்து குறுக்குப்பாதை வழியாக ஏறத்தாழ 20 கி. மீ. தொலைவிலுள்ள திருத்தங்கல்லுக்கு விடியற்காலையில் நடந்து சென்று ஆறுமுகநாடார் என்பவர் வாழைத் தோட்டத்தலிருந்து காய், கனி, இலைகளைத் தோள்சுமையாகக் கொண்டு வந்து விருதுநகரில் விற்றுப் பிழைத்து வந்தார்.  உடன்பிறந்தவனின் தோள் சுமையைப் பாதிவழி சென்று சுமந்து வந்த அண்ணன் தம்பியரைப் பற்றிய செய்திகள் தெரியவருகின்றன. கட்டைவண்டி மாடு வாங்கும் வசதி பெற்றவுடன், ஒற்றை மாடு பூட்டிய கட்டை வண்டியில் வாழைத் தார்களையும் இலைகளையும் திருத்தங்கல்லிலிருந்து ஏற்றி வந்து வணிகம் செய்துள்ளனர். 


வாழை வணிகத்தில் செழித்த வாடியான்கள் இரயில் போக்குவரத்து வசதி வந்தவுடன் மதுரையிலும் தங்கள் கிளைகளைப் பரப்பத் தொடங்கினர். மதுரையில் இரும்புக்கடையைத் தொடங்கி அது ஆல்போல் தழைக்க செய்தவர் வாடியான் வி..எம். இரத்தினநாடார் வாடியான், வி..பி. மனோகரனும் வி..எஸ். இராதாகிருஷ்ணனும் இரும்பு வணிகத்தில் ஈடுபட்டவர்கள். வாடியான் வி..எம். வெள்ளையப்ப நாடார் குடும்பத்தார் சுற்றுலாப் பயணிகளுக்கான ஆடம்பரமான தங்கும் விடுதிகளைப் பல ஊர்களில் கட்டி அத்துறையில் முன்னணியில் நிற்கின்றனர்.  மற்றும் மருந்து வணிகம், சிமெண்ட் வணிகம், அலுமினியத் தொழில், பெயிண்ட் தொழில் ஆகியவற்றிலும் வாடியான்கள் கால்பரப்பி வருகின்றனர். இன்று விருதுநகரில் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கும் வீட்டாராகவும் விளங்குகின்றனர். 


மன்னர்களின் வரலாறு வரலாறல்ல மக்களின் வரலாறே வரலாறு; வரலாறு மீண்டும் எழுதப் பெற வேண்டும் என்று எண்ணும் வாடியான் கூட்டத்தினர் தங்கள் வரலாற்றினைப் பதிவு செய்யும் முகமாக 19.01.1973 ல் முதன்முதலாக 'வாடியான் கொடி வழி மலரை' வெளியிட்டுள்ளனர். புதிய வாரிசுகளையும் இணைத்து 1995 அன்று இரண்டாவது கொடிவழி மலரை வெளியிட்டுத் தம் வம்சாவளியினை வாடியான்கள் உலகுக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.


Comments

Popular posts from this blog

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1 அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை. உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.   இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.   பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள்

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.   சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.   ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி.   மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.   அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.   இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.   பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.   அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.   பிணம் கண்மலரும் தருணம் இது.   உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள். உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.   அவன்

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக