Skip to main content

11 செங்குந்தர் வாழ்வியல் முறைகள்

11 செங்குந்தர் வாழ்வியல் முறைகள் 



. முத்துவேல் 



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து வரும் செங்குந்தர்கள் 32 பங்காளிகள் என்ற கட்டுக்குள் இருந்து விரிவாகி மொத்தம் 145 தலைக்கட்டுகள் என்ற எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.


செங்குந்தர் பங்காளிகள் என்ற அமைப்பில் 32 பேர் இருந்து வருகின்றனர். இவர்கள் நான்கு பிரிவாகப் பிரிக்கப் பெற்று 1 வது கரை, 2 வது 3 வது கரை, 4 வது கரை என்று அழைக்கப் பெறுகின்றனர். 1 - வது கரையில் 2 பங்காளிகளும், 2 - வது கரையில் 8 பங்காளிகளும், 3 - வது கரையில் 12 பங்காளிகளும், 4 வது கரையில் 8 பங்காளிகளும் இருந்து வருகின்றனர்.


செங்குந்தர் உறவின்முறை என்ற அமைப்பில், திருமணம் ஆன செங்குந்தர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். செங்குந்தர் உறவின் முறை அமைப்பை நிர்வகிக்க நாட்டாண்மை, காரியக்காரர், கணக்கப்பிள்ளை என மூவர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமுதாயத்தில் திகழ்கின்ற அனைத்துச் செயல்களையும் முன்னின்று நடத்துகின்றனர், 


செங்குந்தர்களது குலத்தொழில் நெசவுத் தொழிலாகும். ஆனால் திருப்பரங்குன்றத்தில் இத் தொழிலில் யாரும் ஈடுபடவில்லை. அதற்கு மாறாக இறைத் தொண்டு செய்து வருகின்றனர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சீர்பாத மிராசுதாரர்களாக இருந்து வருகின்றனர். (திருவிழாக் காலங்களில் சுவாமி வீதியுலா வரும்போது தூக்கிக் கொண்டு வருபவர்கள் சீர்பாதங்கள்).  இறைத் தொண்டுக்காக 72 ஏக்கர் நிலம் மானியமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு மேலாக இத் தொண்டினைச் செய்து வருகின்றனர்.


திருப்பரங்குன்றம் செங்குந்தர் சமுதாய மக்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமியையும், அண்டாபரணர் என்ற சுவாமியையும், அருள்மிகு வெயிலுகந்தம்மன் என்ற தெய்வத்தையும் வழிபட்டு வருகின்றனர். வீரமுடையான் கண்மாய்ப் பகுதியில் உள்ள அருள்மிகு சோணை அய்யனார் என்ற தெய்வமும் வழிபடு தெய்வமாக விளங்குகிறது. மேலும் செங்குந்தர் பங்காளிகள் என் பிரிவின் கீழ் 1 - வது கரைக்கு கோவர்த்தனாம்பிகையும், 2 - வது கரைக்கு நொண்டி, சப்பாணிச்சாமியும், 3 - வது கரைக்கு ஆனந்தாயி, சௌந்தராயி தெய்வமும், 4 - வது கரைக்கு நல்லம்மாள், தடி, வன்னி அழகர் தெய்வமும் குலதெய்வங்களாக உள்ளன. 


பெருந்தெய்வ வழிபாட்டில் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாதம் 4 - வத சோம வாரத்தில் (திங்கட் கிழமை) மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். அண்டாபரணர் என்ற தெய்வ வழிபாடு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் நடைபெறுகிறது. வெயிலுகாந்தம்மன் வழிபாடு ஆண்டு தோறும் இரண்டு முறை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி, மார்கழி மாதங்களில் வளர் பிறையில் வழிபாடு நடைபெறுகிறது. ஆடி மாதம் முளைப்பாரி உற்சவமாகவும், மார்கழி மாதம் பொங்கல் வைத்தும் வழிபாடு நடைபெறுகிறது. இவ்வழிபாட்டிற்கு தலைக்கட்டு வரி விதித்து செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. 

ஆடி மாதம் முளைப்பாரி உற்சவ விழா கொண்டாட வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு முன்பாக அதாவது ஆனி மாதம் உறவின்முறைக் கூட்டம் நடைபெறும். அப்போது வெயிலுகந்தம்மன் கோவில் பூசாரிகள் (முறைகாரர்கள் உட்பட) 5 பேர் (வெயிலுகாந்தம்மன் கோயில் பங்காளிகள் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர்கள்) கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் உத்தரவு வாங்கிய பிறகு தான் முளைப்பாரி விழா கொண்டாட முடிவு எடுக்கப்படுகிறது. இம்முறை திருப்பரங்குன்றத்தில் வேறு எந்தச் சாதியினருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செங்குந்தர்கள் முளைப்பாரி போடும் போது மேற்படி கோவில் பூசாரிகளும் முளைப்பாரி போடுதல் வேண்டும். 


வளர்பிறை செவ்வாய்க்கிழமை முளைப்பாரி தொடங்கி 7 நாட்கள் கழித்து மறு செவ்வாய்க்கிழமை, முளைப்பாரியை பெயர்த்து வைத்து அம்மனுக்குப் படைத்து, மறுநாள் புதன்கிழமை தென்கால் கண்மாயில் கொண்டு போய் கரைக்கிறார்கள்.  அன்று இரவு 10 மணிக்கு மேல் அம்மனுக்கு அடைசல் போட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 


வீரமுடையான் கண்மாய்ப் பகுதியில் (பசுமலை அருகில்) வீற்றிருக்கும் அருள்மிகு சோணை அய்யனார் வழிபாடு, வளர்பிறை புதன்கிழமை அன்று (மார்கழி மாதம்) நடைபெறுகிறது. அன்று ஆடு பலியிட்டும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தப்படுகிறது. 


பங்காளிகள் என்ற பிரிவின் கீழ் குலதெய்வ வழிபாடு நடத்தப்படுகிறது. 1 - வது கரை கோவர்த்தனாம்பிகைக்கும், 2 - வது கரை நொண்டி, சப்பாணிச் சாமிக்கும் மாசி மாதம் சிவராத்திரி விழாவின் போது வழிபாடு நடத்தப்பெறுகிறது. 3 - வது கரை ஆனந்தாயி, சௌந்தராயிக்கும், 4 - வது கரை நல்லம்மாளுக்கும் ஆடி மாதம் 18 ஆம் பெருக்கு விழாவின் போது வழிபாடு நடத்தப்படுகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன. காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா, இறப்பு நிகழ்ச்சி போன்றவற்றில் பல்வேறு சடங்குகள் நடத்தப் பெற்று வருகின்றன.


திருமண விழா: மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் பேசி முடித்த பின்னர், உறவின்முறைக்குத் தெரியப்படுத்துகின்ற நிகழ்ச்சி ஒரு நல்ல நாளில் நடைபெறுகின்றது. பின்னர் நிச்சயதார்த்தம் (பரிசம் போடுதல்) நடைபெறுகிறது. நிச்சயதார்த்த விழா உறவின்முறை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறு கின்றது. 


நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கின்ற உறுதி மொழி: 

மணமகன் தந்தை (கூற வேண்டியது):

‘என்னுடைய மகன் ……………..க்குத் தங்களுடைய மகள் ……………….ஐத் தச்சு செய்து கொடுக்கவும் 

மணமகள் தந்தை (கூற வேண்டியது):

'என்னுடைய மகள் …………………….ஐத் தங்களுடைய மகன் ……………….க்குப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்கிறேன் 


தேய்காய் பழம், பரிசப்பணம், பரிசச்சேலை, பூ ஆகியவற்றைக் கொண்ட தட்டினைக் கையில் கொண்டு மணமகன் தந்தையும், மணமகள் தந்தையும் மாறி மாறி மூன்று முறை கூறி (தட்டை மாற்றிக் கொண்டு) இறுதியில் மணமகள் தாய்மாமனிடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த அத்தனை பேருக்கும் சந்தனம். வெற்றிலை, பாக்கு அளித்து மரியாதை செய்யப்படுகிறது. பின்னர் திருமண நாளன்று கண்ணேறு கழித்தல், மிஞ்சி போடுதல், திருப்பூட்டுதல் என்ற முறையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

இறப்புச் சடங்குகள்: செங்குந்தர் சமுதாயத்தில் ஒருவர் இறந்தவுடன் அனைத்து உறவினர்களுக்கும் தகவல் சொல்லப்படுகிறது. செங்குந்தர் சமுதாயத்தினர் சீர்பாத மிராசுதாரர்களாக இருப்பதால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் திருமங்கலம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் இருந்து இறந்தவருக்குப் பரிவட்டம் வழங்கி மரியாதை செய்கிறார்கள். இப் பரிவட்டத்திற்கு மரிக்கைப் பரிவட்டம் என்று பெயர். பின்னர், உறவினர்கள் பச்சை செய்தல், நீர்மாலை எடுத்தல், சீதேவி வாங்குதல் (திருமணம் ஆகியிருந்தால் மகன், மருமகள் சீதேவி வாங்குதல்) விதைப்பு வாங்குதல் (திருமணம் ஆகாமல் இருந்தால் மகன் மட்டும் விதைப்பு வாங்குதல்) ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் இறந்தவர்களைப் புதைக்கின்றனர்.

 

இரண்டாவது நாள் சடங்கு இடுகாட்டில் சமாதியின் முன்பு நடைபெறுகிறது. சமாதியில் லிங்கம் (களி மண்ணால் ஆனது) செய்து, படைப்பு வைத்து, ஜோதி ஏற்றி வழிபாடு நடத்தப் பெறுகிறது. அப்போது இறந்தவர் முத்தி அடைய வேண்டும் என்பதற்காக திருவாசகம் வாசிக்கப்படுகின்றது. 


‘நாளது ……………. சுபயோக தினத்தில், செங்குந்தர் வம்சத்தில், வல்லானை வென்றோர்களில், கோழிக் கொடி வாலையானந்த குருசாமி சீச வர்க்கத்தில், கந்தன் சகோதரர்களில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் பாதம் பணிவோர்களில் திருப்பரங்குன்றம் ……………. குமாரர் / குமாரத்தி திரு. / திருமதி ……………….. முதலியார் / அம்மாள் சாலோக, சாமீப, சாரூப, சாயுட்சியமென்னும் நாலாம் பதவிக்கு அய்க்கியமானார். அரோகரா! அரோகரா! அரோகரா! என இவ்வாசகங்கள் மூன்று முறை வாசிக்கப் பெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாள் தலை முழுக்காட்டு, 16 - வது நாள் கரும கிரியை நடைபெறுகின்றன.

 

இவ்வாறு திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து வருகின்ற செங்குந்தர் சமுதாயத்தினர் பல்வேறு வாழ்வியல் முறைகளைத் தன்னகத்தே கொண்டு சீரோடும் சிறப்போடும் இருக்கின்றனர். 


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக