Skip to main content

பல்லுயிர் கனவியல்! Multispecies Oneirology!

பல்லுயிர் கனவியல்! Multispecies Oneirology!கனவுகளில் மொழியின் வகிபாகம் குறித்து ஃப்ராய்ட் செலுத்திய கவனம் உளவியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதுபின்னாட்களில், லெக்கன், நனவிலிமனம் மொழியைப் போலவே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறதோ என்று சந்தேகம் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.  ‘கனவுகள், மூளையின் குடல்வால்என்று கருதிய நவீனத்துவ சூழலில், அவற்றை ஆழ்மனதின் சுவடுகளாகப் பாவிக்க முடியும் என்று நிரூபித்தது உளப்பகுப்பாய்வுஅதன் பின், கனவுகள் ஆய்வாளர்கள் மத்தியில் மரியாதையான இடத்தை வகிக்க ஆரம்பித்தன.

நானும் எல்லோரையும் போல கனவுகளின் துரதிர்ஷ்டசாலி தான்எனது நிறைய கனவுகளில்பேசினோம்என்று நினைவிருக்கும் ஆனால், என்ன பேசினோம் என்று சொல்ல வராதுஅதாவது, பேசிய விஷயம், ஒரு பனிப்படலம் போல நினைவிருக்கும்இன்னும் சரியாக சொல்லப்போனால், ‘செஷைர் பூனையின் சிரிப்புபோலபேச்சு மறந்து போன பின்பும், மரக்கிளையில்விஷயம்மட்டும் இளித்துக் கொண்டிருக்கும்.


ஃப்ராய்டிலிருந்து பலரும், கனவுகளை நம்மால் துல்லியமாய் ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை என்பதாலேயே அந்த உரையாடல்கள் / பேச்சுகள் நினைவிலில்லை என்று நம்புகிறார்கள்அதனால், கூடுமானவரை அக்கனவை எழுத்திலோ பேச்சிலோ பதிவிடச் சொல்கிறார்கள்மொழி, அவர்களுக்கு, ஒரு பாதாளக்கரண்டியைப் போல.  ‘நினைவின்மையில்மூழ்கியக் கனவுகளை மொழி அள்ளிக் கொண்டுவரும் என்பது ஃப்ராய்டிய நம்பிக்கை.  


சமீபத்தில், விலங்குகள் காணும் கனவுகள் குறித்து நிறைய ஆய்வு செய்கிறார்கள்பகலில் நடந்ததை, விலங்குகள், இரவுகளில் ஞாபகங்களாக உருமாற்றுகின்றன; அதற்குக் கனவுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்ற திசையில் ஆய்வுகள் நகர்கின்றன.  


விலங்குகளின் கனவுகளில் அவை பேசக்கூடுமா?   கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லைஒலி எழுப்பலாம் ஆனால், பேசுவதற்கு வாய்ப்பில்லைஅப்படியானால், விலங்குகளின் கனவுகள், செஷைர் பூனையின் சிரிப்புகளை மட்டுமே ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்பூனையோ, சிரிப்பொலியோ தேவைப்படாமல் தனித்தியங்கும் இளிப்புகளையேசெஷைர் பூனையின் சிரிப்புஎன்று சொல்கிறேன்விலங்குகளுக்கு அப்படி என்றால், மனிதர்களுக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும்?  


ஒரு வேளை, நமது கனவுகளிலும் கூட, பேச்சோ உரையாடலோ இல்லாமல் அதன்சாயல்மட்டுமே இடம்பெற்றிருக்கக்கூடுமோஏனெனில், பெரும்பாலும் நாம், நமது நினைவுகளில் அல்லது ஞாபகங்களில் முழுப் பேச்சுகளையும் வைத்துக் கொண்டிருப்பதில்லைஅதன், தொனி அல்லது பனிப்படலம் அல்லதுஇளிப்புமட்டுமே நமக்குப் போதுமானதாக இருக்கிறது.  


நினைவுகளின் எல்லையற்ற சேர்க்கை தான் கனவுகள் என்றால், மொழியின் பங்கு மீச்சிறியதோ என்று இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறதுமொழிக்கு முன்பிருந்தே நாம் கனவுகளைக் கண்டு வந்திருக்கிறோம் என்றால், மொழியின் வாசனையற்ற கனவுகள் சாத்தியம் தான், இல்லையா?


அப்படியானால், கனவுக்கும் மொழிக்குமான பந்தம் எத்தகையதுகாலையில் மறையத்தொடங்கும் கனவுகளுக்கு மொழியின் மூலம் நிரந்தர உருவம் கொடுக்கிறோம் என்று சொல்வது பொய்யா, ஃப்ராய்ட்உங்களையும் மொழி ஏமாற்றியதா?


மொழிக்கு முன்பிருந்தே நாம் கனவுகளைக் கொண்டிருக்கிறோம் என்றால், கனவுகளின் இயல்பான பயன்பாடு என்னஇன்றைக்கு அதனை, தேவையற்றது என்ற பொருளில் மூளையின்குடல்வால்என்று கருதுகிறோமே, அது நியாயமில்லையோ?  


காலையில் கனவுகள் நினைவிருப்பதில்லை என்று சொல்வதிலுள்ளநினைவிருக்க வேண்டும்என்ற விதியை, மொழி அல்லவா நமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறதுஅதனால் தானே, ஃப்ராய்டும், மொழியின் ஜாலத்தில் மயங்கி, குற்றம்சாட்டிய மொழியையே கனவுகளின் மீட்பராகக் கருதத் தொடங்கினார்!  


உண்மையில், கனவுகளை, காலையில் அது நினைவிருக்கும் (அரையுங்குறையுமாக) தன்மையிலேயே ஏற்றுக் கொள்வதில் நமக்கு என்ன சிக்கல்


ஒரு வேளை, இரவில் துல்லியமாகத் தெரிந்த கனவை, காலையில் பனிப்படலம் போர்த்திக் காட்டுவது மொழியாகக் கூட இருக்குமோ?


இருக்கும் பட்சத்தில், கனவுகளின் இரவு நேரத் துல்லியத்தை மீட்டெடுப்பதற்கு, மொழியின் பிடியிலிருந்து விடுபடுவது எவ்வாறு?


மொழியின் அசாத்தியங்களை நெருங்கும் போது, கனவுகளின் உண்மையை நம்மால் தரிசிக்க முடியுமோ?  


அப்படி உண்மையை நெருங்குகிற அன்று (ஆம் என்றும் இல்லை என்றும் அர்த்தம் தரும்அன்று’), கனவுகள் கடவுளின் செய்திகள் அல்லது முன்னுணர்த்தும் சங்கேதங்கள் அல்லது ஆழ்மன ரகசியக் குறியீடுகள் அல்லது தன்னிலையின் குளறுபடிகள் என்ற அத்தனை கற்பனைகளையும் கடந்து, கனவுகளின் இன்னொரு பரிமாணத்தை நம்மால் கண்டுகொள்ள முடியும்பிற உயிர்களுக்கும் நமக்குமான இன்னொரு மாபெரும் ஒற்றுமையாகக் கனவு காணுதல் இருக்க முடியும்அந்தக்கனவுமொழி மீறிய / கடந்த / அன்றிய கனவாக இருக்க முடியும்.  


பல்லுயிர்களையும் இணைக்கிற சங்கதி உயிரியல் மட்டுமல்ல, நினைவுகளின் தொழில்நுட்பத்திலும் எல்லா உயிர்களும் ஒரே மாதிரியானவை என்று சொல்வதற்குமொழி மீறிய கனவுஎன்ற யோசனை நமக்கு உதவி செய்யலாம்.


Comments

Popular posts from this blog

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1 அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை. உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.   இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.   பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள்

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.   சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.   ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி.   மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.   அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.   இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.   பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.   அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.   பிணம் கண்மலரும் தருணம் இது.   உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள். உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.   அவன்

வண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்?

மாரி செல்வராஜின் கர்ணன் குறித்து எழுதப்பட்ட கட்டுரையா இது என்று எனக்குத் தெரியாது .  ஆனால் , அப்படியொரு முயற்சிக்கான ஆரம்பக் குறிப்புகள் என்று சொல்லிக் கொள்ளலாம் .  ஒரு திரைப்படம் இத்தனை அடுக்குகளோடு வெளிப்பட முடியுமா என்பதை இன்னமும் ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன் .  இப்போதைக்கு என்னால் கோடிட்டுக் காட்ட முடிந்த முக்கியமான விவாதப் புள்ளிகள் : தெய்வமாதல் , கிராமத்தை விட்டு வெளியேறுதல் , கெளரவப்பாரதம் , மறுவாசிப்பு , பல்லுயிர் வாழ்க்கை , சுயமரியாதைக்கான வேட்கை , எழுத்தும் அன்றாடமும் , தலைமையைக் கொய்யும் அரச பயங்கரவாதம் … இனி குறிப்புகளை வாசியுங்கள் ! 1 நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா ?  அவை , சாலையோர தெய்வங்கள் . இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு - ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் , ஆண்டிப்பட்டி கணவாய் தர்ம சாஸ்தா , இப்படி பல .  கணவாய் போன்ற மிகப் பிரதான வழிகளை மட்டுமல்லாது , நகரங்களை நோக்கிச் செல்லக் கூடிய எந்தவொரு சாலையிலும் ந