'ஜெய்பீம்' திரைப்படம் குறித்த எனது முதல் பதிவு இப்படி இருந்தது:
#ஜெய்பீம் நலிந்தவர்களை ஈடேற்றும் போதை!
1. தமிழர்கள் தங்களைப் புரட்சியாளர்களாக எண்ணி மயங்குகிற தருணங்கள் நிறைய உண்டு. எம்ஜியார் அரசியலில் இருந்த பொழுது, திமுக தேர்தலில் வெற்றி பெற்று விடுகிற சமயங்களில், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு வரும் பொழுது… இந்த வரிசையில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை சிலாகிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மனிதவுரிமை மீறல் எதிர்ப்புப் போராட்டங்களின் உக்கிரமும், உண்மைத்தன்மையும், நியாயமும் அவை நிகழ்த்தப்படும் போது மட்டுமே வெளிப்படுகின்றன. பின்னாட்களில், அவற்றை ஆவணமாகவோ அல்லது புனைவாகவோ உருட்டித் திரட்டும் பொழுது, மனிதர்களற்ற மனிதவுரிமைச் சிக்கல்களாகவே அவை வேடிக்கை காட்டுகின்றன.
ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது - இருளர்களின் சமூகச் சிக்கல் இருக்கிறது, இருளர்கள் எங்கே சார்?
2. ‘இருளர்கள் எங்கே?’ என்ற கேள்வி கொஞ்சம் பழைய கேள்வி தான். இருளர்கள் பேசும் படைப்புகளை இருளர்களே தான் எடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் அதற்குப் பதில் சொல்லி வந்திருக்கிறோம். அதாவது, எந்தவொரு படைப்பு மனதாலும் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் போன்றது, ‘ஏதிலிகளின் மனம்’ என்று இதற்குப் பொருள்.
ஆனால், இதையெல்லாம் கடந்து வந்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். மனம் பிறழ்ந்தவர்களின் மனதைக் கூட புனைய முடியும் என்பது தான் படைப்பாளர்களின் நம்பிக்கை. அதே நேரம், ‘ஏதிலியின் மனம்’ என்பது கடந்து செல்லும் தருணம் தானே தவிர, நிரந்தரமாய் தங்கி வாழும் இடமல்ல என்ற தெளிவும் இந்தக் கடத்தலுக்குக் காரணம்.
3. ஜெய்பீம், ஒரு சதுரங்க விளையாட்டின் உற்சாகத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்குமான விளையாட்டு. இதில், நல்ல வழக்/காவ, கெட்ட வழக்/காவ, நியாய வழக்/காவ, அநியாய வழக்/காவ, விளையாட்டின் விதிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் சதுரங்கக் கட்டங்களைப் போன்ற நீதிபதிகள், முன்வரிசை சிவப்புத் துண்டணிந்த போராளிகள்… என்று விதவிதமானக் கதாபாத்திரங்கள். படம் முழுவதும் சூழ்ச்சிகளும் முறியடிப்புகளுமாக அடுக்கப்பட்டுள்ளன.
இதில், இருளர்களின் சமூகப்பிரச்சினையின் இடம் என்ன என்று கேட்கலாம். சில விளையாட்டுகளில் திரட்டப்படும் நிதி, எல்லையில் போராடும் வீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது வெள்ள நிவாரணத்திற்கு என்றெல்லாம் சொல்லப்படுமே, அது போல, ஜெய்பீம் என்ற இந்த விளையாட்டு உருவாக்கும் கருணை, இருளர்களுக்கு.
4. இந்தக் கருணையைப் பெறும் இருளர்களும் சாதாரண இருளர்கள் அல்ல. வெள்ளந்திகள்; சூதுவாது அற்றவர்கள்; பாம்புக்கும் கருணை காட்டுகிறவர்கள்; பொய் சொல்ல அஞ்சுகிறவர்கள்; காதலும் கனிவுமானவர்கள். அதாவது, ஜெய்பீமில் சாகசம் போலச் சொல்லப்படுகிற சூழ்ச்சிகளைக் கொஞ்சமும் அறியாதவர்கள். மீறி அவர்கள், எப்பொழுதாவது, சொந்தமாக யோசித்து ஏதாவது ஒரு நல்ல பொய்யைச் சொன்னால் கூட, அதற்காகக் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். நீதி எவ்வாறு வழுவக் கூடாதோ அதே போல், ஏதிலிகளும் வழுவுதல் பிழை.
5. ஜெய்பீமில் வெளிப்படும் நியாயத்திற்கான சாகசம், வெகுஜன புரட்சிகர மனதை அப்பட்டமாக திருப்தி செய்கிறது. திரைப்படத்தின் நோக்கமும் அது தான் என்பதை நாம் உடனடியாக விளங்கிக் கொள்ள முடிகிறது. பிரச்சினையின் தீவிரம் அல்லது முரண்பாடு அல்ல; அதில் காணக்கிடைக்கும் சுவராஸ்யமே எல்லோரையும் ஈர்க்கிறது. இதைத் தான் ‘மனிதவுரிமை மீறல் எதிர்ப்புப் போராட்டங்களின் உக்கிரமும், உண்மைத்தன்மையும், நியாயமும் அவை நிகழ்த்தப்படும் போது மட்டுமே வெளிப்படுகின்றன. பின்னாட்களில், அவற்றை ஆவணமாகவோ அல்லது புனைவாகவோ உருட்டித் திரட்டும் பொழுது, மனிதர்களற்ற மனிதவுரிமைச் சிக்கல்களாகவே அவை வேடிக்கை காட்டுகின்றன’ என்று நான் சொல்கிறேன்.
6. நிகழும் போது திரளும் உண்மை, புனையும் போது தவற விடப்படுவது ஏன்? இருளர் சமூகச்சிக்கலைப் பேசும் ஜெய்பீம் மூன்று முக்கியமான தருணங்களை ஜடம் போலக் கடந்து செல்வதைக் கவனித்துப் பார்க்கலாம்: ஒன்று, எந்த நேரமும், எந்த பக்கமிருந்தும் வாழ்வின் மீதான அச்சுறுத்தல் நிகழக்கூடும் என்ற இருளர்களின் பதட்டத்தை, அனாதரவான சூழலை, பாம்பைக் கூட நம்ப முடியும் மனிதர்களை முடியாது என்ற பழங்குடி மனதை இத்திரைப்படத்தில் நீங்கள் காணமுடியாது. இரண்டு, வலுவான நிறுவன பலமுள்ள அரசு வழக்கறிஞர்களின் ஆக்ரோஷத்தின் முன், தார்மீகத்தை மட்டுமே ஆயுதமாக ஏந்திப் போராடும் கதாநாயகன் உடைந்து நொறுங்கி பின் மீண்டெழும் தருணங்களை நீங்கள் இந்தத் திரைப்படத்தில் எதிர்ப்பார்க்க வாய்ப்பில்லை. மூன்று, யாருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறோமோ அவர்கள் நாம் நம்புவது போல தூய்மையானவர்களா இல்லையா என்ற குழப்பமே வராத கதாநாயகன். இருளரின் மனதை மட்டுமல்ல, நியாய உணர்வுள்ள வழக்கறிஞர்களின் மனதைக் கூட ஜெய்பீமால் அணுக முடிவதில்லை.
7. இதுவொரு வழக்கறிஞர் - போலிஸ் கதை என்று சொல்வதற்கான காரணம், இதன் பாத்திர வடிவமைப்பு. வழக்கறிஞர்களிலும் காவலர்களிலும் இத்தனை வகைகள் இருந்தது போல, பேசுபொருளான இருளர்களிலும், சிவப்புத்துண்டு போராளிகளிளும் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? ஏன், காவலர்களைத் திருடர்கள் என்று பழிக்கும் இருளர்கள் படத்தில் இல்லை? ஏன், திருடும் இருளர்கள் இல்லை? ஏன், இருளர்களிலும் காவலர்களிலும் நண்பர்கள் இல்லை? மிக எளிய காரணம் தான் - பழங்குடிகள் ஏதிலிகளாக விளங்கினால் மட்டுமே, சந்துரு மாதிரியான புரட்சிகர இளைஞரக்ள் உருவாக முடியும்.
8. ‘நலிந்தவர்களைக் காப்பாற்றுகிறேன்’ என்று சொல்வது தற்கால வெகுஜன அரசியலில் காணப்படும் கொடிய போதைப்பழக்கம். மதவாதத்தின் சாந்த முகம். அதற்கு சிவப்புத்துண்டு போட்டு விடுவது தான் ஜெய்பீமில் நடக்கும் வேடிக்கை.
9. நியாய உணர்வுள்ள வழக்கறிஞரே கதாநாயகன் என்பதால் 'ஜெய்பீம்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அம்பேத்கர் பற்றி ஒரு பழங்கதை உண்டு. 'ஏன், நீங்கள் சரிவர உறங்குவதில்லை?' என்று கேட்ட போது, 'என் மக்கள் விழிக்கவில்லை. அவர்கள் விழிக்கும் வரை என்னால் தூங்க முடியாது' என்றாராம்.
இப்பொழுதானால் அம்பேத்கரிடம் இப்படிச் சொல்லலாம்: தயவு செய்து தூங்குங்கள் பீம். உங்களது உறக்கமின்மை எங்களுக்குத் துர்க்கனவுகளைக் கொண்டு வருகின்றன!.
இதற்கு வந்த எதிர்வினைகள் வித்தியாசமானவை. அவற்றுள் ஒன்று.
பொதுசமூகத்திற்கு காலா ஏன் பிடிக்கவில்லை
அல்லது ஜெய்பீம் ஏன் நெருக்கமாகின்றது?
சிறுபத்திரிக்கைகளின் அகால மறைவுக்கு பிறகும் அச்சு ஊடகத்தில் கணிணி பயண்பாட்டின் பின்னர் புற்றீசல்களாய் முளைத்தெழுந்த, இடைநிலை பத்திரிக்கைகளால் காயடிக்கப்பட்ட அல்லது நுண்ணுனர்வு என்பதே இல்லாமல் உருவாக்கப்பட்டு நம் முன்னே கொட்டப்படும் தொழிற்சாலை எழுத்து கழிவுகளின் மத்தியில் பேராசிரியர் Dharmaraj Thamburaj போன்ற அசல் சிந்தனையாளர்களால் மட்டுமே வாசகனுக்கு மீட்சியுண்டு.
வெகுஜன சமூகம் இயங்கும் தளத்தின் உள்ளே உள்ள
அனைத்து விகாரங்களையும் ஓளிபாய்ச்சி் நமது நுண்ணுர்வை மீட்டெடுக்கும் எழுத்து.
இது வெறுமே திரைப்படத்திற்கான விமர்சனமாக பார்ப்பதென்பது சரியானதல்ல. அதனுள் இயங்கும் பொது மனதின் அரசியலை உற்றுநோக்குவதே. அதை எப்போதும் போல சரியாக சொல்வதற்கு வாழ்த்துக்கள் தர்மராஜ்
(பி.கு. பரத்வாஜ ரங்கன் போன்ற சினிமா தெரியாத எலைடிச எண்ணங்களை கொண்டவர்களின் முட்டாள்தனமான விமர்சனங்களை நாம் முற்றிலும் ஓதுக்கிதள்ளுவதும் நல்லது)
*
இதற்குப் பதில் சொல்லும் வகையில் நான் இரண்டு, மூன்றாவது பதிவுகளை எழுதினேன்.
#நலிந்தவர்களை ஈடேற்றும் போதை 2 - அகப்போராட்டமும் படைப்புச் சுதந்திரமும்
நிகழ்விற்கும் நினைவிற்குமான இடைவெளியை பல சமயங்களில் நாம் நம்புவதில்லை. ஆனால், அந்த இடைவெளி அதலபாதாளமாகக் கூட மாறக்கூடும். இயேசுவின் கதையில் அப்படித் தான் நடந்தது.
சென்ற நூற்றாண்டில் பேசப்பட்ட விடுதலை இறையியல் கூட இந்த இடைவெளியைப் பொருட்படுத்தியிருக்கவில்லை. விடுதலை இறையியலாளர்கள் இயேசுவை, புனித நூல்களிலிருந்து கிளம்பி வந்த ஆத்மாவாக மட்டுமே விளங்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு, ஆதாரமான நிகழ்வே பனுவல் மட்டும் தான். இயேசு என்று இன்றைக்கு அறிவதை பனுவலின் நிகழ்வாக அவர்களால் விளக்க முடிந்தது.
ஆனால், அந்தப் பனுவல்களே கூட, (பனுவல்களை நினைவுகளின் தொகுப்பு என்று கொண்டால்) 'இயேசு என்ற நினைவிற்கு' முந்தைய 'இயேசு என்ற நிகழ்வு' குறித்த சங்கதிகளை நமக்குச் சொல்கின்றன. இயேசு என்ற ஒற்றை, எவ்வாறு பொதுமையாக நினைக்கப்படலாயிற்று; அந்த ரசவாதத்தை பவுல் எவ்வாறு சாத்தியமாக்குகிறார் என்று ஏராளமான ஆய்வுகள் (அலெய்ன் பாத்யோ. அலெய்ன் டண்டிஸ்…) நடைபெற்றுள்ளன. அதாவது, விடுதலை இறையியல் போன்ற பனுவல்மைய வாதத்திலிருந்து விலகி நிற்க ஆரம்பித்து வருடங்கள் ஆயிற்று.
ஜெய்பீம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்வி, ஒரு நிகழ்வை நினைத்துப் பார்க்கையில் (எல்லா கலைப்படைப்புகளும் நினைத்துப் பார்த்தல்களே!) நாம் செய்யக்கூடிய பிழைகளைப் பற்றியது. நமது படைப்பு நுட்பங்கள் தட்டையாக இருப்பதன் காரணம் என்ன என்பது தான் நான் விவாதிக்க விரும்பும் செய்தி.
இந்த விஷயத்தில் போகன் சங்கர் குறிப்பிடும் ‘அகப்போராட்டம்’ என்ற விஷயமும், எம்.டி.எம் விளக்கும் ‘படைப்புச் சுதந்திரம்’ என்பதும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
அகப்போராட்டம் என்ற சொல் தீர்க்கமானது; அதனால் கவர்ச்சியானதும் கூட; காவியத்தன்மை கொண்டது என்றும் சொல்லலாம். இந்தக் கவர்ச்சியும் காவியத்தன்மையும், அச்சொல் சுட்டும் தீர்க்கத்திலிருந்தே வெளிப்படுகிறது. அகப்போராட்டம் நிறைவு பெற்றதை சுட்டும் தீர்க்கம். முடிவிலிருந்து பின்னோக்கி நகரும் பொழுது அடையும் சலுகை இது. அதாவது, நினைத்துப் பார்க்கும் பொழுது நாம் எடுத்துக் கொள்ளும் உரிமை. ஆனால், அது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இத்தகைய சலுகையோ உரிமையோ உங்களுக்கு வழங்கப்படுவதில்லை. அத்தகைய தருணங்களில் அதை யாராலும் ‘அகப்போராட்டம்’ என்று அழைக்கவும் முடிவதில்லை; மாறாக, அது கொடிய தடுமாற்றம், அலைபாய்தல், குழப்பம், மானக்கேடு, தன்னிலைச் சிதைவு, வீழ்ச்சி.
நினைத்துப் பார்க்கும் பொழுது, ஜனரஞ்சக கலைப்படைப்புகள் இயல்பாகவே தவற விடுகிற விஷயங்கள் இவை. மாற்றுக் கலைப்படைப்புகள் இத்தருணங்களை அகப்போராட்டங்களாக அலங்கரித்து விடுகின்றன. ‘அகப்போர்’ என்ற வார்த்தையைக் கண்டுபிடித்த மறுகணமே, ரத்தமும் சதையுமான வாழ்க்கை, அப்பமும் ரசமுமாக மாறிவிடுகிறது. இப்படி மாற்றுவதையே எம்.டி.எம். படைப்புச் சுதந்திரம் என்று அறிவிக்க விரும்புகிறார். என்னைப் பொறுத்தவரையில், இதைச் சுதந்திரம் என்று சொல்லத் தோன்றவில்லை. குறுக்கம் என்றே படுகிறது - நிகழ்வுக் குறுக்கம். இதை நினைவு என்ற தொழில்நுட்பத்தின் கோளாறு என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனாலும், இந்தக் கோளாறை சரிசெய்வதற்கான முயற்சிகளும் ஏராளம் நடந்துள்ளன. தாஸ்தயேவ்ஸ்கியில் நிகழ்ந்த தவறுகளை நேர் செய்யும் முயற்சிகள் இவை. போர்ஹேயின் The Gospel According to Markல் விவரிக்கப்படும் குழப்பம் இயேசுவின் ‘அகப்போராட்டம்’ அல்ல; அவரது நினைவுகளால் நாம் அடையும் தடுமாற்றங்களும் தன்னிலைச் சிதைவுகளும். 'ஒரு கிறிஸ்துவை உருவாக்கத் தேவைப்படும் பாவிகள்' என்ற செய்தி எவ்வாறு அதிர்ச்சியடைய வைக்கிறதோ அதே போலத்தான் 'ஒரு போராளியை உருவாக்கத் தேவைப்படும் நலிந்தவர்கள்' என்ற செய்தியும்.
*
#ஜெய்பீம் நலிந்தவர்களை ஈடேற்றும் போதை 3:
மண்டைபிளக்கும் கோட்பாடுகளோடு கலையை அணுகுவதா என்று சிலர் கேட்கிறார்கள். காவலரின் தடி மட்டுமல்ல, கலைப்படைப்புகளும் மண்டையைப் பிளக்கின்றன என்றால் வேறு என்ன தான் செய்வது?
அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டங்களை மீள நினைத்துப் பார்ப்பதிலுள்ள கோளாறுகளைக் கவனப்படுத்துவதே எனது நோக்கம். அதாவது, போராட்டங்களை பனுவலாக்குவதிலுள்ள அரசியல் என்ன என்று அறிவது.
1. அடிப்படையில், எதுவொன்றையும் நினைத்துப் பார்க்கையில் (கலைப்படைப்புகளை மனதில் கொள்ளுங்கள்), அந்த ஒன்றின் வெற்றி / தோல்வியே எப்படி நினைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. அது, துன்பியலா இன்பியலா என்ற அறிவு, கலைப்படைப்புகளின் உள்ளார்ந்த முரணை ஏற்கனவே தீர்மானித்து விடுகிறது. அமைப்பியல் ஆய்வுகளில் (கட்டுடைப்பிலும் கூட) கண்டறியப்படும் ‘பனுவலின் அந்தரங்க முரண்’, நினைத்துப் பார்த்தலில் தோன்றிய முரண் மட்டுமே.
2. மீள் நினைத்துப் பார்ப்பதை காரண காரியத் தேடலாகவே மேற்கொள்ளும் கோளாறு: நிகழ்வின் போது உணரப்பட்ட தடுமாற்றம், அகப்போராட்டமாக உருமாற்றம் கொள்வது இப்படித்தான். இறுதியில் நினைத்துப் பார்க்கையில், எல்லாச் செயல்களுக்கும் பூரண அர்த்ததை வழங்க முடிகிறது. அர்த்தமற்றவை களையப்படுவதும் கூட. அதாவது, தடுமாற்றமாகவே இருப்பவை அர்த்தமற்றவை என்ற பெயரில் களையப்படுவதும்; அகப்போராட்டமாக மாறியவை அர்த்தமுடையவையாகக் கொண்டாடப்படுவதும்.
3. காரண காரியங்கள் கண்டறிய முடியாத, ஆனாலும் தவிர்க்கமுடியாத சங்கதிகளை அமானுஷ்யமாக நினைக்கத் தொடங்குவது: மானுடக் காரண காரியங்களுக்கும் மிஞ்சிய விதிகளை நம்பத் தொடங்குகிறோம். ஊள்வினை, தர்மம், கோள்களின் சஞ்சாரம், தெய்வ அணுக்கிரகம் என்று பல்வேறு அமானுஷ்யங்கள்.
4. இல்லையென்று மறுத்தாலும், ‘நினைத்துப் பார்ப்பதே கலைப்படைப்பு’ என்பதால், அது தீர்ப்பிடவே முயற்சி செய்கிறது. அறுதியிடுதல் என்று சொல்லலாம். குழப்பமான, விளங்காத நிகழ்வுகளை சட்டகப்படுத்துதலே கலைகளின் ஆதர்சமாக இருக்கிறாது. இதனால் தீர்ப்பிடுவதிலிருந்தும் கலைகளால் தப்பிக்க முடிவதில்லை. இதையே ‘அழகியலின் அரசியல்’ என்று ரான்சியர் போன்றோர் அழைக்கிறார்கள். ஒரு போராட்ட நிகழ்வை சட்டகப்படுத்த ஆரம்பிக்கும் கலை, அதில் தொடர்புடைய அத்தனை பேரின் தன்னிலைகளையும் வடிவமைக்கத் தொடங்குகிறது என்று பொருள். தன்னிலை சிதைந்ததன் காரணமாகவே போராட்டம் தேவைப்பட்டிருந்த நபர்கள், மிகக்கொடூரமாக, ‘நலிவுற்றவர்/ஏதிலி’ என்ற தன்னிலைக்குள் தள்ளப்படுவதை நினைத்துப் பார்க்கும் கலைப்படைப்புகளே செய்யத் தலைப்படுவது தான், போராட்டத்தின் மையத்தையே சிதைப்பதாக மாறி விடுகிறது.
5. அரசியல் நிகழ்வுகளை விடவும் குழப்பமானவை எதுவுமில்லை. முழுக்க முழுக்க தடுமாற்றங்களோடும், பயங்களோடும், அவமானங்கள் / அவமதிப்புகளோடுமே ஒரு அரசியல் நடவடிக்கை நகர்கிறது. ஒவ்வொரு அரசியல் செயல்பாட்டின் இறுதி வெற்றி என்று சொல்லப்படுகிறதே அதை அடையும் போது, அச்செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த எவரும் அதன் அழகை ரசிக்கிற மனநிலையி இருப்பது இல்லை. உதாரணத்திற்கு, தனது கணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய அப்பழங்குடிப் பெண் தான் கேட்டது கிடைத்த பின்பு அடைகிற வெறுமை. போராட்டங்களைச் சித்தரிக்கத் தொடங்கும் கலை, அரசியலையே நினைத்துப் பார்க்கத் தொடங்குகிறது. அரசியலை நினைத்துப் பார்ப்பது என்றால், அச்செயல்பாட்டின் கடைசி விளைவுகளை அல்ல; அதை அடைய நேர்ந்த துயரங்களை, குழப்பங்களை, தடுமாற்றங்களை. இதையெல்லாம் விடுத்து, ஒரு கலை வடிவம், அவ்வரசியல் செயல்பாட்டின் விளைவில் மட்டுமே திளைத்திருப்பதை விடவும் மோசமான போதைப்பழக்கம் இருக்க முடியுமா?
6. நினைத்துப் பார்க்கும் அரசியலில் ஆகக் கொடிய பாதகங்களை ஏற்படுத்துகின்றன என்பதால் தான் வரலாற்றுவரைவியலையும், புனைவாக்கங்களையும் இத்தனை கறாராக விமர்சிக்க வேண்டி வருகிறது. இவ்விரண்டுமே, தற்செயல்களை அங்கீகரிப்பதில்லை. பயப்படுகின்றன என்பதே உண்மை. காரண காரிய விளக்கங்களைத் தேடிப்போன மனிதன் இறுதியில் அதன் கைதியாகவே மாறிப்போனான் என்பதை அவன் தற்செயல்கள் மீது கொள்ளும் பதட்டத்திலிருந்து வெளிப்படுகிறது. விளக்கங்களற்ற எதுவும் மானுடத்திற்கு கிலியூட்டுகிறது. இப்பிரபஞ்சத்தில் அர்த்தங்களின் ஏகபோகன் என்று தன்னைத்தானே மனிதன் நினைத்துக் கொள்வதன் கோளாறு இது. அர்த்தங்களுக்குள் அகப்படாத தற்செயல்கள் நிரம்பியதே இந்த உலகம் என்பதை எந்த வரலாறு / புனைவு மறுக்கிறதோ அது எதேச்சதிகாரத்திற்கு துணைபோகிறது என்று அர்த்தம்.
*
(இதன் பின் வதவதவென இப்படி ஆரம்பித்தார்கள்)
#நலிவுற்றவர்களை ஈடேற்றும் போதை 4 - கேள்வி பதில்.
கேள்வி: ஜெய்பீம் படத்தில் உங்களைக் கோபப்படுத்தியது, பழங்குடிகளைக் கையாண்ட விதம் என்று சொல்லலாமா?
பதில்: இல்லை, நிச்சயமாக நான் அதைச் சொல்லவில்லை. ‘பிற’ மனிதனைக் கையாளுவதிலுள்ள பிரச்சினை நிரந்தரமானது; அதை என்றைக்கும் நிவர்த்தி செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். அப்படத்தில்வெளிப்படும் வரலாற்றுத் தடித்தனமே என்னைக் கோப்பப்படுத்துகிறது.
கேள்வி: வரலாற்று உணர்வின்றி அப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா? தகவல்களில் பிழை இருக்கிறது என்று சொல்கிறீர்களா?
பதில்: வரலாற்றுப் பிழை வேறு, தடித்தனம் வேறு. கடந்த முப்பது / நாற்பது வருடங்களில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய விவாதம், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பற்றியது. இலக்கியப் பிரதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவாதம், அதன் பின் வரலாற்றுப் பிரதிகளுக்குத் திரும்பி, பின் கலை வடிவங்களுக்குள் வலம் வந்து, அரசியலுக்குள் கட்சிகளாக வளர்ந்து, சமீபமாக திரைப்படங்கள் வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. இனியும், எடுப்பார் கைப்பிள்ளை போலவோ அல்லது ஈரக்களிமண்ணைப் போலவோ ‘ஒடுக்கப்பட்டவன்’ இல்லை என்பதை சமகால தமிழக வரலாறு உங்களுக்கு நிச்சயம் சொல்லித்தரும். இப்படியொரு விவாதமே நடக்கவில்லை என்பது போல, ஒரு ஜனரஞ்சக திரைப்படத்தை எடுக்க முடியும், அதையும் புரட்சிகர காரியம் போல தம்பட்டம் அடிக்க முடியும் என்பதைத் தான் வரலாற்றுத் தடித்தனம் என்று சொல்கிறேன்.
கேள்வி: கலைப்படைப்பினுள் பல குரல்களுக்கான சாத்தியங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: நிச்சயமாக. அந்தந்த கதாபாத்திரங்களை அவரவர் குரலில் பேச விடுங்கள் என்பது தான் அடிசுவடி. கதை சொல்லலின் பொதுவுடமை இது. அந்தந்தக் குரல்களுக்கான மரியாதையை வழங்குதல். அந்தக் கதையில், பழங்குடிகளை மட்டுமல்ல, களப்பணி செய்த சிவப்புத் துண்டுக்காரர்களுக்குக் கூட குரல்கள் இல்லை என்பதைக் கவனியுங்கள். வழக்கறிஞர்கள், காவலர்கள் தவிர்த்து வேறு யாருடைய குரலும் ஒலிப்பதில்லை.
கேள்வி: ஒரு ஜனரஞ்சகத் திரைப்படத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா? பெருவாரியான மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று வரும் பொழுது இத்தகைய சமரசங்கள் நடப்பது தானே?
பதில்: பொதுவுடமைக் கதை சொல்லும் முறையை நீங்கள் தேடவில்லை என்பது தானே தவிர, மக்களின் ரசனை அல்ல இங்கு பிரச்சினை. உங்களுக்கு அப்படியொரு பாணியில் கதையைச் சொல்லத் தெரியவில்லை. அல்லது, அப்பாணியை நீங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தம்.
கேள்வி: இப்படம் குறித்த விமர்சனத்தை தங்கள் மீதான் விமர்சனமாக கம்யுனிஸ்ட் கட்சிகள் எடுத்துக் கொள்கின்றனவே?
பதில்: இந்தக் குழப்பம் உலகம் முழுக்க எல்லா கம்யுனிஸ்ட் கட்சிகளிலும் காணப்படுகிறது. கம்யுனிஸ்ட் கட்சிகள், காலாவதியான காரைக்குடி வீடுகள் போல. பயன்பாட்டை இழந்தவை. அது அரண்மனையா வீடா என்ற குழப்பமே, பாழடைந்து போனதற்கானக் காரணம். சில காரைக்குடி வீடுகளை உல்லாச விடுதிகளாக மாறியிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். சிலர், அவ்வீடுகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பெயர்த்து விற்க ஆரம்பிக்கிறார்கள். அதன் வேலைப்பாடு நிறைந்த தூண்கள், கதவுகள், ஜன்னல்கள் என்று பல விஷயங்கள் கலைப்பொருட்கள் போலவும் வீட்டு உபயோகப் பொருள் போலவும் விற்கப்படுவதைப் பார்க்க முடியும். ஜெய்பீம், அப்படி விற்பதற்காகக் கொண்டு வரப்பட்ட காரைக்குடி அரண்மனை வீட்டுக் கதவு. அதன் தச்சு வேலை நுணுக்கங்களையும், சித்திர வேலைப்பாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான், அப்படியொரு கதவைச் செய்வதற்கு வழங்கப்பட்ட உழைப்பையும் சொல்லுங்கள் என்கிறேன். தமிழக கம்யுனிஸ்டுகள் மறந்து போன இந்தக் கவிதையை ஞாபகப்படுத்துவது எனது கடமை.
தீப்ஸ் நகரின்-
ஏழு கோபுரங்களைக்
கட்டி முடித்தவர் யார்?
மன்னர்களின் பெயர்கள் தான்
வரலாற்றில் நிரப்பப் பட்டுள்ளன.
மாபெரும் சீனப் பெருஞ்சுவரைக்
கட்டி முடித்த மாலை வேளையில்
அதன் கொத்தர்கள்
எங்கே ஓடி ஒளிந்தார்கள்?
ரோம் நகரெங்கும்
சிற்பக் கலையழகு மிக்க
வெற்றி வளைவுகள்!
அவற்றை எழுப்பியவர் யார்...?
கேள்வி: அப்படத்தின் கடைசி காட்சியில் இவையனைத்தும் நிறைவேறியதாக எடுத்துக் கொள்ள முடியாதா? அக்காட்சி ஒரு கவிதை போலத் தானே வடிவமைக்கப்படிருக்கிறது?
பதில்: அப்படம் முழுக்க தொழிற்படும் தொண்டு நிறுவன உள்ளமே அக்கடைசி காட்சியிலும் வெளிப்பட்டதாகத் தான் நான் நினைக்கிறேன். ஆனால், அது தான் நமக்கு சொல்லப்படும் இறுதி நீதியாக இருக்கிறது. இது பழைய கள்ளு. குழந்தைகள் மூலமாக கதையின் நீதியைச் சொல்லும் முறை நாட்டுப்புறக் கதை மரபின் கூறு. விக்டோரியன் நாடகங்களில் மனம்பிறழ்ந்தவர்கள் இதற்குப் பயன்பட்டார்கள். தமிழ்க் காவிய மரபில் அசரீரி இதே வேலையைச் செய்யும். தமிழில் இதற்கொரு பிராமண வடிவம் இருக்கிறது. சிறுவர்களைக் கொண்டு பெரிய கேள்விகளைக் கேட்டு, இறுதியில் எல்லாம் மாயை என்று உணர வைத்தல்: வேதம் புதிது படத்தில் பிராமணச் சிறுவன் பாலுத்தேவருக்கு புத்தி சொன்னது; நாயகனில் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்று குழந்தைகள் கேட்பது. இதே போல ஒரு பிராமண முடிவை ஜெய்பீமிலும் செய்து பார்த்திருக்க முடியும். அந்தக் குழந்தை சந்துருவைப் பார்த்து ‘அப்பா எப்போ வருவார் சார்?’ என்று கேட்டிருந்தால் போதும். மணிரத்தினம் படமாயிருந்தால் இதை நீங்கள் நிச்சயமாய் எதிர்பார்திருக்க முடியும். ஆனால், இங்கே, விரக்தியோடிருக்கும் செங்கேணி சந்துருவை கையெடுத்துக் கும்பிடுவதாக இருக்கிறது; பழங்குடிச் சிறுமி நாற்காலியில் எப்படி உட்கார வேண்டும் என்பதற்கான ஆமோதிப்பை சந்துரு வழங்குவதாக இருக்கிறது. இதைத் தான் தொண்டு நிறுவன மனம் என்கிறேன். அந்தப் படம் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்கிறது - நாங்கள் உனக்கு தொண்டு செய்கிறோம். நீ எங்களுக்கு விசுவாசமாக இரு!
Comments