Friday, 2 October 2015

சாதி சரி, தீண்டாமை தான் தப்பு - காந்தி ஜெயந்தி ஸ்பெசல்!(‘விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘காந்தி காதலர்களுக்கு’ வழங்கப்படும் பூச்செண்டு!  இக்கட்டுரையை முழுமையாகப் படிக்க, புதுவிசை இதழ் 44, செப்டம்பர் 2015 இதழைத் தான் வாங்க வேண்டும்.)

ஆண்டி, மாரி என்ற இரு பாத்திரங்களின் குணங்கள் இப்படியான 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற வகைமாதிரியாகவே அந்நாவல் முழுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
  
'பாதுகாவலன் - பலவீனன்' என்ற உறவு நிலையும்கூட வெளித்தெரியும்படியான நுண்ணதிகார ஒழுங்குகளை உடையது.  அது நிச்சயமாய் சமத்துவத்தை ஆதரிக்கவில்லை; ஏற்றத்தாழ்வுகளாலும் வேறுபாடுகளாலுமே பின்னப்பட்டிருக்கிறது.  ஆனால், 'உயர்சாதி - குடிவேலை செய்யும் சாதி' என்ற உறவு நிலையோடு ஒப்பிடுகையில் 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற உறவு நிலை ஆசுவாசப்படுத்துவதாகவே உள்ளது. 

அதில் பொதிந்துள்ள அதிகாரச் செயல்பாடுகள் புத்திக்கு எட்டாத வகைக்கு, குடிவேலை சாதிகள் மீதான உயர்சாதி அடக்குமுறை கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது.   சமத்துவம் இல்லை என்றாலும் 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற பிணைப்பில் தீண்டாமை இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.  இதனாலேயே உயர்சாதிப் பாதுகாவலனான ஆண்டியும் கீழ்சாதி பலவீனனான மாரியும் எவ்வித மனக்குழப்பங்களும் உறுத்தல்களும் இல்லாமல் மேற்கூறிய அடையாளங்களுக்குள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடிகிறது.
 
வண்ணார் சாதிப்பையனுடன் நட்பாய் இருக்கும் ஆண்டியைப் பார்த்து பேசப்படும் கேலிகள் இவ்விருவரின் உறவு நிலையை இன்னும் அதிகமாய் நமக்கு விளக்க முடியும். 
 
ஆண்டி மீதான கிண்டல்கள் அனைத்தும் 'விவசாயப் பாரம்பரியத்தைச் சார்ந்த அவன் கேவலமான சலவைத் தொழில் செய்யத் தொடங்கிவிட்டான்' என்ற தொனியிலேயே அமைகின்றன. அவனை சலவைத்தொழிலாளி போல பாவித்து நக்கலாக அதட்டவும் அரட்டவும் செய்கிறார்கள்.  'உயர் சாதி' சமூக மரியாதையை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஏவல் தொழில் செய்யும் 'தாழ்ந்த சாதி'யாக மாறிக்கொண்டிருக்கிறான் என்ற மறைமுக எச்சரிக்கையை அவனுக்கு விடுகிறார்கள்.  'தாழ்ந்த சாதி'யோடு அவனுக்கு இரத்த உறவு இருப்பதாய் கிண்டல் செய்கிறார்கள்.  கீழானவர்களின் அசுத்த பழக்க வழக்கங்கள் அவனுக்கும் தொற்றிக் கொண்டதாய் ஏளனம் செய்கிறார்கள்.

ஆண்டி, மாரியின் மீது காட்டும் பிரியத்தை பாலியல் கோளாறுகளைக் கொண்ட திருமணவுறவுமுறையாகச் சொல்லியும் கேலி பேசப்படுகிறது. 
 
இந்தக் கிண்டல் ஆண்டி இறந்து போன தருணம் வரையிலும் வெளிப்படுகிறது.  ஆண்டி இறந்த சூழலில், மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  அதனால் உயர் சாதி சுடுகாட்டிற்கு அவனது உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் எழுகிறது.  எப்படியாவது அவனது உடலை அந்தச் சுடுகாட்டிற்கே எடுத்துச் செல்வது தான் மரியாதை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 
அந்த இக்கட்டான தருணத்திலும், ஆண்டி மாரியோடு கொண்டிருந்த நட்பை சுட்டிக்காட்டி, ஒரு உயர்சாதிக் குரல், ஆண்டியை வண்ணார்களின் சுடுகாட்டில் கூட புதைக்கலாம் என்று ஏளனம் பேசுகிறது.  இந்த ஏளனக் குரல் உடனடியாக அடக்கப்படுகிறது என்றாலும், அதன் பின்பு ஒரு சாகச மனநிலையோடு ஆண்டியைத் தங்களது சமூகச் சுடுகாட்டிற்கே எடுத்துச் சென்று புதைத்துத் திரும்புவதில் தான் 'சாதி சமூகத் தன்னிலை' பெருமிதம் கொள்கிறது.

ஆண்டியின் மீது வெளிப்படுத்தப்படும் இந்த ஏளனங்கள் 'தாழ்ந்த சாதியினர்' குறித்த உயர்சாதி அணுகுமுறையின் இன்னொரு கோணத்தை நமக்குக் காட்டவல்லவை.  உயர் சாதி மனப்பான்மைகளை இப்படி பட்டியலிடலாம்:

'தாழ்ந்த சாதியினர் உடல் நாகரிகம் இல்லாதவர்கள்; ஏவலுக்குக் கட்டுப்பட்டவர்கள்; அவர்களின் தாழ்நிலை அன்றாட வாழ்க்கை நெறிகளோடு நேரடியான தொடர்புடையது; அவர்களோடு புழங்குகிற யாரையும் கூட அத்தாழ்நிலை ஒட்டிக்கொள்கிறது; 'உயர்சாதியாய்' நீடித்ததிருப்பதற்கான முதல் விதி அவர்களிடமிருந்து விலகியிருப்பது; தீண்டாமை என்பது உடல் ரீதியிலான விலகல் மட்டுமல்லாது இரத்த உறவு, திருமணவுறவு, சடங்குப் புழக்கம் போன்ற பண்பாட்டுக் காரணிகளில் கடைபிடிக்கப்படும் விலகலையும் உள்ளடக்கியது.' 
 
இத்தகைய உயர்சாதி மனோபாவங்களிலிருந்தே ஆண்டியின் மீதான நையாண்டிகள் வெளிக்கிளம்புகின்றன.  இத்தகைய விமர்சனங்களுக்கு ஆண்டியிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. 
 
மாரியின் மீது வன்முறை ஏவப்படும் பொழுது அதனைத் எதிர்க்ககூடிய பாதுகாவலனாக மாற முடிகிற ஆண்டியால் தனக்கெதிரான ஏளனப் பேச்சுகளுக்கு பதில் பேச முடியவில்லை.  அத்தகைய பேச்சுகளை எதிர்கொள்வதை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவுக்கு தவிர்க்கவே விரும்புகிறான்.  சிறுவயது ஆண்டியால் மட்டுமல்ல, வளர்ந்து 'குடும்பனாக' மாறி நிற்கும் ஆண்டியால் கூட இத்தகைய ஏளனங்களுக்கான எதிர்வினைகளை, செயலளவிலோ அல்லது பேச்சளவிலோ உருவாக்க முடியவில்லை.  அல்லது அதை எப்படிச் செய்வது என்பதை அவன் அறியாமல் இருந்தான்.

சாதி வேறுபாடு குறித்து ஆண்டியிடம் வெளிப்படும் இவ்விருவேறு நிலைப்பாடுகள் (அதாவது வன்முறையான சாதித் துவேஷத்திற்கு எதிர்ப்பும், ஏளனம், நையாண்டி, சீண்டல் போன்ற சாத்வீக சாதித் துவேஷத்திற்கு மௌனமும்) அக்கதாபாத்திரத்தின் வார்ப்பை இன்னும் தெளிவாக விளக்கவல்லவை.


  
ஆண்டி சாதியமைப்பிற்கு எதிரானவன் அல்ல; ஆனால், சாதியமைப்பைக் காரணம் காட்டி சக மனிதர்களை உடல் ரீதியாய் துன்பப்படுத்துவதற்கு நிச்சயமாய் எதிரானவன்.  அதே நேரம், நிலவுடமைச் சமூகத்தின் விழுமியங்களை முழுமையாக உள்வாங்கி அதுவாகவே மாறிப்போனவன். அவ்விழுமியங்களில் ஒன்றாகவே 'சாதியமைப்பையும்' விளங்கிக் கொண்டிருக்கிறான். 
 
சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளில் பெரிய கோளாறுகள் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.  ஒரு வகையில் அந்தப் பாகுபாடுகள் சரி தான் என்று கூட அவன் வாதிடுவானாக இருக்கலாம்.  ஆனால், அந்த ஏற்றத்தாழ்வுகளும் மனிதாபிமானத்தோடு கடைபிடிக்கப்பட வேண்டுமென்பது தான் அவனுடைய கோரிக்கையாகத் தெரிகிறது.  அவனுடைய மனிதாபிமானம் 'கருணை' என்ற ஒற்றைக் காரணியில் எழுப்பப்பட்டிருக்கிறது.  உயிர்கள் அனைத்திற்கும் வாழும் உரிமையை வழங்கும் கருணை அது.  பசியோடிருப்பவருக்கு உணவு தரும் கருணை.  அவரவர் தத்தம் பொருளியல் தரத்தை உயர்த்திக் கொள்ள சரி சமமான வாய்ப்புகளை வழங்கும் கருணை. 
ஆனாலும், இந்த உலகம் ஏற்றத்தாழ்வுகள் நிரம்பியது தான் என்பதையும், இந்த வேற்றுமைகள் சமூக மரியாதையிலும் அந்தஸ்திலும் பிரதிபலிக்கின்றன என்பதையும், அவரவர் அவரவர்க்கு விதிக்கப்பட்ட சமூகப் பாத்திரத்தை வகிப்பதே நியாயம் என்பதையும் ஆண்டி முழுமையாக நம்புகிறான். சாதியமைப்பு இயல்பானது என்பதே அவனது உட்கிடக்கை.

'சாதி வேற்றுமைகள் இயற்கையானவை, எனவே சரியானவை' என்று விளங்கிக் கொள்ளும் நபர்கள் சாதி வெறியர்களாகவோ அல்லது அடக்குமுறையாளர்களாகவோ அல்லது வன்முறையாளர்களாகவோ தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.  அவர்களில் ஆண்டி போன்ற கணிசமான மிதவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
 
இந்த மிதவாதிகள், சாதி வன்முறையாளர்களிடமிருந்து 'தாழ்ந்தசாதி பலவீனர்களைக்' காப்பாற்றும் மிக முக்கியமான பொறுப்பை தன்னிச்சையாகவே வரிந்து கொள்கிறார்கள்.  அப்பணியை கர்மசிரத்தையாய் செய்யவும் செய்கிறார்கள்.  இவர்களுக்கு, 'சாதி வேற்றுமைகள்' என்ற ஒழுங்கமைப்பில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; அதை நடைமுறைப்படுத்துவதில் தான் பாதகங்களைப் பார்க்கிறார்கள்.  இந்தப் பாதகங்களைத் தடுப்பதையும் களைவதையுமே தங்கள் பொது வாழ்க்கையாக மாற்றிக் கொள்கிறார்கள். 
 
சாதியை நம்பக்கூடிய இத்தகைய மிதவாத 'பாதுகாவலர்கள்' சிக்கலானவர்கள்!  சாதிய அடக்குமுறையையும், சாதிய வாழ்க்கையையும் அவர்கள் மிகத் தெளிவாக வேறுபடுத்தி அறிந்திருக்கிறார்கள்.  சாதிய வாழ்க்கை அவர்களுக்கு மரபு, பண்பாடு, ஒழுங்கமைப்பு!  சாதிய அடக்குமுறை விதிமீறல்!  இப்படி யோசிக்கும் மிதவாதிகள் சாதிய அடக்குமுறைக்கு எதிராக உருவாக்கும் சொல்லாடல், நிறைய தருணங்களில் சாதியமைப்பிற்கு எதிரான சொல்லாடலாகக் கற்பிக்கப்படுகையில் ஆரம்பிக்கிறது சிக்கல்.

மாரி ஏன் தன்னைப் போல் இல்லை? மாரியோடு தான் ஏன் சரிசமமாகவும், நெருக்கமாகவும் பழகக்கூடாது என்ற கேள்விகள் ஆண்டிக்கு எந்தத் தருணத்திலும் தோன்றுவதில்லை.  மாரியோடு சரிக்கு சமமாய் பழகாதே என்று பிறர் சொல்லும் போது அதை மீற வேண்டுமென்ற ஆவல் தான் அவனை நிறைக்கிறதே தவிர அப்படி ஏன் சொல்லப்படுகிறது என்ற கேள்வியை அவன் எழுப்புவதில்லை.  ஆண்டியின் இத்தகைய மனநிலை புதிர் நிறைந்ததாக அல்லது சரிவர வார்க்கப்படாதது போலத் தோன்றலாம். ஆனால், அது தான் யதார்த்தம் என்பதே உண்மை. 
 
தாழ்ந்த சாதிக்காரனோடு நட்போடு பழகாதே என்று பலரும் சொல்வதை ஆண்டி ரகசியமாய் மீறுவது சாதியமைப்பிற்கு எதிரான நிலைப்பாட்டினால் அல்ல.  அவனது மீறல் கருத்து நிலையினால் உந்தப்பட்டது அல்ல; அவனை இயக்கிக்கொண்டிருப்பது சக மனிதர்கள் வலியுறுத்தும் ஏதொன்றையும் தலைகீழாய் நிகழ்த்திப் பார்க்கும் சாகச மனநிலை மட்டுமே. ஆனால், அதே சமயம்  மரபையும் பாரம்பரியத்தையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நம்பவேண்டும் என்பதில் ஆண்டி போன்ற கதாபாத்திரங்கள் உறுதியாகவும் உள்ளன. அவை, கடந்த காலத்தின் மீது பயபக்தியையும் நிகழ்காலத்தின் மீது அவநம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.  'சாதித் துவேஷங்களை' கண்கொண்டு பார்க்கும் ஒவ்வொரு முறையும் இக்கதாபாத்திரங்கள், 'சாதி' மரபான புனிதம் என்றும் அதில் கலந்துள்ள துவேஷம், நிகழ்காலக் கோளாறு அல்லது கசடு என்றுமே விளங்கிக்கொள்கின்றன.