எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி? 2016 தேர்தலின் ஆகப்பெரிய பிரச்சினையே ‘சூழ்ச்சி’ தான் என்று மாறிவிட்டிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியைச் சொன்னது போக, நம் எல்லோருக்குள்ளும் ஒரு ‘ராஜதந்திரி’ ஒளிந்து கொண்டிருக்கிறானோ என்று இப்பொழுது சந்தேகம் வருகிறது. வழக்கமாய் இந்தத் தேர்தல் சூழ்ச்சிகளை திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே செய்து வருவதாகப் பேச்சிருக்கும். ஒருவரை ஒருவர் சேறு வாரி இறைப்பதற்கும், சிக்கலில் மாட்டி விடுவதற்கும், அதன் மூலம் பலவீனப்படுத்துவதற்கும் சூழ்ச்சிகள் நடப்பதாக விளக்கங்கள் சொல்லப்படும் (விளக்கங்கள் மட்டும் தான் சொல்லப்படும்!). புலனாய்வுப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தான் நமக்கு இந்தத் தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பவை. நாம் சூழ்ச்சிக் கதைகளின் வாசகர்களாக மட்டுமே தான் இருந்தோம். ஆனால், இந்த முறை, சூதாட்டத்தில், வாக்காளர்களாகிய நாமும் ஒரு கையாகச் சேர்ந்திருக்கிறோம். வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பணம் எந்த வழிகளில் பயணம் செய்கிறது; யார் யார் எவ்வளவு பணத்தை செலவு செய்ய முடிவு செய்தி...