முன் எச்சரிக்கை: (இதை யாரும் புனைவாக நம்பப் போவதில்லை என்றாலும், இதை எழுதியவன் என்ற முறையில் 'இது முழுக்க முழுக்க கற்பனை! இதில் வரும் பெயர்கள் எந்தவொரு தனிநபரையோ, நிறுவனத்தையோ குறிப்பிடுவன அல்ல! சொல்லப்போனால் இதில் வரும் மாடு, பசு மாடு அல்ல; ஏன் மாடே இல்லை' என்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.) 1 1994ல், ஜேயென்யுவில் ( Jawaharlal Nehru University) தமிழ் ஆய்வாளர் மன்றம் ஆரம்பித்த பொழுது, மாட்டுக்கறி சாப்பாட்டோடு தான் ஆரம்பித்தோம். (இந்த '......தோம்' யார் என்பதற்கான விளக்கம் பின்னால் வந்து கொண்டிருக்கிறது.) அந்நாட்களில் எங்களுக்குள் (அதாவது '....தோம்') ஒரு கலந்து கட்டிய ஆக்ரோஷம் இருந்தது. அம்பேத்கரின் மறு பிரவேசம், தலித் அரசியல், பாபர் மசூதி இடிப்பு, அதிலும் டிசம்பர் ஆறாம் தேதி அதைச் செய்தது, மண்டல் கமிஷனுக்கு எழுந்த எதிர்ப்புகள், ஜவஹர்லால் நேருவின் கனவு என்று சொல்லி ஜேயென்யுவிற்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் தந்த அதிர்ச்சி என்று ஒரு வித நிலைகொள்ளாமை எங்களை ஆக்கிரமித்திருந்தது. அது ஒரு கொந்தளிப்பான மனநிலைகளின் காலம். ...