தர்மு, உங்களுடைய ‘ஆவுடையாள் கேட்ட பிச்சை’ யைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன். நான் வாசித்தது சரி என்றால், இந்திய ஞான மரபில் அமானுஷ்யம் பற்றி நடந்த உரையாடலைக் கவனப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் மிஸ்டிசிசம் என்று மேம்போக்காக இதைப் புரிந்து கொள்கிறார்கள். கலைகளின் ஆதார சுருதியே இந்த அமானுஷ்யம். கலையை புத்திபூர்வமாக அணுக முற்பட்ட மாடர்னிஸத்தை வீழ்த்துவதற்கு இந்த அமானுஷ்யத்தையே லத்தின் அமெரிக்க எழுத்துகள் பயன்படுத்திக் கொண்டன. பகுத்தறிவுவாதத்திற்கும் கலைக்கும் என்றைக்குமே ஒத்து வந்திருக்கவில்லை என்பதை பெளத்தம் முதல் திராவிட இயக்கம் வரைக்கும் நம்மால் பார்க்க முடியும். கலை மனம் பகுத்தறியும் மனதை குறைத்தே மதிப்பிட்டிருக்கிறது. உலகை தட்டையாகப் புரிந்து கொள்வதாகக் கலை, அறிவியலை கண்டித்தே வந்திருக்கிறது. இதையெல்லாம் நீங்களே அறிவீர்கள். ஆனால், உங்களது ஆவுடையாள் கேட்ட பிச்சை, ஒரே நேரத்தில் அமானுஷ்யத்தையும் பகுத்தறிவையும் சமமாகப் பாவித்துப் பேசுவதாக நினைக்கிறேன். அமானுஷ்யத்தை நீங்கள் மறுத்தத்து போல் தெரியவில்லை. ஆனால், ஏற்...