Saturday, 14 January 2017

ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்

(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.)மாடும் மாதொருபாகனும்!
பெருமாள்முருகனின் மாதொருபாகனுக்கு என்ன நடந்ததோ அது தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கும் நடக்கிறது.
பல்லைக்கடித்துக் கொண்டு, இரண்டையும் ஆதரிப்பது தவிர எனக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால்,
மாதொருபாகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இது தான் முக நூல் பதிவு.  இனி வருவது அது சார்ந்த உரையாடல்:. செல்லபெருமாள்: 

மாதொருபாகனில் வெளிப்பட்டது சுயநல நுண் அரசியல். ஜல்லிக்கட்டில் வெளிப்படுவது பண்பாட்டு அரசியல்.

பிலவேந்திரன்:

 நுண் அரசியல் , ‘சுயநல நுண்ணரசியல்’ னா என்னங்க சார்?

ஏர் மகாராசன்:

மாதொருபாகனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் தான் மாடு தழுவலை ஆதரிக்கிறார்கள்.

டி. தருமராஜ்:

ஏர் மகாராசன், உங்களுடைய கருத்துகளுக்கு எதிரான வாதங்கள் இங்கேயே நடைபெறுவதைக் கவனியுங்கள். உலகம் என்பது நீங்கள் மட்டும் அல்ல.

டி. தருமராஜ்:

மாதொருபாகனில் நுண் அரசியலைப் பார்ப்பதும் ஜல்லிக்கட்டில் பண்பாட்டு அரசியலைப் பார்ப்பதும் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எனக்கு இரண்டுமே இரண்டு நிகழ்வுகள். வெளிப்பாட்டு நிகழ்வுகள். இரண்டையும் தடை செய்வதற்கு தான் அதிகாரம் விரும்புகிறது. முதலாவது, தனிமனித கருத்து சுதந்திரம் என்றால், இரண்டாவது, ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சுதந்திரம். இரண்டு சுதந்திரங்களும் முக்கியமானவை. அந்த வகையில் தான் மாதொருபாகனையும், ஜல்லிக்கட்டையும் ஆதரிக்கிறேன்

ஆனால், இப்படியே எத்தனை காலத்திற்கு கோளாறுகளையே ஆதரித்துக் கொண்டிருப்பது என்பதை நாம் நமக்குள்ளாகவாவது பேசியாக வேண்டும். Lauri Honkoவின் Folklore Process படி, வழக்காறுகளின் முதல் வாழ்க்கை, இரண்டாம் வாழ்க்கை என்றெல்லாம் பார்த்திருக்கிற நமக்கு, ஜல்லிக்கட்டின் முதல் வாழ்க்கை, இரண்டாம் வாழ்க்கை விளங்குவதில்லை. வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக போராடியே வாழ்க்கை முடிந்து போகிறது. அதாவது, அடிப்படையான பண்பாட்டு உரிமைகள், கருத்துச் சுதந்திரங்கள் போன்றவைகளுக்காக போராடுவதே நமது தலைவிதியாக இருக்கிறது. அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு வழியில்லை.

புஷ்ப நந்தினி:

செம சார். இப்படியே எத்தனை காலத்திற்கு கோளாறுகளையே ஆதரித்துக்கொண்டிருப்பது.

. செல்லபெருமாள்

தனிநபர் கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையில் பண்பாட்டைச் சிறுமைப்படுத்துவது ஒருவித நுண் அரசியல்.

டி. தருமராஜ்:

இதையே தான் மிருகநல வாதிகளும் சொல்கிறார்கள் - பண்பாட்டுச் சுதந்திரம் என்ற பெயரில் காருண்யத்தை சிறுமைப்படுத்துவது ஒரு வித அராஜக அரசியல் என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு வாதங்களூமே என்னைப் பொறுத்த வரையில் தவறு. தனி நபர் கருத்துச் சுதந்திரத்தில் பண்பாட்டிற்கும், பண்பாட்டு வெளிப்பாட்டில் மானுடம் தழுவியக கருத்துகளுக்கும் இடமில்லை. ஏனென்றால் அவை அடிப்படை உரிமைகளைக் கேள்வி கேட்கினறன.

. செல்லபெருமாள்

சுயநல நுண் அரசியலை உணர்வது எளிது. ஆனால் அதை பொது வெளியில் ஆதாரங்களோடு விளக்க இயலாது

டி. தருமராஜ்:

அப்படியானால், நுண் அரசியலில் சுய நலத்தைக் காண்பது ஆதாரமற்ற, அபிப்பிராயம் என்று சொல்ல வருகிறீர்களா?

. செல்லபெருமாள்

ஆதாரம் இருக்கிறது. வெறும் அபிப்பிராயம் அல்ல.

டி. தருமராஜ்:

 //ஆதாரங்களோடு விளக்க இயலாது// இதனால் தான் அப்படிக் கேட்டேன்.
ஒரு பிரதியை 'சுய நலக் காரணங்களைக் காட்டி' கைகழுவி விட முடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை. பெருமாள் முருகன் விளம்பரத்திற்காக அல்லது புத்தக விற்பனைக்காக அல்லது வேறு பொருளாதார லாபங்களுக்காக அதைச் செய்தார் என்று சொல்வதன் மூலம் நாம் தார்மீக நிலைப்பாட்டிலிருந்து விலகி நிற்க முடியுமா?

. செல்லபெருமாள்

தார்மிக நிலைப்பாடு ஒற்றைத்தன்மையது அல்ல

டி. தருமராஜ்:

இந்தப் பிரச்சினையில் நான் சொல்ல விரும்புவதும் இது தான். தார்மீகத்தை பன்மைத்தன்மையுடையதாகச் சொல்லிச் சொல்லி, பிரச்சினைகளுக்குள் தராதரங்களை ஏற்படுத்தியதைத் தவிர நாம் வேறொன்றையும் செய்திருக்கவில்லை. இதோ இப்பொழுது ஜல்லிக்கட்டு பிரச்சினையைக் கூட ஒரு சிறு பிரச்சினையாகத் தான் நாம் பார்க்க விரும்புகிறோம். இதன் பின்னால் இயங்கக் கூடிய இந்தியக் காலனிய மேலாண்மை, நீதி மன்றங்கள் பண்பாட்டு ஒழுங்கு மன்றங்களாக மாறத் துடிக்கும் தன்மை, இந்தியாவின் வெளிச் சொல்லப்படாத பண்பாடுக் கொள்கையின் ஏதேச்சதிகாரம் போன்றவற்றை நாம் பேச முன்வருவதில்லை. ஏனென்றால், நமக்கு நம்மைப் பார்த்தே பயம்

நாம் காப்பாற்ற விரும்புவது ஜல்லிக்கட்டை மட்டும் தான்; மட்டுமே தான். அதற்கான தார்மீகத்தை அல்ல. தார்மீகம் என்னைப் பொறுத்தவரையில் ஒற்றைத் தன்மையானது தான். எந்தவொரு பண்பாட்டின் மீது இப்படியான அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் நான் எதிர்க்கத் தான் செய்வேன். அதே போல எந்தவொரு தனிமனிதரின் சுதந்திரம், பண்பாடு போன்ற காரணங்களைச் சொல்லி மறுக்கப்பட்டாலும் நான் எதிர்க்கவே செய்வேன். அது எனது தார்மீகம். தார்மீகத்தில ஒற்றைத்தன்மை இல்லை. மனித உரிமைகளில் என்ன பன்முகத்தன்மை இருந்து விட முடியும்?

. செல்லபெருமாள்

தார்மீகம், மனித உரிமை போன்றவை பன்மைத்தன்மை உடையவை என்பது அங்கீகரிக்கப்பட்டால் யாரும், எதுவும் யார் மீதும் எதன்மீதம் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள்.

டி. தருமராஜ்:

சிலருக்குக் கூடுதலான மனித உரிமை, இன்னும் சிலருக்கு அதற்கான தகுதியே இல்லை, இன்னும் சிலர் உரிமைகளை விரும்புவதே இல்லை என்ற பன்மைத்தன்மை தானே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம். அதே போல தார்மீகம் சிலரின் கடமை என்பது போலவும், பலருக்கு அது இல்லவே இல்லை என்பது போலவும் சொல்லப்படும் பன்மை தானே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம்

இந்த தார்மீக, மனித உரிமை ஏற்றத்தாழ்வுகளை 'பன்மை' என்று சொல்லி தங்களையும் பின்னைநவீனர்களாகக் காட்டிக் கொள்ளும் வேடிக்கை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நாம் மறுக்க வேண்டிய மரபு, தார்மீகத்தையும் மனித உரிமையையும் பன்மையென்று போதிப்பதைத் தானே! இதில் நீங்கள் சொல்லும் ஆதிக்கமில்லா சூழல் எங்கிருந்து வருகிறது? வேத காலத்தில் யாரும் யார் மீதும ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதைச் சொல்கிறீர்களோ?

. செல்லபெருமாள்

உரிமையின் தன்மை என்பதுடன் அதன் எண்ணிக்கை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை இணைக்காமல் அணுக வேண்டுகிறேன்.

டி. தருமராஜ்:

உரிமையின் தன்மையை எண்ணிக்கை அளவைக் கொண்டும், மனிதர்களின் பின்புலத்தைக் கொண்டும் தீர்மானிப்பது தானே இங்கு பன்மைத்துவமாகச் சொல்லப்படுகிறது. அந்த பன்மையை மறுப்பது தானே நமது ஒரே வேலையாகவும் இருக்கிறது. ஜல்லிக்கட்டை தடை செய்ய விரும்புகிறவர்கள் தங்களை காருண்யம் நிரம்பியவர்களாகக் கருதிக் கொள்வது தான் பிரச்சினையே தவிர, காருண்யத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஜல்லிக்கட்டை நியாயப்படுத்துவதற்காக உயிர்களின் மீதான கருணையை மறுத்துவிட முடியாது. ஆனால், அதே நேரம், அந்தக் காருண்யத்தை யார் யார் மீது அதிகாரமாக பிரயோகிக்கிறார்கள் என்பது தான் சிக்கலே. ஜல்லிக்கட்டில் பிரச்சினை இல்லாமல் இல்லை; ஆனால், அதை அந்தப் பண்பாடே சரி செய்து கொள்ள வாய்புகளை ஏற்படுத்த வேண்டுமேயொழிய, வெளியிலிருந்து நீதிமன்றம் மூலமும், சட்டம் மூலமும், ராணுவத்தின் மூலமும் சரி செய்ய முயல்வது தான் நாம் எதிர்க்க வேண்டியது.

. செல்லபெருமாள்

இதைத்தான் நானும் சொல்ல விரும்புவது.

டி. தருமராஜ்:

ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்தது, பன்மை வேண்டும் என்பதும்; தார்மீகம் - மனித உரிமைகள் ஒற்றைத்தன்மை உடையவை அல்ல என்பதும் தான். தார்மீகத்தை பன்மையாக மாற்றுவது எவ்வளவு ஆபத்தானது என்பதையே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

பகத் வீர அருண்:

ஒரு சில சமூகங்கள் ஆளுமை செலுத்தும் நிகழ்வை, ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமாக பொதுமை படுத்துவதும் ஆதிக்கம் தானே? தலித் அரசியல் சார்ந்து சிலர் ஜல்லிக்கட்டின் மீது எதிர்வினை ஆற்றுவதும், இந்நிகழ்வு அனைத்து தமிழ்ர்களுக்குமான விழாவாக ஜனநாயகப்படுத்தாததினால் தானே.

. செல்லபெருமாள்

உலகப்பொதுமையம் vs பண்பாட்டுச்சார்பிசைவு.

டி. தருமராஜ்:

எல்லா தேசியப் பண்பாடுகளின் தன்மையும் இது தான்.  இந்தப் பண்பாட்டு நிகழ்வுகளை ஜனநாயகப்படுத்துவது முழுக்க முழுக்க அந்தத் தேசியப் பண்பாட்டின் கடமை. ஆனால், இந்தியா என்ற நாடு தனியான தேசியப் பண்பாடு இல்லாதது. இந்தியாவை ஒன்றிணைப்பது அதன் சட்டமும், நீதி, காவல் போன்ற சமூக நிறுவனங்களும் தான். ஏறக்குறைய ஒரு செக்குலர் தன்மையால் மட்டுமே செல்லுபடியாகும் தேசியம் இது.  

இந்த தேசியம் தன்னை பண்பாட்டு தேசியமாகக் கற்பனை செய்வதன் கொடூர விளைவு தான் நம்மீது திணிக்கப்படும் இந்தியக் காலனியம். நமது பண்பாடு அப்படியானது அல்ல. தமிழ் என்ற தேசியப் பண்பாடு பல வட்டாரத்தன்மைகளிலிருந்து உருவானது. அதை நாம் தான் பேசித் தீர்க்க வேண்டும். அதனால் தான் ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை நாம் நமக்குள் விவாதிப்போம் என்கிறோம். அதில் இந்தியர்களுக்கு எந்த இடமும் இல்லை என்றும் சொல்கிறோம். இந்தியர்கள் இது தங்களது வேலை என்கிறார்கள். இதைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டு காதலர்கள் (அதாவது அதிகாரம் செய்யும் பிரிவினர்) இதை எக்காலத்திலும் மாற்ற மாட்டோம் என்கின்றனர். இது தான் நமது சிக்கல். காலனிய சமூகங்களில் இயல்பான வளர்ச்சி இருக்காது என்பதற்கு இதுவெல்லாம் உதாரணங்கள்.

பகத் வீர அருண்:

முழுமையாக ஏற்கிறேன் சார். சாதிய ரீதியாக துண்டாடப்பட்ட தமிழ் சமூகத்தில், அவ்வாரான விவாதம் மிக கடினம் என்றே தோன்றுகிறது.

டி. தருமராஜ்:

ஆனால், அதை நோக்கி இந்தச் சமூகத்தை நகர்த்துவது தான் நமது வேலையாக இருக்கிறது. இந்தச் சமூகம் இது போல் போடும் வேசங்களை அப்போதைக்கப்போது கலைப்பது தான் நமது இப்போதைய வேலை. ஆனால், அதே நேரம் இந்திய தேசியத்தை 'பண்பாட்டு தேசியமாக' மாற்ற விரும்பும் நபர்களுக்கு எதிரான பெரும் போரையே நிகழ்த்த வேண்டியதும் இருக்கிறது.

பகத் வீர அருண்:

அருமை சார்.

பகத் வீர அருண்:

மாதொருபாகன் விஷயத்தில் தனி மனிதர் கருதுரிமைக்காக நிற்பது அவசியமே. ஆனால் அறம் சார்ந்து அப்படைப்பின் உள்ளடக்கம் ஏற்புடையதல்ல என்று கருதுகிறேன்.

டி. தருமராஜ்:

ஒரு படைப்பின் உள்ளடக்கம் ஏற்புடையதா இல்லையா என்பது இலக்கியக் கேள்வி கூட இல்லை. அது மிக எளிய வாசக அபிப்பிராயம். அதை விமர்சனமாக வளர்த்தெடுத்து வெளியிட்டாலும் அதன் மூலம் அப்படைப்பை தடை செய்யவெல்லாம் முடியாது. நக்கீரனை எரித்த சிவனைப் போலத்தான் நமது இலக்கிய நடவடிக்கைகள் இருக்கின்றன என்றால் அது கேவலம் தான்.

ராக்கு ராஜேஸ்வரி:

ஜல்லிக்கட்டில் ஒட்டுமொத்த தமிழரின் பண்பாடு மறைந்துள்ளதா? இல்லை தனிப்பட்ட ஒருவரன் பண்பாடு மறைந்துள்ளதா என்பதைப் புரந்து கொள்ளமுடியல சார்.

டி. தருமராஜ்:

ஜல்லிக்கட்டில் பண்பாடு மறைந்திருக்கிறதா? அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானதா அல்லது குறிப்பிட்ட சில குழுக்களுக்கானதா? என்ற கேள்விகளையெல்லாம் கேட்பதற்கு முன் - ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு மரபின் இன்றைய பொருத்தப்பாடு என்ன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். பீட்டா, இந்தியா, உச்ச நீதி மன்றம், அரசியல்வாதிகள், தடை போன்ற எந்தவித இடையூறுமில்லாமல் இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இந்த கேள்விக்கான பதில் எல்லோருக்குமான பதிலாகவும், அறிவுபூர்வமானதாகவும், நவீனமானதாகவும், பகுத்தறிவு சார்ந்ததாகவும் இருக்கும் பட்சத்தில் அந்தப் பதிலின் படி நாம் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்


நாம் தமிழ்ப்பண்பாடு என்று சொல்கிற எல்லாமே அதன் ஆரம்பத்தில் ஏதாவதொரு வட்டாரத்தின் பண்பாடாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த வட்டாரத்தன்மையைத் தான் நாம் பின்னாட்களில் தமிழ் என்ற பொதுத்தன்மையாக வளர்த்தெடுத்திருக்கிறோம். ஜல்லிக்கட்டையும் அந்த வகையில் மறுபரிசீலினை செய்யத்தான் வேண்டும். அதற்கான வாய்ப்பைத் தான் நாம் தொடர்ந்து இழந்து நிற்கிறோம்.