Wednesday, 20 December 2017

வெரோணிக்காள் ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டாள்!

1
நாவலில் தான் நீளக் கதைகளை எழுத முடிகிறது. நீளம் அவளுக்குப் பிடித்த நிறம்.
கன்னியாகுமரி போய் முதன் முதலாய் கடலைப் பார்த்த பொழுது அவளுக்கு வயது பனிரெண்டு. கடல் பார்த்த மறுகணமே எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள். கடல் அன்றைக்கு அத்தனை நீளமாக இருந்தது. 

அத்தனை அகலமான நீலத்தை அவள் கடலில் தான் பார்த்தாள். கடல் பார்த்து வந்த மறு தினமே கோணங்கியின் கோவில்பட்டி முகவரிக்கு, 'உப்பு நீலமாக இருக்கிறது!' என்று ஒருவரிக்கடிதம் எழுதியிருந்தாள். அவள் எழுதாமல் மறைத்த அடுத்த வரி, ' நீள நாவலொன்று எழுதப்போகிறேன்'. 
வெரோணிக்காவிற்கு சின்ன கண்கள். பார்த்தால் தெரியாது. அவள் முகத்தைப் பார்க்கிறவர்கள் அவள் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். உண்மையில், அவள் அப்படியெல்லாம் சிந்திக்கிற ஆளே இல்லை. சின்ன கண்களைக் கொண்ட பெரிய பெண் அவ்வளவு தான்.
நாவல் தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்த பின்பு தான், நாவலுக்கும் நீளத்திற்குமான பந்தங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குப் புலப்படத் தொடங்கின. 
ஒரு நாவல் முதலில் வாசகர்களின் கண்களை நீலமாக்குகிறது. அதன் பின் நாக்கில் ருசியாக படிந்து விடுகிறது. நாவல் பிரியர்களை ரொம்பவும் எளிதாய் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவர்களுடைய நாக்கு, இத்தாலிய பெனடிக்ட் குருமடத்து ரோஜா மலர்களில தடவப்பட்ட சயனைடு போல, நீலம் பாரித்திருக்கும்.
பாளையங்கோட்டையில் கோடை தொடங்கியது என்றால் நாவல் வதைபடும். மேட்டுத்திடல் சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக வாசலில், திருச்செந்தூரிலிருந்து வரும் ஒரு பாட்டி, கூடை நிறைய நாவலோடு உட்கார்ந்திருக்கும். எல்லாமே சுட்ட நாவல்கள். காற்படி, அரைப்படி என்று அளந்து வாங்கிக் கொள்ளலாம். நாவல்களை அளந்து, தடித் தடிப் புத்த்தகங்களின் பக்கங்களைக் கிழித்து அதில் பொதிந்து தரும். 
அந்தப் பாட்டியிடம் தான் வெரோணிக்காள் எப்பொழுதும் நாவல் வாங்குவாள். நாவலை விடவும், அந்தப் பாட்டி பொதிந்து தருகிற பக்கங்களில் தான் அவளுக்கு ஆர்வம். பாட்டிக்கு நூலக ஊழியர்களோடு ரகசியத் தொடர்பு இருந்தது. பாட்டி கிழிக்கிற புத்தகங்கள் பெரும்பாலும் சாண்டில்யனும், நா. பார்த்தசாரதியும் எழுதியவை. ’கிழிக்க ஏதுவாய் புத்தகம் எழுதுறது ஒரு கலை, பாப்பா!' 
அத்தி பூத்தாற் போல, ஜெயகாந்தனும் அகிலனும் கூட கிடைப்பார்கள். வெரோணிக்காள் நாவலை வாங்கிய கையோடே அந்தப் பக்கங்களையும் வாசிக்க ஆரம்பித்து விடுவாள். நாவலின் நீலச்சாயம் பட்டு பாதி வரிகள் அழிந்து போயிருக்கும். ஆனாலும், அது எந்த நாவலின் கிழிக்கப்பட்ட பக்கம் என்று கண்டுபிடிப்பது அவளுக்குப் பிடித்த புதிர் விளையாட்டு. 
இப்படித்தான் ஒரு முறை, கிழிந்த ஒற்றைத் தாளில் ஜே. ஜே. என்ற ஆள், 'சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டாளா?' என்று கேட்டதை வாசித்தாள். அதற்கப்புறமாகத்தான் அவள் நாகர்கோவில் மணிக்கூண்டு ஜங்சனில் நின்ற புளியமரத்தையும் ஒரு எட்டு போய்ப் பார்த்து வந்தாள். அந்த மரத்தடியில் தான் ஜே. ஜே. ஜவுளி வியாபாரம் செய்ததாக அவளுக்குச் சொல்லியிருந்தார்கள்.
புளியமரம் தான் அவளுக்குப் பிடித்திருந்தது. நல்ல நாவல் முதலில் பிடிக்க வேண்டும் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு நாவல், நல்ல நாவலா இல்லையா என்பதை அவளால் தொட்டுப் பார்த்தே சொல்ல முடியும். தொட்டதும், விரல்களில் படிய வேண்டும். படிந்தால் நல்ல நாவல், இல்லையென்றால் குப்பை.


2

வெரோணிக்காள் கண்ணாடி முன் நின்று தான் ஆடை மாற்றுவாள். ஆளுயுரக் கண்ணாடி. 
அன்றைக்கும் அப்படித்தான். என்ன கிழமை, தேதி என்றெல்லாம் ஞாபகம் இல்லை. ஏதோவொரு வழக்கமான நாள்.
எப்பொழுதும், ஆடை மாற்றுவதற்கு முன் கொஞ்ச நேரம் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொள்வாள். கொஞ்ச நேரம் தான். 
அவளுக்கு என்றைக்குமே தன்னை நல்லா இருக்காது. ஏதாவது ஒரு குறை இருக்கும். சில நேரம் நிறைய கூட.
இடுப்பு இன்னமும் சின்னதாக வேண்டும்; பக்கவாட்டில் பார்த்தால் தெரியவில்லை, ஆனால், நேர்ப் பார்வைக்கு அகலமாக இருக்கிறது. 
தாடையும் அகலம். வாயைக் குவித்து வைத்தால் தான் முகம் வாட்டத்திற்கு வருகிறது. 
நேராய் நிற்கும் போதும், வலது தோள்பட்டை இறங்கியே இருக்கிறது. ஒரு வேளை, வலது பக்கம் குழைந்து தான் நேராய் நிற்கிறோமோ? காலை உதறிக் கொண்டு லேசாய் இடது பக்கம் சரிந்து நின்று பார்ப்பாள். சரியானது போலத் தோன்றும். 
கைகள் குட்டையானவை தான். வித்தியாசமாகத் தெரியாது. ஆனால், நீளமில்லை. விரல்களும் குள்ளம். 
இடுப்பில் கை வைத்து நிமிர்ந்து பார்த்தால், அவள் அழகு போலத் தோன்றும். ஆனால், எல்லார் முன்பும் அப்படியே நிற்க முடியுமா என்ன? 
இதெல்லாம் இப்படி கண்ணாடி முன் நின்று யோசிப்பதோடு சரி. நாள் முழுதும் அவள் எப்படி நடக்கிறாள், நிற்கிறாள் என்று அவள் நினைப்பதே இல்லை. சுபாவம் எதுவோ அது போலவே பகலெல்லாம் நடக்கிறது.
அன்றைக்கும் இப்படித்தான். ஆடை உடுத்துவதற்கு முன் அப்படியும் இப்படியுமாய் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
தளர்ந்தவொரு தருணத்தில் மார்பு வரை கட்டியிருந்த துண்டு நழுவியது. மறுகணம், அனிச்சையாய் கண்ணாடியிலிருந்து விலகி ஓடினாள். நல்ல வேளை, துண்டு முழுதாய் கழறவில்லை.
கண்ணாடிக்கு முதுகைக் காட்டி, துண்டை இறுக்கக் கட்டிக் கொண்டு, திரும்பிய போது தான் அந்த விபரீதம் உறைத்தது. 
கண்ணாடியில் தெரியும் தனக்கு மறைக்கத் தான் அப்படி விலகி ஓடினேனா?
அன்றைக்கு, வெரோணிக்காள் ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டாள்!

Tuesday, 19 December 2017

மரணம் - தண்டனை - ஆணவம் - ஜனம்

1

‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்கிற எல்லோருக்கும் தெரியும் பிறப்பின் அடிப்படையில் எதுவும் தீர்மானிக்கப்படுவது இல்லை என்று.  பிறகு ஏன் இப்படி தொடர்ந்து சொல்லப்படுகிறது?

உடுமலை சங்கர் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பின் வெற்றிக் களிப்பையும் அது சார்ந்த சவடால்களையும் கடந்து ஒரு சமநிலைக்கு வந்திருப்போம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.சங்கர் கொலை வழக்கில், ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறது - இந்தத் தண்டனை ‘அந்தப்’ படுபாதகச் செயலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

எது படுபாதக செயல் என்பதில் சட்டப்புத்தகங்களுக்கு  குழப்பங்கள் இல்லை.  கொலை, கொள்ளை போன்ற செயல்கள் படுபாதகங்கள்.  அதிலும், அவற்றைத் திட்டமிட்டு செய்திருந்தால், மாபாதகம்!  அதிக பட்ச தண்டனை உண்டு.

சங்கர் படுகொலையிலும் நீதிமன்றம் வழங்கியிருக்கிற மரண தண்டனை, அந்தப் பாதகத்திற்குத் தானேயொழிய, அதன் பின்னிருக்கிற சாதி ஆணவம் என்ற காரணத்திற்காக அல்ல.  

இதை இப்படி விளங்கிக் கொள்ளலாம் - பாதகத்தில் முடியாத சாதி ஆணவங்களுக்கு சட்டப்புத்தகத்தில் தண்டனைகள் இல்லை.  அல்லது, சாதி ஆணவக் கொலைகள், கொலைகள் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன.   சாதி ஆணவங்கள் தற்கொலைகள் என்று நிரூபணமானால் (இளவரசன் நிகழ்வு), யாருக்கும் தண்டனை இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், நீதிமன்றக் குற்றப்பட்டியலில் சாதி ஆணவம் இடம்பெறவில்லை.    சாதி ஆணவம், ‘சாதிப் பெருமை’ என்றே சொல்லப்படுகிறது.  மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று சொல்லப்படுவது போல இதுவுமொரு ஆசை!  அவ்வளவு தான்.  ‘பாரம்பரிய அந்தஸ்துக்கான ஆசை’!   

ஆசைகள்  தண்டனைக்குரியவை அல்லை.  மாறாக, ’ஆசைப்படுங்கள்!’ என்று தான் சொல்லப்படுகிறது.

அப்படியானால், இந்த மரண தண்டனைத் தீர்ப்புகளை, நமது நண்பர்கள், சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான தீர்ப்புகளாக சித்தரிக்க முயற்சிப்பது ஏன்?


2

நீதிமன்றங்கள், சட்டப்புத்தகத்தை அடியொற்றி நடைபெறுகின்றன என்றே நீங்களும் நானும்  நம்பிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை.  

ஒரு கட்டத்திற்கு மேல், நீதிதேவதை தனது கண்கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறாள்.  ஊழல், முறைகேடு என்ற அநியாயக் கதைகளை நான் குறிப்பிடவில்லை.  

நியாயமாகவே தேவதை கண்களைத் திறந்து பார்க்கிறாள் என்கிறேன்.   கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அதன் பின் குடியரசின் கருணை என்றொரு தரவரிசையை நீதியமைப்பில் சொல்கிறார்கள்.  இந்தத் தரவரிசையே நீதிதேவதை கண் திறந்தும் பார்க்கக் கூடியவள் என்பதற்கான மிகப் பெரிய ஆதாரம்.

கீழ் நீதிமன்றக் கண்கட்டு உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றக் கட்டு உச்ச நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றக் கட்டு குடியரசின் கருணையிலும் அவிழ்க்கப்படுவதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம.    

பாரபட்சமற்றவள் என்று நிரூபிக்க கண்களைக் கட்டிக்கொண்ட தேவதை, கருணையை வெளிப்படுத்தும் சாக்கில் தனது கண்களைத் திறந்து கொள்கிறாள்.  நீதி தேவதையின் கண்கட்டு என்பதும் ஒரு கண்கட்டு தான்.

இன்றைக்கு சங்கர் படுகொலைக்காக வழங்கப்பட்டிருக்கிற மரண தண்டனைகள் இறுதியானவை அல்ல.  அவை மறுபரிசீலினை செய்யப்படும் சாத்தியங்களை நீதியமைப்பு தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது.  ஒரு கட்டத்தில் இந்தத் தண்டனைகள் குறைக்கப்படும் வாய்ப்புகள் இப்பொழுதும் பிரகாசமாகவே இருக்கின்றன.

அப்படியொரு வேளை, நீதிமன்றங்கள் மரண தண்டனையை விலக்கிக் கொண்டு, குறைந்த தண்டனைகளை வழங்குகிறதென்றால், நமது நண்பர்கள் அதை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார்கள்?  

இன்றைக்கு, நீதிமன்றங்களில் சாதியொழிப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்வது போல, அன்றைக்கு சாதிவெறி வெற்றி பெற்றது என்று சொல்வோமா?

ஏன் பலரும் மரண தண்டனையை வரவேற்க வேண்டும்?

கருத்தளவில் மரண தண்டனையை எதிர்க்கிறவர்கள் கூட, இந்த வழக்கில் மரண தண்டனையை ஆதரிப்பது ஏன்? 

3.

மரண தண்டனை, தண்டனை மட்டுமே இல்லை; அதுவொரு கண்காட்சியும் கூட!    

அந்தத் தண்டனை எப்பொழுதுமே நாடகத்தைப் போல  நிகழ்த்தப்படுகிறது.  அந்த நாடகம், சடங்குத் தன்மையைக் கொண்டிருக்கிறது.    நீதி தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்ளும் தருணம் இது.  

மரண தண்டனை ஒரு வெகுஜன வடிவம்.    நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம்.  

அந்தரங்கத்தில் மரண தண்டனையை வெறுக்கிறவர்கள், அதில் மனிதாபிமானம் இல்லை என்று வாதிடுகிறவர்கள் கூட, பொதுவில் பேசும் பொழுது மரண தண்டனையை ஆதரிக்கத் தொடங்கி விடுவார்கள்.   கூட்டமாக யோசிக்கும் பொழுது ஏன் பலரும் மரண தண்டனை  ஆதரவாளராக மாறிப்போகிறார்கள்?


சிறைச்சாலைகள் குறித்து விவாதிக்கின்ற மிஷல் ஃபூக்கோ ‘கண்காணிப்புக் கோபுரம்’  (panopticon) என்றொரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.   அடிப்படையில் அதுவொரு கட்டிட அமைப்பு.  ஜெரிமி பெந்தாம் என்ற 18 ம் நூற்றாண்டு ஆங்கிலேயர் வடிவமைத்த அமைப்பு அது.  அதிகாரத்திற்கும் கண்காணிப்பிற்குமான தொடர்புகளை விவரிக்கும் பொழுது இந்தக் கண்காணிப்புக் கோபுரம் குறித்து ஃபூக்கோ பேசுகிறார்.

சுற்றிலும் வட்ட வடிவில் அறைகளும், நடுவில் உயரமாக எழுப்பப்பட்ட கோபுரமுமாக இருப்பது தான் கண்காணிப்புக் கோபுரம் என்ற வடிவமைப்பு.  சிறைச்சாலைகள் தான் இதன் ஆகச்சிறந்த உதாரணம்.   இயேசு சபை பாதிரியார்களின் பள்ளி, கல்லூரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.   இந்தக் கட்டிடங்கள் ஒரு விஷயத்தை தொடர்ந்து தெளிவான குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றன - நானுன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்!

அப்படி கண்காணித்துக் கொண்டிருக்க ஆட்கள் இருக்க வேண்டிய அவசியத்தை, இந்தக் கட்டிட அமைப்பு தவிர்த்து விடுகிறது.  சதா, யாரோ உட்கார்ந்து நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வை, அது தந்து கொண்டே இருக்கிறது.  ஆட்கள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அந்த உணர்வு மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.  இந்த உணர்வு தான் கண்காணிப்புக் கோபுரம்.

அதிகாரத்தின் காட்சி வடிவம்.  அதற்கு சுயரூபம் என்று எதுவும் இருக்கவில்லை.  இது போன்ற அமைப்புகளின் மூலமே அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.  

நீ தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறாய் என்று அது சொல்லிக் கொண்டிருக்கிறது.  இது நிச்சயமாய் ஒரு அடக்குமுறை தான்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆனால், இது அடக்குமுறையாக மட்டுமே பார்க்கப்படுவது இல்லை என்பது தான் விஷயமே.

தாங்கள் கண்காணிக்கப்படுவதை சிறைச்சாலைக் கைதிகள் என்றைக்குமே அவமானமாக எடுத்துக் கொண்டது இல்லை.  தங்களது தனிமனித சுதந்திரம் பறிபோவதாக அவர்கள் கூனிக் குறுகுவது இல்லை.  தங்களது மனித உரிமை மீறப்படுவதாக அவர்கள் குரல் எழுப்புவது இல்லை.  

சிறைக்கைதிகள் மட்டும் தான் என்று இல்லை.  அதிகாரத்தின் கீழிருந்து பழகிய எவரும் இந்த கண்காணிப்பை ஒடுக்குமுறையாக நினைப்பது இல்லை.  அதிகாரத்திற்குப் பழகுதல் என்று சொன்னவுடன், அதிகாரத்திற்கு எதிரான மனோபாவம் மரத்துப் போதல் என்று அர்த்தம் இல்லை.  அதாவது, அடிமையாக வாழ்வதில் ஒரு சுகம் கண்டு, அதில் லயித்துப் போகிறார்கள் என்று பொருளில்லை.  பழகுதல் என்பதை ஃபூக்கோ வேறு விதமாக சித்தரிக்கிறார்.

சிறைச்சாலை தான் அவரது மைய உதாரணம்.  சிறையில் தனித்தனிச் சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளுக்குப் பார்க்கக் கிடைக்கிற ஒரே காட்சி, கண்காணித்துக் கொண்டிருக்கும் கோபுரம்.  இதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு நம்பகமான (கண்களைத் தானே நம்ப வேண்டும்!) காட்சிகள் இல்லை.  ‘சக கைதி’ என்பது கூட ஒவ்வொருவருக்கும் சப்தம் மட்டும் தான்;  அதாவது, அனுமானம்.  

இதனால், ஒவ்வொருவரும் அந்தக் கண்காணிப்புக் கோபுரத்தை (அதிகாரத்தை) ஸ்நேகபூர்வமாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அது அவர்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, அவர்களைப் பார்ப்பது போல பிறரையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.  அதாவது, எனக்குத் தான் என் சக கைதியைத் காட்சி ரூபமாகத் தெரியாதேயொழிய, அந்தக் கோபுரத்திற்கு நன்றாகத் தெரியும்.  

யாரோ என்னவோ, எப்படி இருப்பாரோ, என்ன குணமோ என்று எனக்குத் தெரியாத சக கைதிகளையும் அந்தக் கோபுரம் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.  சக கைதிகளை நான் அந்தக் கோபுரத்தின் கண்களைக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அக்கோபுரம் என்னைக் கண்காணிப்பது போல சக கைதிகளையும் கண்காணித்துக் கொண்டிருப்பது எனக்கு நிம்மதியைத் தந்து கொண்டிருக்கிறது.  

அவர்களும் என்னை அப்படியே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாங்கள் அருகருகே கட்டப்பட்ட அறைகளில் வசித்தாலும், அந்தக் கோபுரம் தான் எங்களை இணைத்துக் கொண்டிருக்கிறது.  கைதிகளான நாங்கள் உணரும் பரஸ்பர ஸ்நேகம் அந்தக் கோபுரத்தால் சாத்தியமாகிறது.  அந்தக் கண்காணிப்புக் கோபுரம் இல்லாமல் எங்களிடம் பரஸ்பரம் இல்லை.

பார்க்கப் போனால், கைதியும் நான் தான், கண்காணிப்புக் கோபுரமும் நானே தான்.  

இதுவொரு குயுக்தியான ஏற்பாடு.   

யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற யோசனை, நிச்சயமாய் நமது சுதந்திரத்தைப் பறிக்கிறது.  ஆனால், அதே வேளையில், நமக்கொரு பாதுகாப்புணர்வையும் தந்து கொண்டிருக்கிறது.  நாம் சந்தேகப்படும் அடுத்தவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதில் தோன்றும் நிம்மதி இது.   இது அடுத்தவரின் துன்பத்தை ரகசிக்கும் மன நிலை அல்ல;  அவர்களை நம்பலாம் என்று தீர்மானிக்கிற அளவுகோல்.  

எந்தவொரு சமூகத்தில் பரஸ்பர சந்தேகம் அதிகரிக்கிறதோ அந்த சமூகத்தில் அதிக அளவிலான கண்காணிப்புக் கோபுரங்கள் தேவைப்படுகின்றன.  மரண தண்டனை அப்படியொரு கண்காணிப்புக் கோபுரம்.  அதனால் தான் அது காட்சிப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு முறை மரண தண்டனை நிறைவேற்றப்படும் பொழுதும், அந்த மனிதனின் கழுத்தை நெறிப்பது கயிறு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கையும் தான்.  அதே நேரம், நெறிக்கப்படுவது அந்த மனிதனின் கழுத்து மட்டும் இல்லை; நம் ஒவ்வொருவரின் கழுத்தும் தான்.   குற்றவாளியும் நான் தான், நீதியும் நான் தான்.

இதையே பலரும் ஜனரஞ்சக மன நிலை என்று சொல்கிறார்கள்.  வெகுஜனத்தின் உளவியல்.  

மந்தை, மேய்ப்பவனின் குரலால் மட்டுமே நகர்ந்து கொண்டிருக்கிறது.  அந்தக் குரலைக் கண்காணிப்புக் கோபுரம் என்றும் சொல்ல முடியும்.  

அதிகாரத்திற்கும் கண்காணிப்புக் கோபுரத்திற்கும் இடையிலான நெருக்கத்தை இப்போது நீங்கள் உணர முடியும்.  எந்தவொரு திறமையான அதிகாரமும், தன்னை வெகுஜனத்தின் அடையாளமாக மாற்றிக் கொள்கிறது.  

வெகுஜனத்திற்குத் தேவையான பாதுகாப்புணவை அதிகாரம் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.   இதனால்,  தனி மனித சுதந்திரம் பறிபோவதை வெகுஜனம் பொருட்படுத்துவது இல்லை.   மாறாக, எல்லோரும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிற எல்லைக்குக் கூட வந்து சேர்கிறோம்.  

பாரம்பரிய நாட்டுப்புற சமூகங்களில் இந்தக் கண்காணிப்புக் கோபுர வேலையை சடங்குகள் செய்து கொண்டிருக்கின்றன.  ஊர்த்திருவிழா அல்லது வீடுகளில் நடைபெறும் வாழ்க்கை வட்டச் சடங்குகள் மரபான panopticon.   திருவிழா நடந்த பின்பு ஊரே உணர்கிற பாதுகாப்புணர்விற்கும், வீடுகளில் வாழ்க்கை வட்டச் சடங்குகளை நடத்திய பின்பு தோன்றும் நிம்மதிக்கும் இப்படியொரு வலுவான பின்னணி இருக்கிறது.
இந்த நிம்மதியையே ‘மாதம் மும்மாரி பொழிகிறது’ என்றும், ‘சுமுக நிலை’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிம்மதியை உணரும் தருணத்தை சமூகவயமாதல் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்.  அடுத்தவர் மீதான அச்சம் மலிந்த சமூகத்தில் அதிகமானக் கண்காணிப்புக் கோபுரங்கள் தேவைப்படுகின்றன.   

உடுமலை சங்கரை வெட்டிக் கொலை செய்தவர்களுக்கு வழங்கிய மரண தண்டனை பலருக்கும் இப்படியொரு பாதுகாப்புணர்வையே தந்து கொண்டிருக்கிறது.  ஏதோவொரு வழியில் மந்தையை நிர்வகிக்கும் அதிகாரம் செயல்படுகிறது என்பதில் எல்லோருக்கும் ஒரு திருப்தி.

ஆனால், தனி மனித சுதந்திரத்தையும், அறிவார்ந்த பரஸ்பர நம்பிக்கையையும் முன்னெடுக்கும் சமூகங்கள் இந்தக் கண்காணிப்புக் கோபுரங்களை தகர்க்கவே விரும்புகின்றன.  இதனால், சடங்குகளைப் புறக்கணிக்கத் தொடங்குகின்றன.  மரண தண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த விரும்புகின்றன.  தங்களை நவீன சமூகங்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்புகின்றன.

தனிமனித சுதந்திரமும் பரஸ்பர நம்பிக்கையும் நவீனத்துவத்தின் இன்றியமையாத அறிவு நிலைகள்.  அறிவின் உள்ளார்ந்த கோளாறு என்னவென்றால், அவற்றை உள்ளபடியே வெகுஜனப்படுத்த முடிவது இல்லை.

அதாவது, தனி மனித சுதந்திரத்தை அறிவு நிலையாக ஏற்றுக்கொள்கிற சமூகங்களால் கூட அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி விட முடிவது இல்லை. 


அறிவிற்கும் ஜனரஞ்சகத்திற்குமான முரண் நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும் சிக்கலானது.