Sunday, 30 November 2014

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 5 அம்பேத்கரின் அதிகம் பேசப்படாத கட்டுரைஇந்தியச் சமூக ஒழுங்கமைப்பின் மிக முக்கிய சமூகக் கூறான சாதி’யை விளங்கிக் கொள்ளும் முயற்சியில் 1966ம் வருடம் ஃப்ரெஞ்ச் சமூகவியலாளர் லூயி டூமோ முன்வைத்த ‘போலச்செய்தல்’ என்ற கருத்தாக்கம் மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருந்த வேளையில், இதே போன்றதொரு கருத்தாக்கத்தை ‘சமஸ்கிருதவயமாதல்’ என்ற பெயரில் இந்திய சமூகவியலாளர் எம். என். ஸ்ரீனிவாஸ் 1952லியே முன்வைத்திருந்தார் என்று முந்தைய பகுதிகளில் பார்த்திருந்தோம்.

பார்ப்பனர்களை முன்மாதிரியாகக் கொண்டு பிற சாதியினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களும், சாதிய ஒழுங்கமைப்பின் அடிப்படைகளையும் பழக்கவழக்கங்களையும் ‘போலச்செய்கிறார்கள்’ என்றோ அல்லது ‘சமஸ்கிருதவயப்படுகிறார்கள்’ என்றோ முன்வைக்கப்பட்ட வாதம், அப்படியொன்றும் புதிய விவாதமில்லை;
இவ்வகை உரையாடலை, இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களிலேயே நிகழ்த்தியிருந்தார்கள்; அவ்வாறு நிகழ்த்தப்பட்ட விவாதம் இது வரையிலான சமூகவியல், மானிடவியல் விவாதங்களையெல்லாம் விட செழுமையானதாகவும், கூர்மையானதாகவும் இருந்தது; ஆனால், வழக்கமாய் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவார்ந்த முன்னெடுப்புகளை மறைப்பது போல் இந்த விஷயமும் பொது வெளியிலும், கல்விச் சூழலிலும் மறைக்கப்பட்டது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் நம்பாவிட்டாலும், அது அப்படித்தான் நடந்தது! 

1916ம் வருடம் மே மாதம் 9ம் நாள், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானிடவியல் கருத்தரங்கில் அம்பேத்கர் வாசித்தளித்த ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் தொழிற்படுமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பிலான கட்டுரை சாதியமைப்பு பற்றிய சமூகவியலில் பல காத்திரமான முன்னெடுப்புகளை எடுத்த ஒன்று. இக்கட்டுரை, மறுவருடம், அதாவது 1917, மே மாதம் வெளியான Indian Antiquary Vol XLI  என்ற ஆய்விதழில் அச்சிடப்பட்டது.  இதே கட்டுரை டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 1ல் இடம்பெற்றுள்ளது.


 
அளவில் மிகச்சிறிய இக்கட்டுரை நமது உரையாடலின் திசைவழியை மாற்றக்கூடியது என்று நான் நம்புகிறேன்.  அதனால் இக்கட்டுரையின் விவாதப்புள்ளிகளை இங்கே தொகுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன்.

1.   சாதி குறித்த பொதுவான அபிப்பிராயம்:  

 “‘சாதி, இன்றளவும் விளக்கப்படாததாகவே இருக்கிறது; அதனைப் புரிந்து கொள்வதும் எளிதாயில்லை.  அது ஒரு பழஞ்சமூக நிறுவனம்; அதன் சிக்கல், கோட்பாடு சார்ந்ததும் செயல்பாடு சார்ந்ததுமாக இருக்கிறது; அது வட்டாரப் பிரச்சினையாகவே வெளிப்படுகிறது; ஆனால், உலகச் சிக்கலாக மாறிவிடக்கூடிய அத்தனைக் கொடூரங்களும் அதற்கு உண்டு.

இத்தகைய முன்னுரையோடு தான் அம்பேத்கர் தனது கட்டுரையை ஆரம்பிக்கின்றார். ‘உலகச் சிக்கலாக மாறிவிடக்கூடியது என்ற எச்சரிக்கை, கொலம்பியா பல்கலைக்கழக அமெரிக்கர்களுக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட மிகை வாசகமாக இருந்தாலும், அம்பேத்கர் அதன் பின் சாதியமைப்பு குறித்து முன்வைக்கும் விளக்கங்கள் ‘அது அப்படித்தானோ என்ற சந்தேகத்தை நமக்குள்ளும் எழுப்புகின்றன. அதே போல், சாதி என்பது ஒரு சமூக நிறுவனம் என்ற அவரது பார்வையும் இந்த இடத்தில் முக்கியமானது.

2.    ஏன் சாதியை எளிதாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை? 

இந்தக் கேள்விக்கு அம்பேத்கர் சொல்லக்கூடிய பதில் கொஞ்சம் ஆச்சரியமானது.  சாதி, மிகத் தெளிவாக மக்களுக்குள் பேதங்களை வலியுறுத்துகிறது; கூசாமல், அந்த பேதங்களுக்கான நியாயங்களையும் பேசுகிறது.  ஆனாலும், இந்திய சமூகம் ஒன்றே போல் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மிகக் கொடூரமான உட்பகைகளை சமூகக் காரணியாகக் கொண்ட குழுக்கள், ஒரே சமூகமாக எவ்வாறு ஒருங்கிணைந்து இருக்கமுடிகிறது என்ற கேள்வியே சாதியை விளங்காப்புதிராக மாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், சாதி உண்மையிலேயே இந்த நாட்டின் குடி மக்களை விரோதமுடைய சாதிய குழுக்களாக மாற்றிவிடவில்லையா?  இல்லை, அப்படித்தான் மாற்றுகிறது என்றால், இந்தியா எவ்வாறு இன்னும் பல்வேறு சாதியத் துண்டுகளாக சிதறாமல் இருக்கிறது?

இதற்கு அம்பேத்கர் சொல்லக்கூடிய பதில் வரலாறு சார்ந்தது.  ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சிந்திக்கள் போன்ற பல்வேறு பழங்குடி வகையினர், இந்தியாவிற்குள் வந்து குடியேறி, ஆரம்பத்தில் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டதாக அம்பேத்கர் கருதுகிறார்.  இத்தகைய இனக்குழு மோதல்களின் பாதகமான விளைவுகளால், இக்குழுக்கள் நாளடைவில் தங்களுக்கு இடையிலான வேற்றுமைகளிலிருந்து ஒரு பொதுவானப் பண்பாட்டைக் கண்டடைந்தார்கள். அந்த வகையில், இனக்குழு என்று எடுத்துக் கொண்டால், இந்தியா பன்முகங்களை உடையது.  ஆனால், பண்பாட்டு அடிப்படையில் தனித்துவமான ஒருமைத்தன்மையை அது கொண்டிருக்கிறது.

இந்தப் பண்பாட்டு ஒருமையினாலேயே சாதிப் பிரச்சினையை நம்மால் முழுமையாக விளக்கமுடியவில்லை.  ‘பல்வேறு சமூகக் குழுக்களின் மேம்போக்கான, இயந்திரத்தனமான, செயற்கையானக கூட்டமைப்பு இந்தியா என்று கருதினால், சாதியை எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், நமது சூழல் அப்படியல்ல.  சாதியின் பெயரால் பிரிந்து நிற்கிற மக்கள் பண்பாட்டளவில் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்ற கேள்விக்கு அம்பேத்கர் அளிக்கும் பதில் இன்னும் சுவராஷ்யமானது. 
 
சாதியமைப்பை ஒரு பொட்டலம் என்று அழைக்கிறார் அம்பேத்கர். ஆச்சரியம் வேண்டாம், நிஜமாகவே அப்படித்தான் சொல்கிறார்! 

சாதி என்பது, தங்களுக்குள்ளே வலுவான பண்பாட்டு இணக்கத்தைக் கொண்டு ஏற்கனவே ஒன்றாய் திரண்டுள்ள சமூக அமைப்பின் மீது சுற்றப்பட்ட  பொட்டலம். அதாவது, இந்திய சமூகம் சாதியால் ஏந்தப்பட்டிருக்கிறது.  ஒரு உறை போல இந்தச் சமூகத்தை சாதியமைப்பு மூடி மறைத்துக் கொண்டிருக்கிறது. 

உண்மையில், சாதி எவ்வாறு தோன்றியது என்ற கேள்வி, இந்தச் சமூகத்தின் மீது சாதி என்ற உறை அல்லது பொட்டலம் எவ்வாறு இடப்பட்டது என்ற கேள்வியாகும் என்று எழுதுகிற அம்பேத்கர் இதையே இந்தக் கட்டுரையில் தான் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஏறக்குறைய இந்திய சமூக அமைப்பு குறித்து தனக்கிருக்கும் பார்வையை முழுமையாக வெளிப்படுத்தி விடுகிற அம்பேத்கர், இந்த இடத்தில் வேறு சில செய்திகளையும் சந்தடிச் சாக்கில் சொல்லி விடுகிறார்: 

·         சாதி பின்னாட்களில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.
·         ‘சாதிக்கு முந்தைய இந்திய சமூகம் தனது வெவ்வேறு இனக்குழுக்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை பண்பாட்டளவில் ஏற்படுத்தியிருந்தது.
·         சாதி என்பது இந்த ஒருங்கிணைப்பை மறைத்து இடப்பட்டிருக்கும் மேலுறை – அப்படியானால், கழற்றி எறிந்துவிடக்கூடியது.

3.   சாதி குறித்து ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்கள் என்னென்ன? 

செனர்ட், நெஸ்ஃபீல்ட், ரிஸ்லி மற்றும் கேட்கர் என்ற நான்கு ஆய்வாளர்களின் சாதி குறித்த ஆய்வுகளை தனது ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் அம்பேத்கர் அவர்களின் முடிவுகளின் மீது கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைக்கிறார்.

·         சாதி குறித்து ஆய்வு செய்பவர்கள் அனைவரும், ஏதாவதொரு சாதியை எடுத்துக் கொண்டு அதனை ஒரு முழுமையானக் காரணியாகக் கருதி தங்களது ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.  ஆனால், சாதியை ஒரு பெரும் அமைப்பின் ஒருங்கிணைந்தக் கூறாகக் கருதினால் மட்டுமே அதன் இயல்புகளை நம்மால் அறியமுடிகிறது.  ஒவ்வொரு சாதியையும், சாதி ஒழுங்கமைப்பில் வைத்து யோசிக்க வேண்டியது அவசியம்.

·         பெரும்பாலான ஆய்வாளர்கள், ‘தீட்டு என்பது சாதியின் முக்கிய குணம் என்று கருதுகின்றனர்.  அதைக் கொண்டு சாதி சார்ந்த அனைத்தையும் விளக்கிவிட முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், தீட்டு என்பது சமயச்சடங்கோடு மட்டுமே தொடர்பு கொண்டுள்ளது.  அது முழுக்க முழுக்க பூசக சாதியின் எல்லைக்குள் மட்டுமே அர்த்தமுடையது.  பூசக சாதி, படிநிலைவரிசையில் உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதால் சாதியமைப்பு என்றதும் அவர்களுக்கு தீட்டு முக்கியமான விவாதப்பொருளாய் தெரிகிறது.
 
·         சாதி என்பது 'பிறருடனான' தொடர்பு விலக்கம் என்றும் சொல்லப்படுகிறது.  ஆனால், பிறருடன் தொடர்பின்மை என்பது சாதி உருவானதற்கான காரணம் அல்ல; அது சாதியின் விளைவு. சாதி உருவாக்கத்திற்கான காரணம் விலக்குகள் அல்ல.  தன்னைச் சிறப்புத் தன்மைகள் கொண்ட ஒன்றாக சித்தரிக்க விரும்பும் சாதி பிறரிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது. எனவே, விலக்கு என்பது சாதியின் விளைவு தானேயொழிய காரணம் அல்ல.

·         ஒரு சாதி, தன்னை சாதியாகவே தக்கவைத்திருக்க சில அடிப்படையான குணங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்: ஒன்று,  அச்சாதியினுள் பிறந்தால் மட்டுமே அதன் உறுப்பினராதல் முடியும் என்ற கட்டுப்பாடு; இரண்டு, பிற சாதிகளோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் மணவுறவு பேணாதிருத்தல்.  ஒரு வகையில் இவ்விரண்டு குணங்களுமே ஒன்று தான். தன் சாதிக்குள் மட்டும் தான் திருமணவுறவு (அகமணமுறை) சாத்தியம் என்று சாதித்து விட்டால், அச்சாதியினுள் பிறந்தால் மட்டுமே உறுப்பினராதல் முடியும் என்பது இயல்பாகவே நிறைவேறி விடுகிறது.

4.   சாதிக்கும் அகமணமுறைக்குமான தொடர்புகள்:

பிற ஆய்வுகளைப் பற்றிய விமர்சனங்களின் மூலம் அம்பேத்கர் ஒரு விஷயத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். அகமணமுறை.
சொந்த சாதிக்குள் மட்டுமே மணமுடிக்கும் பழக்கம்!

மானிடவியலில், இரண்டு திருமணமுறைகள் பற்றி மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது – அகமணம், புறமணம்.  ஒரு இனக்குழு (நமக்கு சாதி) தனது உறுப்பினர்களுக்கான திருமணமுறைகளை ஒழுங்குபடுத்தும் பொழுது,  யார் யார், யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதையும் வரையறை செய்கிறது.  அவ்வாறு வரையறுக்கையில் இரண்டு முறைகள் முன்மொழியப்படுகின்றன – தனது இனத்திற்குள்ளேயே தான் திருமண பந்தங்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற கட்சி (அகமணம்), தனது இனத்திற்குள் கண்டிப்பாய் மணவுறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்று சொல்லும் கட்சி (புறமணம்).  இது குறித்து ஆழ, அகல ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்றாலும் இந்த இடத்திற்கு இது போதும் என்பதால் அடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறேன்.சாதிகள், இந்த அகமணமுறையைத் தங்களது இன்றியமையாத பண்பாக அறிவிப்பதோடு அதனைப் பாதுகாப்பதற்காக கொலையும் செய்யக்கூடிய அளவுக்குத் துணிவதை எண்ணி, அம்பேத்கர் இந்த அகமணமுறையில் ஏதோ அடங்கியிருக்கிறது என்ற முடிவிற்கு வருகின்றார். அகமணமுறையை இன்னும் கொஞ்சம் தீவிரமாக அணுகினோம் என்றால் புதிய விடைகள் ஏதாவது கிடைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

ஆனாலும் ஒரு சந்தேகமும் ஒட்டிக் கொண்டே வருகிறது.  அகமணமுறைக்கும் சாதியமைப்பிற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்றால், உலகின் வேறு பல பகுதிகளில் காணப்படும் அகமணக் குழுக்களிடமும் இந்த சாதியமைப்பு உருவாகியிருக்க வேண்டுமே! அப்படி ஒன்று நடக்கவில்லையே!  இந்தியாவில் கடைபிடிக்கப்படும் அகமணமுறை மட்டும் தானே சாதியமைப்போடு காணப்படுகிறது! இதற்கு என்ன காரணம்?

இந்த இடத்தில் அம்பேத்கர், சாதிக்கு முந்தைய இந்திய சமூகம் குறித்து முன்வைத்த அதே கருதுகோளை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.  அதாவது, இத்தீபகற்பத்திற்குள் இடம்பெயர்ந்து குடியேறி, தங்களுக்குள் வெகுவாக மோதிக்கொண்டு, உயிரிழப்புகளை சந்தித்திருந்த வெவ்வேறு இனக்குழு மக்கள், ஒரு பொதுத் தனமையை எட்டி, அதனைப் பண்பாடாக வளர்த்தெடுத்தனர் என்று முன்மொழிந்த கருதுகோளை இன்னும் விரித்து, மோதிக்கொண்டிருந்த குழுக்கள் தங்களுக்குள் இணக்கத்தை எட்டும் விதமாக, புறமணமுறையை வடிவமைத்து வைத்திருந்தன என்கிறார். 

அதாவது, சாதியமைப்பு ஏற்படுவதற்கு முன்னால் இந்த நிலப்பரப்பில் அகமணமுறை தடைசெய்யப்பட்டிருந்தது.  அருகாமை குழுக்களோடு அணுக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதனை நிரந்தரமாக்குவதற்கும் மக்கள் புறமணமுறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  ஆனால், என்றைக்கு புறமணமுறை வழக்கொழிந்து அகமணமுறை மேலோங்கியதோ அன்றைக்கு சாதியமைப்பும் தோன்றியது.  எனவே, அகமணமுறையும் சாதியும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாதவை என்பது அம்பேத்கரின் கருத்து.

5.   சாதியின் தொழிற்படுமுறை:

இந்த இடத்தில், புறமணமுறை கடைபிடிக்கப்படும் சூழலில் ஒரு சமூகக்குழு தன்னை அகமணமுறைக்கு மாற்ற விரும்பினால் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றொரு கற்பனையை அம்பேத்கர் செய்யத் தொடங்குகிறார்.  இப்படியான கற்பனை அகமணமுறையின் நெருக்கடிகளை உணர்ந்து கொள்ள உதவும் என்பது அவர் நம்பிக்கை.

முதலாவதாக, தன்னை தனக்குள்ளேயே சுருக்கிக் கொள்ள, அதாவது  அகமணமுறையை விரும்பக் கூடிய குழு தன்னைச் சுற்றி வலிமையான காப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்த வளையம் ஒரு அரண் போல செயல்பட்டு வெளியிலிருந்து வரக்கூடிய அத்தனை நெருக்கடிகளிலிருந்தும் அதனைக் காக்கும் வேலையைச் செய்யும்.  ஆனால், தன்னை அகமணமுறையின் மூலம் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பும் குழுவிற்கு வெளியிலிருந்து வரும் நெருக்கடிகளை விட உள்ளிருந்து கிளம்பும் நெருக்கடிகளே அதிகமாக இருக்கும்.

இந்த நெருக்கடியை, ஆண், பெண் விகிதாச்சார சமநிலையின்மை என்று நாம் அழைக்க முடியும். அகமணமுறையை நடைமுறைப்படுத்தும் பொழுது, தனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண இணைகள் கிடைக்கும் வாய்ப்பு சரிசமமாய் இருப்பதை அக்குழு உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் இணைக்கான போட்டி அதிகரித்து, குழப்பங்கள் ஏற்படுவதோடு, அகமணமுறையை மீறி புறமணமுறையில் திருமணவுறவுகளைத் தேடத் தொடங்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே, அகமணமுறையை வெற்றிகரமாய் செயல்படுத்த விரும்பும் குழு, தனது ஆண் – பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
எப்பொழுது அதிகப்படியான ஆண்களோ அல்லது பெண்களோ ஒரு சமூகத்தில் காணப்படுகிறார்களோ அப்பொழுது அதன் அகமணமுறைக்கு ஆபத்து வந்து விடுகிறது.  

குறிப்பாகச் சொன்னால், கணவனை / மனைவியை இழந்த உபரி பெண்கள் / ஆண்களை என்ன செய்வது என்ற சிக்கலை அந்தக் குழு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 
இந்திய அகமணக்குழு இந்த உபரி பெண்களையும் ஆண்களையும் கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்த முனைகிறது என்று அம்பேத்கர் கருதுகிறார். 

1.    உடன் கட்டை மூலம் எரித்து விடுவது
2.    ‘விதவை விதிகளின் மூலம் வீட்டிற்குள்ளேயே முடக்குவது
3.    உபரி ஆண்களுக்கு சந்நியாசத்தை பரிந்துரைப்பது
4.    தகுதிக் குறைவான சமூகப் படி நிலையிலிருந்து சிறுமிகளை மணமுடித்து வைப்பது. 

சாதி வேறு அகமணமுறை வேறு இல்லையென்றால், அகமணமுறையை வெற்றிகரமாய் செயல்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே, சாதியை வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய காரியங்களாகும்.  சதி, விதவை, குழந்தைத் திருமணம் என்ற மூன்றையும் சமூக விழுமியமாக ஒரு சாதி கொண்டிருக்கிறது என்றால், அது தனது அகமணமுறையை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க விரும்புகிறது என்று அர்த்தம்.  அதாவது, சாதியமைப்பை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள் என்று பொருள்.  இதையே அம்பேத்கர், சாதி தொழிற்படும் முறை என்று சொல்கிறார்.

(தொடரும்)

Friday, 28 November 2014

பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை / வசனம் எழுதாதது யாருடைய தவறு?பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை / வசனம் எழுதாதது யாருடைய தவறு?


 பொதுப்புத்தியிலிருந்து சம அளவு விலகியிருந்த அல்லது விலக்கப்பட்டிருந்தவர்கள் MSS பாண்டியனும் ருத்ரையாவும் (இந்தப் பதிவை இப்படி வேறொரு மூலையிலிருந்து ஆரம்பிக்க என்னை அனுமதியுங்கள்). 
 
பாண்டியனின் எழுத்துகள் எப்படி கல்வி நிலைய வளாகங்களைக் கடக்கவில்லையோ அதே போல் ருத்ரையாவின் படங்கள் மாற்று சினிமா வெளியைக் கடக்கவில்லை.  இதில் ஏதும் தவறு இருப்பதாக நினைக்கவில்லை;  குறை சொல்வதற்கும் எதுவுமில்லை.  ஏனென்றால், இரண்டுமே, வாசகராய் இருப்பதற்கும் பார்வையாளராய் இருப்பதற்கும் சற்று அதிகப்படியான பொறுமையை வேண்டுபவை.

ஆனால், இவ்விருவரின் மறைவையும் தமிழகத்து பெரும் பத்திரிகைகள் எவ்வாறு கையாண்டன எனபது நிச்சயமாய் ஆரோக்கியமானதல்ல என்பது மட்டும் நமக்குத் தெரியும்.  ருத்ரையாவிற்கு வருகிற இரங்கல் கட்டுரைகளில் கால்வாசி கூட பாண்டியனுக்கு வரவில்லை.  அதுவும் கூட செல்வா கனகநாயகத்திற்கும் எஸ்பொவிற்கும் வரப்போவதில்லை.
இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

ருத்ரையாவின் மறைவிற்கு தெரிவிக்கப்படுகிற வருத்தங்கள், ஆதங்கங்கள் எல்லாமே அவர் ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீபிரியா போன்ற திரைக்கலைஞர்களை வைத்து திரைப்படம் எடுத்தார் என்பதனால் தானா? அந்தப் படத்தில், ஒரு வேளை, முழுக்க முழுக்க முகம் தெரியாத / முகவரி இழந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தால் ருத்ரையாவின் மறைவை நமது வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்குமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இத்தனைக்கும் பாண்டியன் எழுதிய கட்டுரைகளும் நூற்களும் வெகுஜன ஊடகங்களைப் பற்றியும், வெகுஜன இயக்கங்களைப் பற்றியும் தான்.  எம்ஜியார் பற்றி அப்படி என்ன தான் இந்த பாண்டியன் தனது image trap ல் எழுதிவிட்டார் என்று யாருக்கும் தோன்றவில்லை.  திராவிட சித்தாந்தத்தையும் இயக்கங்களையும் குறித்து ஆங்கிலம் பேசும் அறிவுலகில் தொடர்ந்து விவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த அவரது மறைவு எந்தத் திராவிடக் கட்சியையும் அசைத்துப் பார்க்கவில்லை. 

****

தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு முறை தனது அறிஞர்களையும், கலைஞர்களையும் இழக்கும் பொழுதும், இது போன்ற சொரணையற்றத் தன்மையையே ஏன் கொண்டிருக்க வேண்டும்?

இதோ இப்பொழுது, செல்வா கனகநாயகமும், எஸ். பொ.வும் மறைந்த செய்தி வந்திருக்கிறது.  இவர்களெல்லாம் யார் என்று தான் 'தமிழ் வெகுஜன வாசகன்' கேட்கிறான் என்று சொல்கிறார்கள். அவனுக்கு குஷ்பு காங்கிரசில் சேர்ந்ததும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதும், அவ்வாறு வந்தால் குஷ்புவும் ரஜினியும் கூட்டணி வைப்பார்களா என்பதும், அக்கூட்டணி அண்ணாமலை போல இருக்குமோ என்பதும் தான் கவலை என்று சொல்லப்படுகிறது.  இப்படி விரல் சூப்பும் வாசகர் எங்கே தான் இருக்கிறார்?

பாண்டியன், செல்வா போன்றவர்களை வெகுஜன ஊடகங்கள் ஏன் கண்டுகொளவதில்லை என்ற கேள்விக்கு, அவர்கள் பிரபலங்கள் இல்லை என்பதால் செய்திக்கான மரியாதை இல்லாதவர்கள் என்று கொஞ்ச காலம் முன்பு வரை சமாளித்துக் கொண்டிருந்தது போல இப்பொழுதும் முடியாது,

ஏனென்றால், யார் யார் பிரபலம், யார் யார் முக்கியஸ்தர்கள், யார் யார் அறிஞர்கள், யார் யார் விவாதிக்கிறவர்கள் என்பதை மக்களோ, அவ்வூடகங்களின் முதலாளிகளோ தீர்மானிப்பதை விடவும் அதில் எழுதக்கூடிய இதழாளர்களே அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்பதை எல்லோருமே அறிவோம். 
 
தமிழ் இதழியலில் இன்றைக்கு முன்வரிசையில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் பாண்டியனையும், செல்வாவையும், எஸ்பொவையும் நன்றாகத் தெரிகிறது அல்லது முயற்சி செய்தால் அடுத்த கணமே தெரிந்து கொள்ள முடிகிறது.  ஆனாலும், இவர்களைத் தெரியாது என்று சொல்வதில் அடையக்கூடிய கிளுகிளுப்பு (அதாவது, தான் எதுவுமறியாத சாமானியன் என்று ஒப்புக்கொள்வதன் மூலம் அடையக்கூடிய கௌரவம்) அவர்களுக்கும், தமிழ் இதழியலுக்கும் தேவைப்படுகிறது.

தமிழ் journalist  ஒரு வேடிக்கையான பிறவி.  அவன்/ள் சீரிய இதழ்களைப் படிப்பார்; இலக்கியங்களை வாசிப்பார்; வெளிநாட்டுத் திரைப்படங்களை விழுந்து விழுந்து பார்ப்பார்; ஆனால், பேனாவைத் திறந்தால் மட்டும் தமிழ்த் திரைப்படங்களைக் கடந்து தனக்கு எதுவும் தெரியாது என்ற தோரணையில் எழுதுவார்.  நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும், நடிகர்களின் பஞ்ச் வசனங்களையும் சிலாகித்துப் பேசுவார்; அதையே வெவ்வேறு தருணங்களில் பயன்படுத்தி பொதுப்பேச்சாகக் கட்டமைப்பார்; இடைக்கிடை தமிழ் நாட்டில் தான் இப்படி கேவலம், மலையாள நாட்டில் இப்படி இல்லை என்பார்.  கடைசியில் நேருக்கு நேராய் நீயுமா இப்படி என்று கேட்டால், இதைத் தானே வாசகர் விரும்புகிறார் என்பார்.
ஆனால்,  தமிழ் திரைப்படங்களின் மீது வெறி கொண்ட அப்படி வாசகர்கள் எங்காவது இருக்கிறார்களா என்றால் எங்கும் இல்லையென்பது தான் உண்மை.  நடிக, நடிகையரின் பித்து பிடித்த ரசிகர்கள் தமிழகத்தில் உண்டு.  ஆனால் அவர்கள் யாரும் வாசகர்கள் இல்லை.  அவர்களின் வாழ்க்கை இன்னொரு தளத்தில் தத்தம் எல்லைகளிலான அதிகாரக் கனவுகளோடு நகர்ந்து செல்கிறது.  அவர்கள் தங்களது விருப்ப நடிகரின் படம் இந்த இதழில் வந்திருக்கிறது என்பதைக் கடந்து எந்த வித ஈடுபாட்டையும் இதழ்களின் மீது காட்டுவதில்லை.

ஆனால், அப்படியொரு பாமர, வெகுஜன, திரைப்பட மோகம் கொண்ட, மொன்னையான, முட்டாள் வாசகன் இருப்பதான பாவனையில் நமது இதழியலாளர்கள் எழுதிக்கொண்டிருப்பதும், அதே மன நிலையைச் சார்ந்தவன் தான் நான் என்று அடிக்கடி வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருப்பதும் தான் அந்தக் கற்பனையான வெகுஜன வாசகரை உருவாக்குகிறது என்பதை என்றாவது இவர்கள் உணர்வார்களா என்று தெரியவில்லை.

இவ்வாறு, தமிழ் இதழியல் உருவாக்கி வைத்துள்ள அந்தக் கற்பனையான தமிழ் வாசகனுக்குத் தான் பாண்டியன், செல்வா, எஸ்பொ மறைந்தது பற்றியெல்லாம் கவலையில்லை. அதனால், இவற்றிற்கு செய்திக்கான மரியாதையும் இல்லை.

தமிழ் இதழியலாளர்களின் குணாம்சம் இதுவென்றால், அவர்களது பொதுக் கனவு ஒன்று உண்டு - அது தமிழ்த் திரையுலகிற்குள் எப்பாடு பட்டாவது நுழைந்து விடுவது.  அதற்கான வழிமுறைகளில் ஒன்று - தமிழ் இதழியல்!   

குமுதம், ஆவி, குங்குமம், இந்தியா டுடே என்று இதழ்களில் வேலை செய்வதன் மூலம் திரையுலகப் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்து அப்படியே நாலைந்து எருமைமாடு வாங்கி, பால் கறந்து, தயிராக்கி வித்து, வெண்ணெய் எடுத்து வித்து, ஒரு பெரிய எருமைப் பண்ணையே ஏற்படுத்தி, யாராவது ஓசிக்கு மோர் கேட்டால் எட்டி தான் உதைப்பார்கள். 

இந்த மனோபாவம் தான் தமிழ்த் திரைப்படத் தொழிலோடு சம்பந்தப்பட்டிராத எதையும் நான் எழுதமாட்டேன் அல்லது தெரிந்து கொண்டிருக்க மாட்டேன் என்ற கடிவாளத்தை மாட்டிக்கொளவதோடு நிற்காமல், அதை மீறி செயல்படுகிறவர்களைப் பற்றிய நையாண்டியையும் உற்பத்தி செய்ய வைக்கிறது. (சாரு, எஸ்ரா, மபு, ஜெ போன்றவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள், வம்புகள் எல்லாம் இந்த வகையைச் சார்ந்தவை தான்).

திரிஷாவிற்கு திருமணம் என்ற செய்தி கேட்டு பரபரப்பாகும் இந்த இதழியலாளர்களை, தொபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபிழைப்பு எடுத்து வந்ததையும், பிரபஞ்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சாரு மருத்துவமனையில் இருந்ததையும் பொதுஜனத்திற்கு சொல்வதிலிருந்து யார் தடுத்தார்கள் என்றால், அவர்களே தான்!  அவர்கள் மனதிற்குள் உட்கார்ந்திருக்கும் கற்பனையான அந்த வாசகன் தான்!

இது தான் சாஸ்வதம் என்றால், பேசாமல் தமிழ் நாட்டில் எழுதத் தெரிந்த எல்லோரையும் செத்து மடிவதற்குள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திலாவது (அதுவும் பிரபல நடிக நடிகையரின் படங்களில்) பணியாற்றும் படி கேட்டுக்கொள்ளலாம்.  கட்டாய ராணுவப் பணியைப் போல் கட்டாயத் திரைப்பட பணியை ஏற்படுத்தினால் கூட இந்தத் தமிழ்ச்சமூகம் பிழைத்துப் போகும்.  (அய்யோ....! இந்தத் திராவிடக் கட்சிகள் 'அம்மா / அய்யா திரைப்பயிற்சி' என்று இதைச் செய்தாலும் செய்யும்!)

Wednesday, 26 November 2014

யாரோ(கவனம்: இது மேற்கோள் காட்டுவதற்கான பிரதி அல்ல; இதைக் கப்ஸா என்று அறிகிறவர்கள் பாக்கியவான்கள்!)

1710 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18ம் நாள், தரங்கம்பாடியின் சீயோன் தேவாலயத்திற்கு அடுத்திருந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து, கிழக்கிலேயே சென்று கொண்டிருந்தால் மேற்கு வந்துவிடும் என்று தீவிரமாக நம்பிய லூத்தரன் மிஷனரி ஹான்ரீச் ப்ளூச்சாவ், புயலுக்கான அறிகுறிகள் வலுத்திருந்த வங்கக் கடலையேக் கூர்ந்து பார்த்து தனது பதிவேட்டில் இப்படி எழுதினார்:

‘இன்று காலையில், சிப்பிகளைப் பொறுக்க வரும் சிறுவர்களுக்காக வாதாமரக் கொட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன்.  கேட்டிகிஸ்ட் பர்னபாஸ் கவலையோடு என்னைப் பார்க்க நின்றிருந்தான்.  இன்னமும் இயேசுவுக்குள் திரும்பியிராத அவன் மனைவி சில நாட்களாய் நெருநெருக்கும் மணல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாள்.  அவள் நிலைமையில் ஏதாவது அசம்பாவிதமோ என்றே நான் அவனிடம் கேட்டேன். ஆனால், அவன் மலைநாட்டிற்குச் சென்று மாந்தரீகனை அழைத்து வர விரும்புவதாகவும், தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒரு முறை மட்டும் இதை அனுமதிக்கும்படியும் என்னைக் கேட்டான். அவளுக்கு வந்திருப்பது நெருநெருமணல்காய்ச்சல்தானென்றும் அதை வைத்தியத்தாலும் பிதாவின் மீதான நம்பிக்கையாலும் குணமாக்கலாம் என்றும், இது போன்ற துஷ்ட காரியங்களைச் செய்பவர்களை பிதாவானவர் மன்னிப்பதில்லை என்றும் அவனுக்கு நான் பொறுமையாய் எடுத்துச் சொன்னேன்.  ஆனால், பர்னபாஸ் தன் மனைவிக்கு யாரோ மாந்தரீகம் வைத்து விட்டதால் தான் இப்படி நடக்கிறது என்றான்.  தான் கடவுளின் வழிக்குத் திரும்பியதைப் பொறுக்காத யாரோ தான் இப்படி செய்திருக்க வேண்டுமென்று நம்புவதாகச் சொன்னான்.  இந்தப் பகுதியில் 'யாரோ'வின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.  'யாரோ' தீமையின் ராஜாவென்றும், மனம் விட்டு மனம் பாயக்கூடியவர் என்றும் இந்த மக்கள் நம்புகிறார்கள்.

தமிழில் வழங்கப்படும் யாரோ என்ற மரபு குறித்த முதல் எழுத்துப் பதிவு இது தானென்று 1987ம் ஆண்டு, டர்டு பல்கலைக்கழக, இறையியல் துறையில் 'கீழைத்தேய எதிர்க்குரல்களின் அழகும் அனாமதேயமும்' என்ற தலைப்பில், ஆய்வேட்டை சமர்பித்திருந்த தஞ்சாவூரைச் சார்ந்த லூத்தரன் பாஸ்டர் போல் வேதெபோதெகெம் கருதுகிறார்.  ஹால்லே ஆவணக்காப்பகத்தில் ஹான்ரீச் ப்ளூச்சாவ்வின் பதிவேடுகளைப் படிக்க நேர்ந்த வேதெபோதெகெம், யாரோ மரபு குறித்து (யாரோவை மரபாகப் பார்க்கும் பார்வை இவருடையது தான்) நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதிகளில் செய்த களப்பணிகளின் மூலமாக தமிழில் பெரிதும் கவனிக்கப்பட்டிராத எதிர்மரபொன்று குறித்த தகவல்களை தன்னால் ஒருங்கிணைக்க முடிந்தது என்கிறார்.
 
செங்கோட்டையை ஒட்டிய மலைகளில் விளையும் மூங்கில்களால் பின்னப்பட்ட கூடை நாற்காலியில் அமர்ந்து, அஸ்ஸாமின் பசுந்தேநீர் அருந்திய படி என்னைக் கேட்டுக்கொண்டிருந்த எஸ். கார்த்திகேயன், 'எல்லா அறிவியல்களும் தங்களுக்கான முட்டாள்களைத்தான் முதலில் உருவாக்குகின்றன' என்றார். நாற்பதாண்டு காலமாக தென்னிந்திய கட்டிடக் கலை வரலாறு குறித்து பல்கலைக்கழகங்களில் படிப்பித்துக் கொண்டிருக்கும் அவரோ அல்லது நானோ யாரோ மரபு பற்றி அது நாள் வரையில் எதையும் அறிந்திருக்கவில்லை; கேள்விப்பட்டிருக்கவுமில்லை.
'அந்த ஆய்வேடு கிடைத்தால் இன்னும் வசதியாயிருக்கும்' என்ற கார்த்திகேயனிடம், 'அது கிடைத்தும் விட்டது.  ஆனால், பெரிதாய் தகவல்கள் ஏதும் இல்லை.  முன்னுரையில் மட்டும் ஒரு பக்கம் எழுதியிருக்கிறார். அவ்வளவு தான்' என்று சொல்லி என் கணிணியிலிருந்த ஆய்வேட்டின் புகைப்படப் பிரதியைத் திறந்து அவருக்குக் காண்பித்தேன். 

'பெரு மரபுகளை கேள்விக்குட்படுத்தும் யத்தனங்களைக் கொண்டுள்ள, சூபிக்கள், பக்கிர்ஷாக்கள், காஃபிர்கள், சித்தர்கள் போல யாரோ என்ற எதிர்மரபு எழுத்துப் பண்பாட்டிற்கு எதிரான குரல்களைக் கொண்டது. காலத்தால், எழுத்திற்கு முந்தைய பேச்சில் தொனிக்கும் அனாமதேயத்தைக் கொண்டாடும் யாரோக்கள் எழுத்து கண்டுபிடித்த செயலை 'மனித சமூகத்தைக் கண்காணிப்பின் வளையத்திற்குள் கொண்டு வந்து சேர்த்ததின் உச்சகட்ட நிகழ்வு' என்று கருதுகின்றனர்.  யாரோ மரபின் படி, எழுத்து வடிவம், மொழியின் குரல்வளையை நெறிக்கிறது.  எழுத்தின் அதிகாரத்தை எதிர்த்து உருவான இந்த மரபை இரண்டாயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன்பு யாரோ உருவாக்கினார் என்பது அவர்களின் வாய்மொழி வரலாறு.' 

இதன் பின் அவர் பதிவு செய்வது தான் மிக முக்கியமான தகவல். தனது கள ஆய்வின் போது யாரோ மரபு பற்றி தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் தங்களைப்பற்றிய விபரங்களைத் தருவதை கவனமாக தவிர்த்ததாகவும், ஒரு முறை சந்தித்தத் தகவலாளர்களை தன்னால் மறுமுறை சந்திக்க முடியாமல் போனது என்றும் சொல்கிற விஷயம் ஆச்சரியமாயிருக்கிறது. இதனால், ஒரு வருடம் போல் தமிழகத்தில் தங்கியிருந்து  தானே நேரடியாய் சேகரித்த எந்தத் தகவலையும் ஆய்வேட்டில் இணைக்கமுடியாமல் போயிற்று என்று சொல்லும் வேதேபோதெகெம், யாரோ மரபு பற்றி வலுவான ஆதாரங்களுடன் நூலொன்றை எழுதுவது தான் தனது அடுத்த கட்ட ஆய்வுப் பணி என்று அறிவிக்கிறார். ஆனால், அதன் பின் வேதெபோதெகெம் ஆய்வுலகில் எங்கும் தட்டுப்பட்டதாகத் தெரியவில்லை.
'இதை இப்படியே மறந்து விடுவது உத்தமம். இது சுத்தமான Doctoral syndrome.  பிரசவ நேரத்து பதட்டங்கள் போல, இதுவும் ஒரு வகை. முனைவர் பட்ட பதட்டம்.  சேகரிக்காத ஆவணங்களையெல்லாம் சேகரித்தது போல' என்று சொல்லி கிளம்பிய எஸ். கார்த்திகேயன், அடுத்த அரைமணி நேரத்திற்குள் வெளிறிப் போன முகத்துடன் என் முன்னிருக்கும் இருக்கையில் சரிவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

கார்த்திகேயனைப் பற்றி தலைமைச் செயலகம் வரைக்கும் மொட்டைக் கடிதமொன்று அனுப்பப்பட்டிருக்கிறது.  அதன் ஒரு நகல் அவருக்கும் வந்திருந்தது.  தனது மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான அன்பளிப்புகளைப் பெறுகிறார் என்பது தான் அந்தக் கடிதத்தின் சாராம்சம். இதில் வேடிக்கை என்னவென்றால் எஸ். கார்த்திகேயனுக்கு ஆய்வு மாணவிகளே இல்லை; அவரிடம் பதிவு செய்த அத்தனை ஆய்வாளர்களும் அநியாயத்திற்கு ஆண்கள். 

'இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.  இதில் உள்ள எதுவும் உண்மையில்லை என்பதை நீங்கள் நிரூபிக்காமலேயே எல்லோருக்கும் தெரியும். மடத்தனமான கடிதம்.  கிழித்து எறியலாம்', என்று நான் சொன்னேன்.  இவ்வளவு நிலைகுலைந்து அவரை நான் பார்த்ததில்லை. அனாமதேயக் கடிதங்கள் எப்பொழுதுமே வாசிக்கிறவர்களின் ரகசிய ஆசைகளோடும் பயங்களோடும் தான் பேசுகின்றன. கார்த்திகேயன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். இக்கடிதத்தை யார் எழுதியிருக்க முடியுமென்று அவர் மனதில் கணக்கு போடுவதாக நினைத்தேன்.  இது ஒரு துன்பக்கணக்கு.  இறுதியில் நாமே கூட நம்மைப் பற்றி ஒரு விழிப்பற்ற தருணத்தில் இக்கடிதத்தை எழுதியிருக்கமுடியுமென்று நம்மையே நம்ப வைக்கும் கணக்கு.

'யாராயிருக்குமென்று உங்களுக்கு ஏதாவது தோணுகிறதா?' அவரால் முடியாமல் என்னைக் கேட்டார்.

'யாரோவாவது இருந்துவிட்டுப் போகட்டும்.  அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது. சனியனை விட்டு தலை முழுகுங்கள்' என்றேன்.
'யாரோவாவது இல்லை, யாரோவே தான்' என்று கார்த்திகேயன் அந்தக் கடிதத்தை என் முகத்திற்கு நேராய் நீட்டினார்.  அதில் யாரோ என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. இதன் பின்பு தான் யாரோ மரபு குறித்து நாங்கள் அக்கறை கொள்ளத் தொடங்கினோம்.

முதலில் அது ஒரு மரபு தானா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது.  வேதெபோதெகமெ தான் அப்படியொரு மரபு இருந்ததாக எழுதுகிறார். அவருக்கு யாரோ பற்றி தகவல் சொன்ன யாரையும் இரண்டாவது முறை பார்க்க முடியவில்லை.  காணாமல் போகிறார்கள் அல்லது அப்படி யாரும் இல்லை. இதையெல்லாம் எழுதுகிற அவரும் அதன் பின்பு காணாமல் போகிறார். வேதெபோதெகமெ எழுதுவதில் இன்னொரு சந்தேகமும் இருக்கிறது.  யாரோ மரபை, எழுத்திற்கு எதிரான பேச்சு மரபாக அவர் கற்பனை செய்கிறார்.  இப்படி இருக்க முடியும் தான்.  பேச்சு மரபில் எல்லோருமே யாரோ தான்.  ஆனால், அது எழுத்திற்கு எதிரான குழுச்செயல்பாட்டைக் கொண்டிருந்த மரபா என்பதில் தெளிவில்லை.  நுண்ணரசியல் சார்ந்து யோசிக்கக்கூடிய ஆய்வாளர்களிடம் காணப்படும் குழப்பமாகக் கூட இது இருக்கலாம்.  நுண்ணரசியலின் விலங்குக்காட்சி சாலையில் பாம்பும் கீரியும் மட்டுமே இருக்கின்றன.  அது உலகை அருகம்புற் காடாகவே விவரிக்கிறது.

கார்த்திகேயனிடமிருந்து எஸ்கே என்ற சுருக்கக் கையொப்பத்துடன் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.  அதில் கொடுக்கப்பட்டிருந்த தொடரைச் சுட்ட Legacy of Incognitos  என்றொரு பக்கம் திறந்தது. வழக்கம் போல் மின்னஞ்சல் முகவரி சொல்லி பதிவு செய்யச் சொன்னார்கள்.  பதிந்ததும் ஒரே ஒரு பக்கம் உள்ள முகப்பு விரிந்தது. அந்த முகப்பு பக்கத்தில் இப்படி இருந்தது.

யாரோ பரம்பரை:

கி. மு. 600ல் முதல் யாரோ தமிழகத்தில் தோன்றினார்.  அவர் இன்றைக்கும் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.  அடையாளங்கள் மனிதர்களைக் கூறு போடுகின்றன என்பதை தொடக்க காலங்களிலேயே கண்டு கொண்ட யாரோ, கலந்து போவதை / ஒன்றோடொன்று மயங்கிப் போவதை தனது சித்தாந்தமாக முன் வைத்திருந்தார்.  அவர், இவர், உவர் என்ற பேதங்களுக்கு எதிராக நாம் முன்வைக்கும் அடையாளமே 'யாரோ'.

முதல் யாரோ இந்த உலகை ஒரு கவிதையைப் போல் அழகுடையதாக விளக்கினார்.  சொல்ல வரும் விஷயத்தை மறைக்கையில் கவித்துவமும், சொல்லும் நபர் தன்னையே மறைத்துக் கொள்கையில் யாரோவும் உருவாகுகிறார்கள் என்பது தான் நமது பாரம்பரியம்.  எனவே கவித்துவமும் யாரோவும் ஒன்றாய் தோன்றினார்கள்.  யாரோ நமக்கென்று செய்து தந்தது ஒரே ஒரு கவிதை தான்.  சுமார் 2600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட அக்கவிதையே இன்றைக்கும் நமது மரபை விளக்கிக் கொண்டிருக்கிறது. 
 
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.      - யாரோ


(உன் குடி வழி வேறு, என் குடி வழி வேறு.  உன் தந்தை வேறு, என் தந்தை வேறு. நீ யாரோ, நான் யாரோ.  நாம் ஒருவரையொருவர் அறிந்தவர் அல்ல.  ஆனாலும், செந்நிறத் தேரிக் காட்டில் பெய்த மழையைப் போல நம் நெஞ்சம் கலந்து பாதுகாப்பாய் இருக்கிறது.)

முதல் யாரோ எழுதிய இந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறியாத பிற்காலப் பண்டிதர்கள் இதனைக் காதல் பாடல் என்று கருதி தங்களது நூற்களில் இணைத்துக் கொண்டதும் அல்லாமல், யாரோவின் உள்ளர்த்தம் விளங்காமல், 'செம்புலப் பெயல் நீரார்' என்ற பெயரையும் இட்டு வைத்தார்கள்.  சிவப்பு நிறத் தேரிக்காட்டில் பெய்த மழை அம்மணல் குன்றுகளின் அடியில் போய் குளமாய் மறைந்து நிற்கிறது என்ற பொருளை அறியாததாலும், அடையாளங்களை கரைத்தவர் யாரோ என்பதை உணராததாலும் இது போன்ற குழப்பங்கள் தோன்றின.  யாரோவின் பாரம்பரியத்தைச் சார்ந்த நாம் அடையாளங்களுக்கு எதிரான நம யாரோவை முன்னிலைப்படுத்துவதில் ஒன்றிணைவோம்!'

இணையத்தில் இது போன்று கைக்கெட்டும் தூரத்திலான வேடிக்கைகள் சாத்தியம் தான் என்றாலும் கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது.  ஜன்னலுக்கு வெளியே நெடுந்தூரம் பார்க்க வேண்டும் போலிருந்தது.  வெளியே மழைக்கான தயாரிப்புகளுடன் மதியம், தன் வழக்கமான ஒப்பனைகளைக் கலைத்து விட்டு அமைதியாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தது.  இது போன்ற தருணங்கள் குழப்பமானவை. மதியமுமற்ற, மழையும் வந்திராத வெற்று மேடையை வெறித்துக் கொண்டிருப்பது போதிய பிராணவாயு கிடைக்காமல் நுரையீரல் விம்முவதைப் போலானது.  அப்படியானால் யாரோ மரபு உண்மை தானா என்று கேட்க கார்த்திகேயனை தொலைபேசியில் கூப்பிட்டேன்.  அவரைத் தொடர்பு கொள்ள முடியாத வருத்தத்தை யாரோ ஒரு பெண் மலையாளத்தில் பகிர்ந்து கொண்டாள்.
     
இதன் பின் சொல்லி வைத்தாற் போல கார்த்திகேயனுக்கும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் யாரோக்களின் அனுபவம் வாய்க்கத் தொடங்கியது.  பத்தொன்பது வயதில் தமிழ் நாடு பப்ளிக் கமிசன் தேர்வு எழுதி கார்த்திகேயனிடம் உதவி அலுவலராக பணியில் சேர்ந்த ஆத்தியப்பன், தனது பதினைந்து வருட பணிக்காலத்தில், முதல் முறையாக இரண்டு நாட்கள் சேர்ந்தார் போல் விடுமுறை எடுத்து, வங்கிக் கடனுதவியுடன் கட்டியிருந்த ‘முகில் மகாலுக்கு (கடைசி பையன் பெயர் முகிலன்) புதுமனைப் புகுவிழா நடத்திய அன்று இரவு, மொட்டை மாடியில் நட்சத்திரங்கள் பார்க்க படுத்திருந்தபடி, ‘இந்த ஊர்லயே பெரிய வீடு நம்ம வீடு தாண்டி.  எவ்வளவு அவமானம்! எவ்வளவு சண்டித்தனம்! சாதிச்சிட்டேம்ல என்று சொல்லி, எதிரில் இல்லாத அத்தனை எதிரிகளுக்கும் வெற்றிக்களிப்பில் பொது மன்னிப்பு வழங்கிக் கொண்டிருந்தான்.  அவன் மனைவிக்கு, ஒதுக்குப்புறமாய் வீடு அமைந்து விட்டதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், ஊருக்குள் முதல் காரை வீடு என்பதில் பெருமை தான்.  அதற்காக ஆத்தியப்பனைப் போல் ஊரின் பெரியதனக்காரர்களையெல்லாம் உடனடியாய் மன்னித்து விட அவள் தயாராயில்லை. ‘அவுகெல்லாம் பட்டு அழுந்துனா தான் சரி என்றே முடிவு சொன்னாள்.  ‘அந்தக் கண்றாவியப் போய் நாம ஏன் சொல்வானேன், அவரவர் செஞ்சது அவரவர் தலையில் விடியட்டும் என்றே ஆத்தியப்பன் அவளை சமாதானப்படுத்தினான்.

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு, கணவனும் மனைவியும் தத்தம் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாய் பூட்டை இழுத்துப் பார்த்துப் பூட்டினார்கள்.  சாயங்காலம் யார் சீக்கிரம் வருகிறார்களோ அவர்கள் மாடியிலுள்ள தொட்டியில் நீர் நிரப்ப வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  சாயங்காலம் சீக்கிரமாய் வீட்டிற்கு வந்தது ஆத்தியப்பன் தான்.  வந்து பார்த்த ஆத்தியப்பன் உள்ளே நுழைந்த அதே வேகத்தில் பதறிப் பின்னால் ஓடினான்.  வீட்டைச் சுற்றிலும் யாரோ வெளிக்கியிருந்து வைத்திருந்தார்கள். சில இடங்களில் அதைப் புதுச்சுவரிலும் விசிறி வைத்திருந்தார்கள்.  

'தொண்டை மண்டல சுவரெழுத்துகளும் ஓவியங்களும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் தனது மாணவர் ஒருவரை என்னிடம் ஆய்வு தொடர்பாக விவாதித்து வரும் படி ஒரு செவ்வாய்கிழமை மாலையில் கார்த்திகேயன் என்னிடம் அனுப்பி வைத்திருந்தார்.  மெலிந்த உருவத்துடன், மூக்காலேயே பேசிக்கொண்டிருந்த, தன்னை ஐராவதீஸ்வரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவ்விளைஞனுக்கு நவீன காலத்திலும் சுவரெழுத்துக்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் இருந்தது.  Latrinalia  என்று இதனைத் தனியாகவே இப்பொழுதெல்லாம் படிக்கிறார்கள் என்று நான் சொல்வதை அவன் எந்தவித ஆச்சரியமுமில்லாமல் கேட்டிருந்த பின்பு, தனது மூக்கொலியால், 'கொஞ்ச நாட்களாய் என்னை யாரோ கண்காணிக்கிறார்கள்' என்றான். 

இதற்கு நான் ஆச்சரியப்படுவேன் என்று அவன் நினைத்திருந்தால் ஏமாந்திருப்பான். 'யாரோ என் மின்னஞ்சல், அலைபேசி, முக நூல் என்று சாத்தியப்பட்ட அத்தனை வழியிலும் என்னைக் கண்காணிக்கிறார்கள்.  எத்தனை முறை என் கடவுச் சொல்லை மாற்றினாலும் அவர்களால் அதைத் திருடி விட முடிகிறது.  நான் யாரிடம் பேசுகிறேன், என்ன பேசுகிறேன், என்ன யோசிக்கிறேன் என்றெல்லாம் கூட அந்த யாரோவுக்கு தெரிகிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை', என்றான்.

இது ஒரு அதிகம் கவலைப்படத் தேவையில்லாத மனக்குழப்பம்.  ஆய்வின் அழுத்தத்தில் மனித சகவாசமே இல்லாமல் போய் விடும் சமயங்களில் இது போன்ற மயக்கங்கள் தோன்றுவது உண்டு.  ஒரு உள்ளுணர்வு போல முதுகுக்குப் பின் நிறைய நடப்பதாகத் தோன்றும்.  அதை நம்பாமலிருப்பது தான் சாமர்த்தியம்.  சாமர்த்தியசாலிகளை விட்டுவிட்டு அது விரைவில் அகன்று விடும்.  இதை நான் ஐராவதீஸ்வரனுக்குச் சொன்னதும், அவன் தன் பையிலிருந்து துண்டறிக்கை போலொன்றை என்னிடம் தந்து, 'அப்படியானால், என் அறைக்குள் வீசப்பட்ட இதையும் நம்பக் கூடாதா?' என்றான்.
அது ஒரு 1/4 டெமி அளவுள்ள அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு. 

யாரோவின் பொன்மொழிகள்

·         யாரோ நிர்வாணத்தை அணிந்தவர். அவரது நிர்வாணம், நிஜம் இல்லை; அது, நிர்வாணத்தின் போலி.
·         யாரோவின் தத்துவங்கள், தத்துவத்தின் சாயலைக் கொண்டவையே தவிர, தத்துவங்கள் அல்ல.
·         யாரோ அனுபவங்கள் இல்லாதவர், அதே நேரம் கணக்கற்ற அனுபவங்கள் வாய்த்தவர்.
·         யாரோவை யாரோவுக்கு அடையாளம் தெரிவதில்லை.  அதாவது, அவர் யாரோ என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.  அதனால், தன்னை வெளிப்படுத்துவதுமில்லை.
·         அவரை எப்பொழுதுமே பிறர் தான் யாரோ என்று அடையாளம் காணுகிறார்கள். பின்பு, யாரோ பேசுகிறார், யாரோ சிரிக்கிறார், யாரோ அழுகிறார் என்று எடுத்துச் சொல்கிறார்கள்.
·         யாரோ 'நான்' என்ற அகந்தையைத் துறந்தவர்.  நான் யாரோ இல்லை; யாரோ நான் இல்லை.
·         யாரோவின் படைப்புகள் வெகுளித்தனமானவை.  பலகீனத்தால் செய்யப்பட்டவை.
·         யாரோ தத்துவமும் புராணமும் கலந்த கலவை.  புராணம், புனைவின் உச்சமென்றும், தத்துவம், அறிவியலின் உச்சமென்றும் கருதப்படுகிறது.  எனவே யாரோ, உன்னதங்களின் உன்னதம்.

படித்ததும் நான் சிரித்தேன்.  பொன்மொழிகளை உற்பத்தி செய்வது இந்தியாவில் குடிசைத் தொழில் போல.  வண்ண நாட்காட்டிகள் முதல் ஓஷோ வரை இது போன்ற பொன்மொழிகள் உதிர்ந்து கிடக்கும் புண்ணிய பூமி இது. இதற்கெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லை.  இப்படி துண்டுக்காகிதங்கள் வராமல் போனால் தான் இந்த நாட்டைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் என்று ஐராவதீஸ்வரனிடம் சொன்னேன்.  அவன் இன்னும் கவலையை விடாத முகத்தைத் தான் வைத்துக் கொண்டிருந்தான். நான் எதையோ தவற விடுகிறேன் என்பது போல வேறு பார்த்தான்.  அதன் பின் அவன், 'அந்த யாரோ எஸ்கேயோ என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது', என்று சொன்ன போது, நான் அவனைக் கூர்மையாய் கவனிக்கத் தொடங்கினேன்.  அவன் முகத்தில் பொய் போன்றோ அல்லது கள்ளத்தனம் போன்றோ எதையும் ஒளித்து வைக்கும் கண்களை நான் பார்க்கவில்லை.  அவன் கண்கள் தயங்கின.  தொட்டுச் சுருங்கிய மரவட்டை நிமிர்வதற்கு எடுத்துக் கொள்ளும் அவகாசத்தின் கூச்சம் அதில் இருந்தது.

'எஸ்கே மீது எழுதப்பட்டிருந்த மொட்டைக் கடிதம் முதல் இந்த யாரோவின் பொன்மொழிகள் வரைக்கும் எல்லாமும் அவரே தான் செய்கிறார்.  Legacy of Incognitos   வலைத்தளம் முழுக்க முழுக்க அவருடைய உருவாக்கம். அதை நான் கண்டுபிடித்த நாள் முதல் என் மின்னஞ்சல், முகநூல் அத்தனையையும் வேவு பார்க்க ஆரம்பித்து விட்டார்.  ஆத்தியப்பன் வீட்டு சம்பவத்தை இத்தோடு இணைத்ததும் அவர் தான்.  எனக்கு அவரைக் குறித்து பயமாக இருக்கிறது.  அவர் தன்னை எஸ்கேயாக நினைக்கவில்லை.  இப்பொழுதெல்லாம் யாரோவாக நினைத்துக் கொள்கிறார்'. 

'யாரோவாக என்றால்...?'

'யாரோ மரபின் தொடர்ச்சியாக.'

'அப்படியொரு மரபு இருந்ததாகவே இன்னும் முடிவாகவில்லை, என்றேன் நான்.  ‘இன்றைய சூழ்நிலைக்கு அது ஒரு கற்பனையாக இருப்பதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம்.  ஒரு வேளை, ஞாபகமிருக்கட்டும் ஒரு வேளை, அப்படியே அது நிஜமாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் யாரோவாக இருக்க முடியும் என்பது தானே திட்டம்.  இந்த சந்தேகத்தை இப்படியே விட்டு விடுவது நல்லது ஐராவதீஸ்வரன். என்னிடம் சொன்ன மாதிரி யாரிடமும் போய் இதைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்' என்று எச்சரித்து அவனை என் அறையிலிருந்து வெளியே அனுப்பி விட்டுத் திரும்பிப் பார்த்தால் கார்த்திகேயன் மீதான ஒரு சிறு சந்தேகம் எனக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது.  நேரமாக ஆக அந்த சந்தேகத்தின் புளிப்பு நெடி மூக்கு உள்ளறைகளில் ஏற்படுத்தும் காரத்தில் அத்தனை வருடத்து நல்லெண்ணமும் பொசுங்கி வழிகிறது.  நல்ல வேளையாக அன்று மாலையே கார்த்திகேயன் தொலைபேசியில் அழைத்தார். 
 
எடுத்த எடுப்பில், 'கவனித்தீர்களா? ஐராவதீ யாரோவாக மாறிக்கொண்டிருக்கிறான்' என்றார்.

'அவனுக்கு உங்கள் மீது தான் சந்தேகம். நீங்கள் தான் யாரோ என்று என்னிடம் சொல்ல வந்தான்'.

'யாரோக்கள் இப்படி தான் உருவாகுகிறார்கள்.  முதலில் ஒரு யாரோவை சந்திக்கிறார்கள். அதற்கப்புறம் யாரையாவது யாரோவா என்று சந்தேகப்படுகிறார்கள்.  இறுதியாய் தானே யாரோவாகிறார்கள்.'

கார்த்திகேயன் சொல்வது எனக்குப் புதுசாய் இருந்தது.  'இப்படி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  சரியாகச் சொன்னால், யாரோ மரபு பற்றி நமக்கு சந்தேகம் தான் இருக்கிறதே தவிர வேறொன்றும் தெரியாதே?'

'Legacy of Incognitos தளத்தைப் பார்த்தீர்களா இல்லையா?  அதில் தான் இவ்வளவும் போட்டிருந்ததே!  நான் தானே உங்களுக்கு லிங்க் அனுப்பினேன்.'

'அதில் குறுந்தொகைக்கு கொஞ்சம் மாற்றிப் போட்டு விளக்கம் சொன்னதைத் தவிர வேறு ஒன்றும் இல்லையே!' முகப்பு பக்கத்தை மட்டுமே தான் நான் பார்த்ததாய் ஞாபகம். அதைத் தான் கார்த்திகேயனிடம் சொன்னேன்.

'ஓ... அது என் தவறு தான்.  நீங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தீர்களா?'

'ஆமாம். தளத்தைப் பார்க்க மின்னஞ்சல் கொடுத்து பதிவு செய்யச் சொன்னது.  அதற்கப்புறம் தான் முகப்பு பக்கத்தைக் காட்டியது'.

'இது அடையாளமற்ற யாரோக்களின் தளம்.  முகவரியுள்ளவர்களுக்கு முகப்பு வரை மட்டுமே அனுமதி.  மின்னஞ்சல் முகவரி இல்லை என்று சொல்லியிருந்தால் உங்களால் முழு தளத்தையும் பார்த்திருக்க முடியும்.

‘இவ்வளவு தீர்க்கமான கட்டமைப்பு கொண்டவர்களா யாரோக்கள்?

‘நான் சொல்லியிருக்க வேண்டும்.  தப்பு என் பக்கம் தான்.  இனி உங்களால் அதன் தளத்திற்குள் திரும்ப நுழையமுடியுமா என்று தெரியவில்லை.'

‘அப்படியொரு மரபு இருக்கிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா கார்த்திகேயன்?

‘யார் சொன்னால் நம்புவீர்கள்? வேதெபோதெகெம்? ஆனால் அவருக்குத் தான் தான் வேதெபோதெகெம் என்பதே ஞாபகத்தில் இல்லை.  தன்னை யாரோ என்கிறார்.

'சரி, ஐராவதீஸ்வரன் இதற்குள் எப்படி வருகிறான்? அவனுக்கு உங்கள் மீது ஏன் சந்தேகம் வர வேண்டும்?'

‘நமது உரையாடல்களிலிருந்து யாரோக்கள் பற்றி கேள்விப்பட்ட ஐராவதீ தற்செயலாய் அப்படி ஒருவரை சந்தித்திருக்கிறான்.  தனது அனுபவத்தை அந்தத் தளத்தில் பதியவும் செய்திருந்தான்.  அந்தத் தளம் யாரோக்கள் குழுமும் இடமாக இருக்கிறது.  கொஞ்சம் பொறுங்கள் அவன் யாரோவை சந்தித்த அனுபவத்தை நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்' என்று கார்த்திகேயன் தொலைபேசியைத் துண்டித்தார்.  அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கார்த்திகேயனிடமிருந்து அந்த அஞ்சல் வந்தது.

யாரோவின் காட்சி

'ரகசியங்கள்  ததும்பும் பெருமூச்சுகளின் அழுக்கான உப்பு நுரைகளால் பின்னப்பட்டு, அதிகாலை நேரத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோர்த்து செய்யப்பட்ட நிர்வாணத்தை அந்த மனிதர் கழுத்திலிருந்து பாதம் வரை ஆடையாக போர்த்தியிருந்தார். அது அவரின் மீது வழிவதும் கலைவதுமாக இருந்தது. என் கைகளிலிருந்த சுருட்டை சுண்டியெறிந்து விட்டு நான் அவரைப் பார்த்த போது, அவரும் என்னைப் பார்த்தார். போலும் இருந்தது என் பின்னால் வேறு எதையோ பார்ப்பது போலும் இருந்தது.  அவருக்கு நேர்கொண்ட பார்வையாக இல்லை.  விலங்குகளைப் போல அவர் பின்னிருந்து முன்னாக உலகை இரண்டாக வகுந்து பார்ப்பது போல் பார்த்தார்.  நான் அவருக்கு வணக்கம் சொல்லி, 'யாரோ தானா நீங்கள்?' என்றேன்.

அவர் உடனடியாகப் புன்னகைத்தார்.  எட்டி என்னருகில் வந்து, தன் கைகளால் என் கைகளைப் பற்றிக் கொண்டார்.  எனக்கு அசௌகரியமாக இருந்தது.

என் உடல் எல்லைக்குள் அவ்வளவாக யாரையும் அனுமதிக்காத முசுடு நான்.  என் கைகளை விடுவேனா என்கிறார்.  அவரது வலது கை ஜில்லிட்டும் இடது கை வெதுவெதுப்பாகவும் இருந்தது வேறு என்னை குழப்பத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. 

யாரோ தான்!

என் கைகளை அணைத்துக் கொண்டிருந்த அவர் கைகள் தள்ளாடுவது போல் நடுங்கின.

'நீங்கள் ஆரோக்கியமாய் இல்லை'.  என் குரல் தேவையின்றி கமறிச் சிதறி ஒலிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதற்கு அவர் சிரித்தார்.  'யாரோ எப்பொழுதுமே பலவீனன்  தான்' .

'எனக்கு உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது' ,  நான் சொன்னேன்.

'எல்லோருக்குமே யாரோவிடம் கேட்பதற்கு ஏதாவது இருக்கத்தானே செய்கிறது. கேள்.'  இந்த இடத்தில் யாரோ மீது எனக்கு எரிச்சல் வந்தது. இவ்வளவு சீக்கிரம் ஒரு அந்நியரை ஒருமையில் அழைக்க ஆரம்பிக்கலாமா?

'நீங்கள் அடையாளங்களை வெறுப்பதாய் சொல்லப்படுகிறது.  ஏன் அப்படி இருக்க வேண்டும்? அடையாளங்கள் தானே வாழ்க்கையை எளிமையாக்குகின்றன?'

யாரோ தனது வகிரும் கண்களால் என்னைப் பார்த்தார்.  இத்தனை நேரம் தன் கைகளுக்குள் வைத்திருந்த என் கைகளைத் திரும்பித்தந்தார்.  ஒரு வித நிம்மதியோடும் கூச்சத்துடனும் என் கைகளை நான் திரும்ப வாங்கிக் கொண்டேன். இப்பொழுது நினைத்தால் வெடுக்கென்று வாங்கி விட்டேனோ என்று கூட சந்தேகமாயிருக்கிறது.

அவர் என்னைப் பார்த்து, 'யாரோ அடையாளங்களைக் காதலிக்கிறாள்.  அவன் தான் என்னை விடுகிறான் இல்லை' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து போனார். 
 
நடந்து செல்லும் அவரைப் பார்க்கையில், அதுவரையில் நான் உணர்ந்திராத, பெண்ணிற்கான ஏதோவொரு சிறு சாயல் அவரிடம் இருப்பதாய் பட்டது.'  - ஐராவதீஸ்வரன்.

இதை வாசித்து முடித்ததும், Legacy of Incognitos தளத்திற்கு மீண்டும் சென்று பார்த்தேன்.  எடுத்த எடுப்பிலேயே அத்தளம் என்னைப் பெயர் சொல்லி அழைத்து, தன்னைத் திறந்து காட்டியது.  அதே முகப்பு, யாயும் ஞாயும்! அதில் இருப்பதாய் சொல்லப்படும் மீத பக்கங்களை என்னால் பார்க்க முடியவில்லை. 

அந்தப் பக்கங்களைக் கார்த்திகேயனை அனுப்ப சொல்லலாம் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டால், யாரோ ஒரு ஆண் தெலுங்கில் வருத்தம் தெரிவித்தார். அதன் பின் எஸ். கார்த்திகேயன் என் தொடர்பு எல்லையிலிருந்து அனைத்து இந்திய மொழிகளிலும் விலகியே சென்றார்.  இரண்டு மூன்று முறை ஐராவதீஸ்வரனை சந்திக்க நான் எடுத்த முயற்சிகள் கட்டிட வளைவுகளுக்கிடையிலான சிறு பிள்ளைகளின் விளையாட்டாய் மாறின. ஒரு கட்டத்தில் நான் அனாதரவாய் உணரத் தொடங்கினேன்.
   
காடு இருந்ததற்கான அடையாளம் போல் மரங்களின் கருகிய அடித்தூர்களை மட்டுமே தொலைதூரம் வரை கொண்டிருந்த, காற்றில் சாம்பல் நெடி ஏறியிருந்த வனாந்தரத்தில் திடீரென்று யாரோ என்னைத் தொலைத்து விட்டது போல் உணர்ந்தேன். அப்பொழுது தான் கரும்பப்பட்டதால் அறுக்கும் தாள்களைக் கொண்ட புல்தரையில் துடிக்கும் படி விடப்பட்ட, சிறு குழந்தையாய் விக்கிக்கொண்டிருக்கும் மீனைப் போல நான் இருப்பதாக உங்களைக் கற்பனை செய்யச்சொன்னால் நம்புவீர்களா என்று தெரியவில்லை, ஆனால் என் நிலை அதற்கும் ஒரு படி மேலே கவலைக்குறியதாக இருந்தது. யாரோ பற்றியும் அப்படியான மரபு பற்றியும் அறிந்து கொள்ள விரும்பும் மனிதன் முதலில் அவனது அடையாளத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்றால், அதைத் தெரிந்து கொள்வதன் மூலம் இப்போதிருக்கும் அவனுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?