Skip to main content

பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை / வசனம் எழுதாதது யாருடைய தவறு?



பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை / வசனம் எழுதாதது யாருடைய தவறு?


 



பொதுப்புத்தியிலிருந்து சம அளவு விலகியிருந்த அல்லது விலக்கப்பட்டிருந்தவர்கள் MSS பாண்டியனும் ருத்ரையாவும் (இந்தப் பதிவை இப்படி வேறொரு மூலையிலிருந்து ஆரம்பிக்க என்னை அனுமதியுங்கள்). 
 
பாண்டியனின் எழுத்துகள் எப்படி கல்வி நிலைய வளாகங்களைக் கடக்கவில்லையோ அதே போல் ருத்ரையாவின் படங்கள் மாற்று சினிமா வெளியைக் கடக்கவில்லை.  இதில் ஏதும் தவறு இருப்பதாக நினைக்கவில்லை;  குறை சொல்வதற்கும் எதுவுமில்லை.  ஏனென்றால், இரண்டுமே, வாசகராய் இருப்பதற்கும் பார்வையாளராய் இருப்பதற்கும் சற்று அதிகப்படியான பொறுமையை வேண்டுபவை.

ஆனால், இவ்விருவரின் மறைவையும் தமிழகத்து பெரும் பத்திரிகைகள் எவ்வாறு கையாண்டன எனபது நிச்சயமாய் ஆரோக்கியமானதல்ல என்பது மட்டும் நமக்குத் தெரியும்.  ருத்ரையாவிற்கு வருகிற இரங்கல் கட்டுரைகளில் கால்வாசி கூட பாண்டியனுக்கு வரவில்லை.  அதுவும் கூட செல்வா கனகநாயகத்திற்கும் எஸ்பொவிற்கும் வரப்போவதில்லை.
இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

ருத்ரையாவின் மறைவிற்கு தெரிவிக்கப்படுகிற வருத்தங்கள், ஆதங்கங்கள் எல்லாமே அவர் ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீபிரியா போன்ற திரைக்கலைஞர்களை வைத்து திரைப்படம் எடுத்தார் என்பதனால் தானா? அந்தப் படத்தில், ஒரு வேளை, முழுக்க முழுக்க முகம் தெரியாத / முகவரி இழந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தால் ருத்ரையாவின் மறைவை நமது வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்குமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இத்தனைக்கும் பாண்டியன் எழுதிய கட்டுரைகளும் நூற்களும் வெகுஜன ஊடகங்களைப் பற்றியும், வெகுஜன இயக்கங்களைப் பற்றியும் தான்.  எம்ஜியார் பற்றி அப்படி என்ன தான் இந்த பாண்டியன் தனது image trap ல் எழுதிவிட்டார் என்று யாருக்கும் தோன்றவில்லை.  திராவிட சித்தாந்தத்தையும் இயக்கங்களையும் குறித்து ஆங்கிலம் பேசும் அறிவுலகில் தொடர்ந்து விவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த அவரது மறைவு எந்தத் திராவிடக் கட்சியையும் அசைத்துப் பார்க்கவில்லை. 

****

தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு முறை தனது அறிஞர்களையும், கலைஞர்களையும் இழக்கும் பொழுதும், இது போன்ற சொரணையற்றத் தன்மையையே ஏன் கொண்டிருக்க வேண்டும்?

இதோ இப்பொழுது, செல்வா கனகநாயகமும், எஸ். பொ.வும் மறைந்த செய்தி வந்திருக்கிறது.  இவர்களெல்லாம் யார் என்று தான் 'தமிழ் வெகுஜன வாசகன்' கேட்கிறான் என்று சொல்கிறார்கள். அவனுக்கு குஷ்பு காங்கிரசில் சேர்ந்ததும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதும், அவ்வாறு வந்தால் குஷ்புவும் ரஜினியும் கூட்டணி வைப்பார்களா என்பதும், அக்கூட்டணி அண்ணாமலை போல இருக்குமோ என்பதும் தான் கவலை என்று சொல்லப்படுகிறது.  இப்படி விரல் சூப்பும் வாசகர் எங்கே தான் இருக்கிறார்?

பாண்டியன், செல்வா போன்றவர்களை வெகுஜன ஊடகங்கள் ஏன் கண்டுகொளவதில்லை என்ற கேள்விக்கு, அவர்கள் பிரபலங்கள் இல்லை என்பதால் செய்திக்கான மரியாதை இல்லாதவர்கள் என்று கொஞ்ச காலம் முன்பு வரை சமாளித்துக் கொண்டிருந்தது போல இப்பொழுதும் முடியாது,

ஏனென்றால், யார் யார் பிரபலம், யார் யார் முக்கியஸ்தர்கள், யார் யார் அறிஞர்கள், யார் யார் விவாதிக்கிறவர்கள் என்பதை மக்களோ, அவ்வூடகங்களின் முதலாளிகளோ தீர்மானிப்பதை விடவும் அதில் எழுதக்கூடிய இதழாளர்களே அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்பதை எல்லோருமே அறிவோம். 
 
தமிழ் இதழியலில் இன்றைக்கு முன்வரிசையில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் பாண்டியனையும், செல்வாவையும், எஸ்பொவையும் நன்றாகத் தெரிகிறது அல்லது முயற்சி செய்தால் அடுத்த கணமே தெரிந்து கொள்ள முடிகிறது.  ஆனாலும், இவர்களைத் தெரியாது என்று சொல்வதில் அடையக்கூடிய கிளுகிளுப்பு (அதாவது, தான் எதுவுமறியாத சாமானியன் என்று ஒப்புக்கொள்வதன் மூலம் அடையக்கூடிய கௌரவம்) அவர்களுக்கும், தமிழ் இதழியலுக்கும் தேவைப்படுகிறது.

தமிழ் journalist  ஒரு வேடிக்கையான பிறவி.  அவன்/ள் சீரிய இதழ்களைப் படிப்பார்; இலக்கியங்களை வாசிப்பார்; வெளிநாட்டுத் திரைப்படங்களை விழுந்து விழுந்து பார்ப்பார்; ஆனால், பேனாவைத் திறந்தால் மட்டும் தமிழ்த் திரைப்படங்களைக் கடந்து தனக்கு எதுவும் தெரியாது என்ற தோரணையில் எழுதுவார்.  நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும், நடிகர்களின் பஞ்ச் வசனங்களையும் சிலாகித்துப் பேசுவார்; அதையே வெவ்வேறு தருணங்களில் பயன்படுத்தி பொதுப்பேச்சாகக் கட்டமைப்பார்; இடைக்கிடை தமிழ் நாட்டில் தான் இப்படி கேவலம், மலையாள நாட்டில் இப்படி இல்லை என்பார்.  கடைசியில் நேருக்கு நேராய் நீயுமா இப்படி என்று கேட்டால், இதைத் தானே வாசகர் விரும்புகிறார் என்பார்.
ஆனால்,  தமிழ் திரைப்படங்களின் மீது வெறி கொண்ட அப்படி வாசகர்கள் எங்காவது இருக்கிறார்களா என்றால் எங்கும் இல்லையென்பது தான் உண்மை.  நடிக, நடிகையரின் பித்து பிடித்த ரசிகர்கள் தமிழகத்தில் உண்டு.  ஆனால் அவர்கள் யாரும் வாசகர்கள் இல்லை.  அவர்களின் வாழ்க்கை இன்னொரு தளத்தில் தத்தம் எல்லைகளிலான அதிகாரக் கனவுகளோடு நகர்ந்து செல்கிறது.  அவர்கள் தங்களது விருப்ப நடிகரின் படம் இந்த இதழில் வந்திருக்கிறது என்பதைக் கடந்து எந்த வித ஈடுபாட்டையும் இதழ்களின் மீது காட்டுவதில்லை.

ஆனால், அப்படியொரு பாமர, வெகுஜன, திரைப்பட மோகம் கொண்ட, மொன்னையான, முட்டாள் வாசகன் இருப்பதான பாவனையில் நமது இதழியலாளர்கள் எழுதிக்கொண்டிருப்பதும், அதே மன நிலையைச் சார்ந்தவன் தான் நான் என்று அடிக்கடி வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருப்பதும் தான் அந்தக் கற்பனையான வெகுஜன வாசகரை உருவாக்குகிறது என்பதை என்றாவது இவர்கள் உணர்வார்களா என்று தெரியவில்லை.

இவ்வாறு, தமிழ் இதழியல் உருவாக்கி வைத்துள்ள அந்தக் கற்பனையான தமிழ் வாசகனுக்குத் தான் பாண்டியன், செல்வா, எஸ்பொ மறைந்தது பற்றியெல்லாம் கவலையில்லை. அதனால், இவற்றிற்கு செய்திக்கான மரியாதையும் இல்லை.

தமிழ் இதழியலாளர்களின் குணாம்சம் இதுவென்றால், அவர்களது பொதுக் கனவு ஒன்று உண்டு - அது தமிழ்த் திரையுலகிற்குள் எப்பாடு பட்டாவது நுழைந்து விடுவது.  அதற்கான வழிமுறைகளில் ஒன்று - தமிழ் இதழியல்!   

குமுதம், ஆவி, குங்குமம், இந்தியா டுடே என்று இதழ்களில் வேலை செய்வதன் மூலம் திரையுலகப் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்து அப்படியே நாலைந்து எருமைமாடு வாங்கி, பால் கறந்து, தயிராக்கி வித்து, வெண்ணெய் எடுத்து வித்து, ஒரு பெரிய எருமைப் பண்ணையே ஏற்படுத்தி, யாராவது ஓசிக்கு மோர் கேட்டால் எட்டி தான் உதைப்பார்கள். 

இந்த மனோபாவம் தான் தமிழ்த் திரைப்படத் தொழிலோடு சம்பந்தப்பட்டிராத எதையும் நான் எழுதமாட்டேன் அல்லது தெரிந்து கொண்டிருக்க மாட்டேன் என்ற கடிவாளத்தை மாட்டிக்கொளவதோடு நிற்காமல், அதை மீறி செயல்படுகிறவர்களைப் பற்றிய நையாண்டியையும் உற்பத்தி செய்ய வைக்கிறது. (சாரு, எஸ்ரா, மபு, ஜெ போன்றவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள், வம்புகள் எல்லாம் இந்த வகையைச் சார்ந்தவை தான்).

திரிஷாவிற்கு திருமணம் என்ற செய்தி கேட்டு பரபரப்பாகும் இந்த இதழியலாளர்களை, தொபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபிழைப்பு எடுத்து வந்ததையும், பிரபஞ்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சாரு மருத்துவமனையில் இருந்ததையும் பொதுஜனத்திற்கு சொல்வதிலிருந்து யார் தடுத்தார்கள் என்றால், அவர்களே தான்!  அவர்கள் மனதிற்குள் உட்கார்ந்திருக்கும் கற்பனையான அந்த வாசகன் தான்!

இது தான் சாஸ்வதம் என்றால், பேசாமல் தமிழ் நாட்டில் எழுதத் தெரிந்த எல்லோரையும் செத்து மடிவதற்குள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திலாவது (அதுவும் பிரபல நடிக நடிகையரின் படங்களில்) பணியாற்றும் படி கேட்டுக்கொள்ளலாம்.  கட்டாய ராணுவப் பணியைப் போல் கட்டாயத் திரைப்பட பணியை ஏற்படுத்தினால் கூட இந்தத் தமிழ்ச்சமூகம் பிழைத்துப் போகும்.  (அய்யோ....! இந்தத் திராவிடக் கட்சிகள் 'அம்மா / அய்யா திரைப்பயிற்சி' என்று இதைச் செய்தாலும் செய்யும்!)

Comments

Anonymous said…
எந்த நாட்டில் இது போன்ற பிரச்சினை இல்லை? எல்லா ஊரிலும் கவர்ச்சி மட்டுமே பிரதானம். புத்திசாலிகளாய் சொல்லிக் கொள்கிற கேரளத்தில், மலையாளக் கவர்ச்சிகளைக் காட்டிலும் தமிழ் கவர்ச்சி அதிகம். அனைத்தையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. விலை போகும் பொருள் விற்கப்படுகிறது, அதிகம் உற்பத்தியாகிறது. தமிழில் தொழிற்சாலையும் உண்டு, சந்தையும் உண்டு. ஆனால், கேரளாவில் சந்தை மிகச் சிறியது எனவே குடிசைத் தொழில்தான். தொழிற்சாலைக்காக தமிழத்தை தான் நம்பியிருக்கிறார்கள். பால், முட்டை மட்டுமல்ல், சினிமாவிலும் தான்.

குருபரன்
கடந்து வந்த நாடுகளில் நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் ஒரு பகுதியோ சில தனியான தொகுப்புக்கள், (வாரமலர், சிறுவர் மலர் போல) அல்லது சில தனியான வெளியீடுகளோ ஒவ்வொருதடவையும் இலக்கியம் குறித்து தனியாக, பொருளாதாரம் குறித்து தனியாக இடம்பெறும்.
அறிவுசார் உசாவல்களில் அதி உச்சம் தமிழகத்தில் திரைப்படமாகிவிடுவதையே நீங்கள் எள்ளியிருக்கிறீர்கள். அது சரியேதான் எனப்படுகிறது.
பெரும்பாலான அதியுச்ச நிலைகளை எத்துறையில் எட்டினாலும் திரைப்படத் தொடர்பு தான் அங்கு உயர் மதிப்பு.
ராமசாமி, கே.ஏ.குணசேகரன்....பிறகு ஒரு தடவை விக்கிரமாதித்தனைக்கூட உட்கார வைத்தார்கள்....ஒரு காட்சியில்... அப்புறம் ஆர்மோனியம் வாசித்த சாரு...பட்டிமன்றச்சிங்ககங்கள் மீசையற்று வந்துபோன சில படங்கள் என ஆயிரம் இருக்கு....
பல எழுத்தாளர் சிந்தனையாளர் கல்வித்துறையோர் உயிரோடு இருந்திருந்தால் இந்த இடத்தில் இழுத்துக் கொண்ட வந்து விட்டிருப்பார்கள்.
ஆனால் பாருங்கள்...ஓர் உச்சமான சினிமாக்காரனையே ஏமாத்திக் கக்கத்தில் வைத்துக்கொண்டு நடைபயிலும் ஆட்களையும்தான் பார்க்கிறோம்.
ஆதற்கு பெரும்பாலும் அந்தமாதிரி எழுத்தாளர்களிடமிருந்து எவ்வித பயமும் இன்றி வெளியில் வந்து விழும் கருத்து முத்துக்கள் தான் காரணம். அறியாப்பிராணிகளான பலர் இவர்கள் 'பீலாவை' அப்படியே நம்பி இவர்களை குருவாகவோ மருவாகவோ வைத்துக்கொள்கிறார்கள்.
ம்...
ருத்திரையாவின் விதியைப் பார்த்தீர்களா?
இதுவரை அவரைத் தனியாக எடுத்து புகைப்படத்தைப் பார்க்கவில்லை. எல்லாம் மற்றொரு நடிகருடன் இருக்கையில் எடுத்ததை வெட்டி ஒட்டியது.
ஒரு தனியான புகைப்படம் எடுக்கும் தகுதியைக்கூட இந்த பத்திரிக்கை உலகம் அவருக்கு கொடுத்து வைத்திருக்கவில்லை. ஆனால் பத்தி எழுத்துக்களுக்கான பேசுபொருளாக எத்தனைபேர் அவரைப்பற்றி எழுதியிருப்பார்கள்.
பத்திரிக்கைகளை இன்று சாடுகிறோம்....திராவிட கழகங்கள் இந்தப் போக்கிற்கு வழிகாட்டியாக இருந்தன. ஆனால் அவர்கள் 'மக்கள் ரசனை' என்ற ஒன்றில் பழியைப்போட;டு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
Unknown said…
மக்கள் ரசனை என்ற பெயரில், காமமும், கள்ளக்காதலும், குரோதமும் பிரதானபடுத்த படுகின்றன. நல்லதை காண்பிக்க நன்மனமும் நற்சிந்தனையும் வேண்டும்.. வியாபார நோக்கில் போகும் ஊடகங்களை என்னவென்று சொல்ல.. உடலை விக்கும் தொழில் செய்வதை போன்றது

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக