Skip to main content

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன்.
‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம்.
‘நீயா?’
‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள்.
நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள்.
அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார். 
சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!  
அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன்.


************
நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.  
'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.    
நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்களுக்கு ஏது ஓய்வு?  ஒரு குறிப்பிட்ட வயதில் ‘கழற்றி விடப்படுவார்கள்’ அவ்வளவு தான்! 
உடலில் மினுமினுப்பு குறைந்தால் போதும், 'இவரையேப் பார்த்துப் பார்த்து போரடிக்கிறது' என்று நாட்டுப்புற கலாரசிகர்கள் சலிக்க ஆரம்பிக்கிறார்கள்.  அதன் பின் அக்கலைஞர் ஒரு மயிரைப் போல உதிர்ந்துவிட வேண்டும்.  
மாரியம்மாள் அப்படியொரு ‘ஓய்வு பெற்ற’ கரகாட்டக் கலைஞர்.  அவர் எவ்வாறு ஒரு கரகாட்டக் கலைஞராக உருவானார் என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக வந்திருந்தேன்.  எனக்காக அவர் ஒரு கதையையும் வைத்திருந்தார்.  
அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதையை நான் ஏற்கனவே கேட்டது போலவே இருந்தது.  வேறு யார் யாரெல்லாமோ சொல்லியிருக்கிறார்களோ? இன்னும் கூட யாராவது வந்து இதே கதையை தன் கதையாகச் சொல்லக்கூடும்.  அப்படியொரு சாகாவரம் பெற்ற கதை அது!  ஒரே வாழ்க்கையை எப்படித் தான் இத்தனை பேர் வாழ்கிறார்களோ?  மாரியம்மாளின் கதைக்கு தொன்மச் சாயல் இருந்தது. 
********************
மாரியம்மாளின் கதை - 
மாரியம்மாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய ஊரில் பிறந்திருந்தார். அவரது தந்தை 'மேளக்காரர்'.  பிழைப்பிற்காக குடும்பம் திருச்சிராப்பள்ளிக்கு குடியேறியிருந்தது.  
மேளக்கார தந்தை சிறுவயதிலேயே இறந்து போகிறார்.  அதனால், மூன்றாம் வகுப்பிற்கு மேல் அவரைப் படிக்கவிடவில்லை.  சொந்தக்காரர்களின் வீட்டில் 'பிள்ளையெடுக்க' அனுப்பி வைத்தார்கள்.  இதனிடையே தாயும் இறந்து போகிறார்.
வரிசையாக அண்ணன்களுக்கு திருமணம் நடக்கிறது.  முடிந்த கையோடு ஒவ்வொருவரும் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்கிறார்கள். தம்பி தங்கைகளைக் காப்பாற்றும் பொறுப்பு மாரியம்மாளின் தலையில் விடிகிறது.  
இதனால் மாரியம்மாள், கரகாட்டக் கலைஞராக மாறுகிறார். மேளக்கார தந்தையின் மரபணுக்கள் அவரது உடலிலும் ஓடத்தானே செய்யும்! 
கரகாட்டத்தில் ஓரளவு வருமானம் வருகிறது.  இதனிடையே திண்டுக்கல்லில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து அவருக்குக் கட்டி வைக்கிறார்கள்.  திருமணம் முடிந்த இரண்டே வருடங்களில் கணவர் இறந்து போகிறார்.  மாரியம்மாள் மீண்டும் தனிமரமாகிறார்.
மாரியம்மாளின் ஒரு தம்பி மதுரையில் இருந்தார்.  அவரைத் தேடி மதுரைக்கு வருகிறார்.  மீண்டும் கரகாட்டம் ஆட ஆரம்பிக்கிறார். 
இந்த சமயத்தில் மரக்கடை முதலாளி ஒருவருடன் மாரியம்மாளுக்கு நட்பு ஏற்படுகிறது.  அந்த முதலாளி ஏற்கனவே திருமணமானவர்.  எனவே நட்பாக மட்டுமே அது தொடர்கிறது!  நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! மாரியம்மாள் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிறார்.  வழக்கம் போல, மாரியம்மாளின் முதலாளி 'அது தனக்குப் பிறந்தது அல்ல' என்கிறார்.  
மீண்டும் சாப்பிட்டிற்கு வழியில்லை.  சின்ன சின்ன எடுபிடி வேலைகள் செய்தே  குழந்தையை வளர்க்கிறார்.  குழந்தைக்கு இரண்டு வயதானதும் மீண்டும் கரகாட்டம் ஆடத் தொடங்குகிறார்.  அப்படியே குழந்தையைப் படிக்கவும் வைக்கிறார்.  
இதனிடையே மாரியம்மாளுக்கும் வயதாகி விடுகிறது.  ஆகும் தானே!  இதனால் வாய்ப்புகள் குறைகின்றன.  ‘உன் பெண்ணை வேண்டுமானால் ஆடுவதற்கு அழைத்து வாயேன்’, என்று யோசனை சொல்கிறார்கள்.  அப்பொழுது அந்தக் குழந்தைக்கு, வயது பனிரெண்டு .  எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.  
படிப்பை அப்படியே நிறுத்தினார்கள். மறு நாள் முதல், அந்தச் சிறுமி கரகாட்டக் கலைஞரானாள்.
*******************
'இதோ இவ தாங்க அந்தப் பொண்ணு.  இப்போ பதினாலு வயசு ஆகுது.  கடந்த இரண்டு வருசமா இவ சம்பாரிச்சி தான் நாங்க சாப்பிடுறோம்' என்று மாரியம்மாள் காட்டிய பெண் தான் கௌசல்யா.
திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா. தனது வரலாற்றை தானே  கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு ‘கதையில் வரும் அபலைப்பெண் நான் தான்!’ என்பது உரைத்த மாதிரியே இல்லை.  அபலைப் பெண்ணின் முக பாவம் எது என்ற அறியாமையாக இருக்கலாமோ என்று நினைத்தேன்.  சிறுமி தானே!  முகத்தை எப்படித் தான் வைத்துக் கொள்வதாம்? 
மாரியம்மாள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.  வறுமையே தன்னை இவ்வாறு சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்பதை அவர் விதவிதமாகச் சொல்ல முயன்றார்.  ‘தனது குழந்தை சம்பாதிக்க, உட்கார்ந்து சாப்பிடும் கொடுமைக்காரி தான் இல்லை; உயிர் பிழைத்திருக்க இதை விட்டால் எங்களுக்கு வேறு வழியே இல்லை; விருப்பமில்லாமல் தான் இந்தக் கரகாட்டத் தொழிலை நான் செய்தேன், இப்பொழுது என் மகளும் செய்கிறாள்' என்பதாக அதை நான் விளங்கிக்கொண்டேன்.
’கலையாவது மண்ணாவது! சாப்பாட்டுக்கே வழியில்ல’ என்பது தான் அதன் சாராம்சம்.  ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. இரங்கியும், குழைந்தும், மருண்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.  
அப்படியானால், நாட்டார் கலைஞர்கள் பசியிலிருந்து தான் உருவாகுகிறார்களா?  
இதை அத்தனை சுலபமாய் ஜீரணிக்க முடியும் என்று எனக்குப் படவில்லை.  
நான் அருகிலிருந்த கெள்சல்யாவைப் பார்த்தேன்.  அவள் இன்னும் மருளுவதை நிறுத்தவில்லை.  பேசச் சொன்னால், 'நான் நல்லா ஆடுவேன், சார்' என்பது போல் எதையாவது சொல்லத் தயாராக இருந்தாள்.  நல்ல வேளையாக நான் அவளை எதுவுமே கேட்கவில்லை.  
இந்தச் சிறுமியைக் கரகாட்டக் கலைஞரென்று சொல்வதா? 
எனக்கு பயமாய் இருந்தது.
ஆனால், மாரியம்மாள் ‘தனது மகளும் கலைஞர் தான்!’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.  கௌசல்யாவும் அதற்குத்தான் ஆசைப்பட்டாள்.  
கடந்த இரண்டு வருடங்களாய் தென் தமிழகக் கிராமங்களில் கௌசல்யா கரகாட்டம் ஆடி வருகிறாள்.  அவள் பெயர் போட்டு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அவர்கள் வசம் இருக்கின்றன.  அவளை விரும்பி அழைக்கக்கூடிய ஊர்த்திருவிழாக்கள் இருக்கின்றன.  சொல்லப் போனால் அவளொரு வளர்ந்து வரும் கலைஞர்!
ஆனால், கரகாட்டத்தின் தற்காலக் கோலத்தை நினைத்து கெளசல்யா சொல்வதை நம்பாமல் இருக்க நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன்.  
எனக்குள் பல கேள்விகள்.  பாலியல் தொடர்பான கிண்டல்களும், கேலிகளும், சீண்டல்களும், மறைமுகங்களும் மட்டுமே நிரம்பியிருக்கும் இன்றைய கரகாட்டத்தில் இந்தச் சிறுமி என்ன பாத்திரத்தை வகிப்பாள்? அதில் பேசப்படும் பாலுறவு சார்ந்த வசனங்களை நிச்சயமாய் இந்தப் பெண்ணால் விளங்கிக் கொண்டிருக்க முடியாது.  ஏனென்றால் அவை இயல்பான பாலுறவு குறித்தவை கூட இல்லை; முழுக்க முழுக்க தகாத பாலுறவு குறித்த வசனங்கள்.  அதிலும் தகாத பாலுறவின் கள்ளத்தனத்தைக் கொண்டாடும் வசனங்கள்.  இதை எப்படி இந்தச்சிறு பெண் தன் தலையில் சுமப்பாள்?  தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் சிறு குழந்தைகள் விரசம் ததும்பும் சினிமாப் பாடல்களைப் பாடுவது போல அபத்தமாய் இருக்காதா அது?  
அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை என்று தெரிந்ததும், தாயும் மகளும் பதட்டமடையத் தொடங்கினார்கள்.  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   
அவர்களது பயம் வேறு விதமாக இருந்தது.  
தமிழ் நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறை வழங்குகிற ‘நாட்டுப்புற கலைஞர்' என்ற அடையாள அட்டைக்காக கெளசல்யா காத்துக் கொண்டிருக்கிறாள்.  எங்கே நான் அதைத் தடுத்து விடப்போகிறேனோ என்று அவர்கள் பயந்தார்கள்.  
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை என்பது ஒரு அரசு அங்கீகாரம். அதனால் பெரிய பலன்கள் ஒன்றுமில்லை என்றாலும், காவல்துறை நண்பர்களிடமிருந்து அது தான் இவர்களைக் காப்பாற்றுகிறது.  
அதைத் தடுத்து விடுகிற அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.  அதை அவர்களுக்கு நான் விளக்கினேன்.  
புரிந்தது போலத் தான் தலையை ஆட்டினார்கள். நம்பினார்களா என்பதற்கு உத்தரவாதம் ஒன்றுமில்லை.
********************
ஒவ்வொரு முறை கள ஆய்வுக்குச் செல்லும் போதும், இப்படி அடிப்படையான பிரச்சினைகளையே நான் சந்திக்கிறேன்.  இந்தச் சிறுமி நாட்டுப்புறக் கலைஞர் தானா?  
இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?  தொடர்ந்து எனது ஆய்வை மேற்கொள்ள வேண்டுமா? அல்லது அந்தச் சிறுமியைச் சூழ்ந்திருக்கும் பாலியல் வன்கொடுமையிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டுமா?  
இது ஆய்வாளனுக்கு மிகவும் வெட்கக்கேடான தருணம்.
‘என் பணி பதிவு செய்வது; இந்த அவலத்தை வெளிக்கொண்டு வருவதே எனது பிரதான வேலை!’ - இப்படியொரு சமாதானம் எனக்கு முன்னே இருக்கிறது.
‘இல்லை, இந்தப் பெண்ணை நான் பாதுகாக்க விரும்புகிறேன்; அவள் தொடர்ந்து படிப்பதற்கான முயற்சிகளை நான் செய்யப் போகிறேன்’, என்றும் நான் கிளம்பலாம்.
‘அவர்களே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; இது தான் சமூக யதார்த்தம் என்று அவர்களுக்கு விளங்குகிறது.  இதில் நீ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது? ஜேஜே போல பண்ணாதே! உண்மையில் அவர்கள் கரகாட்டம் ஆடுவதற்குக்கூட பயப்படவில்லை;  உன் கொந்தளிப்பை நினைத்து தான் கலவரமாகிறார்கள்’ - இப்படியும் இருக்கலாம்.
‘இது ஒரு கெளசல்யாவின் கதை மட்டுமல்ல;  இப்படி ஓராயிரம் கெளசல்யாக்கள் உண்டு.  எத்தனை பேரை உன்னால் காப்பாற்ற முடியும்?’
‘களத்தில் தகவல்களைச் சொல்லக்கூடிய விவரமான நபர்கள் யாரும் இல்லை. பாரம்பரியத்தை வெகு வேகமாக இழந்து வருகிறோம்.  இன்றைய கள ஆய்வு படு தோல்வி!  ஆகவே, Back to square one.’ - இப்படிச் சொல்லியும் நான் அந்த இடத்திலிருந்து வெளியேற முடியும். 
************************
நான் என்ன செய்தேன்?
தமிழ் வழக்காறுகளில் வெளிப்படுத்தப்படும் பாலியல் குறித்து யாரும் விரிவாகப் ஆய்ந்திருக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் நா. வானமாமலை, அன்னகாமு, கி.வா. ஜகந்நாதன் போன்ற கனவான்களே அதிகம் என்பதால் பாலியல் பேசாப் பொருளாக மாறியிருக்கலாம்.  அதிகபட்சமாக, தெம்மாங்குப் பாடல்களில் காதல் வெளிப்படுகிறது என்று மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  எதையாவது வற்புறுத்திக் கேட்டால் ‘வழக்காறுகள் சமூக முரண்களைப் பிரதிபலிக்கின்றன….’ என்று ஆரம்பித்து விடும் ஆபத்தும் அவர்களிடம் உண்டு.
விரசத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.  விதிவிலக்காக, கி.ராஜநாராயணன், ‘வயதுவந்தோருக்கு மட்டுமான கதைகள்' என்றொரு தொகுப்பை மஞ்சப்புத்தகமாகக் கொண்டு வந்தார்.  அதற்கே அவரை கொஞ்ச நாட்களுக்குத் முறை வைத்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.  கிராமப்புறங்களில் அந்த மாதிரிக் கதைகளை வயதுக்கு வராதவர்களே நிறையக் கேட்கிறார்கள், சொல்கிறார்கள் என்று தெரிந்தால் என்னவெல்லாம் செய்வார்களோ தெரியவில்லை.
மேற்கத்திய ஆய்வாளர்கள் இன்னும் மோசம்.  இந்துக் கடவுள்களின் பாலியல் சேட்டைகளையெல்லாம் கூட படித்திருக்கிறார்கள்.  ஆனால், நாட்டுப்புற பாலியல் வாழ்க்கை குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை.  
********************
இது ஏன் இப்படி?
மேற்கத்திய ஆய்வாளர்களுக்கும் சரி, இந்திய ஆய்வாளர்களுக்கும் சரி, நாட்டுப்புற வழக்காறுகளைப் பற்றிப் பேசும் போது மிகையான பொறுப்புணர்ச்சி வந்து விடுகிறது.  எளிதில் உடைந்து விடுகிற பொருளைக் கையாளுவதைப் போல பதவிசாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.  நாட்டுப்புற வழக்காறுகளின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது போலவும்,  ‘அப்படியில்லை யுவர் ஆனர், வழக்காறுகள் நிரபராதிகள்!’ என்று வாதாடும் கலாச்சார வழக்கறிஞர்களாகத் தங்களையும் கற்பனை செய்து கொள்ளும் போது தான் இந்தப் பிரச்சினை தோன்றுகிறது.  
ஆனால், நமக்கு வாய்த்த வழக்கறிஞர்கள் திறமைசாலிகள்!  ‘நிரபராதி என்றால், உலக மகா நிரபராதி!  அதாவது அப்பழுக்கற்றவர்!’ என்றே நாட்டுப்புற வழக்காறுகளுக்காக வாதிட்டு வருகிறார்கள்.  இது ஒரு வகையான புனிதப்படுத்தும் நோய்.  மிடாஸின் தங்க வரம் மாதிரி.  தொட்டதனைத்தும் தங்கம் தான்!
பாலியலைப் பேசாத வழக்காறுகள் அரிதினும் அரிது. ரொம்பவும் பவித்ரமானதாகக் கருதப்படும் தேவதைக் கதைகளில் கூட ’பேசிப் பழகுவது’,  திருமணத்திற்கு முன்பே கருத்தரிப்பது எல்லாம் உண்டு.  இதனாலேயே, ரொம்ப வருடங்களுக்கு கிரிம் கதைகளை சிறுவர்களிடமிருந்து விலக்கியே வைத்திருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  
பாலுறவை முகத்தில் அறைவது போல பேசும் வழக்காறுகள் என்றால், நான் கரகாட்டத்தையும் ராஜா ராணி ஆட்டத்தையும் தான் கைகாட்டுவேன்.  பச்சை, பச்சை என்பீர்களே, அதற்கெல்லாம் தாத்தா இவை!  தொட்டால் கையில் மட்டுமல்ல, மனசு வரை ஒட்டிக் கொள்ளும்!
அப்படியொரு கரகாட்டக் கலையைத் தான் கெளசல்யா தொழிலாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்.  கடந்த இருபது முப்பது வருடங்களில் தனது பழமை அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு, புதுப்பொலிவுடன் ஜிகினா பூசியிருக்கும் கரகாட்டத்தை அவள் ஆடிக்கொண்டிருக்கிறாள்.  நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் புனிதம் என்று சொல்லி வைத்திருந்த அனைத்தையும் களைந்து எறிந்து விட்டு நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கும் கரகாட்டம் இது.     
இன்றைய வழக்காறுகளைப் பார்க்கிற யாருக்கும் தலை கால் புரியாத குழப்பம் தான் தோன்றும்.  புத்தகங்களில் எழுதப்பட்டதற்கும் நேரில் பார்ப்பதற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருக்காது.  சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகங்களைக் கூட, ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவையோ என்றே சந்தேகப்படத் தோன்றும்.  அவ்வளவு இடைவெளி!
கிராமப்புறங்களிலும் அக்கலைகளின் பாரம்பரியம், மரபு, மேன்மை என்று  நம்மோடு அளவளாவக்கூடிய கலைஞர்களையோ பார்வையாளர்களையோ நீங்கள் சந்திக்க மாட்டீர்கள்.  அப்படி சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களும் சமீபத்தில் தான் இறந்து போனார்கள் என்றுமே உங்களுக்குச் சொல்வார்கள்.  மரபான கலைகள் அழிந்து, தற்போது தான் பிறந்திருக்கும் ‘நவீன(?) நாட்டுப்புறக்கலைகளை’ மட்டுமே நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  பாரக் ஒபாமா, அன்புமணிக்கெல்லாம் ரொம்ப முன்னாடியே ‘Folklore என்றாலே change’ என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.  தத்துவார்த்தமாக சொல்ல விரும்பினால், ‘அது மாறிக் கொண்டேயிருக்கிறது, அதனாலேயே அது folklore’!
ஆனாலும் ‘மாற்றம்' என்பது ரொம்பவும் சண்டித்தனமான ஒரு கருத்தாக்கம்.  பேசும் போது அத்தனைத் தேனொழுகப் பேசும்.  தூக்கி மடியில் வைத்துக் கொள்ளலாம் போல் இருக்கும்.  ஆனால், அது நிகழத் தொடங்கிவிட்டால் உலகின் மொத்த கசப்பையும் நம்மிடம் தான் கொட்டும்.  ஏண்டா கொஞ்சினோம் என்று இருக்கும்.  வழக்காறுகளில் நடைபெறும் மாற்றங்களும் இப்படித்தான்.  மாற வேண்டியது தான், அதற்காக இப்படியா?
******************
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?
இந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகளில் ’மாற்றம்' ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்தவை திரைப்படங்கள் தான்.  ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது போல, தொழிற்புரட்சியோ, நவீனமாதலோ, தேசிய உருவாக்கங்களோ நமது வழக்காறுகளில் மாற்றங்களை ஏற்படுத்திவிடவில்லை.  இங்கே நடைபெற்றதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிற நவீனமயம், தேசிய அடையாள உருவாக்கம் போன்றவை அணுக முடியாத வேறொரு உலகத்திலேயே வழக்காறுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.  
இதற்கு மாறாக, திரைப்படங்கள், வழக்காறுகளின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தயவு தாட்சண்யமற்ற வன்முறையோடு மாற்றங்களை உண்டாக்கியுள்ளன.  இது வழக்காறுகளில் மட்டும் தான் என்றில்லை.  தமிழின் அத்தனை கலைச் செயல்பாடுகளிலும் இந்த ஊடுறுவலை நம்மால் கவனிக்க முடியும்.  இசை, ஓவியம், நடனம், இலக்கியம், நாடகம் என்று அனைத்து ஊடகங்களையும் திரைப்படம் உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கிறது.
ஆனால், பிற ஊடகங்கள் அனைத்தும் திரைப்படங்கள் தம்மீது அதிகாரம் செலுத்துவதை ஒத்துக்கொள்ளத் தயங்கிக்கொண்டே இருக்கின்றன.  நாட்டுப்புற வழக்காறுகளுக்கு அந்தக் கூச்சமே இல்லை. தங்களைத் திரைப்படங்களின் போலியாகவே வடிவமைத்துக் கொள்கின்றன. 
இது ஒரு முக்கியமான தருணம் கூட.  
போலிகளை நாம் என்றைக்குமே கலையாக அங்கீகரிப்பது இல்லை.  கலை என்று அழைத்துக் கொள்வதற்கு கடுகளவாவது சுய கற்பனை தேவை என்கிறோம்.  ஆனால், நாட்டுப்புற வழக்காறுகளுக்கு நாம் எதிர்பார்க்கும் ‘சுய ஒழுக்கங்கள்' எதுவும் இருப்பதில்லை.  அது துணிந்து போலி செய்கிறது; ‘போலி தான் செய்கிறேன்’ என்று உரக்கவும் சொல்கிறது!
வழக்காறுகளைப் போலி செய்தே ஆரம்பகாலத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன என்று வரலாறு எழுதிக் கொண்டிருக்கிற நேரத்தில், வழக்காறுகள் இது போலச் செய்தன என்பது தான் வேடிக்கை.  
வழக்காறுகள், திரைப்படங்களைப் போலி செய்து கொண்டிருப்பதை 1980 களில் தான் கவனிக்கத் தொடங்கினோம்.  ‘ரிக்கார்ட் டான்ஸ்' என்பது அந்தப் போலி வடிவத்தின் பெயர்.  
மக்கள் எல்லா இடத்திலும் ரிக்கார்ட் டான்ஸ் வேண்டும் என்றார்கள் அல்லது ரிக்கார்ட் டான்ஸ் இருந்தால் எதை வேண்டுமானாலும் பார்ப்பதற்குத் தயாராக இருந்தார்கள்.  தோற்பாவைக்கூத்துக் கலைஞர்கள் கூட தங்களது நிகழ்ச்சிக்கு முன்பாக சம்பிரதாயமாக இரண்டு மணி நேரம் ரிக்கார்ட் டான்ஸ் ஆடுவதாகத் திட்டமிட்டிருந்தார்கள்.  
கரகாட்டம் இன்னும் ஒரு படி மேலே போய், திரைப்படப் பாடல்களைப் பாடுவது, பாடிக் கொண்டே ஆடுவது, இடையிடையே இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி சிரிக்க வைப்பது என்று வேறு திசையில் போய்க் கொண்டிருந்தது.   ஆனால், இதையே ‘மானாட மயிலாட' என்றும், ‘சூப்பர் சிங்கர்' என்றும், ‘கலக்கப் போவது யார்’ என்று வெகுஜன ஊடகங்களில் செய்வதற்கு இருபத்தோராம் நூற்றாண்டு பிறக்க வேண்டியிருந்தது.  இப்படித் தங்களை மாற்றிக் கொள்வதில் வழக்காறுகளுக்கு எந்த கூச்சமும் இருக்கவில்லை.  வழக்காறுகளைப் பற்றி ஆராய்கிறவர்களுக்குத் தான் இது லஜ்ஜையாக இருந்தது.  ஆராய்வதே ஆராய்கிறோம், போலிகளையா ஆராய்வது?  ஒரு ஒரிஜினல் கூட கிடைக்கவில்லையா?
வழக்காறுகள் இதையெல்லாம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. பட்டவர்த்தனமே எங்களது ஆதார குணம் என்றன.  இது நமக்குச் சங்கடமாகத் தான் இருக்கிறது.    ஆதிக் கலைவடிவங்களுக்கே இந்த நிலையா என்று வெப்புராளமாயிருக்கிறது.  ஆனால், இதனால் தான் இவை ஆதிக்கலைவடிவங்கள் என்பதும் விளங்குகிறது.  உயிர் வாழ்வதற்காக எதையும் தன்வயப்படுத்திக் கொள்ளும் தகவமைப்பு கூட ஒரு வகை ஆதிகுணம் தான்.  சில நேரங்களில் சுயத்தையே இழந்தும் கூட இத்தகவமைப்பு நடக்கக்கூடும்!  சுயம், அயம், ஆதி, புதுசு என்ற சொற்களுக்கெல்லாம் நாட்டுப்புற அகராதியில் வேறு அர்த்தங்கள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.    
கெளசல்யா என்ற அச்சிறு பெண், தனது தொழில் கரகாட்டம் என்று சொன்னதை நான் இப்படித்தான் விளங்கிக் கொண்டேன்.  உருமாறி நிற்கிறது ஒரு நாட்டுப்புறக் கலை;  எனவே கலைஞர்களும் உருமாறி நிற்கிறார்கள்.  
ஏற்கனவே சொன்னது போல, வறுமை தான் இக்கலைகளை நோக்கி அவர்களை உந்தித் தள்ளியிருக்கிறது.  ஆனால், அது மட்டுமே போதுமானதா என்றால், இல்லை.  அவர்கள் தங்களை நாட்டுப்புறக் கலைஞர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  புதிய சூட்சுமங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.  
******************
கெளசல்யா கதையில் இதுவெல்லாம் எப்படி நடந்தது என்று தெரிந்த கொள்ள நான் ஆசைப்பட்டேன்.     
நாட்டுப்புறக்கலைஞர்கள் உருவாகும் முறைகள் குறித்து ஏராளமான ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளன.  இந்த யோசனையை தொடங்கி வைத்தது, மில்மன் பாரி என்ற அமெரிக்கர்.  ஹோமரின் இதிகாசங்கள் எப்படித்தான் எழுதப்பட்டிருக்கும் என்ற கேள்வியோடு யுகோஸ்லேவியா புறப்பட்டவர் அவர்.  போன இடத்தில், செர்போ-குரோச்சிய (இன்றைய போஸ்னியா - ஹெர்ஸகோவினா) நாட்டார் பாடகர்களின் திறனைக் கண்டு மயங்கிப் போனார்.  எழுதப் படிக்கத் தெரிந்திராத அப்பாடகர்கள் லட்சக்கணக்கான வரிகள் கொண்ட கதைப்பாடல்களை அனாயசமாக ஞாபகம் வைத்துப் பாடுவதைக் கண்டவர்,  ‘இப்படிப் பாட எப்படிக் கற்றார்கள்?’ என்று கேட்கத் தொடங்கினார்.  
அந்தப் பாடல்கள் எவையும் புத்தகங்களில் இருக்கவில்லை.  எல்லாமே மனதில் தான் எழுதி வைக்கப்பட்டிருந்தது.  இந்த மனஎழுத்து எப்படி நடக்கிறது?
மில்மன் பாரியின் ஆய்வுகளைத் தொடர்ந்த ஆல்பர்ட் பேட்ஸ் லார்ட் என்ற ஆய்வாளர் ஒரு புத்தகம் எழுதினார்.  The Singer of Tales.  அந்தப் புத்தகம், வாய்மொழிப் பாடகர்களின் கலை நுட்பத் திறனை சில அடிப்படையான கருத்தாக்கங்களின் மூலம் கோடிட்டுக் காட்டியது.  செவ்வியல் கலைகளுக்கும், நவீன கலைகளுக்கும் மட்டுமே நுட்பங்களும், அழகியலும் வாய்க்கும்; நாட்டுப்புறக் கலைகளில் எல்லாமே தான்தோன்றித்தனமானவை தான் என்று சொன்ன வாதத்தை அந்தப் புத்தகம் சண்டைக்கு அழைத்தது.
நாட்டுப்புறக் கலைகளும் இலக்கண சார்ந்தவையே; அவற்றிலும் கற்றுக் தேர்வதற்கு சூத்திரங்கள், உத்திகள் உண்டு; அவற்றைக் கற்றுக் கொள்வதற்கு முறையான பயிற்சிகளும் இருக்கின்றன; இவ்வாறு கற்றுக் கொண்டவர்களே நாட்டார் கலைஞர்களாக பரிமளிக்கிறார்கள் என்பது போன்ற உரையாடலை அந்தப் புத்தகமே தொடங்கி வைத்தது.
‘அப்படியே ஊத்து மாதிரி கொட்டுமாக்கும்!’
‘இதெல்லாம் தன்னால வரணும்!  படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை!’
‘ஒழுங்கில்லாமல் இருக்குறது தான் அதன் அழகே!’ என்றெல்லாம் நாட்டுப்புறக் கலைகளை புனிதப்படுத்திக் கொண்டிருந்த சூழலில் மில்மன் பாரி, ஆல்பர்ட் பேட்ஸ் லார்ட் இருவரின் ஆய்வுகளும் சில யதார்த்தங்களை பேசத் தொடங்கின.  
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியும் பயிற்சி தான்.  அக்கலைஞர்கள் கற்றுக் கொள்வதை என்றுமே நிறுத்துவதில்லை; இது தான் ஆகச்சிறந்த நிகழ்ச்சி என்றும் எதுவுமில்லை.  ஒவ்வொரு புதிய நிகழ்ச்சியும், அதன் முந்தைய நிகழ்ச்சியைத் தாண்டிச் செல்லவே முயற்சிக்கிறது.  ஒவ்வொரு கலைஞரும் தனது நிகழ்ச்சியிலிருந்து மட்டுமில்லாது பிறருடைய நிகழ்ச்சியிலிருந்தும் ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்.   கற்றுத் தேர்ந்ததாக என்றைக்குமே கருதுவதில்லை.
ஒவ்வொரு நிகழ்வின் போதும் பாரம்பரியத்தைக் கடைபிடிக்க அவ்வளவு மெனக்கிடுகிறார்கள்.  அதே நேரம் தங்கள் தனித்தன்மையையும் பாதுகாக்கிறார்கள்.  பாரம்பரியமும் தனித்தன்மையும், அவர்களைப் பொறுத்த வரையில் எதிரெதிரான விஷயங்களே இல்லை.  தனித்தன்மையோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் செய்கையில் பாரம்பரியத்தையே காப்பாற்றுவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.  
‘பாரம்பரிய நிகழ்த்துதல்’ என்பது அவர்களைப் பொறுத்த வரை ஒரு புனைவு மட்டுமே.  அப்படியொன்று இருப்பதாக நம்புகிறார்கள்; ஆனால், அதை என்றாவது நிகழ்த்தி விட முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கையில்லை.  ஆனாலும், அதை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு நாட்டுப்புற கலைஞரும் முதலில் ரசிக்கவே பழகுகிறார்; அதற்காக நிறைய நிகழ்ச்சிகளைத் தேடித் தேடிப் போய் பார்க்கிறார்.  அதன் பின் அந்தரங்கமாகவோ சிறு குழுக்கள் மத்தியிலோ தனது அரைகுறை முயற்சிகளை மேற்கொள்கிறார்; கொஞ்சம் தைரியப்பட்டதும் பெரிய பெரிய நிகழ்வுகளில் சின்னச் சின்ன பொறுப்புகளை மேற்கொண்டு வெள்ளோட்டம் பார்க்கிறார்; அதன் பின்பே பெரிய பொறுப்புகளை மேற்கொள்கிறார்; ஆனால், இறுதி வரையில் கற்றுக் கொள்வதை மட்டும் நிறுத்துவதே இல்லை.
கெளசல்யா கரகாட்டக் கலைஞராக மாறியது குறித்து அவர்களிடம் நான் நிறைய பேசினேன்.  கெளசல்யா நடனமாடப் பழகியது எப்படி, முதல் நிகழ்ச்சி எப்படி நடந்தது, கெளசல்யாவின் துணையாக மாரியம்மாளும் சென்று வந்தது எப்போது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது,
‘கெளசல்யாவுக்கு இன்னொரு பேரு உண்டு சார்' என்றார் மாரியம்மாள்.  ‘முத்துமாரின்னு சாமி பேரு வச்சிருந்தோம்.  நிகழ்ச்சிக்கி போக ஆரம்பிச்சதும்… கெளசல்யான்ற பேரு புடிச்சிருக்குனு சொன்னா, சரின்னு மாத்திட்டோம்.  நோட்டீஸ்ல எல்லாம் கெளசல்யான்னு தான் போடுவாக.’
‘கூப்பிடுறது எப்டி கூப்பிடுவீங்க? கெளசல்யாவா இல்ல முத்துமாரியா?’
கெளசல்யா முந்திக் கொண்டு, ‘எல்லாரும் கெளசல்யான்னு தான் கூப்புடுவாங்க.  யாருக்கும் முத்துமாரின்னு தெரியாது' என்றாள்.
இந்த முறை மாரியம்மாள், ‘ஆனா, இங்கன உள்ளவக எல்லாம் இன்னொரு பேரு வச்சி கூப்பிடுவாக….’ என்று சொல்லி சிரித்தார்.  ‘முண்டக்கண்ணி!  கண்ணு முழிச்சிக்கிட்டு பெருசா இருக்கதால’.  
நான் கெளசல்யாவைப் பார்த்தேன்.  அவள் முகம் காலியாக இருந்தது.  எனக்கு ஆச்சரியம்.  வழக்கமாய் இந்தத் தருணத்தில் யாராக இருந்தாலும் கொஞ்சம் போல வெட்கம் வரும்.  அவள் முகத்தில் அப்படி எதுவும் இல்லை.  என்னுடைய அடுத்த கேள்விக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.
‘கெளசல்யாவிற்கு ஆடுவதற்கு யார் பயிற்சி கொடுத்தார்கள்?’
‘யாரும் இல்ல.  அவளே தான் இந்த டிவிய போட்டு போட்டு பாத்து, ஆடிப்பழகுவா’.
‘அம்மா நிகழ்ச்சிக்கி போகும் போது நானும் கூட போயிருக்கேன்.  ஆடுறதுனா இஷ்டம்.   ஸ்கூல் ஆண்டுவிழால ஆடியிருக்கேன்.’
‘உங்க ஸ்கூல்ல யாருக்காவது நீ கரகாட்டம் ஆடுவேன்னு தெரியுமா?’
‘ஆட ஆரம்பிச்சதும் தான் நான் ஸ்கூலுக்கே போறதில்லயே!’
‘ஸ்கூல்ல யாருக்கும் தெரியாது…. தெரிஞ்சிருக்கும்… இவள தான் நிப்பாட்டியாச்சில்ல.’
‘நீங்க இவளுக்கு எதுவும் கத்துக் கொடுத்திருக்கீங்களா?’
‘பழைய பாட்டுகள இப்ப யாரு கேக்குறா.   எல்லாம் புது பாட்டுக்குல்லா ஆடனும்னு சொல்றாங்க.’
‘நாங்க, ஆடுறவங்களா சேந்து பிராக்டிஸ் பண்ணிக்குவோம்.’
‘ஆமா, இங்கன ரெண்டு மூணு புள்ளைங்க இருக்குது.  அதுகளா சேந்து ஆடிப்பாத்துக்கும்ங்க.  நானும் ஆடட்டும்னு உட்டுருவேன். சினிமாவுக்குப் போவா…புள்ளைங்களோட தான் போவா.  போய்ட்டு வரட்டும்னு உட்டுருவேன். வேற எங்கயும் உடமாட்டேன்.  அவளும் போமாட்டா.  நிகழ்ச்சி போய்ட்டு வந்தா ஒடம்பெல்லாம் அப்டி அசதியாருக்கும்.  நா முழுக்க தூங்குவா.’
‘ரெண்டு மூணு நாளு தொடர்ச்சியா ஆடுனா தான் அப்படி தூங்குவேன்.’
‘அப்ப எல்லாம், கறி வச்சி குடுப்பேன்.  அது ஒண்ணு தான் அவளுக்கு புடிக்கும்.’  நான் கெளசல்யாவைப் பார்த்தேன்.  அதே காலி முகம்!  ஒவ்வொரு முறை அவளைப் பற்றி நெருக்கமாய் ஏதாவது சொல்லும் போதும் இந்த வெத்து முகத்தை வைத்துக் கொள்கிறாளா?
********************
நாட்டுப்புறக்கலைகளில் திரைப்படப் பாடல்களைப் பாடுவது, அதே நடனங்களை ஆடுவது போன்றவை கட்டாயமாக்கப்பட்ட பின்பு, கெளசல்யா மாதிரியான கலைஞர்கள் தொலைக்காட்சி மூலமே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  அதை அவர்கள் கிராம நிகழ்ச்சிகளில் ஆடிக் காட்டும் போது, திரைப்படத்தில் காட்டப்பட்டதை திரும்ப நிகழ்த்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என்பதும் புரிந்து கொள்ள எளிமையானது தான்.  திரைப்படம் உயர் தொழில் நுட்பங்களால் செய்யப்பட்டது என்பதால் அவர்களால் என்றைக்குமே அந்தப் பாடலையோ நடனத்தையோ அப்படியே திரும்பச் செய்து விட முடிவது இல்லை.  ஆனாலும், அவர்கள் துவண்டு போகாமல் திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.
முடியவே முடியாத ஒன்றை ஏன் இவர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்?  இவர்களால் முடியவே முடியாது என்று தெரிந்தும், மக்களும் ஏன் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருக்க வேண்டும்?
இந்த இடத்தில் மில்மன் பாரியும், ஆல்பர்ட் பேட்ஸ் லார்டும், ‘பாரம்பரியம் - நிகழ்த்துதல்' என்ற விஷயத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.  நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளில் பாரம்பரியம் இன்றியமையாதது; காலங்காலமாக வழங்கி வரும் நிகழ்த்து மரபுகளை ஒவ்வொரு கலைஞனும் பின்பற்ற வேண்டியது கடமை.  ஆனால், அது சாத்தியமும் இல்லை;  சாத்தியப்பட்டால் அது கலையும் இல்லை!
பின் என்ன தான் செய்வது?  பாரம்பரிய நிகழ்த்துதலை மறு உருவாக்கம் செய்ய முடிந்த வரை முயற்சிப்பது;  அதாவது, மரபான நிகழ்த்துதல் தான் முழுமையான நிகழ்த்துதல் - அதை நோக்கியே ஒவ்வொரு முறையும் பயணம் செய்வது.  ஆனால், கலைஞர்களின் தனித்தன்மை அப்படி நடந்து விட அனுமதிப்பதில்லை.  இந்த வகையில் எந்தவொரு நாட்டுப்புறக் கலை நிகழ்வும் ‘பாரம்பரியம் - தனித்துவம்' இரண்டிற்குமான மோதல் தான்.
தனித்துவம், அந்தந்த கலைஞரிடம் உள்ளது; அவரது பயிற்சி, கற்பனை, உணர்விலிருந்து தனித்தன்மை உருவாகுகிறது.  அப்படியானால், பாரம்பரியம்? எங்கிருக்கிறது அது?
பாரம்பரியத்தின் கதையும் கடவுளின் கதையும் ஒன்று.  இருக்கிறது என்று நம்பினால், எல்லா இடத்திலும் இருக்கிறது.  பார்க்க எப்படி இருக்கும் என்று கேட்டால் சொல்ல வராது.  ஒவ்வொரு கலைக்கும் பாரம்பரிய வடிவம் ஒன்று உண்டு.  அதை யாரும், எந்த காலத்திலும் நிகழ்த்தியதும் இல்லை; நிகழ்ந்து பார்த்தவர்களும் இல்லை.
மில்மன் பாரி, ஆல்பர்ட் பேட்ஸ் லார்ட் ‘பாரம்பரிய நிகழ்த்துதல்' என்று சொன்னதை, சமீபத்தில் லாரி ஹாங்கோ என்ற பின்லாந்து ஆய்வாளர் ‘மனப் பனுவல்' என்று வேறு மாதிரி சொல்லிப் பார்த்தார்.  கர்நாடக மாநிலத்தில், துலு பேசும் பகுதியில், வழங்கப்படும் ‘சிரி’ (அட! தமிழ்ல சரி வரல்லியே… SIRI தாங்க சரி) என்ற நீண்ண்ண்ட காப்பியமொன்றை பதிவு செய்ய முயற்சிக்கும் பொழுது ‘பாரம்பரிய பனுவலை’யே தேடிச் சென்றார்.  அதற்கு என்ன உத்திகளைக் கையாண்டார் என்பதெல்லாம் இப்பதைக்கு வேண்டாம்.  இந்த ‘பாரம்பரிய நிகழ்த்துதல்’, ‘மனப் பனுவல்’ போன்ற அனைத்தும் கண்ணுக்குப் புலப்படாதது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இந்த கண்ணுக்குப் புலப்படாத மூலத்திலிருந்தே ஒவ்வொரு கலைஞனும் தனது படைப்பை உருவாக்குகிறான்.
இதையே நீங்கள், எழுத்திலக்கியங்களுக்கும் சொல்லிப் பார்க்கலாம்.  எது சிறுகதை? எது கவிதை? எது நாவல்?  அது எப்படி இருக்கும்? விளக்க முடியுமா? காட்ட முடியுமா? 
முடியும், ஆனால், முழுமையாக முடியாது!
எது சிறுகதை என்பதைக் காட்ட முடிந்தால், அத்தோடு தீர்ந்தது; அதற்குப் பின் உலகில் சிறுகதைகளே எழுதப்படாது.
********************
இசையிலும் இதே கதை தான்.  இளையராஜாவிடம் யாரோ ஒருவர், ஒரு கேள்வி கேட்கிறார்.  எப்படி இப்படியெல்லாம் இசை அமைக்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இது? 
இளையராஜா உடனே அக்கேள்வி தந்த கூச்சத்தில் சங்கடமான சிரிப்பொன்றை வெளிப்படுத்துகிறார்.  
பின், ‘தெரியலயே’ என்கிறார்.  
‘தெரிந்தால், நான் அப்புறம் இசையமைக்க முடியாதே’ என்கிறார்.
*****************
இது எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும்.  கலை குறித்து பேசிய எல்லோரும் இப்படியே பேசியிருக்கிறார்கள்.
இன்னொரு உதாரணத்தையும் என்னால் சொல்ல முடியும்.  12ம் நூற்றாண்டு ப்ரான்சில், தீராக் காதலனாகவும் துறவியாகவும் வாழ்ந்த பியர் அபிலார்ட், இந்த விஷயத்தை ‘தூய வடிவங்கள்' என்பது போல சொல்கிறார்.  காதல், அரதப் பழசான ஒரு உணர்வு.  ஆனாலும், அதைப் பேசி முடித்து விட்டோமா என்ன?
திரும்பத் திரும்ப எத்தனை கோடி கவிதைகள் எழுதப்படுகின்றன!  இன்னும் அதை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்று தானே அர்த்தம்? என்றைக்காவது காதல் என்றால் இது தான் என்று சொல்லி விடக்கூடிய கவிதையை யாராலாவது எழுதி விட முடியுமா?  முடியாது!
ஆனால், அப்படியொன்றை எழுதுவதற்குத் தானே தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
*************
திரைப்படங்களை போலி செய்யத் தொடங்கும் கலைகளுக்கு ‘பாரம்பரிய நிகழ்த்துதல்' / ‘மனப் பனுவல்' / ‘தூய வடிவம்' எதுவாக இருக்கும்?  சந்தேகமே இல்லாமல், அவற்றிற்கெல்லாம் திரைப்படம் தான் பாரம்பரியம், மரபு!  
இது தான் மரபு; இது தான் மனப் பனுவல்; இது தான் தூய வடிவம் என்று தெரிந்து விட்டால்  மற்ற அனைத்தும் சலித்துப் போய்விடுமே! மற்ற அனைத்தின் மீதும் வெறுப்பு வந்து விடுமே!  ஆனால், திரைப்படங்களை மீண்டும் மீண்டும் என்ன செய்தாலும் மக்கள் ரசிக்கிறார்களே ஏன்?
கரகாட்டம், ரிக்கார்ட் டான்ஸ் மட்டுமல்ல, மெல்லிசைக் கச்சேரிகள், தமிழ் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விதவிதமான போட்டி நிகழ்ச்சிகள் என்று அனைத்தும் திரைப்படங்களை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பது தானே?  திரைப்படங்களே இருக்கையில் இவையெல்லாம் எதற்காக?  திரைப்படங்களை மரபாக / மனப்பனுவலாக ஏற்றுக் கொண்ட இந்நிகழ்வுகளை கலைத்தன்மை இல்லாதவை என்று ஒதுக்கி விட முடியுமா?  
அதாவது, அரூப மூலங்களிலிருந்து தான் கலைப் படைப்புகள் உருவாக முடியும்; அப்பொழுதே அவற்றில் தனித்துவம் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.  கண்ணுக்குப் புலப்படும் திரைப்படங்களிலிருந்து ஒரு படைப்பு செய்யப்படுகிறது என்றால் அது போலி படைப்பு; அதில் படைப்பூக்கம் இல்லை என்று சொல்லி நிராகரித்து விடலாமா?
****************
நாம் இப்பொழுது பழைய பிரச்சினைக்கே திரும்ப வந்திருக்கிறோம்.  என்னிடம் பிடிக்காத விஷயத்தில் இதுவும் ஒன்று.  சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.
தனது மரபான குணங்களை இழந்து, திரைப்படத்தினால் முழுக்க முழுக்க கபளீகரம் செய்யப்பட்டிருக்கிற கரகாட்டம் போன்றவற்றை ‘நாட்டுப்புறக் கலைகள்' என்று அழைப்பது சரிதானா? அவற்றில் கலைத்தன்மை என்று எதைச் சொல்ல முடியும்?  
ஏற்கனவே கேட்கப்பட்ட, இந்தக் கலைத்தன்மை கேள்வியை நைஸாக கழட்டி விட்டு, ‘மாறிக்கொண்டிருப்பது வழக்காறுகளின் இயல்பு' என்று வேறு திசையில் வந்து கொண்டிருந்தேன்.  ஆனால், இந்தப் பாதையிலும் அதே கேள்வி எதிர்படுகிறது.  இந்த முறை என்ன செய்யலாம்?
அதே தான், அந்தக் கலைத்தன்மைக் கேள்வியை அம்போ என்று விட்டு விட்டு, வேறொரு கேள்விக்கு பதில் சொல்லிக் கிளம்பி விடலாம்.  
அந்த வேறொரு கேள்வி இது தான்:  திரைப்படங்களை மூலப்பிரதியாகக் கொண்டு உருவாகும் நிகழ்ச்சிகளை மக்கள் விழுந்து விழுந்து ரசித்துக் கொண்டிருப்பானேன்?  அதற்கு அவர்கள் நேரடியாகத் திரைப்படங்களையே ரசித்து விடலாம் தானே?
******************
திரைப்படங்களுக்கும் இந்தப் போலி நிகழ்ச்சிகளுக்கும் ஒரு அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது.  அது, நிஜம்!  ஆமாம், இந்தப் போலி நிகழ்ச்சிகள் நிஜமானவை!
திரைப்படங்கள் நிஜமானவை அல்ல.  இதை வேறு வார்த்தையில் சொல்வது என்றால், மனிதத்தன்மை என்றும் சொல்லலாம்.  
திரைப்படங்களில் மனிதத்தன்மையைக் காணவில்லை.  அது சற்றே பிரம்மாண்டமாக இருக்கிறது; தரையில் கால் பாவாமல், புகை போல அந்தரத்தில் தொங்குகிறது; இன்னும் அதிகமாக, அதில் எல்லாமே நேர்த்தியாய் இருக்கிறது - ஒளி, நிழல், வண்ணம், கோணம், பார்வை, மனிதர்கள், அவர்கள் பேசும் பேச்சு, பாடல், இசை, நடனம், அழுகை, கோபம், இத்யாதி போன்ற உணர்ச்சிகள்…. என்று எல்லாமே சொல்லிச் செய்தது போல, அவ்வளவு கச்சிதமாய், மாசு மருவற்று, தடங்கல்களற்று, கோளாறுகளற்று, பிசிரடிக்காமல், துல்லியமாய், எல்லாமே சரியாய், அதனால் அந்நியமாய் ஏதோ போல இருக்கிறது.  
மிக அற்புதமான வானத்தை, மலர்களை, பறவைகளை, ஆண்களை, பெண்களை, குழந்தைகளை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்.  மலைப்பாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. அது, வேறொரு துப்புறவான உலகம்!
ஆனால், திரைப்படங்களை போலி செய்யும் நிகழ்ச்சிகளில் தவறுகள் மலிந்துள்ளன. அவற்றில் அத்தனை நேர்த்தியில்லை. கோளாறுகள் இருக்கின்றன.  இதனால் மனிதத்தன்மை பீறிட்டு பொங்குகிறது.  நம்மால் நெருக்கமாக உணர முடிகிறது.  ஒரு ஸ்நேக பாவம் உருவாகுகிறது.  உண்மையில் எல்லோருமே இந்தத் தவறுகளைத் தான் ரசிக்கிறோம்.  ஆனால், பாராட்டிக் கொள்வது மட்டும் திரைப்படங்களின் செய்நேர்த்தியை கொண்டிருக்கும் போலிகளை!
இது ஒரு வினோதமான நடவடிக்கை.
திரைப்படங்கள் உருவாக்குகிற இலட்சிய உலகை வாய்பிளந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால், அது நாம் வாழும் வகைக்கான தகவமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் ரகசியமாய் உணர்கிறோம்.  
திரைப்படங்களைப் பார்ப்பது புராணக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது.  மீமனிதர்களின் உலகம்.  ‘அந்த காலத்தில் எல்லாமே பளிச்சென்று சுத்தமாய் இருந்தது' என்று நம்புகிற வெள்ளந்தித்தனம்.  இதனால், பாரம்பரியம், மரபு, பண்பாட்டுச் செழுமை போன்ற கற்பனைகளையெல்லாம் திரைப்படங்களின் மீது ஏற்றி வைப்பது நமக்குச் சுலபமாயிருக்கிறது.
*************
‘திரைப்படம், திரைப்படம்’ என்று நான் சொல்வதனைத்தும் அந்த ஊடகத்தைத் தான் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.  ‘அத்திரைப்படம் காட்டுகிற உலகம்' என்பதும் அவ்வூடகம் காட்டுவதைத் தான்.  அதில் என்ன கதைகள் பேசப்படுகின்றன, என்ன உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.  என்ன சொன்னாலும், எதைச் சொன்னாலும் நமது ‘பாரம்பரியம்’, ‘மரபு' போன்ற கற்பனைகளின் சாயலைக் கொண்டிருக்கின்றது.
பொதுவாக, திரைப்படம் என்பது கனவு தேசம் என்றும், அது கனவுகளை உற்பத்தி செய்கிறது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.   என்னைக் கேட்டால் அது பாரம்பரியம் / மரபு / இலட்சியங்களின் மொழியில் பேசுகிறது என்பேன்.  அது தன்னை அதிதுல்லியமாக உருவாக்கிக் கொள்வதன் மூலம், சாதாரணமாய் நமக்கு விளங்காத உலக ரகசியங்களனைத்தையும் அறிந்தது போன்ற மனத்தோற்றத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது.
ஒரு வகையில் எல்லா கலை வெளிப்பாடுகளும் இத்தகைய மனத்தோற்றத்தையே நம்மிடம் ஏற்படுத்துகின்றன.  புனைவின் அடிப்படை தர்க்கம் இது.  அது நம்மை மீமனிதனாக உணரச்செய்கிறது.  பார்க்க முடியாததையெல்லாம் பார்க்க, கேட்க முடியாததையெல்லாம் கேட்க… 
அறியமுடியாதவை, ரகசியம், அந்தரங்கம் என்று நினைத்திருந்த அனைத்தையும் தன்னால் வெளிப்படுத்த முடியும் என்றே புனைவு சொல்கிறது.  எழுத்திலக்கியக்கங்கள் உருவாக்கப்பட்ட போது, புனைவு அம்பலப்படுத்தும் ரகசியங்களின் அகலமும் ஆழமும் அதிகரித்ததை நம்மால் உணரமுடிந்தது.  இப்படியே ஓவியம், இசை, நடனம், நாடகம் என்று அத்தனை கலை வடிவங்களும் நாம் அறிந்திராத, ஆனால் அறிய விரும்பும் உலகத்தையே நமக்குக் காட்டிக் கொண்டிருந்தன.
திரைப்படங்கள் இன்னும் ஒரு படி மேலே போய், இது வரையிலான அத்தனைக் கலை ஊடகங்களையும் தொழில் நுட்பத்தின் வழியாய் கட்டிச் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட புனைவுலகமொன்றை நமக்குக் காட்டத் தொடங்குகிறது.  அது வெளிப்படுத்தும் ரகசியங்கள் எந்தத் தரத்தைச் சார்ந்தவை என்று அளவிடுவதற்கு முன்பு, அவ்வூடகம் ஏற்படுத்தும் கிளர்ச்சியிலிருந்து விடுபடுவது வெகுஜன ரசனைக்கு பிரம்மபிரயத்தனமாக இருக்கிறது.  ஏனென்றால், அந்த ஊடகத்தின் பாஷை ‘பாரம்பரியத்தின்' பாஷையைப் போல இருக்கிறது.  
*******************
கரகாட்டக் கலைஞரின் மார்பில் குத்துவதென்றால் நாட்டுப்புற ரசிகனுக்கு அவ்வளவு இஷ்டம்.  தங்களது அபிமானத்தை காட்டுவதன் ஆரம்ப நிலையே இந்த ‘மார்புக்குத்து’.  இன்னும் நேரம் ஆக ஆக அவர் பாராட்டும் தொனி வேறு வேறு ஆபத்தான வட்டாரங்களுக்குள் பயணம் செய்யும்.
மாரியம்மாளிடம் நான் கேட்டேன்.  ‘இந்தச் சிறு பெண் இதையெல்லாம் எப்படி சமாளிப்பாள்?’
‘ஆரம்பத்துல நானும் கூட போய்ட்டு இருந்தேன் சார்.  மிரண்டுறக் கூடாதுனு நானும் போவேன்.  இப்ப செட்டுக்காரங்க கவனிச்சுக்குவாங்க.  எல்லா ஊர்கள்லயும் அப்டி இருக்காது.  சில குறிப்பிட்ட ஊர்கள்ல தான், கேக்கவே மாட்டங்க.  ஆனா, அப்டி ஊருக்கு அடுத்து போக மாட்டோம்.’
கெளசல்யா இது பற்றி கருத்தே இல்லாதது போல இருந்தாள்.
‘இப்பல்லாம் தனியா அவளே சமாளிச்சுக்குவாளா?’
‘வேற என்ன செய்ய? எனக்கும் முடியல.  ஆனா, ஒரு வார்த்த மட்டும் சொல்லிருக்கேன்.  எக்காரணத்த முன்னிட்டும் நிகழ்ச்சி முடிஞ்சப்புறம் அந்த ஊர்ல இருக்கக் கூடாது.  மறுநா கறிச்சோறு இருக்கு சாப்புட்டுட்டு போங்கனு சொல்வாங்க.  அதுக்கு மட்டும் ஆசப்பட்டு இருக்கவே கூடாது.  உடனே கெளம்பிரனும்னு சொல்லிருக்கேன்.’
********************
எந்த நேரத்தில் எந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்பதை யார் தான் சொல்ல முடிகிறது?
முடத்தாமக் கண்ணியார் எழுதிய பொருநராற்றுப்படையில் (சங்க இலக்கியம் தான்; பத்துப்பாட்டு தான்) எடுத்த எடுப்பில் ஒரு நாட்டுப்புறக் கலைஞரைப் பற்றிய பாராட்டுரைகள் சொல்லப்பட்டுள்ளன.  அதன் இரண்டாவது வரிக்கு எனக்கு ரொம்ப நாளாய் அர்த்தம் விளங்கவே இல்லை.  மாரியம்மாள் கறிச்சோறு பற்றி சொன்னதும் தான் எனக்கு அதன் முழு அர்த்தமும் விளங்கியது.
அந்த வரி இது தான்:
‘அறாஅ யாணர் அகன் தலைப் பேரூர்
சாறு கழி வழி நாள் சோறு நசை உறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந….’
அதாவது, ‘அந்தப் பெரிய ஊரின் திருவிழாவை முடித்து விட்டு, மறு நாள் கறிச்சோறுக்கு ஆசைப்பட்டு இருந்து விடாமல், அடுத்த இடத்தைத் தேடிக் கிளம்பி விட்ட புத்திசாலிக் கலைஞன் நீ…’ யாம்.
கலைஞன் ஏன் புத்திசாலி என்று விளங்குகிறதா?  இரண்டாயிரம் வருடம் ஆனாலும் தமிழ்ப் பண்பாடு மட்டும் மாறவே இல்லை!











Comments

HiCRT said…
good and real...இரண்டாயிரம் வருடம் ஆனாலும் தமிழ்ப் பண்பாடு மட்டும் மாறவே இல்லை!
Unknown said…
அருமை கரகாட்டத்தில் மரபுகள் மீறப்படுகின்றது என்று நெடுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று கரகாட்டத்தின் மரபுகள் என்றால் எதுவென்கிற கேள்வி என்னுள் எழுந்துள்ளது ஒரு கலை விதிமீறல்களில் இருந்துதான் கட்டியெழுப்பட்டதா என்ற கேள்விக்கு விடை ஆம் என்பதா அல்லது இல்லையென்பதா என்பதை நானறியேன், கலை என்றவுடன் பண்பாடு என்ற ஒன்றே எம் கண்முன்னே வந்துநிற்கின்றது எம்முடைய பண்பாடு என்பது எதுவென்று இன்னும் வரையறை செய்துமுடிக்கப்படாமலேயே இருக்கின்றது. பண்பாட்டின் ஆரம்பத்தை எந்தவிடத்தில் இருந்து தொடங்குவது என்பதும் கேள்விக்குறியதாகின்றது எது எவ்வாறோ இன்று இவ்வுலகில் பிழைப்புக்காகவே எல்லாம் என்று மாறிவிட்டபின் ரிசிமூலங்களைத் தேடி ஏது பயன்கிடைக்கப்போகின்றது? எனினும் எமக்கு அடுத்துவரும் சந்ததிகளுக்கு நாம் ஒரு அதிசிறந்த முன்னுதாரணமாய் இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி
Unknown said…
மிக அருமையான கட்டுரை..
Anonymous said…
அற்புதம் !.

"நாம் இப்பொழுது பழைய பிரச்சினைக்கே திரும்ப வந்திருக்கிறோம். என்னிடம் பிடிக்காத விஷயத்தில் இதுவும் ஒன்று. சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்"

அனால் அதுதான் பிடித்திருக்கிறது .கட்டுரையின் மையக்கருத்தின் ஒவ்வொரு கோணங்களையும் அலசிவிட்டு மீண்டும் மையத்திற்கு திரும்புவது ஆபாரமான சிந்தனை விரிவை அழிக்கிறது .

"இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? " - என்று தொடங் கும் சுய அலசல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது . நன்றி

AK.
மிக அருமையான பதிவு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மிகை உணர்வு, அடுத்த நாள் கறி சோறுக்கு கலைஞர்களை அழைக்கும் .... மனிதன் எத்தனை யுகங்கள் ஆனாலும் மாறாத , குணம் கொண்டவன் என்பதை வலியுறுத்தும் பதிவு. ஒவ்வொரு கால கட்டத்திலும் இது பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தவிர்க்க இயலாத ஒன்றோ!
அழுகாச்சும்... சிரிப்பும் மாறிமாறி வருகிறது, படிக்கும்போது.
Ratan said…
சிறுவயதில் கரகாட்டம் பார்த்திருக்கிறேன்.. இதை ஏன் ஒரு கலை என்று சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.. அதற்கான பதில் இன்று ஓரளவு கிடைத்தது... கடைசியில் வரும் சங்கப்பாடல் ஒரு classical touch...
Anonymous said…
ஒரு காலத்தில் வளமையாக வாழ்ந்த நாட்டார் பண்பாடு இன்று சீரழிந்து நிற்கிறது என்பதே உண்மை. ஆபாசம், அசிங்கம், அருவருப்பு கலைகளில் ஊடுருவியது சமீபத்தில் தான். அதுவும் திரைப்படக் கலாச்சாரத்தினால் தான். நாட்டார் கலைகளை மீட்டெடுக்க ஒரு இயக்கம் தேவை. அருட்தந்தை ஜெயபதி தலைமையில் பாளையங்கோட்டை கல்லூரியில் அது புறப்பட்டது. ஆனால், கம்யுனிஸ்டுகள் அதைக் கைப்பற்றி அவரைத் தங்கள் கைப்பாவையாக மாற்றி விட்டனர். உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் அது அழிவதை வேடிக்கை பார்ப்பது முழுக்க கண்டிக்கத்தக்கது. ஐயா லூர்து போன்றவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததே!

அருள்தாசன்
மிக அருமையான ஆய்வு.
Karthik said…
வாய்விட்டு படித்தேன்.அருமையான பதிவு.

Popular posts from this blog

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக