Friday, 25 August 2017

நீட் போராட்டம் - ஒரு ஃப்ளூ ப்ரிண்ட்.

2018, ஜனவரியில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' பற்றிய புத்தகத்திலிருந்து......
'நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வரைபடம் - 
பள்ளிக்கூடங்களை மாலைகளில் அடைக்காதீர்கள்! 
வகுப்பறைகளில் நீட் தேர்வின் அநியாயங்களை மட்டுமே பேசுங்கள்!
நீட் தேர்வு, ஒரு அராஜகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படி மாற்றுக்கருத்து இருப்பதாய் சொல்கிறவர்கள் கூட, மாநிலத் தேர்வு முறையிலிருக்கும் கோளாறுகளைச் சுட்டிக் காட்ட வந்த கோபத்தாலேயே நீட் தேர்வுக்கு ஆதரவு போலப் பேசுகிறார்கள். மற்ற படி, இந்த ஒற்றை தேர்வு முறையை ஆதரிப்பதற்கான எந்த முகாந்திரமும் யாருக்கும் இல்லை.
இந்தத் தேர்வு முறையின் காரணமாக நேரடியாகப் பாதிக்கப்படுகிறவர்கள், தமிழகப் பள்ளிகளில் படித்த மாணவர்கள். இந்தப் பாதிப்பு, அவர்களது பெற்றோரை உடனடியாகவும், சமூகத்தை பொறுத்திருந்தும், நமது அரசியல் உரிமையை நிதானமாகவும் காவு வாங்கப்போகிறது.
மாநில உரிமைகளைப் பேணுவதற்கான எந்தவொரு முனைப்பும் தைரியமும் இல்லாத அரசாங்கமே நமது பலவீனம். நீதிமன்றங்களும் கைவிட்டு விட்ட நிலையில் இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே கேள்வி - ஏன் தமிழகப் பொதுமக்கள் இந்த அநியாயத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழ மறுக்கிறார்கள்?
வெகுஜன கிளர்ச்சி நடைபெறுவதற்கு சில அனுகூலமான சூழல்கள் தேவைப்படுகின்றன.
1. இந்தப் பிரச்சினையைப் தமிழகப் பொதுப்பிரச்சினையாக சித்தரிக்கக்கூடிய 'பேச்சு' ஒன்று தேவைப்படுகிறது. அதாவது, இது நகர்ப்புற மாணவர்கள் பிரச்சினை, மெட்ரிகுலேசன் மாணவர்கள் பிரச்சினை, மேட்டுக்குடியினரின் பிரச்சினை, பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினை என்ற விவாதங்களைக் கடந்து இது தமிழகத்தின் பிரச்சினையாக சித்தரிக்கப்பட வேண்டும்.
2. இப்படி சித்தரித்ததை முன்மொழியக்கூடிய ஒரு கதாபாத்திரம் நமக்குத் தேவை. இந்தப் பாத்திரம், சுயநலமற்றவராகவும், எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமலும் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த கதாபாத்திரங்கள் என்பது என் கணிப்பு. 
3. ஆசிரியர்கள் என்று சொல்லும் போது, ஆசிரியர் சங்கங்களை நான் சொல்லவில்லை என்பது முக்கியம். சங்கங்கள், ஆசிரியர்களின் சொந்த பணிப்பாதுகாப்புகளை கண்காணிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை என்பதால், வெகுஜனம் சங்கங்களை முழுமையாக நம்பிவிடுவது இல்லை. எனவே, நான் இந்தக் கதாபாத்திரங்களை ஆசிரியர்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.
4. சங்கங்களின் சாயல் இல்லாமல், ஆசிரியர்கள் இந்த எதிர்ப்புணர்வுகளை பொது அமைதிக்கு எந்தவொரு பங்கமும் இல்லாமல் நடத்துவது இன்னும் முக்கியம். உதாரணமாய், இந்த எதிர்ப்புகளை ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் வேலை நேரங்களுக்குப் பின்பும் மாணவர்களோடு இரவெல்லாம் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தத் தொடங்கலாம். இந்த உள்ளிருப்புப் போராட்டம் உடனடியாய் வெகுஜனத்தை ஈர்க்கும். தத்தம் குழந்தைகளைத் தேடிக்கொண்டு பெற்றோர்கள் வர ஆரம்பிப்பார்கள். ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சியில் மெரினாவும் தமுக்கமும் போராட்டக் களங்களானது போல, இந்த முறை பள்ளிக்கூடங்கள் போராட்டக்களங்களாக மாறும். இதிலொரு நாடகத்தன்மை இருக்கிறது. ஆனால், இந்த நாடகத்தன்மையே வெகுஜனக் கிளர்ச்சிக்கான விதை.
5. பள்ளிக்கூடங்களை ஆசிரியர்கள் அடைக்க மறுத்து, மாணவர்களோடு அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டால் நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜனக் கோபத்தை எளிதாய் வெளிக்கொண்டு வரமுடியும்.
இது முழுக்க முழுக்க கற்பனை. தமிழ் சினிமாவொன்றின் கிளைமாக்ஸ் காட்சி போல இருக்கலாம். இருக்கலாம் என்ன, அப்படியே தான். ஆனால், இது தான் வெகுஜனங்களை திரட்டுவதற்கான இப்போதைய வழி. வழக்கமாய் இந்த நாடகங்களை தலைவர்களே செய்வார்கள். அவர்கள் இல்லாத பட்சத்தில் மக்கள் தான் செய்ய வேண்டும். 
நீட் தேர்வுக்கு எதிராக, பள்ளிக்கூடங்களை பூட்ட மறுக்கும் தர்ணாக்களை ஆசிரியர்கள் தொடங்கினால்....'