Skip to main content

எதிர் வினை - ஆவுடையாள் கேட்ட பிச்சை

தர்மு,

உங்களுடைய ‘ஆவுடையாள் கேட்ட பிச்சை’ யைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன்.  நான் வாசித்தது சரி என்றால், இந்திய ஞான மரபில் அமானுஷ்யம் பற்றி நடந்த உரையாடலைக் கவனப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  ஆங்கிலத்தில் மிஸ்டிசிசம் என்று மேம்போக்காக இதைப் புரிந்து கொள்கிறார்கள்.

கலைகளின் ஆதார சுருதியே இந்த அமானுஷ்யம்.  கலையை புத்திபூர்வமாக அணுக முற்பட்ட மாடர்னிஸத்தை வீழ்த்துவதற்கு இந்த அமானுஷ்யத்தையே லத்தின் அமெரிக்க எழுத்துகள் பயன்படுத்திக் கொண்டன.  பகுத்தறிவுவாதத்திற்கும் கலைக்கும் என்றைக்குமே ஒத்து வந்திருக்கவில்லை என்பதை பெளத்தம் முதல் திராவிட இயக்கம் வரைக்கும் நம்மால் பார்க்க முடியும்.  கலை மனம் பகுத்தறியும் மனதை குறைத்தே மதிப்பிட்டிருக்கிறது.  உலகை தட்டையாகப் புரிந்து கொள்வதாகக் கலை, அறிவியலை கண்டித்தே வந்திருக்கிறது.

இதையெல்லாம் நீங்களே அறிவீர்கள்.  ஆனால், உங்களது ஆவுடையாள் கேட்ட பிச்சை, ஒரே நேரத்தில் அமானுஷ்யத்தையும் பகுத்தறிவையும் சமமாகப் பாவித்துப் பேசுவதாக நினைக்கிறேன்.  அமானுஷ்யத்தை நீங்கள் மறுத்தத்து போல் தெரியவில்லை.  ஆனால், ஏற்கனவே சொல்லியிருப்பது அமானுஷ்யம் இல்லை என்கிறீர்கள்.  அப்படியானால், அமானுஷ்யத்தில் விதங்கள் உண்டா என்ற கேள்வி எழும்புகிறது.  இதில் கலையின், அறிவின் பங்களிப்பு என்ன என்பதும் எனக்கு விளங்கவில்லை.  இது எனது முதல் சந்தேகம்.

எனது இரண்டாவது சந்தேகம், நீங்கள் எழுதியிருக்கும் வரலாற்று சம்பவம் குறித்தது.  கர்னல் ஆல்காட்டின் முயற்சியாலேயே அயோத்திதாசர் இலங்கைக்கு சென்று பெளத்தராக மதம் மாறினார் என்பது தெரியும்.  உங்களது ‘நான் பூர்வ பெளத்தன்' நூலில் அதைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.  ஆனால், ஆல்காட் பெளத்த மதமாற்ற நிகழ்ச்சியை இயக்கமாக மாற்ற விரும்பினார் என்பது போல ஒரு தகவலைச் சொல்கிறீர்கள்.  அதற்கு அயோத்திதாசர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அந்தக் கட்டுரையில் தொனிக்கிறது.  நானறிந்த வரையில் பெளத்த மத மாற்றம், அம்பேத்கராலேயே மாபெரும் இயக்கமாக செய்யப்பட்டது.  அயோத்திதாசருக்கு அப்படியொரு திட்டம் இருந்ததா?  இருந்தது என்றால் அது வரலாற்றில் என்னவானது?  அயோத்திதாசரின் பெளத்தம் சமூக இயக்கமாக மாறுவதை விடவும் அறிவுஜீவிகளின் மதமாகத் தான் இருந்தது என்று வேறு சில கட்டுரைகளில் படித்திருக்கிறேன்.  இதை நீங்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எஸ். சின்னப்பன்

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...