Friday, 8 April 2016

எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி?

எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி?


2016 தேர்தலின் ஆகப்பெரிய பிரச்சினையே ‘சூழ்ச்சி’ தான் என்று மாறிவிட்டிருக்கிறது.    

திமுக தலைவர் கருணாநிதியைச் சொன்னது போக, நம் எல்லோருக்குள்ளும் ஒரு ‘ராஜதந்திரி’ ஒளிந்து கொண்டிருக்கிறானோ என்று இப்பொழுது சந்தேகம் வருகிறது.

வழக்கமாய் இந்தத் தேர்தல் சூழ்ச்சிகளை திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே செய்து வருவதாகப் பேச்சிருக்கும்.  ஒருவரை ஒருவர் சேறு வாரி இறைப்பதற்கும், சிக்கலில் மாட்டி விடுவதற்கும், அதன் மூலம் பலவீனப்படுத்துவதற்கும் சூழ்ச்சிகள் நடப்பதாக விளக்கங்கள் சொல்லப்படும் (விளக்கங்கள் மட்டும் தான் சொல்லப்படும்!).  புலனாய்வுப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தான் நமக்கு இந்தத் தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பவை.  நாம் சூழ்ச்சிக் கதைகளின் வாசகர்களாக மட்டுமே தான் இருந்தோம்.    ஆனால், இந்த முறை, சூதாட்டத்தில், வாக்காளர்களாகிய நாமும் ஒரு கையாகச் சேர்ந்திருக்கிறோம்.

வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பணம் எந்த வழிகளில் பயணம் செய்கிறது; யார் யார் எவ்வளவு பணத்தை செலவு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்; ‘மாற்று அணியை’ உருவாக்குவதற்கு என்னென்ன தந்திரங்கள் செய்யப்படுகின்றன; மாற்று அணியை உடைப்பதற்கு செய்யப்படும் பிரச்சாரங்கள் என்ன; ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணிக்குள் எவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது - அதற்கு பயன்படுத்தப்பட்ட சாம, தான, தண்ட, பேதங்கள் என்னென்ன; எந்த கட்சியை யார் உடைத்தது; அதற்காக திரை மறைவில் நடைபெற்ற பேரங்கள் என்னமொத்தத்தில், ஆகக்கழிசடையான தெலுங்குப் படமொன்றை பார்க்கும் மன நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

*********

இந்தத் தேர்தலில் எங்கே தவறு நடக்கத் தொடங்கியது என்று கேட்டால், ‘மூன்றாவது அணி’ என்ற கற்பனையில் தான் என்று சொல்வேன்.  திராவிடக் கட்சிகளுக்கான மாற்று என்பதை இவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டாம்.  

தேர்தல் என்பது ஒவ்வொரு கட்சியும் தனது அரசியலைக் கண்டெடுக்கும் தருணம் அல்ல; அது, ஏற்கனவே கைக் கொண்டிருக்கும் அரசியல் மூலமாக, அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி என்பதை ஒட்டுமொத்தமாய் எல்லாரும் மறந்து போனார்கள்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஏன் தேவை என்று சிறிய எண்ணிக்கையிலான ‘அரசியல் அறிஞர்கள்’ காலம் காலமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.  ஆனால், அது ஒவ்வொரு முறையும் மக்களின் ஆதரவில்லாமல் தோல்வியே அடைந்திருக்கிறது - சில நேரம் தேர்தலுக்கு முன்பும், சில நேரம் பின்பும்.  இந்த முறையும், அப்படியொரு ‘மாற்று' உருவாகிவிட்டது போன்ற தோற்றத்தை அதே அறிஞர்கள் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.  

இதில் கோளாறு என்னவென்றால், இந்த முறை, மாற்று உருவாகிவிட்ட தோற்றத்தை, மக்கள் நம்புவதற்கு முன்னால், கொஞ்சமே கொஞ்சம் மரியாதையான தலித் கட்சியும், கம்யுனிச கட்சிகளும் நம்பத் தொடங்கி விட்டார்கள் என்பது தான்.

************
தலித்துகளும் கம்யுனிஸ்டுகளும் தேர்தலை எவ்வாறு விளங்கிக் கொண்டார்கள் என்பதே இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது.  தேர்தல் காலத்தை, மக்கள் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் காலமாக நம்பி ஏமாறுகிறார்களோ என்று நான் சந்தேகப் படுகிறேன்.  

தேர்தல், ஒரு அணிக்கு அல்லது கட்சிக்கு இருக்கும் மக்கள் ஆதரவை மூலதனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் தருணம்.  ஆனால், நமது மாற்று அணியினர் தேர்தல் நேரத்தில் தான் தங்களுக்கான மக்கள் ஆதரவைத் திரட்டத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது ஏமாற்றமாக இருக்கிறது.

தலித்துகளும் கம்யுனிஸ்டுகளும் கூட ஆரம்பத்தில் ‘மாற்று' யோசனையை இத்தனை பிடிவாதமாய் நம்பியிருவில்லை.  திமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவதற்கான ஒரு நிர்பந்தமாகவே இந்த ‘மாற்று'  யோசனையை அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.  ஆனால், ‘அரசியல் அறிஞர்’களிடமிருந்து  சமூக ஊடகங்களில் அதற்குக் கிடைத்த உடனடி வரவேற்பு, அவர்களை மீளாச் சகதியில் கொண்டு சேர்த்து, இப்பொழுது மதிமுகவுடனும், தேமுதிகவுடனும் சேர்ந்து புரள வைத்துக் கொண்டிருக்கிறது.

*********

இந்தக் கூட்டணி, ஏன் ’மாற்று' அரசியலாக முடியாது என்பதற்கு பெரிய பெரிய கோட்பாட்டு விளக்கங்களெல்லாம் தேவையில்லை.  மிக எளிய கண்களே போதும்.  

திராவிட கட்சிகளின் மக்கள் செல்வாக்கிற்கு இரண்டே இரண்டு முக்கிய காரணங்கள் தான் உள்ளன - அவை, வலுவான கட்சி கட்டமைப்பைக் கொண்டுள்ளன; பொது அரசியலைப் பேசுகின்றன.

பொது அரசியலைப் பேசுவது என்றால் என்ன?    சாதி, சமயம், வட்டாரம் போன்ற தனித்த அடையாளங்களை மீறிய, அனைவரையும் உள்ளிணைத்துக் கொள்ளக்கூடிய பொது அடையாளங்களுடன் கூடிய பேச்சை ‘பொது அரசியல்' என்று சொல்ல முடியும்.   திராவிடக் கட்சிகளின் பேச்சு, அப்படியானவொரு பேச்சாக இருக்கிறது.  

மாறாக, காங்கிரஸ், கம்யுனிஸ்ட், தலித், சாதிக்கட்சிகள், பாரதிய ஜனதா, தமிழ் தேசியம் பேசுவோர் என்று யாருக்கும் இப்படியொரு ‘பொது' அரசியல் இருக்கவில்லை.   தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது, தமிழகத்தின் பிரச்சினை என்றும், இதில் இந்திய தேசியத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் இருக்கவில்லை என்பதிலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; அதே போல, பாராளுமன்றத் தேர்தலில், இந்திய தேசியத்திற்குத் தான் வேலை.  இதில் மக்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை;  அதனால் தான் அவர்கள் திராவிடக் கட்சிகளின் பின்னால் அணிதிரள்கிறார்கள். 

**********
இது போன்ற எந்த விபரமும் தெரியாமல், தலித்துகளும் கம்யுனிஸ்டுகளும் தேர்தல் களத்தில் வளைய வருகிறார்களோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  

தலித் கட்சிகளிடம், கூர்மையான விமர்சனங்கள் உள்ளன; இன்றைக்கு நடைமுறையிலிருக்கும் சமூக அமைப்பு குறித்த அவர்களது பார்வை இன்றியமையாதது, ஆனால், அவர்களிடம் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான அரசியல் என்று எதுவும் இருக்கவில்லை.  தலித் விமர்சனத்தை, பொது அரசியலாக மாற்றுவதற்கான திட்டங்களும் அவர்களிடம் இல்லை; எல்லாவற்றையும் விட தங்களது சமூக விமர்சனமே, தங்களது அரசியல் என்ற மூட நம்பிக்கையும் அவர்களிடம் உண்டு.  இதிலிருந்து அவர்களாக மீண்டு வந்தால் தான் தலித் அரசியல் உருப்பெறும்.

கம்யுனிஸ்டுகளின் சிக்கலோ மிகத் தெளிவானது; அவர்களிடம் ஒட்டுமொத்த அகிலத்திற்கான அரசியல் கோட்பாடுகள் உண்டு, ஆனால், பரிதாபகரமாக, தமிழ்ச் சூழலுக்கான அரசியலை அவர்கள் இன்னும் கண்டுபிடித்தபாடு இல்லை.  தமிழ்ச் சாதியமைப்பு குறித்த தலித் விமர்சனத்தை, எந்தவொரு சங்கடமுமில்லாமல், ஆர்ப்பாட்டமின்றி, கட்சிக்குள் அவர்களால் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்.  ஆனால், அவர்கள் தெரிந்தே இதனைத் தவிர்த்து வருவது, அக்கட்சித் தலைமையின் மீது தான் பெருத்த அவநம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது.   

ஆனாலும், சாதியமைப்பு குறித்த விமர்சனத்திற்காக தலித்துகள் மீதும், தத்துவார்த்த பின்புலம் சார்ந்து கம்யுனிஸ்டுகள் மீதும் நமக்கிருக்கும் கரிசனம் தான் ‘மாற்று அணி’யின் முகத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.  இது தான் அவர்களுக்கு ஆபத்தும் கூட.  கரிசனம் என்றைக்குமே வாக்குகளாக மாறாது.  அதுவும் அறிவாளிகளின் கரிசனம், வீடு சேராத வெள்ளாமை!

அப்படியானால் இங்கே ‘மாற்றே’ சாத்தியமில்லையா?  இருக்கிறது.  தலித்துகளும் கம்யுனிஸ்டுகளும் தங்களுக்குள் திறந்த மனதோடு உரையாடிக் கொள்வதன் மூலம், இணைந்து செயல்படுவதற்கான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதே ‘மாற்று'க்கான முதற்படியாக இருக்க முடியும்.  ஆனால், அதைச் செய்யக் கூடிய களம், தேர்தல் அல்ல. 

**********
தேர்தல் எப்பொழுதுமே இரண்டு ஜாம்பவான்கள் மோதிக்கொள்ளும் களமாக இருப்பது தான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நல்லது.   நமக்கு வாய்த்த ஜாம்பவான்கள் - திமுகவும் அதிமுகவும் தான்.  

இதில் குழப்பமோ, ராஜதந்திரமோ, சூழ்ச்சியோ, மறைபொருளோ இல்லாமல் - நான் திமுகவையே ஆதரிக்கிறேன்.  

ஏன், அதிமுக இல்லை என்பதற்கு என்னிடம் வலுவான காரணங்கள் உள்ளன.  

அதிமுகவிடம் இருப்பதாக நம்பப்படும், தமிழர்களுக்கான ‘பொது அரசியல்’ ஒரு மாயை என்பது கடந்த பத்திருபது ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்த தமிழர்களுக்கான அரசியலிலிருந்து விலகி, சில குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசியலைப் பேசும் கட்சியாக அது தன்னை கூச்சமில்லாமல் மாற்றிக் கொண்டுவிட்டது.  ஊழலும் சாதிவெறியும் சேர்ந்தால், சர்வாதிகாரம் தான்!  

இந்த விஷயத்தில் நான் பாமகவைக் கூட அதன் வெளிப்படைத் தன்மைக்காக ஏற்றுக்கொள்வேன்; ஆனால், அதிமுக செய்வது பித்தலாட்டம் - பொது அரசியல் என்று சொல்லி அக்கட்சி சாதி அரசியல் செய்கிறது.  இதனாலேயே அது, எந்தவொரு நடுநிலை அமைப்புடனும் ஒட்டோ உறவோ வைத்துக் கொள்வதில்லை;  உரையாடல்களுக்கு சாத்தியமற்ற முறையில், தன்னை இறுக மூடிக் கொண்டு, தனது பழைய ‘பொது அரசியல்' பிம்பத்திலேயே காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆக, இந்தத் தேர்தலுக்கு, எல்லோருக்கும் பொதுவாய் பேசுவதற்கு மிஞ்சியிருக்கிற ஒரே கட்சி, திமுக மட்டும் தான்.  இது, நமது தலித் - கம்யுனிஸ்ட் நண்பர்களுக்கும் நன்றாகவே தெரியும்.  மதிமுக - தேமுதிக வோடு உரையாடுவதை விடவும், திமுகவோடு உரையாடுவது எளிது, சுமுகமானது என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக அறிவார்கள்.  பாடாய்படுத்தும் ராஜதந்திர மனநிலையிலிருந்து அவர்கள் இப்பொழுதாவது வெளியேற வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்வேன்.

அவர்கள் இருவரும், திமுகவுடனான தங்களது பேச்சை மீண்டும் தொடர்வது தான் மிக எளிய காரியார்த்தம் என்று நான் நினைக்கிறேன்.  

திமுகவும் கூட, தலித்துகள் - கம்யுனிஸ்டிகள் தங்களோடு இணைவதன் சாதகங்களை நன்றாகவே அறிந்திருக்க வேண்டும்.  திமுக, பொதுவான அரசியலைப் பேசும் கட்சி என்ற பிம்பத்தை சாத்தியமாக்குவதில் தலித்துகளுக்கும் கம்யுனிஸ்டுகளுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை திமுக நன்றாகவே அறியும்.  தனது ‘பொது அரசியல்’ பிம்பத்தைத் தக்கவைப்பதற்கு இவர்களை இணைத்துக் கொள்ள வேண்டியது அத்தியாவசியமும் கூட.


தேர்தல் நேரத்தில், எளிய வாக்காளன், இத்தகையதொரு நம்பிக்கையான கூட்டணியையே விரும்புகிறான்.  வாக்களிக்க முடிவு செய்யும் போது, சூழ்ச்சிகளையும், சூதுகளையும், ராஜதந்திரங்களையும், அவதூறுகளையும், கிசுகிசுக்களையும் அவன் கணக்கெடுப்பது இல்லை.  

3 comments:

Lenin Lenin said...

Anna such a clear article.

sound said...

No word about corruption of either DMK orAIDMK who ruled tamilnadu so far.
As if both parties put candidates of different caste in a particular caste dominated area.!
First Brahmin rule,mudaliar rule,thevar rule ...........what next?

What an unrealistic article of an intellectual !!!!!

Uganathan Rangasamy said...

கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு பொது அரசியல் இல்லை என்பது , எனக்கு விளங்கவில்லை,