Skip to main content

எழுத்து அரசியல் 1 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் - பாகம் 1



ஏறக்குறைய இருபது ஆண்டுகளைத் தாண்டும் முன்னரே போகும் திசையறியாது ஜன நெருக்கடி மிகுந்த நாற்சந்தியில் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருப்பது தான் தமிழ் தலித் இலக்கியத்தின் இன்றைய யதார்த்தம். எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்பதில் தொடங்கிஎன்னையெல்லாம் தலித் இலக்கியவாதி என்று அழைக்காதீர்கள்’, என்பது வரையில் ஏராளமான குழப்பக் குரல்கள் தான் கேட்கின்றன. தொடக்கத்திலிருந்தே தங்களை தலித்தல்ல என்று மறுத்துக் கொண்டிருக்கிறவர்கள் ஒருபக்கமிருக்க, ‘தலித்என்ற அடையாளம் மூலம் மட்டுமே கணிசமான வாசிப்பிற்கும், கவனிப்பிற்கும் ஆளானவர்கள் கூட இன்றைக்குதலித்என்ற அடையாளத்தை மறுக்கும் தடாலடி பல்டியும் நம்மிடையே நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் தலித் இலக்கியத்தில் நடைபெறும் இந்தத் தயக்கங்களின் காரணம் என்ன? எதைக் கண்டு அது திகைத்து நிற்கிறது? மேற்கொண்டு நகர முடியாமல் போனதற்கான காரணங்கள் எவை? ‘தலித் இலக்கியம்என்ற பெயரை மறுதலிக்கும் அளவிற்கு நடைபெற்ற மாற்றங்கள் என்ன? இவை போன்ற கேள்விகளைச் சுமந்து கொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இவையனைத்திற்குமான பதில்களையும் உடனடியாகக் கண்டறிந்து எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. பின் இந்தக் கட்டுரையின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கேட்க முடியும். மிக எளிமையான ஒன்றே ஒன்றுதான் - கடந்து வந்த நிலப்பரப்பின் வரைபடத்தைத் தயாரித்தல்! தொலைந்து போகாமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பாக நிலவரைபடங்கள் தானே சொல்லப்படுகின்றன.

தலித் இலக்கியம்: சில அடிப்படைப் புரிதல்கள்:

தமிழ் தலித் இலக்கியம் பற்றிய எந்தவொரு விவாதத்திற்கு செல்லும் முன்பாக, ‘தலித் இலக்கியம்குறித்த புரிதல்களை நாம் உருவாக்கிக் கொள்வது அவசியமென்று நினைக்கிறேன். ‘தலித்என்ற சொல் இலக்கியத்தோடு இணைகையில் உருவாகும் குழப்பங்களையெல்லாம் இந்தக் கட்டுரையின் மூலம் தீர்த்துவிட முடியாது என்றாலும், இந்த விவாதத்தைப் பொறுத்தளவில் நான், தலித் இலக்கியம் என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விடுவது உத்தமம்.
தலித் இலக்கியம்என்று பேசுவதற்கு முன்தலித்என்ற சொல்லின் அந்தரார்த்தம் பற்றி தெரிந்து கொள்வது சரியாக இருக்கும். மகாத்மா ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்றவர்கள் இச்சொல்லை என்ன பொருளில், எந்த சூழலில், என்ன காரணத்திற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதோடு இக்கட்டுரை தொடங்குகிறது. கூடவே, தமிழகத்தில் அயோத்திதாசர் கட்டமைத்தபூர்வ பௌத்தன்என்ற அடையாளத்திற்கும்தலித்என்ற அடையாளத்திற்குமான உறவும் சுட்டப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தலித் இலக்கியத்தின் குணங்களையும், இயங்குதளங்களையும், அரசியலையும் புரிந்து கொள்வதற்கு நான் மராத்திய தலித் இலக்கியங்களை பயன்படுத்திக் கொள்கிறேன். தலித் இலக்கியத்தை அறிமுகம் செய்தது மராத்திய இலக்கியவுலகே என்ற காரணத்தாலும், ஆங்கிலம் வழி ஓரளவிற்கு அறிய முடிகிற பிற மொழி தலித் இலக்கியம் அது ஒன்றே என்பதாலும் மராத்தியை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

1.         தலித்என்ற சொல்லின் தோற்றம்:

தலித்என்ற சொல்லுக்கு மராத்தியில்நொறுக்கப்பட்ட மக்கள்என்று அர்த்தம் சொல்கிறார்கள். ‘தீண்டாமையின் தோற்றம்என்ற தனது கட்டுரையில், இந்தச் சொல்லிற்கு இணையாக broken peopleஎன்ற சொற்றொடரை அம்பேத்கர் பயன்படுத்துகிறார். ஜோதிராவ் பூலேயால் ஒரு கலைச்சொல்லைப் போலப் பயன்படுத்தப்பட்டதலித்என்ற வார்த்தையின் பயன்பாட்டுச் சூழலைப் புரிந்து கொள்வது நமது விவாதத்திற்கு உதவிகரமாய் இருக்கும்.

தீண்டாமையின் தோற்றம்என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரை பலவகைகளில் குறிப்பிடத்தகுந்தது. முதலாவதாக, அந்தக் கட்டுரை ஆங்கிலேயர் ஆட்சியின் போது தொடங்கப்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற எண்ணிக்கை விளையாட்டின் பின்புலத்தில் செயல்பட்ட பல்வேறு அரசியல்களை அப்பட்டமாய் பேசுகிறது. இரண்டாவது, பட்டியலின மக்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான மோதலை மையப்படுத்தி விவாதிக்கிறது. மூன்றாவதாக, அம்பேத்கர் அதில் பயன்படுத்தியுள்ள மானுடவியல் சான்றுகளில் பலவும் தமிழகப் பண்பாட்டைச் சார்ந்தவை. நான்காவதாக, பௌத்த சமயத்திற்கும் பட்டியலின மக்களுக்குமான உறவை வரலாற்றுப்பூர்வமாய் இக்கட்டுரை விவரிக்கிறது. ஐந்தாவதாக, பௌத்தம் வீழ்த்தப்பட்டதால் மட்டுமே பௌத்தர்கள் தாழ்த்தப்பட்டவர்களாய் மாற்றப்பட்டார்கள் என்ற வாதத்தை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளாதது இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, இந்தக் கட்டுரையில் மேலெழுந்து வந்த விவாதச் சரடுகளை பின்னாளில் தனது எந்த விவாதத்திலும், ஆய்விலும், உரையிலும் வளர்த்தெடுக்க அம்பேத்கர் முயற்சித்திருக்கவில்லை.

ஆனால், ‘தீண்டாமையின் தோற்றம்என்ற கட்டுரை என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. ஏனென்றால், ஆண்டாண்டு காலமாய், இந்நாட்டின்தாழ்த்தப்பட்டசமூகக் குழுக்களிடையே வழங்கிவரும் வரலாற்று ஓர்மையொன்றை இக்கட்டுரை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒரு காரணத்திற்காகவே இக்கட்டுரை முக்கியமானது என்று படுகிறது.

தீண்டத்தகாதவன்என்ற பெயரில் சமூகப் பண்பாட்டு வெளியிலிருந்து புறந்தள்ளப்பட்டதற்கான வரலாற்றுக் காரணங்கள் நீண்ட தொடர்ச்சியான சரடொன்றைப் போல ஓடிக்கொண்டிருப்பதைச் சுட்டும் பல்வேறு சான்றுகள் இன்றைக்கு நமக்குக் கிடைக்கின்றன. அசுவகோசர் என்ற முனி எழுதியவச்சிரசூச்சிஎன்ற நூலில்தாழ்த்தப்பட்டவர்கள்வீழ்ந்ததற்கான காரணங்கள் விளக்கப்படுவதாகவும், இப்படியொரு நூல் பல்வேறு இந்திய மொழிகளில் வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

நந்தன் என்ற பௌத்த மன்னன் இன்றைய பார்ப்பனர்களின் பூர்வகதையென்ன என்ற விசாரணைக்காக, தென் பொதிகை மலையில் வசித்து வந்த அசுவகோசர் மற்றும் வச்சிரசூதர் என்ற இரு முனிவர்களை அழைத்து வந்து விபரம் கேட்டான் என்றொரு வாய்மொழித் தகவலை அயோத்திதாசர்இந்திரதேச சரித்திரம்என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இந்நாட்டின் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான தீராத பகையின் காரணமென்ன என்று தேடி வடதமிழகக் கிராமங்களில் திரிந்த பொழுது அவர் கண்ட சுவடியொன்றின் பெயர், ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’. இச்சுவடி ஒரு வழிநூல், அதாவது உரை நூல். அசுவகோசரும், வச்சிரசூதரும் எழுதிய மூல நூலை விளக்கக்கூடிய உரைநூல். புரூசீகர்கள் என்றழைக்கப்படும் பார்ப்பனர்கள் இங்கு வந்து எவ்வாறு தங்களது வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொண்டார்கள். அதற்காக அவர்கள் செய்த தகிடுதத்தங்கள் எவையெவை. அவர்களைக் கண்டித்த பௌத்தத்தையும் - பௌத்தர்களையும் அவர்கள் சூழ்ச்சியின் மூலம் எவ்வாறு வீழ்த்தினார்கள் என்ற வரலாற்றையே மேற்கூறிய நூற்களெல்லாம் பேசுகின்றன.
சாதியத்தை விளக்கும் வழிமுறைகளில், அதிலும் குறிப்பாகதீண்டாமைஎன்ற செயல்பாட்டை விளக்கும் சொல்லாடல்களில், ஓரளவிற்கு நேர்மையுடனும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும், ‘தீண்டத்தகாதவர்களின்பார்வையிலிருந்தும் செய்யப்பட்ட விளக்கம் பௌத்த வீழ்ச்சியையும் - தாழ்த்தப்பட்டவர் வீழ்ச்சியையும் இணைத்து சொல்லப்பட்ட விளக்கம் மட்டுமே. இந்த விளக்கமளித்தல் மட்டுமேதீண்டத்தகாதபிரிவினரின் உள்ளத்திற்கு நெருக்கமானதாகவும், அவர்களை மனிதர்களாய் மதிக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது.
அந்த விளக்கத்தைச் சுருக்கமாகச் சொல்வதானால் இப்படி சொல்ல வேண்டும். பார்ப்பனர்கள் செய்யும் மோசடிகளையெல்லாம் கண்டிக்கக்கூடிய நிறுவனமாக பௌத்தம் விளங்கியது. ஏறக்குறைய பார்ப்பனர்களின் நிஜ முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவே இத்தகைய பௌத்த நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதனால், பௌத்தம் மீதும் பௌத்தர்கள் மீதும் பார்ப்பனர்கள் தீராக் கோபம் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களின் மோசடிகளையோ, பௌத்தம் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளையோ அறிந்திராத கல்வியற்ற குடிகள் இந்நாட்டில் ஏராளம் இருந்தன. இத்தகைய கல்லாக் குடிகளை மந்திர தந்திரங்கள் சொல்லி பார்ப்பனர்கள் மயக்கி வந்தனர். பார்ப்பனர்களின் தந்திரங்களில் மயங்கிய கல்வியற்ற குடிகளின் துணையோடு, பார்ப்பனர்கள் பௌத்தத்தின் மீது தொடர்ச்சியாக அவதூறுகளைப் பரப்பினர். இதனைக் கல்வியறிவற்ற மக்களும் உண்மையென்று நம்பினர். நாளடைவில் பார்ப்பனர்களின் சொற்களே வேதங்கள் என்றாகி, பௌத்தமும் பௌத்தர்களும் சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர்.
பௌத்தம் தனது நிறுவன பலம் குலைந்து, பிற ஆசிய நாடுகளுக்குள் வேர்விடத் தொடங்கியது. பௌத்தர்களோ - பௌத்த உண்மைகளில் வேரூன்றி நின்ற பௌத்தர்களோ - சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டார்கள். சமூகக் கட்டமைப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டார்கள்; அவர்களது குடியிருப்புகள் ஊர்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன; அவர்களால், எல்லோருக்கும் பொதுவான நிலத்தையோ, நீரையோ பயன்படுத்த முடியாமல் போயிற்று; அவர்களுக்கு துணி வெளுக்க அனுமதி இல்லை என்றார்கள்; முடிதிருத்த உரிமை இல்லை என்றார்கள்; பொதுக் கருவூலங்களாக விளங்கும் கோவில்களில் நுழைய முடியாது என்றார்கள்; இறுதியாய், இவர்களெல்லாம் தீண்டத்தகாதவர்கள் என்று காரணம் சொன்னார்கள். கொண்ட கொள்கையில் காட்டிய பிடிப்பிற்காக பிறப்பைக் காரணம் காட்டி தண்டனை தரப்பட்டது. இப்படியாகத்தான், பௌத்தம் நொறுக்கப்பட்டபொழுது, பௌத்தர்களும் நொறுக்கப்பட்டனர்.
இந்த விளக்கத்தின்படியே, ஜோதிராவ் பூலே தீண்டத்தகாதவர்களை நொறுக்கப்பட்டவர்கள், அதாவதுதலித்என்று எழுதினார். பின்னாளில் இதனைத் தனது கட்டுரையில் குறிப்பிடும் அம்பேத்கரும் இம்மக்களை broken people’, என்றார். இந்த வகையில்தலித்என்ற சொல்தீண்டாமையைதாழ்த்தப்பட்டவனின் பார்வையில் விளக்கும் பொழுது உருவாகக்கூடிய பண்பாட்டு அரசியல் சார்ந்த அடையாளமாகும். பிறப்பினடிப்படையில் தீர்மானிக்கப்படுகிற பட்டியலினத்தவன் / அரிஜன் / தாழ்த்தப்பட்டவன் போன்றவொரு அடையாளம் அல்ல இது. இந்திய வரலாற்றை ஒடுக்கப்பட்டவனின் பார்வையில் மறு வாசிப்பு செய்து விளங்கிக் கொள்ளும்போதேதலித்என்ற அடையாளத்தின் முழுமை விளங்கும். தான் தாழ்த்தப்பட்டது அல்லது நொறுக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்ளும்போதேதலித்என்ற உணர்வுநிலையை அடையமுடியும்.
ஆனால், ‘தலித்என்ற சொல்லை இத்தனைக் கனபரிமாணங்களோடு இந்தியாவில் யாராவது பயன்படுத்துகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘தலித்என்ற சொல்லின் பின்னாலுள்ள வரலாற்று மாற்று விளக்கத்தை மழுப்பிவிட்டு, ‘இது தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே வைத்துக் கொண்ட பெயர்என்று சுருக்கி, தட்டையாக்கி வெகுஜன அரசியல் அரங்கில் புழங்கவிட்ட பெருமை தலித் இயக்கங்களையும், கட்சிகளையுமே சாரும்.
தீண்டாமைகுறித்த இம்மாற்று வரலாற்றுப் பார்வையிலிருந்து மராத்தியில் தோன்றியதலித்’ (நொறுக்கப்பட்டவன்) என்ற சித்தனையைப் போன்றவொரு கருத்தாக்கம் தமிழிலும் செய்யப்பட்டிருந்தது. தமிழிலக்கிய சான்றாதாரங்களைக் கொண்டு, மேற்கூறிய வரலாற்று மீட்டுருவாக்கத்தை அச்சுப்பிசகாமல் தமிழில் செய்திருந்த அயோத்திதாசர், இத்தகைய விளக்கத்தினின்று உருவாக்கக்கூடிய மாற்று அடையாளம் கொஞ்சம் மாறுபட்டது. பௌத்தம் வீழ்த்தப்பட்ட பொழுதே இத்தேசத்தின் பூர்வகுடிகளும் நொறுக்கப்பட்டார்கள் என்பதை விவரிக்கும் அயோத்திதாசர், இந்த நொறுக்கப்பட்ட யதார்த்தத்தை மையப்படுத்தி மாற்று அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. மாறாக, ஆதியிலிருந்தே பௌத்தத்தோடு உறவாடியவர்கள் என்ற செய்தியைக் கவனப்படுத்திபூர்வ பௌத்தர்என்ற அடையாளத்தை முன்வைக்கிறார். ஒரே மாதிரியான வரலாற்று மறுகட்டமைப்பிலிருந்து இவ்வாறு இருவேறு அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பது ஆழமான ஆய்வுகளுக்கு உரியது.
என்னைப் பொறுத்தவரையில்தலித்என்ற அடையாளத்தைக் காட்டிலும்பூர்வபௌத்தன்என்ற அடையாளம் இரண்டு காரணங்களுக்காக சிறந்தது என்று படுகிறது. இதற்கான காரணங்களையும் என்னால் சொல்ல முடியும். ஒன்று, வீழ்த்தப்பட்ட யதார்த்தத்தையே பேசுகிறது என்றாலும், ‘நொறுக்கப்பட்டவர்கள்’ (தலித்) என்ற சொல்லிலுள்ள எதிர்மறையான எண்ணம், ‘பூர்வ பௌத்தன்என்ற அடையாளத்தில் இல்லை. மேலும், ‘நொறுக்கப்பட்டவர்கள்என்ற சொல் உருவாக்கக்கூடிய கழிவிரக்கம்பூர்வ பௌத்தனில்இல்லை என்பதும் முக்கியம். இரண்டு, ‘சமயம்குறித்து ஆயிரமாயிரம் அறிவியல் கண்டனங்கள் உண்டு என்றாலும், வெகுஜன தளத்தில் அதனுடைய தேவையையும், செயற்பாட்டையும் யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் பெரும் ஜனத்திரளைக் கூட்டுவதற்கான சமயம் தழுவிய பார்வைபூர்வ பௌத்தன்என்ற அடையாளத்தில்தான் உள்ளதே தவிர, ‘தலித்என்பதில் அல்ல.
(தொடரும்)

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக