Skip to main content

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் 1

 சாதி எதிர்ப்பின் இரண்டு வழிமுறைகள்சாதியையும் சாதிய எதிர் நடவடிக்கைகளையும் விளங்கிக் கொள்வதில் இன்றைக்கும் குழப்பம் தான்.  சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதிலும், அதனை எதிர்கொள்வது எவ்வாறு என்பதிலும் ஏற்கனவே சொல்லப்பட்ட வகைமாதிரிகளே பெரிதும் விவாதிக்கப்படுகின்றன.  இவ்வகைமாதிரிகளுக்குள் அடங்காத சாதி அடக்குமுறைகள் கவனத்திற்கு வராமல் போகின்றன; சாதிய எதிர் நடவடிக்கைகள் தவறாய் சித்தரிக்கப்படுகின்றன.  இத்தகைய சூழலில், அடக்குமுறை, கலகம், எதிர்ப்புணர்வு போன்ற கருத்தாக்கங்களை தமிழ்ச்சூழலோடு பொருத்தி யோசிக்கிற முயற்சியையே இக்கட்டுரை மேற்கொள்கிறது.  இதற்காக, தமிழக சாதியச் செயல்பாடுகள் குறித்த மானிடவியல் ஆய்வுகளை தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

சாதி என்ற அன்றாட நிகழ்வு:

இந்திய சமூகங்களைப் பற்றிய மானிடவியல் ஆய்வுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் சமூகக் காரணி என்று 'சாதி'யைக் குறிப்பிட முடியும்.  அது ஏன் அப்படி என்று காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அவசியமில்லை.  சாதி எவ்வளவுக்கெவ்வளவு மனிதாபிமானமற்ற கற்பனையோ அவ்வளவுக்கவ்வளவு கவர்ச்சிகரமானது (வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தான்!) அதன் தாத்பர்யங்களை விளங்கிக் கொள்ளப் போகிறேன் என்று கிளம்பிய மானிடவியலாளர்கள், விதவிதமான விளக்கங்களைத் தந்தார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அவ்வாறு, மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த மானிடவியல் ஆய்வாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து செய்த ஆய்வுகளையே நான் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்.

சாதி என்பது மிகத் தெளிவாக பிராமணிய - இந்து சொல்லாடல். வர்ணாஸ்ரம் தர்மம் தொடங்கி, மனுதர்ம சாஸ்திரம் வந்து, பின்பு ஏராளமான புராணக்கதைகளைக் கட்டி பின்னப்பட்ட ஆதிக்க சொல்லாடல்.  'சாதிகள்' ஏன் உருவாயின, எப்படி உருவாயின என்பதற்கெல்லாம் அதில் காரணகாரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.  இப்பொழுது பிரச்சினையே இதில் தான். 

இத்தகைய பிராமண - இந்து சொல்லாடலை மையமாகக் கொண்டு யோசிக்கத் தொடங்குகிற ஆய்வாளர்கள், இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏதாவது சொல்லாடல்கள் இருக்க முடியுமா என்றும் தேடத் தொடங்கினார்கள்.  இந்தத் தேடலில் உள்ள நியாயத்தை யாராலும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். 

அடக்குமுறையும், எதேச்சதிகாரமும் பிரம்மாண்டமான சொல்லாடலாகத் தங்களைக் கட்டமைத்துக் கொண்டு செயல்படும் போது, அதனால் அடக்கியாளப்படுகிற மக்கள் எதிர்ச் சொல்லாடல்களை உருவாக்கி வைத்திருப்பார்கள் என்று நம்புவதும், தேடுவதும் இயல்பானது தான்.  ஆனால், நீங்கள் அவற்றை எப்படித் தேடுகிறீர்கள்? எங்கே தேடுகிறீர்கள் என்பதில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. 

மானிடவியலாளர்கள் இப்படி ஒரு தேடலை நீண்ட காலமாக நடத்தி வருகிறார்கள்.  அவ்வாறு நடத்தப்பட்ட தேடலில் தாங்கள் இவற்றையெல்லாம் கண்டுபிடித்தோம் என்று ஒரு விவாதப் பரப்பையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அந்த விவாதம் என்ன, அதில் என்னென்ன பேசப்பட்டது, அவற்றுள் எவ்வளவு தூரம் நியாயமும் உண்மையும் உள்ளது என்பதையே நான் விவாதிக்கப் போகிறேன்.

கருத்தொற்றுமையும் திரும்பச்செய்தலும்:

மைக்கிள் மோஃபா என்ற மானிடவியலாளர் 1979 ம் வருடம் ஒரு புத்தகம் எழுதினார்.  அப்புத்தகத்தின் தலைப்பு, 'An Untouchable community in South India: Structure and Consensous'  என்பதாகும்.  இப்புத்தகம் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள எண்டாவூர் என்ற கிராமத்தைப் பற்றி பேசுகிறது. 

 Michael Moffat

 

இப்புத்தகம் கல்வியாளர்கள் மத்தியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது.  அன்றைக்குப் புகழின் உச்சத்தில் இருந்த அமைப்பியல் அணுகுமுறையைப் பயன்படுத்தித் தனது ஆய்வை மேற்கொண்டிருந்த மோஃபா, ஆய்வின் இறுதியில் கண்டடைந்த கருத்தாக்கங்கள் சாதிக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுத்த பலருக்கும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.  மிகவும் குறிப்பாக, பிராமணியத்திற்கும் பிராமணர்களுக்கும் எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் பலரையும் அது எரிச்சல் படுத்தியது.  'பிராமணர்கள், அசைக்க முடியாத சக்திகள்' என்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்துவதாக பலரும் உணர்ந்தார்கள்.  அதில் 'தீண்டத்தகாத' மக்களைப் பற்றி அநீதியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்ததை பாவம் அந்த மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.  ஆனால், அப்புத்தகத்தின் தவறான கருதுகோள்களையும், முன்முடிவுகளையும் சில மானிடவியலாளர்கள் துணிச்சலோடு எதிர்கொண்டார்கள் என்பது தான் வரலாறு.

மைக்கிள் மோஃபா, எண்டாவூர் என்ற கிராமத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் உண்டு.  அவருக்கு முன் லூயி டூமோ என்ற சமூகவியலாளர் இந்தியாவின் சாதி அமைப்பை விளங்கிக் கொள்வதற்காக தமிழ் நாட்டிற்கு வந்து, மதுரைக்கு அருகிலுள்ள செக்கானூரணி என்ற ஊரில் தங்கியிருந்து, அப்பகுதியில் வாழ்ந்து வரும் பிறமலைக் கள்ளர்களை ஆய்வு செய்யத் தொடங்கினார்.  அதே வேளையில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்து, சாதியொழுங்கின் அமைப்பு குறித்து 1967 ல் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.  அப்புத்தகத்தின் தலைப்பு, 'Homohierarchicus'.  


Louis Dumont

 

அதாவது, தமிழில் சொல்வதானால், 'ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வு முறை' என்று எழுதலாம்.  மேற்கத்திய சமூகத்து வாசகர்களை (இன்னும் குறிப்பாக, ஃப்ரெஞ்ச் தேசத்தினரை) மனதில் வைத்து எழுதப்பட்ட அப்புத்தகம், இந்தியாவில் செயல்படும் சாதி என்ற காரணியின் அமைப்பை மிக எளிமையாக எவ்வாறு விளங்கிக் கொள்வது என்று முயற்சி செய்கிறது.

லூயி டூமோ அப்புத்தகத்தில், 'சாதி, இந்திய சமூகம் கண்டடைந்த சமூகப் படி நிலை' என்கிறார்.  'படி நிலை என்றால், ஏற்றத்தாழ்வுகளை வரையறுக்கும் முறையியல் என்று பொருள்.  இந்த முறையியல், 'சுத்தம் - அசுத்தம்' என்ற கருத்தியலைக் கொண்டு இயங்குகிறது.  இதன் மூலம் தீர்மானிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாப் பிரிவினரும் சகஜமாக ஏற்றுக்கொள்கின்றனர்.  எல்லோருக்கும் இந்த வகையிலான சமூகப்பகுப்பு சரியானதாகவே தோன்றுகிறது' என்கிறார். 'சுத்தம் - அசுத்தம்' என்ற விளக்கத்தை ஏறக்குறைய எல்லா இந்தியர்களும் ஒத்துக் கொள்வது தான் லூயி டூமோவின் ஆச்சரியமானக் கண்டுபிடிப்பு.

ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் தான் இந்திய சமூகங்களில் செயல்படுகிறதா? அதுவும், சாதியமைப்பினாலும், சுத்தம் - அசுத்தம் என்ற வாதத்தினாலும் பெரிது பாதிக்கப்பட்டுள்ள 'தீண்டத்தகாதவர்களும்' கூட இந்தக் கருத்தியல்களை ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தான் மைக்கிள் மோஃபாவின் கேள்வியாக இருந்தது. 

இதனாலேயே அவர் எண்டாவூரைத் தேர்ந்தெடுத்தார்.  அவ்வூரின் மக்கள் தொகையில் 32% மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்.  பெரும்பான்மை சாதி என்றால் அது ரெட்டியார் தான்.  விவசாயம் தான் எல்லாருக்குமே பொதுவான தொழில்.  நிலங்கள் ரெட்டியார்கள் வசமே அதிகம் இருந்தன.  தாழ்த்தப்பட்ட மக்களில் சுமார் 43% நபர்களுக்கு சிறு சிறு நிலங்களே சொந்தமாக இருந்தன.  ஆனாலும் ஊரின் அதிகாரத் தளங்கள் அத்தனையும் ரெட்டியார்களிடமே இருந்தன.

தாழ்த்தப்பட்ட சமூகங்களின் ஐந்து பிரிவினர் எண்டாவூரில் வாழ்ந்து வந்தனர்.  வள்ளுவப் பண்டாரம், பறையர், புரத வண்ணார், அருந்த தியர் மற்றும் குருவிக்காரர்கள்.  இவர்கள் அனைவரும் வாழக்கூடிய பகுதி சேரி என்றே அழைக்கப்பட்டாலும், இவர்களுக்குள்ளான உறவுமுறையும், கொடுக்கல் வாங்கலுமே மோஃபாவின் மையமான ஆய்வுப் பொருளாக இருந்தது. 

தனது ஆய்வுகளின் முடிவாக அவர் இரண்டு கருத்தாக்கங்களை முன்வைத்தார்.  அவை, கருத்தொற்றுமை மற்றும் திரும்பச்செய்தல்.  ஆங்கிலத்தில் consensous and replication என்று சொல்லப்பட்டது.

இந்த இரண்டு கருத்தாக்கங்களும் லூயி டூமோவின் 'ஒரு படித்தான ஏற்றத்தாழ்வு முறையை' கூடுதலான கள ஆய்வுத் தரவுகளுடன் நிரூபிப்பதைப் போல் அமைந்திருந்தன.  இந்திய சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள், தாங்கள் எவ்வளவு தான் ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும், ஒதுக்கப்பட்டாலும் பெருவாரியான சமூகத்துடன் 'கருத்தொற்றுமை' கொண்டே செயல்படுகின்றனர்.  இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உயர்ந்த சாதியினரின் சிந்தனையோட்டத்திற்கும், தாழ்ந்த சாதியினரின் சிந்தனையோட்டத்திற்கும் வேறுபாடுகள் எவையும் இல்லை.  உயர்ந்த சாதியின் பண்பாட்டையே, தாழ்ந்த சாதியினர் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கின்றனர்.  தாழ்த்தப்பட்ட சாதியினருக்கென்று தனியான பண்பாடோ, சிந்தனையோ இருக்கவில்லை.  அவர்கள் பெருஞ்சமூகத்தின் பழக்கவழக்கங்களையே தங்களது பழக்கவழக்கங்களாகக் கொண்டுள்ளனர். இந்தக் கருத்தொற்றுமை இந்திய சமூகத்தின் முக்கியமானப் பண்பாக விளங்குகிறது. 

இந்தக் கருத்தொற்றுமை, இரண்டு தளங்களில் வெளிப்படுவதாக மோஃபா கருதுகிறார், ஒன்று, சமூகத்தளம்; மற்றொன்று, பண்பாட்டுத்தளம்.சமூகத்தளம்:

தாழ்த்தப்பட்ட சமூகம் என்பது ஒரே சாதி அல்ல.  அதனுள் ஏராளமான சாதிகள் இடம் பெறுகின்றன.  மைக்கிள் மோஃபா ஆய்வு செய்த எண்டாவூரில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஐந்து சாதிகள் வசிக்கின்றனர்.  இந்த ஐந்து சாதிகளுக்குள், படி நிலை அமைப்புகளும் அதனால் ஏற்றத்தாழ்வுகளும் காணப்படுகின்றன.

வள்ளுவப் பண்டாரம் என்ற சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களுள் தாங்கள் தான் உயர்ந்த்வர்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர்.  அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம் ஆச்சரியமானது.  அதாவது, வள்ளுவப் பண்டாரம் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பூசாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.  இதனால் இவர்கள், 'அரிசனங்களின் பூசாரிகள்' என்று அழைக்கப்படுவது உண்டு.  அரிசன மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளைச் செய்யும் புரோகிதர்களும் இவர்கள் தான்.  இதனை முன்னிட்டு அவர்கள், மாட்டுக்கறியை உண்பது இல்லை; வருடத்தின் பல மாதங்கள், சைவ உணவையே உண்கின்றனர்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கிடையே தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்பது அவர்கள் எண்ணம். 

இதன் அடுத்த படி நிலையில் இருப்பவர்கள், பறையர் சாதி மக்கள்.  இவர்களுக்குக் கீழே, புரத வண்ணார்கள் என்று சொல்லப்படும், அரிசனங்களின் வண்ணார்கள் இடம் பெறுகிறார்கள்.  இருமுறை 'அசுத்தப்பட்டதாய்' கருதப்படும் இந்த மக்கள், பறையர் சாதியினரின் வீடுகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.  ஆனால், இந்த வண்ணார்களே பறையர் சாதியினரின் முதல் தீட்டுத்துணியை அலசுகிறவர்கள்; திருமண வீட்டை அலங்கரிப்பவர்கள்; ஈமச்சடங்கில் காரியங்களைச் செய்பவர்கள்; இவர்கள் தான் பறையர் சாதியினரின் சடங்கு நாவிதரும் கூட. 

இதனையடுத்து இடம்பெறும் அருந்ததியர்கள், தோல் வேலைகளைச் செய்பவர்கள்.  அதனால், இவர்கள் இறந்து போன விலங்குகளோடு புழங்க வேண்டியுள்ளது. எங்கே தீட்டு பட்டு விடுவோமோ என்ற பயத்தில் பறையர்கள் யாரும் இவர்கள் தெருவுக்குள் கூட நுழைவது இல்லை. 

இறுதியாகச் சொல்லப்படும் குருவிக்கார சாதியினர் தான் அவ்வூரின் கடைமட்ட சாதி.  காக்கைகளை உண்ணக்கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த நிலை.  அவர்களில் சிலர் மாந்தரீகர்களாகவும், ஜோசியக்காரர்களாகவும், இன்னும் சிலர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கை நடத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலேயே காணப்படும் இது போன்ற சாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்தி பேசக்கூடிய மோஃபா, இதற்கும் உயர்ந்த சாதியினர் கொண்டிருக்கும் சாதிய மன நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை; பிற சாதியினர் என்னென்ன காரணங்களைச் சொல்லி, எப்படி எப்படியெல்லாம் தீண்டாமையை செயல்படுத்துகிறார்களோ அதே போலத்தான் தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுக்குக் கீழான சாதிகளைச் செய்கின்றன.  சாதியையும், சுத்தத்தையும் காரணம் காட்டி பெருஞ்சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினரின் எதிர்வினை அதே போன்ற சாதிய அமைப்பை தங்களுக்குள்ளும் திரும்பச் செய்து பார்க்கும் போக்காகத்தான் இருக்கின்றதேயொழிய, அதற்கு எதிரானதாக இல்லை என்பது தான் மோஃபாவின் வாதம். 

அதே போல், ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியும் தங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன; உதாரணமாக, பறையர் சாதியினருக்குள், மூன்று வகையறாக்கள் அல்லது கிளைகள் உள்ளன - தலையாரி வகை, பண்ணைக்காரன் வகை, வெட்டியான் வகை - என்று சொல்லப்படும் இம்மூன்று பிரிவுகளுக்குள்ளும் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் ஏற்றத்தாழ்வுகள் சொல்லப்படுகின்றன.  இவர்களுக்குள், உயர்ந்த பிரிவாகச் சொல்லிக் கொள்ளும் தலையாரி வகையினர், 'தாங்கள் மாட்டுக்கறியை உண்பது இல்லை' என்று கூறிக்கொள்வதாக மோஃபா பதிவு செய்கிறார்.  அதே போல் வெட்டியான் வகையினர், மற்ற இருவரை விடவும் தாழ்ந்தவராகக் கருதப்படுவதாக எழுதுகிறார்.

இந்தத் தகவல்களே மோஃபாவிற்கு போதுமானதாக இருக்கிறது.  சாதியமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பும், தாழ்த்தப்பட்ட சாதியினர் அதே போன்றதொரு அமைப்பை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்வதன் மூலம், சாதியமைப்பு மீதான தங்களது ஈர்ப்பையே வெளிப்படுத்துகின்றனர்.  உயர்ந்த சாதியினரைப் போன்று தாங்களும் திரும்பிச் செய்து கொள்வது, பெருஞ்சமூகத்துடனான அவர்களது கருத்தொற்றுமையையே காட்டுவதாக அவர் தனது நூலில் எழுதுகிறார்.  இவையெல்லாம் சமூகத் தளத்தில் நடைபெறுகின்ற காரியங்கள் என்றால், பண்பாட்டுத் தளத்தில் இன்னொரு விஷயம் நடப்பதாக மோஃபா குறிப்பிடுகிறார்.

பண்பாட்டுத்தளம்:

எண்டாவூரின் ஊர் தெய்வம், மாரியம்மன்.  ஊரிலுள்ள ரெட்டியார் சாதியினர் வருடம் ஒரு முறை மாரியம்மனுக்குத் திருவிழா எடுக்கும் போது தாழ்த்தப்பட்ட மக்களை அத்திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.  தீட்டு, சுத்தம், தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் இதற்குக் காரணம் கற்பிக்கிறார்கள். 

ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பறையர் சாதியினர் இதனாலெல்லாம் சோர்ந்து போய்விடவில்லை.  அவர்கள் தங்களது சேரிப்பகுதியில் கோவில் ஒன்றை எழுப்பி, செல்லியம்மன் என்றொரு அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.  இவ்விரு அம்மன்களுக்கும், உருவத்தில், கதைகளில், நம்பிக்கைகளில், சடங்குகளில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை என்று அறிவிக்கிற மோஃபா, ரெட்டியார்களால் சாதி விலக்கம் செய்யப்பட்ட பறையர் சாதியினர், ரெட்டியார்களின் பண்பாட்டு நடவடிக்கைகளை (அம்மன் வழிபாடு போன்ற) திரும்பச் செய்வதன் மூலம், அவர்களோடு ஒரு வித கருத்தொற்றுமையைப் பேணுகிறார்கள் என்கிறார். 

ஆக, இதனாலெல்லாம் தனது ஆய்வின் முடிவாக மைக்கிள் மோஃபா குறிப்பிடுவது என்னவென்றால், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கென்று தனித்த பண்பாடு என்று எதுவும் இல்லை; அவர்கள், இந்தியப் பெருஞ்சமூகத்தின் பண்பாட்டையே 'திரும்பச் செய்து' தங்களது பண்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதே போல், இந்தியப் பெருஞ்சமூகத்தின் நம்பிக்கைகளையும், விழுமியங்களையும், கருத்தியல்களையும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் உள்வாங்கிக் கொண்டுள்ளன.  இதனாலேயே, சாதி அமைப்பு எந்தவொரு அடக்குமுறையாலோ, வன்முறையாலோ செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.  சாதி அமைப்பை தாங்களும் நம்புவதால், கடைபிடிப்பதால், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சாதிக்கு எதிரான சிந்தனையென்று எதுவும் தோன்றாமல் போய்விட்டது.  மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களும் 'சாதி - சுத்தம் - அசுத்தம் - தீண்டாமை - பிறப்பால் தீர்மானிக்கப்படுதல் - கர்ம வினை' போன்ற பிராமண - இந்து சிந்தனையை நம்புகின்றன!

(தொடரும்)

Comments

Popular posts from this blog

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1 அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை. உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.   இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.   பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள்

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.   சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.   ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி.   மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.   அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.   இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.   பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.   அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.   பிணம் கண்மலரும் தருணம் இது.   உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள். உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.   அவன்

வண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்?

மாரி செல்வராஜின் கர்ணன் குறித்து எழுதப்பட்ட கட்டுரையா இது என்று எனக்குத் தெரியாது .  ஆனால் , அப்படியொரு முயற்சிக்கான ஆரம்பக் குறிப்புகள் என்று சொல்லிக் கொள்ளலாம் .  ஒரு திரைப்படம் இத்தனை அடுக்குகளோடு வெளிப்பட முடியுமா என்பதை இன்னமும் ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன் .  இப்போதைக்கு என்னால் கோடிட்டுக் காட்ட முடிந்த முக்கியமான விவாதப் புள்ளிகள் : தெய்வமாதல் , கிராமத்தை விட்டு வெளியேறுதல் , கெளரவப்பாரதம் , மறுவாசிப்பு , பல்லுயிர் வாழ்க்கை , சுயமரியாதைக்கான வேட்கை , எழுத்தும் அன்றாடமும் , தலைமையைக் கொய்யும் அரச பயங்கரவாதம் … இனி குறிப்புகளை வாசியுங்கள் ! 1 நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா ?  அவை , சாலையோர தெய்வங்கள் . இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு - ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் , ஆண்டிப்பட்டி கணவாய் தர்ம சாஸ்தா , இப்படி பல .  கணவாய் போன்ற மிகப் பிரதான வழிகளை மட்டுமல்லாது , நகரங்களை நோக்கிச் செல்லக் கூடிய எந்தவொரு சாலையிலும் ந