Skip to main content

சாதி - மொழி - சமயம் 1: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்



இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் அதிதீவிரமாக விவாதிக்கப்பட்ட, அரசியல்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள் என்றொரு பட்டியலை தயார் செயதால் அதில் கட்டாயம் சாதி, மொழி, சமயம் என்ற மூன்று கருத்தாக்கங்களும் இடம்பெற்றிருக்கும்.  கடந்த ஒரு நூற்றாண்டின் இந்திய சமூக அசைவுகளை அடையாள உருவாக்கங்கள், அதிகாரத்தை நோக்கிய நகர்வுகள், சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்று வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டாலும் இவையனைத்தின் மைய விவாதப் பொருட்களாக இம்மூன்று கருத்தாக்கங்களே இருந்து வந்துள்ளன.  இவற்றை விளங்கிக் கொள்வதன் மூலமே இந்திய சமூக அமைப்பை விளங்கிக் கொள்ள முடியுமென்ற யோசனை ஆய்வுத்தளங்களில் ஆழமாக வேரூன்றியிருந்துள்ளது.  இதனால், இம்மூன்றைப் பற்றியும் ஏராளமான வாதங்களும் விவாதங்களும் நடைபெற்றுள்ளன.


'சாதி' என்ற வினோதமான காரணியை புரிந்து கொள்வதற்கும் அவ்வமைப்பிலிருந்து வெளியேறுவதற்கும்  எடுத்த முயற்சிகளில் ஒருபடித்தான ஏற்றத்தாழ்வு, சுத்தம் - அசுத்தம், தாழ்த்தப்பட்டவர்களின் 'கருத்தொற்றுமை' யும் 'திரும்பச்செய்தலும்', சாதியின் இனச்சமூகவியல், அம்பேத்கரின் 'சாதித் தோற்றம் பற்றிய வரலாற்று மீட்டுருவாக்கம்', இந்துமத வெளியேற்றம், பிராமணரல்லாதோர் என்ற அடையாள உருவாக்கம், சுயமரியாதை, சமஸ்கிருதவயமாதல், தலித்தியம் போன்றவை காத்திரமான நகர்வுகளை சாத்தியப்படுத்தியுள்ளன.  அதே நேரம், மொழியை மையமாக வைத்து நடைபெற்ற உரையாடல்கள் பெரும்பாலும் தேசிய இன அடையாள சிக்கல்களாகவும், அதிகாரத்தை கையகப்படுத்தும் உத்திகளாகவும் வெளிப்பட்டதையும், 'ஆரியம் - திராவிடம்' என்ற இரு எதிரெதிர் அடையாளங்களை உடையதாக இந்திய சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டதையும் நாம் பார்க்க முடிகிறது. 

சாதி குறித்து பேசும் போதும் சரி, மொழி குறித்து பேசும் போதும் சரி, தவிர்க்க முடியாத வகையில் இணையான விவாதப்பொருளாகவே இருந்து வந்திருக்கும் சமயம் என்ற காரணி, பிற இரண்டு கருத்தாக்கங்களை விடவும் 'உணர்ச்சிகரமாக' விவாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக சமய மோதல்களால் வெடித்த வன்முறையையும் சிந்தப்பட்ட இரத்தத்தையும் குறிப்பிடமுடியும்.  இது இருபதாம் நூற்றாண்டின் தனித்துவம் மட்டுமல்ல, மாறாக வரலாறு நெடுகிலும் இந்திய நிலப்பரப்பானது மத மோதல்களால் வழிந்த இரத்தத்தில் தான் நனைந்திருக்கிறது.

இம்மூன்று கருத்தாக்கங்களின் அடிப்படையில் நடைபெற்ற விவாதங்களானாலும் சரி, அதனடிப்படையில் மேலெழுந்த அரசியல் செயல்பாடுகளானாலும் சரி, இந்தியாவின் நவீனத்துவம் என்று ஏதாவது சொல்லப்படுமானால் அதனை வடிவமைத்ததில் பெரும்பங்கை ஆற்றியிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.  சாதியமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், மொழியை இன்னும் கூடுதலான தெளிவோடு புரிந்து கொள்ளவும், சமய நடவடிக்கைகளுக்கான சமூக எல்லைகளைக் கறாராக வடிவமைக்கவும் இந்தியாவின் வெவ்வேறு சமூகப் பண்பாட்டுக் குழுக்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதையும், அம்முயற்சிகள் சொற்பமான வெற்றியையும் வலிமிகுந்த, வெட்கப்படத்தக்க தோல்விகளையும் தந்து கொண்டிருப்பதை நம்மால் பட்டியலிடமுடியும். 

ஒருபக்கம் தொடர்ச்சியான விவாதங்கள், நீண்ட நெடிய களச்செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன  ன்றாலும், இன்னொரு பக்கம் சாதியமைப்பு மேலும் மேலும் இறுக்கமடைவதையும், சமய நிறுவனங்கள் புதிய புதிய வடிவங்களில் பல்குவதையும், மொழி மீதான ஈடுபாடு வெறியாகவும் துவேஷமாகவும் உருமாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. 

இந்தத் திசையறியா நிலையும் கூட மனிதகுல வரலாற்றைப் பொருத்த வரையில் பரிச்சயமானவொன்றுதான்.  வேகப்பாய்ச்சல், தடுமாற்றம், திகைப்பு, பின்பு பலங்கொண்ட பாய்ச்சல் என்ற படியே சமூகம் நடைபயின்று வந்திருக்கிறது.  ஒவ்வொரு தடுமாறுகையிலும், திகைத்துப் பின்வாங்குகையிலும் சற்றே மறந்து போயிருந்த கடந்த காலத்திலிருந்து பற்றுக்கோல்களைக் கண்டடைவது தான் வழமை. 

அந்த வகையில், தற்போதைய தமிழ்ச்சமூக இயங்கு தளங்களில் உணரப்படும் தடுமாற்றத்திலிருந்தும், திகைப்பிலிருந்தும் விடுபடுவதற்கான வெளிச்சங்களைத் தேடி பத்தொன்பதாம் நூற்றாண்டு நடவடிக்கைகளை மீள்பார்வை பார்ப்பது உபயோகமான காரியமாக இருக்கலாம்.  இப்பின்னணியில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் தனது எழுத்துகள் மூலம் பெரும் பதிவொன்றை விட்டுச் சென்றுள்ள அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளிலிருந்து புதிய பதில்களைக் கண்டடைய முடியுமா என்று தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அயோத்திதாசரின் சிந்தனைகளை மீண்டும் வாசித்துப் பார்ப்பதில் ஏதேனும் லாபம் இருக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு தற்சமயம் என்னால் இரண்டு தகவல்களை மட்டுமே ஞாபகப்படுத்த முடியும்.  ஒன்று, நாம் இங்கு விவாதிக்க விரும்புகிற சாதி - மொழி - சமயம் என்ற மூன்று கருத்தாக்கங்களையும் அயோத்திதாசர் விரிவாகப் பேசியிருக்கிறார்;

இரண்டு, அதிர்ஷ்டவசமாக (?) அயோத்திதாசரின் எழுத்துகள் அவருடைய மறைவிற்குப் பின்னர் உதாசினப்படுத்தப்பட்டிருந்தன (இதனால், இருபதாம் நூற்றாண்டின் எந்தவொரு அரசியல் வெற்றிக்கோ அல்லது தோல்விக்கோ அவரைக் காரணமாக்க முடிவதில்லை.  சொல்லப்போனால், அவருடைய சிந்தனைகள் பரீட்சித்துப் பார்க்கப் படாதவைகளாகவே இருக்கின்றன).  இந்த அளவில் நிறுத்திக் கொண்டு மேற்கண்ட மூன்று கருத்தாக்கங்கள் குறித்த அயோத்திதாசரின் சிந்தனைகளுக்கு சென்று விடலாம் என்று நினைக்கிறேன்.

1 - அயோத்திதாசரும் அவரது எழுத்துகளும்:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த (1845-1914) மிக முக்கியமான சிந்தனையாளர் அயோத்திதாசர்.  பாரம்பரியமாக சித்த மருத்துவர்; திண்ணைப் பள்ளியில் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்ற தமிழ்ப் பண்டிதர்; 'தமிழன்' என்ற வாரப்பத்திரிகையை 1907 முதல் 1914 வரை தொடர்ந்து நடத்திய பத்திரிகையாளர்; சமத்துவத்தைப் பாதுகாக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பௌத்தமதத்தை பரப்பிய சமயவாதி; திருக்குறளுக்கு உரை, ஔவையின் மூன்று நூற்களுக்கு உரை, இந்திர தேச சரித்திரம் என்ற வரலாற்று நூல், ஆதி வேதம் என்ற புத்தரின் வாழ்க்கை வரலாறு என்று ஏராளமான நூற்களை எழுதிய ஆய்வாளர்; சமதர்மம், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, திராவிடம் போன்ற இருபதாம் நூற்றாண்டு தமிழக அரசியலை வடிவமைத்த கருத்தாக்கங்களை முதன்முதலில் யோசித்தவர்.

பெரும்பாலான இவரது எழுத்துகள், 'தமிழன்' என்ற வாரப்பத்திரிகையிலேயே வெளிவந்திருந்தன என்பதால், நீண்ட காலங்களுக்கு வெளியுலகம் அறியாமலேயே இருந்தது.  ஏறக்குறைய அவர் மறைந்து என்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பே அவ்வெழுத்துகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன.  இந்த மூன்று தொகுதிகளே நமது வாசிப்பிற்கான அடிப்படைப் பனுவல்களாக அமைகின்றன. 

அயோத்திதாசரின் எழுத்துகளை வாசித்துப் புரிந்து கொள்வதில் இரண்டு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.  முதலாவது, அவர் பயன்படுத்தும் மேற்கோள் நூற்கள் குறித்தது - அவற்றுள் பலவற்றை நம்மால் இன்றைக்கு அடையாளம் காண முடிவதில்லை; வேறு சில இன்றைக்கு வழக்கில் இல்லை.  அவருடைய சமகால மனிதர்களின் எழுத்துகள், நண்பர்களின் ஞாபகங்கள், குடும்பப் பதிவுகள், அவர் பயன்படுத்திய நூலகம் என்று யாராவது தீவிரமான முயற்சியை மேற்கொண்டாலொழிய இந்த இடைவெளியை இட்டு நிரப்ப முடியாது.  இரண்டாவதாக, அயோத்திதாசரின் பெரும்பான்மை எழுத்துகள், பத்திரிகைகளில் வெளியானவை என்பதால், ஒரு தலைப்பை பற்றிய சிந்தனைகள் முழுமையாகக் கிடைக்காமல், துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தொகுக்கப்பட்டுள்ளன.  சில தலைப்புகளிலேயே அவர் தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளாரே தவிர (சுதேசியம், இந்திர தேச சரித்திரம், ஆதி வேதம், இலக்கிய உரைகள் போன்றவை), பிற அனைத்தும் காலச்சூழல்களுக்கு தக்கவாறு வேறு வேறு தருணங்களில் வேறு வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.  எடுத்துக்காட்டாக,  சாதி குறித்த அவரது சிந்தனைகள் ஐந்தாறு தலைப்புகளில் வெளியாகியுள்ளன.  அதே போலத்தான் மொழி மற்றும் சமயம் பற்றிய சிந்தனைகளும்.  இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் இவ்வாறு சிதறிக்கிடக்கின்ற எழுத்துகளை கருத்தாக்கத் தினடிப்படையில் தொகுத்து விளக்கும் வேலையையே நான் செய்கிறேன்.
(தொடரும்)

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக