Skip to main content

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் 2சாதி எதிர்ப்பின் இரண்டு வழிமுறைகள்

நடைமுறையும் கற்பனையும்:

மோஃபாவின் புத்தகம் ஏராளமான எதிர்வினைகளை எழுப்பியது.  ஆதரித்தும், விமர்சித்தும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.  எண்டாவூரில் அவர் மேற்கொண்ட கள ஆய்வின் முறையியல் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.  தனது கள ஆய்வு அனுபவங்கள் குறித்து மோஃபா தனது புத்தகத்தின் முன்னுரையில் விரிவாக எழுதியிருந்தார்.

'தீண்டத்தகாதவர்கள் மத்தியில் கள ஆய்வு செய்தல்' என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த முன்னுரை தரவுகளைத் திரட்டுவதில் அவர் அடைந்த தோல்விகளையும், சிக்கல்களையும் வெளிப்படையாகப் பேசியிருந்தது.  அது ஒரு நேர்மையான பகிர்தல் என்றாலும், கள ஆய்வு செய்வதில் மோஃபா எதிர்கொண்ட அச்சிக்கல்களிலிருந்தே விமர்சனங்கள் எழத்தொடங்கின.

Journal of Asian Studies  என்ற இதழில் இப்புத்தகத்திற்கு விமர்சனம் எழுதிய ஓவன் லிஞ்ச், 'கள ஆய்வின் போது மோஃபாவிற்குத் துணை செய்த உதவியாளர் உயர் சாதியைச் சார்ந்தவர் தான் என்றால், அவர் திரட்டியதாகச் சொல்லும் தரவுகள் மீது நமக்கு அதிருப்தியே ஏற்படும்' என்று எழுதினார்.  'தீண்டாமை குறித்து மோஃபா ஒவ்வொருமுறை எண்டாவூரின் தாழ்த்தப்பட்ட சமூக உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்புகையிலும், ரெட்டியார் சாதியைச் சார்ந்த பண்ணையாரின் பார்வையில் தான் இருந்தார்கள் என்பதை அறியும் போது தான் அந்த அதிருப்தி ஆச்சரியமாக மாறுகிறது'.

மைக்கிள் மோஃபா, எண்டாவூரில் மேற்கொண்ட கள ஆய்வு வழக்கமான மானிடவியல் கள ஆய்வுகளிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டது.  உற்று நோக்கல், பங்கேற்று உற்று நோக்கல் என்றெல்லாம் ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடம் வித்தைகள் பல காட்டிய மாலினோவ்ஸ்கியின் பாணியில் கள ஆய்வு செய்யலாம் என்று நினைத்தால், இந்தியச் சாதி அமைப்பு உங்களைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரிக்கும் என்பதை மோஃபாவின் அனுபவத்திலிருந்து பல மானிடவியலர்கள் உணர்ந்து கொண்டனர்.

மோஃபாவின் ஆய்வு முடிவுகள், வேறு சில மானிடவியலர்களை தமிழக சாதி அமைப்பு பற்றிய ஆய்வுகளுக்குத் திருப்பிவிட்டன.  அவ்வாறு வந்தவர்களுள் முக்கியமானவர், ரொபேர் தெலியேழ்.  ஃப்ரெஞ்ச் தேசத்தைச் சார்ந்த அவர் 'The World of Untouchables: Parayars of Tamilnadu' என்றொரு நூலை எழுதியுள்ளார்.  அந்த நூல் ஏறக்குறைய மோஃபாவின் ஆய்வு முடிவுகளை மறு பரிசீலினை செய்வதாகவே அமைந்திருந்தது.  அத்தோடு கூட, 'திரும்பச்செய்தலும் கருத்தொற்றுமையும்: இந்தியாவில் தீண்டாமை, சாதி மற்றும் கருத்துருவங்கள்' என்றொரு, மோஃபாவின் நூலுக்கான விமர்சனக் கட்டுரையையும் Man  என்ற ஆய்விதழில் தெலியேழ் எழுதியுள்ளார்.
 
Robert Deliege
(ரொபேர் தெலியேழ்)அந்தக் கட்டுரை நேரடியாகவே மோஃபாவின் புத்தகத்தை 'ஒரு சார்பானது' (அதாவது உயர் சாதியினர் சார்பானது) என்று குற்றம் சாட்டுகிறது.  பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மோஃபா, டூமோவின் அமைப்பியல் பார்வை தந்த கருத்துருவங்களை எண்டாவூரிலும் கண்டுபிடிக்கிறார்; மோஃபா மேற்கொண்டது போன்ற ஆய்வை எண்டாவூரில் மட்டுமல்ல வேறு எங்கு நிகழ்த்தினாலும் நீங்கள் இதே போன்ற முடிவிற்குத் தான் வந்து சேர்வீர்கள் என்பது ரொபேர் தெலியேழ் வாதம். 

தாழ்த்தப்பட்ட மக்களின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 'வாழ்கிறமாணிக்கம்' என்ற, முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களே வாழக்கூடிய ஊரொன்றை தேர்ந்தெடுத்த ரொபேர் தெலியேழ் 1981-82 வருடங்களில் தனது கள ஆய்வை மேற்கொண்டார். இந்து பள்ளர்கள், இந்து பறையர்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ பறையர்கள் வாழக்கூடிய இந்த ஊரில் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், மோஃபாவின் 'கருத்தொற்றுமை மற்றும் திரும்பச்செய்தல்' என்ற கருத்தாக்கங்களைப் பற்றி அவரால் மூன்று வித மறுப்புகளை முன் வைக்க முடிகிறது.


முதலாவது, தனித்தனிப் பிரிவுகளாக வாழ்வதால் தாழ்த்தப்பட்டவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்று பொருள் இல்லை. ரொபேர் தெலியேழ் ஆய்வு செய்த வாழ்கிறமாணிக்கத்தில் மூன்று பிரிவினரும் (இந்து பள்ளர்கள், இந்து பறையர்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ பறையர்கள்) தனித்தனியாகவே வாழ்கின்றனர்.  ஆனால், அவர்களுக்குள் படி நிலை அமைப்பு போன்ற ஏற்றத்தாழ்வுகள் காணப்படவில்லை. இம்மூவரில் பள்ளர்களும் பறையர்களும் ஏறக்குறைய தனித்தனிப் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களுக்கிடையே நெருக்கமான உறவுகள் எதுவும் இல்லை; நட்புணர்வு இல்லை என்பதை விடவும் இருவருக்கிடையிலும் ஒரு வித பதட்டமே எப்பொழுதும் நிலவி வந்தது.  ஆனாலும், ஒருவர் வாழ்ந்து வருகிற பகுதி இன்னொருவர் பகுதியை விட சுத்தமானது, மையமானது, முக்கியமானது என்பது போன்ற ஏற்றத்தாழ்வுகள் அவர்களுக்குள் இல்லை.  பள்ளர்களின் குடியிருப்புகளுக்கு என்ன மரியாதையோ அது தான் பறையர்களின் குடியிருப்பிற்கும்.  தனித்தனியே வாழ்கிறார்கள் என்பதால், ஊரிலிருந்து சேரி எவ்வாறு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறதோ அதே போன்ற விலக்குதல்கள் இவர்களிடம் உள்ளது என்று அர்த்தமில்லை.

இரண்டாவதாக, ஒரு நபர் தனது சமூக அந்தஸ்து இது தான் என்று விளக்கமளிப்பதற்கும், நடைமுறை வாழ்க்கையில் அவருக்கு வழங்கக்கூடிய அந்தஸ்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன; அவற்றைப் புரிந்து கொள்வது தான் எல்லாவற்றிலும் சிரமமானதும், முக்கியமானதுமாகும். 

அந்தஸ்து என்று மட்டுமல்லாது, எந்தவொரு நபரின் தனி நபர் அடையாளம் சார்ந்தோ அல்லது சமூக அடையாளம் சார்ந்தோ நாம் கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் சொல்லப்படுகிற பதில் எப்பொழுதுமே அதிகபட்சமானதாகவும், இலட்சியபூர்வமானதாகவுமே இருக்கமுடியுமேயொழிய நிஜமான நிலவரம் என்ன என்பதை யாருமே சொல்ல முன்வருவதில்லை.  எல்லோருக்குமே, நடைமுறையிலிருக்கும் தத்தமது சொந்த அடையாளங்கள் குறித்தும், கூட்டு அடையாளம் குறித்தும் அதிருப்தியே மேலோங்கியுள்ளது.  அவை இன்னமும் முழுமையடையவில்லை என்பது தான் அவர்களின் பொதுவான உணர்வாக இருக்கிறது.  அது முழுமையடைந்தால் எப்படியிருக்கும் என்றொரு கற்பனை இருக்கிறது அல்லது இப்படியிருந்தால் நன்றாயிருக்குமே என்று ஆசைகள் உள்ளன.  கேள்வி கேட்கப்படுகையில் ஒவ்வொருவரும் இந்தக் கற்பனையை அல்லது ஆசையைத் தான் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.  எனவே, நடைமுறையில் அவர் அனுபவிக்கும் அந்தஸ்திற்கும், அவருடைய கற்பனைக்கும் எப்பொழுதுமே வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, மிஷல் மோஃபாவின் எண்டாவூர் கள ஆய்வில், 'சமூக அந்தஸ்தில், சாதிப்படி நிலையில் தாம் உயர்ந்தவர்கள், தாங்கள் மாட்டுக்கறியே உண்பதில்லை, தாங்கள் தான் அரிசனங்களின் பூசாரிகள்' என்று வள்ளுவப் பண்டார சாதியினர் தங்களைப் பற்றி சொல்லிக் கொள்வதற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் நிச்சயமாக வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  அதே போல் பறையர் சாதியினர் மத்தியில் காணப்படும் தலையாரி, பண்ணைக்காரர், வெட்டியான் என்ற மூன்று பிரிவினருக்குள் சொல்லப்படும் வேறுபாடுகளை, நாம் யதார்த்த வாழ்வில் பார்க்க முடியுமா என்றால் சந்தேகம் தான். 

ரொபேர் தெலியேழ், தான் கள ஆய்வு செய்த பள்ளர் மற்றும் பறையர் சாதியினர் மத்தியில் சொல்லப்பட்ட அந்தஸ்து வேறுபாடுகளையும், அன்றாட வாழ்வில் அதுவெல்லாம் செல்லுபடியாகாமல் போகும் முறைகளையும் எடுத்துக்காட்டுகளாகக் காட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில், சாதியப் பாகுபாடு இருப்பதைப் போன்ற பேச்சுகள் தான் இருக்கின்றனவேயொழிய அதனைச் செயல்படுத்த முடிவதாகத் தெரியவில்லை.  பெருஞ்சமூகத்தைப் பார்த்து தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களும் சாதியைப் 'போலச்செய்வதற்காக', 'திரும்பச்செய்வதற்காக' ஆசைப்படுகிறார்கள் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்க முடியுமே தவிர, அவர்கள் தங்களுக்குள் சாதி வித்தியாசம் பாராட்டி, தீண்டாமையை செயல்படுத்துகிறார்கள் என்று சொல்வதற்கு முகாந்திரம் இல்லை.

மூன்றாவதாக, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மத்தியில் செயல்படக்கூடிய சட்டதிட்டங்கள் என்று எவையும் இருக்கவில்லை.  எனவே, அங்கு 'சுத்தம் - அசுத்தம்' போன்றவற்றை வரையறை செய்வதற்கோ, கண்காணிப்பதற்கோ தனி நபர்கள் அல்லது அமைப்புகள் என்று எதுவுமில்லை.. மேலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களை தரவரிசைப்படுத்தும் முறை எதுவும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட சாதிகள் ஒன்றையொன்று சாராமல் செயல்படுவது என்பது சாத்தியமில்லை. 

ரொபேர் தெலியேழ் கருத்துப்படி, 'ஏற்றத்தாழ்வு என்பது அமைப்பொன்றினுள் செயல்படுத்தப்படும் தர வரிசை என்றால், தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்; ஏனென்றால் தாழ்த்தப்பட்ட சாதிகள் எந்த வகையிலும் ஒரு முழுமையான அமைப்பாக செயல்படுவதில்லை'.  அவரைப் பொறுத்தவரை, 'இந்தியாவின் அரிசன மக்கள் தங்களுக்கென்று தனித்த பண்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை; இந்தியப் பெருஞ்சமூகத்தின் பண்பாட்டோடு அவர்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர் என்ற மோஃபாவின் கருத்து அடிப்படையில் தவறானது.  பொருளாதாரத்தில் நலிந்த, பெரும்பாலும் கல்வியறிவற்ற, தங்களுக்குள் பிளவுண்ட தாழ்த்தப்பட்ட மக்களால் எதிர் கருத்தியலை எவ்வாறு உருவாக்கியிருக்கமுடியும்? தங்களுக்குள் என்றைக்குமே ஒருங்கிணைக்கப்படாத 'தீண்டத்தகாதவர்கள்' இந்திய சாதி அமைப்பை எதிர்க்கவோ அல்லது ஒழிக்கவோ எவ்வாறு தலைப்பட்டிருக்க முடியும்? சாதி அமைப்பு குறித்த அவர்களது கோபமெல்லாம், அதில் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவரிசை தவறானது என்பதாகவே வெளிப்பட்டதே தவிர, அவ்வமைப்பின் அடிப்படையையேக் கேள்வி கேட்பதாக வெளிப்படவில்லை'.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

இளையராஜாவை வரைதல் - 1

ஒன்று
‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. 
‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான்.
‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது.
‘ஆமா, இல்ல!’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி -  இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
*
‘ராஜா பாடல்கள்’ என்பது ஒரு வெகுஜன கலை வடிவம். இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது ரசிகர்கள்! எனவே காப்புரிமை பிரச்சினைக்கெல்லாம் அப்பாற்பட்டது அது.
வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து,  அவரது ரசிகர்கள் ஏறக்குறைய ஒரு புதிய வகைக் கலைப்படைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதற்குத் தான் ‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்.   
இந்தத் தொகுப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது கேட்பதற்கோ, அவை எந்தத் திரைப்படங்களில், எந்த நடிகர்களுக்காக, எந்தப் பாடகர்களால் பாடப்பட்டன என்ற விபரமெல்லாம் உங்களுக்குத் தேவைப்படுவதில்லை.   கொஞ்சம்…

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன்இயக்கி, தனுஷ்நடித்துசமீபத்தில்வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம்சிலபுதியவிவாதங்களைஏற்படுத்தியிருக்கிறது.  
அசுரன்ஒருநவயுகப்படம்.  அண்மைக்காலமாக, சாதியால்ஒடுக்கப்பட்டவர்களைக்கதாநாயகர்களாகக்கொண்டுதிரைப்படங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன.  இதுவொருபாராட்டத்தக்கமுயற்சி.  பா.ரஞ்சித்தின்திரைப்படங்கள்இதற்கானத்தொடக்கப்புள்ளிஎன்றுசொல்லமுடியும்.  
திரைப்படவரலாற்றறிஞர்கள்இதைமறுக்கக்கூடும்.  ரொம்பகாலத்திற்குமுன்னாடியேஇது

ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்

(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.)

மாடும்மாதொருபாகனும்! பெருமாள்முருகனின்மாதொருபாகனுக்குஎன்னநடந்ததோஅதுதான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்கும்நடக்கிறது. பல்லைக்கடித்துக்கொண்டு, இரண்டையும்ஆதரிப்பதுதவிரஎனக்குவேறுவாய்ப்புகள்இருக்கவில்லை. ஆனால்இதில்வேடிக்கைஎன்னவென்றால், மாதொருபாகனுக்குஎதிர்ப்புதெரிவித்தவர்கள்தான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்குஆதரவுதெரிவிக்கிறார்கள்.
இதுதான்முக நூல் பதிவு.  இனி வருவது அது சார்ந்த உரையாடல்:


. செல்லபெருமாள்: 
மாதொருபாகனில்வெளிப்பட்டதுசுயநலநுண்அரசியல். ஜல்லிக்கட்டில்