Saturday, 8 November 2014

பூமணியின் அஞ்ஞாடி படித்துக் கொண்டிருந்த போது எடுத்த குறிப்புகள் – 2

விவசாயக் குடியைச் சார்ந்த ஆண்டிக்குடும்பனுக்கும் மாரி என்ற வண்ணாருக்குமான உறவு நிலையைச் சித்தரிக்கும் பகுதிகள் மிக நுட்பமான புதியதொரு கதை சொல்லலை அறிமுகப்படுத்துகின்றன.  பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய கலிங்கல் என்ற ஊரில் ‘மாரி’ குடும்பம் மட்டுமே வேற்று சாதி.  அதுவும், பள்ளர்களுக்கான குடி வேலையைச் செய்யக்கூடிய வண்ணார் சாதி.

வண்ணார் என்றால், முதன்மையான தொழில் வெளுப்பதாக இருந்தாலும், உள்ளூருக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் அவர்களே செய்கிறார்கள்.  பிள்ளைப்பேறு, திருமணம், இறப்பு போன்ற வாழ்க்கை வட்டச் சடங்குகளில் அவர்களின் பங்களிப்பு பிரதானமாக இருக்கிறது.

இதனால், அவ்வூரில் பள்ளர்களுக்கும் வண்ணார்களுக்குமான உறவு மேல் – கீழ் என்பதாகவே அமைந்திருக்கிறது.  ஊரில் கொத்து வாங்குவது, தினசரி சாப்பாடு வாங்குவது என்று பாரம்பரிய சாதிய சமூகத்தில் பார்க்க முடிகிற உறவுமுறையே இங்கும் நிலவுகிறது.  ஆனால், ஆண்டி போன்ற ஒன்றிரண்டு ஊர் பிரமுகர்கள் இத்தகைய சேவைக் குடும்பங்களைப் பாதுகாக்கும் முறையையும், அவர்களுக்கு இடையில் கேலியும் கிண்டலும் கற்பனையும் நிரம்பி வழியும் உறவு இருப்பதையும் வேறெந்த இலக்கியப் பிரதியும் இவ்வளவு நேர்த்தியாக, துல்லியமாக பதிவு செய்திருக்கவில்லை.

பெரும்பான்மை பள்ளர்களுக்கிடையே ஒற்றை ஆளாய் வாழும் படி நேர்ந்த வண்ணார் குடும்பம் தங்களை தற்காத்துக் கொள்ளுவதற்காக உருவாக்கிக் கொண்ட உத்திகள் – கேலியும் கற்பனையும்.

ஆண்டிக்கும் மாரிக்குமான உரையாடல்கள் பெரும்பாலும் இவ்விரண்டையும் சுற்றியே அமைகின்றன.  இரண்டு பேரும் ஒருவரையொருவர் திரும்பத் திரும்பக் கேலி செய்து கொள்கின்றனர்.  அதாவது, இரு வழிப்பட்ட கேலி.

இந்த இருவழிப்பட்ட கேலி, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை ஒரு புனைவு வெளிக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது.  ஆச்சரியப்படும் வகையில் அப்புனைவு வெளியை அந்த ஊரின் சிறுபான்மையினரான வண்ணார்களே ஆள்கிறார்கள்.  அவர்கள் இட்டுக் கட்டும் கதைகளில் மாயலோகமொன்று உருவாக்கப்படுகிறது. அவர்கள் அதனுள் சாகசங்களை நிகழ்த்துபவர்களாக வருகிறார்கள்.

அங்கே அவர்களே கதாநாயகர்கள்.  வினோதம் மலிந்த அந்த மாய உலகின் மனித வாடை இவர்களால் மட்டுமே உருவாகியிருக்கிறது.

மாரி தனது சாகசங்களைச் சொல்லச் சொல்ல, அதில் தன்னையும் இணைத்துக் கொள்ளும்படியும், அவ்வுலகிற்குத் தன்னையும் கூட்டிச்செல்லும்படியும் ஆண்டி கடைசி வரை கேட்டுக்கொண்டே இருக்கிறான்.  ஒவ்வொரு முறை கேட்கையிலும் மாரி அதற்கு மறுப்பேதும் சொல்வதில்லை; ஆனால், கூட்டிச் செல்வதும் இல்லை.

அந்த மாய உலகம் குறித்த தனது ஆசையை ஆண்டி தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.  ஆனால், அது கடைசி வரை அவருக்கு வாய்க்கவில்லை.  சிறுபான்மையினரின் கற்பனையைப் பெரும்பான்மை வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது.

ஆனால், ஆண்டிக்கு வேறு பைத்தியம் பிடித்திருக்கிறது!  நிலம், விவசாயம், பயிர், பச்சை என்று அது இன்னொரு தினுசான பைத்தியம்.  அந்தக் கிறுக்கு அவரது மனைவியையும் விட்டு வைக்கவில்லை.  தன் நிலம் – பிறர் நிலம் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல், ஆண்டியும் கருப்பியும் செம்பழுப்பு நிறத்திலிருந்து பச்சையை தருவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உணவு உற்பத்தியோடு தொடர்புடைய சமூகங்களுக்கும், பிற சார்பு சமூகங்களுக்குமான கதாபாத்திரங்களாகவே ஆண்டியும் மாரியும் வருகிறார்கள்.  இரண்டு பேருக்கும் வேறு வேறு வகையான கிறுக்குகள்.  ஆனால், ஒருவர் கிறுக்கை இன்னொருவர் மரியாதையோடு அங்கீகரிக்கிறார்கள்.  ஆனால், இவர்கள் தத்தம் சமூகத்தின் மாதிரிக் கதாபாத்திரங்கள் இல்லை.

ஆண்டியைத் தவிர்த்த வேறு சில பெரும்பான்மை சமூகத்தவருக்கு, மாரியின் கற்பனை குறித்து அத்தனை மரியாதையெல்லாம் இல்லை.  சிறுபான்மை மாரியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்தாடத்தான் நினைக்கிறார்கள்.  கிளியாந்தட்டு விளையாடும் போது இப்படியொரு பந்தாடலிலிருந்து மாரியை, அவனது புனைவுலகமே காப்பாற்றுகிறது.  பெரும்பான்மை சமூகத்தின் வன்முறையை, சிறுபான்மை சமூகங்கள் கேலி மூலமும் கற்பனை மூலமுமே எதிர்கொள்கிறார்கள்.  இந்த உத்திகள் அவர்களைத் தந்திரமாய் தப்பிக்க வைக்கிறது.  

No comments:

Featured post

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...