Skip to main content

சாதி - மொழி – சமயம் 2: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்



2 - சாதி:

1911, மார்ச்சு மாதம் 8ம் நாள் வெளியான (எண் 4:39) தமிழன் இதழில் அயோத்திதாசர் 'சாதி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  அளவில் சிறிய இக்கட்டுரையில் இந்தியாவில் வழங்கப்படும் அடையாளங்களைக் குறித்தான தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.  

குறிப்பாக, 'சாதி', 'வருணம்', 'குலம்' போன்ற சொற்களுக்கான அர்த்தங்களையும் அவை பயன்படுத்தப் பட்ட முறைகளையும், தற்சமயம் அதன் அர்த்தத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் குறிப்பிடுகிற அயோத்திதாசர், சொற்களுக்கான அர்த்தங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறார். 
ஏறக்குறைய அயோத்திதாசரின் முறையியலே இதுவாகத்தான் அமைந்திருக்கிறது.  எந்தப் பொருளைப் பற்றி பேசுவதற்குத் தொடங்குகிறாரோ அதனுடைய மையமான சொற்களை முதலில் அடையாளம் காண்பது; பின்பு, அச்சொற்களுக்கான அர்த்தங்களை விளக்குவது; அந்த விளக்கங்கள் எப்பொழுது, யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்ற காரணத்தை விவரிப்பது (இந்த வரலாற்றுப் பின்னணி பெரும்பாலும் பௌத்த சமயம் வழக்கிலிருந்த 'பூர்வ' காலத்தையே குறிப்பிடுவதாய் அமையும்); இச்சொற்களின் முறையான அர்த்தங்களை திரிக்கிற, சிதைக்கிற வேலைகள் நடைபெற்ற சூழலை விளக்குவது (இதுவும் பெரும்பாலும் பிராமணச் சாதியின் ஏதேச்சதிகாரம் மேலோங்கிய தன்மையை விவரிப்பதாகவே அமையும்).

'சாதி' என்ற சொல்லைக் குறிப்பிடும் போது, அது 'சாதித்தோர்' அல்லது 'சாதிப்போர்' என்று சொல்லப்படுவதன் குறுகிய வடிவம் என்று எழுதுகிறார்.  மக்கள் எந்த வழியில் சாதிக்கிறார்களோ அதுவே அவர்களது 'சாதி'யாக சொல்லப்பட்டது. சாதி என்ற சொல் உருவாக்கப்பட்ட காலத்தில் அல்லது ஆதி காலத்தில் ஒவ்வொரு மக்கள் கூட்டமும் தங்களுக்குள் எந்த மொழியால் பேசிக்கொள்கிறார்களோ அதுவே அவர்களது சாதி என்று அழைக்கப்பட்டது. 
'தமிழ் பாஷையாகிய திராவிடத்தை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக் கொண்டு 'திராவிட சாதியாரென்றும்', கன்னட பாஷையை ஓர் கூட்டத்தார் சாதிக்கும் வார்த்தை ஒலியைக் கொண்டு 'கன்னடசாதியாரென்றும்' (.693, .சி. I) அழைக்கப்பட்டதாக அயோத்திதாசர் எழுதுகிறார்.  அவரது யோசனையின் படி 'பூர்வத்தில்' சாதி என்ற வார்த்தை ஒரு சமூகக் குழுவின் மொழி அடையாளமாகவே இருந்து வந்தது.  ஒவ்வொரு குழுவும் தனக்கேயுரித்தான தனித்த மொழி அடையாளங்களுடன் தனது காரியங்களை நிகழ்த்தி வருகிறது, அதாவது 'சாதித்து' வருகிறது.  இதனடிப்படையாகவே ஒவ்வொரு குழுவைக் குறித்தும் 'இக்குழு என்ன வழியில் சாதிக்கிறது?' என்று கேட்கையில் அக்குழுவின் மொழியைக் குறிப்பிட்டு அதன் மூலம் சாதிக்கிறது என்று சொல்லும் வழக்கம் இங்கு  இருந்ததாக அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.

சாதித்தல் என்ற சொல் இன்றைக்கு 'அரிதான, அபூர்வமான காரியத்தை செய்தல், பிடிவாதமாக இருத்தல்' என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.  ஆனால், அயோத்திதாசர் சாதித்தல் என்பதை இயல்பான நடவடிக்கை என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்.  அதே நேரம் இந்த சாதித்தல் தான் அக்குழுவை பிறக் குழுக்களிடமிருந்து வேறுபடுத்தியறியும் வேலையையும் செய்வதாகக் கருதுகிறார்.  வேறெந்தவொரு அடையாளத்தைக் காட்டிலும் ஒரு சமூகக்குழுவின் மொழி அடையாளமே அதனை 'குழுவாகவும்' பிறவற்றிலிருந்து வேறுபடுத்தியும் வைத்திருக்கிறது என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.  இங்கு வாழும் வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான வித்தியாசம் என்பது அவ்வவ் குழுக்கள் என்ன மொழியால் 'சாதிக்கிறதோ' அதனால் உருவாகிறது. 

'சாதி' என்ற சொல்லை விளக்க வந்த அயோத்திதாசர், தொடர்ச்சியாக அதனோடு நெருக்கமான வருணம், குலம் என்ற இரண்டு சொற்களுக்கான அர்த்தங்களையும் விவரிக்கின்றார்.  இவ்விரண்டு சொற்களும் கூட அடையாளங்கள் தான் என்றாலும், 'சாதி' என்ற குழு அடையாளத்திலிருந்து வேறுபட்டவை. 

'வருணம்' என்பது ஒருவனின் நிறம் என்றும், நிறம் பற்றிய கேள்வி அக்குறிப்பிட்ட நபர் இல்லாத சூழலிலேயே கேட்கப்படும் என்றும் அவர் எழுதுகிறார்.  ஒருவனின் தோல் நிறத்தைக் கொண்டு அடையாளப்படுத்தும் இம்முறையில் 'அவனென்ன வருணமென்னும் வினாவிற்கு கறுப்பு வருணம், கறுப்பும் வெள்ளையும் கலந்த வருணமெனக் காணாதோன் நிறத்தை...' (.693, .சி. I) குறிப்பிடுவர் என்பதே அவரது கணிப்பு. 

ஆனால், குலம் பற்றிய விசாரிப்பு, அக்குறிப்பிட்ட நபரிடமே நேரடியாக நடைபெறும் என்றும், அதற்கு அக்குறிப்பிட்ட நபர் தனது குடும்பத் தொழிலை விடையாகச் சொல்வார் என்பதும் அவரது விளக்கம்.  ஆதி காலத்தில், தொழில்கள் நான்காகப் பகுக்கப்பட்டிருந்தன என்பது அவரது வாதம்; அதன் பெயர்களாகத்தான் பிராமணம், ஷத்திரியம், வைசியம், சூத்திரம் என்பவை வழங்கப்பட்டன;

பிராமணம் அல்லது அந்தணம் என்ற தொழில் '..சீவர்களுக்கு உண்டாகும் பிணிப் பீடைகளை அகற்றி, கால மழைகளைப் பெய்ய வைத்து குடிகளுக்கு செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் என்னும் முக்கால செயல்களை...' (.530, .சி. I) விளக்குவதாகும்; ஷத்திரியம் அல்லது அரசம் என்ற தொழில் 'புஜ பல வலிமையாலும் மன்னு திடத்தாலும் துட்ட மிருகங்களுக்கு அஞ்சாது வேட்டையாடி துண்டிப்பது ... எதிரிகளுடன் ... முன் மார்பு கொடுத்து போர்புரிவது...' (. 529, .சி. I); வைசியம் அல்லது வணிகம் என்பது '...பொருட்களை தக்க லாபத்திற்கு விற்று செட்டை நிலை நிறுத்தி ஒன்றை கொடுத்து மற்றொன்றை வாங்குவோருக்கு' (. 528, .சி. I) பெயராகும்; சூத்திரம் அல்லது வேளாளம் என்பது 'உலக சீர்திருத்த தொழில்களை விடா முயற்சியால் விருத்தி செய்து சகலருக்கும் உபகாரியாய் விளங்குவதாகும்' (. 529. .சி. I).  உன் குலமென்ன என்ற கேள்விக்கு, தான் பிறந்த குலத்தின் தொழிலே பதிலாக சொல்லப்பட்டது என்பது அவரது முடிவு.

'சாதி' பற்றி பேச வந்த அயோத்திதாசர் அதனோடு தொடர்புடைய வருணம், குலம் போன்ற சொற்களின் 'மெய்'யான அர்த்தங்களை விளக்கிய பின்பு,  அம்மெய்யான அர்த்தங்கள் யாரால், எப்படி, என்ன காரணத்திற்காக திரிக்கப்பட்டு, இன்றைய தவறான அர்த்தங்கள் நடைமுறைக்கு வந்தன என்று விவரித்து செல்கிறார்.  ஏற்கனவே பார்த்தது போல் 'ஆதி'யில் அல்லது 'பூர்வ'த்தில் சொற்களுக்கான 'மெய்' அர்த்தங்கள் நிலவின என்றும், அப்பொழுதே 'இத்தேசத்தின் சத்திய தன்மத்திற்கே சத்துருவாக அசத்தியர்களாம் மிலைச்சர், மிலேச்சரென்னும் ஓர் சாதியார்...' (. 609, .சி. I) இங்கு வந்து குடியேறி தங்களை பிராமணர்கள் என்று பொய்யாக அழைத்துக் கொண்டு 'பூர்வ' அர்த்தங்களை சிதைக்கத் தொடங்கியதாக தெரிவிக்கிறார். 
'இவ்வேஷ பிராமணர்களுக்கு மற்ற சாதியோர்களைப் பற்றி யாதொரு அக்கரையும் முயற்சியும் கிடையாது ... சாதியென்னும் மொழி தோன்றிய விவரமும் அதன் பொருளும் இவர்களுக்கு இன்னும் தெரியவே மாட்டாது...மேற்சாதி கீழ்ச்சாதி எனும் பொய்க்கதைகளை ஏற்படுத்தி தங்கள் சொல் வல்லபத்தால் மெய்போலும் மெய்போலும் சொல்லி வந்த ... பொருளற்ற கற்பனைக் கதைகள்..' (. 693-694, .சி. I) சூழ்ச்சியானவை என்பது தான் அயோத்திதாசரின் முடிவு.  இந்தக் கட்டுக்கதைகளும் கூட '...விவேவிகள் தோன்றுங்கால் பொய், பொய், பொய்யெனப் பொருந்த விளங்கிப் போகும்' (. 694, . சி. 1) என்பதே அவரது தீர்மானமான நம்பிக்கை.

அயோத்திதாசரின் ஒட்டுமொத்த சிந்தனைத் தளத்தின் சில முக்கியமான அடிப்படைகளை நம்மால் இப்பொழுது அடையாளப் படுத்த முடியும்.  இந்திய தேசத்தின் சிந்தனைப் போக்கில் மிகப்பெரும் சீரழிவு நடைபெற்றிருப்பதாக அவர் கருதுகிறார் - அந்தச் சிரழிவை நிகழ்த்தியவர்கள் 'பிராமண சாதி' என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் தான் என்பது அவரது தெளிவு.  இந்த அர்த்த சிதைவை அவர்கள் 'சுய சாதி நலனை' முன்னிட்டே செய்தார்கள் - அதுவும் கற்பனையாய் செய்யப்பட்ட கட்டுக்கதைகளை பரப்பியதன் மூலம் இதை அவர்கள் சாதித்தனர்.  இன்றைக்கு வழக்கிலிருக்கும் எந்தவொரு அர்த்தமும் இந்த நிலப்பரப்பின் சிந்தனையிலிருந்து தோன்றியதல்ல, மாறாக அத்தனையும் திரிக்கப்பட்டவையே.  ஆனால், பிராமணர்களின் வருகைக்கு முன்பு இந்த சொற்களுக்கெல்லாம் வேறு அர்த்தங்கள் வழங்கப்பட்டன; உண்மையான அர்த்தங்களான அவையனைத்தும் வெகுஜன பரப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டன என்பதே அயோத்திதாசரின் விவாதம்.  பிராமணர்களின் தலையீடு, இந்திய சமூகத்தின் கருத்தியல் தளத்தில் ஏற்படுத்திய சீர்கேடுகளே அத்தனை பின்னடைவுகளுக்கும் காரணம்.  வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட மூளைச்சலவையின் மூலமே பிராமணர்கள் அதிகாரத்தை கையகப்படுத்தினார்கள் என்று அயோத்திதாசர் முடிவு செய்கிறார்.

சாதி என்று மட்டுமில்லை, வேறெந்தவொரு பொருளைப் பற்றிய ஆய்வினையும் அவர் இந்த முறையிலேயே மேற்கொள்வதை நம்மால் அறியமுடிகிறது.  புருசீகநாட்டிலிருந்து வந்து சேர்ந்ததாக சொல்லும் பிராமணர்களின் நுழைவு, அறிவுத்தளத்திலும் வெகுஜனத் தளத்திலும் பின்னடைவுகளை ஏற்படுத்தியதோடு எல்லோரையும் பிராமணியக் கருத்தியலுக்குள் கொண்டு வந்து சேர்த்தது என்பதும் அயோத்திதாசரின் விளக்கமாக உள்ளது.

அயோத்திதாசரின் சிந்தனையின் படி சாதிஎன்பதற்கு இரண்டு விளக்கங்கள் இருக்கின்றன; ஒன்று, ‘ஒரு கூட்டத்தார் செயல்படும் மொழியே அவர்களது சாதியாகக் கருதப்படுகிறதுஎன்பதாகும்.  இந்த விளக்கமே மெய்யானது; ‘யதார்த்த பிராமணர்கள்காலத்தது; பௌத்த தன்மத்தில் தோய்ந்தது.  இரண்டு, ‘பிறப்பினடிப்படையில் தீர்மானிக்கப்படும், மாற்றிக் கொள்ள முடியாத, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட படி நிலை அமைப்பிற்குள் வரக்கூடிய தொழில் அடையாளமே சாதியாகும்’.  இது, வேஷ பிராமணர்களால் உருவாக்கப்பட்டது; கற்பனைகளாலும் கட்டுக்கதைகளாலும் செய்யப்பட்ட பொய்’; சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.

அயோத்திதாசர், ‘சாதிஎன்ற சொல்லுக்கான மெய்விளக்கம் என்று சொல்லக்கூடியதற்கு சான்றாதாரங்கள் எதையும் காட்டியிருக்கவில்லை.  பூர்வத்தில் இந்த விளக்கங்கள் தான் இருந்ததாக சொல்வதற்கு எழுத்து சார்ந்த பதிவுகள் எதனையும் அவர் காட்டியிருக்கவில்லை.  ஆனால், இது போன்ற மெய்ப்பொருளை பறைந்ததற்காக பூர்வ பௌத்தர்கள்தாழ்ந்த சாதியினரான பறையர்என்று சொல்லி ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் என்று வேறொரு இடத்தில் குறிப்பிடுகிறார்.  அப்படியானால், அயோத்திதாசர் சொல்லக்கூடிய இது போன்ற யதார்த்த பிராமணவிளக்கங்கள் இன்றைய பறையர்கள்மத்தியிலோ அல்லது குறைந்தபட்சம் வள்ளுவர்கள்மத்தியிலோ வழங்கப்படுவது போன்ற ஆதாரங்களும் நமக்கு கிடைக்கவில்லை.  அப்படியானால், இது போன்ற பௌத்த தன்மம் சார்ந்த, இன்றைய பிராமணியத்திற்கு முந்தைய விளக்கங்களை அவர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்பதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.  அதற்கு முன், ‘சாதிஎன்ற கருத்தாக்கத்தை ஒரு கூட்டத்தின் மொழியோடு இணைத்து விளக்குவதால், ‘மொழிபற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்து விடலாம்.
(தொடரும்)

Comments

Anonymous said…
Not very convincing here. The word jaathi must have come from Sanskrit jaathaha meaning birth which is a root word for jaathakam, jaathakaraNam etc. To call it saadhi seems a stretch.
But the thoughts and analysis are lovely. Please carry on.
நண்பரே,

நிச்சயமாய் அயோத்திதாசரின் வாதங்கள் நமது பட்டறிவிற்கும் பகுத்தறிவிற்கும் ஏற்றவகையாக இருப்பதில்லை. அவரது வாதங்கள் எந்தவொரு அறிவியலின்பாற்பட்டதில்லை. வேர்ச்சொல்லாராச்சியின் சாயல்கள் அதில் தெரியும் என்றாலும் அப்படியும் இல்லை - பொதுவாக இது போன்ற சொற்பொருள் விளக்கங்களை 'நாட்டுப்புற வேர்ச்சொல்லாய்வு' (Folk Etymology) என்று சொல்கிறார்கள். வேர்ச்சொல்லாய்வுகளையே நாம் கடந்து வந்து விட்ட பொழுதில் அயோத்திதாசரின் இத்தகைய விளக்கங்களுக்கான ஆதாரங்கள் அறிவியல் சார்ந்தது இல்லை. ஆனால், நான் வேறு இரண்டு விஷயங்களைத் தான் இதில் கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, அவர் இது போன்ற சொற்களுக்கான விளக்கங்களை ஒன்றிணைத்து ஒரு நீண்ட கதையைக் கட்டமைக்கிறார். எனவே இச்சொல் விளக்கங்கள் அப்போதைக்கப்போது எரிந்து அணைந்து விடுபவையாக இல்லை. அவை இணைந்து பெருஞ்சுடராக மாறுகின்றன. இரண்டு, அவரை இது போன்ற சோதனைகளில் முழுமூச்சாய் இறங்க வைத்து இறுதி வரை போராட வைத்த மனோபாவம். அதற்குப் பின்னாலிருந்த அவரது நோக்கம், அதற்கான வேட்கை. இந்த இரண்டும் தான் எனக்கு முக்கியமாகத் தெரிகிறது. 'But the thoughts and analysis are lovely' என்று நீங்கள் எழுதுவதும் இதை முன்னிட்டே என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.

டி. தருமராஜ்

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக