Friday, 7 November 2014

எழுத்து அரசியல் 3 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் - பாகம் 3தமிழ்ச் சூழலில் தலித் இலக்கிய அறிமுகம்:
1990ல் இந்தியாவெங்கும் பேரதிசயம் போல் கொண்டாடப்பட்ட அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவைத்தான்தலித் இலக்கியம் தமிழகத்தில் அறிமுகமான காலமென்று சொல்ல வேண்டும். 1980களின் இறுதி வருடங்களிலேயே தலித் இலக்கிய வருகைக்கான அறிகுறிகள் தென்பட்டன என்றாலும், 1990 தான் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வருடமாக இருக்கிறது. அக்காலகட்டங்களில் காத்திரமான அதிர்வுகளை தமிழிலக்கியச் சூழலில் ஏற்படுத்திய அமைப்பியல், பின்னை அமைப்பியல், கட்டுடைத்தல், பின்னை நவீனத்துவம் போன்ற வார்த்தைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத எதிர்வினைகளைதலித்இலக்கியமும் உருவாக்கியது. அப்பொழுது தான் எக்சிஸ்டென்சியலிசத்தின் உன்மத்தத்திலிருந்து மீண்டு கொண்டிருந்த நவீன தமிழ் இலக்கியம் மேற்கூறிய கோட்பாடுகள், இஸங்கள், இலக்கியங்களால் அடைந்த நொம்பலம் கொஞ்ச நஞ்சமல்ல.
தலித் இலக்கியம்என்ற பெயரால் தமிழ்ச் சூழல் அடைந்த நிலையை விளக்குவதே இந்தப் பகுதியின் நோக்கமாக அமைகிறது. நவீனத் தமிழிலக்கியம் (இங்கே சிற்றிதழ் இலக்கியம்) என்றால் என்ன? அதன் குணங்கள் என்ன? அது எவ்வாறு யோசிக்கிறது? அதன் அரசியல் யாது? போன்ற செய்திகளை விளக்கி விட்டு, ‘தலித் இலக்கியம்குறித்து எழுப்பப்பட்ட ஆரம்ப சந்தேகங்கள் கவனப்படுத்தப்படுகின்றன. அதன்பின் தமிழில் தலித் எழுத்தாளர்கள் எங்கிருந்து, எப்படி, எழுத வந்தார்கள் என்பதும் பேசப்படுகிறது.
தலித் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் முன் தமிழிலக்கியச் சூழலையும், அது முன்வைத்த கேள்விகளையும் குறித்து பேசினாலே, நமது விவாதத்தின் மையச் சிக்கல் துலக்கமாக வெளிப்படும் என்ற காரணத்தைத் தவிர இப்பகுதியை எழுதுவதற்கு வேறு நோக்கங்கள் இருக்கவில்லை.
1. தீவிரமான கலையுள்ளமும் வெகுஜன விரோதமும்:
தலித்இலக்கியம்அறிமுகமானபோது நிலவிய தமிழகச் சூழலை இனி கொஞ்சம் கவனிக்கலாம். இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம் வியாபார எழுத்துகள், சிற்றிதழ் எழுத்துகள், பிரச்சார எழுத்துகள், (மார்க்சியம், திராவிடம் போன்றவை) என மூன்று வகையாகப் பிரிந்திருந்தது - முதல் வகை  வியாபார எழுத்துலகை பணமும் புகழுமே ஆக்ரமித்திருந்தன; சிற்றிதழ் எழுத்துகளின் பின்புறம் ஒளிவட்டம் சுழன்றது; மூன்றாவது வகை பிரச்சார எழுத்துகளின் மூலம் ஆர்ப்பாட்டமான சமூக அங்கீகாரம் கிடைத்தது.
தேஜஸ் நிரம்பிய சிற்றிதழ் எழுத்துகள் சாகாவரம் பெற்றவை என்ற கருத்து தமிழ்ச்சூழலில் வலுவாக வேரூன்றியிருந்தது. வ்வகை எழுத்தாளர்கள் வரலாற்றில் இடம்பெறப் போகிறவர்களாக சொல்லப்பட்டனர். எழுத்தை தவமாக, தியானமாக, வேள்வியாக என்று பல்வேறு கற்பனைகள் புழக்கத்தில் இருந்தன. தனக்குத் தானே கிரீடம் சூட்டிக் கொள்ளும் அகம்பாவமும் இந்த எழுத்துமுறைக்கு இருந்தது.
தமிழில்தலித் இலக்கியம்இவ்வகை சிற்றிதழ் இலக்கியமாகவே அறிமுகமாகி, அப்படியே தான் இயங்கியும் வந்திருக்கிறது. வேறெந்தவொரு மொழிச் சமூகத்தையும் போலவே தமிழகத்து சிற்றிதழ் இலக்கியமும்கலைப் படைப்புஎன்பதை உன்னதமாகவே கணித்து வைத்தது. லௌகீகமான சங்கதிகளைத் தாண்டி, பொதுப்படையான மனித உணர்வுகளைப் பேசுவதும், ஆழ்மனதின் ரகசியங்களை வெளிக் கொணர்வதும், அகவயமான சிக்கல்களை விவரிப்பதுமே மேலான எழுத்துமுறை என்றொரு நம்பிக்கை இவ்வகை உன்னத எழுத்துக்களின் மையமாக விளங்கியது. இதனால், புறவயமான சமூகப் பண்பாட்டு அரசியல் சலனங்களையோ, அதிர்வுகளையோ பதிவு செய்தாக வேண்டிய கடமையோ அல்லது எதிர்வினையாற்ற வேண்டிய நிர்பந்தமோ எழுத்தாளனாகிய கலைஞனுக்கு அவசியமில்லை என்ற வாதமும் நிலவி வந்தது. யதார்த்தவுலகின் ஒவ்வொரு நிகழ்வையும் தீர்மானிக்கக்கூடிய மானுட நடத்தைகளை விவரிப்பதும் அவற்றிற்கான உளவியல் காரணங்களை அலசுவதும் மிகச்சரியான எழுத்து முறையாக முன்வைக்கப்பட்டது. அப்படியான எழுத்துகளே சாகாவரம் பெற்றவையாக விளங்குகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தது.
சாகாவரம் பெற்ற எழுத்துகள்என்பதில் நிறையவே உண்மையிருப்பினும், அது தமிழகத்து சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்கு வழங்கிய இன்னுமொரு சாதகத்தையும் நாம் கவனிக்க வேண்டும் (அல்லது, தமிழ் எழுத்தாளர்கள் இந்தசாகாவரத்தைஎவ்வாறு விளங்கிக் கொண்டார்கள் என்று நாம் கவனிக்கலாம்). ‘உன்னதங்களைத் தேடியலையும் நபர்’, அதாவதுதீவிரமான கலையுள்ளத்தோடு தனது வாழ்க்கையை நகர்த்தும் ஜீவன்என்றொரு பிம்பம் தமிழ்ச் சூழலில் கட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்த வகையான வாழ்க்கை முறையொன்று நிஜமான ஆகிருதிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலமும், ‘நுண்மையான உணர்வுகளைக் கொண்டவன்என்ற வகைமாதிரிக் கதாபாத்திரமாக இலக்கியங்கள் மூலமும் தொடர்ச்சியாக நிறுவப்பட்டிருந்தன.
இத்தகைய வகைமாதிரிக் கதாநாயகர்கள் எப்பொழுதும் பதட்டவுணர்வு கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் உரையாடல்களில் ஈடுபடுவதில்லை. தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொள்கிற திறமையைக் கொண்டிருப்பார்கள். வழக்கமாய் இவர்களை, குடும்பமோ, சமூகமோ சரிவரப் புரிந்து கொள்வதில்லை. சகமனித உறவுகளைப் பேணுவதில் இவர்களுக்கு எப்பொழுதுமே சிக்கல்தான். தான் விரும்பும் பெண்ணிடம் கூடத் தனது காதலைக் கடைசிவரை சொல்லத் தெரியாத சங்கோஜிகள். ஆனால், இவர்களுக்கு சக மனிதர்களின் மனவோட்டங்களெல்லாம் மிக எளிதில் புரிபட்டு விடும். தரமான இசை, ஓவியம், திரைப்படம், எழுத்து என்று வெறி கொண்டு திரிபவர்கள். ஒட்டுமொத்த சமூகமும் மொன்னையாய், மந்தை மந்தையாய் அலைகிறது என்பது இவர்களின் விமர்சனம். எனவே, பெருஞ்சமூகம் மீது இவர்களுக்கு என்றைக்குமே விரோதம் தான்.
இந்த வகைக் கதாப்பாத்திரங்களை நீங்கள் சிறு பத்திரிகை எழுத்துகளில் விதவிதமாய்ப் பார்க்கலாம். சிறுகதைகளில், நாவல்களில் இவர்களெல்லாம் ரொம்பப் பிரபலம். இந்த வகைமாதிரி உருவங்களில் நான் கவனப்படுத்த விரும்புவது ஒன்றே ஒன்றைத் தான்: தரமான கலைவடிவங்களின் மீதான தேடலுடையவர்கள் பெருஞ்சமூகத்தின் மீது விரோதம் பாராட்ட வேண்டியதன் அவசியமென்ன? தீவிரமான கலையுள்ளமும், பெருஞ்சமூகம் மிதான விரோதமும் தவிர்க்கவியலாத வகையில் ஒன்றிணைந்தவையா?
இந்தக் கேள்விக்கான பதிலை நாம் வேறொரு திசையிலிருந்து யோசிக்கலாம். இருபதாம் நூற்றாண்டு நவீனத் தமிழிலக்கியம் சந்தித்த இருபெரும் சமூக நிகழ்வுகள், காந்திய வழியிலான சுதந்திரப் போராட்டமும், திராவிட சித்தாந்தத்தின் வழி நடந்த சமூகப் போராட்டமுமே. இதில் முன்னது, திடீர்ச் சூறாவளி போல் இந்தியாவெங்கும் வீசி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக அமைந்தது. காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து கைமாற்றப்பட்ட இந்த அரசியல் அதிகாரத்திற்குப் பின்னால், சாத்வீகம் - அகிம்சை - சுயபரிசோதனை - ஆன்மீகத் தேடல் - சுயராஜ்ஜியம் - சுதேசியம் போன்ற சிலாகிக்கப்பட்ட கருத்துருவங்கள் இருந்தன. ஆனால், இரண்டாவதாக நடைபெற்ற சமூகப் போராட்டம் தமிழகத்திற்கு மட்டுமேயானது. இங்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்லாது, சமூக அந்தஸ்து, சுயமரியாதை, பண்பாட்டு அதிகாரம் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. ஆனால், முன்னதைப் போன்ற ஆன்மீகப் பின்புலமோ, விளக்கமோ பின்னதற்கு இல்லை என்பது முக்கியமான வேறுபாடு. முந்தைய நிகழ்வைக் காட்டிலும், பிந்தைய நிகழ்வே பெருஞ்சமூகத்தின் அன்றாட வாழ்வியலைப் பெருமளவில் மாற்றியமைத்தது என்பதும் உண்மை.
தனது தொடக்கக் காலகட்டங்களில் மேற்கூறிய இரு நிகழ்வுகளையும் சந்தித்திருந்த நவீனத் தமிழிலக்கியம், காந்தியப் போராட்டத்தைப் பதிவு செய்த அளவிற்குக் கூட திராவிடப் போராட்டத்தைப் பதிவு செய்திருக்கவில்லை என்பதை நாம் கவனிக்கலாம். சொல்லப்போனால், செய்யப்பட்ட ஒன்றிரண்டு பதிவுகளும் கூட அச்சமூகப் போராட்டத்தின் செயல்பாடுகளை பகடி செய்வதாகவும், மறுப்பதாகவுமே அமைந்திருந்தன. குறிப்பாக, திராவிடப் போராட்டத்தின் முக்கிய அம்சமான மேடைப் பேச்சையும், வாய்ஜாலங்களையும், புதிய அரசியற் தலைவர்களின் படாடோபங்களையும் நக்கல் செய்யும் கவிதைகளும், கதைகளும் தமிழில் செய்யப்பட்டிருந்தன.
இதற்கானக் காரணம் மிக எளிமையானது. எந்த சமூகத்தின் மேலாண்மையையும், அடக்குமுறையையும் எதிர்த்து திராவிடப் போராட்டம் நடத்தப்பட்டதோ அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களே நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளாய் இருந்தனர். மணிக்கொடி காலம், எழுத்து காலம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவையாவும் பெரும்பாலும் பார்ப்பனர்களின் காலமாகவே இருந்ததை நம்மால் எளிதாய் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த எழுத்தாளர்களே தமிழ் சிற்றிதழ் எழுத்தை வடிவமைத்தவர்களாக இருந்தனர். இவர்களாலேயே நவீன கலை என்பதும், அது உன்னதமானது என்பதும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. நாம் மேலே பார்த்த வகைமாதிரிக் கதாபாத்திரத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவர்களையே சாருகிறது.
தமிழ் சிற்றிதழ் எழுத்துகளின் சாதிய முகம் எல்லோருக்குமே தெரிந்த ரகசியம். குழுச் சண்டைகள் என்றும், போட்டி பத்திரிகைகள் என்றும், வட்டாரச் சண்டைகள் என்றும் சிற்றிதழ் உலகில் நடைபெற்ற விஷயங்களையெல்லாம் யாராவது ஆராய முற்பட்டால் இந்த ரகசியம் இன்னும் விஸ்தாரமாய் வெளிப்படக்கூடும். சாதி சாதியாகவே எழுத வந்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் சிறுத்தும், பாதுகாப்பாய் பரிமாறப்பட்டும், பல நேரங்களில் தலைமைறைவாய் செயல்பட்டுமே சிற்றிதழ் இலக்கியம் உயிர் வாழ்ந்ததால் பந்துக்கள், ஸ்நேகிதர்கள், ஒரு சாலைக்காரர்கள் என்ற எல்லைகளுக்குள்ளேயே நவீன கலைஞர்கள் உருவாகி வந்தார்கள்.
கும்பகோணம் அல்லது தஞ்சாவூர் பார்ப்பனர்கள், திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்கள் என்று அடையாளம் சொல்லுகிறபடியாகவே நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் வருகை அமைந்திருந்தது. கரிசல் இலக்கியம், கொங்கு இலக்கியம், நாஞ்சில் இலக்கியம் என்று வட்டார இலக்கியமாகச் சொல்லப்பட்டாலும் அவரவர் அவரவர் சாதியின் இலக்கியங்களையே தான் எழுதி வந்தார்கள். அப்படி எழுதுவதும்தான் சரியான எழுத்தாக இருக்கமுடியுமென்று வரையறுக்கப்பட்டிருந்தது. மீறி எழுதுவதெல்லாம் யதார்த்தத்தை விட்டு விலகி விடுவதாகவும் நம்பப்பட்டது.
இவ்வாறு ரகசியமான சாதி அடையாளங்களோடும், தீவிரமான கலைப் பயணத்திலான பெருஞ்சமூக விரோதத்தோடும், காலாதீத படைப்புகளைச் செய்யும் முயற்சியில் நிகழ்காலத்தை சௌகரியமாய் புறக்கணித்தபடியும் நவீனத் தமிழ் சிற்றிதழ் இலக்கியம் பயணப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதனுள் வந்து சேர்ந்தது தலித் இலக்கியம் என்ற புதிய எழுத்து முறை. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், தன்னை நிகழ்காலத்திற்கான எழுத்து என்றும், அரசியல் சார்ந்தது என்றும், தனித்த மொழி வடிவமுடையது என்றும், கூட்டு அடையாளங்களை முன்வைப்பது என்றும், வரலாற்றை திருத்தி எழுவது என்றும் வரையறுத்துக் கொண்டிருந்த தலித் இலக்கியம், தமிழகத்து சிற்றிதழ் இலக்கிய உலகினுள் அறிமுகமானபொழுது இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் இருந்தன.
ஒன்று, தலித் இலக்கியத்தின் தொடர்பால், தனது சாதிய உணர்வுகளையும், கலை தொடர்பான வரையறைகளையும் உளப்பூர்வமாய் மறுபரிசீலனை செய்து உருமாற்றிக் கொள்கிற வாய்ப்பு சிற்றிதழ் இலக்கியத்திற்கு இருந்தது. இரண்டாவதாக, தமிழ் சிற்றிதழ் இலக்கியத்தின் மேற்கண்ட போக்குகளில் அதிருப்தி கொண்டு தனியாக செயல்படக்கூடிய வாய்ப்பு தமிழ் தலித் இலக்கியத்திற்கு இருந்தது. ஆனால், துரதிர்ஷடவசமாக இவ்விரண்டுமே நடைபெறாமல், மூன்றாவதாக ஒன்று நடந்தது.
அது, சிற்றிதழ் இலக்கியமும் தலித் இலக்கியமும் ஒன்றையொன்று பாசத்தோடு அரவணைத்துக் கொண்ட நிகழ்வு!
ஏறக்குறைய எதிரும் புதிருமான கருத்தியல் சார்புகளைக் கொண்டிருந்த இரண்டும் தமிழ்ச் சூழலில் சமரசமாய் போகமுடிந்தது என்றால் அதற்குப் பின்னுள்ள சூட்சுமங்கள் தான் என்ன? இந்தக் கட்டுரையின் மையமே இது தான்!
(தொடரும்)

No comments:

Featured post

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...