Monday, 17 November 2014

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் 3 - என் தம்பி பாப்பான்.

தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் சாதிக்கு எதிரான சிந்தனை:

ரொபேர் தெலியேழ் வாதம் மோஃபாவின் முடிவுகளைக் கேள்விக்குட்படுத்தியது என்றாலும், அதுவும் கூட ஏராளமான முன்முடிவுகளைக் கொண்டது தான் என்பதை நாம் மறந்து விடலாகாது.  தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பிம்பத்தையே அவரும் பின்பற்றுகிறார் என்பதை யாராலும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். 

தாழ்த்தப்பட்டவர்கள், நிலங்கள் போன்ற உணவு உற்பத்திக்கான உபகரணங்களை சொந்தமாக்கிக் கொள்வதிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர் என்பதும், கல்வியறிவற்றவர்கள் என்பதும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் என்பதை நாம் அறிவோம்.  ஆனால், இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்தின் மூலம் தான் மோஃபாவிற்கான எதிர் கருத்து முன் வைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சாதிகள் தங்களுக்கென்று தனித்த பண்பாடொன்றை கொண்டிருக்கிறார்களா? சாதி அமைப்பிற்கு எதிரான அவர்களது சிந்தனைகள் எந்த வழியிலாவது வெளிப்பட்டிருக்கிறதா?  அவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்றால் அது என்ன சொல்கிறது?  உயர் சாதியினரின் சிந்தனையை ஏற்றுக்கொள்கிறதா அல்லது அதற்கு மாற்றாகப் பேசுகிறதா என்பவை போன்ற கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்விற்குள் இறங்கிய ரொபேர் தெலியேழ், தாழ்த்தப்பட்ட சாதிகள் மத்தியில் புழங்கக்கூடிய மிக முக்கியமான கதையாடலொன்றைக் கண்டுபிடிகிறார்.  இக்கதையாடல், சாதி அமைப்பு குறித்த 'தீண்டத்தகாதவர்களின்' பார்வையை மிகத் தெளிவாக முன்வைக்கின்றது.

அது - வாய்மொழியாய் சொல்லப்படும் 'சாதி' பற்றிய தோற்றத் தொன்மங்களின் தொகுப்பு!

தாழ்த்தப்பட்ட சாதிகள், சாதியமைப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகின்றன என்பதைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழிமுறை அவர்களது வாய்மொழி மரபை ஆராய்வது தான் என்று ரொபேர் தெலியேழ் முடிவு செய்ததற்கான காரணங்களை நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும்.  வாய்மொழி இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகிற தொன்மக் கதைகள், பழமரபுக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்ற அனைத்திலும் வாய்மொழி சமூகங்களின் சிந்தனை முறை ஊடாடிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை மானிடவியலுக்கு உண்டு என்றாலும், கிளாட் லெவிஸ்ட்ராஸின் 'தொன்மங்கள் மீதான் அமைப்பியல் ஆய்வு'களுக்குப் பின்பு, நாட்டுப்புற இலக்கியங்களுக்குள் அறியப்படாத சங்கதிகள் ஏராளம் உள்ளன என்ற யோசனை வலுவடைந்தது. 

ஆனால் அதே நேரம், தாழ்த்தப்பட்ட சமூகங்களைப் பற்றி ஆராய முனைகிற ஐரோப்பியர்கள், இங்குள்ள உயர் சாதியினருக்குக் கொஞ்சமும் குறைவுபடாத வகையிலான மனச்சாய்வோடே இருந்தனர்.  இம்மக்களிடம் அம்பேத்கர், அயோத்திதாசர் போன்ற நவீன சிந்தனையாளர்கள் உருவாகியிருக்க முடியும், அவர்கள் சாதியமைப்பு பற்றிய தங்களது கூர்மையான விமர்சனங்களை பக்கம் பக்கமாய் எழுதியிருக்க முடியும், அத்தோடு சாதியொழிப்பு இயக்கங்களை நடத்தியிருக்க முடியும், சாதியமைப்பிலிருந்து விடுபடுவதற்கான பரிசோதனைகளை செய்து பார்த்திருக்க முடியும் என்ற சிறு எண்ணம் கூட இல்லாதவர்களாகத் தான் இருந்தார்கள். அந்நாட்களில் மானிடவியல், ஐரோப்பியல்லாதோரை இப்படியே யோசித்து வந்தது. 

மேலும் 'அன்றாட வாழ்க்கை', 'வாய்மொழி வழக்காறுகள்' தொடர்பான மானிடவியல் முறையியல்களும் கூட அவர்களது மனச்சாய்வுக்குக் காரணமாக இருந்தன.  இது அவர்கள் தான் என்றில்லாது, வாய்மொழி வழக்காறுகள் குறித்து யோசிக்கிற பலருக்குமான கோளாறாகத்தான் இருந்தது.  (பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் துறையிலிருந்து 'அயோத்திதாசர் சிந்தனைகள்' தொகுப்புகளை 1999ம் வருடம் அச்சிட்ட போது, 'வாய்மொழி வழக்காறுகளை அச்சிடாமல் ஏன் எழுத்து ஆதாரங்களைக் கட்டி அழுகிறார்கள்' என்றே என்னைக் கேட்டார்கள். அவர்களுக்கு வாய்மொழியும் எழுத்துமொழியும் ஒன்றையொன்று முகம்கொண்டு காணச்சகிக்காத குரோதமுடையவை!)

சரி, நாம் ரொபேர் தெலியேழிற்கு வரலாம். 

தனது கள ஆய்வு ஊரான வாழ்கிறமாணிக்கத்தில் வாழக்கூடிய பறையர் மத்தியில் வழங்கப்படும் தோற்றப் புராணக்கதைகளின் வெவ்வேறு திரிபு வடிவங்களையும் ரொபேர் தெலியேழ் ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறார்.  முதல் வடிவம் இப்படிச் சொல்கிறது:

'ஆதி காலத்தில், உலகில் ஒரு அண்ணனும் தம்பியும் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்கள் ஏழையாகவும் இருந்தனர்.  அதனால் அவர்கள் கடவுளை வணங்கக் கோவிலுக்குச் சென்றார்கள்.  கடவுள் அவர்களிடம் அங்கே சிதறிக் கிடந்த இறந்த மாட்டின் அழுகிய பகுதிகளை அப்புறப்படுத்தும் படி கேட்டார். உடனே அண்ணன், 'என் தம்பி பாப்பான்' (அதாவது, அந்த வேலையை என் தம்பி செய்வான்) என்று பதில் சொன்னான்.  ஆனால், அது 'என் தம்பி பிராமணன்' என்று அண்ணன் சொல்வதாகப் புரிந்து கொள்ளப்பட்டது.  அந்த நாள் முதல், தம்பி பிராமணனாகவும் (பாப்பான்), அண்ணன் பறையராகவும் மாறிப் போனார்கள்.  மற்ற எல்லா சாதிகளும் இவர்களிடமிருந்து தான் தோன்றின'.


இதே கதையின் வேறொரு வடிவமும் ரொபேர் தெலியேழுக்குக் கிடைக்கிறது.  அந்தக் கதையின் படி, 'இரண்டு சகோதரர்கள், ஜபம் செய்வதற்காகக் கோவிலுக்குச் செல்கிறார்கள்.  வழியில், இறந்த மாட்டின் கழிவுகள் கிடப்பதைப் பார்க்கின்றனர்.  தம்பிக்காரன் கொஞ்சம் பலவீனமானவன் என்பதால், அண்ணன் அந்தக் கழிவுகளை சுத்தப்படுத்த முன்வருகிறான்.  ஆனால், அங்கே கூடியிருந்த மக்கள், 'நீ பூஜையல்லாவா செய்ய வேண்டும்' என்கிறார்கள்.  அதற்கு அண்ணன், 'என் தம்பி பாப்பான்' என்று பதில் சொல்கிறான்.  அங்கிருந்தவர்கள், 'தம்பி பிராமணன்' என்று தவறுதலாகப் புரிந்து கொண்டார்கள். இதைக் கண்ட கடவுள், அண்ணனின் செயலைப் பாராட்டி, அவனுக்குப் புகழாரம் சூட்டி, 'இனி நீ பறையராக இருப்பாய்' என்று ஆசிர்வதித்தார்; அதே நேரம் தம்பியை பிராமணனாகவும் மாற்றினார்.'

இந்தக் கதை பல்வேறு வடிவங்களில் மக்கள் மத்தியில் வழங்கி வருகிறது.  இதன் இன்னொரு வடிவத்தில் கடவுளுக்குப் பதில் அரசனோ அல்லது தந்தையோ, சாதியை வரையறுக்கும் வேலையைச் செய்கிறார்கள். 'ஒரு மனிதனுக்கு ஐந்து ஆண் மக்கள்.  அதில் மூத்தவனிடம் மட்டுமே தனக்கான வேலைகளை ஏவுவான்; தண்ணி கொண்டு வா, அதை எடு, இதை எடு என்று.  ஆனால், மூத்தவன் ஒவ்வொரு முறையும், 'என் தம்பி பாப்பான்; என் தம்பி பாப்பான்' என்றே சொல்லுவான்.  இதைத் தவறுதலாகப் புரிந்து கொண்ட தந்தை, அது முதல் தம்பியை 'பாப்பான்' என்றும், அண்ணனை 'பறையர்' என்றும் முடிவு செய்தார்.'

'என் தம்பி பாப்பான்' என்ற இக்கதைகளின் இன்னொரு வடிவத்தை மைக்கிள் மோஃபாவும் பதிவு செய்துள்ளார்.  'மாரியம்மன் கோவிலில் இரண்டு சகோதரர்கள் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர்.  அவர்களுள் மூத்தவன், ஒரு முறை மௌன விரதம் இருந்து நோன்பு கடைபிடிக்க முடிவு செய்தான்.  எனவே கோவில் காரியங்களைத் தம்பி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.  அதாவது, 'நான் பேசமாட்டேன், என் தம்பி தான் காரியங்களையெல்லாம் கவனித்துக் கொள்வான்' என்று சொன்னான். (நான் பறையேன்; என் தம்பி பாப்பான்).  இதனை மக்கள் தப்பிதமாக, 'அண்ணன், பறையர் சாதி; தம்பி, பார்ப்பார சாதி' என்று விளங்கிக் கொண்டனர்.

இந்த அத்தனைக் கதைகளிலும் இடம் பெற்றுள்ள ஒரு பொதுவான அம்சம் - தலைகீழாக்கம்.

'ஒரு சொல் விளையாட்டு மூலமோ அல்லது தவறுதலாகப் புரிந்து கொள்வதனாலோ அல்லது ஒரு சூழ்ச்சியினாலோ அல்லது நகைச்சுவையாகவோ அல்லது ஏமாற்றும் நோக்கோடோ ஒரு தலைகீழாக்கம் நடைபெற்றுள்ளது.  ஆதி காலத்தில் நிலவிய நிலை இன்று இல்லை; தொடக்கத்தில் மேலே இருந்தது இன்று கீழிறக்கப்பட்டிருக்கிறது - தலைகீழாக மாறியிருக்கிறது.  இந்தத் தலைகீழ் மாற்றம் நேர்மையாக நடைபெறவில்லை; தங்களது முன்னோர்கள் அநியாயமாய் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்; கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது; பறையர் என்ற அடையாளம் எங்கள் மீது திணிக்கப்பட்டது'.

பறையர்கள் மத்தியில் வழங்கப்படக்கூடிய தோற்றப் புராணக் கதைகளைக் கொண்டு மேற்கூறிய முடிவுகளுக்கு வரமுடியும் என்று எழுதுகிற ரொபேர் தெலியேழ், டூமோவோ அல்லது மைக்கிள் மோஃபாவோ கருதுவது போல் தாழ்த்தப்பட்ட சாதியினர், தாங்கள், சமூகத்தின் கீழ் படிநிலையில் வைக்கப்பட்டது நியாயம் தான் என்று நினைக்கவில்லை.  அதை அநியாயமாகவே கருதினார்கள்.  சாதியப் படிநிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடம் குறித்து சமாதானமடையவோ அல்லது மௌனமாக இருக்கவோ இல்லை; தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு தான் அக்கதைகளில் வெளிப்படுகிறது.  இந்திய சமூக அமைப்பில் தங்களுக்கான நியாயம் வழங்கப்படவில்லை என்றே நினைக்கிறார்கள்.  இதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் பெருஞ்சமூகத்தோடு கருத்தொற்றுமை கொண்டு வாழ்கிறார்கள் என்ற வாதம் தவறானது என்று சொல்லி ரொபேர் தெலியேழ் தன்னைப் போலவே, தோற்றப் புராணக்கதைகளை ஆய்வு செய்த பலரையும் குறிப்பிட்டு தனது வாதத்திற்கு வலுசேர்க்கிறார்.

ராமநாதபுர மாவட்டத்திலுள்ள சூராணம் என்ற கிராமத்தில் ஆய்வு செய்த டேவிட் மோசே சேகரித்த தொன்மமொன்றையும் அதற்கு அவர் அளிக்கக்கூடிய விளக்கத்தையும் பதிவு செய்கிறார்.  மோசே சேகரித்த கதை இது தான்:

'தொடக்கத்தில் அண்ணனும் தம்பியுமாக இரண்டு பிராமண சகோதரர்கள் இருந்தனர்.  அண்ணன் பூஜை செய்வதற்காக தினமும் கோவிலுக்குச் செல்வான்.  பூஜையின் போது இந்திர லோகத்திலிருந்து காமதேனுப் பசு இறங்கி வருவது உண்டு.  பொங்கல் போன்ற சைவப் பொருட்களையெல்லாம் படையல் செய்து முடித்ததும் இரத்தப் பலிக்காக காமதேனுவிடமிருந்து ஒரு துளி இரத்தத்தை எடுத்துப் படைப்பது வழக்கம்.  அதன் பின் காமதேனு இந்திர லோகம் போய்விடும். 

தினசரி பூஜை முடிந்ததும் அண்ணன், பிரசாதப் பொங்கலை வீட்டிற்கு எடுத்து வந்து தனது மனைவிக்கும் தம்பிக்கும் கொடுப்பது வழக்கம்.  ஒரு நாள் ஊருக்குள் ஒரு வதந்தி பரவியது.  அண்ணனைப் பற்றிய அந்த வதந்தியை ஊரார் தம்பியிடமும் சொன்னார்கள். 'உன் அண்ணன் தினசரி பூஜையின் போது மாட்டுக்கறியைத் தின்கிறான்; ஆனால், உனக்குப் பிரசாதமாக பொங்கலை மட்டும் கொண்டு வந்து தருகிறான்'.

தம்பி உடனடியாக அண்ணியிடம் வந்தான்.  தான் கேள்விப்பட்ட அத்தனையையும் சொல்லி விட்டு, 'நாளைக்கு வரும் போது நமக்கும் கொஞ்சம் மாட்டுக்கறி கொண்டு வரச் சொல்லுங்கள்' என்று சொன்னான். அண்ணன் வந்தவுடன் அண்ணி ஆரம்பித்து விட்டாள்.  'நீ தினசரி மாட்டுக்கறியைத் தின்கிறாய்.  ஆனால், எனக்கு பிரசாதத்தை மட்டும் தான் கொண்டு வருகிறாய். நான் கர்ப்பமாக இருப்பது உனக்குத் தெரியாதா?  எனக்கும் ஆசையாக இருக்கிறது.  நாளை முதல் எனக்கும் மாட்டுக்கறி கொண்டு வர வேண்டும்.  இல்லையென்றால் நான் செத்துப் போவேன்.' அது நாள் வரையில் மாட்டுக்கறியே தின்றிராத அண்ணனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆசைப்பட்டதை வாங்கித் தர வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

அதனால், அவன் மறு நாள் பூஜையின் போது காமதேனுப் பசுவிலிருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்துக் கொண்டான். பசு இறந்து போனது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தம்பி, ஏதோ தெய்வ குத்தம் என்று பயந்து, மாட்டுக்கறியைத் தின்காமல் ஒளிந்து கொண்டான்.  ஊரில் பஞ்சாயத்தை கூட்டி விட்டார்கள். 

பஞ்சாயத்து கூடி விசாரித்தது.  இறுதியில் அண்ணனிடம்  இப்படிச் சொன்னார்கள்: 'பசுவை நீ தான் கொன்றாய் என்பதால், அதை எடுத்துச் சென்று தின்று முடிக்க வேண்டியதும் உன் பொறுப்பு தான்.  இனி நீ தீண்டப்படாதவன்! நீ இனி மாடு வெட்டிப்பயல்! இந்த ஊரை விட்டு ஓடிப் போய்விடு'.

வேறுவழியின்றி அண்ணன் ஊரை விட்டு வெளியேறும் போது, எதிரே வந்த ஒருவர், 'சாமி, எங்க போற மாதிரி?' என்று கேட்டார்.  'எனக்கு நேரம் சரியில்லை.  அதனால நான் எங்கேயோ போறேன்' என்றார் அண்ணன்.  'நீ போய்ட்டியானா கோவில் காரியங்களையெல்லாம் யார் பார்துக்கிறது?'

அதற்கு அண்ணன், 'கோவில் வேலை என் தம்பி பாப்பான்' என்று சொன்னான்.

இதனிடையே அண்ணன் தனது மனைவியோடு வேறொரு ஊருக்கு வந்து சேர்ந்தான்.  அந்த ஊர் மக்கள் அவர்களூக்கு ஒரு குடிசை தந்து அதில் தங்கிக்கொள்ளும்படியும், தினசரி வீடுகளுக்கு வந்து சோறு வாங்கிக்கொள்ளுமாறும் கூறினார்கள்.  அந்த ஊர் பஞ்சாயத்து கூடி, அண்ணனுக்கு 'ஊரழைக்கிற' வேலையைக் கொடுத்தார்கள். அந்த வேலைக்காக, அண்ணன் இறந்து போன கன்றின் தோலிலிருந்து பறை ஒன்றை செய்து கொண்டார்.  இதிலிருந்து அவருக்குப் 'பறையர்' என்ற பட்டப்பெயர் வந்து சேர்ந்தது.  ஆரம்பத்தில் யாருடைய மாடாவது கன்றாவது இறந்து போனால் அதை அண்ணனிடம் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  நாளடைவில் அவற்றை அண்ணனே வந்து எடுத்துப் போகட்டும் என்று சொன்னார்கள்.  இறந்த மாட்டை தொடுகிறார் என்பதால் அண்ணனைத் தொடுவதற்கு எல்லோரும் கூச்சப்பட்டார்கள்'.

இந்தப் புராணக்கதையை ஆய்வு செய்கிற டேவிட் மோசே இரண்டு விஷயங்களை கவனப்படுத்துகிறார்: ஒன்று - ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செல்வச் செழிப்போடு உயர்ந்த அந்தஸ்தோடு, சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தார்கள்; இரண்டு - மாட்டுக்கறியை சாப்பிடுவதும், இறந்த மாட்டைத் தொடுவதும் அசுத்தமான, அருவருப்பான காரியங்கள்.

இந்த இரண்டு செய்திகளையும் மேற்கூறிய தொன்மம் மிகத் தெளிவாக விளக்குகிறது.  அதன் கதையமைப்பு, செல்வாக்கோடு இருந்த பறையர் சமூகம் எவ்வாறு வீழ்ந்து போனது என்ற விஷயத்தையே மையப்படுத்தியது.  அந்தக் குறிப்பிட்ட தினம் அண்ணனுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிவலைக்குப் பின் எல்லாமே தலைகீழாய் மாறிப் போகிறது.  கோவிலில் பூஜை செய்யும் மிக 'உயர்ந்த' வேலையைச் செய்து கொண்டிருந்த அண்ணன் இறந்த மாட்டை அப்புறப்படுத்தும் 'கீழான' வேலைக்குத் தள்ளப்படுகிறார். 

பூஜை செய்வது உயர்ந்தது, துப்புறவுப்பணி தாழ்ந்தது என்ற மனோபாவம் தொன்மக்கதையில் வலிமையாகப் புனையப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.  டேவிட் மோசே கவனப்படுத்தும் இவ்விரு தகவல்களையும் குறித்துக் கொள்ளும் ரொபேர் தெலியேழ், 'தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வழங்கப்படும் தொன்மங்களின் அடிப்படையில் பார்த்தால், அவர்கள் சாதி என்ற அமைப்பிற்கு எதிரானவர்களாக நமக்குத் தெரியவில்லை.  ஆனால், அவ்வமைப்பினுள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிசைக்கிரமம் சரியானது இல்லை என்பதே அவார்களது வாதமாக இருக்கிறது' என்கிறார்.

லூயி டூமாவோ அல்லது மைக்கிள் மோஃபாவோ சொல்வது போல் உயர்சாதி (அதாவது பிராமணிய) சிந்தனையை அப்படியே உள்வாங்கிக் கொள்வதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த சிக்கலும் இருக்கவில்லை என்ற முடிவிற்கு ரொபேர் தெலியேழ், டேவிட் மோசேயோ வரவில்லை.  ஆனால், அதே நேரம் டூமோ மற்றும் மோஃபாவின் வாதத்தில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றும் அவர்கள் நினைக்கவில்லை. 

சாதி அமைப்பு என்பது உயர்சாதியினரின் உருவாக்கம் என்றால், அதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடம் 'மாற்று சமூக அமைப்பு', அதாவது சமத்துவத்தைப் பின்பற்றிய சமூக அமைப்பு காணப்படவில்லை என்பதே இவர்களின் முடிவாக உள்ளது.  ஆனால், அதே நேரம் தங்களுக்கு வழங்கப்பட்ட வரிசைக்கிரமம் குறித்த ஆட்சேபனைகள் அவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன.  தங்களுக்கு இழைக்கப்பட்டது துரோகம் என்பது தான் அவர்களது வாதமாக உள்ளது.

இன்றைக்கும் தாங்கள் இழி நிலையில் வைக்கப்பட்டிருப்பதற்கான காரணமாகச் சொல்லப்படும் தொழில் (துப்புறவுத்தொழில்), உணவு (மாட்டுக்கறி) என்று அனைத்துமே இழிவானது என்பதே தாழ்த்தப்பட்டவர்களின் யோசனையாகவும் உள்ளது. ஆனால், இத்தொழிலுக்காகத்தான் தங்களது சாதி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யாருமே ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.  எல்லோரும் அது தங்கள் மீது திணிக்கப்பட்டதாகத்தான் கருதுகிறார்கள்.

இதே போன்ற, பறையர் சாதியின் தோற்றத் தொன்மங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் மோஃபா, கதையில் வரும் அண்ணன் கதாபாத்திரத்தின் முட்டாள்தனம் தான் ஒட்டு மொத்த பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது என்கிறார்.  பூஜை செய்வதை விட்டு விட்டு துப்புறவு செய்யப் போனது, 'என் தம்பி பாப்பான்' என்று தான் சொன்னதை பிறர் தப்பிதமாகப் புரிந்து கொண்ட போது எதிர்த்து எதுவும் பேசாதது, மனைவி கேட்டாள் என்பதற்காக காமதேனு பசுவின் சதையை வெட்டியது என்று பறையர் சாதி முன்னோர்களின் முட்டாள்தனமும், ஏமாளித்தனமுமே அவர்கள் சாதிப் படி நிலையில் தாழ்ந்து போனதற்கான காரணங்கள் என்று எழுதுகிறார்.  ஆனால், ரொபேர் தெலியேழின் கள ஆய்வின் போது இத்தொன்மங்களைக் கூறிய யாரும் 'அண்ணன்' கதாபாத்திரத்தை முட்டாளாகக் கருதவில்லை; மாறாக, வெகுளியாகவும், நேர்மையானவராகவும், கீழ்படிதல் உடையவராகவுமே கதை சொன்னார்கள்.  தன்னிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டதைக் குறிப்பிடும் ரொபேர் தெலியேழ், அடுத்து எழுதுவது தான் முக்கியமானது.

'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெகுளி, நேர்மை, ஒழுக்கம் என்று தோன்றுவது அனைத்தும் உயர் சாதியினருக்கு முட்டாள்தனமாகவும், ஏமாளித்தனமாகவும் தான் தோன்றுகிறது!'

ரொபேர் தெலியேழ் குறிப்பிடும் இந்த இடம் முக்கியமானது.  ஊர் - சேரி, உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி, சுத்தம் - அசுத்தம், நால்வகை வர்ணம் - பஞ்சமர், மக்கள் - தீண்டத்தகாதவர் என்று சொல்லப்படும் அனைத்திற்கும் பின்னால் அறிவு சார்ந்தும், ஒழுக்கம் சார்ந்தும் எதிரும் புதிருமான கருத்தியல் தளங்கள் செயல்படுகின்றன.  அறிவு என்றால், ஒரு விஷயத்தைப் பார்க்கும் பார்வை, யோசிக்கிற முறை, புரிந்து கொள்ளும் முறை என்று அனைத்தையும் இணைத்தே சொல்கிறோம்.  அதே போல் ஒழுக்கம் சார்ந்த விதிகளும் இவ்விரு பிரிவினருக்கும் வேறு வேறாகவே அமைந்துள்ளன; அதனடிப்படையிலேயே அவர்களது அனைத்து சமூகப் பொருளாதார நடவடிக்கைகளும் கட்டமைக்கபடுகின்றன.

மானிடவியலின் பின்னணியில் நடத்தப்பட்ட சாதி குறித்த இவ்விவாதத்தில் இன்னமும் பதிலளிக்கப்படாத அல்லது விவாதித்து முற்றுப் பெறாத பகுதிகள் உள்ளன.  முதலாவது, தாழ்த்தப்பட்ட சமூகங்களின் கதையாடல்கள் சாதி அமைப்பையும் அதன் 'மேல் - கீழ்' என்ற விளக்கங்களையும் கேள்வி எழுப்பாமல் ஒத்துக் கொள்வது ஏன்?  இரண்டாவது, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் மாற்று சமூக அமைப்பு குறித்த கதையாடல்கள் எவையும் இல்லையா?

(தொடரும்)

No comments:

Featured post

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...