Friday, 7 November 2014

எழுத்து அரசியல் 4 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் - பாகம் 42. யார் எழுதுவது தலித் இலக்கியம்?
தமிழ்ச் சூழலில்தலித்என்ற சொல் விதவிதமான உணர்வுகளையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தது. அக்கேள்விகளுக்கான பதில்களில் கேள்வி கேட்டவர்கள் என்றைக்குமே அமைதியுற்றிருக்காத வேடிக்கையும் இங்கு நிகழ்ந்தது. அது என்ன அப்படியொரு சொல்? எந்த மொழியில் அப்படி உள்ளது என்று தொடங்கி ஒரு சாக்கு கேள்விகளும் பலமூடைப் பதில்களும் இங்கு உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்புவரையில் தலித் என்ற சொல்லை தமிழகத்தில் பயன்படுத்துகிறவர்கள் கிறிஸ்தவ ஒடுக்கப்பட்ட சாதிகளாகவே இருந்தனர் என்பது நமக்குத் தெரியும். அப்பொழுதெல்லாம்தலித்துகள்என்ற அடையாளம் கிறிஸ்தவ பறையர்களையும், பள்ளர்களையும், அருந்ததியர்களையும் குறிப்பதாகவே பெரும்பாலும் நம்பப்பட்டது. தலித் என்ற சொல் தமிழிலக்கிய வகைமையாக மாறியபோது தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் சுட்டுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே பின்னை நவீனத்துவ சிந்தனையின் தாக்கத்தால் அதிகாரமிழந்த விளிம்பு நிலையினர் அல்லது அடித்தட்டினரை கவனப்படுத்திய சில ஆர்வலர்கள்தலித்என்று சொல்வதும் விளிம்பு நிலை மக்கள் என்று சொல்வதும் ஏறக்குறைய ஒன்றே என்பது போல் பேசத் தொடங்கினர். இதன் விளைவாக மனநிலை பிறழ்ந்தவர்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், சேரி வாழ் மக்கள், சாதியின் பெயரால் தீண்டப்படாதோர் போன்ற அனைவரும் தலித்துகளே என்ற பட்டியல் தரப்பட்டது.
தலித் இலக்கியம்குறித்து முதலும் பெரிதுமான கேள்விஅதை யார் எழுதலாம்?’ என்பதாகவே அமைந்திருந்தது. இக்கேள்வியின் மாற்று வடிவங்களாக, ‘யாரெல்லாம் தலித்துகள்? தலித் இலக்கியம் என்பது தலித்துகளைப் பற்றிய எழுத்தா அல்லது தலித்துகள் எழுதும் எழுத்தா? தலித் அல்லாதவரால் ஏன்தலித் இலக்கியம்செய்ய முடியாது?’ போன்ற தொடர் வினாக்கள் அமைந்திருந்தன. இந்தக் கேள்விகள் அனைத்தும் சாதுவானவை போலத் தோன்றினாலும் அவற்றின் பின்னால் ஒளிந்து கிடக்கும் யோசனைகள் ஆபத்தானவை.
யார், யாரையெல்லாம் தலித்துகள் என்று சொல்லலாம் என்ற கேள்வி, அவ்வார்த்தைக்கு வழங்கப்பட்டிருந்தகோட்பாட்டுக் கலைச் சொல்என்ற தகுதியை பிடுங்கிவிட்டு, பட்டியலினத்தவன் அல்லது தாழ்த்தப்பட்டவன் அல்லது அரிஜன் என்பது போல இதுவுமொரு வகைப்பாட்டுப் பெயர்என்று சுருக்கியதை நாம் கவனிக்க முடியும். அதாவது, ‘தலித்என்ற பட்டியலின் கீழ் இடம்பெறக்கூடிய பிரிவினர் யார், யார் என்று கேட்பதன் மூலம் பட்டியலினத்தவன் என்பதை விட அல்லது ஆதிதிராவிடர் என்பதைவிட இது எந்த வகையிலும் உயர்வானதல்ல என்பது வலியுறுத்தப்பட்டது. இப்படியான பாதகங்களைக் கொண்டிருந்த இக்கேள்வியைதலித் என்பது அரசியல் அடையாளம்; சாதி அடையாளமல்லஎன்று சொல்லி முளையிலேயே கிள்ளியெறியும் தெளிவு அன்றைக்கு யாருக்கும் இருக்கவில்லை. எனவேதான் பலரும் பல்வேறு பட்டியல்களை உருவாக்கத் தொடங்கினர்.
தீண்டத்தகாதவர்களே தலித்துக்கள்; அவர்கள் எழுதுவதே தலித் இலக்கியம்என்று சொல்லப்பட்டபோது தமிழகத்து நடுநிலைமையானஎழுத்தாளர்கள் அனைவருமே பதறிப்போனார்கள். தங்களால் ஏன் ஒரு தாழ்த்தப்பட்டவனின் மனவுணர்வுகளைப் புரிந்துகொண்டு அதனை இலக்கியமாகப் பதிவு செய்ய முடியாது என்ற கேள்வியை அவர்கள் ஒவ்வொரு தருணத்திலும் தார்மீக உரிமையுடன் கேட்டபடியிருந்தார்கள். ‘ஒரு தலித்தின் வலியை தலித்தே எழுத முடியும்என்று சொல்லப்பட்ட பதிலில் அவர்கள் ஒருபோதும் திருப்தியுற்றிருக்கவில்லை. படைப்பூக்கத்தை இப்படியெல்லாம் தடைசெய்ய முடியுமா? படைப்பாளியை யாராவது கட்டுப்படுத்திவிட முடியுமா? என்பவை போன்ற வினாக்களை அவர்கள் தொடர்ந்து தொடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.
இந்த வாதப் பிரதிவாதங்களிலிருந்து இரண்டு விஷயங்களை மட்டும் நான் கிரகித்துக் கொள்கிறேன். ‘தலித்துகளைப் பற்றி தலித்துகள் எழுதுவதே தலித் இலக்கியம்என்று பிடிவாதமாய் வரையரை செய்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோதலித்என்பதும்பட்டியலினசாதிகள்என்பதும் ஒன்றேதான் என்பதை நிறுவினார்கள். இரண்டாவதாக, தலித் அல்லாதவர்களால்தலித் இலக்கியம்செய்யமுடியாதா என்று கேட்டு படைப்பு, படைப்பு மனம் போன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்தி நடத்தப்பட்ட விவாதம் உண்மையில் எழுதுவதைப் பற்றியானது அல்ல, மாறாக எழுதிய பின் கிடைக்கக்கூடிய பலாபலன்களைப் பற்றியது.
கும்பகோணத்துப் பார்ப்பனர்களைப் பற்றியோ, திருநெல்வேலி சைவப் பிள்ளைகளைப் பற்றியோ, கரிசல் காட்டு நாயக்கர்களைப் பற்றியோ எங்களால் எழுத முடியாதா என்று எப்பொழுதுமே கேட்கப்பட்டிருக்காத தமிழ்ச் சூழலில்அப்படியானால் தலித்துகளைப் பற்றி நாங்களெல்லாம் எழுத முடியாதா?’ என்று அங்கலாய்க்கப்பட்டது ஏன் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். பிற சமூகத்தினரைக் காட்டிலும் பட்டியலின சாதிகள் சகல சமூகப் பண்பாட்டுத் தளங்களிலும் பின்தங்கியவர்கள் என்பது பொதுவான இந்திய அபிப்பிராயம். நாகரீகத்திலும் சரி, கல்வியிலும் சரி, அறக்கருத்துகளிலும் சரி, அறிவிலும் சரி, பட்டியலினசாதிகள் ஆரம்பப்படிநிலைகளில் காணப்படுபவர்கள். இவர்களை ஒழுங்குபடுத்தி, போதனைகள் செய்து, மேல்நிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு ஒவ்வொரு பிறசாதி நியாயவானுக்கும் உண்டு. இதையே வேறுமாதிரி சொல்வதானால், பட்டியலினசாதிகள் மீது கருணை காட்டுகிற பிற சாதியினர் நியாயவான்களாகக் கருதப்படுகிறார்கள்; சாதிய அடையாளத்தைப் புறக்கணித்தவர்களாக போற்றப்படுகிறார்கள்; நவீன சிந்தனையுடைய புரட்சியாளராக அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
இந்திய சாதிய சமூகங்கள் கண்டுபிடித்து வைத்த மிக எளிய வகை சூத்திரம் இது. சாதிய எதிர்ப்பாளன் அல்லது நவீனத்துவன் அல்லது நடுநிலைமையாளன் அல்லது புரட்சியாளன் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு மிக எளிமையான வழிமுறை, பட்டியலினசாதிகளின் மேல் கரிசனம் காட்டுவது. இப்பட்டியலின் கடைசி வரிசை மக்களை நீங்கள் அணுக அணுக உங்களுக்கு வழங்கப்படும் பட்டத்தின் மெருகும் கூடிக்கொண்டேயிருக்கிறது. ஏறக்குறைய தலித்துகளைப் பற்றி இலக்கியம் செய்வது என்பதும் கூட மேற்படி கருணைகளின் வரிசையிலேயே வந்து சேர்கிறது. படைப்பு மனம், படைப்பு சுதந்திரம், தலித்தாக உணர்தல் போன்ற வியாக்கியானங்களெல்லாம் ஜோடனை தானேயொழிய, உண்மையானது நாம் கூறியது போன்ற பலாபலன்களை எதிர்பார்த்தலேயாகும்.
3. தமிழ்தலித்படைப்பாளிகள் :
தமிழில் தலித் இலக்கிய வகைமைகளின் அறிமுகமும் தலித்இலக்கிய உருவாக்கமும் சற்று வினோதமான முறையிலேயே அமைந்திருந்தது. மராத்திய மொழியிலேயோ அல்லது குஜராத்தியிலேயோ நிகழ்ந்த தலித்இலக்கிய செயற்பாடுகளுக்கும் தமிழில் நடைபெற்ற தலித் இலக்கிய செயற்பாடுகளுக்கும் பண்பாட்டுச் சூழல் சார்ந்த அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. பிற இந்திய மொழிகள் எவற்றிலும் காணப்படாத வகையில் தமிழில் தலித்துகளைப் பற்றிய இலக்கியங்களும் தலித்துகள் எழுதிய இலக்கியங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருந்தன.
வரலாற்றின் துல்லியமற்ற காலங்களில் செயப்பட்டதாகக் கருதப்படும் பழந்தமிழ் இலக்கியங்களில் பலவும் (குறிப்பாக நீதி நூற்கள்) இன்றைக்கு தலித்துகள் அல்லது பட்டியலினத்தோர் என்று சொல்லப்படும் பூர்வகுடிகளாலேயே செயப்பட்டன என்பது மரபு. அதேபோல் பிற்காலங்களில் உருவான பள்ளுஇலக்கியம், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய மரபுகளில் பலவும் தலித்துகளை பாடுபொருளாகக் கொண்டவை. அதே போல், சாதிய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் சித்தர் பாடல்கள் தமிழுக்கேயுரித்தான தலித் இலக்கிய முன்னோடி எழுத்துகளாக உள்ளன. பிற மொழிகளின் இலக்கிய வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக் காணப்பட்ட தமிழிலக்கிய வரலாற்றில்தலித்என்ற முத்திரை வேண்டுமனால் புதியதே தவிர தலித்துகள் இலக்கியம் படைப்பதும், தலித் வாழ்க்கையை சித்தரிப்பதும் நம்மில் பெரும்பாலோர் நம்பிக் கொண்டிருப்பது போல் புதியன அல்ல. ஏற்கனவே இவையெல்லாம் (எண்ணிக்கையில் குறைவாக) நடைபெற்று வந்தன.
* * * * *
தலித்இலக்கியம்என்ற வகைமையை இரண்டு தன்மைகளுடையனவாகச் சொல்ல முடியும் - படைப்பிலக்கியமும் விமர்சன இலக்கியமும். அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவையொட்டிய காலகட்டங்களில் வீறுகொண்டெழுந்த தமிழ் தலித் இலக்கிய வகைமை படைப்பு மற்றும் விமர்சனம் என்ற இரு தளங்களிலும் நடைபெற்றன என்றாலும், இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, படைப்பு நோயுற்ற ஒரு குழந்தை என்பது புரிய வரும். அக்காலகட்டங்களில் தலித் இலக்கியம் படைக்க வந்தவர்களுக்கும் தலித் விமர்சனம் எழுத வந்தவர்களுக்கும் வெளிப்படையான மாறுபாடு ஒன்று இருந்தது. தலித் படைப்பாளிகள் இரு வகையினராக இருந்தனர். முதல் வகையினர், எழுத்துப் பரிச்சயமும் (பிற இந்திய மொழிகளில் முதல் வரிசை தலித் படைப்பாளிகளுள் பலர் குறைந்த எழுத்து பரிச்சயமும் ஒரு சிலர் எழுத்துப் பரிச்சயமே இல்லாதவர்களாக இருந்ததையும் கவனிக்க வேண்டும்) இலக்கியப் பழக்கமும் (இன்னும் தெளிவாகச் சொல்வதானால், சிற்றிதழ் சார்ந்த இலக்கியப் பழக்கமும்) உடையவர்களாக இருந்தனர். வெகுசன வியாபார இலக்கியங்களுக்கு மாற்றாக தமிழில் சொல்லப்பட்டு வரும் சிற்றிதழ் இலக்கியங்களையும், மார்க்சிய  இலக்கியங்களையும் இவர்கள் ஆழக்கற்றிருந்தனர். பெரியாரின் அல்லது மார்க்சின் சிந்தனைகளால் நிரப்பப்பட்டிருந்தனர். இரண்டாவது வகை தலித் படைப்பாளிகள் வ்வித இலக்கியப் பரிச்சயமுமின்றி இயல்பாக எழுத வந்தவர்கள். ஆனால், இவர்கள் சொற்பமான எண்ணிக்கையுடையவர்கள்.
தலித் இலக்கிய விமர்சகர்களாக முன்வந்தவர்கள் அனைவருமே சிற்றிதழ் இலக்கியங்களிலும் விமர்சனக் கோட்பாடுகளிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் உலகளவில் விவாதிக்கப்பட்ட அனைத்து கோட்பாடுகளிலும் இஸங்களிலும் பரிச்சயம் கொண்டிருந்தனர். தலித் படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்குமான வ்வித்தியாசம் அவர்களின் எழுத்துகளிலும் வெளிப்பட்டது. படைப்பாளிகளின் எழுத்துகள் எளிமையான யதார்த்த வகையைச் சார்ந்தும் பேச்சுமொழி வழக்கு மேலோங்கியும் இருந்த வேளையில் விமர்சன எழுத்துகள் சிக்கலான இலக்கியங்களையும் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன.
(தொடரும்)

No comments:

Featured post

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...