Saturday, 22 November 2014

போலச்செய்தலும் திரும்பச் செய்தலும் – 4 பார்ப்பன மோகம்பிராமணமயமாதல் / சமஸ்கிருதவயமாதல்:

‘சாதியமைப்பு குறித்த தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மனோபாவம்’ என்ற விவாதம் எப்பொழுதும் எல்லா தரப்பினருக்கும் ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது.  தாழ்த்தப்பட்டவர்களின் உளவியல் குறித்து நிலவக்கூடிய பல்வேறு முன்முடிவுகளில், தாம் நம்பக்கூடியவற்றை பரீட்சித்துப் பார்க்ககூடிய களனாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையில் எல்லோருக்குள்ளுமே ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.  ஆனால், லூயி டூமோவிலிருந்து தொடங்கப்பட்ட ‘போலச்செய்கிறார்கள்’ என்ற விவாதம், மிஷல் மோஃபா, ரொபேர் தாலியேழ், டேவிட் மோசே என்று தொடர்ந்து வந்ததில் தீர்க்கமான பதில் என்று எதையும் சொல்லமுடிவதில்லை. 

வழக்கமாய் சமூக அறிவியல்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படுவதில்லை என்பது தான் உண்மை.   அது, சமூகச் செயல்பாடுகளை தனக்கு சாத்தியப்பட்ட அத்தனை வழித்தடங்களிலும் விவாதிக்கவே விரும்புகிறது.  அவ்வாறு விவாதிக்கையில் கண்டடைகிற கருத்தாக்க ஒழுங்கமைப்புகளைப் பற்றிய புதிய பார்வைகளே நம்மை அடுத்தத் தளத்திற்கு நகர்த்துவதாய் இருக்கின்றன.  லூயி டூமோ சொல்வதைப் போலவோ அல்லது மோஃபா அடையாளப்படுத்துவது போலவோ, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் உயர்சாதியினரின் கருத்தோட்டங்களையே  பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று எவ்வாறு தீர்மானமாக சொல்ல முடிவதில்லையோ அதே போல், அவர்கள் தங்களைத் தளையிட்டிருக்கும் சாதியமைப்பை முற்றிலும் மறுதலிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறுதியிட்டு சொல்வதிற்கில்லை என்பது தான் ரொபேர் தாலியேழின் வாதமாக இருக்கிறது.

இந்த விவாதம் மிகவும் ஆரோக்கியமாக நடைபெறுகிறது என்பதற்கான சான்றுகள் இருந்தன என்றாலும் ஒரு சார்புடையதாகவும் இருப்பதான குற்றச்சாட்டுகள் இன்னொரு திசையிலிருந்து கேட்டது!

இந்திய சாதியமைப்பு குறித்த நூலை, லூயி டுமோ 1966ல் ப்ரெஞ்ச் மொழியில் எழுதி வெளியிடுவதற்கு முன்பாகவே இதே விவாதத்தை இந்திய சமூகவியலாளரான எம். என். ஸ்ரீனிவாஸ் தனது நூலில் தொடங்கிவைத்திருந்தார்.  1952ம் வருடம் வெளியிட்டReligion and Society among of the Coorgs of South India’ என்ற நூலில் எம். என். ஸ்ரீனிவாஸ் இதே விஷயத்தை, அதாவது உயர் சாதியினரின் பழக்க வழக்கங்களை, மதிப்பீடுகளை, சடங்குகளை போலச்செய்யும் தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினமக்கள் குறித்து, விரிவாக விவாதித்திருந்தார். குடகு நாட்டில் வாழ்ந்து வரும் கொடவா என்ற பழங்குடியினம் பற்றிய இனவரைவியல் ஆய்வில், அம்மக்கள் தங்களது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக பிராமணர்களைப் போலச் செய்யத் தொடங்குகிறார்கள்.  அதாவது, தங்களது உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டு சைவப் பட்சிணியாக தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.  கர்மம், தர்மம், பாவம், மாயை, சம்சாரம், மோட்சம் போன்ற சமஸ்கிருத சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அளவுக்கு தங்களை உருமாற்றிக்கொள்கிறார்கள் என்று சொல்லும் ஸ்ரீனிவாஸ், இது கொடவா மக்களிடம் மட்டுமல்லாது பிராமணரல்லாத அனைத்து பிரிவினரிடமும் காணப்படுவதாக விளக்கி, இத்தகைய சமூக நடத்தையை ‘பிராமணமயமாதல்’ என்ற பெயரில் அழைத்தார்.

 M. N. Srinivas
சாதியமைப்பு என்பது நெகிழ்வுத்தன்மையற்ற, எந்தவகையான மாற்றங்களையும் அனுமதிக்காத கட்டமைப்பு என்று பலரும் நம்பியிருந்த வேளையில், அதனுள் வரையறுக்கப்பட்ட, அதாவது பிராமணரல்லாத சாதித் தொகுதியினுள், படி நிலை நகர்வுகள் சாத்தியம் என்பதை அறிவுறுத்திய ஸ்ரீனிவாஸ், தாழ்ந்த சாதிகள் பிராமணர்களைத் தான் போலி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, அவை தமக்கு மேலிருக்கக்கூடிய எந்தவொரு சாதியையும் கூட பிரதி செய்து, சாதியடுக்கில் தங்களது நிலையை உயர்த்திக்கொள்ளும் ஆவலை வெளிப்படுத்த முடியும் என்ற யோசனையில், ‘பிராமணமயமாதல்’ என்ற பெயரை இன்னும் பொதுமைப்படுத்தி, அத்தகைய போலச் செய்யும் நிகழ்விற்கு ‘சமஸ்கிருதவயமாதல்’ என்று பெயரிட்டு அழைத்தார்.

சமஸ்கிருதவயமாதல் என்ற இக்கருத்தாக்கம் ஆய்வுத்தளத்தில் மட்டுமல்லாது, சாதி குறித்த பொது உரையாடல்களிலும் ஒரு அங்கமாக மாறியது.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமஸ்கிருதவயமாதலுக்கான உதாரணங்கள் கண்டறியப்பட்டு, சாதி சார்ந்த எந்தவொரு நிகழ்வையும் விளக்குவதற்கான ‘சர்வகுழப்பநிவாரணி’ யைப் போலவே கூட இது சமூக அறிவியல்களில் பயன்படுத்தப்பட்டது.  சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்துதல், சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டுதல், அசைவத்தை மறுத்தல், சடங்கு சம்பிரதாயங்களில் அக்கறை காட்டுதல், புராணக்கதைகளில் ஈடுபாடு கொள்ளல், வேத நூற்களை வாசித்தல் என்று பிராமணரல்லாத சாதிகளைச் சார்ந்த ஒரு நபர் தன் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறு சிறு நகர்வும் கூட, சமஸ்கிருதவயமாதல் என்பதாக அடையாளப்படுத்தப்பட்டது.  குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகள் தத்தம் சாதிய அடையாளங்களை  மீள்கட்டமைப்பு செய்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் (தஷ்ணமாற நாடார் மகாஜனம்..., வன்னியகுல ஷத்திரிய..., பூவைசிய தேவேந்திரகுல...) சமஸ்கிருதவயமாதலின் வெவ்வேறு வடிவங்களே என்று தீர்மானமாகச் சொல்லப்பட்டன.

சமஸ்கிருதவயமாதல் என்ற கருத்தாக்கம் எவ்வளவு உற்சாகத்துடன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதோ அதே அளவுக்கான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.  மிகவும் குறிப்பாக, யோகேந்திர சிங் போன்ற சமூகவியலாளர்கள், ஸ்ரீனிவாசின் சமஸ்கிருதவயமாதல் என்ற கருத்தாக்கம் ஒட்டுமொத்த இந்தியச் சமூக வெளியையும் சமஸ்கிருதம் என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் வேதப் பண்பாட்டு வெளியாக சுருக்கும் வேலையைச் செய்வதோடு, பிற செழுமையான பண்பாட்டுத் தளங்களின் இருத்தலை மூடி மறைக்கின்றன.  சமஸ்கிருதம் முன்மொழியும் வேத பண்பாட்டை விடவும், சமணம், பௌத்தம் போன்ற பிற பண்பாட்டின் தாக்கங்கள் தாம் சாதிய சமூகங்களின் மேல் நோக்கிய நகர்வுகளுக்கு ஆதாரமாக அமைகின்றன என்று வாதிட்டனர்.

இதையெல்லாம் கடந்து, சாதிய சமூகங்களின் சமூகப் பண்பாட்டு அரசியல் பொருளாதார அதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் அனைத்தையும் சமஸ்கிருதவயமாதல் / பிராமணமயமாதல் (இவ்விரண்டிற்கும் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் பெருத்த வேறுபாடுகள் எவையும் இல்லை) என்று முத்திரையிடுவதன் மூலம், ஸ்ரீனிவாஸ் மறைமுகமாக, எல்லா இந்திய சமூகங்களுக்கும் ‘பிராமண சாதியே’ முன்மாதிரியாக விளங்குகிறது என்பதையும், எல்லா சாதிகளின் ஆழ்மனதிலும் ‘பிராமணராக’ மாறுவதற்கான வேட்கை ஒளிந்திருக்கிறது என்பதையும் (ஃப்ராய்டு தெரிவித்த phallic desire மாதிரி, பிராமண ஆண்குறி இல்லாத குறையோடலையும் பிற சாதிகள்), எந்தவொரு மேல் நோக்கிய முன்னெடுப்பும் / பரிணாம வளர்ச்சியும் பிராமணப் போலியாகவே அமையும் என்பதையும் சொல்லிச் சென்றுள்ளார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

‘சமஸ்கிருதம்’  மிக முக்கியமான அரசியல் முனையமாக மாற்றப்பட்டிருந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், ‘சமஸ்கிருதவயமாதல்’ எவ்வளவு தூரம் வசையாக மாற்றப்பட்டிருந்தது என்பதை அறியமுடிந்தால் ‘சமஸ்கிருதவயமாதல்’ என்ற கருத்தாக்கத்தின் முழுப்பரிமாணம் நமக்கு விளங்கும்.

தமிழகப் பட்டியலின சாதிகளில்பள்ளர்என்று அடையாளப்படுத்தப்படும் சாதியின் சமூகப்பண்பாட்டு அரசியல் நகர்வுகள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு.  விவசாயப் பாரம்பரியம் கொண்டதாகவும், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடர்த்தியாகவும், பிற பகுதிகளில் விரவியும் காணப்படும் இச்சமூகம்தாழ்த்தப்பட்ட சாதிகளில்தனித்துவமான அரசியல் கோரிக்கைகளையும், செயல்பாட்டினையும் கொண்டதாக விளங்குகிறது.  தனக்கு வழங்கப்பட்டுள்ளபள்ளர்என்ற அடையாளத்தை மறுத்து, ‘தேவேந்திர குல வேளாளர்என்ற பெயரைத் தொன்மங்களின் மூலமாகவும், ‘மள்ளர்என்ற பெயரை பழந்தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் கட்டமைக்கிற இம்மக்கள், 1990களுக்குப்பின் தமிழகத்தில் பெரும் வீச்சுடன் செயல்படத்தொடங்கியதலித்என்ற அடையாள உருவாக்கத்தை மறுக்கிற குரலையும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றனர். 

தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத, அரிசன, பட்டியலின, தலித் என்ற எல்லா வகையான பிரக்ஞைகளும் ஒரே மாதிரியாய்படிநிலையிறக்கம்செய்யக்கூடியவை தான் என்றும், ‘ஒடுக்கப்பட்டவர்கள்என்ற உணர்வு நிலையில் ஒன்றிணைவதே கூட உளவியல் பாதகங்களை உருவாக்கக்கூடியவை தானென்றும், தீண்டாமையிலிருந்து விடுபடுவது என்பது முதலில்தீண்டத்தகாதவர்என்ற குழுவிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதன் மூலமே சாத்தியம் என்றும் வாதாடுகிற இச்சமூகத்தின் மீது ‘சமஸ்கிருதவயமாதல்’ என்ற கருத்தாக்கம் குற்றச்சாட்டாகவே வைக்கப்படுகிறது. 

இச்சமூக மக்கள் முன்மொழியக்கூடியதேவேந்திர குல வேளாளர்என்ற அடையாளம் மிகத்தெளிவாக இந்து சமயக்கடவுளான இந்திரனோடு தொடர்புகொண்டுள்ளதால், தங்களை சாதிப்படி நிலையில் உயர்த்திக்கொள்வதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படவேண்டும்; சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்டுள்ள புராணியத் தொகுப்புகளோடு தங்களை இனம்காண்பதென்பது நால்வகை வர்ணபாகுபாட்டிற்குள் தங்களுக்கான இடத்தை கோரிப்பெறும் செயல்தானே தவிர சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான நிலைப்பாடு அல்ல; தங்களை உயர்ந்த சாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பிற சமூகங்களைப் போலவே தங்களுக்கும் புராணியத்தொடர்புகளை கற்பித்துக்கொள்வதன் மூலம் தங்களது தரவரிசையை உயர்த்திக் கொள்ள முடியுமென்ற வேட்கையே இதில் வெளிப்படுவதாய் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

லூயி டூமோ தொடங்கி மிஷல் மோஃபா வரையில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைப்பற்றி சொல்லப்பட்ட அதே குற்றச்சாட்டு தான் இது என்பதை நாம் எளிதாய் விளங்கிக் கொள்ள முடியும்.  பறையர் சமூகத்தினரிடம் காணப்படும் உட்சாதிப் பிரிவினைகளையும், சாதித் தோற்றத் தொன்மங்களையும், சமய வழிபாட்டு நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு மோஃபா முன்வைக்கும்போலச்செய்தல்மற்றும்திரும்பச்செய்தல்என்ற கருத்தாக்கம் தான் இன்று பள்ளர் சமூக மக்கள் குறித்தும் ‘சமஸ்கிருதவயமாதல்’ என்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதன் மூலம் பள்ளர்கள் சாதிப்படிநிலையை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும், அதன் நியாயப்பாட்டை அங்கீகரிக்கிறார்கள் என்றும், தங்களுக்கு வழங்கப்பட்ட தரவரிசையில் தான் அவர்களுக்கு திருப்தியில்லை என்றும் வலுவான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.  சாதிப்படி நிலையில் பள்ளர்கள் கோரும் அந்தஸ்து கூட வெளிப்படையாகவே தெரிகிறது.  பழந்தமிழ் இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு தங்களது அடையாளத்தைமள்ளர்என்று வடிவமைக்க விரும்பும் இச்சமூக மக்கள், பூர்வீகத் தமிழரசர்கள் தங்களது சமூகத்தைச் சார்ந்தவர்களே என்று கட்டமைக்கிற வரலாறு, தங்களைசத்திரியர்என்ற வர்ணத்திற்குள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  தங்களது தோற்றத் தொன்மங்களின் மூலம் சாதியப்படிநிலையில் அந்தண அந்தஸ்தை பறையர் சமூகம் கோருவதைப் போலவேமள்ளர்என்ற வரலாற்றுக்கட்டமைப்பு அரசர் அந்தஸ்தை நிர்பந்திக்கிறது என்பது தெளிவாகிறது.

பள்ளர் சமூகத்தினரின் இந்தப்போலச் செய்தல்சாதியமைப்பு குறித்த அவர்களது சம்மதத்தையும் சமரசத்தையும் தான் வெளிப்படுத்துகிறதா? பிறப்பினடிப்படையில் தீரமானிக்கப்படும் சாதிப்பாகுபாட்டை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்களா?  இவர்களுக்குள்ளும் வர்ணாசிரம் கோட்பாடே ஆழ வேரூன்றியுள்ளதா? அல்லது, அச்சமூகத்தின் இத்தகைய நகர்வுகளை வேறுமாதிரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமா?  அவர்களது நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்து அவர்களை இயக்கிக்கொண்டிருப்பது சாதிய மனோபாவம் தான் என்ற முடிவிற்கு வந்தால், லூயி டூமோவும் மோஃபா மாதிரியான ஆய்வாளர்களும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் குறித்து கண்டறிந்த செய்திகள் முழுக்க முழுக்க சரியானவை என்ற முடிவிற்கு நாம் வரவேண்டியிருக்கும். எம். என். ஸ்ரீனிவாஸ் சொல்வது போல் பிராமணரல்லாத பிறர் அனைவரும் தம் சாதிய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உயர்சாதி வேசம் போடுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும்.

ரொபேர் தாலியேழ் மற்றும் டேவிட் மோசே போன்ற மானிடவியலாளர்கள் முன்வைக்கும், ‘சாதியமைப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உடன்பாடில்லை; சாதி, பிறப்பால் தீர்மானிக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகவோ அவர்கள் நம்பவில்லைஎன்ற வாதம் வலுவிழந்து போகும். 

சுருக்கமாகச் சொன்னால், தாழ்த்தப்பட்ட மக்கள், சாதியமைப்பை நம்பவில்லை என்று நிரூபிப்பதற்கு நம்மிடம் சான்றுகள் ஏதாவது உண்டா? அல்லது தாழ்த்தப்பட்ட சமூகங்களின்போலச்செய்தலைவேறு மாதிரியாய் விளங்கிக்கொள்வதற்கான ஆய்வு உபகரணங்கள் நம்மிடம் உண்டா?

(தொடரும்)

8 comments:

Sridhar Kannan said...

I want to convey my displeasure in writing such a complex so called 'intellectual' outpouring in the name of research. I do not understand why you scholars are projecting the image of India as a land of evils such as caste. I meet good number of European friends everyday in my profession and they all envy about our tradition and culture. But to know scholars who have been constantly projecting our country in a inferior manner would for certain hedge back the momentum we gain after rule of a monarch. I personally feel that what India requires is not social science but technology and development. அதற்கு இந்த மாதிரியான abstract logics will not definitely help. What you are writing seems to be story to me, not reality.

Anonymous said...

there was no culture, tradition in india. there was no civilization also. after moguls and british rule only, indian people know what is culture and tradition. in no other part of the world, there was division among people. all were equal. if this logic is accepted, then there will not be any division among readers. krishnamoorthy, bangalore.

தமிழ்செல்வன் said...

பேராசிரியர் டி. தருமராஜின் இந்த கட்டுரை தொடருக்கு சம்பந்தமில்லாத பதிவுகள் வருவதைப் பார்த்தால், குலைப்பதற்கோ நிறுத்துவதற்கோ யாரோ முயற்சி செய்வது போல் இருக்கிறது. ஏதோ இப்பொழுது தான் தமிழில் இது போன்ற செய்திகள் எழுதப்படுகின்றன. அதையும் பாதியிலேயே நிறுத்தும் படி ஆகிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அய்யா, இந்தக் கட்டுரையை நாங்கள் நண்பர்களாக சேர்ந்து வாசிக்கிறோம், குறிப்புகள் எடுக்கிறோம். பயனுள்ள தகவல்கள் உள்ளன.

தமிழ்செல்வன், திருவண்ணாமலை

வெ.மூ. கணபதி சுப்பிரமணியன் said...

வெள்ளையின ஆராய்ச்சியாளர்களே கோட்பாடுகளை உருவாக்க முடியும் என்ற கருத்தை மறுக்க வந்ததே சிறினிவாசின் 'சமஸ்கிருதவயமாதல்'. இந்திய மக்களைப் பற்றி பேசுவதானால் கூட அதற்கு வெளி நாட்டு வெள்ளைத்தோல் மகாபுத்திசாலிகள் தான் வேண்டும் என்பதை இன்னமும் நம்மால் பார்க்க முடியும். பூக்கோ என்பார், மார்க்ஸ் என்பார், தர்க்கெய்ம் என்பார் ஆனால், பார்த்தா சட்டர்ஜியையோ சிறினிவாசனையோ ராமானுஜனையோ அறிய மாட்டார். சபால்டர்ன் ஆய்வாளர்களின் தோற்றத்திற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இந்திய சமூக அறிவியலின் தேவையை உணர்ந்து கொண்டவர்கள் சிறினிவாசின் பங்களிப்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள். அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும்! அது எல்லா கோளாறுகளையும் கடந்து 'அகப்பார்வை'யை உடையது. உங்களது கட்டுரையில் சிறினிவாசிர்க்கான மரியாதை வழங்கப்பட்டது போலத் தெரியவில்லை.

வெ. மூ. கணபதி சுப்பிரமணியன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

நெகடிவ் பின்னூட்டுனர்களுக்கு

இந்திய சமூகத்தைப் பற்றியும், பொதுவாக சமூகவியல், சித்தாந்ந்தகளைப் பற்றியும் பல மேற்குலக , ஜப்பானிய அறிஞர்கள் எழுதியுள்ளனர். இந்தியர்களும் எழுதியுள்ளனர். அவற்றை தமிழில் அலசி, எந்த அள‌வு அவற்றை ஏற்றுக் கொள்ள‌லாம் நிராகரிக்கலாம், எந்த அளவு லாபமடையலாம் என்பது தமிழக ஆய்வாளர்களின் தலையாய கடன்; அதைத்தான் டி.த. செய்கிறார்.

Aravendhan said...

அய்யா வன்பாக்கம் விஜயராகவன் //எல்லா சாதிகளின் ஆழ்மனதிலும் ‘பிராமணராக’ மாறுவதற்கான வேட்கை ஒளிந்திருக்கிறது // என்று எழுதுவதற்கு முன் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படித்திருக்க வேண்டாமா? பிராமண எதிர்ப்பையே தனது மூச்சாகக் கொண்டு இயங்கிய பெரியார் வாழ்ந்த மண்ணில் சமஸ்கிருதவயமாதல் என்பது ஆரிய ஊடுறுவல் அன்றி வேறு என்ன? நீ என்ன தான் போராடினாலும் உன் மண்ணிலிருந்து பிராமணனை விரட்ட முடியாது என்பதைத் தானே நீங்கள் சொல்லும்படி இருக்கிறது?

Aravendhan

Anonymous said...

//எழுதுவதற்கு முன் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படித்திருக்க வேண்டாமா? //

பெரியாருக்கு அந்த அவா இருந்ததாக தர்மராஜ் அவர்கள் சொல்லவில்லை. பொதுச் சமூக மனோநிலையையும், சமூக நகர்வுகளையும் குறித்து அப்படிச் சொல்கிறார். நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்தான். அப்படியெனில் ஏன் இரண்டே சாதிகள் மட்டுமே ஏற்பட்டிருக்காமல் போனது என்பது குறித்து நாம் விளங்கிக்கொள்ளவும், அதனை விளக்கவும் கடமைப்படுகிறோம்.

ஓவியன் said...

பெரும்பாலான கருத்து வேறுபாடுகளும், குழப்பங்களும் ஏற்படுவதற்கான காரணம் (ஆய்வாளர்களுக்கிடையிலும்கூட) தனிநபர் கருத்துக்களுக்கும், சமூக நகர்விற்குக் காரணியாய் இருக்கும் கருத்தாக்கங்களுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாததே.

சமூகவியல் என்பது ஒட்டுமொத்த தனிநபர்களின் கூட்டு உளவியல் அல்ல என்பது திட்டவட்டமாக நிறுவப்பட்டுள்ளது. உதரணமாக, கையூட்டு குற்றம் என்று தெரிந்து வைத்திருக்கும் நம்மில் பலரும் கையூட்டுக் கொடுக்க நேரிடுகிறது.

தமிழகத்தில் அரசியல் நோக்கம் அற்ற சமூக ஆய்வுகள் அரிது. அரசியல் நோக்கற்ற சமூக ஆய்வுகள் பயனற்றவை என்ற கருத்துக் கூட நிறுவப்படுகிறது.