Skip to main content

எழுத்து அரசியல் 6 : நவீன தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் - பாகம் 64. தமிழ் தலித் இலக்கிய எழுத்து முறை :
தமிழ் தலித் இலக்கியங்களின் தனித்தன்மைகள் எவையெவை என்று சொல்வதனால் இப்படிச் சொல்ல வேண்டும்: இனவரைவியல் எழுத்து முறையும், பேச்சு வழக்கு நடையும்!
மானிடவியல் மற்றும் நாட்டுப்புறவியலின் பரவலான அறிமுகத்திற்குப் பின்பு இவ்விரு உத்திகளும் இலக்கிய வெளிப்பாடுகளாக மாறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். நாவல்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இனவரைவியல் உத்தி, கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவத்தையும் மீறி சூழலுக்கு அதிகமான பக்கங்களை செலவழிக்கத் தொடங்கியது. கதையோட்டத்திற்கோ, முரணுக்கோ தேவையில்லை என்ற போதும் கிராம வாழ்க்கையை துல்லியமாக விளக்குவதும், சித்திரக்காரன் அல்லது புகைப்படக்காரனின் நேர்த்தியோடு மொழியைக் கையாளுவதும் இவ்வினவரைவியல் எழுத்து முறையின் மையமாயிற்று. வட்டார இலக்கியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டவைகளில் இது போன்ற எழுத்து காணப்படுகிறது. என்றாலும், அதன் பிரம்மாண்டத்தோடு செயல்பட்டது தலித் நாவல்களில் தான். ஆனால், கிராம வாழ்க்கையும், துல்லியமாய் எழுதுவதும் எல்லா சாதிக்கும் பொதுவானது என்பதால் நாளடைவில் இவ்வெழுத்து முறை பொதுவான உத்தியாக மாறியது.
தலித் இலக்கியங்களின் இன்னுமொரு அடையாளமாக விளங்குவது பேச்சு வழக்கிலான கதை சொல்லல். யதார்த்தத்தோடு நெருக்கமான உறவுடையதாகவும், பேசுபவரின் ஆன்மாவைக் காட்டக்கூடியதாகவும் சொல்லப்பட்ட பேச்சு நடையில் உருவாக்கப்பட்ட படைப்புகள் இயல்பான அழகோடு அமைந்திருந்தன என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், மீண்டுமொரு முறை, பேச்சு என்பது எல்லா சாதிக்கும் வரும் என்பதால், பலசாதிப் படைப்புகளும் பேச்சு நடையில் வந்துவிட தலித் இலக்கியம் இதனையும் முழுமையாக உரிமை கொண்டாட முடியாமல் போயிற்று.
தலித்துகளின் வாழ்க்கையை அப்படியப்படியே எழுத்தில் வடிக்கிறேன் என்ற பெயரில் பயன்பாட்டிலிருக்கும் அத்தனை வசைச் சொற்களையும் சர்வசாதாரணமாய் பயன்படுத்தி தலித் இலக்கியங்கள் செய்யப்பட்டன. வசைகளை அச்செழுத்தில் பார்க்கிற அதிர்ச்சியை இதனால் தமிழ்கூறு நல்லுலகம் பெற்றது என்றாலும், இதற்கான காப்புரிமையும் கூட சிற்றிதழ் வட்டார கலகக்கார எழுத்தாளர்களிடம் இருப்பது நாட்சென்றே தெரியவந்தது. இப்படியாக, தமிழ் தலித் இலக்கியம் தனக்கான கதை சொல் முறையையும், எழுத்து முறையையும் தேடித் திரிந்த பயணம் ஏராளமான முட்டுச்சந்துகளை உடையது.
இனவரைவியல் எழுத்து முறையும், பேச்சு வழக்கில் கதை சொல்லும் முறையும் ஏதோ தனித்தனியான இரண்டு கதையாடல் வகைகள் போலத் தோன்றினாலும், உண்மையில் இரண்டும் ஒரே விதமான நோக்கங்களை உடையவை. அவற்றின் நோக்கம் யதார்த்தத்தை இன்னும் துல்லியமாகப் பதிவு செய்தல்.
யதார்த்தவாத எழுத்து முறை என்றொரு கதையாடல் நவீனத் தமிழிலக்கியத்தில் ஏற்கனவே செய்யப்பட்டு புதுமைப்பித்தன் மாதிரியான ஜாம்பவான்கள் அதில் ஏராளமான சாதனைகளை செய்திருந்தனர். ஆனால், 1980களுக்குப் பின்பு தமிழ்ச் சிற்றிதழுலகில் பரவலாகப் பேசப்படத்தொடங்கியபண்பாடுஎன்ற உரையாடல், ஒவ்வொரு நிகழ்வையும் சுற்றிச் சூழக் காணப்படும் பண்பாட்டுத் தகவல்களின் இன்றியமையாமையை வலியுறுத்தத் தொடங்கியது. அதாவது, எந்தவொரு செயலையும் அதனதன் சூழலோடு பொருத்திப் பார்க்கையிலேயே அர்த்தம் பெறுகிறது என்ற யோசனை, அதுநாள் வரையில்யதார்த்தம்என்று சொல்லப்பட்ட தளத்தை பரந்து பட்டதாக்கி, வர்ணஜாலங்கள் நிரம்பியதாக மாற்றியது. உதாரணத்திற்குச் சொல்வதானால், கோவில் திருவிழாவில் அருள் வந்து சாமியாடும் நிகழ்வை வர்ணிக்கையில், அந்நபர் செய்யும் அங்க சேஷ்டைகள், உடுத்தியுள்ள உடை, இசைக்கப்படும் மேளம், முட்டிமோதும் கூட்டம் என்று மட்டும் விளக்கினால் போதாது என்றும், புதிய வகைப்பண்பாட்டு யதார்த்தம்என்ற முறையில் சாமியாடும் நபரின் பின்புலம், சாமியின் கதை, அக்கோவிலின் கதை, சாமியாட்டம் பற்றிய நம்பிக்கைகள், சாமியாடியின் ஆடை, அணிகலன்களை அது அதற்கான வட்டாரப் பெயர்களிலேயே விவரிப்பது கட்டாயமாகியது.
யதார்த்தத்தைப் பண்பாட்டு யதார்த்தமாக மாற்றிய பெருமை மானிடவியலையும், நாட்டுப்புறவியலையுமே போய்ச்சேரும். இவ்விரு அறிவியல்களின் அறிமுகத்திற்குப் பின்பு யாரும் கதாபாத்திரம் சோறு சாப்பிட்டது என்று எழுத முடியாமல் போயிற்று. அள்ளிச் சாப்பிட்டதா, உருட்டிச் சாப்பிட்டதா, வழித்து நக்கியதா, பொறுக்கித் தின்றதா, கவளம் பண்ணிச் சாப்பிட்டதா என்றெல்லாம் சொல்ல வேண்டியேற்பட்டது. வழக்கமாய் ஜன்னல் வழியே தெருவையோ தோட்டத்தையோ போன்றவொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்ஒரு பறவை பறந்து செல்வதைப் பார்த்ததுஎன்று எழுதிப் பழகியவர்கள் அது என்ன பறவை என்று சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அப்படிச் சொல்லாத பட்சத்தில் அவ்வெழுத்தாளர்களுக்கு சமூகப் பண்பாடு பற்றிய அறிவு எதுவும் இல்லையென்று அறிவிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டது.
எழுத்தாளர்களின் பண்பாட்டு அறிவு தொடர்பான இக்கேள்விகளுக்கான நியாயத்தை சங்க இலக்கியத்திலிருந்து தருவித்த செயல், இதற்கு எதிரான எந்தவொரு குரலையும் எழுப்பவிடாமல் பார்த்துக் கொண்டது. அதாவது, சங்க இலக்கியங்களில் பயின்று வரும் முதல், கரு, உரிப்பொருட்களில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் உரிப்பொருள் மேற்கூறிய பண்பாட்டு யதார்த்தத்தையே சுட்டுகிறது என்றுமரபுபற்றிய வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது. இதனால், படைப்பிலக்கியவாதிகள் தத்தம் கதைக்களனின் பண்பாட்டையும், புறவுலக யதார்த்தங்களையும் பற்றி அறிந்திருப்பதென்பது தமிழிலக்கிய பாரம்பரியமே என்பது நிறுவப்பட்டது.
இத்தகைய வியாக்கியானங்களோடு கூடிய புதிய எழுத்து முறையாகபண்பாட்டு யதார்த்தவாதம்பேசப்படுவதற்கு முன்பே தமிழில் இது போன்ற சில தனிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை நாம் அறிவோம். கடற்புரத்து மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நாவல் எழுத வேண்டும் என்ற தீர்மானத்தோடு, அம்மக்களோடு கிறிது காலம் போல் தங்கியிருந்து, கள ஆய்வு செய்து ராஜம் கிருஷ்ணன் எழுதியஅலைவாய்கரையில்இவற்றுள் ஒன்று. கள ஆய்வு செய்து படைப்பிலக்கியம் செய்வதற்கும், ‘பண்பாட்டு யதார்த்தவாதம்என்று பேசப்பட்டதற்குமான அடிப்படையான வித்தியாசம் என்னவென்று சொல்லப்போனால், முன்னதுஅறிமுகமற்ற பிற சமூகப் பண்பாட்டு வெளிகளை கதைக் களனாகக் கொள்வது,’ பின்னதோ தனது சொந்த சமூகப் பண்பாட்டு வெளியை எழுதுவது’.
தனது சமூகத்தையே எழுதுவது என்ற பழக்கம் கொள்கையாகவே பேசப்பட்டது, வட்டார இலக்கியங்களின் வருகைக்குப் பின்னரே. வட்டார இலக்கியங்களின் வருகையும், பிற்படுத்தப்பட்ட சாதிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவாவதும் ஒரே தருணத்தில் நடைபெறுகிறது. பட்டியலின சாதிகளைப் போல தாமதமாகவே இலக்கியவுலகினுள் அடியெடுத்து வைக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் நவீன எழுத்தில் இல்லையென்று கண்டதும், பட்டியலின ம்க்களைப் போல் அதனைப் போராட்டமாக அல்லது கோஷமாக மாற்றியிருக்கவில்லை. ஆனால், தங்களைப் பற்றிய பதிவுகளையும் இலக்கியத்தினுள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த வகை எழுத்துகளை வட்டார இலக்கியம்என்றும் பெயரிட்டுக் கொண்டனர். ஏறக்குறைய இதே காலகட்டத்தில், தமிழ்த் திரைப்படவுலகினுள்ளும் படையெடுக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் கிராமங்களை நோக்கி தமிழ்த் திரைப்படக் கதையாடலை நகர்த்தியதையும் யோசித்துப் பாருங்கள். 1960கள் என்று சொல்லப்படும் காலகட்டம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் காலமாகவே தமிழகத்தில் கணிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், வெகுஜன ஊடகங்களில் ஊடுறுவுதல், நவீன இலக்கியப் பிரதிகளை ஆக்கிரமித்தல் என்று சகல தளங்களிலும் அவர்களின் இருப்பை உணரமுடியும்.
தத்தம் சமூகத்தை எழுதிக் கொள்ளும் போக்கு வட்டார இலக்கியத்தின் அறிமுகத்தோடே நடைபெறுகிறது என்றால், அதற்கு முன்பு செய்யப்பட்ட இலக்கியங்கள் இந்த குணத்தைக் கொண்டிருக்கவில்லையா, அவையும் அவரவர் அவரவர் சாதியை எழுதிக் கொண்ட பிரதிகள் தானே என்ற கேள்வி எழலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் நவீனத் தமிழ் இலக்கியம் அப்படித்தான் என்றைக்குமே இருந்தது. அவரவர், அவரவர் சாதியை எழுதிக் கொள்வது என்பது தான் வழக்கமாக இருந்தது. அவற்றை மீறி ஏதாவது செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் பிரச்சார குணம் கொண்டவை, இலக்கியத் தரமற்றவை என்று சொல்லப்பட்டிருந்தன.
வட்டார இலக்கிய அறிமுகத்திற்கு முன் செய்யப்பட்ட இலக்கியங்கள் பெரும்பான்மையும் பார்ப்பன சமூகத்தையும், வெள்ளாள சமூகத்தையுமே பேசின என்பதற்கு நமக்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கும். இலக்கியப் பிரதிகள் மட்டுமல்லாது வெகுஜன ஊடகங்களான வானொலி, திரைப்படம், நாடகம் என்று அனைத்திலும் எவ்வாறு சாதிய அடையாளம் மேலோங்கி இருந்தது என்பதை நாம் அறிவோம். தனது கதைக்களனை திருநெல்வேலி மாவட்ட அரசாங்க எல்லைக்கு உட்பட்டே அமைத்துக் கொண்ட எழுத்தாளர்கள் நம்மிடம் உண்டு. அவர்களுடைய கதாபாத்திரங்களும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவை தான். ஆனால் இத்தகைய பிரதிகளை யாரும் வட்டார இலக்கியம் என்று வரையறுக்க விரும்பவில்லை அல்லது அப்படி யோசிக்கக்கூட இல்லை. அவற்றை பொதுவான தமிழ் இலக்கியப் பிரதியாகவே அடையாளம் காட்டினர். ஆனால், பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்களை எழுத ஆரம்பித்ததுமே தான், அவைப் பொதுவான பிரதிகள் இல்லை என்ற போதம் தலைக்கு ஏறி வட்டாரத்தன்மை கொண்டவையாக அறிவுறுத்தப்பட்டன.
வட்டார இலக்கியங்களைப் பற்றி பேசுகையில், விமர்சனம் மாதிரியும் இல்லாமல், அபிப்பிராயம் மாதிரியும் இல்லாமல் ஒர் அங்கலாய்ப்பு சொல்லப்படும். அதாவது, ‘வட்டார இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லோருக்கும் விளங்குவதில்லை. எனவே அவற்றுள் பயணம் செய்வது சிரமமாயிருக்கிறது. அவை பொதுத் தமிழில் எழுதப்படுவது இல்லை.’ இந்தக் குரலை எல்லா வட்டார இலக்கியங்களும் எதிர் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் குரல் மொழி நடையைப் பற்றி கவலைப்படுகிறது என்று மேம்போக்காக தெரிந்தாலும், அதன் அடியாளத்தில் தேங்கி நிற்கிற அனுமானங்கள் ரொம்ப முக்கியம். ஒரு வட்டாரத்தின் மொழிநடையை பிற வட்டார வாசகர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதன் பின்னால், ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குமான புரிதலில் ஏதோ தகராறு இருக்கிறது என்ற முன் முடிவு ஒளிந்திருக்கிறது. அதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் குரல்கள் ஒத்திசைந்து போவதில்லை; ஒருவரின் பண்பாடு இன்னொருவருக்கு அந்நியமானதாகத் தோன்றுகிறது; ஏதோ மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் படிக்கிறார் போல் இருக்கிறது; ‘தமிழ்என்ற உணர்வு தோன்றுவதில்லை.
வட்டார இலக்கியங்களின் மொழி நடையைப் பற்றியே பேசப்பட்டிருந்தாலும், அதன் பின்னுள்ள அரசியல்தமிழ்என்ற அடையாளத்தைப் பற்றியதாக அமைவதை அக்காலங்களில் யாரும் உணர்ந்திருக்கவில்லை. பார்ப்பனர்களைப் பற்றியும் வெள்ளாளர்களைப் பற்றியும் அவர்களுக்கான வட்டார குணங்கள் வெளிப்பட எழுதின போதெல்லாம் தோன்றாத மொழிப் பிரச்சனை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எழுத்தில் மட்டும் உருவாவதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நாட்களில்தமிழ்என்ற கதையாடல் இவ்விரு சாதிகளின் மொழி, வாழ்க்கை, பண்பாடு சார்ந்து மட்டுமே கட்டப்பட்டிருந்தது என்பதையும், அவர்களின் பாஷை, உணவு, உடை, பழக்கவழக்கம் மட்டுமே பல்வேறு ஊடகங்கள் வழியாக தமிழ்ப் பாஷையாகவும் தமிழ் உணவாகவும் உடையாகவும் பழக்க வழக்கமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பதையும் கவனத்தில் கொண்டால் ஏன் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இலக்கியம் தமிழ் இலக்கியமாக அல்லாமல் வட்டார இலக்கியமாக அடையாளப்படுத்தப்பட்டது என்பது விளங்கும்.
சொல்லப்போனால், தத்தம் சாதியை எழுதிக் கொள்ளும் பண்பாட்டு யதார்த்தவாதமே தமிழ்ச் சூழலில், ஆரம்பத்தில் தமிழிலக்கியமாகவும்’, பின்னாளில்வட்டார இலக்கியமாகவும்’, அதன் பின்தலித் இலக்கியமாகவும்வழங்கப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு சாதிப் பிரிவினரின் வருகையை அறிவிக்கும் வகையில் இலக்கியத்திற்கான முன்னொட்டுகள்தமிழ்’, ‘வட்டாரம்’, ‘தலித்போன்றவை பயன்பட்டு வந்திருக்கின்றன. சரியாகச் சொல்வதானால், 1960கள் வரையில் செய்யப்பட்டவற்றை உயர்சாதி இலக்கியமென்றும், 60 முதல் 90 வரையிலானவை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இலக்கியமென்றும், 90களுக்கு பிந்தியவை பறையர் சாதியின் இலக்கியமென்றுமே சொல்ல வேண்டும்.
நவீனத் தமிழிலக்கியப் பிரதிகளில் சிலாகிக்கப்படும் யதார்த்தவாதம் காலந்தோறும் உருமாறி இன்றைக்குப் பண்பாட்டு யதார்த்தவாதமாக நின்று கொண்டிருக்கிற சூழலில் நம்மை அரித்துக் கொண்டேயிருக்கும் கேள்வி - தத்தம் சாதியை எழுதுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நவீன எழுத்திற்குக் கிடையாதா? அதாவது, ‘பண்பாட்டு பிரக்ஞையோடு சமூகத்தைப் பதிவு செய்தல்என்ற உத்தியானது சாதிய எழுத்துகளையே உற்பத்தி செய்கின்றன என்றால், சாதியத்தைக் கடந்த, மீறிய எழுத்து என்பது என்ன? அதனை எவ்வாறு எழுதுவது?
சாதி மீறிய எழுத்தை எவ்வாறு எழுதுவது என்று யோசிப்பதற்கு முன்னால், இந்த விவாதத்தில் அடிக்கடி பயன்படுத்தி வருகிற இரண்டு சொற்களானபண்பாடு’, ‘யதார்த்தம்என்பவைகளின் அர்த்தம் என்ன என்று பார்த்தால் நலமாயிருக்கும். இவ்விரண்டு வார்த்தைகளையும் மேற்குலகிலிருந்தே கடன் வாங்கியிருக்கும் நாம், வழக்கம் போலவே அவற்றிற்கென வழங்கப்படும் அர்த்தங்களைக் கண்டு கொள்ளாமல் நமக்கென ஒரு சுதேசி விளக்கத்தையே வைத்துக் கொண்டிருக்கிறோம். யதார்த்தவாதம் என்பது realismஎன்ற ஆங்கிலச் சொல்லின் மொழி பெயர்ப்பு என்று எண்ணி, சாக்ரடீஸ் மற்றும் பிளேட்டோவில் தொடங்கும்யதார்த்தவாதம் - நேர்க்காட்சி வாதம்என்ற தத்துவ மோதலின் பின்னணியில் இதனைப் புரிந்து கொள்ள முயன்றால் தவறாகவேப் போய் முடியும்.
யதார்த்தவாதம் என்ற சொல்லைஉள்ளதை உள்ளபடியே பதிவு செய்தல்என்றே நாம் புரிந்து கொள்கிறோம். ‘நடந்ததை நடந்தது போலவே எழுதுதல்’, ‘உணர்வுகளை அதே தகிப்போடும் வேகத்தோடும் வெளிப்படுத்துதல்’, ‘கூடுமானவரை நிகழ்வுகளுக்கு நேர்மையாய் இருத்தல்என்றெல்லாம் சொல்லப்படும் அனைத்தும்வாழ்க்கையை எளிய வார்த்தைகளில் சித்திரமாய் வடித்தல்என்பது தாம். வேறு வகையில் சொல்வதானால் நிகழ்வுகளை மிகைப்படுத்தாமல் விவரித்தல்!, மிகைப்படுத்தப்பட்ட எதுவும், இயல்பு கெட்டு, பொய்யாக, பிரச்சாரமாக மாறிவிடுகிறது. நிகழாதவற்றை நிகழ்ந்தவையாக மாற்றும்போதும் இதே விதமானக் குழப்பங்கள் தோன்றுகின்றன. எனவே, யதார்த்த வாதத்தைப் பொறுத்தவரையில் நிகழ்வது இயல்பான ஒன்று; நிகழாத எதுவும் மிகைப்படுத்தப்பட்டது. இதில்நிகழ்வுஎன்பதை நிகழ்காலம் என்றும் அர்த்தப்படுத்தலாம். தமிழ் யதார்த்தவாதத்தைப் பொறுத்தளவில் நிகழ்காலம் மட்டுமே நிஜமானது; கடந்த காலமோ, எதிர்காலமோ அதிகக் கற்பனைகளால் செய்யப்பட்டது - அதாவது யதார்த்தமற்றது. எனவேதான், நவீனத் தமிழிலக்கியங்களில் கடந்த காலத்தை சுட்டும் வரலாற்றுப் புனைவுகளோ, எதிர்காலத்தை விவரிக்கும் அறிவியல் கதைகளோ எழுதப்படுவதில்லை என்பதை கவனியுங்கள். இவையிரண்டும், யதார்த்தம் மீறிய எழுத்துகளாகக் கருதப்படும் வியாபார எழுத்துலகிலேயே செய்யப்பட்டதையும் நாம் கவனிக்கலாம்.
பண்பாடுஎன்ற வார்த்தையும் ஏறக்குறைய இதே போன்ற நிகழ்கால வலியுறுத்தலையே செய்வதை நாம் பார்க்க முடியும். பண்பாடு என்பது அரூபமான ஒழுங்கமைப்பு என்று சொல்லக்கூடிய வரையறை, அப்பண்பாடு நிகழ்கால வாழ்வியலாக வெளிப்படுகிறது என்று தெரிவிக்கிறது. எனவே, ஒரு சமூகத்தின் பண்பாடு என்பது அதன் ஒவ்வொரு சிறிய, பெரிய அசைவுகளிலெல்லாம் வெளிப்படுவதாய் ஆய்வாளர்கள் கருதினார்கள். எனவே, பண்பாட்டை ஆய்வு செய்ய விரும்பியவர்கள் சமூகங்களின் நகர்வை, நடத்தையை நேரடியாய் இருந்து, பார்த்து, அனுபவித்து, குறிப்பெடுத்துக் கொள்வதாகத் தங்கள் பணியைச் செய்து வந்தார்கள். ‘கடந்த காலங்களிலெல்லாம் எங்கள் பண்பாடு இப்படி இருந்ததாம்என்று யாராவது சொன்னால், அதனைப் புனைவாக வேண்டுமானால் கருதலாமே தவிர, அத்தகவல் எக்காலத்திலும் பண்பாடு பற்றிய விவரிப்பாக மாறாது. ஏனென்றால், நேருக்கு நேராக நிகழக்கூடிய சம்பவங்களையே பண்பாட்டுச் செயல்பாடுகள் என்கிறோமே தவிர, அனுமானங்களை, கற்பனைகளை அல்ல. நிகழ்காலம் சார்ந்த அனைத்துமே தான் பண்பாடு, பிற அனைத்தும் புனைவுகளே என்ற செய்தியைத் தான் பண்பாடு என்ற சொல்லும் முன்மொழிந்தது.
20ம் நூற்றாண்டில்பண்பாடுஎன்ற சொல்லை மானிடவியல் போன்ற பண்பாட்டுத் துறைகள் விளக்கிய முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானதும், நமது விவாதத்திற்குப் பொருந்தி வருவதுமான ஒன்றை இங்கே நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பண்பாடு என்பதை சமூகங்களின் வாழ்க்கை சார்ந்த நடத்தை விதிகளின் தொகுப்பு என்று விளங்கிக் கொள்ளும் பண்பாட்டுத் துறைகள் தங்களை அறியாமலேயே அச்சமூகங்களின் வரலாற்று முகங்களை மறுதலிக்கிற அல்லது மறந்து போகிற தவறையும் செய்து விடுகின்றன என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு. நிகழ்வுகளின் மீதும், வெளிப்பாட்டு விதங்களின் மீதும், அசைவுகள் மீதும் கொண்ட அபரிமிதமான ஈடுபாடு, ஒரு சமூகத்தின் எல்லா செயல்பாடுகளின் பின்னணியிலும் ஒரு நிழல் போல் ஒதுங்கியிருக்கக்கூடிய வரலாற்றுச் சுவடுகளைக் கண்டுகொள்வதற்கான கால அவகாசத்தை வழங்குவதில்லை.
இதனால், சமூகங்களின் பண்பாட்டு முகங்களை விவரிக்கக்கூடியவர்கள், அச்சமூகங்களின் நிகழ்காலத் தோற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டு வரையறுக்க முற்படும் தவறைச் செய்தவர்களாக மாறுகின்றனர். நிகழ்கால வெளியில் பார்க்கக் கிடைக்கும் எந்தவொரு செயல்பாட்டிற்கும் நீண்ட, மரபான, ஞாபகத் தொடர்ச்சியொன்று கடந்த காலத்தினுள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அனுமானிக்கும் திறனை பண்பாட்டு ஆய்வுகள் நம்மிடமிருந்து விலக்கியே வைத்திருந்தன. இதனால் பண்பாட்டு நடைமுறைகள் வெவ்வேறு காலச் சூழல்களில் எவ்வாறு மாற்றம் கொண்டு வந்துள்ளன என்பதைக் கவனிக்கும் வாய்ப்பை நாம் இழந்து விடுகிறோம். நமக்கு முன்னே, ஸ்தூலமாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு அசைவிலும் தான் அச்சமூகத்தின் உள்ளீடு ஒளிந்திருப்பதாய் நாம் ஏமாந்து போகிறோம். ஆனால், கடந்த கால ஞாபகங்களின் வலுவான சுவடுகளோடே எல்லா சமூகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
நிகழ்வுகளின் மீதான போதை, வரலாற்றுணர்வை மங்கச் செய்கிறது என்ற மானிடவியல் மீதான விமர்சனம் யதார்த்தவாதம் அல்லது பண்பாட்டு யதார்த்தவாதம் என்று சொல்லக்கூடிய இலக்கிய உத்தியின் மீதும் வைக்கப்படவேண்டும் என்பது தான் பலரின் விருப்பம். ஒரு இலக்கியப் பிரதி உண்மைக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி ஒரு நிகழ்வினை துல்லியமாகப் பதிவு செய்ய யதார்த்தவாத எழுத்து முறையைக் கையாளுகிறது என்றால் அது குறித்து நாம் இரக்கப்படவே வேண்டியிருக்கிறது. ஏனெனில், ஒரு நிகழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் உணர்ந்துகொள்வதற்கு கால எல்லைகளையும் தள எல்லைகளையும் தாண்டி கற்பனைகளுக்குள்தான் பயணம் செய்யவேண்டியிருக்கிறது.
தலித் இலக்கியப் பிரதிகளின் பிரச்சனை இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். நவீனத் தமிழிலக்கிய உலகின் புதிய அத்தியாயமாக தன்னை அறிவித்துக் கொண்டு வெளிப்படத் தொடங்கிய அப்பிரதிகள் தங்களது எழுத்து முறையாக யதார்த்தவாதத்தை கைகொண்டது மிகப்பெரிய தவறாகப் போய் முடிந்தது. இதிலும் அதிகமாக, ‘பண்பாட்டு யதார்த்தவாதம் என்று படைப்புகள் செய்யப்பட்ட போது தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பதிவு செய்வது மட்டுமே அதன் பணியாக முடங்கிப்போனது. இதனாலேயே ஏராளமான தலித் பிரதிகள் அவலத்தை சித்தரிப்பவையாக, வறுமையைப் பேசுபவையாக, கேவலத்தை வெளிப்படுத்துபவையாக, அழுகையை பதிவு செய்பவையாக தேங்கிப் போயின. தீண்டத்தகாத வாழ்க்கையை எழுதுவதை தவிர்த்து வேறொன்றும் இல்லையென்பதாக வெறுமையுற்றது.
ஆனால், உண்மை என்றைக்குமே வேறு மாதிரியாகவே இருக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல்தலித்என்ற வார்த்தையே கூட தற்காலத்து தாழ்த்தப்பட்ட இழிநிலைக்கான காரணத்தை வரலாற்றிலிருந்து கற்பித்துக் கொண்ட அடையாளம்தான். அவ்வாறு புனையப்பட்ட அடையாளம் பெருமை தரக்கூடியதாகவும், சமூகத்தின் பிம்பத்தை மேம்படுத்துவதாகவும், ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவனையும் மேன்மைபடுத்துவதாகவும் அமைந்திருந்தது. ‘தலித்என்பதன் நோக்கமே அதுவாகத்தான் இருந்தது.
இதுகுறித்தான எந்தவொரு தெளிவும் இல்லாதிருந்த தமிழ் தலித் எழுத்தாளர்கள் பழகிய பாதையில் செல்லுகையில் அடையும் சௌகரியச் சோம்பலில் திளைத்து, ஒரு பாட்டம் கண்ணீரும் கம்பலையுமாக எழுதிக் குவித்து சோர்ந்தார்கள். யதார்த்தவாத எழுத்து முறையும், ‘தலித்என்ற பிரக்ஞையின்மையும் தான் தங்களைத் தோற்கடித்தது என்பதை அவர்கள் அறியாமலிருப்பது இன்னும் சோகம்.
படுகுழிகளின் பட்டியல் :
தமிழில் செய்யப்பட்ட தலித் இலக்கியங்கள் தடுமாறி நிற்பதற்கான காரணங்கள் இப்பொழுது உங்களுக்கே தெளிவாக விளங்கியிருக்கும். பதினெட்டு அல்லது இருபது வருடங்கள் என்பது கணிசமான கால எல்லை அல்ல என்றாலும், அதற்குள்ளாகவே சோர்வு தட்டிப்போன தலித் இலக்கியத்தை ஆரம்பத்திலிருந்து உரசிப் பார்த்தது சில அனுபவங்களை நமக்குத் தந்திருக்கிறது. ‘தலித் இலக்கியம்போன்றவொரு போராட்ட முறை தடுக்கி விழுந்த படுகுழிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கைப் பலகைகளை ஊன்றிச் செல்வது பயணிக்க விரும்புகிற எல்லோருக்குமே பயனுள்ளதுதான்.
*      ‘தலித்என்ற கலைச்சொல்லை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே, பிற மொழி தலித் இலக்கிய பரிச்சயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே, அவ்வார்த்தை தந்த ஆரம்ப மயக்கத்தில் கிறங்கி இலக்கியம் செய்யப் புறப்பட்டது முதல் கோளாறாக இருந்தது. ஆனால், எல்லாவித புதிய முயற்சிகளும் இவ்வாறு கோணல் மாணலாகத்தான் தொடங்கும். ஆனால் அக்கோணல் உணரப்பட்டு சரிசெய்யப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி.
* ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களின் தொடர்ச்சியான வாசிப்பு மற்றும் விவாதத்திலிருந்து கிளம்பி வந்ததலித்என்ற சிந்தனையை, அத்தகைய மரபைப் பற்றி அறிந்திராத நாம் நமக்கெட்டிய வரையில் புது விளக்கம் கொடுத்து சமாதானமாகியது. அப்படியொரு மரபு இருப்பதாய் தெரிந்த பின்பும் அது குறித்து அசட்டையாய் இருப்பது.
*      ‘தலித் இலக்கியம்என்பதை இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கருதி, தமிழிலக்கிய பரப்பினுள் அதற்கான இடவொதுக்கீடை பெற்றுக் கொண்டதுடன் சமாதானமடைந்தது.
* எழுத்தை அரசியலாகவும், அரசியலை எழுத்து மூலமும் விளக்க முனையும் தலித் இலக்கியத்தை கடைசி வரையில் புரிந்து கொள்ளாமல் இருந்து, வழக்கமான படைப்பாளியைப் போல் எழுதுவதுடன் என் பணி முடிந்தது, மீதத்தை என் எழுத்து செய்யும் என்று இறுமாந்து இருந்தது.
* சிறுபத்திரிகையுலகம் தரக்கூடியபடைப்பாளிஎன்ற போதையில் உழன்று, மிகச் சிறிய வாசகர் வட்டத்திற்குள்ளேயே சுருண்டு கொண்டது. பெருஞ்சமூகப் பரப்பில் எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராயாமல் விட்டது.
* இலக்கியம் என்பது புனைவுகள் மட்டுமே என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையின் காரணமாக வரலாற்றை மறுவாசிப்பு செய்தலும், திருப்பி எழுதுதலும்கூட இலக்கிய முயற்சிகளே என்று அறியாமல் இருந்தது.
* எதையும் வரலாற்றோடு புரிந்து கொள்கிற பிரக்ஞையை வளர்த்துக் கொள்ளாமல், கண்மூடித்தனமான பகுத்தறிவில் மரபைப் புறக்கணித்தது.
(நிறைவுற்றது) 


(புதுவிசை எண் 25, ஜூலை 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)