Skip to main content

மெட்ராஸ் ‘மகிழ்ச்சி’யை அ. ராமசாமிக்கும், தேவிபாரதிக்கும், அபிலாஷிற்கும் வழங்குவது பற்றி









மெட்ராஸ் திரைப்படத்தின் அரசியல் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளில் அ. ராமசாமி, தேவிபாரதி, அபிலாஷ் இம்மூவரின் கட்டுரைகளும் வெளிப்படுத்தும் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதால் எனக்கும்
சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன.

1.                                     http://thiruttusavi.blogspot.in/2014/11/blog-post_10.html
2.                                     http://ramasamywritings.blogspot.in/2014/10/blog-post_6.html#more
3.                                     http://tamil.thehindu.com/cinema/cinema-others/

இம்மூவரின் கட்டுரைகளில் காணக்கிடைக்கும் வருத்தங்களையும் வினாக்களையும் நான் இப்படி வரிசைப்படுத்திக் கொள்கிறேன்.

மெட்ராஸ் என்ற திரைப்படம் தலித் அரசியலை சரியாக / முழுமையாக / கிஞ்சித்தும் பேசவில்லை.
இயக்குநர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஏராளமான சமரசங்களை செய்து கொண்டார்.
தலித் இயக்கங்களைக் காட்டித் தருகிறார் / தலித் இயக்கங்களை விமர்சிக்க மறுக்கிறார்.
அதில் வரும் கதாபாத்திரங்கள் தலித் மக்களை பிரதிபலிக்கவில்லை.
அரசியலற்ற காளி தான் முன்னிலைப் படுத்தப்படுகிறான்.  எனவே இது தலித் விடுதலைக்கான படம் இல்லை.

இந்தக் கட்டுரைகளில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும், மெட்ராஸ் திரைப்படம் வெளியான பின்பு அது தமிழகத்தின் பல்வேறு தளங்களிலும் கொண்டாட்டமாக மாறியதற்கும் ஏராளமானத் தொடர்புகள் உள்ளன. 

மிக இயல்பாக பற்றிக்கொண்ட அக்கொண்டாட்ட நிகழ்வு, பொதுவெளிகளில் பாராட்டுக்கூட்டங்கள், தன்னார்வ – சமூக அமைப்புகளின் விருதுகள் என்று வழக்கமாய் தமிழ்த் திரைப்படங்களுக்கு வாய்த்திராத வேறொரு புதிய தளத்திலான அறிமுகமாக அமைந்திருந்தது.  சமூக ஊடகங்களில் ஏறக்குறைய உன்மத்தம் பிடித்த நிலையே காணப்பட்டது.  எல்லோருக்குள்ளும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பெருகிக் கொண்டிருந்தது. 

இந்த நேரத்தில் தான் மெட்ராஸ் திரைப்படம் தலித் அரசியலைப் பேசவில்லை; சமரசம் செய்து கொண்ட வணிகப்படம்; போலியான அரசியலைப் பேசுகிறது என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

முதலில் இத்திரைப்படம் குறித்து பற்றிக்கொண்ட சந்தோஷத்திற்கான காரணங்கள் என்ன என்று கொஞ்சம் விலாவாரியாய் புரிந்து கொண்டால் இந்தச் சூழல் இன்னும் எளிதாய் விளங்கும் என்று நினைக்கிறேன்.

மெட்ராஸ் திரைப்படத்தைக் கொண்டாடியவர்கள் அத்தனை பேரும் அது தலித் விடுதலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது என்பதற்காகவா அதனைக் கொண்டாடினார்கள்?

அது, இறுதியிலும் இறுதியாக, ஒரு விடுதலை வீரனை அடையாளப்படுத்துகிறது என்பதற்காகவா அதனை சிலாகித்தார்கள்?

இத்தனை நூற்றாண்டுகளின் சாதிய அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான வெளிச்சத்தை அது கொண்டுள்ளது என்பதற்காகவா இத்தனை சந்தோஷம் அடைந்தார்கள்?

இல்லை, முதல் முறையாய் ஒரு திரைப்பிரதியில் நிஜமான தலித்துகள் சித்தரிக்கப்பட்டார்கள் என்பதற்காகவா இந்தக் கொண்டாட்டமும் ஆர்ப்பாட்டமும்?

இதில் எதுவுமேயில்லை என்பது அக்கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட அத்தனை பேருக்கும் தெரியும்.  மேற்கண்ட கட்டுரைகளில் எழுப்பப்படுகிற எந்த வினாவையையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு இத்திரைப்படத்தை முன்னிட்டு ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் சந்தோஷத்தில் குதிக்க தயாராய் இருந்தார்கள். குதிக்கவும் செய்தார்கள்!

மெட்ராஸ் திரைப்படத்தை பார்த்த பின்பு அதைக் கொண்டாடிய ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட உணர்வு நிச்சயமாய் அம்மூன்று கட்டுரைகளிலிருந்து வேறுமாதிரியாய் இருந்தது –

முதல் முறையாய் சமூகத்தின் கீழிருந்து பேசப்பட்ட ஒரு குரலை ஒட்டு மொத்த தமிழகமும் முகம் சுளிக்காமல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது; அப்பாடா, ஒரு வழியாய் இந்தப் பெருஞ்சமூகத்தோடு பேசுவதற்கான ஒரு வாசல் திறந்தது! 

இது தான், இது மட்டுமே தான் அத்திரைப்படம் குறித்து பீறிட்டெழுந்த உணர்வுகளுக்கான அடித்தளம்.

வரலாற்றில், ஒடுக்கப்பட்டவர்கள் பேசுவதை உட்கார்ந்து கேட்கும் மன நிலையை பெரும் சமூகங்கள் இழந்து ரொம்ப காலம் கடந்து போயிற்று.  அவ்விருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையோ உரையாடலோ சாத்தியமில்லாத இருள் வெளிக்குள் தான் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.  பெரும் பாரம் போன்ற மௌனம் தான் இருவருக்குமிடையே நிரம்பியிருக்கிறது.  ஒடுக்கப்பட்டவன் எழுப்புகிற ஒவ்வொரு குரலும் பெரும் சமூகத்திற்கு எதிரானதாகத் தான் இருக்குமென்ற மனப்பிராந்தியில் அது தனது காதுகளை அடைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டு, தான் அங்கு இல்லை என்பது போன்ற தோற்றத்தைத் தந்த படியே தான் இது நாள் வரை இருந்து வந்திருக்கிறது.

இலக்கியத்தின் மூலமாக சில வருடங்களுக்கு முன்னால் இதே போல் இந்த மக்கள், பெருஞ்சமூகத்துடன் உரையாட யத்தனிக்கையில், அது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு, ‘நீ நீ பாட்டுக்கு பேசிக்கொண்டிரு என்று சொல்லி தமிழ் சமூகம் பாராமுகம் காட்டிய அனுபவம் அதற்கு உண்டு தானே?
திருமாவளவனும் கிருஷணசாமியும் தமிழ் தேசியம், புதிய தமிழகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தாலும் போய் உன் சாதிப்பிரச்சினையைப் பேசு என்று சொல்வது தானே இந்தப் பெருஞ்சமூகத்தின் ஒரே பதிலாக இருந்தது.

அப்படியானவொரு உரையாடலுக்காகத் தான் காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  தங்களது பேச்சுகளும், எழுத்துகளும், ஆட்டங்களும், பாட்டங்களும் இந்த சமூகத்திற்கு எட்டி விடாதா என்பது தான் அவர்களது தொடர்ந்த ஏக்கமாகவும் இருந்து வந்திருக்கிறது. 

அப்படியானவொரு உரையாடலுக்கான சாத்தியம் தமிழகத்தின் பிரம்மாண்டமானவொரு ஊடகத்தின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது என்னும் பொழுது அடையும் உற்சாகம் எவ்வளவு அதிகமாயிருக்கும்?

இவ்வாறு உரையாட முன்வருவதையே அவர்கள் தங்களுக்கான அங்கீகாரமாகத்தான் கருதுகிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், அவர்கள் இத்தனை காலம் அனுபவித்த பாராமுகத்தின் வலி உங்களுக்குத் தெரியவரும்.

உங்கள் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதற்காக, உங்களை உரையாடலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக, தங்களது வாழ்க்கையைக் கூட அவர்கள் முழுமையாய்ச் சொல்லாமல் உங்களுக்காக சமரசம் செய்து கொண்டார்கள். 

நீங்கள் பாதியிலேயே எழுந்து போய்விட்டால்? யாரிடம் போய் பேசிக்கொண்டிருப்பது? 

இதற்காகத்தான் அவர்கள் உங்களுக்கு விருப்பமான வகையில் தங்களது கதையை சிதைத்துக் கொண்டார்கள்.  தங்களது விடுதலைக்கான அரசியலை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பரிதவித்து நிற்கிறார்கள்.

எந்தவொரு உரையாடலும் - முரண்பட்டு நிற்கிற எந்த இரு பகுதியினருக்கு இடையிலான எந்தவொரு உரையாடலும் - சரிசமமான முன்னெடுப்புகளின் வழி தான் சாத்தியம்.  இதற்காக இரண்டு பிரிவுகளும் தத்தம் வேறுபாடுகளை கொஞ்சம் மறந்து விட்டு பேசுவதற்கு உட்கார வேண்டியிருக்கிறது. 

அப்படியானவொரு முன்மாதிரி முன்னெடுப்பைத் தான் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் வழியாய் அவர்கள் தந்திருக்கிறார்கள்.  மெட்ராஸ் குறித்த பரவலான ‘மகிழ்ச்சியை தங்களது முன்னெடுப்பை பெருஞ்சமூகம் அங்கீகரித்ததன் அறிகுறியாகவே அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.

இது ஒருவேளை அவர்களது கற்பனையாகக் கூட இருக்கலாம்.  ஒரு வேளை பெரிய சமூகம் இன்னமும் இறங்கி வந்திருக்கக் கூட இருக்காது போகலாம்.  ஆனால், அவர்கள் தங்களது நம்பிக்கையை இழந்து விடத் தயாராயில்லை.  ‘நாம் எதுவுமே செய்யாமல் இவர்கள் நாம் காது கொடுத்ததாய் நினைத்து இவ்வளவு சந்தோசப்படுகிறார்களே! என்று நினைத்தாவது  சமூகம் கலந்துரையாட முன்வராதா என்ன?

இந்த மனவோட்டமே கொண்டாட்டமாக உருவெடுத்தது.  இதைத் தவிர அந்த கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் இருக்கமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை.

சொந்த சாதி அமைப்புகளை சந்தேகப்படும் படைப்பாக இது வெளிவந்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால்,  நல்லது! அது உங்களுக்காக (பெருஞ்சமூகத்திற்காக) செய்து கொள்ளப்பட்ட சமரசம் தான்.

தலித் அரசியலை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டது; முழுமையாகப் பேசவில்லை என்றாலும், அதுவும் இந்த உரையாடலை சாத்தியப்படுத்துவதற்காக செய்து கொண்ட சமரசம் தான்.

மெட்ராஸ் திரைப்படம் தலித் அரசியலை பேசவில்லை என்று உங்களுக்குத் தோன்றியது என்றாலும் அது தான் அந்தப் படத்தின் நோக்கமும் கூட என்று சொல்லலாம்; அந்த வகையில் அது பேசிய பேச்சு மிகச் சரியாய் போய் சேர்ந்திருக்கிறது.

அ. ராமசாமி, தேவிபாரதி, அபிலாஷ போன்றவர்களின் வருத்தங்கள் எனக்கு விளங்கியதாலேயே இதை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் இது மட்டும் தான் - தலித் இலக்கியம் என்ற பெயரில் செய்யப்பட்டது போன்ற உரையாடல் அல்ல திரைப்பட உரையாடல்.  இது இன்னும் பிரம்மாண்டமான, ஒட்டு மொத்தமாய் எல்லோருக்கும் கேட்கும் வகையில் பேசமுடிகிற ஊடகம் என்பதை விளங்கிக் கொண்டால் இத்திரைப்படத்தை ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதும் விளங்கும்.


Comments

Anonymous said…
good
Wtm said…
எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
புறக்கணித்து வருகின்றார்கள்.
Anonymous said…
ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
Christian church untouchablity
http://marayar.blogspot.in/

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக