Skip to main content

மெட்ராஸ் - திரைப்பட உரையாடல் - இன்று காலையில் மாணவர்கள் இன்னும் காட்டமான கேள்விகளுடன் வந்தார்கள்.



கேள்வி 1:  ஒடுக்கப்பட்டோர் பெருஞ்சமூகத்துடன் உரையாடலை வைத்துக் கொள்வது ஏன் அவசியம்?  அப்படியொரு உரையாடல் நடைபெறுவதால் என்ன நடந்து விடும்?  காலம் காலமாய் என்னை மிதித்துக் கொண்டிருப்பவனுடன் நான் எப்படி உரையாடலுக்குச் செல்வது?  அவன் காலை வெட்டுவது சரியா அல்லது அவனோடு உரையாடுவது சரியா?

கேள்வி 2:  உரையாடல் அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்வருவது என்பது தோல்வியின் பயத்தில் நடப்பது தானே!  ஒடுக்கப்பட்டவர்கள் பெருஞ்சமூகத்துடன் தோற்றுப் போனார்கள் என்று சொல்வதா? அதனால் தான் உரையாடலை பரிந்துரைக்கிறீர்களா?



கேள்வி 3:  இந்த உரையாடலை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பார்த்தால் இயக்குனர் இரஞ்சித்தை இப்பெருஞ்சமூகம் தனக்குத் தோதாக தகவமைத்துக் கொண்டது என்று தானே அர்த்தம்?  இரஞ்சித் விலை போனார் என்று தானே சொல்ல வேண்டும்?

கேள்வி 4:  பெருஞ்சமூகத்தைச் சார்ந்த நான், அதாவது ஒடுக்குதலை அனுபவித்தறியாத நான், இந்த உரையாடலை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? நீங்கள் சொல்வது போல் மெட்ராஸ் போன்ற முயற்சிகள் ஒரு உரையாடலின் நம்பிக்கையளிக்கும் பகுதிகள் என்றால், இதைக் கேட்ட பெருஞ்சமூகம் பதிலுக்கு என்ன மாதிரியான பேச்சை உருவாக்க வேண்டும்?

கேள்வி 5:  அது என்ன 'பெருஞ்சமூகம்', அவர்கள் என்ன 'பெரிய' இவர்களா...?

கேள்வி 6:  என்ன நடந்து விடும்?  சினிமா என்ற பெருங்கதையாடல் இரஞ்சித் போன்ற கலைஞர்களை தனக்குள் இழுத்துக் கொண்டு தனக்கு சார்பானவராக மாற்றி விடும்!  அது தரக்கூடிய நெருக்கடி தாங்காமல் இப்படியான கலைஞர்களும் தங்களை சமரசம் செய்து கொள்வார்கள்.  ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களது ஒவ்வொரு பிரதி நிதிகளையும் இப்படியே தான் இழந்து நிற்கிறது.  உரையாடல் என்று சொல்வதே ஏமாற்று வேலை தானா?

கேள்வி 7:  அது அவ்வளவு எளிதாகவும் நடந்து விட முடியாது!  இந்தப் படத்தின் காரணமாக அதன் குழுவினருக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களில் கிடைத்த வரவேற்பு 'மகிழ்ச்சி' யானது மட்டுமல்ல; 'நெருக்கடி'யானதும் கூட!  அடுத்த படத்தை யோசிக்கும் போது அக்குழுவினர் அந்த நெருக்கடியை நிச்சயம் உணர்வார்கள் என்றார்கள், இப்படத்திற்கான வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களையறியாமல் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் பிரமாண வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா?

கேள்வி 8:  வழக்கத்திலிருந்து மாறாக மெட்ராஸ் திரைப்படத்தின் கொண்டாட்டத்தில் நடிகர்கள் பின்புறம் தள்ளப்பட்டு, கதாபாத்திரங்களும், தொழில் நுட்ப வல்லுனர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டது இதனால் தானா? 

கேள்வி 9:  முழு நெருக்கடியையும் அக்குழுவினர் மீது சுமத்துவதில் நியாயம் இருக்கிறதா?

கேள்வி 10: கலைஞர்களின் மீது இத்தனை விதமான நெருக்கடிகளை விதிப்பது சரியா?  அவர்களுக்கான சுதந்திரத்தை பறிப்பது போலல்லவா இருக்கிறது? சமூகத்திலிருந்து விலகி நிற்பவன் தானே கலைஞன்!  இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் கலைஞர்களின் படைப்புச் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?

இந்தக் கேள்விகளையெல்லாம் என் கணிணியில் படிக்க நேர்ந்த நண்பர், 'சரி. நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?' என்று கேட்டார்.

'ஒரு நல்ல ஆசிரியனின் பண்பு, மாணவர்களின் எல்லா கேள்விகளுக்கும் தானே பதில் சொல்ல முயலாமல் இருப்பது' என்றேன் நான்.

Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...