Sunday, 16 November 2014

லஷ்மி மணிவண்ணனின் கலக ஃபார்முலாக் கட்டுரையை எழுதுவது எப்படி?படு அபத்தமானக் கட்டுரைகளை எழுதுவதற்கு தமிழகத்தில் ஏதோவொரு ரகசியப் பயிலகம் இருக்க வேண்டும் – இப்பொழுதெல்லாம் அவ்வளவு கேவலமானக் கட்டுரைகளை எதிர் கொள்ள நேர்கிறது.  இன்றைய தி இந்துவில் (16-11-2014), தமிழிலக்கிய உலகின் வளர்ந்து வரும் கலகக்காரர் லஷ்மி மணிவண்ணன், மிகச்சரியாக 8வது பக்கத்தில், சிறைச்சாலைகளுக்கு ஜன்னல் வைக்கும் காண்ட்ராக்ட் எடுப்பது பற்றி கட்டுரை போல ஒன்றை எழுதியிருக்கிறார்.

தி இந்துவின் 8 ம் பக்கத்திற்கு சென்று விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்வதற்காக இதை நான் எழுதவில்லை.  என்னைப் போலவே நீங்களும் அதை மிதித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.  வளர்ந்து வரும் கலகக்காரர்களை அடையாளம் காட்டுவதும் எனக்கு நோக்கமில்லை.  அவர்களே வளர்ந்தால் சரியாகிப் போவார்கள்.  ஆனால், தமிழில் எழுதப்படும் கட்டுரைகளின் ‘கட்டுமானம் பற்றி இத்தருணத்தில் நாம் பேசலாம்.

1.       முதலில் கட்டுரைக்கான விஷயம் இருக்க வேண்டுமே! விரும்புகிறவர்கள் ‘சரக்கு என்றும் சொல்லமுடியும்.

லஷ்மி மணிவண்ணனின் கட்டுரைக்கான விஷயம் மிக எளிமையானது – கதிர்வேல் என்ற ஓவியர் பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கினார்.  அதில் கலந்து கொண்டவர்கள் ஓவியங்கள் வரைந்து மகிழ்ந்தனர். (இந்த இடத்தில் ‘கைதிகளுக்கா, முதலில் காவலர்களுக்கு அல்லவா ஓவியப்பயிற்சி கொடுத்திருக்க வேண்டும்? என்று தோன்றலாம்.  ஆனால், கதிர் கைதிகளுக்குத்தான் கொடுத்தார் என்பதால் இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை.)

இவ்வளவு தான் விஷயம்.  இதை வைத்துக் கொண்டு தி இந்து அரைப்பக்கக் கட்டுரை எழுதுவது எவ்வாறு?  இதற்குத்தான் நீங்கள் தமிழின் ‘தீவிர இலக்கியத்தின் அங்கத்தினராக இருக்க வேண்டும்.

2.       முதல் விதி:     எதையும் உலகளாவிய பிரச்சினையிலிருந்து தொடங்கு:

சிறைவாசிகளுக்கு (கைதிகளை இப்படியெல்லாம் கூட சொல்ல முடியும்!) ஓவியப் பட்டறை நடத்திய செய்தியை, சிறைச்சாலைகளின் இருப்பு பற்றிய கேள்வியிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம்.  இந்த இடத்தில் எதிரிலிருக்கிற சமூகத்தை பலங்கொண்ட மட்டும் நீங்கள் தாக்க வேண்டும்.  உங்களின் எழுத்தில் உலகத்திலுள்ள அத்தனை சிறைச்சாலைகளுக்கும் எதிரான அறச்சீற்றத்தை உக்கிரமாய் வெளிப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் நீங்கள் ஒரு தத்துவ ஞானியோ என்ற சந்தேகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

3.       இரண்டாம் விதி:       தத்துவ அறிஞராக நிரூபித்ததும், அடுத்ததாக நீங்கள் ஒரு சமூக விஞ்ஞானியாக்கும் என்பதையும் வாசகருக்குப் புரிய வைக்க வேண்டும்.

சிறைக்கூடங்களின் உருவாக்கத்திற்கும் சமூக ஒழுங்கமைப்புகளுக்குமான தொடர்புகள் பற்றி நீங்கள் எதையாவது இந்தப் பகுதியில் சொல்ல வேண்டும்.  ‘சமூகம், ‘ஒழுங்கமைப்பு என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை; உளறினால் கூட போதுமானது!

பாருங்கள் லஷ்மி மணிவண்ணனெல்லாம் இப்படியெல்லாம் எழுதுவதற்கு கூச்சப்பட்டாரா என்ன? // சிறைக்கூடங்கள், வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை நில உடமைக் காலத்தைச் சேர்ந்த்து.  சட்டத்தின் பேராலோ, ஊர்ப்பஞ்ச்சாயத்துகளின் பேராலோ எந்த வடிவத்திலும் நாம் அங்கே திரும்பிச் செல்ல யத்தனிக்க்க் கூடாது.  பாரம்பரிய மீனவன் கடலுக்குச் செல்வதும், மலை வாழ் மக்கள் பூர்வீகத்தில் இருப்பதும் குற்றம் என்று கருதப்படுகிற கரடுமுரடான பாதையை நோக்கித்தான் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம்.//

4.       மூன்றாம் விதி:        இப்பொழுது நீங்கள் சமூக அக்கறை கொண்ட நபராக மாறுவது அவசியம்.  சமூகச் சீர்திருத்தவாதியாகவும் உங்களால் மாறமுடிந்தால் அது வாசகர்களின் துரதிர்ஷ்டம்!

இந்த இட த்தில் நீங்கள், பெரியார், அம்பேத்கர், காந்தி போன்றவர்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.  ஏழைகள், அதிகாரமற்றவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தருணம் இது.  உதாரணத்திற்கு, சிறையில் நடைபெற்ற ஓவியப்பட்டறை பற்றிய செய்தியை லஷ்மி மணிவண்ணன் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் பாருங்கள். //இந்தியச் சிறைச்சாலைகளில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஏழைகளும், அதிகாரமற்றவர்களும் தான்// இது போன்ற கருத்துகளைக் கொட்டுவதற்கு தகுந்த புள்ளிவிபரங்கள் தேவையென்று நீங்கள் மறுக வேண்டியது இல்லை.  சுயபுத்தி இருந்தால் போதும்.  தனக்குத் தெரிந்த அரசியல்வாதிகளெல்லாம் சிறையிலா இருக்கிறார்கள் என்ற பட்டறிவை அவர் எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்துகிறார் பாருங்கள்!

5.       நான்காம் விதி:        இதை இலக்கிய விதி அல்லது தமிழின் தலைவிதி என்றும் சொல்வார்கள்.  இந்த இடத்திலிருந்து தான் உங்களது சொதப்பலான கட்டுரையை நீங்கள் ‘வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறீர்கள். 

அதுவும் மணிவண்ணனைப் போல் உங்களுக்கும் ஓவியம் போன்றவொரு சப்ஜக்ட் கிடைத்துவிட்டால் புகுந்து விளையாட வேண்டியது தான்.  கலை எவ்வாறு மானுடப் பொதுவான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது;  அது எவ்வாறு உங்களது ஆழ் மனதிலிருந்து பொங்கி வருகிறது என்றெல்லாம் நீங்கள் வியாக்கியானம் செய்யலாம்.  சிறைக்கைதிகள் வரைந்த ஓவியங்களில் விடுதலைக்கான வேட்கையும், குடும்ப உறவுகளின் மீதான ஏக்கமும் வெளிப்படுகிறது என்பது போன்ற நுண்ணுணர்வுகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது இந்த இடத்தில் தான்!  அன்பு, விடுதலை, நேசம், உறவு, ஏக்கம், பிரிவு, காதல் என்று வரிசையாக மானுட உணர்வுகளை அடுக்கி கூடுமானவரை வாசகருக்கு ஒரு கிறுகிறுப்பை ஏற்றுவது உங்கள் பொறுப்பு.

6.       ஐந்தாம் விதி:    இது தான் கட்டுரையின் முத்தாய்ப்பான இறுதிப்பகுதி.  இங்கு நீங்கள் உங்களது நட்சத்திர வரிகளை எழுதப் போகிறீர்கள்.

உதாரணத்திற்கு, லஷ்மி மணிவண்ணனைப் போல் சிறைக்கைதிகளைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் கட்டயமாய் பஷீரின் ‘மதிலுகள் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.  இந்தக் கட்டுரைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கவலைப்படவேண்டாம்.  வாசகன் தன் பாட்டுக்கு எதையாவது நினைத்து தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வான். 

இது முடிந்தது என்றால், அடுத்ததாக நீங்கள் ஒரு கலக விரும்பி என்பதை நிருவியாக வேண்டும்.  அதற்கும் என்னால் லஷ்மி மணிவண்ணன் கட்டுரையையே உதாரணம் காட்டமுடியும்.  இதைத் தான் உதாரணக் கட்டுரை என்று சொல்வது! //கைதிகள் தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடவும், அதற்குரிய பிரசுர வாய்ப்புகளும் அவர்களுக்கு அமையப் பெறுமாயின் கவிஞனோ, ஓவியனோ, கலைஞனோ சிறைகளிலிருந்து நுண்ணுணர்வோடு வெளிவரப் போவது உறுதி.  ஒரு புனித ஜெனேயோ, ஒரு ஜி, நாகராஜனோ, ஏன் ஒரு ஜான் ஆப்ரகாமோ சிறைச்சாலைகளிலிருந்து வர இயலாதா என்ன?//

கவலையே இல்லாமல் எழுதுங்கள்.  ஜெனேயும், ஜி, நாகராஜனும், ஜான் ஆப்ரகாமும் எந்த சிறைச்சாலையின் கலைப் பட்டறைகளில் கற்றுக் கொண்டு கலைஞர்களானார்கள் என்று உங்களை யாரும் கேட்க மாட்டார்கள்.

சிறைச்சாலைகளிலேயே நான் அரசியல் கற்று போராளியானேன் என்பது போன்ற (அதுவும் பாளையங்கோட்டைச் சிறை இதற்குப் பெயர் போனது) விதிகளின் படி சிறைச்சாலைகளில் கலைகளைக் கற்று ‘கலக்க்கார எழுத்தாளர்களும், கவிஞர்களும் வருவார்கள் என்று மணிவண்ணன் செய்யக்கூடிய கற்பனை கீழ் வானில் புதிய வெளிச்சமாகத் உங்களுக்குத் தெரிகிறதா?

இப்படியான கடைசி வரியை எழுதி முடித்ததும் ஒரு முறை ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தீர்கள் என்றால், கலகக்கார இலக்கியவாதி ஒருவர் உங்களுடைய நுண்ணுணர்வுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் தெரிவார்.

1 comment:

Anonymous said...

இதுபோன்ற கட்டுரைகளை எழுதி உங்களது நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள், சாதியனி வன்மத்திலிருந்து தமது படைப்புகளை படைத்து அதில் தாமே புளகாங்கிதம் அடைத்துக் கொள்ளும் சுயமோகிகளைப் பற்றி அவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது
அன்டபுடன்
-ச-

Featured post

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...