Skip to main content

அப் 'நார்மல்' - இலக்கிய மெடிக்கல் ரிப்போர்ட்.



மதினிமார்களின் கதைகளுக்குப் பின்பு கோணங்கி 'வாக்கிய நோயால்' பாதிக்கப்பட்டிருந்தார்.  கண்ட கண்ட தண்ணியைக் குடித்ததினால் தான் அவருக்கு இப்படியொரு அவதி ஏற்பட்டதாய் அவரது வீட்டில் யோசித்தார்கள். 
 
ஆனால் உண்மையில் 'பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை தைரியமாகக் குத்திக்கொள்ள முன்வந்த 'ஜேம்ஸ் பிப்ஸ்' போன்றவொரு காரியத்தையே கோணங்கி செய்து கொண்டிருந்தார்.  மொழிக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக Structuralist  என்ற ஸ்ட்ரக்சுரலிஸ்ட்கள் அன்றைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

மொழிக்குள் அகப்பட்டவர்கள் வெளியே வருவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதால் நானெல்லாம் கோணங்கியையே உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன்.  அவர் மொழியின் நோயை மடக்கு மடக்கு என்று குடித்து முடித்தார்.
 
எல்லோரும் நினைத்தது போல் அதற்கான தடுப்பு மருந்தை உடல் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. நோய் முற்றி, அதுவே கோணங்கி என்றானது.  அவர் அந்த நோயோடே வாழ்ந்து வர வேண்டியது தான் என்று முடிவு செய்த மருத்துவர்கள் லண்டனுக்குப் பறந்து போனார்கள்.
நான் உண்மையிலேயே பதறிப் போனேன்.  ஒரு கோட்பாட்டிற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்கிற உத்தமர்களின் சகவாசம் கிடைத்ததற்காக அன்று நான் வடித்த கண்ணீர் அளந்து மாளாது. இப்படியுமா ஒரு மனிதன் இருக்க முடியும் என்று நான் வியந்து நின்ற பொழுது தான் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட Peter schalk,   'இதே தான்டே உங்க வழக்கம்.  தியாகம் உங்க இரத்தத்தில ஓடுது' என்று கட்டுரை எழுதி என்னைத் தேற்றினார்.

இதற்குப் பல வருடங்களுக்குப் பின், கோணங்கி 'பாழி' போன்றொரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பொழுது எனக்கு அவரது ஆரோக்கியம் குறித்து மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது. 
நாவல் என்ற வடிவம் அவரை அந்நோயின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்து விடும் என்று நான் நம்பினேன்.  அதன் polyphony , dialogism,  skaz,  இன்னபிற சமாச்சாரங்கள் கோணங்கியை வாக்கிய நோயின் பிடியிலிருந்து வெற்றிகரமாய் மீட்டெடுக்கும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது.

ஆனால், அந்தோ பரிதாபம்!

கோணங்கியின் நோய், பக்தினுக்கெல்லாம் மசிவதாக இல்லை.  அது தன்னை சகல முறிவுகளுக்கும் தகவமைத்துக் கொண்டதாக தோன்றியது. 
அவர் தனது 'பாழி' நாவலோடு எப்பொழுதும் போல் வந்து சேர்ந்தார்.
முதல் முறையாக எனக்குக் கோணங்கியின் எழுத்து முறை பற்றி வேறொரு கோணத்தில் யோசிக்க வேண்டுமோ என்று தோன்றியது.  இந்தக் கதை சொல்லல் வேறு மன நிலையை வேண்டுகிறது என்றால், ஒரு வாசகனாக அதையும் தான் கொடுத்து பார்த்துவிட்டால் என்ன?
அதனால், பாழியை நான் வித விதமான முறைகளில் வாசித்துப் பார்க்கத் தொடங்கினேன்.  அதன் Non - linearity யைப் புரிந்து கொள்வோம் என்று ஒவ்வொரு முறையும் எந்தப் பக்கம் திறந்து கொள்கிறதோ அதிலிருந்து பாழியை வாசிக்கத் தொடங்கினேன்.  இந்த வாசிப்பு முறைக்கு Jorge Luis Borges  தான் ஜவாப்தாரி.  மணல் புத்தக டெக்னிக்!

எனக்குள் இந்த யோசனை தான் இருந்தது.  இதை வில்லுப்பாடல் மரபிலிருந்து கற்றுக் கொண்டேன். 
 
ஒவ்வொரு வருடமும், ஒரே ஊரில், ஒரே சாமிக்கதையை பாடிக்கொண்டே இருப்பார்கள்; மக்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.  பார்வையாளர் யாரும் எந்த வில்லடியையும் முழுசாய் கேட்பது இல்லை.  வருவார்கள், போவார்கள், தூங்குவார்கள், விழித்தெழுவார்கள், இப்படியே ஒரு non-linear பார்வையாளராக இருப்பார்கள். 
 
கோணங்கியும் சொல்கதை மரபுகளில் ('வாய்மொழி மரபு' என்று சொன்னால் உடம்பில் பொரி பொரியாய் அலர்ஜி வரும்) ஆர்வமுடையவர் என்பதால் இந்த முறையில் அவருடைய பிரதியை வாசிக்கலாமா என்று முயற்சி செய்து பார்த்தாலென்ன என்று தோன்றியது.  உடனடியாக அதனை செயல்படுத்தவும் படுத்தினேன்.  ஆனால் என் வேதாளம் மீண்டும் முருங்கைமரத்திலேயே தான் ஏறியது.

வாய்மொழி மரபுகளில் நிகழ்த்தப்படும் கதைகளை அந்தப் பார்வையாளர்கள் தங்களது ஞாபகத்தில் ஏற்கனவே கொண்டிருக்கிறார்கள்.  யாருக்குமே அது புது கதை அல்ல.  அந்த வருடத்தில் அந்த இடத்தில் நிகழும் அந்த நிகழ்வு மட்டுமே புதுசு. 
எனவே, வாய்மொழி மரபுகளில் காணப்படும் non-linearity  பின்னை நவீன non-linearity இல்லை என்பதை கொஞ்ச நேரத்திலேயே என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

அதற்கப்புறம், கோணங்கி, அடுத்த நாவல் எழுதும் போதும் நான் அந்த அடையாளம் தெரியாத அதிசயத்திற்காகக் காத்துக்கொண்டே இருந்தேன். 
ஆனால், அதிசயத்திற்கு சாதாரணர்களை அறவே பிடிக்காது போலும்.

நிற்க!

என் போதாத வேளை, இப்பொழுது ஜெயமோகனின் முறை.  கோணங்கி விழுந்த அதே மாதிரியான பள்ளத்தில் ஜெயமோகன் தானே போய் படுத்துக் கொண்டு நானும் வீழ்ந்தேன் என்றார்.

தமிழ் தான் எவ்வளவு கொடூரமான மொழி! இது காட்டுமிராண்டி மொழி என்று பெரியவர்கள் சொன்னது சரி தான் போல.

Comments

அன்புள்ள தர்மராஜ்

அந்த 'நாலைந்துபேரில்' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்

இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் 'ஆட்டமாட்டிக்' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம், உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு 'கிராஃப்ட்' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்

மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை, மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும், தத்துவமும், உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொன்டது அது.

இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது

இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உள்ளது

எப்படியானாலு ஓர் எச்சரிக்கையாகவே உங்கள் எடுத்துக்கொள்கிறேன். நன்றி

ஜெ

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக