Friday, 19 December 2014

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் 9 – போலச்செய்தல் என்ற புனைவும் திரும்பச்செய்தல் என்ற யதார்த்தமும்போலச்செய்தல் என்ற புனைவும் திரும்பச்செய்தல் என்ற யதார்த்தமும்

போலச்செய்தல், தனக்குள் நாடகத்தன்மையைக் கொண்டவொரு நிகழ்த்துதல் கூறு.  அதன் உள்ளார்ந்த உணர்வு பகடி.  யதார்த்தத்தைப் பகடி செய்வது மட்டுமே தங்களது நோக்கம் என்பதை, ‘போலச்செய்யத் தொடங்கும் நிகழ்த்துநர்கள் தெளிவாகச் சொல்லிய பின்பே நிகழ்த்துதல்கள் அரங்கேறுகின்றன.  இத்தகைய போலச்செய்யும் நிகழ்வுகளில் வெளிப்படும் அங்கதம், யதார்த்தத்தின் மீதான விமர்சனமாகக் கருதப்படுகிறது.  யதார்த்த பண்பாட்டு வெளியிலிருந்து துல்லியமாக வேறுபடுத்தப்பட்ட, புனைவுவெளியில் நிகழ்த்தப்படும் போலச்செய்தல்களை அனைத்து சமூகங்களும் அங்கீகரிக்கின்றன என்பதோடு, அந்நிகழ்வுகளை நடத்தும் கலைஞர்களை புரக்கவும் செய்கின்றன.

போலச்செய்தலின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக, தெருக்கூத்தின் கட்டியக்காரனையும், ராஜா ராணி ஆட்டத்தின் பபூனையும், தோற்பாவைக்கூத்தின் உச்சிக்குடுமி – உளுவத்தலையன் கதாபாத்திரங்களையும் குறிப்பிடவேண்டும்.  அதிகாரம் ததும்பும் கதாபாத்திரங்களை, யதார்த்தத்தில் கேட்க முடியாத அத்தனைக் கேள்விகளையும் நகைச்சுவை என்ற பெயரில், புனைவு தருகிற சௌகரியத்தில் கேட்டு விடுகிற இக்கதாபாத்திரங்கள், தற்காலிகத் தலைகீழாக்கங்களை உருவாக்கி விட்டு, மறுகணமே தங்களையும் தங்களது கேள்விகளையும் ‘கோமாளித்தனங்களாக மாற்றிக் கொள்வதை ‘போலச்செய்தலின் அடிப்படை குணங்கள் என்று சொல்ல முடியும். இவ்வாறு உருவாக்கப்படுகிற கண நேர தலைகீழாக்கத்தின் மற்றுமொரு பரவச வடிவம் சர்க்கஸ் கோமாளிகள் – ஏறக்குறைய எல்லா வித்தைகளையும் அறிந்திருக்கிற இக்கோமாளிகள் பார் விளையாடும் வீரர்களைப் போலச்செய்து, அற்புதமாய் விளையாடி, பின்பு தலைகுப்புற கீழேவிழுந்து சிரிக்க வைக்கும் காட்சி, போலச்செய்தலின் உட்சபட்சம்.

பகடி ததும்பும் போலச்செய்தல்களை விவாதித்த ஆய்வாளர்கள், இவையனைத்தும் அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அடித்தளமக்களின் கூர்மையான சமூக விமர்சனங்கள் என்பதாக விளக்குகிறார்கள்.  அந்நிகழ்வுகளில் வெளிப்படும் கிண்டலும் கேலியும், நிஜ வாழ்க்கையை தலைகீழாக்கும் உத்தியைக் கொண்டுள்ளதாய் எழுதுகிறார்கள்.  ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய, அடக்குமுறைகள் மலிந்த சமூகச் சூழலில் தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை இவ்வாறு போலச்செய்வது மூலம் நகைச்சுவையாய் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள்.  இதன் தொடர்ச்சியாக, ‘அங்கதம், ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விவரிக்கிறார்கள்.

இந்நிகழ்வுகளில் பகடி செய்யப்படும் அதிகார சமூகங்கள், இத்தகைய போலச்செய்தல்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை சற்று ஆழமாகப் பார்ப்பது அவசியம்.  இத்தகைய நாடக நிகழ்வுகள் அவ்வதிகார சமூகங்களின் நிதியுதவியுடனேயே நிகழ்வதால், தங்கள் மீதான நகைச்சுவைகளை பெருந்தன்மையோடு அனுமதிக்கும் பாத்திரத்தை அவர்கள் கச்சிதமாய் ஏற்றுக்கொள்கிறார்கள்; மேலும், அத்தகைய போலச்செய்தலை எந்த நேரமும் தடைசெய்யக்கூடிய, மாற்றியமைக்கக்கூடிய வல்லமை தங்களுக்கு இருப்பதையும் அவர்கள் மிகத்தெளிவாய் உணர்ந்திருக்கின்றனர், அவ்வப்போது அதனைப் பரிட்சித்தும் பார்க்கிறார்கள். 

தங்களது யதார்த்த வாழ்வை புனைவு வெளிகளில் அங்கதப்படுத்திய நிகழ்த்துநர்களை பண்பாட்டு வெளிகளில் அவமரியாதை செய்யும் பழக்கத்தையும் அவர்கள் கைக்கொண்டிருக்கிறார்கள்.  நிகழ்ச்சி முடிந்து கூலிக்காகக் காதிருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களை அவமானப்படுத்துவது, தொழுவங்களில் அவர்களுக்கு உணவளிப்பது, பெண்கலைஞர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது போன்ற சாத்தியப்பட்ட அத்தனை வழிகளிலும் தனது மேலாண்மையை நிரூபித்துக் கொண்ட பின்பு தான் அதிகார சமூகங்கள் சமாதானமடைகின்றன.  இவையனைத்தையும் கடந்து, அவற்றிற்கு ஆசுவாசம் தரும் இன்னுமொரு உண்மை, இவ்வாறு புனைவுவெளிகளில் செய்யப்படும் போலச்செய்தல்களுக்கு பண்பாட்டு வெளிகளில் எந்தவொரு தொடர்ச்சியும் இல்லையென்பது தான். 


போலச்செய்தல் என்பது சமூகச்சீர்கேடுகளின் மீது கூர்மையான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றன என்றாலும், அதன் அங்கத வடிவம், புனைவுச்சூழல், பண்பாட்டு வெளியிலிருந்து விலகியிருத்தல், பொருளாதார ரீதியாய் அதிகார வகையினரை அண்டியிருத்தல், மிதமிஞ்சிய பணிவு போன்ற அனைத்தும் அதன் வலிமையை நிர்மூலமாக்கிவிடுகின்றன.

தேவேந்திரர்கள் நிகழ்த்தும் திரும்பச்செய்தல்கள் மிகத் தெளிவாக போலச்செய்தலிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றன.  அடிப்படையில், அவை தங்களது அடிப்படை உணர்வை, ‘பகடி என்று சொல்வது இல்லை; மாறாக அதனை யதார்த்த உலகின் அத்தனைப் புனிதங்களுடன் நிகழ்த்துகின்றன.  இரண்டாவதாக, தங்களது திரும்பச்செய்தலை, அதிகாரப் பகிர்வுகள் அரங்கேறும் பண்பாட்டு வெளிகளிலேயே நிகழ்த்துகின்றன; தொடர்ச்சியாய் அதிகாரத்தில் பங்கேற்கும் உரிமையையும் கோருகின்றன.  மூன்றாவதாக, திரும்பச்செய்தலுக்கான பொருளாதார வளங்களை தேவேந்திரர்கள் தாங்களே திரட்டிக் கொள்கின்றனர்;  அவற்றிற்கான நிதி உள்ளிருந்தே உருவாக்கப்படுவதால், வெளி நிறுவனங்களின் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அவர்களை நிர்ப்பந்திக்க முடிவதில்லை. 

பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள், தங்களது சமூக விமர்சனங்களை அங்கதமாய் புனைவு வெளிகளில் போலச்செய்வதற்கும், தேவேந்திரர்கள் தங்களது சமூக விமர்சனங்களை கலகமாய் பண்பாட்டு வெளிகளில் திரும்பச்செய்வதற்குமான அடிப்படையான காரணங்கள் அவர்களது உள்ளிருந்தே நிதிவளங்களைத் திரட்டிக் கொள்ளும் ஆற்றலும், அந்தப் பொருளாதார சுயச்சார்பை மனவலிமையாக மாற்றிக் கொள்தலும், அம்மனவலிமையின் காரணமாகத் தன்னை ஒடுக்கப்பட்டவன் இல்லை என்று துணிவதும், அத்துணிச்சலின் மேலேறி நின்று அதிகாரப் பகிர்வில் சமவுரிமையைக் கோருவதும் என்று சொல்லி விவாதித்துப் பார்க்கலாம். 

ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாகக் கொண்டாடப்படும் போலச்செய்தல் மூலமான தலைகீழாக்கம் கருத்தாக்கத் தளங்களில் அதிர்வுகளை எழுப்புவதோடு நிறுத்திக் கொள்கையில், திரும்பச்செய்தல்கள் பௌதீகரீதியிலான சமூகச் சீரமைப்புகளைக் கட்டாயப்படுத்துகின்றன.  இதனாலேயே, ‘போலச்செய்தலில் வெளிப்படும் தன்னைப்பற்றிய கேலியையும் கிண்டலையும் பெருந்தன்மையுடன் மன்னித்தருளுகிற தமிழ் சாதிய மனம், ‘திரும்பச்செய்தலில் வெளிப்படும் வெப்பத்தைத் தாங்க முடியாது பதட்டமடையத் தொடங்குகிறது.  தனது சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி திரும்பச்செய்தல்களை நிறுத்த முனைகிறது.

(தொடரும்)

1 comment:

Jonathan said...

Sir,

Just to say you hello and remind you that we are waiting for upcoming posts.
Regards