Skip to main content

திராவிட காலத்தில் பிராமணர்களுக்கு சாபவிமோசனம் உண்டா?




                             முன் கதை சுருக்கம்:
நாங்குநேரிக்கு அருகில் இருக்கிறது திருக்குறுங்குடி.  அந்த ஊரில் வடிவழகிய நம்பி கோயில் பிரசித்தம்.  அக்கோயில் கோபுரத்தை சித்திரக் கோபுரம் என்று அழைக்கிறார்கள்.  இசைக்கலை தொடர்பான அழகிய சிற்பங்கள் அந்தக் கோபுரத்தில் உண்டு.  எனக்கு அக்கோவிலை ஓவியர் சந்ரு தான் அறிமுகப்படுத்தினார்.  சித்தன்னவாசலில் ஓவியமாக வரையப்பட்டிருக்கும் ‘தாமரைக்குளம் இக்கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி அதைப் பார்ப்பதற்காகத் தான் போயிருந்தோம்.

வடிவழகிய நம்பி கோயிலில் பெருமாள் படுத்து, நின்று என்று பல்வேறு நிலைகளில் காட்சி தந்தாலும், அவ்வளாகத்தின் முன்புறம் வேண்டா விருந்தாளி போல் நிற்கும் இன்னொரு கட்டிட அமைப்பில், 9ம் நூற்றாண்டு சிற்பமாக, சிவன், ‘கஜசம்ஹாரமூர்த்தி வடிவில் நின்று கொண்டிருக்கிறார்.  அழகிய நம்பிக்கும் கஜசமஹாரமூர்த்திக்கும் இக்கோயில் தொடர்பான தாவா ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதால், அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் தவிர்த்து விடுகிறேன்.


நான் பேச வந்தது, அக்கோயிலில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் ‘கைசிக நாடகம் என்ற மீட்டுருவாக்கம் (?) பற்றி.

இது குறித்து, ‘மீண்டும் உயிர்பெற்ற கைசிக நாடகம் என்ற அ. கா. பெருமாளின் கட்டுரையை 7-12-2014 தி இந்துவில் படித்தவர்களும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கார்த்திகை மாத ஏகாதசி நோன்புக்கு திருக்குறுங்குடி வந்து கைசிக நாடகம் பார்த்து பாவவிமோசனம் அடையும் பிராமணர்களும் இந்த முன் கதை சுருக்கத்திற்கு காத்திராமல் கட்டுரைக்குப் போகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நீங்கள் அங்கே போய் காத்திருங்கள், இதோ மற்றவர்களுக்கு ஒரு சில தகவல்களை சொல்லி விட்டு பின்னாடியே வந்து விடுகிறேன்.

வடிவழகிய நம்பி கோயில் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.  108 வைணவத் திருத்தலங்களில் 57வது இடம் இக்கோவிலுக்கு.  தன்னுருவைக் குறுக்கி அவதாரம் எடுத்த பெருமாள் சிலகாலம் இந்த ஊரில் தங்கியிருந்ததால் இவ்வூர் குறுங்குடியானது என்றொரு கதையைச் சொல்வார்கள். 



இவ்வூரின் பெருமாள் இசை நாட்டமுடையவர்.  அதனால், அவர் முன் நின்று நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடுவதற்காக அரையர் குடும்பங்கள் இந்த ஊரில் தங்கவைக்கப்பட்டன.  இசைப் பிரியனான பெருமாள், அரையர் குடும்பத்தினர் தத்தமது வீட்டுக் கொல்லைகளில் நின்று பாடலைப் பயிற்சி செய்யும் போது கூட, அங்கு வந்து நின்று அப்பாடலைக் கேட்கும் குணத்தினன். ‘வளர் அரையர் திருமனையில் / வந்து அவரை நிழல் தனில் / வன்கானம் கேட்ட பெருமாள்!’

இசைக்காக இத்தனை தூரம் இறங்கி வந்த பெருமாளுக்கு இசை தான் படையல் என்பதைச் சொல்லவா வேண்டும்.  தினம் தினம் இசை வேள்வி தான்.  வருடம் ஒரு முறை சிறப்பு இசை நிகழ்வு.  கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியன்று நோன்பு கடைபிடித்து, கைசிக புராணத்தை தேவதாசிகள் நாடகமாக நடிக்கிறார்கள். அன்றைக்கே அரையர்கள் தங்களது இசைச் சேவையையும் செய்கிறார்கள். வடிவழகிய நம்பியே அதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்.  இக்காட்சியை, பாவம் செய்த பிராமணரான நீங்கள் இரவு முழுக்க விழித்திருந்து பார்த்தால் உங்களுக்குப் பாவ விமோசனம் கிடைக்கிறது. மரபான நாடகக் கலையை வாழ வைத்த மாதிரியும் ஆச்சு; பிராமணர்களுக்கு விமோசனம் கிடைத்த மாதிரியும் ஆச்சு.  பிராமணர்கள் பாவம் செய்து கொண்டிருக்கும் காலம் வரை நாடகக் கலை அழியாது என்ற உத்தரவாதம் உண்டு.

நாடகத்தால் பாவவிமோசனம் கிடைக்கும் மாயமந்திரம் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில் தான், கைசிக புராண நாடகம்.

இது வேறு – முன் கதைச் சுருக்கம் இன்னும் முடியவில்லை – இது கதைக்குள் கதை!

வராக புராணத்தின் 48வது இயலில் ஒரு கதை சொல்லப்படுகிறது.  பெருமாளே பூமி தேவியிடம் இக்கதையைச் சொல்கிறார்.  கதைக்குள் கதை! 

அந்தக் கதை, ‘நம்பாடுவான் என்றொரு தாழ்த்தப்பட்ட பக்தனைப் பற்றியது.  அந்த பக்தன் தியாக குணத்திற்காக எவ்வாறு மெச்சப்பட்டான் என்பது தான் கதை.


இதுவும் வேறு – கதை நடந்து வந்த கதை

வடமொழியில் எழுதப்பட்டிருந்த வராக புராணத்தின் 48வது இயலுக்கு, 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பராசரப்பட்டர் மணிப்பிரவாள நடையில் உரையொன்று எழுதியிருக்கிறார்.  ஏகாதசி நோன்பில் இந்தக் கைசிக புராணத்தைப் பாராயாணம் செய்தால் கை மேல் பலனாம்.  ஸ்ரீரங்கம், திருப்பதி, திருக்கோட்டியூரிலெல்லாம் இது இன்றும் நடக்கிறது என்கிறார்கள்.  திருக்குறுங்குடியில் தான் இந்தப் புராணம் நாடகமாகவே நிகழ்த்தப்படுகிறது.

கைசிக புராண நாடக வடிவத்திற்கு 400 வயதிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.  அதாவது, விஜய நகர ஆட்சி காலத்தில் இந்த நாடக வடிவம் உருவாகியிருக்கலாம்.  ஆட்சியாளர்கள் இலக்கியவாதிகளாக இன்றைக்கே வலம் வரும் போது, அன்றைக்கு இருக்க முடியாதா என்ன? கிருஷ்ணதேவராயர் தானே தன் கைப்பட கீறிய (எழுத்தாணி) ‘ஆமுக்த மால்யதா என்ற தெலுங்கு காப்பியத்தில் நம்பாடுவான் ‘மால்கேசரி என்று அழைக்கப்படுகிறான்.  அவன் திருக்குறுங்குடியில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.  கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுதராயரின் மனைவி திருமலாம்பாள் (16ம் நூற்றாண்டு) கைசிக புராண நாடகம் நிகழ்த்துவதற்காக திருக்குறுங்குடி கோயிலுக்கு விளைநிலங்களை தானமாக வழங்கியிருக்கிறார்.

கடவுளே, இதுவும் வேறு – இன்னும் முன் கதை முடியவில்லை

தேவதாசிகளாலேயே நடத்தப்பட்டு வந்த கைசிக புராண நாடகம் இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய அழிந்து போனதற்கு தேவதாசி முறைக்கு எதிரான பிரச்சாரமும், ஒழிப்புச் சட்டமுமே முக்கியக் காரணங்கள்.  (நீதிக்கட்சியும் திராவிட சித்தாந்தமும் ஒரு கலை வடிவத்தை எப்படி அழிக்கிறது பாருங்கள்!) 1969ல் திருக்குறுங்குடியில் இக்கலைவடிவத்தை பார்த்ததாக எழுதும் ஜி. ஆர். வெல்போர்ன் 'தான் பார்த்த நாடகம் வசனங்களைத் தப்பும் தவறுமாக ஒப்பிப்பதாக இருந்தது' என்று வருத்தப்படுகிறார். 

இது அதுவே தான் – ஆலாபனை!

1.    கண்மூடித்தனமான (?) சமூக சீர்திருத்த நடவடிக்கைகளால் அழிந்து போன கலை வடிவங்களுள் ஒன்று – கைசிக புராண நாடகம்.  நமது நிகழ்த்துக் கலை மரபொன்று இவ்வாறு ஷீணித்துப் போவது பாரம்பரிய இந்தியப் பண்பாட்டிற்கு இழுக்காகும். எனவே அதனை மீட்டெடுப்பது நமது பண்பாட்டு மரபை மீட்டெடுக்கும் செயலாகும். (தேவைக்கேற்ப 'மண்ணின் மரபு' என்பதை சேர்த்துக்கொள்ளலாம்)

2.    நிகழ்த்துதலுக்கும் சடங்கிற்குமான உறவை மேற்கத்திய ஆய்வாளர்கள் பலரும் எடுத்து இயம்பியிருக்கிறார்கள்.  கீழைத்தேய மரபானது (நாம தான்) சடங்கையும் நிகழ்த்துதலையும் வேறுபடுத்தி பார்க்காதது என்றி வியக்கிறார்கள்.  அதாவது, கலை நமக்குப் புனிதமானது என்பதை அவர்களே உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.  சடங்கிலிருந்து தான் கலைகள் தோன்றின என்பதற்கு வாழும் உதாரணங்கள் நாம தான் (கீழைத்தேய மரபுகள்) என்பது அவர்கள் முடிவு.  அப்படியொரு சடங்குக் கலை வடிவமான ‘கைசிக புராண நாடகத்தை நாம், சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் போட்டு உடைத்திருக்கிறோம். (அடடா!)

3.    நவீனம், மரபிலிருந்து தான் உருவாக வேண்டும்.  நமது மரபை புறக்கணித்து, ஏதாவது புதிதாய் செய்தீர்கள் என்றால், காலனியமாதல், உலகமயமாதல், மேற்குமயமாதல் என்று ஏதாவது சொல்லிக் குழப்புவோம்.  அதனால், நீங்கள் மரியாதையாய் தமிழின் நவீன நாடக மரபை, கோயில் சார்ந்த மரபுக் கலைகளிலிருந்து உருவாக்கிக் கொள்வது தான் உத்தமம்.  எனவே, கைசிக புராண நாடகத்தை மீட்டெடுப்பது, மீட்டுருவாக்குவது, உழவாரப்பணி செய்வது அனைத்தும் நவீன நாடகத்தை நோக்கிய பாய்ச்சல் தான்.

4.    இது அத்தனை முக்கியமில்லை என்றாலும், இதுவும் கூட ஒரு காரணம் தான்!  கைசிக புராண நாடகத்தின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான வைணவப் பிராமணர்கள் தங்களது அந்தந்த வருடத்து பாவங்களை பைசல் பண்ணி வந்தார்கள் என்பது சமூகம் அறிந்தததே!  இதனாலேயே பூமி ஷேமமாக இருந்தது.  அந்தோ... அக்கலைவடிவத்தை அழித்தார்கள்! இந்த லோகம் பாவத்தால் நிரம்பியது.  பாவம் செய்வதற்கான வாய்ப்புகள் உலக அளவாய் விரிந்துள்ள இக்காலகட்டத்தில், விமோசனத்திற்கு வழியின்றி அய்யங்கார்கள் அடையும் துன்பம் சொல்லி மாளாது.  (திராவிட இயக்கம் பிராமணர்களை என்னவெல்லாம் தான் செய்திருக்கிறது!)

இது வேறு அது

வராக பெருமாள் பூமி தேவியிடம் நம்பாடுவானின் சரித்திரமெனச் சொன்னது கீழ்படி - 


திருக்குறுங்குடி நம்பாடுவான், ஒரு இழிசனன் / புலையன் / பாணன் / அரிசன் / தாழ்த்தப்பட்டவன் / சாம்பான் / எஸ்சி / பறையன் / தலித் என்று ஆயிரத்தெட்டு நாமங்கள் கொண்டவன்.  ஆனால் பாருங்கள் கலைஞன், இசைக் கலைஞன்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிக்கு கைசிகப் பண் பாடி மகிழ்விப்பது நம்பாடுவானின் வழக்கம்.  கைசிகம் என்பதை இன்றைய பைரவி என்பார்கள்.  இப்படியே நம்பிக்கு கைசிகப் பண்ணைப் பாடியதன் மூலம் நம்பாடுவான் ஏகப்பட்ட புண்ணியம் தேடி வைத்திருக்கிறான்.

ஒரு நாள், கைசிகப்பண் பாட கோயிலுக்குச் செல்லும் நம்பாடுவான், பிரம்மராட்சஷ் ஒருவனிடம் மாட்டிக் கொண்டான்.  யாகத்தின் போது மந்திரத்தைத் தவறுதலாய் சொல்லும் பிராமணர்கள் சாபத்தினால் பிரம்ம ராக்கதனாய் மாறிவிடுகிறார்கள்.  அப்படியொரு ராக்கதன் தான் நம்பாடுவானை மறித்தது.  மறித்ததோடு 'நான் உன்னைத் தின்னப் போகிறேன்' என்றும் அவன் சொன்னான்.

நம்பாடுவான், உயிர் போவதற்கு முன் தன் கடமையை ஆற்ற ராக்கதனிடம் அனுமதி கேட்கிறான்.  அதாவது, அழகிய நம்பியிடம் சென்று கைசிகப் பண்ணைப் பாடி கொஞ்சம் புண்ணியம் வாங்கிக் கொண்டு அதன் பின் செத்துப் போவது!  பிரம்மராக்கதன் 'சரி, போய் வா' என்று சொல்லி அனுப்பி வைக்கிறான்.

நம்பாடுவான் வழக்கம் போல் கோயிலுக்கு வந்து கைசிகப்பண் பாடி பெருமாளை மகிழ்வித்து விட்டு ராக்கதனிடம் திரும்புகிறான்.

எல்லாம் அறிந்த பெருமாள் ஒரு வயோதிக பிராமணனாக நம்பாடுவானை வழி மறித்தார்.  'அந்தப்பக்கம் ராக்கதன் நிற்கிறான்; நீ வேறு வழியாய் போய் விடு' என்றார். (பக்தனாய் இருப்பது தான் எவ்வளவு சோதனையானது பாருங்கள்.) நம்பாடுவான் அதை மறுத்து விட்டு, தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ராக்கதனிடமே திரும்ப வருகிறான்.

நம்பாடுவானின் நேர்மையை ரசித்த ராக்கதன், 'நான் உன்னைத் தின்ன விரும்பவில்லை. எனக்காக ஒரு முறை கைசிகப் பண்ணை மட்டும் பாடு' என்கிறான். நம்பாடுவான் திட்டமாய் மறுத்து விட்டான்.  அது அழகிய நம்பிக்கானது. தெய்வீக ராகம்!

 
'சரி, பாட வேண்டாம்.  உன் புண்ணியத்தையாவது தானம் கொடு. என் பாவம் தீரட்டும்' என்றான் ராக்கதன். இறுதியில் மனமிரங்கிய நம்பாடுவான் பிரம்மராட்சஷன் பாவ விமோசனம் அடைய உதவி செய்கிறான்.

கைசிக புராண நாடக நிகழ்வு

2009ம் வருடம், கார்த்திகை மாதத்து வளர் பிறை ஏகாதசி இரவில் எந்தவித நோன்பும் இருக்காமல், கைசிக புராண நாடகத்தை நான் பார்த்தேன்.  கோயிலின் தென்பகுதியில் நாடக மண்டபம் ஒன்று தனியே இருக்கிறது.  அதன் நுழைவாயிலில் மேடையமைக்கப்பட்டிருந்தது.  அம்மண்டபத்தின் பின் பகுதியில் அமர்ந்து அழகிய நம்பியும் வானமாமலை ஜீயரும் நாடகத்தை ரசித்தார்கள்.

செ. ராமானுஜம் தனது நவீன நாடக அனுபவம், தெருக்கூத்து மரபு பற்றிய தெளிவு, நார்த்தேவன் குடிக்காட்டு நாடக மரபு போன்ற அனைத்தையும் கலந்து கைசிக புராண நாடகத்தை மீட்டுருவாக்கியிருந்தார்.  அன்றைக்கு அதையே அவரிடமும் சொன்னேன்.  ஆனால், அவருக்கு தான் செய்த வேலையை மீட்டுருவாக்கல் (reconstruction) என்று சொல்வதை விடவும் புனரமைத்தல் (revival) என்று சொல்வதற்கே விருப்பமாய் இருந்தது.

கைசிக நாடக நிகழ்வை விடவும் அந்தக் கோயிலில் அன்றைய இரவு நடைபெற்ற பிற விஷயங்களே எனக்கு நெடு நாள் கேள்விகளாக இருந்தன.  அன்றைய நிகழ்விற்கு பார்வையாளராக இருந்தவர்களில் கணிசமானோர் பிராமணர்களாக இருந்தனர்.  அவர்களில் பல ஆண்கள் வெற்று மேலில் பூணூல் புரள திரிந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வீடியோ கேமராவோ அல்லது ஸ்டில் கேமராவோ இருந்தது.

நாடகம் பார்ப்பதற்காக அழகிய நம்பியையும், ஜீயரையும் பல்லக்குகளில் தூக்கி வரும் போது அப்பிராமண ஆண்கள் எழுப்பிய 'வழி.. வழி..' கூச்சல், அதைத் தூக்கிச் செல்வதில் காட்டிய வேகம் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.  அந்தக் கூச்சலும் வேகமும் வெகுஜனத் திரளுக்கான குணங்களைக் கொண்டிருந்தது.  உலகின் வெவ்வேறு பகுதிகளில் (சிலிக்கான் பள்ளத்தாக்கு உட்பட) வசிக்கும் பிராமணர்களாக அடையாளப்படுத்தப்பட்ட அப்பார்வையாளர்கள் அச்சடங்கில் கலந்து கொள்வது குறித்து அடைந்த மனக்கிளர்ச்சி நவீன நாடகத்திற்கு தொடர்பில்லாததாகவே இருந்தது.  ராமானுஜமும் நாங்களும் அந்த சலசலப்புகளுக்கு வெளியே கற்தரையில் அமர்ந்து தான் நாடகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  சடங்கு மட்டும் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

இது வேறு இது வேறு

நம்பாடுவான் கதையை அறிமுகப்படுத்துகிறவர்கள் அனைவரும் அது சாதியத்திற்கு எதிரான புரட்சி என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்கள்.  'அது என்ன அப்படி ஒரு புரட்சி?' என்றால், 'ஒரு தாழ்ந்த சாதி நம்பாடுவான், உயர்ந்த சாதி பிராமணனுக்கு சாப விமோசனம் தருகிறான். இது புரட்சி இல்லையா?' என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

நமக்கு இந்த இடத்தில் தான் பிரச்சினை வருகிறது.

உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் தாழ்ந்த சாதியைச் சார்ந்தவனின் காலில் விழுவதும், அவனுடைய உதவியைக் கோருவதும், அவனால் பயன் பெறுவதும் எப்பொழுது புரட்சியாக மாறுகிறது?  ராக்கதனை உயர்ந்த சாதியாகவும் நம்பாடுவானை தாழ்ந்த சாதியாகவும் நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுதே அந்தப் புரட்சி உதிக்கிறது.


இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு ராக்கதன் ஒரு மனிதனால் திருத்தப்பட்டான் என்ற கதையாகப் புரிந்து கொண்டால் அதில் புரட்சியைக் காணோம்.  அப்படியானால், இந்தக் கதையில் புரட்சியை அனுபவிப்பதற்கு நீங்கள் முதலில் உயர்ந்த சாதி (அவர் ராக்கதனாகவே இருந்தாலும்), தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக, நம்பாடுவான் என்ற தாழ்ந்த சாதிக்காரன் என்ன காரணத்திற்காக, தான் தேடி வைத்த புண்ணியத்தையெல்லாம் தானமாக வழங்கி அந்த உயர்ந்த சாதி ராக்கதனைக் காப்பாற்ற வேண்டும்? 
அழகிய நம்பியே கூட, வயோதிகக் கிழவனாக வந்து 'தப்பித்துப் போய்விடு' என்று ஆசை காட்டி நம்பாடுவானை சோதிக்க வேண்டும்?

ஒரு நிமிடம் பொறுங்கள்!

இந்தக் கதை, தாழ்த்தப்பட்டவர்கள் மீது காலம் காலமாய் இந்த சமூகம் சொல்லி வரும் அபவாதங்களான 'பொய்சொல்கிறவர்கள்', 'ஏமாற்றுக்காரர்கள்', 'வாக்கு தவறுகிறவர்கள்' போன்றவற்றிற்கு எதிராக நம்பாடுவான் என்ற கதாபாத்திரம் தீக்குள் இறங்கிக் காட்டி தன் கற்பை நிரூபித்த கதையா அல்லது சாதியப் புரட்சி கதையா?

நம்பாடுவான் ஒரு இலட்சிய வகைமாதிரி கதாபாத்திரமாக செதுக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள பெரிய பெரிய கட்டுடைப்புகளெல்லாம் தேவையில்லை.  கொஞ்சமே கொஞ்சம் கேள்விகள் இருந்தால் போதும்.

ஒரு முன்மாதிரி தாழ்த்தப்பட்டவனாக மாறுவதற்கு முதலில் நீங்கள் உங்கள் தொழிலை (நம்பாடுவானுக்கு இசை, பிறருக்கு விவசாயம், துப்புறவு, தோல் செப்பனிடுதல், இப்படி ஏதாவது) கண்ணும் கருத்துமாய் செய்ய வேண்டும்; உயிரே போனாலும் உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலையைச் செய்த பின்பே செத்துப் போக வேண்டும்; அநியாயக்காரனிடம் கூட நியாயமாய் நடந்து கொள்ள வேண்டும்; கடவுளே வந்து புத்தி சொன்னாலும் முட்டாள்தனமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும்;  உயர்சாதிக்காரர்கள் (அவர்கள் எப்பேர்பட்ட அக்கிரமக்காரர்களாக இருந்தாலும், ஏன் ராட்சஷர்களாக இருந்தாலும்) எதைக் கேட்டாலும் அப்படியே வாரி வழங்கும் கொடைத்தன்மை கொண்டிருக்க வேண்டும். இது தான் அந்தப் புராணக்கதை கட்டமைக்கிற தாழ்த்தப்பட்டவனின் சித்திரம்.

இப்படியான உன்னத குணங்களையும் லட்சணங்களையும் உடைய தாழ்ந்த சாதிக்காரர்களை உருவாக்கும் புராணம் எப்படி சாதியத்திற்கு எதிரான புரட்சியாக இருக்க முடியும் என்பது பெருமாளுக்கே (அ. கா.) வெளிச்சம்.
இந்தப் பழைய சதியைத் தான் கைசிக புராண நாடக மீட்டுருவாக்கம் என்று நவீன போர்வையில் செய்கிறார்கள்.  இதனால் தான் நவீனர்கள் மீது நமக்கு அவநம்பிக்கை மட்டுமே எஞ்சி நிற்கிறது.    

நவீன நாடகம், நாட்டுப்புறவியல், மரபைப் பாதுகாத்தல் என்ற புதிய வார்த்தைகளில் ஒரு நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த விஜய நகரமாக தமிழகத்தை மாற்றத் துடிப்பதில் இவர்களுக்கெல்லாம் என்ன நியாயம் இருக்க முடியுமென்றும் தோன்றவில்லை.

சடங்கும் நாடகமும் என்ற வாதம் நிகழ்த்துக் கலையைப் புரிந்து கொண்டு, அதன் பழமையை, மரபை உட்செறித்து நவீன நாடகத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்வதற்குத் தான் முன்வைக்கப்பட்டதே தவிர, மரபை தூசி தட்டி அரங்கு  வீட்டினுள் உட்கார வைப்பதற்கல்ல.  அப்படியொரு சடங்கு மேலோங்கிய கலையை மீட்டெடுக்கையில் வெளிப்படையான சாதிய ஒருங்கிணைப்புகள்  (கைசிக நாடக்த்தில் பிராமண சாதித் திரட்சி) நடப்பதற்கு இந்த நவீனர்கள தானே பொறுப்பு?

இது வேறு வேறு வேறு வேறு வேறு வேறு

நம்பாடுவான் கதையின் அரசியல் வெகு எளிமையானது; அதே நேரம் வெற்றிகரமாய் செயல்படக்கூடியது.

உயர்ந்த சாதியினர் எப்பொழுதெல்லாம் தண்டிக்கப்படுகிறார்களோ (பிரம்ம ராட்சஷ்)  அப்பொழுதெல்லாம் தாழ்ந்த சாதியினரின் வெகுளித்தனமே அவர்களைக் காப்பாற்றுகிறது. தண்டனையிலிருந்தும்,

அவப்பெயரிலிருந்தும், குற்றவுணர்விலிருந்தும் உயர்சாதியினர் தப்பித்து வெளிவருவதற்கு தாழ்ந்த சாதியினரே பலியிடப்படுகிறார்கள்.

இந்த உயர் சாதித் தந்திரத்திற்கு வராக புராணம் வரையில் போய் நம்பாடுவான் கதையை உதாரணம் காட்ட வேண்டிய அவசியமேயில்லை. புதுக்கருக்கு கலையாத இரண்டு புதிய காட்சிகளை என்னால் உங்களுக்குக் காட்ட முடியும்.

முதல் காட்சி

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், சாதியை வைத்துக் கொண்டு பிராமணர்கள் செய்த அனைத்து தகிடு தத்தங்களும் பிற்படுத்தப்பட்டவர்களால் (திராவிட அரசியல்) கண்டறியப்பட்டன.  இதன் விளைவாக பிராமணர்களுக்கு ஒரு வித சமூகப் புறக்கணிப்பே கூட தண்டனையாக (பிரம்ம ராட்சஷ்) வழங்கப்பட்டிருந்தது.  இதனால் அவர்கள் தங்களது பழைய செல்வாக்கோடு முன்பு போல் செயல்பட முடியாமல் போனது.

ஆனால், இன்றைக்கு, அந்தத் திராவிட அரசியல் தனது பிற்போக்குத் தனங்களுக்குள் மாட்டிக் கொண்டு கடைசி சுவாசத்தை விட்டுக்கொண்டிருக்கிறது.  இதைக் கண்ட பிரம்ம ராட்சஷர்கள் தங்களது சாப விமோசனத்திற்கான தருணம் இது என்று நினைக்கிறார்கள்.

சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம தங்கள் மீது தொடுக்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லியிராத பிராமணர்கள், வழக்கம் போல தங்களுக்கான நம்பாடுவான்களைத் தயார் செய்கிறார்கள்.  இப்பொழுது உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் தாம் நம்பாடுவான்கள். 

பிராமணர்களை கேள்விக்குட்படுத்திய பிராமணரல்லாதோர் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கிய வகையில் நம்பாடுவான் கணக்கில் ஏகப்பட்ட புண்ணியங்கள் சேர்ந்துள்ளன.  இந்தப் புண்ணியங்களைத் தானமாகப் பெற்று (அதாவது தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கிய பாவத்தைச் செய்தது 'பிராமணரல்லாதோர்' என்ற வாதத்தை முன்வைத்து) தன்னை விடுவித்துக் கொள்ள பிரம்ம ராட்சஷன் துடியாய் துடிக்கிறான்.

தனக்கு வழங்கப்பட்ட சாபமே தவறானது.  சாதியை உருவாக்கிய பொறுப்பு என்னுடையது அல்ல.  அது முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தது.  வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களைக் கேட்டுப்பாருங்கள்.  உண்மையை அவர்கள் சொல்வார்கள்.  நாங்கள் அப்பாவிகளாக்கும் என்று புலம்புகிறார்கள் பிரம்ம ராட்சஷர்கள்.

இரண்டாம் காட்சி

உயர் சாதி என்றால் பிராமண சாதி மட்டும் இல்லை, எங்களைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் கொடூர உயர் சாதிகள் தாம் என்றது தலித் அரசியல். 

சுயமரியாதையைத் தனக்குக் கேட்டு வாங்கிய பிற்படுத்தப்பட்ட சாதிகள் அதனை எங்களுக்கு மறுக்கும் அரசியல் தான் திராவிட அரசியல் என்று தாழ்த்தப்பட்டவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு வலுவானது, சான்றுகளுடையது.

இதன் விளைவாக பிற்படுத்தப்பட்ட சாதிகளே பிரம்ம ராட்சதர்களாக உருமாறினார்கள். அவர்களது கொள்கை முக்காடெல்லாம் கலைந்து போனது.  ஆனால், அவர்கள் கொஞ்சமும் சளைவில்லையே!

தேர்ந்த உயர்சாதியினரைப் போல திராவிட ராட்சஷர்கள் தங்களது சாப விமோசனத்திற்கு தயாரானார்கள்.  அவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவன் ஒருவன் தேவைப்பட்டான்.  அப்படிக் கிடைத்தவர்கள் தான் அருந்ததிய சாதியினர்.

தாழ்த்தப்பட்ட சாதிகளால் புறக்கணிக்கப்பட்ட வகையில் அருந்ததிய நம்பாடுவான் கணக்கில் ஒரு சுமை புண்ணியம் இருக்கிறது.  திராவிட ராட்சதரின் சாப விமோசனத்திற்கு இது போதுமானது. 

தன்னை சாதி வெறியன் என்று குற்றம் சாட்டிய தாழ்த்தப்பட்ட சாதிகள் அருந்ததியருக்குப் பதில் சொல்லட்டும் என்று பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசியல் பேசுகின்றன. 

'தலித்துகள் என்னைப் பார்த்து சாதி வெறியன் என்கிறார்கள்.  சமூக நீதிக்குப் போராடியவனே நான் தான்.  தாழ்த்தப்பட்ட இட ஒதுக்கீட்டை கூட எப்படி பங்கு வைத்துக் கொடுத்திருக்கிறேன் என்று பாருங்கள்!  தலித்துகள் தான் சாதி வெறியர்கள்.  இதற்கு அருந்ததிய நம்பாடுவானே சாட்சி', என்பது தான் பிற்படுத்தப்பட்ட வாதம். 

நமது நவீனர்கள் கைசிக புராண நாடகத்தை மீட்டுருவாக்குவது, உயிரூட்டுவதெல்லாம் தற்செயல் இல்லை என்பது இப்பொழுது புரிகிறதா? 

Comments

vasan said…
உயர்வகுப்பினர் உண்ட எச்சில் இலையின்மீது
அங்க பிரதட்சணம் செய்வது புண்ணியம் என்று
கர்நாடகா கோவிலில் இன்றும் நடக்கும் ஒரு சடங்கு
பகுத்தறிவாளர்கள் போராடியும் நிகழ்வு தடையின்றி
ஆண்டு தோறும் விமரிசையாய் நடக்கிறது.
கல்வி அறிவின்மை, அவர்களுக்கு கிடைக்கும் தலைமை
போன்றவைகள் அவதானிக்கப்பட வேண்டும்.
Anonymous said…
Brahmin means the person who has knowledge of brahma(world).
So anyone who wants to be brahman can start reading vedas and gain knowledge of world and become brahmin.
No person is born brahman nit even people who born in brahman caste. They can only be called brahman if they have read vedas or has knowledge of world.
Anonymous said…
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
Unknown said…
இதை படித்த பிறகு தான் நம்பாடுவான் என்ற தலித்தின் கதையை தெரிந்ததுகொண்டேன் .
நந்தன் என்ற திருநாளை போவார் , திருப் பாணாழ்வார் பற்றி தான் இதுவரை அறிந்துள்ளேன்.புதிய தகவல் அளித்ததற்கு அண்ணனுக்கு நன்றி
Unknown said…
இதை படித்த பிறகு தான் நம்பாடுவான் என்ற தலித்தின் கதையை தெரிந்ததுகொண்டேன் .
நந்தன் என்ற திருநாளை போவார் , திருப் பாணாழ்வார் பற்றி தான் இதுவரை அறிந்துள்ளேன்.புதிய தகவல் அளித்ததற்கு அண்ணனுக்கு நன்றி
மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்....Compelling argument
hats off.accurately on target
பகிர்ந்துகொள்ள தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.
You can share it with proper acknowledgement.
Karthick said…
Nicely written & the most balanced view ... Thank you !

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக