Saturday, 31 January 2015

மாதொருபாகன் என்ற புனிதப்பிரதிஅன்புள்ள எம். ராஜா,

மாதொருபாகன் நிகழ்வு குறித்த உங்களது எதிர்வினைகளுக்கு நன்றி.  நீங்கள் கவனப்படுத்தும் இரண்டு செய்திகளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன்.


 
1.    மாதொருபாகன், சாதியமைப்பு மீதான விமர்சனங்கள் கொண்ட படைப்பு.
2.    நிலவுடமைச் சமூக மதிப்பீடுகளில் தோய்ந்திருக்கும் குடியானவனின் பார்வையை மாதொருபாகன் துல்லியமாகப் பதிவு செய்கிறது.

பெருமாள்முருகனின் முந்தைய பிரதிகளை வாசித்திருக்கிற ஒருவருக்கு, மாதொருபாகனை இவ்வாறு சாதியமைப்பு குறித்த கண்டனங்கள் நிறைந்த பிரதியாக வாசிப்பதற்கான ஆவல் ஏற்படுவது இயல்பு தான்.  ஆனால், வாசக விருப்பத்தையும் தாண்டி, குறிப்பிட்ட பிரதி அப்படியொரு வாசிப்பிற்கான வாய்ப்புகளை வழங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.  மாதொருபாகன் அப்படியான வாய்ப்புகளை வழங்கவில்லை என்பதே எனது முடிவு.

திருவிழாக்களில் உருவாகும் சொற்ப நேர சமூக நெகிழ்வு சாதியால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.  அங்கொரு கட்டற்றத் தன்மை உருவாகிறது.  அந்தக் கட்டற்ற சூழலில் இழப்பதற்கு எதுவுமற்றவனே பலசாலியாக இருக்கிறான்.  ஏனென்றால் அவனிடமிருந்து பறிப்பதற்கு எதுவுமிருக்கவில்லை.  அந்தஸ்து, மரியாதை, பெருமை, மரபு, கற்பு போன்ற எந்தவொரு பண்பாட்டுக் காரணிக்கும் அந்த கணத்தில் எதிர்மதிப்பு தான் - அது எப்பொழுதும் போல மனிதர்களுக்குக் கவசமாக இருப்பதில்லை; ஆபத்தைக் கொண்டு வரும் காரணியாக மாறிவிடுகிறது.  எனவே தான் பண்பாடு அயர்ந்திருக்கும் அந்தக் கணத்தை 'ஒடுக்கப்பட்டவர்களின் பொழுது' என்று அழைக்கிறோம்.

காளியும் பொன்னாவும் சாதிப் படிநிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை என்றாலும், குழந்தைப் பேறற்ற தம்பதியினர் என்ற அளவில் சமூக மரியாதையோ அந்தஸ்தோ சடங்கு அதிகாரமோ வழங்கப்படாத, அமங்கலமென்று தூற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட வகையினர் தாம்.  அது குறித்த மனக்காயங்களோடே அவர்கள் வாழ்ந்தும் வருகிறார்கள்.  தங்கள் மீது அநியாயமாய் அடக்குமுறையை ஏவிக்கொண்டிருக்கும் சமூகத்தை அந்தத் திருவிழா தருணத்தில் பழிதீர்த்துக் கொள்ள அவர்கள் முடிவு செய்கிறார்கள் (ஒரு வேளை) என்றால் அதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும் தான்.  எனவே சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது வேறெந்தவொரு சமூகக் காரணியால் ஒடுக்கப்பட்டவர்களும் கூட திருவிழாத்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  
திருவிழாவின் போது முகம் தெரியாத யாரோ ஒருவருடன் இணைந்து கர்ப்பம் தரிக்க முயல்வதில் தீண்டத்தகாத சாதிக்காரரோடு முயங்கிவிடும் ஆபத்து இருக்கிறதாகக் காளி விசனப்படுவது கைமீறிவிட்ட சூழலில் சொல்லப்படுகிற இறுதிக் குற்றச்சாட்டு தானே தவிர, அதுவே தான் அவனது பிரச்சினை என்று சொல்வதற்கு இல்லை. 
 
மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத தனது ஏகபத்தினித் தனத்தையே தனது மனைவியிடமும் காளி எதிர்பார்க்கிறான்.  மரபான தமிழ்க் கணவனொருவனுக்குக் கற்பு குறித்து உருவாகக்கூடிய மிகச் சாதாரணமான ஏக்கம் இது.  மாதொருபாகன் பிரதி இந்த ஏக்கத்தைத் தான் விலாவரியாக விவரித்துச் செல்கிறது.  காளியின் நியாயங்களைப் பக்கம் பக்கமாய் பேசுகிறது.  அதே சமயம், பொன்னா அப்படியொரு முடிவிற்கு சம்மதித்தது குறித்துப் பேசாமல் வாளாயிருக்கிறது.

மாதொருபாகன் ஆண், தனது ஆண்மை குறித்த சந்தேகங்கள் நிரம்பியவனாக இருக்கிறான்.  அவன் மறுமணத்தை மறுத்ததைக் கூட இதனடிப்படையில் ஒருவரால் விளக்க முடியும்.  இது ஏறக்குறைய இந்திய ஆண்களின் பயம் என்று கூட சொல்ல்லாம்.  'தனது' என்று நம்பக்கூடிய ஒரு குழந்தையைக் கண்ணால் காண்பது வரையில் இந்த பயம் அவர்களை விட்டு அகலுவதில்லை.  இந்த பயத்தை சாமர்த்தியமாக பெண்களின் மீது சுமத்தியிருக்கிறார்கள் என்றே எனக்குப் படுகிறது.  இந்த வகையில் 'மலடி' என்ற சொல்லின் பின்னுள்ள சமூக நெருக்கடிகள் அனைத்தும் ஆண்களின் பயத்திலிருந்து விளைவது தான்.

ஆண்களின் இந்த பயம் தெளியும் போதே குடும்பம் என்ற அமைப்பும், திருமணம் என்ற சடங்கும் அதனதன் பண்பாட்டுப் பொருண்மைகளைப் பெறுகின்றன.  குழந்தையொன்று பிறக்கிற வரையில் அந்தத் திருமணம் நிலைக்கும் என்ற உத்தரவாதமில்லை; அந்தக் குடும்பம் முழுமையடைவதில்லை. 
 
இதற்கும் நான் நாட்டுப்புறக்கதைகளையே உதாரணமாகக் காட்ட வேண்டியுள்ளது.  அக்கதைகள் (தேவதைக் கதைகள் / ராஜா ராணிக்கதைகள் / காட்டுக்கதைகள்) பெரும்பாலும் இந்தக் குடும்பச்சிக்கலை சுற்றியே பேசிக்கொண்டிருக்கின்றன. 
 
இந்த வகையில் ஐரோப்பியக் கதைகளுக்கும் தமிழ் கதைகளுக்குமான வேறுபாடு ஆச்சரியமானது.  ஐரோப்பியக்கதைகளில் திருமணம் நடைபெறுவதோடு எல்லா துயரங்களும் முடிவிற்கு வந்து விடுகின்றன.  ஆனால், தமிழ்க் கதைகளில் திருமணம் என்பது கால்வாசிக்கதை தான்; அதன் பின்பும் தீயக்கதாபாத்திரங்கள் தங்களது முயற்சியைத் தொடர்கின்றன. 
 
திருமணமான பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறக்கிற வரையில் இந்த  போராட்டம் தொடர்கிறது.  குழந்தை பிறந்த பின்பே கதை முற்றுப் பெறுகிறது.  நான் சேகரித்த 'தமிழ் சின்ட்ரெல்லா' கதையில், செருப்பை அடையாளமாகக் கொண்டு சின்ட்ரெல்லாவைத் திருமணம் செய்த பின்பும் கதை தொடர்ந்தது.  கொடுமைக்கார சித்தியும் அவளது மகளும் சின்ட்ரெல்லா குழந்தை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் அவளைப் பாடாய்படுத்தினார்கள்.  கர்ப்பவதியான சின்ட்ரெல்லாவை தலைப்பிரசவம் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்ற சித்தி, அவளைப் பாழுங்கிணறொன்றில் தள்ளிவிட்டு, தனது மகள் தான் சின்ட்ரெல்லா என்று பொய் சொல்லி இளவரசனிடம் விட்டு வருகிறாள்.  இளவரசன் இந்த முறை தனது வீட்டுக் கதவில் இருந்த சின்ட்ரெல்லாவின் கைத்தடத்தின் மூலம் உண்மையான சிண்ட்ரெல்லாவை கண்டுபிடிக்கிறான். அதன் பிறகே அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்கள்.

மாதொருபாகன் காளியின் ஆண்மை தொடர்பான பயம், பொன்னாவின் முடிவால், எங்கே உண்மையாகிவிடுமோ என்ற பதட்டமாக மாறும் பொழுது அவன் 'உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி' பிரச்சினையைப் பேச ஆரம்பிக்கிறான். கதைப் போக்கில் உருவாகும் இது போன்ற இடங்களில் நமது எழுத்தாளர்கள் ஒன்று மட்டையடி அடிக்கிறார்கள் அல்லது வெகுஜன அபிப்பிராயத்தோடு கடந்து போய்விடுகிறார்கள்.  இந்த 'தாழ்ந்த சாதி' பேச்சைப் பேசுவதன் மூலம் காளியின் 'உயர்ந்த சாதித் திமிர்' வெளிப்படுகிறது என்று சொல்வதற்கு நமக்கு இலக்கியங்கள் தேவையில்லை. மேம்போக்காக கடந்து செல்லும் பொது அபிப்பிராயம் வேண்டுமானால் அப்படிச் சொல்லுமாக இருக்கும். இலக்கியம் இது போன்ற தருணங்களை கூர்மைப்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், சாதிப் பேச்சுகள் பலவீனத்திலிருந்தே உருவாகின்றன.  தத்தம் பால் அடையாளம் (ஆண்மையோ பெண்மையோ) நிர்மூலமாகிறது என்று உணரும் பலவீனமான பொழுதுகளில் சாதி அடையாளம் உயர்த்தப்படுகிறது; அறம் சார்ந்த வினாக்கள் எழுப்பப்படுகையில் குற்றவாளி தனது சாதிப்பெருமையையே ஆயுதமாக எடுத்துக் கொள்கிறார்; பொருளியல் காரணங்களால் பலமிழந்த நபர்கள் சாதிப் பெருமையைப் பேசி தங்களை உரமேற்றிக் கொள்கிறார்கள்; பண்பாட்டுச் சீர்கேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு சாதி கேடயம் போல் பயன்படுகிறது. 
 
இதனாலேயே, எந்தவொரு பௌதீகத் தன்மையுமற்ற 'சாதி', பெருமையாகவோ அல்லது சிறுமையாகவோ வளர்த்தெடுக்கப்படுகிறது.  சாதிக்கென்று தனியான யதார்த்தம் இல்லை என்பதால் அது எல்லாவற்றுக்குமான போலியாக / பதிலியாக செயல்படமுடிகிறது.  பலவீனமான ஆணுக்குக் கற்பனையான ஆண்குறியாகவும்,  பெண்ணுக்கு செழுமையான கர்ப்பப்பை போன்றும், ஏழைக்குப் பட்டுக் குஞ்சமாகவும், முட்டாளுக்குப் பொய்யறிவாகவும், ஒழுக்கக் கேடானவர்களுக்கு சீலமாகவும் என்று சாதியின் ரூபங்கள் பல.

இப்படியொரு பேச்சைத்தான் காளியும் அந்தப் பலவீனமான தருணத்தில் பேசுகிறான். இந்தப் பேச்சை 'உயர்சாதித்திமிர்' என்ற ஒற்றை விளக்கத்தோடு மாதொருபாகன் கடந்து செல்வது தான் அப்பனுவலின் பலவீனம்.  இந்தப் பலவீனத்தை, 'அது சாதியெதிர்ப்புப் பிரதியாக்கும்' என்று சொல்லி மறைக்கப்பார்ப்பதும் இன்னொரு 'சாதி தொழிற்நுட்பம்' தான்!

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை எதிர்கொள்வதில் நமக்குள் ஏன் இவ்வளவு முரண்பாடுகள் என்பதை யோசிக்க வேண்டும். 

கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் போராட்டத்தில், நாம் முன்னிறுத்தும் பிரதி 'புனிதப் பிரதியாகவே' (சாதியெதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சமய எதிர்ப்பு போன்ற) இருக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறோம்?  அப்படி அந்தப் பிரதியைப் புனிதப்படுத்துவதன் மூலம், நமது போராட்டத்தையும் புனிதப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?  பண்பாட்டுப் புனிதம் கெடுகிறதாகச் சொல்லி அடக்கப்படும் பிரதிக்கு எதிரான போராட்டம் 'புனிதப் போராட்டமாக' இருக்க வேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயாமாக இருக்க முடியும்? அப்படியானால், 'புனிதமற்ற பிரதி'களையெல்லாம் எரித்து விடலாம் என்று நாமும் நம்புகிறோமா?  பிரதிகளை பிரதிகளால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதை நம்மால் ஏன் வெளிப்படையாய்ச் சொல்ல முடியவில்லை?  

Friday, 30 January 2015

யாராவது இருக்குறீர்களா?மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில், நாட்டுப்புறவியல் முதுகலைப் (M. A. in Folklore) பாடப்பிரிவிற்கான 2015-16ம் வருட மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.நாட்டுப்புறவியலில் முதுகலை என்ற பாடத்திட்டம் 1987ம் வருடம் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கப்பட்ட போது தமிழ் நாட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம்.  இப்படியும் ஒரு படிப்பா?
ஏராளமான கேள்விகள், கிண்டல்கள், பொறாமை, ஏச்சுகள் - எல்லாமே அதீத வகை தான்!

·         ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் நாட்டுப்புறவியலை முன்னிறுத்துவதில் 'பன்னாட்டு அரசியல்' இருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவர்கள்...
·         அதையே இன்னொரு தொனியில் 'அய்யய்யோ கிறிஸ்தவ நிறுவனத்திற்குள் பேய்களும் பிசாசுகளுமா?' என்று கூக்குரல் எழுப்பும், கழுத்தில் சிலுவை அணிந்த கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்...
·         'இது எங்க ஏரியா உள்ள வராதே..' என்று மார்தட்டிய நாவாவினர்...
·         அதனாலேயே உள்ளே வர சங்கடப்பட்டு ரொம்ப வருடங்களுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருந்த கலை இரவினர்...
·         இதற்கெல்லாம் உச்சம் போல, 'என்னது? திராவிட நாட்டில் மூடநம்பிக்கைகளைப் படிப்பதற்கு ஒரு துறையா?  அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலா?' என்று கேட்டு வழக்கம் போல தங்களது அறியாமையை வீரத்தோடு முழங்கிய கழகக் கண்மணிகள்...

இப்படி எல்லாவற்றையும் கடந்து நடைபெற்றுவரும் நாட்டுப்புறவியல், 1992 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் தனித் துறையாக செயல்படத் தொடங்கியது.  இலக்கியத் துறைகளிலிருந்தே நாட்டுப்புறவியல் உருவானது (...என்றாலும் இலக்கியத்துறைகளின் கட்டுப்பெட்டித் தனத்திலிருந்து தன்னை விலக்கியே வைத்திருந்தது); அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியத் துறைகள் (எனக்குத் தெரிந்து, ஆங்கில இலக்கியம் பயின்று நாட்டுப்புறவியலுக்குள் வந்து சேர்ந்தவர்  M. D. Muthukumaraswamy  மட்டுமே!).

நாட்டுப்புறவியல் முதுகலைப் பாடத்திட்டம் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு முன்மாதிரி பாடத்திட்டம் தான்.  அனைத்து அறிவுப் புலங்களின் நவீனப் பார்வைகளையும் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் அது வடிவமைக்கப்பட்டிருந்தது.  (என்னவொரு முரண்!  மரபையும் பழமையையும் கையாளும் நாட்டுப்புறவியல் தான் அதி நவீன முறையியல்களை ஆய்வு உபகரணங்களாகக் கொண்டிருந்தது). ஒரு சின்ன உதாரணமாக, நவீன மொழியியல் 'குறியியல்' என்று முளைத்த போது, மொழியியல் துறைகள் அள்ளவோ கோர்க்கவோ என்று குழம்பிய போது, நாட்டுப்புறவியல் பாடத்திட்டம் அதனை 'அமைப்பியல்வாதமும் குறியியலும்' என்று தனக்குள் செரித்துக் கொண்டது.  இந்த வகையில், முதுகலை நாட்டுப்புறவியல் என்பது இலக்கியம், மொழியியல், மானிடவியல், உளவியல், தத்துவம், சமயம், சமூகவியல், அரசியலியல், தொடர்பியல் போன்ற பிற துறைகளின் இணைப்பாக உருவான உயர் அறிவியல்.
 
இது தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதுகலை நாட்டுப்புறவியலுக்கான பாடத்திட்டம்:

1.     நாட்டுப்புறவியல் அறிமுகம்      (Introduction to Folkloristics)
2.     கள ஆய்வும் ஆவணப்படுத்தலும்  (Field Methods and        Documentation Techniques)
3.     பண்பாட்டு மானிடவியல்    (Cultural Anthropology)
4.     இந்திய சமூக ஒழுங்கமைப்பு     (Indian Social System)
5.     இனவரைவியலும் பண்பாட்டை எழுதுதலும்                  (Ethnography and Writing Culture)
6.     இனக்குழு கவிதையியல்    (Ethno Poetics)
7.     நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் I (Folklore Theories I)      
8.                தொடர்பியல் கோட்பாடுகள்  (Theories of Communication)
9.     கதையாடலியல் (Narratology)
10.    மின் ஆவணப்படுத்தலும் புதிய அருங்காட்சியியலும்           (Digital Archiving and New Museology)   
11.    இனவரைவியல் ஆவணப்பட உருவாக்கம்                                                 (Ethnographic Film making)
12.    வழக்காறுகளும் தேசியவாதமும்      (Nationalism and Folklore)
13.    நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் - II (Folklore Theories II )
14.             நாட்டுப்புற சமயமும் சடங்குகளும்     (Folk Religion and Ritual)
15.    பண்பாட்டுச் சின்னங்கள்     (Tangible Cultural Heritage)
16.    அமைப்பியல்வாதமும் குறியியலும்     (Structuralism and         Semiotics)
17.    நிகழ்த்துதல் ஆய்வுகள் (Performance Studies)
18.    தமிழ் நாட்டுப்புற அரங்கக் கலைகள் (Tamil Folk Theater)
19.    பயன்பாட்டு நாட்டுப்புறவியல்     (Applied Folklore)
20.    வாய்மொழி மரபும் வரலாற்றுருவாக்கமும் (Oral Tradition         and Historiography)
21.    மரபான அறிவுத் தொகுதிகள் (Indigenous Knowledge System)
22.    நவீனச் சூழலில் வழக்காறுகள்    (Folklore in the Changing         World)
23.    மெய் நிகர் நாட்டுப்புறவியல் (Virtual Folklore)

·                இரண்டு வருட முதுகலைப் பாடத்திட்டம் இது.

·                எந்தவொரு பாடப்பிரிவில் இளங்கலை     பயின்றவர்களும் முதுகலையில் சேரமுடியும்     (நானே இளங்கலையில் வேதியியல் தான் படித்தேன்).

·                இலக்கிய வாசனையும், சிற்றிதழ் அறிமுகமும் இருந்து பண்பாடு குறித்து ஒரு ஓரமாய் அக்கறையும் இருக்கிறவர்கள் இந்த முதுகலையைக் கற்க வரலாம்.

·                இதைப் படித்தால் அங்கே வேலைக்குப் போகலாம், இங்கே வேலைக்குப் போகலாம் என்று சொல்வதற்கு வழியில்லை.  ரொம்பவும் சொற்பமான அரசுப் பணிகள் மட்டுமே உள்ளன. (அதுவும் மத்திய அரசுப் பணி தான், மாநில அரசில் பண்பாட்டு விஷயங்களை பக்தியும் இலக்கியமும் கவனித்துக் கொள்கின்றன). ஊடகங்களிலும், ஆய்வு மையங்களிலும், அருங்காட்சியகங்களிலும், பண்பாட்டு மையங்களிலும் முட்டி மோதுகிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது. 
 
·                ஆனால், மத்திய அரசின் (பல்கலைக்கழக மானியக்குழு) ஆய்வு நிதியுதவிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டுப்புறவியலில் எல்லோருக்கும் வாய்க்கிறது.  எனவே நாட்டுப்புறவியல் படிப்பதால் உயிருக்கெல்லாம் ஆபத்தில்லை!

·                ஆடுகிறவர் - பாடுகிறவர் பின்னால் திரிய வேண்டி வரும்; கிராமப்புறங்களில் ஆட்களற்ற பகல்களில் நிழல் போல காத்திருக்க வேண்டி வரும்; 'பெரிசுகள்' சொல்லும் கதைகளையெல்லாம் உம்...உம்...கொட்டி பொறுமையாய் கேட்க வேண்டியிருக்கும்; விடிய விடிய தெருக்கூத்தைப் பார்க்க வேண்டி வரும்; கருப்பசாமி பற்றி யாரிடம், என்ன கேட்டாலும் சுற்று வட்டாரத்தில் இருக்கிற அனைவருக்கும் சாமி வந்து விடுகிற அனுபவங்கள் கிடைக்கும்.  இதையெல்லாம் கடந்து வந்த பின்பு, 'ஏன் இப்படி?' என்றொரு கேள்வி வரும் பாருங்கள், அது தான் நாட்டுப்புறவியலின் மாயச்சுழற்பாதை!

இந்தச் சுழலுக்குள் அகப்பட்டு, பின் வெளிப்பட விரும்புகிறவர்கள் யாராவது இருந்தால், நாட்டுப்புறவியல் முதுகலை படிக்க வரலாம்.  2015-2016ம் ஆண்டிற்கான சேர்க்கைப் படிவங்கள் இணையத்தில் கிடைக்கின்றன www.mkuniversity.org.

முதுகலை நாட்டுப்புறவியல் (M. A. Folklore) படிப்பு:
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் (தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும்) - இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் - நுழைவுத் தேர்வு போன்ற எதுவும் இல்லை - இரண்டு ஆண்டுகள் படிப்பு.
அனுமதிக்கப்பட்ட இடங்கள்: 10
தமிழ் வழி / ஆங்கில வழி என இரு மொழி வழியாகவும் பயிலலாம். 
ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிட வசதி உண்டு.
ஆண்டுக்கட்டணம்: ரூ. 5000 - 6000 (பட்டியலினத்தவருக்கு ரூ.2500-3000) - தமிழக அரசு வழங்கும் கல்வி நிதி (பட்டியலினத்தவர் / பிற்படுத்தப்பட்டவர்) வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 27-2-2015 (படிவத்தை இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்).
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்: 1-06-2015

இளமுனைவர் நாட்டுப்புறவியல் (M. Phil. Folklore) படிப்பு:
கல்வித்தகுதி: நாட்டுப்புறவியல் / மானிடவியல் / சமூகவியல் / தமிழ் / மொழியியல் / ஆங்கிலம் / தொடர்பியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் -  நுழைவுத்தேர்வு உண்டு.
அனுமதிக்கப்பட்ட இடங்கள்: 15
தமிழ் வழி / ஆங்கில வழி என இரு மொழி வழியாகவும் பயிலலாம். 
ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிட வசதி உண்டு.
ஆண்டுக்கட்டணம்: ரூ. 5000 - 6000 (பட்டியலினத்தவருக்கு ரூ.2500-3000) - தமிழக அரசு வழங்கும் கல்வி நிதி (பட்டியலினத்தவர் / பிற்படுத்தப்பட்டவர்) வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 27-2-2015 (படிவத்தை இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்).
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்: 1-06-2015மேலதிக விபரங்களுக்கு இவர்களையும் தொடர்பு கொள்ளலாம்:
டி. தருமராஜ் (நான் தான்!)    9443554807
தி. கோபிநாத், உதவிப் பேராசிரியர்    9443113539
அ. கலையரசி, உதவிப் பேராசிரியர்   9698034145
ச. ஜஸ்டின் செல்வராஜ், உதவிப் பேராசிரியர்    8903228285