Saturday, 31 January 2015

மாதொருபாகன் என்ற புனிதப்பிரதிஅன்புள்ள எம். ராஜா,

மாதொருபாகன் நிகழ்வு குறித்த உங்களது எதிர்வினைகளுக்கு நன்றி.  நீங்கள் கவனப்படுத்தும் இரண்டு செய்திகளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன்.


 
1.    மாதொருபாகன், சாதியமைப்பு மீதான விமர்சனங்கள் கொண்ட படைப்பு.
2.    நிலவுடமைச் சமூக மதிப்பீடுகளில் தோய்ந்திருக்கும் குடியானவனின் பார்வையை மாதொருபாகன் துல்லியமாகப் பதிவு செய்கிறது.

பெருமாள்முருகனின் முந்தைய பிரதிகளை வாசித்திருக்கிற ஒருவருக்கு, மாதொருபாகனை இவ்வாறு சாதியமைப்பு குறித்த கண்டனங்கள் நிறைந்த பிரதியாக வாசிப்பதற்கான ஆவல் ஏற்படுவது இயல்பு தான்.  ஆனால், வாசக விருப்பத்தையும் தாண்டி, குறிப்பிட்ட பிரதி அப்படியொரு வாசிப்பிற்கான வாய்ப்புகளை வழங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.  மாதொருபாகன் அப்படியான வாய்ப்புகளை வழங்கவில்லை என்பதே எனது முடிவு.

திருவிழாக்களில் உருவாகும் சொற்ப நேர சமூக நெகிழ்வு சாதியால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.  அங்கொரு கட்டற்றத் தன்மை உருவாகிறது.  அந்தக் கட்டற்ற சூழலில் இழப்பதற்கு எதுவுமற்றவனே பலசாலியாக இருக்கிறான்.  ஏனென்றால் அவனிடமிருந்து பறிப்பதற்கு எதுவுமிருக்கவில்லை.  அந்தஸ்து, மரியாதை, பெருமை, மரபு, கற்பு போன்ற எந்தவொரு பண்பாட்டுக் காரணிக்கும் அந்த கணத்தில் எதிர்மதிப்பு தான் - அது எப்பொழுதும் போல மனிதர்களுக்குக் கவசமாக இருப்பதில்லை; ஆபத்தைக் கொண்டு வரும் காரணியாக மாறிவிடுகிறது.  எனவே தான் பண்பாடு அயர்ந்திருக்கும் அந்தக் கணத்தை 'ஒடுக்கப்பட்டவர்களின் பொழுது' என்று அழைக்கிறோம்.

காளியும் பொன்னாவும் சாதிப் படிநிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை என்றாலும், குழந்தைப் பேறற்ற தம்பதியினர் என்ற அளவில் சமூக மரியாதையோ அந்தஸ்தோ சடங்கு அதிகாரமோ வழங்கப்படாத, அமங்கலமென்று தூற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட வகையினர் தாம்.  அது குறித்த மனக்காயங்களோடே அவர்கள் வாழ்ந்தும் வருகிறார்கள்.  தங்கள் மீது அநியாயமாய் அடக்குமுறையை ஏவிக்கொண்டிருக்கும் சமூகத்தை அந்தத் திருவிழா தருணத்தில் பழிதீர்த்துக் கொள்ள அவர்கள் முடிவு செய்கிறார்கள் (ஒரு வேளை) என்றால் அதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும் தான்.  எனவே சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது வேறெந்தவொரு சமூகக் காரணியால் ஒடுக்கப்பட்டவர்களும் கூட திருவிழாத்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  
திருவிழாவின் போது முகம் தெரியாத யாரோ ஒருவருடன் இணைந்து கர்ப்பம் தரிக்க முயல்வதில் தீண்டத்தகாத சாதிக்காரரோடு முயங்கிவிடும் ஆபத்து இருக்கிறதாகக் காளி விசனப்படுவது கைமீறிவிட்ட சூழலில் சொல்லப்படுகிற இறுதிக் குற்றச்சாட்டு தானே தவிர, அதுவே தான் அவனது பிரச்சினை என்று சொல்வதற்கு இல்லை. 
 
மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத தனது ஏகபத்தினித் தனத்தையே தனது மனைவியிடமும் காளி எதிர்பார்க்கிறான்.  மரபான தமிழ்க் கணவனொருவனுக்குக் கற்பு குறித்து உருவாகக்கூடிய மிகச் சாதாரணமான ஏக்கம் இது.  மாதொருபாகன் பிரதி இந்த ஏக்கத்தைத் தான் விலாவரியாக விவரித்துச் செல்கிறது.  காளியின் நியாயங்களைப் பக்கம் பக்கமாய் பேசுகிறது.  அதே சமயம், பொன்னா அப்படியொரு முடிவிற்கு சம்மதித்தது குறித்துப் பேசாமல் வாளாயிருக்கிறது.

மாதொருபாகன் ஆண், தனது ஆண்மை குறித்த சந்தேகங்கள் நிரம்பியவனாக இருக்கிறான்.  அவன் மறுமணத்தை மறுத்ததைக் கூட இதனடிப்படையில் ஒருவரால் விளக்க முடியும்.  இது ஏறக்குறைய இந்திய ஆண்களின் பயம் என்று கூட சொல்ல்லாம்.  'தனது' என்று நம்பக்கூடிய ஒரு குழந்தையைக் கண்ணால் காண்பது வரையில் இந்த பயம் அவர்களை விட்டு அகலுவதில்லை.  இந்த பயத்தை சாமர்த்தியமாக பெண்களின் மீது சுமத்தியிருக்கிறார்கள் என்றே எனக்குப் படுகிறது.  இந்த வகையில் 'மலடி' என்ற சொல்லின் பின்னுள்ள சமூக நெருக்கடிகள் அனைத்தும் ஆண்களின் பயத்திலிருந்து விளைவது தான்.

ஆண்களின் இந்த பயம் தெளியும் போதே குடும்பம் என்ற அமைப்பும், திருமணம் என்ற சடங்கும் அதனதன் பண்பாட்டுப் பொருண்மைகளைப் பெறுகின்றன.  குழந்தையொன்று பிறக்கிற வரையில் அந்தத் திருமணம் நிலைக்கும் என்ற உத்தரவாதமில்லை; அந்தக் குடும்பம் முழுமையடைவதில்லை. 
 
இதற்கும் நான் நாட்டுப்புறக்கதைகளையே உதாரணமாகக் காட்ட வேண்டியுள்ளது.  அக்கதைகள் (தேவதைக் கதைகள் / ராஜா ராணிக்கதைகள் / காட்டுக்கதைகள்) பெரும்பாலும் இந்தக் குடும்பச்சிக்கலை சுற்றியே பேசிக்கொண்டிருக்கின்றன. 
 
இந்த வகையில் ஐரோப்பியக் கதைகளுக்கும் தமிழ் கதைகளுக்குமான வேறுபாடு ஆச்சரியமானது.  ஐரோப்பியக்கதைகளில் திருமணம் நடைபெறுவதோடு எல்லா துயரங்களும் முடிவிற்கு வந்து விடுகின்றன.  ஆனால், தமிழ்க் கதைகளில் திருமணம் என்பது கால்வாசிக்கதை தான்; அதன் பின்பும் தீயக்கதாபாத்திரங்கள் தங்களது முயற்சியைத் தொடர்கின்றன. 
 
திருமணமான பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறக்கிற வரையில் இந்த  போராட்டம் தொடர்கிறது.  குழந்தை பிறந்த பின்பே கதை முற்றுப் பெறுகிறது.  நான் சேகரித்த 'தமிழ் சின்ட்ரெல்லா' கதையில், செருப்பை அடையாளமாகக் கொண்டு சின்ட்ரெல்லாவைத் திருமணம் செய்த பின்பும் கதை தொடர்ந்தது.  கொடுமைக்கார சித்தியும் அவளது மகளும் சின்ட்ரெல்லா குழந்தை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் அவளைப் பாடாய்படுத்தினார்கள்.  கர்ப்பவதியான சின்ட்ரெல்லாவை தலைப்பிரசவம் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்ற சித்தி, அவளைப் பாழுங்கிணறொன்றில் தள்ளிவிட்டு, தனது மகள் தான் சின்ட்ரெல்லா என்று பொய் சொல்லி இளவரசனிடம் விட்டு வருகிறாள்.  இளவரசன் இந்த முறை தனது வீட்டுக் கதவில் இருந்த சின்ட்ரெல்லாவின் கைத்தடத்தின் மூலம் உண்மையான சிண்ட்ரெல்லாவை கண்டுபிடிக்கிறான். அதன் பிறகே அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்கள்.

மாதொருபாகன் காளியின் ஆண்மை தொடர்பான பயம், பொன்னாவின் முடிவால், எங்கே உண்மையாகிவிடுமோ என்ற பதட்டமாக மாறும் பொழுது அவன் 'உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி' பிரச்சினையைப் பேச ஆரம்பிக்கிறான். கதைப் போக்கில் உருவாகும் இது போன்ற இடங்களில் நமது எழுத்தாளர்கள் ஒன்று மட்டையடி அடிக்கிறார்கள் அல்லது வெகுஜன அபிப்பிராயத்தோடு கடந்து போய்விடுகிறார்கள்.  இந்த 'தாழ்ந்த சாதி' பேச்சைப் பேசுவதன் மூலம் காளியின் 'உயர்ந்த சாதித் திமிர்' வெளிப்படுகிறது என்று சொல்வதற்கு நமக்கு இலக்கியங்கள் தேவையில்லை. மேம்போக்காக கடந்து செல்லும் பொது அபிப்பிராயம் வேண்டுமானால் அப்படிச் சொல்லுமாக இருக்கும். இலக்கியம் இது போன்ற தருணங்களை கூர்மைப்படுத்த வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், சாதிப் பேச்சுகள் பலவீனத்திலிருந்தே உருவாகின்றன.  தத்தம் பால் அடையாளம் (ஆண்மையோ பெண்மையோ) நிர்மூலமாகிறது என்று உணரும் பலவீனமான பொழுதுகளில் சாதி அடையாளம் உயர்த்தப்படுகிறது; அறம் சார்ந்த வினாக்கள் எழுப்பப்படுகையில் குற்றவாளி தனது சாதிப்பெருமையையே ஆயுதமாக எடுத்துக் கொள்கிறார்; பொருளியல் காரணங்களால் பலமிழந்த நபர்கள் சாதிப் பெருமையைப் பேசி தங்களை உரமேற்றிக் கொள்கிறார்கள்; பண்பாட்டுச் சீர்கேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு சாதி கேடயம் போல் பயன்படுகிறது. 
 
இதனாலேயே, எந்தவொரு பௌதீகத் தன்மையுமற்ற 'சாதி', பெருமையாகவோ அல்லது சிறுமையாகவோ வளர்த்தெடுக்கப்படுகிறது.  சாதிக்கென்று தனியான யதார்த்தம் இல்லை என்பதால் அது எல்லாவற்றுக்குமான போலியாக / பதிலியாக செயல்படமுடிகிறது.  பலவீனமான ஆணுக்குக் கற்பனையான ஆண்குறியாகவும்,  பெண்ணுக்கு செழுமையான கர்ப்பப்பை போன்றும், ஏழைக்குப் பட்டுக் குஞ்சமாகவும், முட்டாளுக்குப் பொய்யறிவாகவும், ஒழுக்கக் கேடானவர்களுக்கு சீலமாகவும் என்று சாதியின் ரூபங்கள் பல.

இப்படியொரு பேச்சைத்தான் காளியும் அந்தப் பலவீனமான தருணத்தில் பேசுகிறான். இந்தப் பேச்சை 'உயர்சாதித்திமிர்' என்ற ஒற்றை விளக்கத்தோடு மாதொருபாகன் கடந்து செல்வது தான் அப்பனுவலின் பலவீனம்.  இந்தப் பலவீனத்தை, 'அது சாதியெதிர்ப்புப் பிரதியாக்கும்' என்று சொல்லி மறைக்கப்பார்ப்பதும் இன்னொரு 'சாதி தொழிற்நுட்பம்' தான்!

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையை எதிர்கொள்வதில் நமக்குள் ஏன் இவ்வளவு முரண்பாடுகள் என்பதை யோசிக்க வேண்டும். 

கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் போராட்டத்தில், நாம் முன்னிறுத்தும் பிரதி 'புனிதப் பிரதியாகவே' (சாதியெதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சமய எதிர்ப்பு போன்ற) இருக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறோம்?  அப்படி அந்தப் பிரதியைப் புனிதப்படுத்துவதன் மூலம், நமது போராட்டத்தையும் புனிதப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?  பண்பாட்டுப் புனிதம் கெடுகிறதாகச் சொல்லி அடக்கப்படும் பிரதிக்கு எதிரான போராட்டம் 'புனிதப் போராட்டமாக' இருக்க வேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயாமாக இருக்க முடியும்? அப்படியானால், 'புனிதமற்ற பிரதி'களையெல்லாம் எரித்து விடலாம் என்று நாமும் நம்புகிறோமா?  பிரதிகளை பிரதிகளால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதை நம்மால் ஏன் வெளிப்படையாய்ச் சொல்ல முடியவில்லை?  

2 comments:

Raja M said...

அன்புள்ள டி. தருமராஜ் அவர்களுக்கு,

உங்களது விளக்கமான பதில், மாதொரு பாகன் குறித்து நீங்கள் செய்த விமரிசனத்தை எனக்குத் தெளிவு படுத்தியது. முதலில், இரண்டு விஷயங்களைச் சொல்லி விட்டு என் எண்ணத்தை எழுதுகிறேன்.

'கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் போராட்டத்தில், பிரதியைப் புனிதப்படுத்துவதன் மூலம், ...போராட்டத்தையும் புனிதப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?', என்ற கேள்விக்கே என்னைப் பொருத்த வரையில் இடமில்லை. அது முற்றிலும் அவசியமில்லை என்பதே என் கருத்தும். எந்தப் பிரதியையும் விமரிசனம் செய்யலாம் என்பதே உண்மையான கருத்துரிமை. மாதொருபாகனைப் புனிதப்படுத்துதல்ல என் பின்னோட்டத்தின் நோக்கம்.

இரண்டாவதாக, நான் வாசித்த அளவில் மாதொருபாகன் ஒரு நல்ல படைப்பாக எனக்குப் பட்டது. ஆனால், பெருமாள் முருகனின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்த தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் பலரும், மாதொருபாகனை , எந்த விளக்கமும் அளிக்காமல், மட்டையடியாக - 'தட்டையான நாவல்', என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு விதிவிலக்குகளாக இருந்தது, உங்களது விமரிசனமும், திரு. ராமசாமி (ஒத்திசைவு) அவர்களது விமரிசனமும் தான். அதனாலேயே உங்கள் இருவரின் விமரிசனம் எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் விமரிசனத்தில் இருந்து நான் எங்கே மாறுபடுகிறேன் என்பதை மட்டுமே என் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன் (சரியாகச் சொல்லப்போனால், எழுத முயற்சித்திருந்தேன்).

நீங்கள் எழுதியிருந்தபடி, பண்பாட்டுக் காரணிகளால் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப் பட்டவர்களாக இருப்பவர்களும், ஒடுக்கப்பட்டவர்கள் தாம்; அவர்களுக்கும் இந்த விழாக்கால நெகிழ்வு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது என்ற வாதம் ஏற்புடையதே.

நீங்கள் எழுதியது: 'தீண்டத்தகாத சாதிக்காரரோடு முயங்கிவிடும் ஆபத்து இருக்கிறதாகக் காளி விசனப்படுவது கைமீறிவிட்ட சூழலில் சொல்லப்படுகிற இறுதிக் குற்றச்சாட்டு தானே தவிர, அதுவே தான் அவனது பிரச்சினை என்று சொல்வதற்கு இல்லை.'

அதுவே தான் அவனது பிரச்னை என்று சொல்வதற்கில்லையென்றாலும், அதுவும் ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது என்ற வாசிப்பிற்கான சாத்தியங்கள் நாவலில் இருக்கிறது என்றே எனக்குப் படுகிறது. நாவலில், இரண்டாம் கல்யாணம் பண்ணியும் குழந்தை பிறக்காவிட்டால், தன்னை வறடன் என ஊர் சொல்வது ஊர்ஜிதப்பட்டு விடுமே என்றஞ்சுவதும், பதினாலாம் நாள் திருவிழாவுக்கு போகிறாயா என்று கேட்டவுடன், "நீ சொன்னால் நான் போகிறேன்", என்று உடனே சொல்லிவிட்டாளே என காளி மருகுவதும், நாவலில் விரிவாகவே சொல்லப்படுகிறது. தன் ஆண்மையைப் பற்றிய கவலை காளிக்கு ஒரு முக்கியக் காரணம், என்பதில் சந்தேகமில்லை.
...

Raja M said...

... தொடர்ச்சி..


சாதியைப் பொறுத்தவரை, பெருமாள் முருகன் இந்த நாவலில் செய்திருப்பது, சாதியை முழுதும் உள்வாங்கிய ஒரு குடியானவனின் வாழ்க்கையை மிகையின்றிச் சித்தரித்திருப்பது தான். குடியானவனின் வாழ்க்கையில் சொத்தும், வாரிசும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. 'பணத்தச் சேத்து வெச்சு என்ன செய்யப் போறீங்க? நல்லா சாப்புட்டு, துணிமணி வாங்கி உடுத்திச் சந்தோஷமா இருங்க', என்று முத்துவின் தங்கை நங்கை சொல்கிறாள். இரண்டாம் மாமனின் மனைவியிடம் (கதிர்வேலுவின் அம்மா) சண்டை போடும் போது, 'கொழந்த இல்லாதயே போயி சொத்தக் கண்டவுங்களுக்குக் கொடுத்தாலும் அவளுக்கு மட்டும் ஒரு பைசா கொடுக்கக் கூடாது', என்று பொருமுகிறாள் பொன்னா. 'எதுக்கு இப்படி கஞ்சத்தனம் பன்னிச் சேத்து வெக்கறீங்க? புருஷனில்லாத பொம்பளயும், பிள்ளையில்லாத சொத்தும் ஒன்னும்பாங்க', என்று சொல்கிறாள் பொட்டுப்பாட்டி. காளியின் சொத்து, உன் வாரிசுகளுக்குத் தான் என்று முத்துவிடம் அவன் கூட்டாளிகள் சொல்கிறார்கள். இப்படிக் கதை நெடுகே, சொத்து ஒருவனின் வாரிசுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் குணம், குடியானச் சாதியின் குணம். அந்தக் குணாதியசத்தைத் துலங்க வைக்கும் பாத்திரமாக, காளியின் சித்தப்பா படைக்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

தீண்டாச் சாதிக்காரனைப் பற்றிய கவலை காளிக்கு மட்டுமல்ல, பொன்னாவுக்கும் உள்ளூர இருக்கிறது. " எங்கயாச்சும் போயீ ஒரு குழந்தையக் கொண்டா. தீண்டாச் சாதி வீட்டில இருந்து எடுத்துட்டு வந்தாலுஞ் சரி. இந்தச் சொந்தப்புள்ள இல்லாத சொத்துன்னு நாளைக்கு ஒருத்தி சொல்லக் கூடாது", என்று ஆவேசமாக காளியைத் தொண்டப்பட்டியிலிருந்து தள்ளுகிறாள் பொன்னா (ப 184). அது ஒரு குடியானவச்சி தன் சொத்தின் வாரிசுக்காக, சாதியை(க் கூட), ஒதுக்கி வைக்க ஒத்துக்கொள்ளும் தருணம்.

காளி, குடித்து விட்டு மண்டையனின் பிறக்கவிருக்கிற குழந்தையைத் தான் தத்து எடுத்துக் கொள்ள தயாராக இருப்பதாகச் சொல்லும் போது, காத்தாயி, 'குடிச்சுப்பிட்டா பிய்யவா தின்னுருவ? போதையில கவுண்டரு கிட்ட சொல்லீர்ர. நாளைக்கு வந்து கேட்டார்னா என்ன சொல்வே? பெத்த குழந்தைய அப்பிடித் தூக்கிக் கொடுக்க முடியுமா? குடுத்தாலுந்தான் கவுண்டரூட்ட சாணாப் பிள்ள வளர முடியுமா?', எனத் தன் கணவன் மண்டையனைக் கடுமையாகச் சாடுகிறாள். அந்தச் சாடலில் தெரிவது ஒரு தாயின் கவலை மட்டுமல்ல, அன்று நிலவிய சாதிக் கட்டமைப்பின் நிதரிசனமும் தான்.

பொன்னா, 14 ஆம் நாள் பண்டிகைக்கு வண்டியில் பயணம் செய்யும் போது, கக்கத்தில் துண்டை வைத்துக் கொண்டு, மிகப் பணிவாக இடம் கேட்கும் சக்கிலியனின் குழந்தைகளை ஆசையுடன் பார்க்கிறாள். சக்கிலியன் யாரையும் தீண்டாமல், தன் குடும்பத்தை வண்டியினுள் சாமர்த்தியமாக அமர்த்துவதையும், தன் தந்தையை விட மிகத் திறமையாக வண்டியை ஓட்டுவதையும் கவனிக்கிறாள். இந்தக் குழந்தைகளைப் போல, "துரு துருவென இருக்கும் குழந்தைகளைத் தர வேண்டும்", எனக் கடவுளை வேண்டுகிறாள். பொன்னாவின் மன நிலை, கடவுளிடம் இறைஞ்சும் ஒரு யாசகனின் நெகிழ்ந்த மன நிலையாக இருக்கிறது. மனிதனைக் கடவுளாகப் பார்க்கப் பிரயத்னப்படுபவளின் மன நிலை. ஓர்ஃபிக் (Orphic)/பாக்கிக்(Bacchic) சடங்குகளில் விதிகளை மீற எத்தனிப்பவனின் (Enthusiasmous) மன நிலை. அன்று அவளிருக்கும் மனநிலையில் தான் சாதி பெரிதாகத் தெரிவதில்லை. அந்த மனமாற்றம் நேராவிட்டால், அந்தப் பண்டிகையில் அவளால் பங்கு கொண்டிருக்கவே முடிந்திருக்காது எனத் தோன்றுகிறது. இதைக் குறிப்பிடவின்றி, அந்தச் சக்கிலியன், அந்தப் பயணத்தில் பங்கு கொள்வதாகச் சித்தரிக்க எந்தக் காரணமும் இல்லை என்றே என் மனதிற்குப் பட்டது.

பெருமாள் முருகனின் முந்தைய நாவல்கள் எதையும் நான் படித்ததில்லை. எந்த முன் முடிவுகளுடன் நான் மாதொருபாகனை வாசிக்கவும் இல்லை. என் பார்வையில், பெருமாள் முருகன் சாதி எதிர்ப்பு என்ற எளிய விடைகளை (புத்திசாலித் தனமான உத்திகளைக் கொண்டு) இந்த நாவலில் முன்வைக்கவில்லை. மாதொருபாகன், சாதியமைப்பை விமரிசனம் செய்யவில்லை. கதைக்களனில் நிலவிய சாதியமைப்பை ஆரவாரமில்லாமல் ஆவணப்படுத்துகிறது. என் பார்வையில், அத்தகைய ஆவணப்படுத்தலே அத்தியாவசமான விமரிசனம் தான்.
ஒரே பிரதி, வாசகனின் ரசனையை ஒத்து, பலவேறு விமரிசனங்களை உருவாக்குவது இயல்பே. நம்மிருவரின் பார்வையும் சற்றே வேறுபட்டாலும், ஒரு கறாரன விமரிசனத்தையும், அந்த விமரிசனத்திற்கான காரணங்களைத் தெளிவாக முன் வைத்ததும் நல்ல முன்னுதாரணங்கள்.


Featured post

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பா...