Skip to main content

மாதொருபாகன் நிகழ்வு



மாதொருபாகன் நாவல் குறித்த விவாதத்தில், பெருமாள்முருகன் அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்பு என்றும் (எழுத்தில்), நூறு வருடங்களுக்கு முன்பு என்றும் (பேச்சில்) வழக்கிலிருந்ததாய் சொல்லும் 'அந்த' பண்பாட்டு வழக்கம் உண்மையிலேயே மானமிகு தமிழ் நாட்டில் இருந்ததா?

இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டால் என் பதில் இதுவாகத் தான் இருக்கும்: 'எல்லோரும் கருதுவது போல், அந்த நாவலில் முழுமையான பண்பாட்டு நிகழ்வு எதுவும் சித்தரிக்கப்பட்டிருக்கவில்லை; மாறாக, ஒரு 'அரைகுறை' சம்பவம் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது'.

இப்படியொரு 'அரைகுறை' சம்பவம் நடைபெறுவதற்கான சாத்தியங்களைக் கொண்ட பண்பாட்டுச் சூழல்கள் நூறு வருடங்களுக்கு முன்பு என்ன, இன்றைக்கும் தமிழகத்தில் உண்டு.  அது ஏன்? உலகில் எங்கெல்லாம் திருவிழா நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உண்டு.

இதைத் திருவிழாக்களின் குணம் / தன்மை என்று சொல்ல முடியும்.  பல்வேறு பண்பாடுகளில் காணப்படும் இத்தகையத் 'திருவிழாத்தனம்' (திருவிழாக்குணம் என்று சொல்லாமல் ....த்தனம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உள்ளன) குறித்து ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியகால ஐரோப்பாவில் தொடங்கியதாகக் கருதப்படும் 'கார்னிவல்' என்ற நிகழ்வு இப்படியானவொரு திருவிழாத்தனத்தின் உச்சம் என்று விளக்கப்படுகிறது.

இத்திருவிழாக்களில் தலைகீழாக்க நிலையொன்று உருவாகுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  அதாவது, யதார்த்த வாழ்வின் சமூகப் பண்பாட்டு அரசியல் படிநிலைகளுக்குத் தலைகீழான நிலையொன்று உருவாகுவதாக வான் ஜென்னப், அவரைத் தொடர்ந்து விக்டர் டர்னர் போன்ற மானிடவியலர்கள் விளக்கமளித்தனர்.  இவர்களின் இந்தக் கோட்பாடு 'சடங்கைக் கடத்தல்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

திருவிழாத்தனங்களின் தமிழக எடுத்துக்காட்டுகள் எல்லோருக்கும் அறிமுகமானவை தான்.  பத்து நாள் நடைபெறும் ஊர்த் திருவிழாக்களின் கடைசி நாளில் இக்களேபரங்களைக் காணமுடியும்.  மஞ்சளை அரைத்துக் கலக்கிய தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் விசிறியடிப்பது, திருமண உறவுடைய நபர்கள் ஒருவரையொருவர் பாலியல் நடவடிக்கை சார்ந்து கேலியும் கிண்டலும் செய்வது, கூடி மதுவருந்துவது, ராஜாராணி ஆட்டம் - ஆடல் பாடல் - கதம்ப நிகழ்ச்சி என்று விதவிதமான பெயர்களில் நடைபெறும் நிகழ்வுகளில், நடு இரவில், ஆண்கள் மட்டும் பார்வையாளராய் இருக்க (அச்சமயம் தமிழகப் பெண்களுக்கு ஒட்டுமொத்தமாய் கண்கள் சொக்கி தூக்கம் வந்து விடுவதாக ஐதீகம்) உடலுறவு குறித்து அதீதமாய் பேசவும், அசையவும் செய்வது - இவையும் இன்னபிறவும் தான் நமது திருவிழாத்தனங்கள்.

திருவிழாக்களின் இத்தகைய தலைகீழாக்கத்தனத்தை இலக்கிய ஆய்வுகளின் வழியாக அடையாளப்படுத்தியவர் மிகைல் பக்தின்.  ஃப்ரான்சுவா ரெபலியேவின் நாவல்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பக்தின் அவற்றில் தென்பட்ட வழமைக்கு மாறான தலைகீழாக்க நிலையை 'கார்னிவல்' என்ற ஐரோப்பிய பண்பாட்டு நிகழ்வை ஆதரவாகக் கொண்டு விளங்கிக்கொள்கிறார்.  'கார்னிவல்கள்' நிகழும் கால அளவு மிகக் குறுகியது என்றாலும், அந்தச் சிறிய பொழுதுகளில், அரசும் சமயமும் சமூக அந்தஸ்தும் தத்தம் வழக்கமான அதிகாரங்களை இழப்பதால் படிநிலத்தன்மைக்கு மாறான பன்முகத்தன்மை உருவாவதைப் போலவே நாவல் என்ற இலக்கிய வடிவமும் ஒருமை தவிர்த்த பன்மையைத் தனது இயல்பாகக் கொண்டிருப்பதாய் பக்தின் விளக்கினார்.  பலதரப்பு நியாயங்களைப் பேசிப்பார்க்கும் வகைக்கு, பல குரல்களை அனுமதிக்கும் வகைக்கு நாவல் என்ற இலக்கிய வடிவம் நெகிழ்வானது என்பது பக்தினின் வாதம்.

தெரிந்தோ தெரியாமலோ, மாதொரு பாகன் குறித்த சர்ச்சையில், நாவல் என்ற வடிவமும் திருவிழாத்தனம் என்ற பண்பாட்டுக் கூறுமே மையப் புள்ளிகளாக மாறிவிட்டிருக்கின்றன.

மாதொருபாகன், குழந்தையில்லா தம்பதியைப் பற்றிய கதை.  தங்களுக்கிடையிலான உடலுறவின் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாததைக் கண்டு அத்தம்பதியினர் வருத்தமடைகிறார்கள்.  அதிலும் நாவலில் கணவனுக்கான நெருக்கடி அதிகமாக இருக்கிறது - சொந்த வீட்டில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்கள்; மணமுடித்த வீட்டில் வேறொரு ஆணோடு உடலுறவு கொண்டு மனைவி கர்ப்பம் தரிக்க அனுமதிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். வேறொரு பெண்ணை மணமுடிக்க விரும்பாத கணவன், சோர்ந்த மன நிலையொன்றில் இரண்டாவது யோசனைக்குத் தலையாட்டுகிறான்.  வேறொரு ஆண் மூலம் கர்ப்பம் தரிக்க வேண்டி மனைவியை திருச்செங்கோடு கோவில் திருவிழாவிற்கு கொண்டு போய் அவிழ்த்து விடுகிறார்கள்.  கணவனோ, மனைவியானவள் தன் நம்பிக்கையை சிதறடித்ததாய் புலம்புவதுடன் கதை முடிகிறது.

நீண்ட கதையொன்றின் சிறு துண்டு போல் தோன்றும் இப்படியான சம்பவம் தமிழகத்தில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உண்டா என்றால், உண்டு, இப்பொழுதும் உண்டு; ஆனால், இந்த வடிவத்தில் அல்ல என்பது தான் எனது பதில்.  வடிவத்தில் என்றால் மாதொருபாகனில் விவரிக்கப்படுவது போன்ற தர்க்கவொழுங்கில்.   

அந்த தர்க்கம் இது தான்:

1.    குழந்தையில்லாத பெண்கள் வேறொரு ஆணோடு முயங்கி கர்ப்பமடையும் வாய்ப்பை வழங்குவதற்காக பண்பாடே ஒரு ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறது - அது, கோவில் திருவிழாக்களில் உருவாக்கப்படும் கட்டற்ற பாலியல் சுதந்திரம்! 
 
2.    இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கர்ப்பமுறும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தையை 'சாமி குழந்தை' என்று அழைப்பதன் மூலம் பண்பாடு, அப்பெண்ணையும் குழந்தையையும் சமூக அபவாதத்திலிருந்து காப்பாற்றிவிடுகிறது.
 
பெருமாள்முருகன் வாதிடுவது போல், திருவிழாக்களில் ஏற்படுத்தப்படும் தலைகீழாக்கம், குழந்தையற்ற பெண்கள் கர்ப்பமுறுவதற்கான மாற்று ஏற்பாடாக உருவாக்கப்படுவது அல்ல.  அது நாம் ஏற்கனவே பார்த்தது போல் வழக்கத்திற்கு மாறான திருவிழாத்தனங்களை மட்டுமே உடையது.  வழக்கமான பாலியல் கட்டுப்பாடுகள், அதிகார ஒழுங்குகள் அங்கு தைரியமாய் மீறப்படுகின்றன என்றாலும் எதுவும் கட்டற்று போய்விடுவதில்லை.  பரஸ்பரம் விரும்பி இணைய முயலும் அந்நிய ஆணும் அந்நியப் பெண்ணும் கூட சுற்றியுள்ளவர்களின் கண்களுக்கு கணவனும் மனைவியுமாய் நடிக்கத்தான் வேண்டும் (ஏய், செல்வி புட்டு சாப்டுறியா...).  சமூகம் அப்படியே தலைகீழாகி விடவில்லை.  கொஞ்சம் தளர்ந்திருக்கிறது, அவ்வளவு தான்.

ஆனால், மாதொருபாகன், அந்தத் திருவிழாத்தனத்திற்கு சடங்குத் தன்மையைப் பூசுகிறது.  அன்றைய தினம், குழந்தைப் பேறற்ற பெண்களுக்கு குழந்தை வரம் தரும் சடங்கு நிகழ்வது போன்ற மாயத்தோற்றத்தை நாவல் உருவாக்குகிறது (அர்ச்சுனன் தபசில் பழம் விழுந்த முந்தானையைப் பெற்றவர்கள் கர்ப்பமாவார்கள் என்பது போல). அன்றைய தினம், அந்தச் சூழலில் கலவியில் ஈடுபடும் அனைவரும் கர்ப்பம் தரித்தே தீருவார்கள் என்ற உத்தரவாதத்தைப் பண்பாடே தருவது போல நாவல் பேசத்தொடங்குகிறது.

உண்மையில் பண்பாடு இவ்வகையிலான உத்தரவாதங்களை அறிகுறிகளாகவும், சமிக்ஞைகளாகவும், குறியீடுகளாகவுமே வழங்கும்; நேரடிப் பொருளில் அது பேசுவதேயில்லை; எப்பொழுதுமே மறைமுகம் தான்.  திருவிழாவின் இறுதி நாளன்று நிகழ்பவை அனைத்தும் 'பண்பாட்டின் அயர்ச்சி' தானே தவிர, அதன் சூட்சுமம் அல்ல.

பண்பாடு அயர்ந்திருக்கும் இந்த வேளையை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.  ஆண்கள் வெளிப்படையாகவும் பெண்கள் ரகசியமாகவும் பாலியல் சாகசத்தை மேற்கொள்ளலாம்; வஞ்சம் தீர்க்கலாம்; பழி வாங்கலாம்.  மரபாகச் செய்ய முடியாத எதையும் அன்றைக்கு செய்து விடலாம்.  அவரவர் கற்பனையையும் தேவையையும் பொறுத்தது இது (பாளையங்கோட்டை தசரா விழாவின் கடைசி நாளில் சாதிப் பழிவாங்கல்கள் நடைபெற்றன). இத்தகைய தருணங்களை ஒடுக்கப்பட்டவர்களே பெரும்பாலும் காத்திருந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  குழந்தைப் பேறற்ற, அதற்கான மொத்தப் பழியையும் தப்பிதமாய் சுமந்து திரியும், 'மலடி' என்று பட்டம் சூட்டப்பட்ட பெண் விரும்பினால் இந்தப் பண்பாட்டு அயர்ச்சியை புத்திசாலித்தனமாய் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

குழந்தை பெறாத காரணத்தால் ஊராராலும், கணவன் வீட்டாராலும், கணவனாலும் கரித்து கொட்டப்பட்ட பெண் தன்னிச்சையாகவோ அல்லது பிற பெண்களின் துணையோடோ, கருத்தரிப்பதற்கான மாற்று வழிகளைத் திட்டமிட முடியும்.  கணவன் என்ற அதிகாரத்தை ஏமாற்றுவதற்கு இத்திருவிழாத் தருணங்களை அத்தகைய மனைவியால் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.  ரகசியமாய் காதும் காதும் வைத்த மாதிரி செய்து முடிக்க வேண்டிய காரியம் இது.  கணவனுக்கோ அவனது சார்பானவர்களுக்கோ சிறிதும் சந்தேகம் வராதது போல செய்து முடிக்க வேண்டிய ஒன்று.  இதற்கான தருணங்களையே திருவிழாவின் இறுதியில் தன்னையே அயரச்செய்வதன் மூலம் பண்பாடு உருவாக்கித் தருகிறது.  இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்பொழுது மட்டும் எப்படி கர்ப்பம் தரித்தாள் என்று யாராவது கேள்வி கேட்டால் பதிலாய் சொல்வதற்கான சமாதானம் தான் 'சாமி குழந்தை' என்ற கற்பனை.  இந்தப் பதில் ஊர் வாயை மட்டுமல்லாமல் முக்கியமாய் கணவனின் குதர்க்கத்தையும் சேர்த்து மூடிவிடுகிறது.

இது ஒன்றும் புதிய விஷயமில்லை.  இந்தக் கதைகளை சமூகத்தில் எல்லோருமே அறிந்திருக்கிறார்கள் தான்.  சின்ன வயது முதலே கதை கதையாய் இதைத் தான் சொல்லித் தந்திருக்கிறார்கள்.  இந்தக் குழந்தையற்ற பெண்களின் குறையைச் சொல்லும் ஆயிரமாயிரம் நாட்டுப்புறக்கதைகள் உலகெங்கும் உள்ளன.  அந்தக் கதைகளிலெல்லாம் பெண்கள் ஒரே மாதிரியாய்த் தான் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அந்தப் பெண்கள் அழுது கொண்டிருக்கும் சூழல்களில் அங்கு வந்து சேரும் வயதான பெண்கள், மாங்கனியையோ, வண்ண மலர்களையோ, ஒரு குவளை பாலையோ, அல்லது சுண்டைக்காயையோ தந்து சாப்பிடச் சொல்ல, கர்ப்பம் தரித்து குழந்தை பிறக்கிறது. அப்பொழுதெல்லாம், பாம்பு, ஆமை, மீன், சுண்டைக்காய் என்று விபரீதக் குழந்தைகள் தான் (சாமி குழந்தை) பிறக்கின்றன.
மாதொருபாகன் தவறவிட்டு விடுகிற முரணை (குழந்தை பெறவில்லை என்றால் அவள் மனைவியாயிருக்கத் தகுதியற்றவள் என்று சொல்லும் ஆண்களை (ஆண் சார்பானவர்களை) பழி வாங்கும் பெண்கள் என்ற முரணை) நாட்டுப்புறக்கதைகள் வெகுசாமர்த்தியமாக சொல்லி வருகின்றன.
 
அந்த சாமர்த்தியம், இரண்டு பக்கங்களின் கூர்மையையும் மொன்னையாக்கி விடுகிறது என்பதும் இங்கு முக்கியம் - ஒரு பக்கம் அதிகார ஆண்களை ஏமாற்றும் பலவீனப் பெண்கள் என்ற முரணை தைரியமாக முன்வைக்கிறது என்றாலும், மறு பக்கம் அதற்குள் மந்திரத்தன்மையைப் புகுத்தி அம்முரண் வெளிப்பார்வைக்குத் தெரியாதபடி பூசி மெழுகியும் விடுகிறது.  இந்த சாமர்த்திய பூசி மெழுகும் தன்மை நாட்டுப்புறக் கதையாடல்களின் இயல்பு. 

நாட்டுப்புறக்கதையாடல்களிலிருந்து நவீன இலக்கியங்கள் வேறு பட வேண்டிய தளம் இந்தப் பூடகங்களைக் களைவது தான் (யதார்த்த எழுத்தாகவோ அல்லது மாயயதார்த்த எழுத்தாகவோ இதனைப் பல எழுத்தாளர்கள் சாமர்த்தியமாய் செய்திருக்கிறார்கள்).  ஆனால், மாதொருபாகனில், இந்தப் பூடகம் களையப்படவில்லை என்பதோடு, நாட்டுபுறக்கதையாடல்கள் துணிச்சலுடன் ஆண் - பெண் முரணை அடையாளப்படுத்தும் புத்திசாலித்தனமும் கூட தவறவிடப்படுகிறது.

அதிகாரத்தின் முன் வீழ்ந்து கிடக்க வேண்டிய பலவீனர்கள், கடைசியாய் ஒரு முறை எழுந்து அதிகாரத்தின் உயிர்த்தலத்தைத் தாக்கும் தருணம் தான் திருவிழாக்களின் இறுதிப் பகுதி.  சாது மிரளும் கணங்கள்!  ஆனால், சமூகம் இதையெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்திருக்கிறது.  இந்தப் பண்பாட்டுச் சிக்கலை, திருவிழாக்களின் பன்முக சாத்தியங்களை, மாதொருபாகன், ஒற்றையாகச் சுருக்கி விடுகிறது என்பதிலிருந்து தொடங்குகிறது சிக்கல்.

********

பெருமாள்முருகன், நாவலின் சாத்தியங்களை உணர்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதரவான சாட்சியங்கள் என்னிடம் இல்லை. 

'சொற்களை ஊதாரித்தனமாய் செலவிடும் கதை தான் நாவல்' என்று அவர் நம்பிக்கொண்டிருக்க வேண்டும்.   

அதே போல் புனைவு என்றால் ஸ்நேகபாவமும் ஆய்வு என்றால் அந்நியபாவமும் அவரிடம் இருப்பதாகவும் உணர்கிறேன்.  இந்த ஸ்நேகபாவம் புனைவின் மீதான அசட்டையையும் ஆய்வு மீதான எச்சரிக்கையுணர்வையும் அவருக்குள் தோற்றுவிக்கிறது (திருச்செங்கோட்டுத் திருவிழா குறித்த பண்பாட்டு ஆய்வு நூலொன்றை எழுதுவதற்கு தனக்கு கூடுதல் அவகாசம் தேவை என்பது அவரது கூற்று). இந்த அசட்டை மாதொருபாகனில் நன்றாகவே தெரிகிறது.

குழந்தையற்ற ஆணொருவனின் புலம்பலாக அந்தக் கதை சொல்லப்படுகிறது.  

அந்தப் புலம்பலும் பாலியல் வேட்கை நிரம்பிய தொனியையேக் கொண்டிருக்கிறது.  அவன் தன் மனைவியோடு சதா முயங்கும், வாய்க்காத போது இச்சையோடு நோக்கிக் கொண்டிருக்கும் ஏகபத்தினி விரதனாக இருக்கிறான்.  கதையோட்டத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் 'சித்தப்பா'வின் கதை உடலுறவின் இன்றியமையாமையையும் திருமணபந்தம் என்ற அநாவசியத்தையும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறது. கதையின் நாயகனும் அவனது நண்பனும் சிறு வயது முதலே ரகசிய பொந்துகளின் மீது வெறிகொண்டவர்களாக இருக்கிறார்கள்.  அந்தப் பொந்துகளில் ஒளிந்திருந்து சாதாரணமாய் வீடுகளில் கிடைக்காத வினோதப் பண்டங்களை சமைத்து உண்கிறார்கள்; குடிக்கிறார்கள்.  (சமயலறையில் பெண்கள் தயாரிக்கும் உணவு - வெளியிடங்களில் ஆண்கள் தயாரிக்கும் உணவு என்பது பாலியல் சார்ந்து பல்வேறு அர்த்தங்களைத் தர முடியும்.)  உடலுறவு குறித்த சாகச மனோபாவம் மட்டுமே மேலோங்கியிருக்கும் விடலைப் பருவத்தைக் கடந்து அந்த ஆண் வளர்ந்தது போலவேயில்லை.  இப்படியானவொரு ஆணின் பார்வையிலேயே குழந்தையற்ற பரிதாபநிலை மாதொருபாகனில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

நியாயப்படி, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பாத கணவனால் ஒரு மனைவிக்கோ அவளது குடும்பத்தினருக்கோ என்ன துயரம் நேர்ந்து விடப்போகிறது?  மலடி என்ற அவச்சொல்லைப் போக்குவதற்காக மட்டுமே ஒரு பெண்ணும் அவளது குடும்பமும், கர்ப்பம் தரிக்கும் என்ற எந்தவித உத்தரவாதமுமற்ற சூழலில், அந்நிய ஆணோடு உடலுறவு கொள்ளுதல் என்ற தலைகீழாக்கத்தை செய்து பார்க்க முயல்வார்களா?  ஒரு பெண்ணும் அவளது குடும்பமும் இந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் அநாதரவான சூழல் தேவைப்படுகிறது - தமிழ்ப் பண்பாட்டு வெளியில் அத்தகைய அநாதரவான சூழல், 'அவளது கணவன் வேறோரு திருமணத்திற்கு முயற்சிக்கிறான்' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

மாதொருபாகனில் இப்படியான நிர்க்கதி அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.  மொத்த பழியையும், அதாவது அந்தப் பெண்ணும் அவள் குடும்பமும் இப்படியொரு முடிவை எடுத்தத்தற்கான மொத்தப் பழியையும், சமூகம் தந்த 'மலடி' என்ற அவச்சொல்லின் மீது பெருமாள்முருகன் தூக்கிப் போடுகிறார்.  அதற்காக கணவனின் ஒப்புதலுடன் அப்பெண் வேறொரு ஆணோடு முயங்கச் செல்வதாய் கதையை வளர்க்கிறார்.  அவர் சொல்லும் கதையை, அவரது கதாபாத்திரமே கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறது.  அவர் சொல்லும் சமாதானத்தையெல்லாம் கேட்ட பின்பும், தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாய் சொல்லி அரற்றத் தொடங்குகிறது.  புரட்சிகரக் கதையாகக் கற்பனை செய்யப் போய் கடைசியில் ஏகபத்தினி விரதனொருவனின் உணர்ச்சிப்பிழம்பான அழுகைக்கதையாக மாறிவிட்டது.

மாதொருபாகன் மாதிரியான இலக்கிய முயற்சிகளில் எங்கே தவறுகள் நடக்கின்றன என்று நாம் யோசித்துப் பார்க்கலாம்.

1.    நாவல் வழங்கும் சாத்தியங்களைப் புறக்கணித்தல்:

சமூக அசைவுகள் பற்றியும் பண்பாட்டு ஒழுங்கமைப்புகள் பற்றியும் பேச முடிகிற புனைவுத்தளமாக நாவல் தன்னை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது.  பிற எழுத்திலக்கிய வடிவங்களில் கிடைத்திராத படைப்புச் சுதந்திரத்தை நாவல் என்ற வகைமை தருவதற்குத் தயாராகவே இருக்கிறது.  பௌதீக உலகின் சிக்கல்களுக்கு கொஞ்சமும் குறைவுபடாத  சிக்கல்கள் நிரம்பிய (சில நேரங்களில் அதை விடவும் பின்னல்களுடைய) புனைவுலகொன்றை நீங்கள் நாவலில் கட்டமைக்க முடிகிறது. பக்தின் சுட்டுவது போல திருவிழாத்தனம் நிரம்பிய பிரதியொன்றை கற்பனை செய்வதற்கான வாய்ப்பை நாவலே உங்களுக்கு வழங்குகிறது.  மாதொருபாகன் போன்ற பிரதிகள் நாவலின் இத்தகைய சாத்தியங்களை உதாசினப்படுத்துகின்றன அல்லது அறியாமல் இருக்கின்றன.
நவீனத்துவம் முன்னெடுத்த ஒற்றைக்குரலின் உளவியல் சிக்கல்களை வெளிப்படுத்தும் நாவல் முன்மாதிரிகளை பின்பற்றி பண்பாட்டு நிகழ்வுகளை சித்தரிக்கும் நாவல்களை எப்படி எழுத முடியுமென்ற அடிப்படையானக் கேள்வியைப் பலரும் புறக்கணிக்கவே முயலுகின்றனர்.  இந்தப் பாராமுகம், குழந்தையில்லாததால் 'மலடி' என்று தூற்றப்படும் பிரச்சினையில் கூட பெண்கள் சொல்வதற்கு சில கதைகள் இருக்க முடியுமென்று யோசிப்பதைத் தடுக்கிறது.

2.    பண்பாட்டுத் தரவுகளில் வினோதங்களைக் கண்டறியும் மனோபாவம்:

மரபான பண்பாடுகளை எதிர்கொள்கின்ற காலனியப் பார்வைகளும் சரி, பின்னைக் காலனியப் பார்வைகளும் சரி, திருவிழா போன்ற நாட்டுப்புற பழக்க வழக்கங்களில் அபூர்வங்களைத் தரிசிக்கும் மன நிலையையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன.  தொல்பழங்குடிச் சமூகங்களில் உச்சகட்ட உன்னதங்களும், விவசாயக் குடிகளில் சற்றே மாற்றுக்குறைவான பெருமைகளும் இருப்பதான நம்பிக்கையே இத்தகைய அணுகுமுறைகளை இயக்கி வந்துள்ளன.   

சடங்கைக் கடத்தல் என்ற பார்வையில் முன்மொழியப்பட்ட 'தலைகீழாக்கம்' என்ற கருத்தாக்கம் இத்தகையதொரு வினோதமாகவே சிலாகிக்கப்பட்டது.  ஒடுக்குதல்கள் நிரம்பிய சமூக ஒழுங்கமைப்பில் 'அத்திபூத்தாற் போல'த் தென்படும் இத்தகைய தலைகீழாக்கம், 'எதிர்குரல் - மாற்றுக்குரல் - ஒடுக்கப்பட்டவனின் அரசியல்' என்ற பெயர்களில் சித்தரிக்கப்பட்டதும் இதனாலேயே தான்.

நாட்டுப்புற வழக்காறுகளில் ஒலிக்கும் எதிர் பண்பாடு என்ற சித்தரிப்பும் கூட இத்தகைய வினோத வேட்டையில் கண்டறியப்பட்டது தான்.  பழங்குடியினத்தவர் அல்லது நாட்டுப்புறத்தவர் அல்லது அடித்தளத்தார் அல்லது ஒடுக்கப்பட்டவர் 'நம்மிடமிருந்து' வேறுபட்ட, வித்தியாசமான வாழ்க்கைமுறையொன்றை ரகசியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அமைப்பியல்வாத சிந்தனையாளர்கள் முன் வைத்த வாதம், சமூக விடுதலையை நாடியவர்களுக்கு கவர்ச்சிகரமாக இருந்ததும் இதனால் தான்.
சடங்குகளிலும் திருவிழாக்களிலும் சட்டென்று தோன்றி மறையும் 'தலைகீழாக்கத்தை' மையப்படுத்துவதன் மூலம் பண்பாட்டை முரண்பட்ட சமூகக்குழுக்களின் ஒழுங்கமைப்பாக விளக்கமுடிந்தது.  ஒவ்வொரு பண்பாட்டுச் செயல்பாட்டிற்கும் பின்னே வெளிப்படையாக அல்லது மறைமுகமாகவேணும் ‘ஒடுக்கப்பட்டவனின் வலி’ பொதிந்துள்ளதாக நம்புவது மகிழ்ச்சியாக இருந்தது.  அதனால், இத்தகைய வலி நிரம்பிய குரலை அதிர அதிரப் பரவச் செய்வதன் மூலம் சமூக முரண்களைக் கூர்மைப் படுத்தவும் அரசியல்படுத்தவும் முடியும் என்று இன்னும் தீவிரமாக நம்பப்பட்டது.

நா. வானமாமலை தொடங்கி வைத்த மார்க்சிய பார்வையும் சரி, தாமதமாக வந்து இணைந்து கொண்ட திராவிடப் பார்வையும் சரி, எங்கே வந்திருக்கிறோம் என்பதை இறுதி வரை அறியாதிருந்த அடித்தளமக்கள் பார்வையும் சரி, இத்தகைய 'அன்றாட வாழ்வில் வெளிப்படும் எதிர்ப்பு வடிவங்கள்' என்பதைக் காட்டுப் பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் தணற்குஞ்சு என்றே கணித்தார்கள். மாதொருபாகன், இப்படியானவொரு பண்பாட்டுப் புரிதலில் இருந்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. திருச்செங்கோட்டின் பண்பாட்டு வரலாற்றைக் கதை கதையாய் கேட்கப் போன இடத்தில் தான் இத்தணற்குஞ்சை அபூர்வம் போலக் கண்டடைந்திருக்கிறார்.  (அதைக் கோளாறுகளோடு விளங்கிக் கொண்டார் என்பது வேறு!)

ஆனால், துரதிர்ஷடவசமாக அத்தணற்குஞ்சுகள் தங்களைத் தாங்களே தணற்குஞ்சுகள் என்று நம்புவதற்கே மறுக்கின்றன என்பது தான் யதார்த்தம்.

இந்தத் 'தன்னிலை மறுப்பே' பண்பாட்டின் இன்றியமையாத குணமாகக் காணப்படுகிறது. மார்க்சியம் இந்தத் தன்னிலை மறுப்பை, 'தவறான பிரக்ஞை' என்றும், தலித்தியம் 'சமஸ்கிருதவயமாதல்' (தங்களை 'தலித்துகள்' இல்லை என்று மறுதலிக்கிற சம்பவம்) என்றும் விளக்குவதன் மூலமாக எளிதாகக் கடந்து விட முயலுகின்றன.

மாதொருபாகன் நிகழ்வின் மூலமாக நாம் கற்றுக் கொள்வதற்கு சில அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

1.    பண்பாட்டு விமர்சனம் என்ற பெயரில், மார்க்சிய - திராவிட - தலித்திய சிந்தனைகளின் அடிப்படையில், கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழில் முன்னெடுக்கப்பட்ட அறிவார்ந்த சொல்லாடலை, சாதி சமயப் பெருமைகளைக் காப்பாற்றுதல் என்ற பெயரில் நிர்மூலமாக்கும் முயற்சியின் வெளிப்பாடே மாதொருபாகனுக்கு எதிராகக் கிளம்பி வந்த எதிர்ப்பு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பெரியாரைக் கேலி செய்வதும், அயோத்திதாசரை பெரியாருக்கு எதிராக நிலைநிறுத்துவதும், தலித்திய உரையாடலை உட்சாதி முரண்களைக் காட்டிக் கேலி செய்வதும், 'தமிழ்' அடையாள முயற்சிகளை இனவெறி என்று விமர்சனம் செய்வதுமாக நடைபெற்றுவந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகவே மாதொருபாகன் நிகழ்வை நான் மதிப்பிடுகிறேன்.  தொடர்ச்சியான கருத்துச் சுதந்திர அழிப்பின் சமீபத்திய உதாரணமே பெருமாள்முருகன் மீதான வன்முறை.  கருத்துச் சுதந்திரம் பற்றி தீவிரமாகப் பேசப்படும் இத்தருணத்தில் நமது விவாதம் மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெளிப்பட வேண்டும் என்பது முக்கியம்.

2.    பண்பாட்டு நிகழ்வுகளை விளங்கிக் கொள்வதில் நாம் பயன்படுத்தும் ஆய்வு உபகரணங்களின் (மார்க்கிசிய -திராவிட - தலித்திய - அடித்தள) போதாமையை ஏற்றுக்கொண்டு, இன்னும் தீவிரமான அறிவியல் முனைப்புகளை நோக்கி செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
 
3.    படைப்பிலக்கிய உருவாக்கம் குறித்து நம்மிடம் வழக்கிலுள்ள பூடகங்களைக் கடந்து, அதன் பல்வேறு சாத்தியங்களை படைப்பாளி சார்ந்தும் விமர்சகன் சார்ந்தும் இப்பொழுதாவது பேசத் தொடங்கவேண்டும்.  மாதொருபாகன் சர்ச்சையினாலும், சாகித்ய அகாடமி விருதினாலும் 2015 சென்னைப் புத்தகத் திருவிழாவில் பெருமாள்முருகன் பூமணியின் புத்தகங்களே அதிகம் விற்றன என்று சொல்வதில் எந்த இலக்கிய மதிப்பீடும் இல்லை என்பதை நாம் தெளியும் அறிவு நமக்கு வேண்டும்.    

Comments

மிக அருமையான அலசல்.
natesh said…
wonderful sir... i also thank mr dalawaai sundram for making me read this... sharing
டி. தருமராஜ் குறிப்பிடும் கார்னிவெல் மனோபாவம் உண்மையானது. ஒருவிருந்திலோ களியாட்டத்திலோ மற்றவன் பொண்டாட்டியை சேர்ந்தாட அழைப்பதுவும், அவர்கள் செய்யப்போகும் சில்மிஷங்களை அனுமதிப்பதும் / பொறுத்துக்கொள்வதுவும் இன்றுவரை தொடர்வதுதான். பண்பாட்டு அளவுகோலை எல்லாவிடத்திலும் செலுத்திவிடமுடியாது. இப்படைப்புக்குள் நாவல்தரும் சாத்தியங்களை பெ.முருகன் சரிவரப்பயன்படுத்தவில்லை என்பதுவும் நிஜமே. பொன்னாவுக்கு பிள்ளை ஒன்றைப்பெற்றுக்கொள்வதுதான் நோக்கம் என்றால் திருச்செங்கோட்டுக்கோவில் திருவிழாவில் அவள் அதைச் சாதித்துக்கொள்வதாக அமைத்திருக்கலாம். குழந்தைப்பேறில்லாத பெண்களை கருத்தரிக்கவேண்டி ஒரு குடும்பமே அனுப்பிவைப்பதான வழக்கத்தைத் தன் ஆய்வுகளால் பெ.முருகனாலோ வேறொருவரினாலோ நிறுவமுடிகிறதோ இல்லையோ இங்கே பொன்னாவின் அப்பனும் ஆத்தாளும் அத்தையும் அண்ணாவும் சேர்ந்து அவளை அனுப்பிவைப்பதானது ஒரு கிடாரியை சினைப்படுத்து நிலையத்துக்கு தள்ளிப்போவதைப்போல இருந்ததுடன் படிப்போரை நெளியவும் வைத்தது. தவிர எழுதுபவனின் கருத்து சுதந்திரம் அதற்கான போராட்டம் முன்னெடுப்புகள் படைப்புக்கு வெளியான விஷயங்கள்.
Raja M said…
மாதொருபாகன் குறித்து - 1

சிந்தனையைத் தூண்டும் பதிவு. பெருமாள் முருகன், “நாவல் வழங்கும் சாத்தியங்களைப் புறக்கணித்திருக்கிறார்”, எனவும், “பண்பாட்டுத் தரவுகளில் வினோதங்களைக் கண்டறியும் மனோபாவம்”, கொண்டுள்ளார் என்றும் இரு கூரிய விமரிசனங்களை முன் வைத்திருக்கிறீர்கள். முதலில், நான் மானுடவியல் துறையைச் சார்ந்தவன் அல்லன் என்பதைச் சொல்லி விடுகிறேன். உங்கள் பதிவை படித்தவுடன் எழுந்த எண்ணங்களை மட்டுமே சொல்கிறேன்.

முதலில், எந்த மாதிரியான சாத்தியங்களைப் புறக்கணித்திருக்கிறார் என்பதற்கு உதாரணங்களை அளித்துள்ளீர்கள், “… திருவிழாவின் இறுதி நாளன்று நிகழ்பவை அனைத்தும் 'பண்பாட்டின் அயர்ச்சி' தானே தவிர, அதன் சூட்சுமம் அல்ல. பண்பாடு அயர்ந்திருக்கும் இந்த வேளையை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆண்கள் வெளிப்படையாகவும் பெண்கள் ரகசியமாகவும் பாலியல் சாகசத்தை மேற்கொள்ளலாம்; வஞ்சம் தீர்க்கலாம்; பழி வாங்கலாம். மரபாகச் செய்ய முடியாத எதையும் அன்றைக்கு செய்து விடலாம். அவரவர் கற்பனையையும் தேவையையும் பொறுத்தது இது (பாளையங்கோட்டை தசரா விழாவின் கடைசி நாளில் சாதிப் பழிவாங்கல்கள் நடைபெற்றன). இத்தகைய தருணங்களை ஒடுக்கப்பட்டவர்களே பெரும்பாலும் காத்திருந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். குழந்தைப் பேறற்ற, அதற்கான மொத்தப் பழியையும் தப்பிதமாய் சுமந்து திரியும், 'மலடி' என்று பட்டம் சூட்டப்பட்ட பெண் விரும்பினால் இந்தப் பண்பாட்டு அயர்ச்சியை புத்திசாலித்தனமாய் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.”, என்று சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட நிலையை பொன்னா எடுக்க, அவள் தள்ளப்பட வேண்டுமானால், ““...ஒரு பெண்ணும் அவளது குடும்பமும் இந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் அநாதரவான சூழல் தேவைப்படுகிறது - தமிழ்ப் பண்பாட்டு வெளியில் அத்தகைய அநாதரவான சூழல், 'அவளது கணவன் வேறோரு திருமணத்திற்கு முயற்சிக்கிறான்' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை”, என்றும் சொல்கிறீர்கள்.

பொன்னா, தன் கணவன் தன்னை விடுத்து இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுவானோ என்ற அச்சத்தால், பண்டிகைக் கால கலாசார நெகிழ்ச்சியை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள எத்தனிப்பவளாக நாவலில் சித்தரித்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள். சரி தானே?

பழங்குடி வழிபாட்டின் உருவகமாக, பாவாத்தாவும், வரடிகல்லும் இருக்கின்றன. பாவாத்தா, மாதொருபாகன் ஆனதும், வரடிகல் ஐதீகம் பாண்டீஸ்வரர் ஆனதும் பழங்குடி வழிபாடு, புராணமயமாக்கப்பட்டு, வெகுஜன வழிபாடாகியது. காளி, அந்த வெகுஜன சமூகத்தின் பிரதி நிதி. அச்சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை முற்றிலும் உள்வாங்கிய, நிலவுடைமைக் குடியானவன். அவனும் சரி, பொன்னாவும் சரி, ஒடுக்கப்பட்டவர்கள் அல்லர். ஒடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் சமுதாய அயர்ச்சியை, பொன்னா பயன்படுத்திக் கொள்வாளோ என்பது தான் காளிக்கு உள்ள பெரிய அச்சம்.

காளியின் நண்பன் முத்துவிடம் பேசும் போது,
“நீ அந்தக் காலத்து ஆளாட்டமே பேசறீயடா. ஒரு பொம்பள சாதிக்குள்ள எத்தன பேர்கிட்ட போனாலும் தப்பில்ல. புழங்கிற சாதிக்காரன்ட்ட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போன அவ்வளவு தான். ஊர விட்டே, ஏன் சாதிய வுட்டே தள்ளி வைச்சிருவாங்க. இன்னைக்கு அப்படியா? சாதிக்குள்ளயே ஒருத்தனோடா தான் இருக்கனுங்கிறோம். அப்புறம் எப்பிடி? வீதியில சுத்தரதுல பாதிப் பேர் தீண்டாச்சாதித் தண்டுவப் பசங்க தான். அதுக்கப்புறம் பொன்னாள என்னால தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ”, என்று தானே காளி சொல்கிறான்? (பக்கம் 118)

இதில் இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, “அன்றைய தினம், குழந்தைப் பேறற்ற பெண்களுக்கு குழந்தை வரம் தரும் சடங்கு நிகழ்வது போன்ற மாயத்தோற்றத்தை நாவல் உருவாக்குகிறது”, என்று நீங்கள் சொல்வது போல் நாவலில் காளி கருதுவதில்லை. அது ஒரு ஐதீகம் மட்டுமே என்று அவனுக்கு நன்றாகவே தெரிகிறது. அங்கே பொன்னா போனாலும், குழந்தை பிறக்காதிருக்கலாம் என்பதும் அவனுக்குத் தெரிகிறது. சாதிக் கட்டமைப்பை முழுதாக உள்வாங்கியது தான் அவனது தலையாய பிரச்னை.

...
Raja M said…
மாதொருபாகன் குறித்து - 2

இரண்டாவதாக, பெருமாள்முருகன் நாவலில் இன்னொரு கோணத்தையும் வைக்கிறார். அது குடியானவனின் வாழ்க்கையில் நிலவுடமைக்கு இருக்கும் செல்வாக்கைப் பற்றியது. நிலம் தன் வாரிசுக்குப் போக வேண்டும் என்பதில் அனைவரும் குறியாக இருக்கிறார்கள். நாவலில் வரும் காளியின் சித்தப்பாவின் பாத்திரம் இந்த ரீதியில் முக்கியமானது. அவர் சொத்தைத் தான் அவர் கூடப் பிறந்தவர்கள் குறி வைக்கிறார்கள். பிள்ளையில்லாதவனுக்கு சொத்து எதற்கு என்று கேட்கிறார்கள்? சித்தப்பாவிற்கும், சொத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிகிறது. அதனால் தான், அதை உழுது பயிரிடா விட்டாலும், தனக்கென வாங்கி வைத்துக் கொள்கிறார். மதினிகள் அவருக்கு நாள் குறித்து ஒவ்வொருவரும் கறிச் சோறு போட்டு கவனித்துக் கொள்கிறார்கள் – சொத்து வேறெங்காவது போய் விடக் கூடாதென்று. அது ஏன் என்பதும் சித்தப்பாவிற்குத் தெரிகிறது.

நாவலில் பல இடங்களில், “குழந்தையில்லாதவங்க எதுக்கு இப்படி சொத்து சேத்த அலையனும். நல்லா நாலு, துணி, மணி வாங்கி இருக்க வேண்டியது தானே?”, என்ற கேள்வியை பொன்னாவும், காளியும் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. “தன்” குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது தான் ஒரு “நல்ல” குடியானவனின் உச்சப்பட்ச சாதனை. ஒதுக்கமுடியாத கடமை. இரண்டையுமே பொருட்படுத்தாமல் இருக்கும் பாத்திரம் என்ற ரீதியில் காளியின் சித்தப்பா, காளிக்கு பிறிதொரு பாதையைக் காட்டுகிறார். காளியும் சரி, பொன்னாவும் சரி, அந்த வழி பிடித்திருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாக இல்லை. காளி தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே, அவன் பங்குகொள்ள முடிவை, அவனது குடும்பமும் /சமுதாயமும் எடுத்து விடுகிறது. இந்த ரீதியில், காளியின் சித்தப்பாவின் படைப்பு முக்கியமானதென்றே கருதுகிறேன்.
கதையில் நீங்கள் எழுதியுள்ள படி, “காளி வேறொரு பெண்ணை மணமுடிக்க விரும்பாத கணவன், சோர்ந்த மன நிலையொன்றில் இரண்டாவது யோசனைக்குத் தலையாட்டுகிறான்”, இல்லையே? காளி, சரியென்று சொல்வது, பண்டிகைக்கு மாமனார் வீட்டிற்கு போவதற்குத் தான், என்ற ரீதியில் தான் பெருமாள்முருகன் எழுதியுள்ளார். நீங்கள் காளியும், முத்துவும் உரையாடுவதை, “தண்ணியடித்து விட்டு பேசினாலும், சொல்ல வேண்டியதை முத்து சொல்லி விட்டான். அதை காளியும் ஏற்றுக் கொண்டு விட்டான்”, என அதை ஒரு இசைவதற்கான சமிஞ்சையாக கருதுகிறீர்களோ?

பெருமாள் முருகன் “பண்பாட்டுத் தரவுகளில் வினோதங்களைக் கண்டறியும் மனோபாவம்”, என்று சொல்கிறீர்கள். இந்த வினோதங்களை, ஆதிக்க சமூகத்தை எதிர்க்கும் ஒரு “தலைகீழாக்க மன நிலை”யாக காணும் வழக்கமாகச் மானுடவியளாளர்கள் சித்தரிப்பதையும் ஒரு குறையான பார்வையாகத் தான் காண்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், “போலச் செய்தல்”, “பிழையான பிரக்னை”, என்ற கருத்தியலாக்கங்கள் மூலம் எளிய விளக்கங்களே முன் வைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறீர்கள். மிகச் சரியாக, இந்தத் 'தன்னிலை மறுப்பே' பண்பாட்டின் இன்றியமையாத குணமாகக் காணப்படுகிறது”. பெருமாள்முருகன், இந்தத் “தன்னிலை மறுப்பின்” பிரதி நிதியாகத் தானே பொன்னாவைப் படைத்திருக்கிறார்? சாதுர்யமாக யாருக்கும் தெரியாமல், விழாக்கால நெகிழ்ச்சியைப் பயன்படுத்தி, பொன்னா ஒரு குழந்தை பெற்றிருந்தால், அது ஒரு ஆணாதிக்கத்தை தந்திரமாக எதிர்கொள்ளும் ஒரு “தலைகீழாக்க மன நிலையின் வெளிப்பாடு”, என்று யூகிக்க வழி உண்டு. ஆனால், அதை பெருமாள்முருகன் செய்யவில்லையே? நீங்கள் சொன்னபடி, “தணற்குஞ்சுகளுக்குத் தாம் தணற்குஞ்சுகள் என்று”, தெரியாமல் இருக்கின்ற யதார்த்தம் தான் படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தளத்தில் இந்த நாவல் நேர்கோட்டில் பயனிக்கும், எளிமையான நாவல். பல இடங்களில், “show don’t tell”, என்ற அடிப்படை கதை சொல்லும் விதியை பெருமாள் முருகன் கடைப்பிடித்திருக்கலாம். பாவாத்தாவின் பழங்குடி ஐதீகம் மாதொருபாகனாக மாறியது பற்றிய தளத்தை இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்லியிருக்கலாம். காளியையும்/பொன்னாவையும் இன்னும் கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த கதைக் களனில் நிறுத்தியிருக்கலாம். ஆனால், எழுதப்பட்ட வகையிலேயே, இந்த நாவல் ஒரு அறுபதெழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குடியாவனின் வாழ்க்கையை நம்பகத் தன்மையோடு படைத்துள்ளது. சாதிப் பற்று நம் சமூகத்தில் எவ்வளவு தூரம் உறையோடி இருக்கிறது என்பதை மலைப்பிரசங்கங்கள் இல்லாமல், அதிமனிதர்கள் இல்லாமல், கதையின் சாரமாக படைத்திருப்பதே பெருமாள்முருகனின் வெற்றி என நினைக்கிறேன். மாதொருபாகனை அவ்வளவு எளிதாக, மாற்றுக் குறைந்த படைப்பு, என ஒதுக்கி விட முடியாது.

மாதொருபாகனுக்கு வந்த எதிர்ப்புகள் கருத்துச் சுதந்திர அழிப்புகளின் நீட்சி என நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக