Thursday, 29 January 2015

விலக்கப்பட்ட கற்பனையும் புனிதப் பனுவல்களும்விலக்கப்பட்ட கற்பனையும் புனிதப் பனுவல்களும்

நயினார் நோன்பு என்ற நாட்டுப்புற புத்தகச் சடங்கு[சமீபத்தில் வெளியான 'அகம் புறம்' - கலை இலக்கிய பண்பாட்டு அரசியல் ஆய்விதழ் - தொகுதி 1, இதழ் 1ல், அடிக்குறிப்புகள் வெட்டப்பட்டு அறைகுறையாய் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.  வாசிப்பதற்கு சற்று சிரமமான கட்டுரை (வேறு யாரும் சொல்வதற்கு முன் நாமே சொல்லிவிடுவது நல்லதில்லையா?) அதன் முழுமையான வடிவில் எங்காவது கிடைக்கவேண்டுமே என்பதற்காக இணையத்தில் பதிவேற்றுகிறேன். தமிழில் ஆய்வு இலட்சணங்களுடன் கூடிய (வல்லுநர்களால் சரி பார்க்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்ட...) ஆய்விதழின் தேவை குறித்து  என்னைப் பாடாய் படுத்திய நண்பர்களிடம் கொஞ்ச நாட்களாய் 'அகம் புறம்' வரப்போகிறது என்று டபாய்த்துக் கொண்டிருந்தேன்.  முதல் இதழைப் பார்த்தவர்கள் கொலை வெறியில் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.]

பெருந்திரள் சமய நிகழ்வுகள் ஆரவாரமானவை. அந்த ஆரவாரங்கள் ஆழமானவை.  அந்த ஆழத்தில் மீச்சிறு சமூக அசைவுகளே பெரும்பாலும் அமிழ்ந்து போய்விடுகின்றன.  இவ்வாறு அமிழ்ந்து போகும் சமூக அசைவுகளுக்கு சடங்கு முக்கியத்துவம் எதுவும் இருப்பதில்லை. அதனாலேயே அவை விரைந்து வழக்கொழிகின்றன. ஆனால், இந்த ஆபத்துகளையெல்லாம் மீறி அவை தொடர்ந்து உரையாடத் துடிக்கின்றன.  தம் உரையாடலில் ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகளை விவாதிக்க விரும்புகின்றன.  இது ஒரு வேடிக்கை தான்!  ஆனாலும் இது தான் இயற்கை.

இத்தகைய சிறு சிறு நிகழ்வுகளை முன்வைத்து சமூக ஒழுங்கமைப்பை விளக்குவது ஒரு சவால். பிறர் பாதையில் நடந்து களைத்துவிடும் துயரம் நிறைந்த சவால்.  பாதைகளைப் பற்றிய போதம் மறந்து போகும் திகில் உறையும் புதிர்.  ஆனால், மீறி சவாலைச் சந்திக்கும் போது மட்டுமே தீனமான சுதியில் ஒலிக்கும் சிறு கதையாடல்கள் துலக்கம் பெறுகின்றன. நாட்டுப்புற வழிபாட்டு முறைகள் அப்படியொரு குறுங்கதையாடல்.

நாட்டுப்புற வழிபாடுகள் தம்மளவில் ஒரு முழுமையைக் கொண்டவை.  அதே நேரம், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அவை நிறுவன சமயங்களோடும் ஊடாடுபவை.  இந்த ஊடாட்டங்கள் முக்கியமானவை.  இந்தியா போன்ற சமூக ஊடாட்டங்கள் மிகுந்த நாடுகளில், எது நாட்டுப்புறம், எது செவ்வியல், எது வெகுஜனம் என்றறிவதற்கு பண்பாட்டுக் கூறுகள் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள அடையாளங்களை வெளிப்படையாகவே சுமந்து நிற்கின்றன. அதே சமயம் அவை தங்களது வகைமைக் கோட்டைக் கடந்து ஒன்றோடொன்று உரசுவதும், பின்னுவதும், முரணுவதுமாகவும் இருக்கின்றன. இது ஒரு மயக்கம்.  ஆனாலும் இது தான் இயல்பு.  

இப்படி வேடிக்கையான, மயக்க சூழலில், தென்னிந்திய நகரமொன்றில் நடைபெறும் தேரிழுக்கும் நிகழ்வின் ஆரவாரத்திற்கு அப்பால், புறநகர் தாழ்த்தப்பட்ட சமூகக் குடியிருப்பொன்றில் நடைபெறும் நோன்பொன்றை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.   

நிலம், பொழுது, மக்கள்:

'சங்கரன்கோயில்'[1] என்று அழைக்கப்படும் அந்த மிக எளிமையான தென்னிந்திய நகரத்தில் மரபு சொல்லித்தந்தபடி தேரிழுக்கும் நிகழ்வு நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருடத்திற்கொரு முறை சித்திரை மாதப் பௌர்ணமியையொட்டி நடைபெறும் பத்து நாள் சங்கரநயினார் கோயில் திருவிழாவின் இறுதி நிகழ்வாக தேர் பவனி நடைபெறுகிறது.  நாளை, சித்திரை மாதத்துப் பௌர்ணமி நாள்.  பண்பாட்டுப் பொருண்மையுடைய மாதம், நாள்[2]. 

சித்திரை, தமிழ் வருடத்தின் முதல் மாதம்.  பௌர்ணமியும் அமாவாசையும் சடங்கியல் முக்கியத்துவம் வாய்ந்த புனித தினங்கள் - 'கனத்த தினங்கள்'[3] என்பது நாட்டுப்புற வழக்கம்!  சித்திரை மாதத்துப் பௌர்ணமிக்கு விரும்பத்தக்க குணநலன்கள் இருப்பதான நம்பிக்கை தெற்காசிய நாடுகளெங்கும் காணப்படுகிறது.  இந்து, பௌத்த, சமண, நாட்டுப்புற வழிபாட்டுச் சடங்குகளில் இந்த நாளுக்கான மரியாதை பண்பாட்டுத் தொடர்ச்சியையும் திணை சார்ந்த அறிவையும் தவறாமல் குறிப்பவை.  நிலவு மற்றும் திங்களின் அலைவைக் கணக்கிட்டு விரும்பத்தக்க தினங்களைத் தீர்மானிக்கும் தென்னிந்திய மரபில் சித்திரை மாதத்துப் பௌர்ணமி நாளுக்கு அடர்த்தியான பொருண்மைகள் உண்டு.

சங்கரன்கோயில் என்ற அச்சிறு நகரில் மறு நாளுக்கான தேர்த் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளில் ஏறக்குறைய ஒட்டு மொத்த மக்கள்தொகையும் திளைத்திருக்க, அந்நகரின் கிழக்கே, ஒரு காலத்தில் புறச்சேரியாக உருவாகி, நகர் விரிவாக்கத்தின் காரணமாக தற்போது உள்ளடங்கிக் காணப்படும், ‘இந்திரா நகர் என்றழைக்கப்படும் துணைக்குடியிருப்பில், ஆளரவமற்று, முதல்பார்வைக்குப் பெரும்பாலும் தவறவிடப்படுகிற, எளிமையான பிள்ளையார் கோயிலின் பூசாரியும் இன்னுமிரு முதியவர்களும், எவ்வித ஆரவாரமும் அவசரமும் இல்லாமல், நயினார் நோன்பிற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

அது ஒரு கிராமப்புற பிள்ளையார் கோயில்மிகச்சிறிய கர்ப்பக்கிரகம் போன்ற அமைப்பும், அதன் முன்புறம் எழுப்பப்பட்டிருக்கும் முப்புறமும் திறந்த தாழ்வாரமும் தான் கோவில்.  வழக்கமாய், நாற்சந்திகளில் காணப்படும் பிள்ளையார் கோவில்களுடன் ஒப்பிடுகையில் இது கூடுதலானக் கட்டுமானங்களைக் கொண்டது தான் என்றாலும், தென்னிந்திய கிராமப்புறங்களில் கோயில் என்பது திறந்த வெளித் தாழ்வாரங்களை உடையது என்ற பொதுக் குணத்தின் படியே கட்டப்பட்டிருந்தது.

தமிழகத்தின் பூர்வீக விவசாயக் குடியாகக் கருதப்படுகிற, சாதியப் படி நிலையில் 'தீண்டத்தகாதோர்' என்று வரையறுக்கப்பட்ட, 'பள்ளர்' என்று பொதுவாகவும் 'தேவேந்திர குல வேளாளர்' என்று நாட்டுப்புற வழக்காறுகளிலும் 'மள்ளர்' என்று நவீன அடையாள அரசியல் சார்ந்தும் அழைக்கப்படும் மக்களே இந்திரா நகர் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.  சங்கரன்கோயில், விவசாய கிரமாங்களுக்கான மையமாகத் திகழ்கிறது என்ற வகையில், பள்ளர் சாதி மக்கள் எண்ணிக்கையளவில் கணிசமாக வாழ்கின்றனர்.  நயினார் நோன்பிற்கான தயாரிப்பு வேலைகள் நடைபெறும் இப்பிள்ளையார் கோயில் இச்சாதிக்குப் பாத்தியப்பட்டது என்றும், வேறு சாதியினர் இங்கு வந்து வழிபடுவது இல்லையென்றும் பூசாரி தெரிவிக்கிறார். 

பூசாரியும் பள்ளர் சாதியைச் சார்ந்தவர் தான்; முழு நேரமாய் விவசாயம் பார்ப்பதையும், பகுதி நேரமாய் வழிபாடுகள் நடத்துவதையும் தொழிலாகக் கொண்டிருக்கிறார்.  தன்னார்வத்தின் காரணமாகவே இது போன்ற வழிபாடுகளைத் தான் முன்னின்று செய்வதாகவும், இதே போன்று வேறு எந்தக் கோயிலுக்கும் தான் பூசாரியாக இருக்கவில்லை என்றும் அவர் சொல்வதைக் கவனித்தால், பூசாரி வேலையை அவர் தொழிலாக அல்லாமல், விருப்பசேவையாகவே செய்வது போலிருக்கிறது. 

ஏராளமான நாட்டுப்புறத் தெய்வக்கோயில்களில் இது போன்ற தன்னார்வப் பூசாரிகளை நாம் பார்க்க முடியும்.[4]  வழக்கமாய் இந்து சமயக் கோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் அதிகாரத்தை சாதிப் படிநிலையைக் காரணம் காட்டி உரிமை கொண்டாடுவதோடு, அதற்கான நியாய அநியாயங்களைப் பட்டியலிட்டிருக்கும் பிராமண சாதியினர் நாட்டுப்புறக் கோவில்களுக்கு பூசாரிகளாகப் பணியாற்ற முன்வருவதில்லை என்பது அவர்களுடைய பார்வையின் படி சாதியத் துவேசத்தால் விளைந்தது என்றாலும், பிராமணப் பூசாரிகள் இல்லாத குறையை நாட்டுப்புற வழிபாட்டினர் பொருட்டாகக் கருதுவதில்லை என்பதைப் பார்க்கையில், நாட்டுப்புறத்தினர் தெய்வத்தையும் அதற்கான வழிபாட்டு முறைமைகளையும் நிறுவனப்படுத்துவதற்கோ நிலைப்படுத்துவதற்கோ யோசிப்பதில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

பண்பாடு நழுவுகிறது:

நயினார் நோன்பிற்கான முன்தயாரிப்புகள் அப்படியொன்றும் சிக்கலானவையாக இருக்கவில்லை.  வழக்கமான அலங்காரம், தீப ஆராதனை, தேங்காய் - வாழைப்பழ வழிபாடு போன்றவை தான் நடைபெறுகின்றன.  ஆனால், நயினார் நோன்பை நடத்துவதற்கான சிறப்பு அழைப்பாளராக, 'கதை படிக்கிறவர்' என்று சொல்லப்படுகிற ஒருவர் வந்திருக்கிறார்.  அவர் கைவசம் 'பெரிய எழுத்து கதைப்புத்தகங்கள்'[5] என்று சொல்லப்படும் கதைப்பாடல் புத்தகங்களை வைத்திருக்கிறார்.  அப்புத்தகக் கட்டிலிருந்து 'சித்திரபுத்திர நாயனார் கதைப்பாடலை' எடுத்துக் காட்டி, நயினார் நோன்பில் இக்கதையையே வாசிக்க இருப்பதாய் குறிப்பிடுகிறார். சாணத்தாள் என்று சொல்லப்படும் தரம் குறைந்த தாளில் அச்சிடப்பட்டு, வெகுகாலம் புழங்கியதால் நைந்து போயிருந்த அக்கதைப்பாடல் புத்தகத்தை நறுவிசாக அவர் கையாண்ட வித்த்திலும், அக்கதையை வாசிக்கப் போகிற செய்தியை அவர் பகிர்ந்து கொண்ட முறையிலும் பரவச உணர்வு தோய்ந்திருந்தது.

கதை படிக்கிற நாட்டுப்புற நிகழ்த்துனர்களில் இவரைப் போன்று விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலர் மட்டுமே தற்சமயம் எஞ்சியிருக்கிறார்கள்.  அவர்களும் சங்கரன்கோயில் வட்டாரத்திலேயே காணப்படுகிறார்கள். தமிழகத்தின் பிற பகுதியில் இது போன்ற கதை படிக்கிற நிகழ்வு தற்போது நடைபெறுவது இல்லை; எனவே கதை படிக்கிறவர்களும் இருக்கவில்லை. 

ஏறக்குறைய தென்னிந்திய பண்பாட்டு வெளியிலிருந்து அழிந்து போய் விட்ட 'கதைபடித்தல்' என்ற நிகழ்த்து மரபையும் அதன் செயல்பாட்டையும் அறிந்து கொள்வதற்கான மிஞ்சியிருக்கும் எச்சங்களுள் ஒன்றே இந்திரா நகர் பிள்ளையார் கோயிலில் நடைபெறவிருக்கும் நயினார் நோன்பு நிகழ்வு.  இந்த முறை நிகழ்வது போல், இதே கோவிலில் அடுத்த வருடம் அல்லது அதற்கடுத்த வருடங்களில் இக்கதைபடித்தல் நிகழும் என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை.  ஒரு வேளை இந்த நிகழ்வே கூட, கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கும் தெற்காசிய நாடுகளின் எழுத்து மரபு குறித்த நாட்டுப்புற வழக்காறொன்றின் இறுதி நிகழ்வாகவும் இருக்கக்கூடும். 

எழுத்தறியாதவர்களின் புத்தகங்கள்:

இந்நிகழ்த்துதலை 'கதை படித்தல்' என்ற பெயரில் அழைக்கிறார்கள். வாய்மொழி மரபின் படைப்பாக்கங்கள் என்று சொல்லப்படும் கதைப்பாடல்களின் எழுத்து வடிவப் பனுவல்களை வாய்மொழிச் சமூகங்கள் கையாளும் முறையென்று இக்கதைபடித்தலை சுருக்கமாய் குறிப்பிடலாம்.  கதைப்பாடல் என்ற வகைமை வாய்மொழிச் சமூகங்களின் பாடல் வடிவிலான இலக்கியங்கள் என்றும், அவை பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடகர்களால் அடிக்கருத்துகள், கதைக்கூறன்கள், தாளக்கட்டுகள் போன்ற உத்திகளாலும் வாய்ப்பாடுகளாலும் கட்டப்படுகின்றன என்றும், அவ்வாறு கட்டப்பட்ட கதைப்பாடல்கள் பெரும்பாலும் தெய்வத் தொன்மங்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் கதைகளாகக் கொண்டுள்ளன என்பதையும், இப்பாடல்கள் நாட்டுப்புற அரங்கக்கலையின் ஏதாவதொரு வடிவத்தின் மூலமாக நாடகமாக (கூத்தாக) நிகழ்த்திக் காட்டப்படுவதே மரபு என்பதும் எவ்வித பண்பாட்டு வேறுபாடுகளின்றி உலகப் பொதுவான வழக்கம்.[6]  ஆனால், தமிழ்ப் பண்பாட்டைப் போன்ற வெகு சிலப் பண்பாடுகளில் மட்டும் வாய்மொழிக் கதைப்பாடல்களை எழுத்து வடிவில் பாதுகாத்து வைக்கும் வழக்கம் காணப்படுகிறது.[7]

வாய்மொழிக் கதைப்பாடல்களை எழுத்து மொழி இலக்கியமாக திருப்பி எழுதும் வழக்கத்திலிருந்து இது வேறுபட்டது.  எடுத்துக்காட்டாக, எழுத்து மரபின் இலக்கிய வடிவங்களான காப்பியங்களனைத்தும் வாய்மொழிக் கதைப்பாடல்களைத் தழுவியே எழுதப்பட்டன என்பதற்கு சான்றுகளுடன் நிரூபிக்கும் ஆய்வுகள் உள்ளன.  அவ்வாறு, கதைப்பாடல்களின் உள்ளடக்கத்தை தனது இலக்கிய அமைதிக்குத் தக்கவாறு காப்பியமாக உருமாற்றியது எழுத்து சமூகத்தின் தேவையை முன்னிட்டு நிகழ்ந்தது என்று சொல்வதானால், கதைப்பாடல்களை அதன் வாய்மொழிக்குணங்கள் சிதையாது அப்படியே எழுத்து வடிவில் பதிந்து கொள்ளும் வழக்கத்தை வாய்மொழிச் சமூகத்தின் ஏதோவொரு தேவையைக் காரணமாகக் கொண்டு உருவானது என்று சொல்ல முடியும்.  வாய்மொழி இலக்கிய வகைமையான கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டு 'காப்பியம்' என்ற எழுத்திலக்கியத்தைப் படைப்பது ஒன்று, அக்கதைப்பாடலை அப்படியே எழுத்தில் பதிந்து கொள்வது இன்னொன்று என்று வாய்மொழிக்கும் எழுத்துமொழிக்குமான உறவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம்.[8]  இவற்றுள் முதல்வகை, வாய்மொழி இலக்கியம் - எழுத்துமொழி இலக்கியம் என்ற இரு வேறு இலக்கியங்களுக்கிடையிலான ஊடாட்டங்களை மையப்படுத்தியது; இரண்டாம் வகை, வாய்மொழி மரபினுள் எழுத்து என்ற தொழில் நுட்பம் விளைவித்த மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் கட்டுரை, இரண்டாவது வகையைப் பற்றியே விவாதிக்கிறது.  ஒப்பீட்டளவில் பிற பண்பாடுகளை விடவும் தனது மொழி ஒழுங்கமைப்புகளில் வாய்மொழிக்கும் எழுத்துமொழிக்குமான இடைவெளிகளை துல்லியமாக வரையறுத்ததோடு தொடர்ந்து அவ்வேற்றுமைகளைத் தமிழ்ப் பண்பாடு பேணிப்பாதுகாத்தும் வருகிறது.  ஆனாலும், தமிழ் வாய்மொழி மரபு மிகச் செழுமையான பாரம்பரியத்தையும் தொடர்ச்சியையும் கொண்டுள்ள எழுத்து மரபோடு நெருக்கமான உறவுகளையே பேணி வந்திருக்கிறது. அவ்வாறு பயின்று வந்ததன் விளைவாகவே வாய்மொழிக் கதைப்பாடல்கள், பனையோலைச் சுவடிகளிலும் பின்னாட்களில் அச்சுப்புத்தகங்களின் அறிமுகத்திற்குப்பின்பு பெரிய எழுத்துப் புத்தகங்கள் என்ற வடிவத்திலும் பாதுகாக்கப்படும் பழக்கம் நடைமுறைக்கு வந்தன.  வாய்மொழியாய் வழங்கி வந்த வழக்காறுகள் - இங்கே கதைப்பாடல்கள் - எழுத்தில் பதிவு செய்யப்படும், அதாவது பனுவலாக்கப்படும் சூழலை முழுமையாக விளங்கிக் கொள்வதன் மூலம் வாய்மொழி மற்றும் எழுத்துமொழி மனநிலைகளுக்கிடையிலான உரையாடலை தமிழ்ப் பண்பாட்டு அரசியல் சார்ந்து மீட்டுருவாக்க முடியும்.

வழக்காறுகளை எழுத்து வடிவில் பனுவலாக்கம் செய்வதற்கான தேவைகள் எவ்வாறு உருவாகின்றன; அவற்றை உருவாக்குவது யார், அவர்களின் நோக்கம் என்ன; அவ்வாறு நடைபெறும் பனுவலாக்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது; அவ்வெழுத்துப் பனுவல்கள் தொடர்ந்து சமூகத்தினுள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன மற்றும் பயன்படுத்தப்படுகின்றன போன்ற விசாரணைகளின் முடிவில் சில குறிப்பிடத்தக்கப் பதில்களுக்கு வந்து சேரமுடியலாம்.[9] மரபாக வாய்மொழி இலக்கியங்கள் நிகழ்த்துதல்களாகவே சமூகத்தினுள் விநியோகிக்கப்பட்டு புழங்கி வருவதிலிருந்து விலகி, எழுத்து மொழியின் இடையீட்டினால் ஏடுகளாக அல்லது புத்தகங்களாக சமூகத்தினுள் வலம் வரும் செயல்பாடு விளைவிக்கும் அசைவுகளை ஆராய்வதற்கான வழிமுறையே இங்கு விவாதிக்கப்படுகிறது.

நோன்பு நிகழ்வின் விவரணை:

இந்திரா நகர் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற நயினார் நோன்பில் கதை படிப்பதற்காக வந்திருந்த மாடசாமி போல் இன்னும் ஒன்றிரண்டு கதை படிக்கிறவர்களே இவ்வட்டாரத்தில் மிஞ்சியிருக்கிறார்கள்.  வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் நாட்டுப்புற வழக்காறுகளுக்குச் சொல்லப்படும் அதே காரணம் தான் இதற்கும் சொல்லப்படுகிறது நாகரீக வளர்ச்சியின் காரணமாக மக்கள் இது போன்ற மரபுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.  மாடசாமி தனது இளமைக்காலம் தொட்டே கதை படிக்கிற வேலையைச் செய்து வருகிறார்.  அவரிடம் சுமார் இருபது பெரிய எழுத்து கதைப்புத்தகங்கள்  

நிகழ்த்தவதற்குத் தயாராக உள்ளன.  இப்புத்தகங்களையெல்லாம் சங்கரன்கோயிலுக்கு அருகிலுள்ள இன்னுமொரு புனிதத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வாசலில் வாங்கியது என்றார்.  பெரிய எழுத்துப் புத்தகங்களின் விநியோகமுறை பெரும்பாலும் கோயில் வாசல்களையொட்டி இருக்கக்கூடிய சிறு புத்தக நிலையங்களின் மூலம் தான் தமிழகத்தில் நடைபெறுகிறது.  இப்புத்தக நிலையங்களில், தலப்புராணங்கள், ஜோதிட ஜாதக பலன்கள், வாஸ்து என்ற மனையடி சாஸ்திரம், சித்தர் பாடல்கள், சித்த மருத்துவ நூல்களின் மலிவுப் பதிப்புகள், சகுன பலன்கள், சமையல் குறிப்பு நூற்கள் போன்ற புத்தகங்களோடு பெரிய எழுத்து கதைப்புத்தகங்களும் கிடைக்கின்றன.

பிள்ளையார் கோயில் பூசாரி தெய்வத்திற்கான அலங்காரங்களையெல்லாம் முடித்து விட்டு, தீபாராதனையோடு வழிபாட்டை ஆரம்பிக்கிறார்.  இதனிடையே அருகிலுள்ள வீடுகளிலிருந்து நோன்பில் கலந்து கொள்வதற்காக மக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்குகிறார்கள்.  பெரும்பாலும் முதியவர்களே இந்த வழிபாட்டில் அக்கறை காட்டுகிறார்கள்.  கலந்து கொள்ள வருகிற ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளிலிருந்து உப்பு, புளி, காய்ந்த மிளகாய், நாழி நிறைய நெல் போன்றவற்றை ஒரு சுளகில் வைத்து எடுத்து வருகிறார்கள்.  இந்தப் பொருட்கள் அனைத்தும் கோயில் தாழ்வாரத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்படுகின்றன.  இதனிடையே கதை படிக்கிறவர் நோன்பை தொடங்குவதற்கான யத்தனங்களில் இருந்து கொண்டிருக்கிறார்.  சுமார் இருபது முதியவர்கள் அப்பிள்ளையார் கோயிலில் கூடியிருக்க, சித்திரபுத்திர நயினார் கதைப்பாடல் என்ற அப்புத்தகத்தை எடுத்து கதைபடிக்கிறவர் வாசிக்கத் தொடங்குகிறார். 

பெரிய எழுத்துப் புத்தகங்களாக வெளிவந்துள்ள கதைப்பாடல்கள் அனைத்தும் தாளக்கட்டுடனேயே எழுதப்பட்டவை.  மனனம் செய்வதற்கு ஏற்றார்போலும், சத்தம் போட்டு வாசிப்பதற்கு ஏதுவாகவும் இவை 'அம்மானை'யின் தாள ஒழுங்கிலேயே கட்டப்பட்டுள்ளன.  ஆனால், சித்திரபுத்திர நயினார் நோன்பின் போது கதை படிக்கிறவர், அப்பாடல்களை உரை நடையைப் போல வாசிக்க மட்டுமே செய்கிறாரேயொழிய ராகத்தோடு பாடுவது இல்லை.  மிக நிதானமாக, நிறுத்தி, போதுமான இடைவெளிகளோடு வாசிக்கத் தொடங்குகிறார்.

புத்தகங்களும் மரணமும்:

கதை படித்தல் என்ற தென்னிந்திய நாட்டுப்புற வழக்காறு தனக்கேயுரித்தான நிகழ்த்துதல் மரபையும், சடங்கியல் காரணங்களையும் கொண்டுள்ளது.  கதை படித்தலை, எதிரும் புதிருமான இரண்டு முக்கியமான தருணங்களில் நிகழ்த்துகிறார்கள்.  ஒன்று, ஏற்கனவே இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்ட நயினார் நோன்பு; இரண்டாவது, இறப்பு நிகழ்ந்த வீடுகளில் செய்யப்படும் சடங்குகள்.  நயினார் நோன்பு, வருடத்திற்கு ஒரு முறை, சித்திரை மாதத்துப் பௌர்ணமி நாளின் போது நடைபெறக்கூடியது; இந்நாளில் சித்திரை புத்திர நாயனார் கதைப்பாடலைத் தவிர வேறு எதையும் மக்கள் படிப்பதில்லை.  ஆனால், இறப்பு நடந்த வீடுகளில் நடைபெறும் கதை படித்தலில் சித்திரபுத்திர நாயனார் கதைப்பாடலைத் தவிர மற்ற கதைப்பாடல்கள் படிக்கப்படுகின்றன.  குறிப்பிட்டுச் சொல்வதானால், துயரமும், வேதனையும் மிகுந்த துன்பகரமான நிகழ்வுகள் மலிந்த நல்லதங்காள், கர்ண மோட்சம் போன்ற கதைப்பாடல்களே இறப்பு நடந்த வீடுகளில் வாசிக்கப்படுகின்றன. மேலும், நயினார் நோன்பு நிகழ்வு பகல் முழுவதும் நடைபெறுகையில், இறப்பு நிகழ்ந்த வீடுகளில் நிகழ்த்தப்படும் கதை படித்தல் இரவுகளிலேயே நடைபெறுகின்றது.

இறப்பு வீடுகளில் கதைபடித்தல் நிகழ்வதற்கு மூன்று தெளிவான சூழல்கள் சொல்லப்படுகின்றன: இறப்பை எதிர் நோக்கி, மரணப்படுக்கையில் வீழ்ந்திருக்கும் நபர் கேட்டுக்கொண்டால், அவரருகில் குழுவாக அமர்ந்து ‘கர்ண மோட்சம் போன்ற கதைப்பாடல்கள் படிக்கப்படலாம்; இறப்பு நிகழ்ந்து, ஒரு இரவு முழுவதும் இறந்தவரோடு காத்திருக்க வேண்டியிருந்தால், கதைபடித்தல்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன; இறப்பு வீட்டின் ‘தீட்டு கழிக்கப்படும் நாளின் முன்னிரவிலும் கதைப்படித்தல் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இறப்பு நிகழ்வதற்காகக் காத்துக்கொண்டிருத்தல், இறந்தவரின் உடலோடு இரவு கழிவதற்காகக் காத்திருத்தல், இறந்த 'தீட்டு' கழிவதற்காகக் காத்திருத்தல் என்று இறப்பு தொடர்பான காத்திருப்புகளை 'கதைபடிப்பது' மூலம் கடந்து செல்வதையே தென் தமிழகக் கிராமங்களில் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.   

துயரம் நிரம்பிய அவ்விரவுகளுக்கு புத்தகங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்வது அதிகமும் எழுதப்படிக்கத் தெரிந்திராத இம்மக்களிடம் எவ்வகையாய் விளங்குகிறது என்பதை அறிவது நமக்குத் தொடர்ச்சியான ஆச்சரியங்களைத் தந்து கொண்டிருக்கிறது.

சங்கரன்கோயிலில் வசிக்கும் மூக்கையா என்ற கதைபடிக்கும் கலைஞர், தனது ஆசானின் மரணப்படுக்கையில் பத்து நாட்கள் வரை தான் கதைபடித்துக் காட்டியதாகக் குறிப்பிடுகிறார்.  அவரது ஆசான், தனது மரணப்படுக்கையில் கதைபடிக்கவேண்டுமென்று முன்பே கேட்டுக்கொண்டதாகவும், அதன் காரணமாக தான் கதைபடித்ததாகவும், படித்துக்கொண்டிருக்கும் போதே ஆசானின் ஆவி பிரிந்ததாகவும் மூக்கையா பெருமையாகக் குறிப்பிடுகிறார்.  மரணத்தை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்கும் தருவாயில் ‘வைகுண்ட அம்மானை என்ற கதையைப் படித்தால், இறந்து கொண்டிருப்பவர் வைகுண்டம் அல்லது சொர்க்கம் அடைவார் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

தமிழகக் கிராமப்புறங்களில் இறப்பை, நல்ல சாவு, கெட்ட சாவு என்று இரண்டாக வகைப்படுத்துகிறார்கள்.  வாழ்வின் அந்திம காலங்களில் ஒருவருக்கு நேரும் மரணம், நல்ல சாவு என்று வகைப்படுத்தப்படுகிறது. குறைந்த வயதில், நோயின் காரணமாகவோ விபத்தின் காரணமாகவோ இறந்து படுவதை கெட்ட சாவு என்று அழைக்கிறார்கள்.  நல்ல சாவு என்பது கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது; அதனை நல்மரணம் என்றும் கல்யாண சாவு என்றும் வழங்குகிறார்கள்.  நல்ல சாவு வாய்ப்பது குறித்து ஏராளமான நம்பிக்கைகளைக் குறிப்பிடுகிறார்கள் - முழு ஆயூளையும் வாழ்ந்து முடிக்கும் அவகாசம் கிடைப்பது கடவுளின் வரம் என்ற நம்பிக்கை ஆழமாகக் காணப்படுகிறது; நல்ல மனிதர்களுக்கே நல்ல சாவு வாய்க்கிறது என்பதும் பரவலான எண்ணம்; இறப்பை, நல்லது - கெட்டது என்று பாகுபடுத்தும் முறை, இயற்கையானது - செயற்கையானது என்ற இரட்டை எதிர்மறையோடு தொடர்புடையது.  முதுமை காரணமாக நிகழும் மரணம் இயற்கையானது, எனவே நல்லது என்றும், எதிர்பாராமல் நிகழும் மரணம் செயற்கையானது, எனவே கெட்டது என்றும் விளக்கப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக, நல்ல மரணம் ஒருவருக்கு அவரது நற்காரியங்களுக்காகவும் எண்ணங்களுக்காகவும் வழங்கப்படும் வெகுமதியாகவும், கெட்ட மரணம் தீயநடத்தைகளுக்கான தண்டனையாகவும் கருதப்படுகிறது. நல்ல மரணம் நிகழ்கிறது என்றால் அதனைத் திருவிழா போல கொண்டாடும் மரபை இன்றும் நாம் பார்க்க முடிகிறது.  வழக்கமாய் தெய்வங்கள் மட்டுமே பவனி வரும் தேர் போன்ற அமைப்பில் இறந்தவர் உடலை ஏற்றி ஊர்வலமாய் இறுதிச் சடங்கிற்காக எடுத்துச் செல்வதும், அவ்வூர்வலம் மேள தாளங்களுடனான நிகழ்த்துக்கலைகளின் அணிவகுப்பாகவும், வானவேடிக்கைகள் நிரம்பியதாகவும், பாதையெங்கும் மலர்களைத் தூவிச் செல்லும் தன்மையுடையதாகவும் காணப்படுகிறது. இந்தக் கொண்டாட்ட வழியனுப்புதலுக்காக, இறந்தவரின் உறவுகள் திரளும் வரை, அவரது உடல் ஓரிரவோ அல்லது பகலோ காத்திருக்கும் பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.  இப்படியாக இறந்தவரின் உடலை இரவெல்லாம் வைத்திருக்கும் பொழுதுகளே கதைபடித்தல் நிகழ்வதற்கான தருணங்களாக அமைகின்றன. கெட்ட சாவு நிகழ்ந்தது என்றால், இறந்தவரின் உடலை எவ்வளவு விரைவாக இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துச் செல்கின்றனர்.

கெட்ட கதை படித்தல்:

கதைபடித்தல் என்ற நாட்டுபுற நிகழ்விற்கும் இறப்பிற்குமான தொடர்புகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டுள்ளன.  கதைபடித்தல், எதிரும் புதிருமான இரண்டு நிகழ்த்துச் சூழல்களைக் கொண்டுள்ளது.  நயினார் நோன்பு என்ற சமயச் சடங்குச் சூழல், பகலில் நடைபெறுவது; குறிப்பிட்ட நாளில் ஆண்டுக்கொருமுறை நடைபெறுவது; ‘காலக்கணக்கர் என்று கருதப்படும் சித்திரபுத்திரனின் பிறப்புக் கதையைப் படிப்பது.  ஆனால், இறப்புச் சடங்கில் நடைபெறும் கதைபடித்தல் இரவுகளில் நடைபெறுவது; தீர்மானமான நாள் கணக்கு இல்லை; துயரம் தோய்ந்த கதைகளைப் படிப்பது.  இத்தகைய எதிர்வுகளின் நீட்சியாக, நோன்பில் படிக்கப்படும் சித்திரபுத்திர நயினார் கதை ‘நல்ல கதை என்றும், இறப்புச் சடங்குகளில் படிக்கப்படும் பிற கதைகள் ‘கெட்ட கதைகள் என்றும் விளக்கப்படுகின்றன.

கதைபடித்தல் குறித்த ஆய்விற்காக, மேற்கூறிய இரண்டு வகையான சூழல்களையும் கள ஆய்வு செய்த பொழுது, மிகத் தெளிவான வேறுபாடுகளைக் கொண்ட மனோபாவங்கள் அங்கே செயல்படுவதை என்னால் கண்டறிய முடிந்தது.  இறப்புச் சடங்குச் சூழலில் நிகழும் கதைபடித்தல்கள் பெரும்பாலும் வீதிகளில் தான் நடைபெறுகின்றன.   

இறந்தவரின் உடல் வீட்டினுள் கிடத்தப்பட்டு, உறவினர்கள் அதனைச் சூழ்ந்து அமர்ந்திருக்க, அவ்வீடு அமைந்திருக்கும் வீதி துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அமர்ந்திருக்கும் தாழ்வாரமாக மாற்றப்படுகிறது.  இந்தத் 'தற்காலிகத் தாழ்வார வீதியில் தான் இரவு முழுவதும் கதைபடித்தல் நிகழ்கிறது.  அவ்வூரின் பெரும்பான்மையோர் அந்த இடத்திலேயே குழுமியிருக்கிறார்கள்.  பெண்கள் அனேகமாக வீட்டினுள் அமர்ந்திருக்கிறார்கள்.  இறப்புச் சூழலில் பாடப்படும் ‘ஒப்பாரிப் பாடலை அவர்களே பாடுகிறார்கள்.  கதைபடிக்கத் தொடங்கியதும், ஒப்பாரி பாடுவதை நிறுத்தும் படி ஆண்கள் அதட்டுகிறார்கள்; அப்படியே ஒப்பாரி நின்றும் போகிறது.

அதன் பின்பு கதைபடித்தல் தொடங்குகிறது.  ஆனால், அதை விட சிரத்தையாக வீதியின் இன்னொரு புறம் ஆண்கள் வட்டமாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கதைபடித்தல் நிகழ்விற்கான மொத்த செலவையும் எவ்வாறு இறப்பு நிகழ்ந்த வீட்டினர் ஏற்றுக்கொள்கிறார்களோ அதே போல் சீட்டு விளையாட்டுச் செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.  புதிய சீட்டுக் கட்டுகள் வாங்கித் தருவது, இடையிடையே புகைக்கும் சுருள்களை விநியோகிப்பது, வெற்றிலை-பாக்கு-புகையிலை வழங்குவது, தேநீர் தருவது என்று இரவு முழுக்க நடைபெறும் அத்தனைச் செலவுகளும் இறப்பு வீட்டைச் சார்ந்தது.  கதை படித்தல் நடைபெறும் கள ஆய்வு செய்யப்பட்ட எல்லா இறப்பு நிகழ்வுகளிலும் மக்கள் வெகு இயல்பாக நடந்து கொண்டார்களேயொழிய, மரணம் குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘பெருந்துயரம் என்ற பொது அபிப்பிராயத்தின் சுவடுகளை அச்சூழல்களில் உணரமுடிந்திருக்கவில்லை. 

இன்னும் சொல்லப்போனால், சங்கரன்கோயிலுக்கு அருகிலுள்ள ஆவுடையாள்புரம் என்ற சிற்றூரில் இறப்பு வீடொன்றில் நடைபெற்ற கதைபடித்தலின் போது, கதைபடிக்கிறவருக்கும் மக்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடல்கள் வேடிக்கை நிரம்பியதாகக் கூட இருந்தது.  கதைபடிக்கத் தொடங்கும் போது, சம்பிரதாயமாக ‘இன்று எந்தக் கதையைப் படிக்கட்டும? என்று கதைபடிக்கிறவர் கேட்க, வீட்டு வாசல்களில் அமர்ந்திருந்த பெண்கள் பக்கமிருந்து, ‘ஏதாவது நல்ல கதையா படிங்க என்று குரல் வந்தது.  தனது துணிப்பையிலிருந்து பெரிய எழுத்து கதைப்புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்த கதைபடிக்கிறவர், புத்தகங்களை கூட்டத்திடம் எடுத்துக்காட்டி, ‘எல்லாமே கிழியாத, நல்ல கதைகள் தான்.  பாத்துக்கங்க என்று கிண்டல் செய்தார்.  இந்தக் கிண்டலைக் கூட்டத்தில் நிறைய பேர் ரசிக்கவும் செய்தார்கள். அதன் பின் அன்றைய இரவின் கதைபடித்தல் நிகழ்வு இது போன்ற ரசனையான கிண்டல் கேலிகள் நிறைந்த இரவாகவே நடந்து முடிந்தது.


நோன்பு என்ற வழக்கம்:

நயினார் நோன்பிற்கு நடத்தப்படும் கதைபடித்தல் நிகழ்வு இதற்கு முற்றிலும் நேர்மாறான மனவோட்டத்தைக் கொண்டிருக்கிறது. சித்திரபுத்திர நயினார் கதை, புனிதமான கதை; இறப்பு வீடுகளில் கண்டிப்பாக அது படிக்கப்படக்கூடாது.  உண்ணாமலிருந்து படிக்கப்பட வேண்டியது. வருடம் ஒரு முறை, சித்திரைப் பௌர்ணமியன்று படிக்கப்பட வேண்டியது. இந்த நிகழ்வில் கதைபடிக்கிறவருக்கு கூலி பணமாகத் தரப்படுவதில்லை; இது தனி நபர் ஏற்பாடு செய்யும் நிகழ்வுமல்ல.  கதை கேட்க வருகிறவர்கள் கொண்டு வரும் நெல், உப்பு, புளி, மிளகாயை கோவில் பூசாரியும், கதை படிக்கிறவரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  கதையை வாசிப்பதும், இடையிடையே நிறுத்தி விவாதிப்பதையும் தவிர்த்து வேறெந்த நிகழ்விற்கும் அந்தப் பகலில் இடமில்லை.  காலையிலிருந்து மாலை, அந்தக் கதைப்பாடலை வாசித்து முடிக்கும் வரை யாரும் எங்கும் நகருவதில்லை.  இடையிடையே  யாரும் வந்து போவது இல்லை.  எனவே, சித்திரபுத்திர நயினார் நோன்பில் வயதானவர்களே பெரும்பாலும் பங்குகொள்கிறார்கள்.  இறப்பு வீட்டு கதைபடித்தலில் நடைபெறும் கிண்டல், கேலிகளெல்லாம் இங்கே நடைபெறுவதில்லை.

இறப்புச் சடங்கையொட்டி நிகழ்கின்ற கதைபடித்தலுக்கும் நயினார் நோன்பில் நடைபெறும் கதைபடித்தலுக்குமான முரண்கள் வலுவான இரண்டு எதிர்மறைகளாக உருவாகும் வாய்ப்பை 'நோன்பு' என்ற காரணியே ஏற்படுத்துகிறது. இக்காரணியே இவ்விரண்டு நிகழ்வுகளின் அடிப்படையான வேறுபாட்டை 'புனிதம் - புனிதமற்றது' என்ற எதிர்வுகளாகக் கட்டமைக்கிறது. சித்திரபுத்திர நயினார் கதைபடித்தலில் உருவாகும் 'புனிதத்துவத்திற்கு', 'தெய்வத்தின் பிறப்புக்கதை' என்ற அதன் உள்ளடக்கம் காரணமாகச் சொல்லப்படுகிறது என்றாலும், அந்நிகழ்வை சடங்காக மாற்றுவது 'நோன்பு' என்ற சிறப்படையாளம் தான்.

தமிழ் மரபில் நோன்பு என்ற சடங்கு, சமய வழிபாட்டுடனேயே இணைத்து விளக்கப்படுகிறது.  சித்திரபுத்திர நயினார் நோன்பு, சைவ வழிபாடாகக் கருதப்படுகிறது; பாவை நோன்பும், கைசிக புராண ஏகாதசி நோன்பும் வைணவ வழிபாட்டு வரிசையில் இடம்பெறுகின்றன; இஸ்லாமியர்கள் ரமலானையொட்டி 'நோன்பு' கடைபிடிக்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை நாளுக்கு முன்பான நாற்பது நாட்களை நோன்பு நாட்கள் என்று சொல்கிறார்கள்.  கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கடைபிடிக்கும் நோன்புகள், முறையே இயேசு கிறிஸ்து மற்றும் முகமது நபியின் வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை நினைவுபடுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன.  பாவை நோன்பு ஆண்டாள் என்ற பெண், திருமாலை மணம்புரிய வேண்டி செய்த நோன்பை முன்மாதிரியாகக் கொண்டது.  கைசிக புராண ஏகாதசி நோன்பு பாவ விமோசனத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது.  நயினார் நோன்பு ஏற்கனவே குறிப்பிட்டது போல மரணக்கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திரபுத்திரனின் வாழ்க்கையை சிந்திப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புனிதப் பனுவல்களும் பொருள்கோளியலும்:

உணவு விலக்கம் என்று பொருள்படும் உண்ணாவிரதங்களை, நோன்பாக உருமாற்றும் பணியைப் புனிதப் பனுவல்களே செய்கின்றன.  உணவைத் தவிர்த்தல் என்ற லௌகீக செயல்பாட்டை, அதனோடு இணையக்கூடிய புனிதப் பனுவல்கள் மட்டுமே வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்று, அதன் பலாபலன்களை அரூபத்தன்மையுடையவையாக வெளிப்படுத்துகின்றன.   

நிறுவன சமயம் சார்ந்த பிற நோன்புகளுக்கு, அந்தந்த சமயங்களில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட புனிதப் பனுவல்கள் இருக்கிற காரணத்தால், இது எளிதாக நடந்தேறுகிறது. ஆனால், நயினார் நோன்பில் வாசிக்கப்படும் பனுவலான சித்திரபுத்திர நயினார் கதைப்பாடலுக்கு வேறெந்தவொரு நிறுவனவயப்பட்ட புனிதப்படுத்தலும் இல்லையென்பதால், சுயம்புவாய் தனக்கொரு புனித நியாயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் நயினார் நோன்பிற்கு ஏற்படுகிறது.  இதனை முன்னிட்டே நயினார் நோன்பைக் கடைபிடித்துக்கொண்டிருக்கிற மக்கள் தங்களுக்குள்ளாகவே அக்குறிப்பிட்ட பனுவல் குறித்த விலக்கொன்றை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், அதாவது வேறெந்தவொரு தருணத்திலும் இப்பனுவலை வாசிக்கலாகாது என்ற விலக்கை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், அப்பனுவலுக்குப் புனிதமேற்ற முயற்சிக்கிறார்கள்.

நோன்புற்று, புனிதப் பனுவல்களை சார்ந்திருக்கும் பொழுது மாயங்கள் நிகழ்வதாக சமயங்கள் போதிக்கின்றன.  பொருண்மைகளை ஒலிகளோடே கற்பனை செய்து வந்திருந்த சூழலில் எழுத்து என்ற காட்சி வடிவமும் பொருண்மைகளைக் கடத்த முடியும் என்பது புதிய தொழில் நுட்பமாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது, இன்றைக்கு அறிவின் கருவியாகக் கருதப்படுகிற புத்தகங்கள், அதன் ஆரம்ப காலங்களில், அத்தொழில் நுட்பத்தின் பரவலாக்கம் சீராக நடந்திராத சூழலில், மாயத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.  கோடுகள் அல்லது வளைவுகள் அல்லது கீறல்களிலிருந்து அர்த்தங்கள் வெளிவருகின்றன என்ற வெகுஜன யோசனை, எழுத்திற்கும், தொடர்ச்சியாய் பனுவல்களுக்கும், புத்தகங்களுக்கும் கூட மந்திரத்தன்மை இருப்பதாய் யோசிக்க வைத்தது.  இந்தியாவின் தாந்திரீக மரபு எழுத்துகள், வடிவங்கள் கொண்ட ஒழுங்கமைப்புகளுக்குள் அமானுஷ்ய சக்திகளை சேகரிக்க முடியுமென்றும் அவை 'யந்திரம்' என்று அழைக்கப்படுமென்றும் கருதுகின்றன.[10] இத்தகைய யந்திரங்களை மந்திரங்களின் உச்சம் என்று அழைக்கிற நிலையில், மொழியால் செய்யப்பட்ட புனிதப்பனுவல்கள் 'புனிதப் பொருண்மையை'க் கொண்டுள்ளன என்ற நம்பிக்கையை அதன் வழித்தோன்றல் என்றே சொல்ல வேண்டும்.

நயினார் நோன்பின் போதும், எழுதப்படிக்க தெரியாதிருந்த, தெரிந்தும் வயோதிகம் காரணமாக முடியாதிருந்த, முடிந்தும் பழக்கமின்மை காரணமாக இயலாதிருந்த மக்கள், 'கதை படிக்கிறவர்' என்ற தொழில்முறை வாசிப்பாளரை உதவிக்கு வைத்துக் கொண்டு, புனிதப்புத்தகங்களுக்குள் புனிதப் பொருண்மைகள் மறைந்திருக்கின்றன என்ற நம்பிக்கையில் அதனை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கிறார்களா என்ற கேள்வியை நான் பரிசோதித்துப் பார்க்க விரும்பினேன்.  நோன்பின் போது, கதை படிக்கிறவர் கதையை வாசிக்க வாசிக்க, கேட்டுக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களிலெல்லாம் நிறுத்தச் சொல்லி, வாசிக்கப்பட்ட கதைப் பகுதியைப் பற்றி தங்களுக்குள்ளே விசாரணையில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்த பின்பு எனது கேள்வியை நான் சிறிது மாற்றியமைத்துக் கொண்டேன்.

புனிதப் பனுவல்கள் என்பதால் அவற்றை புனித உறைகளிலிட்டு, நறுமணப்புகையூட்டி, அலங்காரங்கள் செய்து, வழிபடும் பொருளாக அந்த மக்கள் மாற்றியமைத்திருக்கவில்லை என்பது உண்மை.[11]  சித்திரபுத்திர நயினாரின் கதைப்பாடல் புத்தகம் குறித்து அவர்களிடம் பரவச உணர்வு தான் வெளிப்பட்டதே தவிர அதனைத் தொழும் முயற்சியை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.  அப்படியானால், அந்த நோன்பு நிகழ்வின் போது குறிப்பிட்ட அப்பனுவலிலிருந்து அர்த்தங்களை என்ன முறையியல் சார்ந்து தருவித்துக் கொள்கிறார்கள்?  அப்படியொரு முறையியல் அவர்களிடம் காணப்படும் என்றால், அப்பொருள்கோளியலின்[12] எல்லை, பரப்பு, திறன் என்ன?

சித்திரபுத்திர நயினார் கதைப்பாடலின் அமைப்பு:  

சித்திரபுத்திர நயினார் கதைபாடல்[13] என்ற நூல் இரண்டு கதைப்பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகிறது.  பெயருக்குத் தகுந்தார் போல் 'சித்திரபுத்திர நாயனார் கதை'யை முதன்மையாகவும், 'அமராவதி கதை' என்ற கதைப்பாடலை துணையாகவும் கொண்டிருக்கிறது.  நயினார் நோன்பின் போது இந்த இரண்டு கதைப்பாடல்களையும் வாசிக்க வேண்டியது மரபு. கள ஆய்வின் போதும் அப்படியே தான் செய்தார்கள். சித்திரபுத்திரர் கதைப்பாடல் என்ற பனுவல், கடவுள் வணக்கம், கதைச்சுருக்கம், நோன்பை நிகழ்த்தும் முறை, அதைச் செய்ய வேண்டிய காரணங்கள், அதில் கலந்து கொள்வதற்கான தகுதிகள், யாரெல்லாம் அதில் கலந்து கொள்ள முடியாது என்ற பட்டியல், கலந்து கொள்வதன் மூலம் அடையும் பலன்கள், அதன் பின் சித்திரபுத்திரரின் தொன்மம், இறுதியாக அமராவதி என்ற வணிகர் குலப் பெண்ணின் கதை என்று நிரல்பட கட்டமைக்கப்பட்டுள்ளது. பாடல்களின் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் மூலம், பயின்றுவரும் கதையை சுருக்கமாகச் சொல்லிவிடும் பாணியைக் கொண்டிருக்கிறது.

சித்திரபுத்திரரின் தொன்மத்திற்கும், அமராவதியின் பழங்கதைக்கும் ஆரம்பம் போல் தரப்படும், நோன்பு குறித்த விதிமுறைகள் கூடுதல் கவனத்திற்குரியன.  இந்த விதிமுறைகளே அப்பனுவல் ஏன் புனிதப்பனுவல் என்பதை நிரூபிக்கும் பணியைச் செய்கின்றன.   நோன்பைத் தொடங்குவதற்கு முன் பிள்ளையாருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகள் பற்றி பாரம்பரிய இலக்கணத்தோடு பின்வரும் சம்பிரதாயங்களை அப்பனுவல் குறிப்பிடுகிறது.

'பூரண கும்பம் பொன்னின் குடத்திலே வைத்து
வஸ்திரா பரணங்கள் வகையுடனே தான் சாத்தி
தட்சணைகள் வைத்து திருமாலைகள் சாத்தி
சந்தனங் குங்குமஞ் சரியாகத் தான் சாத்தி
வாழை கமுகுடனே வான் கரும்பு தானிறுத்தி
பொன்னின் விளக்கு வைத்துப் பூமலர்கள் தான் சாத்தி
வாழையிலை பரப்பி வைக்கும் வகைக்கனிகள்
வாழைப்பழமும் வருக்கைப் பலாச்சுளையும்
மாங்கனியுந்தேங்கனியு மற்றுமுள்ள நற்கனியும்
தேமாங்கனியுடனே செழுங்கதலி நற்பழமும்
விளாங்கனியுஞ்சர்க்கரையும் விரவமிகப்படைத்து
கடலைசிறு பயறுங்காரா மணிப்பயறும்
கடலை பொரியவலும் வேண்டும் பணியாரம்
தேனுந்தினையும் திறமாகத்தான் படைத்து
கரும்போடிள நீரும் கற்கண்டு நற்கனியும்
பொரிவிளங்காயுடனே பிட்டமுது மெள்ளுருண்டை
கொழுக்கட்டை வகைகள் கொண்டு வந்து தான் படைத்து
தோசை வடை இட்டிலியுந்தோன்ற மிகப்படைத்து
அப்பமதிரசமும் ஆனதொரு தேன் குழலும்
பாயசமு பானகமும் பதிவாகத்தானும் வைத்து
அன்னமிகச் சமைத்து அரன்பாலன் முன்னேவைத்து
புத்துருக்கு நெய்யும் பொரிக்கறியுள்ளதெல்லாம்
அடைக்காயு வெள்ளிலையும் அன்பாகத்தான் படைத்து
அத்தனார் தம்மருளால் அமுது செய்யப்பண்ணுவித்து..'
வசனம்
என்று கணபதியைத் தோத்திரம் பண்ணி அருச்சனை நிவேதன முதலானதுஞ் செய்து தூபதீபங் கொடுத்து அப்பால் மேற்கதையை நடத்த வேண்டியது.'[14]

பனுவலில் எழுதப்பட்டிருப்பது போன்ற விரிவான வழிபாடுகள் நடைபெறுவதில்லை என்பதைக் கள ஆய்வில் அறிந்து கொள்ள முடிந்தது. மிகச் சுருக்கமான பொருட்களைப் படைப்பதே தங்களது வழக்கமென்றும், எழுதப்பட்டிருப்பது போன்று ஒரு வேளை 'முற்காலங்களில்...' நடந்திருக்கலாம் என்றும் இந்திரா நகர் வாசிகள் தெரிவித்தனர்.  ஆனாலும், கதைப்பாடலை வாசிக்கும் பொழுது இந்தப் பகுதியைத் தவிர்த்து விடாமல் முழுமையாக வாசிக்கிறார்கள்.  எழுத்திற்கும் நிகழ்விற்குமான இந்த வேற்றுமைகள் குறித்த உரையாடலின் போது அக்கோயில் பூசாரி பகிர்ந்து கொண்ட கருத்து முக்கியமானது.  அவரது அனுபவத்தின் அடிப்படையில் பொருளாதார வசதிகளற்ற கிராமக் கோயில்களில் இது போன்ற எளிய வழிபாடுகளே நடைபெறுகின்றன, 'நமக்கு வசதியில்லைங்கறதால எழுதுனத மாற்றமுடியாது தானே?' என்று  அவர் கூறினார்.

எழுத்திற்கும் நிகழ்விற்குமான மாறுபாடுகளை எதிர்மறைகளாகவோ அல்லது இலக்கண மீறல்களாகவோ சுருக்காமல், அவை வெளிப்பார்வைக்கு முரண்பட்டவையாகத் தோன்றினாலும், கருத்தளவில் ஒரே மாதிரியானக் கற்பனையைக் கொண்டுள்ளன என்று விளங்கிக்கொள்ள வேண்டியதிருக்கிறது.  யதார்த்தம் மிக எளிமையானது என்றாலும், அது குறித்த கற்பனையும், உரையாடலும் எழுத்து மூலம் உருவாக்கப்படும் இலட்சியப் புனைவினடியாகவே நடைபெறுகிறது.  நயினார் நோன்பின் சடங்கு தழுவிய புனித குணம் அப்பனுவலை வாசிக்கும் பொழுதே உருவாக்கப்படுகிறது.  அவ்வரிகளில் விவரிக்கப்படும் விரிவான, அலங்கார சாயல் ததும்பும் வழிபாட்டு முறைக்கான விதிமுறைகள், யதார்த்தத்தில் அப்படி இல்லை என்ற குறையை அவர்களுக்கு உணர்த்தவில்லை என்பதை விடவும், அந்த இலட்சிய வழிபாட்டை செய்து வந்திருக்கும் மன நிறைவைக் கற்பனையாக உருவாக்கி விடுகிறது என்பது முக்கியம். 

இதனைத் தொடர்ந்து, அக்கதைப்பாடல், நயினார் நோன்பில் கலந்து கொள்பவர்களின் தகுதிகளைக் குறித்துப் பேசும் பகுதி மூலம், அதை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவரையும் 'சிறப்புத்தகுதி' வாய்த்தவர்கள் என்பது போல் உணரவைக்கிறது.  இதை வெளிப்படையாய் தெரிவிக்காமல், யாரெல்லாம் இக்கதையைக் காதாலும் கேட்கத்தகுதியில்லாவர்கள் என்றொரு பட்டியலை உருவாக்குவதன் மூலம், அங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களில் அப்படியானவர்கள் இல்லையென்று மறைமுகமாய் உறுதியளிக்கிறது.

'...பிச்சை யிடாத பெரும்பாவியானவரும்
நச்சுவாய்ப்பல்லர்கள் நடுக்கேடு செய்தவர்கள்
கள்ளிகளாயுள்ளவர்கள் கணவனுரை கடந்தோர்
பிச்சையிட்டுண்ணாத பெரும்பாவியானவர்கள்
குண்டுணிகள் சொல்லுங் கொடும்பாவியானவர்கள்
உற்று நின்று கேட்டு உறவை முறித்தவர்கள்
பல நினைவுவைத்த பாவிகளானவர்கள்
கொற்றவரைத் தள்ளி வைத்த கொடும்பாவியானவர்கள்
மற்றவரைத் தேடி வாழ்ந்திருக்கும் மாபாவி
பிள்ளையழிக்கும் பெரும்பாவியானவர்கள்
சண்டையிட்டு நித்தந் தன்பேச்சு மேலிடவே
கொண்டவனைப் பேணாத கொடும்பாவியானவர்கள்
தன்வீட்டைச் சாத்தி யசல் வீட்டிற் போயிருந்து
பின்னங்கள் பேசும் பெரும்பாவியானவர்கள்
பசித்தா ரிருக்கப் பார்த்திருந்த பாவியர்கள்
இத்தியாதி பேர்களெல்லாம் இக்கதையைக் கேளாமல்
கடக்கவே நில்லுமென்று...'[15]

விஸ்தாரமான வழிபாட்டு முறைகளை பனுவலில் விவரித்ததன் மூலம், அவ்வழிபாட்டை உண்மையாகச் செய்தால் விளையக்கூடிய 'சடங்கியல் வெளியை' கற்பிதமாக உருவாக்கியதைப் போலவே, இந்தப் பகுதியும், ஒருவித கற்பித 'சடங்கு வழிபாட்டாளர்களை' உருவாக்குகிறது. 

நிறுவன சமயங்கள், தனது வழிபாட்டாளர்கள் காக்க வேண்டிய தூய்மை குறித்த நெறிமுறைகளை வெளிப்படையாய் அறிவிப்பதோடு, அதைப் பேணுவதற்கான சடங்குகளையும் அறிவுறுத்துகின்றன.  உடலையோ அல்லது அவயங்களையோ நீரால் கழுவுதல், புனித நீரை உடலில் தெளித்து கொள்ளுதல், அறிவுறுத்தப்பட்ட ஒப்பனைகளை உடலின் மேல்புறம் செய்து கொள்ளுதல் என்று புறத்தூய்மையையும்; மந்திரங்களை உச்சரித்தல், பாவங்களை அறிக்கையிடுதல் போன்ற சடங்குகளைச் செய்தல், எளிமை பூணுதல், தானம் அளித்தல் என்று அகத்தூய்மையையும் உருவாக்கிக்கொள்வது போல, எந்தவொரு நெறிமுறைகளையும் கொண்டிராத சித்திரபுத்திர நயினார் நோன்பிற்கான ‘வழிபடுநர் தூய்மை பனுவலின் மூலமாகவே எட்டப்படுகிறது.

அந்நோன்பில் வாசிக்கப்படவிருக்கும் கதையை, பட்டியலிடப்பட்ட பாவிகளெல்லாம் காதால் கேட்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு, அங்கு அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரின் அகத்தூய்மைக்கான உத்தரவாதத்தை மறைமுகமாக வழங்கி விடுகிறது.  அப்பனுவல் பகுதியை இடையீடின்றி வாசித்துக் கடந்து விடுவது மூலம், அங்கு கூடியிருக்கும் எவரும் அப்படியான பாவச்செயல்களை செய்திருக்காத உத்தமர்கள் என்ற தூய நிலையை எட்டி விடுகின்றனர்.  நோன்பிடுகிறவர்கள் மனதளவில் எட்டக்கூடிய இந்தக் கற்பிதத் தூய்மையே நோன்பின் சடங்கியல் தன்மையையும், சித்திரபுத்திர நயினார் கதைப்பாடலுக்கான 'புனிதப்பனுவல்' தகுதியையும் நிலைபெறச்செய்கிறது.  அதே போல, பொதுவாக ஒரு சடங்கைக் கடந்து வெளிவருகையிலும், நமது ஆய்வில் ஒரு நோன்பை வெற்றிகரமாய் நிறைவேற்றி முடிக்கும் பொழுதும், அந்நோன்பி அல்லது சடங்கி உணர்வதாகச் சொல்லப்படும் 'தூய்மையேறிய தன்னிலை'யையும் அப்பனுவலே கற்பிக்கிறது[16].  ஒரு நிகழ்வின் புனிதத்துவமும், அதில் கலந்து கொள்பவர்களின் சிறப்புத்தகுதியும், அப்புனிதநிகழ்வு உறுதியளிக்கும் தன்னிலைப் புனரமைப்பும் அதிலிருந்து விலக்கப்பட்டவர்களைப் பற்றிய வரையறையின் மூலமே கட்டமைக்கப்படுகின்றது.

கதைப்பாடலில் சொல்லப்படும் விலக்கப்பட்டவர்களின் பட்டியல், யதார்த்தத்தில் பங்கேற்பாளர்களைப் பற்றியும் அவர்களின் பங்கேற்பு பற்றியுமே பேசுகிறது. தெளிவாகச் சொன்னால், அப்படியொரு பட்டியல் மட்டுமே இருக்கிறதேயொழிய அதில் குறிக்கப்பட்ட்டிருப்பது போன்ற 'விலக்கப்பட்டவர்கள்' என்று எவருமில்லை.  இந்த இருந்தும் இல்லாத நிலை ஒரு விசித்திரமான கருதுகோளை உருவாக்குவதற்கான சூழலை நமக்கு உருவாக்குகிறது.  அதை இப்படிச் சொல்லிப் பார்க்கலாம்: ‘விலக்கப்பட்டவர்களைப் பற்றிய பட்டியலின் இருப்பு, விலக்கப்பட்டவர்களின் இருப்பு குறித்த சாட்சியமாக இருக்கவேண்டும் என்பது இல்லை.  ஏனென்றால், அப்பட்டியல் எப்பொழுதுமே உள்ளிருப்பவர்களின் தராதரங்களையும் அந்த 'உள்' என்பதன் இயல்புகளையுமே விளக்கிக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு கருதுகோளை ஏற்றுக்கொள்வதில் உருவாகக்கூடிய உடனடி சிக்கல், அச்சடங்கு நடைபெறும் சூழல் தொடர்பானது.  அப்படியொரு விலக்கப்பட்டவர்களின் பட்டியலை முன்வைக்கும் அச்சடங்கு தன்னுள்ளே அத்தன்மையானவர்கள் இடம்பெறாமல் கண்காணிக்கும் அதிகாரமின்றி இருப்பதற்கான காரணம் அது கிராமக்கோயில்கள் சார்ந்தது என்பதும், அதில் புழங்கப்படும் பனுவல் நாட்டுப்புறக்கதைப்பாடல் வடிவத்தைச் சார்ந்தது என்பதுமாக இருக்க முடியுமா?  இப்படியொரு சடங்கும், அதன் புனிதப்பனுவலும் செவ்வியல் கோயில்கள் சார்ந்து உருவாகியிருக்கும் என்றால், அவை ஒருவேளை தங்களது 'விலக்கப்பட்டவர்கள் பட்டியலை' கறாராகக் கடைப்பிடித்திருக்கக் கூடுமோ என்பதை நாம் கேட்டுப்பார்க்கலாம்.

சடங்கும், புனிதப்பனுவலும், விலக்கப்பட்டவர்கள் குறித்த வரையறையும் மட்டுமே ஒரு நெறிமுறையை கடைப்பிடிக்கப் போதுமானவையல்ல; இதற்கெல்லாம் மேலே அதைச் செயல்படுத்துவதற்கான ‘அதிகாரம் வழங்கப்பட்ட காரணிகள் இருக்க வேண்டியதும் முக்கியம்.  நாட்டுப்புற வழக்காறுகள் பயின்று வரும் கிராமக் கோயில்களில் இத்தகைய 'அதிகாரம் பொருந்திய காரணிகள்' இல்லை என்பது வெளிப்படை.  இதனால் தான் சித்திரபுத்திர நயினார் கதைப்பாடலில் சொல்லப்படும் 'விலக்கப்பட்டவர்களின் பட்டியல்' கதை போல வாசிக்கப்பட்டு கடந்து போகிறதா?

செவ்வியல் கோயில்களில் கண்காணிக்கும் அதிகாரம் பெற்ற காரணிகள் செயல்படுகின்றன என்பது உண்மை தான் என்றாலும், அவையும் புற அடையாளங்களை மட்டுமே உணரும் சக்தி படைத்தவை என்பதை மறந்து விடவேண்டாம்.  ஆடை, அணிகலன், ஒப்பனை, உடற்பூச்சுகள், தோலின் நிறம், அலங்காரம் போன்றவற்றை மட்டுமே காணும் திறன் பெற்றவை.  சித்திரபுத்திர நயினார் கதைப்பாடலில் குறிப்பிடப்படும் 'நச்சுவாய்ப்பல்', 'நடுக்கேடு செய்தல்', 'கள்ளி', 'பிச்சையிடாதல்' போன்ற அக அடையாளங்களை அறிவதற்கான சூட்சுகம் அவற்றிற்கும் கூட இல்லை தான். எனவே, அகக்காரணங்களால் விலக்கப்பட்டிருக்கும் நபர்களின் பட்டியலை நயினார் நோன்பின் போது கிராமக் கோயில்களில் எளிதாகக் கடந்து செல்வது அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரமற்ற தன்மையினால் அல்ல என்பது தெளிவாகிறது.

அகவயமான காரணங்களுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் விலக்கப்பட்டவர்களின் பட்டியல் அனுமதிக்கப்பட்டவர்களின் உன்னதத்தைப் பேசுவதையே நோக்கமாகக் கொண்டவை.  யதார்த்தத்தில் அவ்வாறு விலக்கப்பட்டவர்கள் என்று ஒரு குழு இருக்கவேண்டுமென்பது கூட அவசியமில்லை.  அப்பட்டியல் மட்டுமே தான் நிஜம் என்பதற்கு அக்கதைப்பாடலிலேயே இன்னுமொரு சான்றும் நமக்குக் கிடைக்கிறது.  தொடர்ச்சியாக, அக்கதைப்பாடலை வாசிக்கக் கேட்டு நோன்பைக் கடைபிடிப்பவர்கள் பெறும் அரிய பலன்களை விவரித்து வரும் கதைப்பாடல் ஒரு கட்டத்தில் இப்படியும் பேசுகிறது.

'...சித்திரைக்குச் சித்திரையிற் சீராரும் பௌரணையில்
சித்திரை மாதத் திரு நோன்பு நாளதனில்
உத்தமரை நோக்கி யொரு நோன்பு செய்தவர்கள்
மைந்தர்களானாலும் மடந்தையர்களானாலும்
எந்தக் குலத்தில் எவர்களே யானாலும்
தந்தை தனைக் கொன்ற பெரும்பாவியானாலும்
நித்த மதுவுண்ணும் நீசரேயானாலும்
இந்தக் கதையை இயல்பாய்க் கருத்தில் வைத்து
லோகத்தியற்கையென்று யோசியாமலேயிருந்து
இளகும்மடிமனத்தி லெந் நேரமும் நினைத்தால்
அங்கே தானோன்புக் கவரே வெளிப்படுவார்
இந்திரனைப் போல இனிதாக வாழ்வுமுண்டாம்...
...முத்தியருள் கொடுக்கும் மோகங்கள் தானீங்கும்
வல்வினைகளாவதெல்லாம் வழிவிலகித்தான் போகும்
நல்லதொரு புண்ணியங்கள் நாள்தோறு முண்டாகும்
ஆராகிலுமிதனை யன்புடனே கேளுங்கள்
நாயனார் பிறப்பை நன்றாகச் சொல்லுகிறேன்...'[17] 

'இக்கதைப்பாடலைக் கேட்பவர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள்' என்று அழைப்பு விடுக்கையில் இயல்பாகவே மேற்சொன்ன 'விலக்கப்பட்டவர்களையும்' நோக்கி அந்த அழைப்பை அப்பனுவல் விடுகிறது. 

பாவம் செய்திருக்கும் நபர்களுக்கு ஈடேற்றம் வழங்குவதே சமயச் சடங்குகளின் அடிப்படை நோக்கமாகும்.  பாவிகளுக்கான நிறுவனமாகவே அது தன்னை பல நேரங்களில் அறிவிக்கிறது. இந்தச் சூழலில், பாவிகளை தனது சடங்குகளிலிருந்து விலகியிருக்கும்படி ஒரு பனுவல் சொல்கிறது என்றால், அதற்கான காரணம் நேரடியானதாக இருக்க வாய்ப்புகளில்லை.  அது அவ்வாறு சொல்வதன் மூலம், அதாவது பாவிகள் வெளியே விலக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கற்பனை செய்யச் சொல்வதன் மூலம் அதில் கலந்துகொண்டிருக்கும் பாவிகளின் தன்னிலைகளுக்கு தூய்மையேற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது என்றே பொருள்.[18]

நயினார் நோன்பிற்கான விலக்கு குறித்த வரையறைகள், விலக்கப்பட்டவர்களைக் கற்பனை மட்டுமே செய்கிறது. அவ்வாறு கற்பனை செய்வதன மூலம், அந்நோன்பை மேற்கொள்கிறவர்களுக்கு 'அனுமதிக்கப்பட்டவர்கள்' என்ற தகுதியை வழங்குகிறது.  இத்தகைய 'அனுமதிக்கப்பட்ட' தகுதி, அவர்களது தன்னிலையைத் 'தூய்மையானது' என்று அங்கீகரிப்பதோடு, அந்நோன்பில் கலந்து கொள்ளாதவர்களின் தன்னிலை 'தூய்மையற்றது' என்றும் வரையறுக்கிறது.  இதனால், நயினார் நோன்பில் கலந்து கொள்ளாதவர்களனைவரும் 'தூய்மையற்ற தன்னிலை கொண்ட விலக்கப்பட்டவர்கள்' என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். 

'தூய்மையானது - தூய்மையற்றது' என்ற வகைப்பாடு, குறிப்பிட்டவொரு சடங்கில் 'பங்கேற்றல் - பங்கேற்காமை' என்ற நிலைப்பாட்டின் மூலமாக உருவாக்கப்படுகின்றது.  இதன் மூலம் அக்குறிப்பிட்ட சடங்கு, பங்கேற்பவர்களைத் தூய்மைப்படுத்தும் மந்திரத்தன்மை மிக்கதாகவும் மாற்றமடைகிறது.  சடங்கின் மந்திர குணத்தை அறிந்த தூய்மையற்றவர்கள் (அதாவது, அது வரையில் அச்சடங்கில் பங்கேற்காத 'விலக்கப்பட்டவர்கள்'), அச்சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் தங்களது நிலையை 'தூய்மையான அனுமதிக்கப்பட்டவர்களாக' மாற்றிக் கொள்கிறார்கள். 

சடங்கொன்றை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட 'விலக்கப்பட்டவர்' என்ற வரையறை இந்தத் தருணம் வரையிலும் கூட நெகிழ்வுத்தன்மையுடைய, மாற்றங்களுக்குட்பட்ட கற்பனையாகவே இருக்கிறது.  விலக்கப்பட்ட நிலையிலிருந்து அனுமதிக்கப்பட்ட நிலைக்கு நகர்வதென்பது சாத்தியமாகவே இருக்கிறது.  ஆனால், எப்பொழுது ஒருவரோ அல்லது பலரோ, அந்நோன்பின் இருப்பை, அது குறித்து பரப்பப்படும் விளம்பரங்களை, அது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நம்பிக்கைகளை சந்தேகப்படவும், கேள்விக்குட்படுத்தவும் தொடங்குகிறார்களோ அப்பொழுது 'விலக்கப்பட்டவர்கள்' என்ற பட்டியல் ஸ்தூலமானதாகவும், இறுக்கமானதாகவும் உருப்பெறுகிறது. அச்சடங்கின் நெறிமுறைகளுக்குப் புறம்பான சிந்தனைகளை உடைய 'விலக்க ப்பட்டவர்கள்' கடைந்தேறமுடியாதவர்களாகவும் அறிவிக்கப்படுகிறார்கள்.  தூய்மை - தூய்மையற்றது / புனிதம் - புனிதமற்றது என்ற மாறுபாடுகளைக் கடந்து தூய்மை - அழுக்கு / புனிதம் - தீட்டு என்ற முரண்கள் திரளத் தொடங்குகின்றன.

சித்திரபுத்திர நயினார் நோன்பும், அதில் வாசிக்கப்படும் பனுவலான கதைப்பாடலும். 'தூய்மை - தூய்மையற்றது' என்ற மாறுபாடுகளுக்கு இடையேயான ஊடாட்டங்களையே மையப்படுத்துகின்றன.  கற்பனையான விலக்கப்பட்ட நிலையிலிருந்து, அனுமதிக்கப்பட்ட நிலைக்கு மாறுவதில் முகிழ்க்கும் வாதப்பிரதிவாதங்களை பல்வேறு துணைக்கதைகளின் மூலமாக கதைப்பாடலில் திரும்ப நிகழ்த்துவதையே தனது நோக்கமாகக் கொண்ட நயினார் நோன்பு, தன்னைத் தக்கவைப்பதன் மூலம் பக்தர்களின் தன்னிலைத் தூய்மையேற்றத்தையும் சாதித்து விடுகிறது.

எந்தவிதமான நிறுவன பலமோ அமானுஷ்ய நம்பிக்கைகளின் பலமோ இல்லாத நாட்டுப்பறப் பனுவல்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்வதற்காக, கற்பனையான விலக்கப்பட்டவர்களையும், கற்பனையான தன்னிலைத் தூய்மையேற்றத்தையும் உருவாக்குகின்றன.  இந்தக் கற்பிதங்கள் தீவிரமாக நம்பப்படுகையிலும், அந்நம்பிக்கை நடைமுறைப்படுத்தப்படுகியிலும் ஸ்தூலமான விலக்கப்பட்டவர்கள் உருவாகுகிறார்கள்; கூடவே தூய தன்னிலைகளும். தொடர்ச்சியாக அப்பனுவல்கள் புனிதப்பனுவலாகவும் மாறிவிடுகின்றன.

நாட்டுப்புறப்பனுவல்களின் இத்தகைய குணத்தை இன்னும் பரந்த அளவில் விரித்து தொடக்க கால சமயப் பனுவல்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.  ஒரு பனுவலின் புனிதத் தன்மை, அதிலிருந்து தருவிக்கப்படும் பொருண்மையின் புனிதத்துவத்தால் தீர்மானிக்கப்படுவதைக் காட்டிலும், அது தன்னைப் பற்றிக் கட்டமைக்கிற பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டப்படுகிறது.  பனுவலின் இப்புனிதப் பிம்பம், அதை பாவிப்பது குறித்த சடங்குகளாலும், அச்சடங்கு உருவாக்கும் விலக்கப்பட்டவர்களின் பட்டியலினாலும், இதன் மூலம் கலந்து கொள்பவர்கள் பெறும் மறைமுகச் சலுகைக்கான குதூகலத்தாலுமே செய்யப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஆன்மீகக் குதூகலமாக அறிமுகமாகிற இந்த மறைமுகச் சலுகை, காலப்போக்கில் பொருளாதாரச் சலுகையாகவும் மாறும் பொழுது அக்குதூகலம் மரியாதையாகவும், அதிகாரமாகவும் தோற்றம் பெறுகிறது.

'நயினார் நோன்பு கதைபடித்தல்' என்ற நாட்டுப்புற வழிபாட்டு முறை, பொருளாதார வலிமையோ சமய வலிமையோ பெற்றிராத பனுவலொன்று தன்னை 'புனிதப் பொருளாக' உயர்த்துவதற்காக / தக்கவைப்பதற்காக செய்யக்கூடிய எளிய, அடிப்படையான சூட்சுமங்களை துல்லியமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், இந்தப் புனிதக் கோரிக்கையை அப்பனுவல், நிறுவன, பொருளாதார, சமூக அதிகாரங்களற்ற நாட்டுப்புற வழிபாட்டு மரபில், அதுவும் சாதிக் கட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிற சமூகக் குழுவின் மூலமாக முன்வைத்துக் கொண்டிருப்பது அதன் அந்திமக் கால நடவடிக்கையாகவே தோன்றுகிறது.  மரணத்தை விவாதிக்கும் கதையாடலின் மரணம்!  எப்பொழுதாவது அது உயர்ப்போடு இயங்கியிருக்குமா அல்லது நித்யமரணச் சூழலிலேயே அது தன்னை விவாதித்துக் கொண்டிருக்கிறதா?
[1] தமிழ்நாட்டின்  தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், அதன் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில், வடமேற்காக அமைந்துள்ள சங்கரன்கோயில், அதைச் சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களின் தாய்க்கிராமமாகவும், சைவ - வைணவ இணைப்பினை வெளிப்படுத்தும் முக்கியமான சமயக் கேந்திரமாகவும் விளங்குகிறது.  தென்புறத்தில் திருநெல்வேலியின் சைவக் கேந்திரமான அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மாள் திருத்தலத்திற்கும், வடபுறத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள வைணவக் கேந்திரமான அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருத்தலத்திற்கும் பொதுவான புவிசார்ந்த தொடர்புகளைக் கொண்ட நகரம் இது.  

[2] தமிழ் நாட்டின் மேற்கு எல்லையாக அமைந்து, கேரள மாநிலத்தைப் பிரித்து நிற்கும் மேற்குதொடர்ச்சி மலையடிவாரக் கிராமங்களின் நாட்டுப்புறக்கதைகளைச் சேகரித்துக்கொண்டிருந்த 2007ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 2ம் நாள் நான் அந்த நகரில் கள ஆய்வு செய்து கொண்டிருந்தேன்.

[3] கனத்த தினங்களில் மரணம் சம்பவிக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.  மூப்பு, பிணி போன்ற காரணங்களால் சாக்காட்டை எதிர் நோக்கியிருப்பவர்களின் மரணங்கள் பௌர்ணமி, அமாவாசை போன்ற கனத்த தினங்களில் நிகழும் என்பது ஐதீகம்.  இதனை, நிலவு பூமி மீது செலுத்தும் காந்த சக்தியோடு தொடர்பு படுத்தி, கடலில் உருவாகும் ஓதங்களைச் சான்றாகக் கொண்டு அறிவியல் விளக்கம் சொல்கிறவர்களும் தமிழ்நாட்டில் உண்டு.


[4] மேலதிக தகவல்களுக்கும், விவாதத்திற்கும் பார்க்க, டி. தருமராஜ், (தொகுப்பாசிரியர்), 2006, சனங்களின் சாமிகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய வெளியீடு, பாளையங்கோட்டை.

[5] அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின் உருவாகுகிற புத்தக உலகம், எழுத்து மரபின் தொடர்ச்சியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அதே வேளையில் வாய்மொழி மரபிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக, ஏராளமான வாய்மொழி இலக்கியங்களை மலிவு விலைப் புத்தகங்களாக அச்சிட்டு விநியோகம் செய்தது.  பார்க்க: Febvre, Lucien and Henri-Jean Martin, 1918, The Coming of the Book . The Impact of Printing 1450-1800, translated by David Gerard, edited by Geoffrey Nowell – Smith and David Woolton, Atlantic Highlands: Humanities Press, London; Stark, Ulrike, 2008, An Empire of Books. The Naval Kishore Press and the Diffusion of the Printed Word in Colonial India, Permanent Black.

[6] Lord, Albert Bates, 1960, The Singer of Tales, Harvard University Press, Cambridge;  Lord, Albert Bates, 1991, Epic Singers and Oral Tradition, Cornell University Press, London.

[7] Green, Nile, 2010, The Uses of Books in a Late Mughal Takiyaa: Persianate Knowledge Between Person and Paper, Modern Asian Studies 44, 2 PP.241-265.

[8]  வாய்மொழி – எழுத்துமொழி என்ற இணையை முரணாகவும், எதிராகவும் பார்ப்பது போலவே, தொடர் நிகழ்வுகளாகப் பார்க்கும் பார்வையும் உள்ளது.  எழுத்துமொழியை, வாய்மொழியின் நீட்சியாக அணுகும் பொழுது வாய்க்கும் அனுகூலங்களை வால்டர் ஜே. ஓங் தனது நூலில் வெற்றிகரமாய் பயன்படுத்தியிருந்தார். Ong, Walter. J., 2002, Orality and Literacy. The Technologizing of the word, Routledge, London.

[9] வாய்மொழி சமூகத்தின் நிகழ்த்துதல் குணத்திற்கும், எழுத்துமொழி சமூகத்தின் அரூப குணத்திற்குமான உரசல்கள், அதிகமும் புனிதப் பனுவல்களின் பயன்பாட்டின் போது வெளிப்படுகின்றன.  வாய்மொழி சமூகங்களிடம் புனிதப்பனுவல்களை அறிமுகம் செய்கையில் அவை அப்பனுவல்களைப் பாவிக்கும் தோரணை ‘எழுத்து குறித்து அறிந்து கொள்வதற்கான சமிக்ஞைகளை உடையவை.  பார்க்க, Engelke, Mathew, 2004, Text and Performance in an African church: The Book, “Live and Direct”, in American Ethnologist, Vol.31, No.1, PP.76-91.

[10] Bagchi, P. C., 1989, 'Evolution of the Tantras', in Studies on the Tantras,, Ramakrishnan Mission Institute of Culture, Kolkatta, pp. 6-24.

[11]  புனித நூற்களை இது போல் கொண்டாடும் வழக்கங்கள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் நமக்கு விளக்கியிருக்கின்றன.  கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமம் இது போல் வழிபடப்படும் முறைகளை விளக்கும் சுகிர்தராஜாவின் புத்தகங்களை மேலதிகத் தகவல்களுக்காக பார்க்கலாம்: Sugirtharajah, R. S., 2004, The Bible and the Third World. Precolonial, Colonial and Postcolonial Encounters, Cambridge University Press, Cambridge.

[12] Hermeneutics  என்பதற்கான தமிழ் சொல்லாக 'பொருள்கோளியல்' பயன்படுத்தப்படுகிறது.

[13] வெளியிட்ட ஆண்டோ, ஆசிரியர் பெயரோ (வழக்கமாய் இது போன்ற கதைப்பாடல்கள் 'புகழேந்திப்புலவர்' என்பவரையே ஆசிரியராகக் குறிப்பிடும்), பதிப்பாசிரியர் பெயரோ இல்லாத, சிவகாசியைச் சார்ந்த பாலாஜி நோட் புக்ஸ் என்ற முகவரியோடு பதிப்பிக்கப்பட்டிருக்கும், ரூ.25/- விலையிடப்பட்ட 'சித்திராபுத்திர நாயனார் கதை' என்று தலைப்பிடப்பட்ட நூலே பயன்படுத்தப்படுகிறது.


[14] பக்கம் 6-7, சித்திரபுத்திர நாயனார் கதைப்பாடல்

[15] பக்கம் 8, சித்திரபுத்திர நாயனார் கதைப்பாடல்


[16] சடங்கைக் கடந்து செல்லுதல் என்ற அர்னால்ட் வான் ஜென்னப்பின் கோட்பாடு சொல்லக்கூடிய குறுகிய கால தலைகீழ் மரியாதை (liminality) அனுபவத்தை விடவும் தூய்மையேறிய தன்னிலை என்ற உணர்வு நிலை நோன்பு, புனித யாத்திரை, நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற சடங்குகளின் பொதுத்தன்மையாக விளங்குகிறது.  வாழ்க்கை வட்டச் சடங்குகளைக் கடந்து வருகிற நபரும் கூட இந்தத் தூய்மையேறிய தன்னிலையை உணர்கிறார் என்பது முக்கியம்.  Van Gennep, Arnold, 2010, Rites of Passage, Routledge Chapman and Hal.


[17] பக்கம் 11-12, சித்திரபுத்திர நாயனார் கதைப்பாடல்


[18] Evola, Vito, 2005, Cognitive Semiotics and On-line Reading of Religious Texts. A Hermeneutic Model of Sacred Literature and Everyday Revelation, in Consciousness, Literature and the Arts – vol. 6 No. 2.நூற்பட்டியல்:

1.      Bagchi, P. C., 1989, 'Evolution of the Tantras', in Studies on the Tantras,, Ramakrishna Mission Institute of Culture, Kolkata, pp. 6-24.
2.      Engelke, Mathew, 2004, Text and Performance in an African church: The Book, “Live and Direct”, in American Ethnologist, Vol.31, No.1, PP.76-91.
3.      Evola, Vito, 2005, Cognitive Semiotics and On-line Reading of Religious Texts. A Hermeneutic Model of Sacred Literature and Everyday Revelation, in Consciousness, Literature and the Arts – vol. 6 No. 2
4.      Febvre, Lucien and Henri-Jean Martin, 1918, The Coming of the Book . The Impact of Printing 1450-1800, translated by David Gerard, edited by Geoffrey Nowell – Smith and David Woolton, Atlantic Highlands: Humanities Press, London.
5.      Giller, Pinchas, 2001, Reading the zohar. The Sacred text of the Kabbalah, Oxford University Press, New York.
6.      Green, Nile, 2010, The Uses of Books in a Late Mughal Takiyaa: Persianate Knowledge Between Person and Paper, Modern Asian Studies 44, 2 PP.241-265.
7.      Lord, Albert Bates, 1960, The Singer of Tales, Harvard University Press, Cambridge. 
8.      Lord, Albert Bates, 1991, Epic Singers and Oral Tradition, Cornell University Press, London.
9.      Ong, Walter. J., 2002, Orality and Literacy. The Technologizing of the word, Routledge, London.
10.  Sawyer, John F. A., 2011, Sacred Texts and Sacred Meanings. Studies in Biblical Language and Literature, Sheffield Phoenix Press.
11.  Stark, Ulrike, 2008, An Empire of Books. The Naval Kishore Press and the Diffusion of the Printed Word in Colonial India, Permanent Black.
12.  Sugirtharajah, R. S., 2004, The Bible and the Third World. Pre-colonial, Colonial and Postcolonial Encounters, Cambridge University Press, Cambridge.
13.  Van Gennep, Arnold, 2010, Rites of Passage, Routledge Chapman and Hal.
14.  டி. தருமராஜ், (தொகுப்பாசிரியர்), 2006, சனங்களின் சாமிகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய வெளியீடு, பாளையங்கோட்டை.

No comments: