Friday, 20 November 2015

சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவு சாப்பிட மட்டுமே!ஒரு கேள்வி:
தலித்கள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் சமையலறைகளில் மாட்டுக்கறி சமைக்கத்தானே படுகின்றன. இவர்களின் எண்ணிக்கை சுமார் 40%க்கு மேல் வருமே. அவர்கள் இந்தியர்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள்... பெரும்பான்மை இந்துக்களின் சமையலறைகளில் ஏன் மாட்டுக்கறி இல்லை என்றுதானே தலைப்பு இருக்கவேண்டும்.

B. R. Mahadevan


'இந்திய சமையலறையில் ஏன் மாடுக்கறி இல்லை?' என்ற கட்டுரையில் சில இடங்களை மௌனமாகக் கடந்திருக்கிறேன்.  வேண்டுமென்றே தான்.

அதில் ஒன்று, 'மாட்டுக்கறி மீதான விரோதம் வரலாற்றில் எப்பொழுது ஏற்பட்டது?' என்ற கேள்வி. 

மற்றொன்று, 'இந்தியாவில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் யாரெல்லாம் இல்லை' என்ற பட்டியல்.  உங்களது கேள்வி இந்த இரண்டாவது விஷயத்தை மையப்படுத்துகிறது.

இனி விஷயத்திற்கு வருவோம்.

மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள், சாப்பிடாதவர்கள் என்ற தெளிவான பட்டியல் நம்மிடம் இல்லை.  இப்பொழுதும் இல்லை, எப்பொழுதும் இல்லை.
தலித்துகள், பழங்குடியினர் (மலைவாழ்மக்களும் இவர்கள் தான்) கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என்ற தகவலும் முழுக்க முழுக்க தவறானது. 
  
மாட்டுக்கறி சாப்பிடாத பழங்குடிகள் ஏராளம்.  கணிசமான கிறிஸ்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் தான்.  இந்தியாவெங்கும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான தலித்துகள் மாட்டுக்கறியை உண்பது இல்லை. 
எனவே, மாட்டுக்கறியை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பது தலித், பழங்குடி, கிறிஸ்தவர், இஸ்லாமியர் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படவில்லை.  மேலும் சாப்பிடுகிறவர்கள் கூட மாட்டுக்கறி எனது பிறப்புரிமை என்று சபதம் மேற்கொண்டு சாப்பிடுவதில்லை. 
 
சாப்பிடுகிற எவரது பழக்கமும் 'பெருவாரியான இந்துக்கள் மாடு சாப்பிடுவதில்லை; அதைப் புனிதமாக வணங்குகிறார்கள்.  எனவே நாம் அதைக் கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும்' என்ற வீம்பிலிருந்து / அரசியலிலிருந்து உருவானதில்லை.  அதையும் ஒரு உணவாகக் கொள்கிறார்கள் அவ்வளவு தான்.

ஆனாலும், இந்தத் தவறான தகவல் ஒரு உண்மை போல திரும்பத் திரும்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லப்படுகிறது. 
 
அந்த சந்தர்ப்பங்களை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை உங்களுக்கு விளங்க வரும்.  ஒவ்வொரு முறை, தலித், பழங்குடி, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகியோரின் பண்பு இது என்று வரையறுக்க முயலும் போதும், மீதமுள்ள அத்தனை பேரையும் இந்துவாக வரையறுப்பது தான் நடந்து கொண்டிருக்கிறது.  அதே போல மேலே சொல்லப்பட்டவர்களின் பண்பாட்டிற்கு  மாறானது தான் 'இந்துப் பண்பாடு' என்று வரையறுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. 
 
'மீதமுள்ள அத்தனையையும் தான் இந்து' என்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு, மேற்கூறியவர்களுக்கு எதிரானது இந்துப் பண்பு என்ற முடிவு.

இந்து பண்பை வரையறுக்க முயலுபவர்கள் தொடர்ச்சியாக இந்தத் தவறை செய்வதை நாம் பார்க்க முடியும்.  அவர்கள், மர்மமான அடையாளப் பிரச்சினையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் கட்டுக்கோப்பைக் கண்டு அவர்கள் மருளுகிறார்கள்; அது போன்ற செட்டு திட்டான நிறுவன பலம் நமக்குமிருந்தால் நலமாயிருக்குமே என்று பொறாமை கொள்கிறார்கள்.  அந்தப் பொறாமையால், 'அவர்கள் தவிர்த்த அனைத்தும் என்னுடையது' என்ற எளிய முடிவிற்கு வந்து சேர்கிறார்கள்.

உணவு விலக்கம் என்பது உலகப் பொதுவான விஷயம்.  அசைவம் மட்டுமல்ல, சைவ உணவுகளே கூட விலக்கப்படுகின்றன.  சுரைக்காயை சாப்பிடாதது எனது சாதியப் பெருமை என்று சொல்கிற வேடிக்கை நம்ம ஊரிலும் உண்டு.  இவையனைத்திற்கும் கந்தர கோளமான கதைகளை மட்டுமே விளக்கங்களாக சொல்கிறார்கள்.   இந்த 'கந்தர கோளமும்' உலகளாவியது தான். 

இந்திய சமூகத்தில், பெருவாரியான வீடுகளில் மாடு சமைக்கப்படாததற்கு 'காமதேனு' போன்று சொல்லப்படும் கந்தர கோளக் கதைகள் காரணமில்லை. 
அது யார் மீதான விரோதத்தாலும் விளைந்த ஒன்றில்லை. 

மாட்டுக்கறி குறித்து உருவாக்கப்பட்டிருக்கிற அசூயை தான் அவர்களைத் தடுக்கிறது.  இன்னும் சொல்லப்போனால், அதைச் சமைத்தோ, சாப்பிட்டோ எங்களுக்குப் பழக்கமில்லை என்பது தான் பெரும்பாலோரின் பதில்.

இதை இப்படிச் சொல்லிப் பார்ப்போம்.

ஏன் மாட்டுக்கறி சமைக்கப்படுவதில்லை என்பதற்கு தர்க்கபூர்வமான விளக்கங்கள் இல்லை நம்மிடம் இல்லை. 
 
ஒரு வார்த்தையைப் போல இந்தப் பழக்கம் நம்மிடம் தேங்கியிருக்கிறது. 
 
'ஏன் மரத்தை 'மரம்' என்று சொல்கிறோம்?  ஏன் வானத்தை 'வானம்' என்று சொல்கிறோம்?' என்பதற்கு நம்மிடம் எப்படி விளக்கங்கள் இல்லையோ அதே போல.
 
'மாட்டுக்கறி சமைப்பதில்லை' என்பது ஒரு இடுகுறி (arbitrary). 
 
இடுகுறியில் உங்களால் எந்தவொரு விளக்கத்தையும் இட்டு நிரப்ப முடியும்.
 
'பசு புனிதமானது; அதனால் சமைப்பதில்லை!'
'மாடு விவசாயிகளின் தோழன்; அதனால் சமைப்பதில்லை!'
''மாடு தாய்க்கு சமமானது; அதனால், சமைப்பதில்லை!'

பண்பாடு, மொழி போலவே தான் செய்யப்பட்டிருக்கிறது.  

மொழியில் புதிய சொற்கள் புகுவதும் பழையன கழிவதும் எவ்வளவு எளிமையாய் நடக்கிறதோ அதே போலத்தான் பண்பாட்டிலும் நடக்கிறது.  இங்கும், எல்லா விஷயங்களும் கூட்டு ஒப்பந்தத்தின் பேரில் தான் செயல்படுத்தப்படுகின்றன.

'மாடு' என்ற உச்சரிப்பிற்கு இது தான் அர்த்தம் என்று நாம் கூட்டாக நம்புவதால் தான் 'மாடு' என்பது தமிழ் சொல்லாக இருக்கிறது.
 
'ஞமலி' க்கு 'நாய்' வந்தது போல, 'மாடு' க்கு ஏதாவது வந்தால், 'மாடு' ம் வீட்டுக்குப் போக வேண்டியது தான்.

அதே போலத் தான் 'மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை' என்ற பண்பாடுக் கூறும்.  ஏதோவொரு காலகட்டத்தில், ஏதோ சில காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அந்த காரண காரியங்கள் அனைத்தும் காலாவதியானதாக இன்றைய நவீன இந்திய சமூகம் யோசிப்பதன் வெளிப்பாடு தான் இந்த விவாதங்கள் அனைத்தும்.

ஒவ்வொரு முறை பழையன கழியும் போதும், தூய்மையாளர்கள் பதட்டப்படுவது இயற்கை தான்.  தூய தமிழ் ஆதரவாளர்கள் செய்யும் அதிரடிகளை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

இதே போல பண்பாடு முன்னேறிச் செல்கையிலும் தூய்மையாளர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.  காலாவதியானவற்றை எப்படியாவது நிலை பெறச் செய்ய பிரயத்தனம் செய்கிறார்கள்.  பண்பாட்டை, இந்து - இஸ்லாம் - கிறிஸ்தவம் என்று மத அடையாளங்களால் காப்பாற்ற நினைக்கிறார்கள்.  அல்லது தலித் - பழங்குடி - திராவிடர் என்று சமூக அடையாளங்களால் தடுத்து விட முனைகிறார்கள். 
 
இந்த சனாதனிகளின் வாதம் மிக எளிமையானது - 

'பழமை காப்பாற்றப்பட வேண்டும்; ஏனெனில் சமூகம் சீரழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது!'

இதில் ஒளிந்துள்ள சுயநலம் அவ்வளவு அப்பட்டமானது.

எனவே, ஒன்று சொல்லிக் கொள்ளலாம். இந்திய சமையலறைகளில் இந்து சமையலறை, இஸ்லாமிய சமையலறை, தலித் சமையலறை, தமிழ் சமையலறை என்றெல்லாம் எதுவும் இல்லை.  ஆதியிலிருந்தே சமையல் வட்டாரத் தன்மையை உடையது தான்! 
 
'எது வட்டாரம்?' என்பது ஒவ்வொருவர் பயணிக்கும் வேகத்தைப் பொறுத்தது.

1 comment:

Bala said...

Cows, Pigs, Wars, and Witches: The Riddles of Culture
by Marvin Harris

The above book provides a good explanation on how cow became holy in India. It also provides a good explanation on how pig became the most hated animal in middle-east.