Skip to main content

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?


(2015 சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில் செயலாற்றிய நபர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, ஊடகங்களைச் சந்தித்த இளையராஜா, 'இந்தப் பேரிடர் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கருணையோடு இருக்குமாறு ஏற்படுத்தப்பட்டது;  ஒரு பூதம் தான் கோபப்பட்டிருக்கிறது.  எனவே இந்தக் கருணையை நாம் இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்வது அவசியம்' என்பது போல் பேசிக் கிளம்ப, ஒரு ஊடகர், சமீபத்தில் இணையம் வழியாய் வெளியான சிறுபிள்ளைத்தனமான பாடலொன்று பற்றிய கேள்வியைக் கேட்க, அதற்கு இளையராஜா உடனடியாகக் கோபப்பட்டார்.  'உனக்கு அறிவிருக்கா? நாம் எதைப் பேசிக்கொண்டிருக்கிறோம், எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய்?' என்பது போலக் கேட்டார்.  இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.)





17-12-2015 19.19

ஏன் இது வரை யாரும் இசைஞானியை அடுத்த தமிழக முதல்வராகக் கற்பனை பண்ணி பார்க்கவில்லை?


18-12-2015 06.41

ஜர்னலிஸ்டுகள் தங்களை மக்களின் குரலாகவே பாவித்துக் கொள்கிறார்களே, ஏன்? என்னுடைய பயமெல்லாம் எங்கே இளையராஜா அந்த 'அறிவிருக்கா..?' விற்காக மன்னிப்பு கேட்டு விடுவாரோ என்பது தான்!


18-12-2015 10.09

உனக்கு அறிவிருக்கா? - நிச்சயமாய் ஒரு வைரல் தான்.

'உனக்கு அறிவிருக்கா..?'னு கேட்க நினைத்து, எத்தனை சந்தர்ப்பங்களில், எத்தனை இடங்களில் மௌனமாய் நல்லவன் வேடம் போட்டிருந்திருக்கிறேன்!!!!


18-12-2015 14.08

மீடியாக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லாத,
மக்களுக்குச் செய்வதில் எந்த பிரதிபலனும் எதிர்பார்த்திராத,
பொதுத் தளத்தில் லாப நஷ்டத்தை யோசிக்காத
திமிர் கொண்ட,
அதனால் சுதந்திரம் வாய்க்கப்பெற்ற ஒரு பிரபலத்தை தமிழகத்தில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று!!!
அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள் அது ஏன் நம்ம இலக்கியக் கர்த்தாக்கள் என்று அத்தனை பேரும் மீடியாக்காரர்களுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டிருக்கிற சூழலில்
'உனக்கு அறிவிருக்கா?' என்ற கேள்வி முக்கியமானது.


18-12-2015 14.26

எல்லாத்தையும் விளக்காமாகவே சொல்ல வேண்டியிருக்கிறது
'பெரும் வெள்ளம் ஏற்படுத்திய சீரழிவிலிருந்து இன்னமும் முழுதாய் மீண்டு வரவில்லை.
அதற்குள், பீப் சாங், அர்ச்சகர் - ஆகம விதி பிரச்சினை என்று அக்கப்போர் பண்றீங்களே
உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா?'
என்பது தானே கேள்வி.


18-12-2015 14.39

இளையராஜா கேட்ட இந்த கேள்வியை - உனக்கு அறிவிருக்கா? - இதற்கு முன் கேட்ட இன்னொரு தமிழகப் பெரியவர் ஈவேரா!


18-12-2015 18.24

பிரபலங்கள் எவ்வளவு தூரம் பொறுமையானவர்கள் என்று கண்டறியும் அதிகாரத்தை மீடியாக்களுக்கு யார் வழங்கினார்கள்?



19-12-2015 07.50

இளையராஜாவை ஏன் ஆதரிக்க வேண்டும்?

காலையிலேயே ஒரு தம்பி இன்பாக்ஸ் வந்து, 'நீங்க இளையராஜாவை இவ்வளவு தூரம் சப்போர்ட் பண்றதுக்கு என்ன காரணம்?' என்று கேட்டார்

'நிச்சயமாய் இசை இல்லை' என்று பதில் சொன்னேன். பாவம் அவர் இன்னும் குழம்பியிருப்பார்.

இசையையெல்லாம் கடந்து இளையராஜாவின் இந்தத் தெனாவெட்டான நடத்தை பாதுகாக்கப்பட வேண்டியது என்று நான் நினைக்கிறேன். இது அபூர்வமானது; லேசில் வாய்க்காது.

இந்தத் திமிரை அடைவதற்கு நீங்கள் உங்களுடைய துறையில் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் திமிரோடு திரியும் போது சமூகம் உங்களை மரியாதையோடு கவனிக்கத் தொடங்குகிறது. வெற்று நபர்களின் திமிர்த்தனங்களை சமூகம் எட்டி உதைத்து விடும். அதற்கும் நமக்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு, அம்மா!

இளையராஜாவின் கோபம், நக்கல், எரிச்சல், திமிர் அனைத்தும் வெகுஜன பாவ்லாக்களின் மீது தான் செய்யப்படுகிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில், யுவன் பாடல் செய்யும் முறையைப் பற்றி அவர் பேசியது ஒரு உதாரணம்.

இப்படியான, கதாபாத்திரங்கள் சமூக ஆரோக்கியத்திற்கு நிச்சயமாய் தேவை

இப்படியான நபர்களே வெகுஜன அபிப்பிராயங்களை அடித்து நொறுக்கும் வேலையைச் செய்ய முடியும்

இதே போன்றதொரு வேசத்தை அவ்வப்போது கட்டி வரும் ரஜினிகாந்த் எவ்வளவு போலியானவர் என்பதை எல்லாரும் அறிவோம். இந்த போலித்தனம் இளையராஜாவிடம் இல்லை. அதற்காகவே நான் இளையராஜாவை ஆதரிக்கிறேன்.

நிறைய பேர், இளையராஜா இசையில் நிகழ்த்திய சாதனைகளுக்காக அவரை சகித்துக் கொள்வது என்று முடிவெடுக்கிறார்கள். அல்லது அவர் சமூகத்தின் கடைக்கோடியிலிருந்து வந்தவர் என்பதால் ஆதரிக்க விரும்புகிறார்கள். எனக்கு இந்த இரண்டிலும் உவப்பில்லை. துரதிர்ஷ்டவசமாக நான் இளையராஜாவின் சாதி இல்லை! (எதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது?)

மேலும், இளையராஜாவின் திரையிசைப்பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அவை என்னுள் ஏற்படுத்தும் உணர்வுகளுக்காக, அவற்றை வெறுக்கும் மனோபாவத்தை உருவாக்க நான் முயன்று கொண்டிருக்கிறேன். அதாவது, இளையராஜாவின் இசையிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேடுவது. அந்த வகையில் இளையராஜாவின் இசைக்கு எதிரான வாதங்களையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட பிரச்சினை.

இளையராஜாவிற்கான எனது ஆதரவு ஏன் என்றால், இப்படியான நபர்களே பூடகங்களின் நடு மண்டையில் சம்மட்டியால் அடிக்க முடியும்!

அவர் தொடர்ந்து மீடியாக்களை இப்படியாக அடித்து வருகிறார். இதனாலும் அவருக்கு எனது ஆதரவு.

இதே போன்ற அறிவுச்செருக்கை இந்த நூற்றாண்டில் நான் வேறு இரண்டு பேர்களிடமும் கண்டிருக்கிறேன். ஒருவர் அயோத்திதாசர்; இன்னொருவர் ஈவேரா

அவர்களே, அவர்களின் அந்த செருக்கே சமூகத்தை இம்மியளவாவது நகர்த்தியிருக்கிறது. இதனாலேயே, இந்தச் செருக்கை தக்க வைத்திருக்கும் இளையராஜாவை நான் பாதுகாக்க விரும்புகிறேன்.

இந்த விஷயத்தில் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் மீடியாக்களைப் (ஊடகம் என்று சொல்லாமல் வேண்டுமென்றே தான் மீடியா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்) பற்றி அதில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் தான் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

மீடியா, தனக்குள் ஏராளமான மூட நம்பிக்கைகளை வைத்திருக்கிறது. அதில் ஒன்று, தான் நடு நிலையாளன்; தனக்கென்று எந்தவொரு கருத்தோ, நிலைப்பாடோ இல்லை என்பது

இது அடிப்படையில் தவறு. கருத்தில்லாதவர்கள் என்று எவரும் இல்லை. ஆனால், மீடியா தன்னை இப்படித்தான் கற்பனை செய்கிறது.

நிறைய நேரங்களில் பத்திரிகை நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைப்பார்கள். தமிழகத்தின் ஏதாவதொரு கிராமத்துக் கோவிலில் நேர்த்திக்கடனாக கல்லைத் தின்கிறார்களே என்பது போல் கேட்பார்கள். அப்படியா என்பேன்

ஆமாம், நடக்கிறது; இது மூட நம்பிக்கை தானே என்பார்கள்

இதிலென்ன சந்தேகம் என்பேன்

அப்படியானால், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு, உங்கள் பதவியைக் குறிப்பிட்டு இந்தக் கருத்தை எழுதிக் கொள்ளவா என்பார்கள்

எனக்கு சிரிப்பாய் வரும். கல்லைத் தின்பது மூட நம்பிக்கை என்று சொல்வதற்கு நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் தான் தேவைப்படுகிறது என்று சிரித்துக் கொண்டு, சரி போட்டுக் கொள்ளுங்கள் என்பேன்.

சிம்பு, அனிருத்தின் பீப் சாங் அநாகரீகமானது, அசிங்கமானது என்பது மீடியாவிற்கு விளங்காமல் போனது தான் நமது துர்பாக்கியம்

இது அபாயகரமானது என்பதை உலகத்திற்குச் சொல்ல அது இளையராஜா மாதிரியான ஆகிருதியை எதிர்பார்க்கிறது. என்னவொரு வெட்கக்கேடு

இவ்வளவு முட்டாள்தனமான மீடியாவை 'உனக்கு அறிவிருக்கா?' என்று தானே கேட்க வேண்டும்.



19-12-2015 12.56

இளையராஜா என்றால் இசை மட்டுமே என்று பேசும் அரசியல்!

இளையராஜாவின் திரையிசைப்பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.
ஆனால், அவை என்னுள் ஏற்படுத்தும் உணர்வுகளுக்காக, அவற்றை வெறுக்கும் மனோபாவத்தை உருவாக்க நான் முயன்று கொண்டிருக்கிறேன். அதாவது, இளையராஜாவின் இசையிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேடுவது.

அந்த வகையில் இளையராஜாவின் இசைக்கு எதிரான வாதங்களையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட பிரச்சினை.

இசையை அப்படித்தான் நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். கூட்டு ரசனை பெரும்பாலும் அழுகை, சிருங்காரம், காமம் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட உணர்வுகளில் மட்டுமே செயல்பட விரும்புகிறது. அதிலும், புளித்துப் போன தடங்களிலேயே அது பயணிக்க விரும்புகிறது.

இசை, இலக்கியத்தைப் போல தனித்த ரசனைக்கானது என்று நான் நம்புகிறேன். அதனால் நிறைய தருணங்களில் இளையராஜாவின் இசையிலிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது.

இங்கு விவாதிக்கப்படுவது இளையராஜா என்ற ஆகிருதி பற்றியது. தனது இசையின் மூலமாக சமூகத்துடன் அவர் மேற்கொண்ட உரையாடலால் உருவான தகுதி இது. இந்த தகுதியை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பது தான் எனது அக்கறை.

அந்த விதத்தில் அவரது சமீபத்திய நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாகத் தெரிகின்றன.

இந்த நேரத்தில், இளையராஜாவின் இத்தகைய உருமாற்றத்தை விரும்பாதவர்கள் அவரின் இசையை மட்டுமே பாராட்டிக்கொண்டிருக்க முயற்சி செய்வார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.

இளையராஜா இசையின் ராஜாவாக்கும், மீட்பராக்கும் என்று புளகாங்கிதம் கொள்வது அனைத்தும் அவரது செருக்கை மறுதலிக்கும் முயற்சி தான் என்பதை விளங்கிக்கொள்வது அவசியம்.

இந்தச் செருக்கு காலங்காலமாய் ஒரு சில சமூகப் பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

இன்றைக்கு அதனை இளையராஜா மாதிரியான நபர்கள் மேற்கொள்ளும் போது இந்த சலசலப்புகள் ஏற்படுவது சகஜம் தான்.


20-12-2015 12.15

இளையராஜா - வினா விடை

கேள்வி: இளையராஜாவை ஆதரிக்கும் குரல், அவசரக்காரனுடையது; உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உருவானது; அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற பரிதாபத்தில் இருந்து வந்தது என்று சொல்லலாமா?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை.   தாமதமாக எழுதப்படும் அனைத்தும் நிதானமானது என்றும் நான் நம்பவில்லைஇளையராஜா என்ற வெகுஜனக் கதாபாத்திரத்தை நான் உள்ளபடியே ரொம்ப நாட்களாக கவனித்து வந்திருக்கிறேன்அவரால் கோடிக்கணக்கான நபர்களோடு உணர்வு பூர்வமாக பேச முடிகிறதுஅது என்ன உணர்வு என்பதெல்லாம் வேறுஆனால், அவரிடம் அதற்கான மொழி இருக்கிறதுஇளையராஜாவின் பாடலோடு தங்களது வாழ்க்கையின் நெகிழ்ச்சியான தருணங்களை இணைத்து சொல்லக்கூடிய எண்ணிக்கையற்ற நபர்கள் இங்கே இருக்கிறார்கள்.   இது, வேறெந்தவொரு நபருக்கும் தமிழ்த் திரையுலகில் நடந்திருக்கவில்லை.  

நாமெல்லாம் பூதாகரமாய் கற்பனை செய்யும் எம்ஜியாருக்குக் கூட இது நிகழவில்லைஅவரது பிம்பம் தந்திரமாக உருவாக்கப்பட்டதுஇளையராஜாவிற்கு அப்படியில்லைநம்மையறியாமலேயே இப்படியொன்று உருவாகி வந்திருக்கிறதுநாமெல்லாம் ரஜினிகாந்தையோ அல்லது வேறு யாரையுமோ எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கையில் இது அமைதியாய் இளையராஜாவிடம் நிகழ்ந்திருக்கிறது

கேள்வி: இளையராஜாவும் இன்னொரு பிம்பமாகத்தானே உருவாகி வந்திருக்கிறார், அதிலென்ன விசேஷம் இருந்து விடப் போகிறதுசினிமாவிலிருந்து வந்த இன்னொரு பிம்பம், அவ்வளவு தானே?

பதில்: நிச்சயமாய் இதுவும் இமேஜ் தான்ஆனால், இந்த பிம்பத்தில் ஒரு குறைந்த பட்ச நேர்மை இருக்கிறதுதுருத்தாமல் இருக்கிறதுஎம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினிகாந்த், கேப்டன் என்று நமக்கிருக்கும் பிற பிம்பங்கள் அனைத்திலும் நேட்டிவிட்டியும், ஹார்மனியும் இல்லவே இல்லையென்பதை கவனியுங்கள்அவற்றில் வெளிப்படும் ஜிகினா தான் கண்களை பறிக்கிறதுஆனால், இளையராஜாவின் பிம்பம் வரலாற்றில் நம்மால் எளிதில் பொறுத்திப் பார்க்க முடிவது

கேள்வி: பெரியார், காமராஜர் மாதிரி என்று சொல்ல வருகிறீர்களா?

பதில்: அதுவும் கூட முழுமையாய் சரியில்லை; நீங்கள் அதில் தெரியும்துறவு நிலையைமட்டுமே கவனப்படுத்துகிறீர்களோ என்று கவலைப்படுகிறேன்சித்தர், முனிவர், துறவி போன்ற பாரம்பரிய பிம்பங்களையும் கடந்து, இன்னும் சில விஷயங்களை இளையராஜா என்ற பிம்பம் சுட்டுகிறதுஅவருடைய மிகச் சிறு உருவ அளவு நமது பாரம்பரிய பிம்பங்களுக்கு எதிரானதுதிருவள்ளுவர் கூட நமக்கு ராட்சத உருவத்தில் தான் தேவைப்படுகிறார்.  

ஆனால், இளையராஜாவின் அசட்டையாய் விடப்பட்டது போன்ற தாடியும் மீசையும், கருத்த சிறு உடலமைப்பும் மனதிற்கு நெருக்கமான இசைவடிவத்தோடு பொருந்திப் போகிறதுஇதனாலேயே இந்த பிம்பம் நேர்மையானது என்று சொல்லத் தோன்றுகிறது.

கேள்வி: இளையராஜாவின் ரசிகர்கள் / வெறியர்கள் அவரை இது போன்ற மீட்பராக, கடவுளாகத் தானே கொண்டாடி வருகிறார்கள், இதற்கு ஏன் நாமும் வலு சேர்க்க வேண்டும்?

பதில்: வெகுஜனம் அவரது பிம்பத்தை கடவுளாக மாற்றுவதற்கே தொடர்ந்து முயல்கிறதுஆனால், அதற்கு எதிரான வாதங்களை இளையராஜாவே முன்னெடுக்கிறார் என்பது தான் அவரை ஆதரிக்க வேண்டிய தருணம்இளையராஜாவிற்கு இரண்டு விதமான வெகுஜன நெருக்கடிகள் இருந்தன - ஒன்று அல்ல இரண்டு!  

முதலாவது, அவரை இசைக்கடவுளாக மாற்றும் முயற்சி; இரண்டாவது அவரை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெருமைக்குரிய அடையாளமாக மாற்றும் முயற்சிஇந்த இரண்டையுமே அவர் தொடர்ச்சியாக மறுத்து வந்திருப்பதை நாம் பார்க்கிறோம்அவரைத் தொடர்பு கொண்ட, தங்களோடு நிற்கும் படி அழைத்த தலித் அமைப்புகளுக்கெல்லாம் அவர் கோபத்தையே உருவாக்கினார்இளையராஜா, பார்ப்பனராகி விட்டார் என்ற குற்றச்சாட்டு எந்த மூலையிலிருந்து உருவானது என்று நினைத்தீர்கள்இந்தப் பகுதியிலிருந்து தான்.  

இதற்கு சற்றும் குறைவில்லாமல், அவர் தனது ரசிகர்களை தொடர்ச்சியாக சீண்டிக்கொண்டும், அவர்கள் இளையராஜா என்ற நபரை வெறுப்பதற்கான வாய்ப்புகளை வழங்கிய படியும் இருப்பது தான் அந்த பிம்பத்தின் நேர்மை என்று நினைக்கிறேன்இந்தச் செயலையே நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

கேள்வி: தன்னைக் கடவுளாகக் கருதுகிறவர்களைக் கண்டிப்பது வரையில் சரி தான், ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாகத் தன்னை கருதுபவர்களைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும்?

பதில்: தலித் அமைப்புகளின் ஆகப் பெரிய குழப்பம் இது தான் என்று நான் நினைக்கிறேன்அரசியல் அதிகாரம், சமூக விடுதலை, சமூக மேம்பாடு குறித்து தலித் அமைப்புகளிடம் தெளிவான திட்டங்கள் இல்லை.  

ஆட்சி அதிகாரம் என்பதும் கருத்தியல் நேர்மை என்பதும் வெவ்வேறானவை என்ற அடிப்படை தெளிவு கூட அவர்களிடம் இல்லை.   ஆட்சி அதிகாரம் மட்டுமே இந்த ஒடுக்குதலிலிருந்து தங்களை விடுவிக்கும் என்ற யோசனையை சுதந்திர இந்தியாவின் பொன்னுலகக் கனவிலிருந்து தலித் அமைப்புகள் இரவல் வாங்கியிருந்தனஇதற்கு அம்பேத்கருக்கிருந்த நவீனத்துவம் மீதான பிடிவாத நம்பிக்கையும் ஒரு காரணம்இதனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தன்னிடமிருந்த உருவான ஒவ்வொரு தலைவரையும்எதிர்கால ஆட்சியாளராகவேபார்த்தது.  

இதில் விரயமானவர்கள் தான் ஏராளமானோர்நல்ல பேச்சாளர்கள் இதில் பலியாகியிருக்கிறார்கள்நல்ல, நல்ல இலக்கியவாதிகள்அதிகாரிகள், களப்பணியாளர்கள் என்று பலரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பயணத்தில் இரையாகியிருக்கிறார்கள்திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், சிவகாமி, சகாயம், கிருஸ்துதாஸ் காந்தி, ரவிக்குமார் போன்ற பலரையும் என்னால் அடையாளப்படுத்த முடியும்.  

இந்தப் போக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களில் மட்டுமல்லாது, எல்லோரிடமும் இருப்பதை நாம் பார்க்கலாம்யாரையாவாது புகழ வேண்டுமென்றால் அல்லது யாருக்காவது எதையாவது பரிசளிக்க விரும்பினால், நாம் உடனடியாக அவர்களை முதல்வராக்கிப் பார்க்கத் தான் விரும்புகிறோம்கொடுப்பதற்கு வேறொரு சிறப்பான பொருள் நம்மிடம் இல்லை; அது தான் உயரிய பொருள் என்றும் நினைக்கிறோம்.  

ஆனால், இளையராஜாவின் பிம்பம் முதல்வர் வேட்பாளராகக் கற்பனை செய்வதற்கு அப்பால் இருக்கிறது என்பது தான் அதன் பலம்.

கேள்வி: இளையராஜா மாதிரியான பிம்பங்கள் நமக்கு ஏன் தேவை என்று நினைக்கிறீர்கள்?

பதில்: அரசியல் அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் எப்பொழுதுமே ஒரு சமூகத்தை முன்னகர்த்தி செல்லத் தேவைப்படுகின்றனஅப்பிம்பங்கள் சில விழுமியங்களின் மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடும்உதாரணமாய், இந்தப் பெரு வெள்ளம் விளைவித்த சீர்கேட்டிலிருந்து நம்மைக் காப்பாற்றியது சக மனிதர் மீதான கருணை தான்ஒரு சர்வைவல் இன்ஸ்டிங்ட்.  

இந்தச் செய்தியை பரவலாக்குவதற்கு, வலுப்படுத்துவதற்கு நமக்கு சில ஊடகங்கள் தேவைஅப்படியான ஊடகமே இளையராஜா போன்ற பிம்பங்கள்மீதம் அனைத்தும் அரசியலாகக் கணிக்கப்பட்டு காற்றில் கரைந்து போகும்.  


இதை மீடியாக்கள் உணரவில்லை என்பதோடு, இதற்கு எதிராகவும் வேலை செய்கின்றன என்பது தான் நமது பலவீனம்தன்னை முரட்டு முட்டாளென்று நம்பும் மீடியா தான் நமக்கு வாய்த்திருப்பது என்பதை யாரிடம் போய் சொல்வது?  


Comments

சமீபத்தில் நான் படித்த வகையில் நம் சமூகம் அதன் தலைவர்கள் ஊடகம் உருவாக்கியிருக்கும் பிம்பங்கள் எல்லவற்றையும் பற்றி விரிவான நேர்மையான ஒரு கருத்தாக்கம் .
Jonathan said…
நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
karthick Muthuraman said…
அன்புள்ள டி. தருமாராஜ்,

இளையராஜா பற்றிய மிக முக்கியமான பதிவு இது என்று எண்ணுகிறேன். அனைத்து தரப்புகளையும் கணக்கிலெடுத்து விவாதிப்பது உங்கள் ஸ்டைல். அதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். பெருமாள் முருகனின் மாதொருபாகன் விவாதத்தில், மாட்டுக்கறி விவாதத்தில், இதோ இப்பொழுது இளையராஜா விவாதத்தில் என்று உங்களுடைய பார்வை சிக்கல்களை லாவகமாக அவிழ்க்கிறது.

இளையராஜா விவாதத்தில், 'இது போன்ற இளையராஜா பிம்பங்கள் நமக்கு விழுமியங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்' என்று நீங்கள் எழுதுவது பிடித்திருக்கிறது. சென்னை வெள்ளம் 'கருணை' என்ற விழுமியத்தை நமக்கு வலியுறுத்துகிறது என்று நீங்கள் சொல்வதாக நான் விளங்கிக் கொள்கிறேன். ஆனால், எனக்கு ஒரு கேள்வி: கருணை போன்ற விழுமியங்கள், ஒரு சம்பவத்தின் அரசியலை மழுங்கடித்து விடுகின்றன என்பதை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?

விஜயகாந்தோ, விஜயோ அல்லது கமல்ஹாசனோ இப்படிச் சொல்லியிருந்தாலும் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்களா? ஒரு நிருபர் கேள்வி கேட்பதே தவறு என்பதைப் போலிருக்கிறது.
காரிகன், இந்தப் பதிவை இன்னும் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள். இளையராஜாவின் பிம்பத்திற்கு 'தான்' என்ற சுயநலம் மட்டுமே தான். இதை நீங்கள் நம்ம நாட்டு பெரியவர்கள் எல்லாரிடமும் பார்க்க முடியும். இந்தத் 'தான்' ஐத் தான் விரித்து 'சமூகம்' என்று அவர்கள் விளக்குகிறார்கள். விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் தங்களது பிம்பத்தை அரசியல் அதிகாரமாக மடைமாற்ற விரும்புகிறார்கள். கமலஹாசன் கதை வேறு மாதிரி. அவரை எல்லாரும் சிவாஜி மாதிரி என்கிறார்கள்; ஆனால், எம்ஜியாராக இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறார்.
Unknown said…
என்னுள் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட பிம்பத்தின் ஆழ்மனதைத் தொட்டுக் காட்டியது போல் இருந்தது டி.தருமராஜ் அவர்களின் எழுத்து. தான் கண்டுணர்ந்த வெறுமைகளின் மீது தனக்கான சிம்மாசனத்தைத் தயார்ப்படுத்தியவர் இளைராஜா. ஏதுமற்ற மனிதனாய் (சாதி, மதம்) நிமிர்ந்து காட்டும் அவரின் திறனைத்தான் அவர் பின்பற்ற சொல்கிறார். தன்னைக் கவனிக்காமல் போகும் பெற்றோர்களைத் திரும்ப வைக்க ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யுமோ அதையும் மீறி இச்சமூகத்தைத் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க பலவற்றை செய்து காட்டிவிட்டார். என்றாலும் இன்னும் அவரைக் கடைகோடி மனிதரிலிருந்து வந்த வெற்றியாளனாகத் தான் இச்சமூகம் அடையாளப்படுத்துகிறது. அந்த அடையாளப்படுத்தலைத்தான் அவர் வெறுக்கிறார். பூட்டி வைத்து உரிமை கொண்டாடும் கூட்டம், அவர்களைத் திருப்திப்படுத்துவதிலும், நீங்கள் கொண்டாடி வருவனவற்றை நான் புனிதப்படுத்துகிறேன் என்பனவற்றை நிறுவுதலிலேயே அவரின் காலம் கழிந்துள்ளதை யாரும் கவனிக்கவில்லை. அவரின் நிலையிலிருந்து யோசியுங்கள். அவரின் வேதனை புரியும். அவரின் இசைக்காகக் கொண்டாடிய நாட்களேல்லாம் போய் அவரின் வேதனைக்காக வருந்துகிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பதில்தான் எனக்குப் பெருமை.
நெல்லை பாலா...
சார்

நிவாரணப் பணியில் தன்னை விருப்பத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வந்த இளையராஜாவிடம், இசை சம்பந்தமாக கேட்டால் தன் பத்திரிக்கைக்கு ஏதாவது தீனி கிடைக்கும் என்ற நோக்கில், அவருக்கு ஊட்டப்பட்ட வணிக யுக்தியை பயன்படுத்தி, அந்த நிருபர் பீப் சாங் பற்றி கேட்டுவிட்டார். அந்தக் கேள்வி அந்த நேரத்திற்கு பொருத்தமில்லாத கேள்வி . இசைஞர் என்றால் இசையைத் தவிர கேட்க அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று நினைப்பதே தவறுதானே. நிருபர்கள் எதை வேண்டுமென்றாலும் கேட்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?

கேள்விகளுக்கும் சென்சார் என்பது வேண்டும் . எதை வேண்டுமென்றாலும் கேட்கலாம் என்பதில் நியாயம் இல்லை. கேட்கப்படுபவரின் மனநிலையைப் பொறுத்து பதில் வித்தியாசமாக வந்தால் அது சர்ச்சைக்குள்ளாகிறது. இளையராஜா என்றால் சர்ச்சையை ஏற்படுத்துவதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கிறது.

இசை மேடைகளில் கூட அவர் பொது மக்களிடம் கோபம் காட்டியிருக்கிறார். விசில் சப்தம் அவருக்கு பிடிக்காது. ஏதாவது பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவரை பாட்டு பாடச் சொல்லிக் கேட்டால் பிடிக்காது . பட்டென்று ' நான் அதுக்காக வரலை' என்று பதில் பேசிவிடுவார். உங்களைப் போல என்னைப் போல அவர் கோபப்படக்கூடியவர்தான் . போலவே இப்போதும் அவர் கோபப்பட்டிருக்கிறார். ஒரு மாணவனிடம் ஆசிரியர் காட்டும் கோபம் போலவே அவருடைய கோபமும் தெரிகிறது. நிருபரைத் திருத்தியிருக்கிறார். இனி அந்த நிருபர் இடம் , நேரம் பார்த்து கேள்வி கேட்கக் கற்றுக் கொள்வார். ஆனால் நம்மில் சிலர் அவரை திருத்தப்பார்க்கிறார்கள்.




(எதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது?)//நீங்கள் எழுதிய பாங்கு மிகவும் அருமை...

Unknown said…
//இந்தச் செருக்கு காலங்காலமாய் ஒரு சில சமூகப் பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

இன்றைக்கு அதனை இளையராஜா மாதிரியான நபர்கள் மேற்கொள்ளும் போது இந்த சலசலப்புகள் ஏற்படுவது சகஜம் தான்.// this line is a noteworthy feature of this article, it should be underlined.
sangu42 said…
thanks....Different perception and agreeable views...

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக